உள்ளடக்கத்துக்குச் செல்

கத்தேரி தேக்கக்விதா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
புனித கத்தேரி தேக்கக்விதா
கத்தேரி தேக்கக்விதா காலத்திலேயே வரையப்பட்ட அவரின் ஓவியம்,
காலம்: சுமார் 1690
ஓவியர்: அருட்தந்தை ஷோஷத்தியே
கன்னியர்;[1] பொது நிலைத்துறவி
பிறப்பு1656
ஓசர்நினோன், இரோக்குவா பிரதேசம் - 1793 வரை "புது பிரான்சு" (தற்போது ஓரிஸ்வில், நியூ யோர்க் மாநிலம்)
இறப்புஏப்ரல் 17, 1680
கானாவாக்கே, மொண்ட்ரியால், கியூபெக், கனடா
ஏற்கும் சபை/சமயங்கள்கத்தோலிக்க திருச்சபை
அருளாளர் பட்டம்ஜூன் 22, 1980, வத்திக்கான் நகர் by இரண்டாம் யோவான் பவுல்
புனிதர் பட்டம்அக்டோபர் 21, 2012, வத்திக்கான் நகர் by திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட்
முக்கிய திருத்தலங்கள்புனித பிரான்சிஸ் சவேரியார் ஆலயம், கியூபெக், கனடா
திருவிழாஜூலை 14 (அமெரிக்க ஐக்கிய நாடு), ஏப்ரல் 17 (கனடா)
சித்தரிக்கப்படும் வகைலில்லி மலர்; கடல் ஆமை; செபமாலை
பாதுகாவல்சூழலியலாளர், சுற்றுச்சூழல், சூழலியம், அனாதைகள், நாடுகடத்தப்பட்டவர், தங்களது பக்திக்காக கேலிக்கு உள்ளாகுபவர், அமெரிக்க முதற்குடிமக்கள்,

கத்தேரி தேக்கக்விதா, (1656 – ஏப்ரல் 17, 1680), (திருமுழுக்கு பெயர்: கேத்ரின் தேக்கக்விதா[2][3]) என்றும் மோகாக்கியரின் லில்லி மலர் என்றும் அறியப்படுபவர் ஒரு அல்கோன்குயின்-மோகாக்கிய கத்தோலிக்க கன்னியரும், பொது நிலைத்துறவியும் ஆவார். இவர் தற்போது நியூ யோர்க் மாநிலம் அமைந்துள்ள இடத்தில் பிறந்தவர். இவர் சிறுவயதில் பெரியம்மையால் தாக்கப்பட்டு பிழைத்தவர் ஆவார். இவர் இளமையிலேயே பெற்றோரை இழந்தவர். இவர் தனது 19ஆம் அகவையில் கத்தோலிக்கத்துக்கு மதம் மாறித் திருமுழுக்கு பெற்றார். இதன்பின் இவர் தனது வாழ்நாளை இயேசு சபை மறைபணி தளமான மொண்ட்ரியாலில் உள்ள கானாவாக்கே கிராமத்தில் கழித்தார்.

இவர் தனது 24ஆம் அகவையில் கற்பு நிலை உறுதிபூண்டார். தனது நல்லொழுக்கத்திற்கும் கற்பு நிலைக்கும் பேர்போன இவர் தனது கடும் தவ முயற்சிக்காக அறியப்படுகின்றார். இவர் கத்தோலிக்கத்துக்கு மதம் மாறியதால் தனது சொந்த குடும்பத்தாலும், இனத்தாலும் ஒதுக்கப்பட்டார்.

அமெரிக்க முதற்குடிமக்களுள் திருச்சபையின் பீட மகிமை அளிக்கப்பட்ட முதல் பெண் இவர் ஆவார். இவருக்குத் திருத்தந்தை இரண்டாம் அருள் சின்னப்பர் 1980இல் அருளாளர் பட்டம் அளித்தார். திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட், அக்டோபர் 21, 2012இல் புனித பேதுரு பேராலயத்தில் இவருக்குப் புனிதர் பட்டம் அளித்தார். பல்வேறு அதிசயங்களும் இயற்கைக்கு மீறிய நிகழ்வுகளும் இவரது மரணத்திற்கு பின்னர் நிகழ்ந்துள்ளதாகக் கூறப்படுகின்றது.

பெற்றோரும் இளம் பருவமும்[தொகு]

திருமுழுக்கின்போது கேத்ரின் என்று பிரஞ்சு மொழிவடிவத்தில் கொடுக்கப்பட்ட பெயரே "கத்தேரி" (Kateri) என்று வழங்கலாயிற்று. கத்தேரி தேக்கக்விதா பிறந்த ஆண்டு சுமார் 1656 ஆகும். அமெரிக்க முதற்குடி மக்களின் ஒரு பிரிவாகிய மோகாக் இனத்தவராகிய கத்தேரி பிறந்த ஊரின் பெயர் ஓசர்நினோன். அது இன்றைய நியூயார்க் மாநிலத்தில் உள்ள ஓரிஸ்வில் (Auriesville) நகருக்கு அருகில் உள்ளது.

கத்தேரியின் தந்தை பெயர் கென்னெரோன்குவா ஆகும். அவர் மோகாக் இனத்தின் ஒரு பெருந்தலைவராக இருந்தார். கத்தேரியின் தாய் பெயர் தாகாஸ்குயித்தா (Tagaskouita). அவர் கத்தோலிக்க சபை உறுப்பினராக இருந்தார். அல்கோன்குவின் இனத்தவரான அவர் கவர்ந்துசெல்லப்பட்டு பின்னர் மோகாக் இனத் தலைவரின் மனைவி ஆனார்.[4] இளவயதில் தாகஸ்குயித்தாக்கு மொண்ட்ரியால் மாநிலத்தில் பிரஞ்சு கத்தோலிக்க மறைபரப்பாளர்கள் திருமுழுக்குக் கொடுத்துக் கத்தோலிக்க முறைப்படி கல்வியும் கற்பித்திருந்தனர். மோகாக் போர்வீரர்கள் அவரைக் கைதியாகப் பிடித்து, தமது பிரதேசத்துக்குக் கொண்டுசென்றனர்.[5] பின்னர் அவர் மோகாக் இனத்தலைவரான் கென்னெரோன்குவாவை மணந்துகொண்டார்.[4]

கத்தேரி பிறந்த ஊரில் முதற்குடி மக்களின் பல இனத்தவர் வாழ்ந்துவந்தனர். மோகாக் இனத்தவரில் பலர் ஐரோப்பியரால் கொணரப்பட்ட நோய்கள் காரணமாகவும் அடிக்கடி நிகழ்ந்த போர்கள் காரணமாகவும் மடிந்தனர். எனவே மோகாக் இனத்தவர் பிற இனத்தவர்மீது போர்தொடுத்து அவர்களைக் கைதிகளாகப் பிடித்துத் தமது பிரதேசத்துக்குக் கொண்டுவந்தனர். இவ்வாறு அவர்களின் எதிரிகளாக இருந்த ஹ்யூரோன் இனத்தவர் பலர் கைதிகளாகப் பிடிக்கப்பட்டனர்.

தாய்வழி உறவுமுறை[தொகு]

மோகாக் இனத்தவர், பிற இரோக்குவா வகையினரைப் போன்று, தாய்வழி உறவுமுறையை (matrilineal kinship system) கடைப்பிடித்தனர். அதன்படி, குழந்தைகள் பிறக்கும்போது அவர்கள் தாய் எந்த இனத்தவரோ அந்த இனத்தவர்களாகக் கருதப்பட்டனர்.

கத்தேரி சிறு குழந்தையாக இருந்தபோது அவருடைய கிராமம் வேறொரு இடத்துக்கு மாற்றப்பட்டது. மோகாக் மக்களில் பலர் 1661-1663 கால கட்டத்தில் பெரியம்மை நோய்க்குப் பலியானார்கள். கத்தேரியின் பெற்றோரும் சகோதரரும் அவ்வாறே இறந்தனர். நோயின் காரணமாகக் கத்தேரியின் கண்பார்வை பாதிக்கப்பட்டது, அவருடைய உடம்பிலும் தழும்புகள் பல ஏற்பட்டன.[4] பெற்றோரையும் சகோதரரையும் இழந்த கத்தேரியை அவருடைய தாய்மாமன் எடுத்து வளர்த்தார். அவர் "ஆமைக் குழு" (Turtle Clan) என்னும் பிரிவைச் சார்ந்தவர்.[6]

கத்தேரியின் குணநலன்கள்[தொகு]

கத்தேரி மிகவும் அடக்கமான பெண் என்றும், கேளிக்கைக் கூட்டங்களில் பங்கேற்காதவர் என்றும் அவருடைய வரலாற்றை எழுதிய இயேசு சபையினர் கூறுகின்றனர். அவர் தம் உடலில் ஏற்பட்டிருந்த தழும்புகளை மறைக்கும் வண்ணம் தலையில் ஒரு போர்வையைச் சுற்றியிருந்தார். அநாதையாக இருந்தபோது பெரும்பாலும் அவருடைய விரிந்த குடும்பத்தினர் அவரைப் பராமரித்தனர். அவருடைய தாயின் குடும்பத்தினர் வாழ்ந்த பொதுவீட்டில் (longhouse) அவரும் வாழ்ந்திருப்பார்.[4]

கத்தேரி தம் இனத்தைச் சார்ந்த பெண்கள் செய்த மரபுவழித் தொழிலில் ஈடுபட்டார். இவ்வாறு, துணி நெய்தல், விலங்குகளின் தோலிலிருந்து வார் செய்தல், கோரைப் புல்லினால் பாய் கூடை பெட்டி போன்றவை முடைதல் ஆகிய கலைத் தொழிலை அவர் செய்தார். மேலும், வேட்டையாடிக் கொண்டுவரப்பட்ட இறைச்சியைச் சமைத்தல், தானியங்கள் காய்கறிகளைச் சமைத்தல் போன்ற வீட்டுவேலைகளைச் செய்தார். பயிரிடும் காலத்தில் வயலில் வேலை செய்வது, களை பிடுங்குவது போன்றவற்றிலும் அவர் ஈடுபட்டார்.

கத்தேரிக்கு 13 வயது நிரம்புகையில் அவர் திருமணம் செய்ய வேண்டும் என்று உறவினர் கேட்டபோது அவர் தாம் திருமணம் புரியப்போவதில்லை என்று கூறிவிட்டார்.[4]

சமூகப் பின்னணி[தொகு]

கத்தேரி வளர்ந்த காலத்தில் அவரது சமூகத்தில் பெரும் மாற்றங்கள் நிகழ்ந்த வண்ணம் இருந்தன. மோகாக் இன மக்களுக்கும் பிரஞ்சு மற்றும் டச்சு குடியேற்றத்தினருக்கும் இடையே பரிமாற்றங்களும் மோதல்களும் நிகழ்ந்தன. நியூயார்க் மாநிலத்தில் ஆல்பனி மற்றும் ஷெனக்டடி பகுதிகளில் குடியேறிய டச்சு குடியேற்றத்தினரோடு மோகாக் இனத்தார் கம்பளி வியாபாரத்தில் ஈடுபட்டிருந்தனர். பிரஞ்சு குடியேற்றத்தினர் ஹ்யூரோன் இனத்தாரோடு கூட்டுவைத்துக்கொண்டு வியாபாரம் நடத்தினர். மோகாக் இனத்தவர் வாழ்ந்த இரோக்குவா பகுதியில் நுழையும் எண்ணத்தோடு பிரஞ்சு குடியேற்றத்தினர் 1666இல் மோகாக் இனத்தவரின் கிராமங்களைத் தாக்கினர். அவற்றுள் பலவற்றையும் குளிர்கால சேமிப்புத் தளங்களையும் அழித்துத் தகர்த்தனர்.

பிரஞ்சு குடியேற்றத்தினரிடத்தில் தோல்வியுற்ற மோகாக் இனத்தவர்கள் அவர்களோடு சமாதான ஒப்பந்தம் செய்ய வேண்டியதாயிற்று. அதன்படி, இயேசு சபை மறைப்பணியாளர்கள் மோகாக் கிராமங்களில் பணிசெய்யத் தொடங்கினர். அந்த மறைப்பணியாளர்கள் மோகாக் மொழியையும் பிற தல மொழிகளையும் கற்றனர். இவ்வாறு மக்களுடைய மொழியிலேயே மறைப்பணி செய்வது எளிதாயிற்று.

கிறித்தவக் கொள்கைகளைத் தழுவியமைத்தல்[தொகு]

கிறித்தவ மதக் கொள்கைகளை மோகாக் இனத்தவருக்கு விளக்கி உரைத்தபோது இயேசு சபை மறைப்பணியாளர்கள் மோகாக் மக்களின் கருத்து உருவகங்களைப் பயன்படுத்தினர். கிறித்தவ நம்பிக்கைக்கும் மோகாக் நம்பிக்கைக்கும் பொதுவாக இருந்த கருத்து ஒற்றுமைகளை இனம் கண்டனர். மோகாக் மொழியில் வானுலகைக் குறிக்கப் பயன்பட்ட சொல்லாகிய "கரோன்ஹியாக்கே" (Karonhià:ke,) என்பதை இயேசு கற்பித்த இறைவேண்டலில் வருகின்ற "விண்ணகம்" என்னும் சொல்லையும் கருத்தையும் குறிக்க பயன்படுத்தினர். இது வெறுமனே ஒரு சொல்லின் மொழிபெயர்ப்பு என்று அமையாமல், இரு கலாச்சாரப் பார்வைகளுக்குப் பாலம்போல அமைந்தது என்று, கத்தேரியின் வாழ்க்கை பற்றி எழுதிய டாரென் போனபார்த்தே என்பவர் கூறுகிறார்.[7]

மோகாக் ஆற்றுக்குத் தென்பகுதியில் மோகாக் மக்கள் தம் புதிய குடியிருப்பை அமைத்து அதற்குக் கானவாகா (Caughnawaga) என்று பெயரிட்டனர். 1667இல் கத்தேரிக்கு 11 வயது நடந்தபோது மோகாக் குடியிருப்புக்கு ஜாக் ஃப்ரெமென், ஜாக் ப்ரூயாஸ், ஜான் பியெரோன் என்னும் இயேசு சபையினர் மூவர் வந்தனர். அவர்களைக் கத்தேரி சந்தித்தார்.[8] இயேசு சபையினரோடு தொடர்பு ஏற்பட்டால் கத்தேரி கிறித்தவ மறையைத் தழுவிவிடுவாரோ என்று அஞ்சினார் கத்தேரியின் மாமனார். அவருடைய ஒரு மகள் ஏற்கனவே கிறித்தவத்தைத் தழுவியதன் காரணமாக மோகாக் குடியிருப்பாகிய கானவாகாவை விட்டு, மொண்ட்ரியால் அருகே அமைந்திருந்த கத்தோலிக்க மறைத் தளமான கானவாக்கே என்னும் இடத்துக்குப் போய்விட்டிருந்தார்.

கத்தேரிக்கு 18 வயது ஆனபோது, 1675ஆம் ஆண்டின் வசந்த காலத்தில் இயேசு சபைத் துறவி ஜாக் தெ லாம்பெர்வில் (Jacques de Lamberville) என்பவர் கத்தேரிக்கு கிறித்தவ மறை பற்றிய போதகம் வழங்கினார்.[4]

கத்தேரி கிறித்தவராகி கானவாக்கே ஊரில் குடியேறுதல்[தொகு]

கத்தேரிக்கு 20 வயது நிரம்பியபோது, அவர் கிறித்தவ மறை பற்றிப் போதிய அறிவு பெற்றார். எனவே தந்தை லாம்பெர்வில் 1676ஆம் ஆண்டு, ஏப்பிரல் 18ஆம் நாள், இயேசு உயிர்த்தெழுந்த திருவிழாவின் போது கத்தேரிக்குத் திருமுழுக்கு வழங்கினார்.[6] புதிதாகக் கிறித்தவத்தைத் தழுவ விரும்பியோருக்கு அவர்கள் இறக்கும் தறுவாயில் அல்லது முழு ஈடுபாட்டோடு கிறித்தவதைக் கடைப்பிடிப்பார்கள் என்று உறுதியான பிறகு மட்டுமே திருமுழுக்கு அளிப்பது வழக்கமாக இருந்தது. ஆனால் கத்தேரி தம் இள வயதிலேயே போதிய மறை அறிவும் ஊக்கமும் பெற்றிருந்தார்.[8]

திருமுழுக்குப் பெற்றபின், கத்தேரி தம் ஊராகிய கானவாகா குடியிருப்பில் மேலும் 6 மாதங்களைக் கழித்தார். அவர் கிறித்தவரானதற்கு எதிர்ப்புத் தெரிவித்தவர்கள் கித்தேரிமேல் சில குற்றச்சாட்டுகளைச் சுமத்தினர். கித்தேரி மந்திரவாதத்திலும் தவறான நடத்தையிலும் ஈடுபட்டார் என்று குற்றம் சாட்டினர்.[8]

அப்போது, கத்தேரிக்குத் திருமுழுக்கு வழங்கிய தந்தை லாம்பெர்வில் கூறிய அறிவுரைப்படி, கத்தேரி தம் கிராமத்தை விட்டுப் புறப்பட்டார். கிறித்தவ மதத்தைத் தழுவிய அமெரிக்க முதற்குடி மக்கள் பலர் ஒன்றுகூடிக் குடியேற்றமாக அமைந்த கானவாக்கே மறைத்தளத்துக்கு கத்தேரி 1677இல் சென்றார். அம்மறைத்தளம் புனித லாரன்சு ஆற்றின் கரையில், மொண்ட்ரியால் நகரத்துக்குத் தென்பகுதியில் அமைந்திருந்தது.[9]

கானவாக்கே தளத்தில் வாழ்க்கை[தொகு]

கிறித்தவத்தைத் தழுவிய அமெரிக்க முதற்குடி மக்களில் பெரும்பான்மையோர் பெண்களே. அவர்கள் கிறித்தவத்துக்கே உரித்தான பண்பாகக் கருதப்பட்ட பிறரன்பு உதவியை நாடி வாழ்ந்தார்கள். தம் உடலையும் ஆன்மாவையும் கடவுளுக்குக் கையளித்தார்கள். தவ முயற்சிகளால் தங்கள் உடல் இச்சைகளை அடக்கினார்கள். மோகாக் இனத்தவரிடையே இத்தகைய பழக்கங்கள் இருந்தன. குறிப்பாக, போர்வீரர்கள் தவ முயற்சிகள் செய்து உடலின் நாட்டங்களை அடக்கி ஆண்டதுண்டு.[4]

உடல் சார்ந்த தவமுயற்சிகளை அளவோடு கடைப்பிடிக்க வேண்டும் என்று இயேசு சபை மறைபரப்பாளர்கள் அறிவுறுத்திய பிறகும், மோகாக் கிறித்தவர்கள் தமது பழக்கத்தையே தொடர்ந்தனர். அவர்கள் பொதுவாகக் குழுவாகக் கூடி, தம்முடைய பாவங்களுக்குப் பரிகாரமாக இத்தகைய ஒறுத்தல் முயற்சிகளைச் செய்தனர்.[4] ஆன்ம வாழ்வுக்கு இம்முயற்சிகள் தேவை என்று அவர்கள் கருதினர்.[4]

கத்தேரி படுத்துறங்குவதற்காகப் பயன்படுத்திய பாய்மீது முட்களைப் பரப்பி, இறைவேண்டல் செய்யும்போது அவற்றின்மீது படுத்துத் தம் உடலை ஒறுப்பது வழக்கமாம். தமது உறவினர் மனமாற்றம் பெற வேண்டும் என்றும், அவர்களுக்குக் கடவுளின் மன்னிப்புக் கிடைக்க வேண்டும் என்றும் அவர் இவ்வாறு வேண்டுதல் நிகழ்த்தினார். உடலை முட்களால் குத்தி, இரத்தம் ஒழுகச் செய்யும் பழக்கம் மோகாக் மற்றும் இரோக்குவா மக்களிடையே இருந்தது.

கத்தேரி தம் வாழ்க்கையின் இறுதி இரு ஆண்டுகளைக் கானவாக்கேயில் கழித்தார். அனஸ்தாசியா என்னும் ஆசிரியையின்கீழ் பயின்று, கிறித்தவத்தைப் பற்றிய அறிவை வளர்த்துக்கொண்டதோடு, தம் பாவங்களுக்குப் பரிகாரம் செய்யும் வகையையும் தெரிந்துகொண்டார். கத்தோலிக்க சமயத்தில் பெண்துறவியர் குழுக்களும் கன்னியர் மடங்களும் இருப்பதை அறிந்த மோகாக் பெண்கள் தமக்குள்ளே ஒன்று சேர்ந்து பக்திமுயற்சிகளைக் கடைப்பிடிக்க குழுக்களாக இணைந்தார்கள்.

கத்தேரியை நேரடியாக அறிந்து, அவருடைய வாழ்க்கை வரலாற்றை எழுதியவர்களுள் ஒருவர் தந்தை கோலனெக் (Cholenec) என்பவர். தம்மிடம் கத்தேரி பின்வருமாறு கூறியதாகக் கோலனெக் குறிப்பிட்டுள்ளார்:

“நான் போதிய அளவு ஆழ்ந்த சிந்தனையில் ஈடுபட்டாயிற்று. நான் என்ன செய்யப் போகிறேன் என்பது பற்றியும் எனக்கு இப்போது தெரியும். நான் என்னை முழுவதுமாக மரியாவின் மைந்தரான இயேசுவுக்கே கையளித்துவிட்டேன். அவரே என் கணவர். அவருக்கு மட்டுமே நான் மனைவியாக இருப்பேன்”.[8]

1679ஆம் ஆண்டு, அன்னை மரியாவின் வாழ்த்துரைத் திருநாளன்று கத்தேரி எடுத்த இந்த முடிவோடு அவர் கிறித்தவ மறையை முழுமையாகத் தழுவி, தம்மைக் கடவுளுக்கு அர்ப்பணித்து, "மோகாக் மக்களிடையே தோன்றிய முதல் கன்னி" என மாறினார் என்று கத்தோலிக்க திருச்சபை கருதுகிறது.[8]

கானவாக்கே மறைத்தளத்தில் குழு வாழ்க்கை[தொகு]

அமெரிக்க முதற்குடி மக்கள் கிறித்தவத்தைத் தழுவியதும் அவர்கள் ஒரு குழுவாக அமைந்து கிறித்தவத்தைக் கடைப்பிடிக்க உதவும் வண்ணம் இயேசு சபையினர் கானவாக்கே மறைத்தளத்தை உருவாக்கினர். அத்தளத்திற்கு வந்தவர்கள் பொது வீடுகளில் வாழ்ந்தனர். ஒரு பொது வீடு சிற்றாலயமாகப் பயன்பட்டது. அத்தளத்தில் பெரும்பான்மையாக மோகாக் மக்களே இருந்தனர். எனவே, இரோக்குவா பகுதியினர் அத்தளத்தின் மீது தாக்குதல் நிகழ்த்தும் ஆபத்து இருந்தது.[4]

கத்தேரியின் மூத்த சகோதரியும் சகோதரியின் கணவரும் வாழ்ந்த பொதுவீட்டில் கத்தேரியும் வாழ்ந்தார். அவருடைய கிராமத்திலிருந்து மறைத்தளத்துக்கு வந்தவர்களை அவர் அறிந்திருப்பார்.[4] கத்தேரியின் அம்மாவின் நெருங்கிய நண்பியாக இருந்த அனஸ்தாசியா தேகோனாத்சியோங்கோ (Anastasia Tegonhatsiongo) என்பவரே பொதுவீட்டின் தலைவியாக இருந்தார். அவரும் பிற பெண்களும் கத்தேரி கிறித்தவத்தை நன்கு அறிந்து கடைப்பிடித்திட துணைசெய்தனர்.[4]

கத்தேரியின் வாழ்க்கை வரலாறுகள்[தொகு]

கத்தேரியின் வாழ்க்கை வரலாற்றை எழுதியவர்களுள் முக்கியமானோர் இயேசு சபைத் துறவிகள் இருவர் ஆவர். அவர்கள் க்ளோத் ஷோஷத்தெயே (Claude Chauchetière) மற்றும் பியேர் கோலனெக் (Pierre Cholenec). அவர்கள் இருவரும் கத்தேரியை நேரடியாகத் தெரிந்து அவரோடு பழகியவர்கள். இருவரும் கானவாக்கே மறைத்தளத்தில் பணிபுரிந்தனர்.

முதன்முதலில் 1695இல் கத்தேரியின் வாழ்க்கையை எழுதியவர் ஷோஷத்தெயே. அவருக்குப் பின் கோலனெக் கத்தேரியின் வாழ்க்கை வரலாற்றை 1696இல் எழுதினார். 1672இல் கானவாக்கே தளத்துக்கு வந்த கோலனெக் என்பவர்தான் மோகாக் மக்களுக்குப் பழக்கமான தவ முயற்சிகளைக் கிறித்தவத்தைத் தழுவிய மோகாக் மக்களும் கடைப்பிடிக்க இயலுமாறு சாட்டை, முடி உடை, இருப்புக் கவசம் போன்றவற்றை அறிமுகப்படுத்தினார்கள். இத்தகைய கருவிகளைப் பயன்படுத்தி உடலை ஒறுக்கும் பழக்கம் கத்தோலிக்க துறவிகள் நடுவே முன்னரே இருந்ததுண்டு.[4][10]

தந்தை ஷோசத்தியே கானவாக்கே மறைத்தளத்துக்கு வந்தது கத்தேரி அங்கு போய்ச்சேர்ந்த 1677இல் ஆகும். அமெரிக்க முதற்குடி மக்களுள் சிறந்த பக்தியுடைய பெண்ணாகக் கத்தேரி திகழ்ந்ததை அவர் குறிப்பிட்டுள்ளார்.[11]

கத்தேரி ஒரு புனிதமான பெண் என்பதை ஷோஷத்தியே விரைவிலேயே புரிந்துகொண்டார். அமெரிக்க முதற்குடி மக்களிடம் நேரடியாகப் பழகி அவர்களுடைய கலாச்சாரத்தைப் படிப்படியாக அறிந்த ஷோஷத்தியே அவர்களிடையே நிலவிய நற்பண்புகளைப் புகழ்ந்துரைக்கிறார். அவர்களைப் பற்றிய சில தவறான எண்ணங்களை அவர் மாற்றிக்கொண்டார். குறிப்பாக, கத்தேரி பிறரன்பு, சுறுசுறுப்பு, தூய்மை, துணிவு ஆகிய நற்பண்புகளைக் கொண்டிருந்ததாக அவர் குறிப்பிடுகிறார்.[12]

கத்தேரியின் வாழ்க்கை வரலாற்றை எழுதிய கோலனெக் கத்தேரியின் கன்னிமையைப் போற்றி உரைக்கின்றார்.[12]

கத்தேரி புரிந்த ஒறுத்தல் முயற்சிகள்[தொகு]

கானவாக்கே மறைத்தளத்துக்கு வந்து சேர்ந்த கத்தேரி 1678இல் மரி-தெரேஸ் தேகையாகுவெந்தா (Marie-Thérèse Tegaiaguenta) என்னும் பெண்மணியை அங்கே சந்தித்தார். தமக்குள்ளே ஆழ்ந்த நட்புக் கொண்ட அந்த இருவரும் கிறித்தவ மறையை உருக்கமாகக் கடைப்பிடிப்பதில் முனைந்தனர். எனவே இரகசியமாக அவர்கள் தம்மைச் சாட்டையால் அடித்துக்கொள்வதுண்டு. கத்தேரியின் வாழ்க்கை வரலாற்றை எழுதிய கோலனெக் கூற்றுப்படி, கத்தேரி சில சமயங்களில் ஒரே அமர்வில் 1000-1200 தடவைத் தம்மைக் கசையால் அடித்துக்கொண்டாராம்.[4]

நீண்ட உபவாசம் இருத்தல், கசையால் தம்மை அடித்தல், உடலைக் கீறிக்கொள்ளுதல், முட்படுக்கையில் படுத்தல், கனலால் தம்மைச் சுடுதல் என்று பலவகைகளில் கத்தேரி ஒறுத்தல் முயற்சிகளை மேற்கொள்ளலானார்.[13]

கத்தேரி கிறித்தவ குழுக்களை உருவாக்கச் செய்த முயற்சி[தொகு]

கத்தேரியும் மரி-தெரேசும் ஒரு குழுவை உருவாக்க முயன்றனர். அமெரிக்க முதற்குடி கிறித்தவர்களை ஒன்றுசேர்த்து ஒரு துறவறக் குழுவை உருவாக்க அவர்கள் முயன்றதை இயேசு சபையினர் ஆதரிக்கவில்லை. அவர்களுக்குக் கிறித்தவத்தில் ஆழ்ந்த பிடிப்பு இன்னும் உருவாகவில்லை என்று இயேசு சபையினர் கருதியதே இதற்குக் காரணம்.[4] இருந்த போதிலும் கத்தேரியும் மரி-தெரேசும் தமது ஒறுத்தல் முயற்சிகளைத் தொடர்ந்தனர். தனிப்பட்ட காரணங்களுக்காக மரி-தெரேசு குழுவை விட்டுப் பிரிந்த பிறகும் கத்தேரி அவரை அந்தப் பக்திக் குழுவோடு இணைந்து செயல்படத் தூண்டுதல் அளித்தார். மரி-தெரேசுக்கு கத்தேரி அளித்த அறிவுரைகளுள் கீழ்வருவனவும் அடங்கும். இவற்றைக் கத்தேரியின் வரலாற்றை எழுதியோர் பதிவுசெய்துள்ளனர்:

 • "நம்பிக்கை இல்லாதவர்கள் கூறுவதற்குச் செவிமடுக்கவும் வேண்டாம். அதன் காரணமாக உங்கள் துணிவை இழக்கவும் வேண்டாம்.
 • "கடவுளுக்கு நீங்கள் மிகவும் பிரியமானவர். அவரிடம் நான் செல்லும்போது உங்களுக்குத் துணையாக இருப்பேன்."
 • "ஒறுத்தல் முயற்சியை ஒருபோதும் கைவிட வேண்டாம்."[4]

கத்தேரியின் இறப்பு[தொகு]

1679ஆம் ஆண்டு, இயேசு துன்பங்கள் அனுபவித்து, இறந்து உயிர்பெற்றெழுந்த நிகழ்ச்சியை நினைவுகூரும் வாரத்தின்போது கத்தேரியின் உடல் நிலை மிகவும் மோசமானதை அவருடைய நண்பர்கள் கண்டனர். இன்னும் ஒருசில மணி நேரம் மட்டுமே அவருடைய உயிர் நீடிக்கும் என்று உணர்ந்த கிராம மக்கள் அனைவரும் கத்தேரியைச் சூழ்ந்து கூடினர். அவர்களோடு இயேசு சபைத் துறவியர் ஷோஷத்தியே மற்றும் கோலனெக் ஆகிய இருவரும் வந்தனர்.

தந்தை கோலனெக் கத்தேரிக்கு இறுதிச் சடங்காகிய நோயில் பூசுதல் என்னும் திருவருட்சாதனத்தை வழங்கினார்.[4]

அமெரிக்க முதற்குடி கிறித்தவரான கத்தேரி தெக்கக்விதா என்னும் புனிதப் பெண்மணி தம் 24ஆம் வயதில், 1680, ஏப்பிரல் 17ஆம் நாளன்று, உயிர்துறந்தார். அப்போது அவர் அருகே மரி-தெரேசும் உண்டு. கத்தேரியை நேரடியாகத் தெரிந்து, அவருடைய வாழ்க்கை வரலாற்றை எழுதிய தந்தை ஷோஷத்தியே கூறுவது போல, கத்தேரி தாம் இறப்பதற்கு முன் உரைத்த கடைசி சொற்கள் இவை: "இயேசுவே, நான் உம்மை அன்புசெய்கிறேன்." [4]

கத்தேரியின் உடல் ஒளிவீசுதல்[தொகு]

கத்தேரியின் உயிர் உடலை விட்டுப் பிரிந்ததும் அவ்வுடலில் ஒரு மாற்றம் நிகழ்ந்ததைச் சூழ்ந்து நின்றோர் கண்டனர். தந்தை கோலனெக் கூறுகிறார்: "தழும்புகளால் தடித்துப்போன கத்தேரியின் அந்த முகம், அவருடைய இறப்புக்குப் பின் ஒரு மணி நேரத்தில் எழில் பொங்கும் ஒளிவீசியதை நான் கண்டேன்."”[4]

இறந்த கத்தேரி நண்பர்களுக்குத் தோற்றம் அளித்தல்[தொகு]

கத்தேரி இறந்து ஒரு சில வாரக் காலத்தில் மூன்று நண்பர்களுக்குக் காட்சியளித்தார் என்று கூறப்படுகிறது. அவர்கள் கத்தேரிக்குக் கிறித்தவ மறை பற்றிய அறிவைப் புகட்டிய அனஸ்தாசியா தேகோனாத்சியோங்கோ, கத்தேரியின் நண்பராக இருந்த மரி-தெரேஸ் தேகையாகுவெந்தா, மற்றும் இயேசு சபைத் துறவி ஷோஷத்தியே ஆகியோர்.

தமக்கு ஒரு அன்பு மகளைப் போல் இருந்த கத்தேரியின் மறைவை முன்னிட்டுக் கவலையோடு கண்ணீர் வடித்துக்கொண்டிருந்தார் அனஸ்தாசியா. அப்போது அவர் கண்ட காட்சியில் கத்தேரி தமது பாய் அருகே முழந்தாட்படியிட்டிருந்தார். கத்தேரியின் கையில் கதிரவனைப் போல் ஒளிவீசிய ஒரு மரச் சிலுவை இருந்தது.

மரி-தெரேஸ் கண்ட காட்சியில், ஒர் இரவு சுவரில் யாரோ தட்டுவது போல் இருந்தது. அந்த ஒலி கேட்டு மரி-தெரேஸ் விழித்துக்கொண்டார். மரி-தெரேஸ் விழித்திருந்தாரா என்றொரு குரல் அவரிடம் கேட்டது. பின்னர் கத்தேரி, "நான் விண்ணகம் சென்று கொண்டிருக்கிறேன். உங்களிடம் பிரியாவிடை பெற்றுக்கொள்ள வந்தேன்" என்று கூறினார். விழித்துக் கொண்ட மரி-தெரேஸ் வீட்டுக்கு வெளியே சென்று யாராவது நிற்கிறார்களா என்று பார்த்தார். ஒருவரையும் காணவில்லை. ஆனால் மெதுவான் ஒரு குரல் கேட்டது: "சென்று வருகிறேன். தந்தையிடம் சென்று, நான் விண்ணகம் செல்கிறேன் என்று சொல்லுங்கள்."

இயேசு சபைத் துறவி ஷோஷத்தியே கத்தேரியை அவருடைய கல்லறை அருகே கண்டதாகக் குறிப்பிடுகிறார். கத்தேரி "கலை அழகு மிக்க பெண்ணாகத் தோற்றமளித்தார். இரண்டு மணி நேரமாக நான் அவரையே உற்றுப்பார்த்துக் கொண்டிருந்தேன். பரவசத்தில் இருப்பதுபோல் தோன்றிய அவருடைய முகம் விண்ணகம் நோக்கித் திரும்பி இருந்தது" என்று ஷோஷத்தியே கூறுகிறார்."[4]

கத்தேரியின் கல்லறை[தொகு]

தந்தை ஷோஷத்தியே கத்தேரியின் கல்லறை அருகே ஒரு சிற்றாலயம் எழுப்பினார். 1684ஆம் ஆண்டு தொடங்கி, கத்தேரி இறந்த இடம் ஒரு திருப்பயணத் தலமாக மாறியது. மக்கள் கத்தேரியின் கல்லறைக்குச் சென்று அவருக்கு வணக்கம் செலுத்தலாயினர். கத்தேரியின் எலும்புகளை எடுத்து அவற்றைத் துகள் ஆக்கி அதைப் புதியதொரு சிற்றாலயத்தில் வணக்கத்தோடு வைத்தனர் இயேசு சபையார். "[4] கத்தேரியின் நினைவு இறவாது இருப்பதற்கு இது ஓர் அடையாளமானது. கத்தேரியின் உடலின் மீபொருள் சிலருக்கு நலம் கொணர்ந்ததாகக் கூறப்படுகிறது.[4]

கத்தேரியின் கல்லறை வாசகம்[தொகு]

கத்தேரியின் கல்லறையில் மோகாக் மொழியில் கீழ்வரும் வாசகம் பொறிக்கப்பட்டுள்ளது:

அதன் மொழிபெயர்ப்பு:


கத்தேரி தேக்கக்விதாவுக்கு வழங்கப்படுகின்ற சிறப்புப் பெயர்கள்[தொகு]

கன்னிமையில் சிறந்து, தம் வாழ்க்கைநிலைக்கு ஏற்றக் கற்பு நெறியையும் கடைப்பிடித்த கத்தேரியை "லில்லி மலர்" என்று குறிப்பிடுவது வழக்கம். கத்தோலிக்க திருச்சபை மரபில் லில்லி மலர் தூய்மையையும் கன்னிமையையும் குறிக்கும் அடையாளம். குறிப்பாக, அது அன்னை மரியாவுக்குச் சிறப்பு அடையாளம்.

கத்தேரி பின்வரும் சிறப்புப் பெயர்களால் அறியப்படுகிறார்[14]:

 • "மோகாக்கின் லில்லி மலர்"
 • "மோகாக் பெண்மணி"
 • "தூய, மென்மைமிகு லில்லி"
 • "உண்மை மனிதரிடையே உதித்த மென்மலர்"
 • "தூய்மைமிகு லில்லி"
 • "புதிய உலகின் புது வெள்ளி"
 • "செந்நிற மக்களிடையே பூத்த எழில்மிகு மலர்"

கத்தேரியிடம் துலங்கிய நற்பண்புகள் அமெரிக்க முதற்குடி மக்களின் கலாச்சாரத்துக்கும் ஐரோப்பிய கலாச்சாரத்துக்கும் இடையே நல்லெண்ணத்தையும் புரிதலையும் கொணர்ந்த ஒரு பாலம்போல அமைந்தன.

கத்தேரிக்கு அளிக்கப்பட்ட வணக்கம்[தொகு]

கத்தேரி தேக்கக்விதாவின் திருவுருவம். ஆக்கியோர்: யோசப்-ஏமில் ப்ரூனே. காப்பிடம்: போப்ரே புனித அன்னா பெருங்கோவில், கெபெக் நகரம்.

கத்தேரி இறந்த சில காலத்திற்குள் அவர் பொதுமக்களால் மொண்ட்ரியால் நகரத்தின் பாதுகாவலராகவும், அமெரிக்க முதற்குடி மக்களின் பாதுகாவலராகவும் வணக்கத்துடன் ஏற்கப்பட்டார். அவர் இறந்து ஐம்பது ஆண்டுகள் கடந்தபின் மெக்சிக்கோ நாட்டில், முதற்குடி மக்களுக்கென்று ஒரு கன்னியர் மடம் நிறுவப்பட்டது. அக்கன்னியர் கத்தேரி தேக்கக்விதாவுக்குப் புனிதர் பட்டம் கிடைக்க வேண்டும் என்று வேண்டுதல் நடத்திவந்தனர்.

ஐக்கிய அமெரிக்க நாடுகளில், கத்தோலிக்கர் கத்தேரி புனிதர் பட்டம் பெறுவதற்கான நடைமுறையை 1884இல் தொடங்கினார்கள். கானடா கத்தோலிக்கரும் அவ்வாறே செய்தனர்.

1943, சனவர் 3ஆம் நாள் திருத்தந்தை பன்னிரண்டாம் பயஸ் கத்தேரி தேக்கக்விதாவுக்கு வணக்கத்துக்குரியவர் என்னும் பட்டம் வழங்கினார்.

கத்தேரிக்கு முத்திப்பேறு பெற்ற பட்டம் திருத்தந்தை இரண்டாம் யோவான் பவுலால் 1980, சூன் 22ஆம் நாள் வழங்கப்பட்டது.[15]

கத்தேரிக்குப் புனிதர் பட்டம் அளிக்கப்பட ஏற்பாடு[தொகு]

கத்தேரி தேக்கக்விதாவை நோக்கி வேண்டுதல் நிகழ்த்தியதன் பயனாக நிகழ்ந்ததாகக் கூறப்பட்ட இரண்டாவது புதுமையை அடிப்படையாகக் கொண்டு, திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட் கத்தேரிக்கு புனிதர் பட்டம் வழங்குவதற்கு 2011, திசம்பர் 19இல் வழிவகுத்தார்.[16]

கத்தேரி தேக்கக்விதா 2012, அக்டோபர் 21ஆம் நாள் புனிதர் நிலைக்கு உயர்த்தப்படுவார் என்னும் அறிவிப்பைப் திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட் 2012 பெப்ருவரி 18ஆம் நாள் வெளியிட்டார்.[14]

கத்தேரி புனிதர் நிலைக்கு உயர்த்தப்படல்[தொகு]

2012, அக்டோபர் 21ஆம் நாள், அகில உலக மறைபரப்பு ஞாயிறன்று, திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட் முத்திப்பேறு பெற்ற கத்தேரி தேக்கக்விதா என்னும் அமெரிக்க முதற்குடியைச் சார்ந்த பெண்மணிக்குப் புனிதர் பட்டம் அளித்துச் சிறப்பித்தார். அவ்விழா உரோமை புனித பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் திருத்தந்தையின் தலைமையில் நிகழ்ந்தது.[17]

அந்நாளில் கீழ்வரும் எழுவருக்கு புனிதர் பட்டம் வழங்கப்பட்டது:

 • கத்தேரி தேக்கக்விதா (அமெரிக்க முதற்குடி மக்களிடமிருந்து வரும் முதல் புனிதர்
 • மேரியான் கோப் (ஹவாயி இராச்சியத்தில் தொழுநோயாளருக்குப் பணிபுரிந்த பிரான்சிஸ்கு சபைப் பெண்துறவி)
 • பேத்ரோ கலூங்சோத் (17ஆம் வயதில் கிறித்தவ நம்பிக்கைக்காகக் கொல்லப்பட்ட பிலிப்பீனோ மறைச்சாட்சி)
 • ஜாக் பெர்த்யூ (மடகாஸ்காரில் கிறித்தவ நம்பிக்கையின் பொருட்டு மறைச்சாட்சியாக உயிர்துறந்த இயேசு சபைத் துறவி - 19ஆம் நூற்றாண்டு)
 • கார்மென் சால்லெஸ் இ பராங்குவேராஸ் (எசுப்பானிய நாட்டுப் பெண் துறவி; குழந்தைகளுக்குக் கல்வியறிவு அளிக்க ஒரு துறவற சபையை 1892இல் நிறுவியவர்)
 • ஜொவான்னி பட்தீஸ்தா பீயாமார்த்தா - 1900இல் ஒரு துறவற சபையை நிறுவிய இவர் இத்தாலியின் பிரேஷியாவில் கத்தோலிக்க அச்சகத்தையும் வெளியீட்டு நிறுவனத்தையும் ஏற்படுத்தினார்)
 • அன்னா ஷேஃபர் (19ஆம் நூற்றாண்டு செருமானியப் பொதுநிலைப் பெண்மணி. இவர் கொதிகலத்தில் விழுந்ததால் ஏற்பட்ட புண்கள் காரணமாக வாழ்நாள் முழுதும் துன்புற்றவர். நோய்நொடிகளால் துன்புறுவோருக்கு நம்பிக்கையளிக்கும் ஒருவர்)

புனிதர் பட்ட நிகழ்ச்சியின் சிறப்புக் கூறுகள்[தொகு]

 • 2012, அக்டோபர் 21ஆம் நாள் நிகழ்ந்த புனிதர் பட்டமளிப்பு விழாவில் 80 ஆயிரத்திற்கும் மேலானோர் கலந்துகொண்டனர்.
 • அதிகாலையில் கதிரவன் எழும் வேளையில் கானடா மற்றும் ஐக்கிய அமெரிக்க நாடுகளிலிருந்து வந்திருந்த அமெரிக்க முதற்குடி மக்கள் கத்தேரி தேக்கக்விதாவுக்கு புகழ்பாடி, மேள தாளங்களுடன் நடனமாடிக் கொண்டாடினர். அவர்கள் தம் கலாச்சார வழக்கப்படி தலையில் பவளங்கள் கோத்த இறகுகளால் புனையப்பட்ட தலைச்சீரா அணிந்திருந்தனர். ஓரங்களில் வார்களால் அலங்கரிக்கப்பட்ட மேலாடை புனைந்திருந்தனர்.
 • புனிதர் பட்டமளிப்பு விழாவின்போது ஆற்றிய மறையுரையில் திருத்தந்தை பெனடிக்ட் கீழ்வருமாறு கூறினார்:

இப்புனிதர்கள் நமக்குக் காட்டியுள்ள சான்றுவாழ்வு இன்றைய திருச்சபை முழுவதற்கும் அளிக்கப்பட்டுள்ளது. அவர்களது வேண்டுதலால் திருச்சபை தனது மறையறிவிப்புப் பணியில் மேலும் அதிக ஆர்வத்தோடு ஈடுபட வேண்டும்...புனித கத்தேரி கிறித்தவத்தைத் தழுவி, இயேசுவுக்குத் தம்மையே முழுமையாகக் கையளித்த போதிலும் தமது கலாச்சார அடிப்படையை விட்டுவிடவில்லை. நாம் வாழ்கின்ற சூழ்நிலைகளில் இருந்துகொண்டு, நமது கலாச்சார வேர்களை மறக்காமல் நாம் கிறித்தவத்தைக் கடைப்பிடிக்க கத்தேரி துணைசெய்ய வேண்டும்

 • ஐக்கிய அமெரிக்க நாடுகளின் விஸ்கான்சின் மாநிலத்தில் நெயோபிட் பகுதியில் உள்ள மெனோமினீ என்னும் முதற்குடி மக்கள் குடியேற்றத்திலிருந்து புனிதர் பட்ட விழாவில் கலந்துகொண்ட ஜீன் கால்ட்வெல் என்பவர் கூறியது: "அமெரிக்க முதற்குடி மக்களில் முதல்வராகக் கத்தேரி தேக்கக்விதா புனிதராக உயர்த்தப்படும் இந்நாள் முதற்குடி மக்கள் அனைவருக்கும் ஒரு மாபெரும் பொன்னாள். நானும் என் மனைவியும் இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்ள உண்மையிலேயே கொடுத்துவைத்தவர்கள். உலகத்தின் பல்வேறு கலாச்சார வளமைகளை இங்குக் காணும்போது நான் பெருமகிழ்ச்சி அடைகின்றேன்."
 • புனித கத்தேரி இன்றைய வட அமெரிக்காவில் கானடா, ஐக்கிய அமெரிக்க நாடுகள் ஆகிய இரு நாடுகளோடும் தொடர்புடையவர். அவர் பிறந்த இடம் இன்று ஐக்கிய அமெரிக்க நாட்டில் உள்ளது. ஆனால் அவர் கத்தோலிக்க மறையைத் தழுவியபின் வாழ்ந்து, இறந்த இடம் இன்றைய கானடா நாட்டில் உள்ளது. எனவே, அந்த இரு நாடுகளுக்கும் கத்தேரிக்கும் உள்ள தொடர்பை வலியுறுத்தும் வண்ணம் திருத்தந்தை பெனடிக்ட் ஆங்கிலத்திலும் பிரஞ்சு மொழியிலும் வாழ்த்துக் கூறினார். மேலும், கானடா நாட்டின் பாதுகாவலராகவும், முதற்குடிமக்களிடமிருந்து வருகின்ற முதல் புனிதருமாக இருக்கின்ற கத்தேரி தேக்கக்விதா வட அமெரிக்கா முழுவதிலும், முதற்குடி மக்கள் நடுவிலும் கிறித்தவ நம்பிக்கையைப் புதுப்பிக்கத் துணை நல்க வேண்டும் என்றும் திருத்தந்தை வேண்டுதல் நிகழ்த்தினார்.
 • திருத்தந்தையின் கைகளிலிருந்து நற்கருணை பெறும் வாய்ப்பு ஒருசிலருக்கே கிடைத்தது. அவர்களுள் 12 வயதே நிரம்பிய ஜேக் ஃபிங்க்போன்னர் (Jake Finkbonner) என்னும் சிறுவனும் ஒருவன். 2006இல் வாஷிங்டன் மாநிலத்தில் உடல்தின்னி நுண்ணியிரியால் (flesh-eating bacterium)தாக்கப்பட்ட அச்சிறுவன் இறக்கும் ஆபத்தில் இருந்தான். கத்தேரி தேக்கக்விதாவின் வேண்டுதலால் அவனுக்கு உடல் நலம் கிடைத்தது என்று கூறப்படுகிறது. அது உண்மையில் இயற்கை கடந்த ஒரு புதுமையே என்று திருத்தந்தை பெனடிக்ட் அறிவித்திருந்தார்.[18]
 • கத்தேரிக்கு புனிதர் பட்டம் வழங்கிய நிகழ்ச்சியின்போது மோகாக் என்னும் அவருடைய மொழியிலும் வேண்டுதல் நிகழ்ந்தது.
 • கத்தேரிக்கு புனிதர் பட்டம் கொடுக்கப்பட்ட அதே நிகழ்ச்சியில் மேரியான் கோப் என்னும் பிரான்சிஸ்கு சபைப் பெண்துறவிக்கும் புனிதர் பட்டம் வழங்கப்பட்டது. அவ்விருவரும், காலத்தால் இரு நூற்றாண்டுகள் பிரிந்திருந்தாலும், நியூயார்க் மாநிலத்தின் ஓரிஸ்வில் என்னும் பகுதியில் அவர்களது இளமைப் பருவம் கழிந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்க முதற்குடி மக்களிடையே முதல் புனிதர் கத்தேரி[தொகு]

புனித கத்தேரி தேக்கக்விதா அமெரிக்க முதற்குடி மக்களிடையே கத்தோலிக்க திருச்சபையால் புனிதர் நிலைக்கு உயர்த்தப்படுகின்ற முதல் நபர் ஆவார்.

மூன்று தேசிய திருத்தலங்கள்[தொகு]

கத்தேரி தேக்கக்விதாவுக்கு ஐக்கிய அமெரிக்க நாடுகளில் மூன்று தேசிய திருத்தலங்கள் அர்ப்பணிக்கப்பட்டுள்ளன. அவை:

 • நியூயார்க் மாநிலத்தில் ஃபோண்டா நகரில் அமைந்த திருத்தலம்;
 • வட அமெரிக்க மறைச்சாட்சிகளின் திருத்தலம், ஓரிஸ்வில், நியூயார்க்;
 • அமல உற்பவ அன்னை தேசிய திருத்தலப் பெருங்கோவில், வாஷிங்டன்.

கத்தேரிக்கு திருச்சிலைகள்[தொகு]

கத்தேரிக்கு வணக்கம் செலுத்தும் வகையில் கீழ்வரும் இடங்களில் திருச்சிலைகள் நிறுவப்பட்டுள்ளன:

கலைப்படைப்பு[தொகு]

ஐக்கிய அமெரிக்க நாடுகளில், கலிபோர்னியா மாநிலத்தின் ஓரன்ஜ் மாவட்டத்தில் உள்ள சான் ஹுவான் கப்பிஸ்த்ரானோ பெருங்கோவிலிலும் கத்தேரி தேக்கக்விதாவின் சிலை உள்ளது. அக்கோவிலில் 2007ஆம் ஆண்டு 40 அடி உயரம் கொண்ட கலைப்படைப்பு நடுப்பீடத்தின் பின் சுவரோடு இணைத்து அமைக்கப்பட்டது. அதில் வைக்கப்பட்ட சிலைகளுள் ஒன்று கத்தேரியின் சிலை ஆகும். அக்கலைப்படைப்பில் கத்தேரியின் சிலைமேல் வலப்புறம் உள்ளது. பிற சிலைகள்: மேலே சிலுவையில் இயேசு; குவாதலூப்பே அன்னை மரியா (நடு); புனித யோசேப்பு (கீழ் இடது); புனித பிரான்சிசு அசிசி (கீழ் வலது); ஜுனீப்பெரே செர்ரா (மேல் இடது).

இக்கலைப்படைப்பு எசுப்பானிய கலைஞர்களால் உருவாக்கப்பட்டது.[19][20]

ஐக்கிய அமெரிக்க நாடுகளில் விஸ்கான்சின் மாநிலத்தின் லா க்ராஸ் (La Crosse) அமைந்துள்ள குவாதலூப்பே அன்னை மரியா திருத்தலத்தில், வெண்கலத்தால் ஆன ஒரு சிலை கத்தேரி முழந்தாட்படியிட்டு இறைவேண்டல் நிகழ்த்துவது போல் காட்டுகிறது.[21] அது சிந்தியா ஹிட்ஷ்லெர் என்னும் கலைஞரால் உருவாக்கப்பட்டது.[22]

மற்றுமொரு ஆளுயர கத்தேரி சிலை நியூயார்க் மாநிலத்தின் லூவிஸ்டன் நகரில் உள்ள பாத்திமா அன்னை திருத்தலத்தில் உள்ளது.

நியூயார்க் நகரிலுள்ள புனித பேட்ரிக் பெருங்கோவிலின் முகப்பு வாயிலில் வெண்கலத்தால் ஆன கத்தேரி சிலை செதுக்கப்பட்டுள்ளது.[23]

கத்தேரி புரிந்ததாகக் கூறப்படும் புதுமைகள்[தொகு]

மக்கள் கத்தேரியை நோக்கி வேண்டுதல் நிகழ்த்தியதன் பயனாகப் பல புதுமைகள் நடந்ததாகக் கூறப்படுகிறது. இவை பெரும்பாலும் நோயிலிருந்து விடுதலை பெற்று நலம் அடைதலைக் குறித்தவை ஆகும்.

 • யோசேப்பு கெல்லாக் ஒரு புரட்டஸ்தாந்து சபைச் சிறுவன். அவனை அமெரிக்க முதற்குடி மக்கள் 18ஆம் நூற்றாண்டில் பிடித்துச் சென்றுவிட்டனர். பின்னர் அச்சிறுவன் தன் சொந்த இடத்துக்குத் திரும்பிச் சென்றான். ஓராண்டுக்குப் பின் அவனுக்குப் பெரியம்மை கண்டது. அப்போது இயேசு சபைத் துறவியர் சிலர் அவனுக்குச் சிகிச்சை அளித்தனர். ஆனால் சிறுவனுக்கு நலம் கிடைக்கவில்லை. அத்துறவியரிடம் கத்தேரியின் மீபொருள்கள் இருந்தன. ஆனால் அவர்கள் புரட்டஸ்தாந்து சபையைச் சார்ந்த அச்சிறுவனின் அவற்றைச் சிறுவனின் உடலில் தொடும்படி வைக்க விரும்பவில்லை. அச்சிறுவன் கத்தோலிக்க சபையைத் தழுவுவதாக இருந்தால் கத்தேரியின் மீபொருள்களை அவன்மீது வைத்து இறைவேண்டல் செய்ய முடியும் என்று அத்துறவியர் கூறினர். அவ்வாறே அச்சிறுவன் கத்தோலிக்க சபையில் சேர்ந்தான். கத்தேரியின் சவப்பெட்டியிலிருந்து எடுக்கப்பட்ட மக்கிப்போன மரத்துண்டை அச்சிறுவனின்மீது வைத்து இறைவேண்டல் செய்யவே, சிறுவன் குணம் பெற்றதாகக் கூறப்படுகிறது.[4] 18ஆம் நூற்றாண்டிலேயே கத்தேரி மக்களுக்குக் குணம் நல்குவது பற்றிய செய்தி இருந்தது என்பது இதனால் தெரியவருகிறது.
 • கத்தேரியின் மீபொருள்களைத் தொட்டு, இறைவேண்டல் செய்ததன் பயனாகத் தந்தை ரேமி என்பவர் மீண்டும் கேட்கும் ஆற்றல் பெற்றதாகக் கூறப்படுகிறது.[4] கத்தேரியை நேரடியாகத் தெரிந்து, அவருடைய வாழ்க்கை வரலாற்றை எழுதிய ஷோஷத்தியே என்னும் இயேசு சபைத் துறவி, கத்தேரியை நோக்கி மன்றாடுவதால் புதுமைகள் நிகழ்வதாகக் குறிப்பிடுகிறார். அவருடைய கூற்றும் கத்தேரியின் புகழும் சீனா வரை பரவின.[4]
 • கத்தேரி இறந்ததும் பெரியம்மையால் அவருக்கு ஏற்பட்டிருந்த தழும்புகள் அதிசயமாக மறைந்து விட்டனவாம். அது ஒரு புதுமையே என்று 1943இல் திருத்தந்தை பன்னிரண்டாம் பயஸ் அறிவித்தார்.[24]
 • 2006இல் வாஷிங்டன் மாநிலத்தில் உடல்தின்னி நுண்ணியிரியால் (flesh-eating bacterium)தாக்கப்பட்டான் ஒரு சிறுவன். அவனது உடல்நிலை நாளுக்குநாள் மோசமாகியது. அறுவை சிகிச்சையும் பயனளிக்கவில்லை. அவன் சில நாள்களுக்குள் இறந்துபோவான் என்று மருத்துவர் கூறினர். அவனுக்கு நோயில் பூசுதல் என்னும் திருவருட்சாதனம் ஒரு கத்தோலிக்க குருவால் வழங்கப்பட்டது. அச்சிறுவன் ஒரு பகுதி லூம்மி என்னும் அமெரிக்க முதற்குடி இனத்தவன் என்று இருந்ததால் அவனுடைய பெற்றோர் முதற்குடியைச் சார்ந்த கத்தேரியிடம் வேண்டுதல் நிகழ்த்தினர். அச்சிறுவனின் உற்றார் உறவினர், நண்பர்கள், வகுப்பு மாணவர் உட்பட அனைவரும் வேண்டுதல் நடத்தினர். கத்தேரி மிச்சல் என்னும் துறவற சகோதரியும் அச்சிறுவனின் படுக்கை அருகே சென்று அவனுக்காக இறைவனிடம் மன்றாடியதோடு, அவனுடைய உடலின்மீது கத்தேரியின் எலும்புத் துண்டொன்றை வைத்தார். சிறுவனும் குணம் பெற்று பிழைத்துக் கொண்டான்.[18]

திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட் மேற்கூறிய நிகழ்வு மனித அறிவுக்கு அப்பாற்பட்ட ஒரு அதிசய நிகழ்வே என்று ஏற்று அறிக்கையிட்டார்.[25]

2012, அக்டோபர் 21ஆம் நாள் கத்தேரி தேக்கக்விதாவுக்கு உரோமையில் புனிதர் பட்டம் வழங்கப்பட்டபோது ஜேக் ஃபிங்க்போன்னர் (Jake Finkbonner) என்னும் அச்சிறுவனும் உடனிருந்தான். அவனுக்குப் திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட்டின் கைகளிலிருந்து நற்கருணை பெறும் பேறும் கிட்டியது.

கத்தேரி தேக்கக்விதா பற்றிய நூல்கள்[தொகு]

கத்தேரியை நேரில் அறிந்து, அவருடைய வாழ்க்கை வரலாற்றை முதன்முதலில் எழுதியோர் ஷோஷத்தியே மற்றும் கோலனெக் என்னும் இரு இயேசு சபைத் துறவியர் ஆவர். அவர்களுடைய நூல்களைத் தொடர்ந்து குறைந்தது 300 நூல்கள் கத்தேரியின் வாழ்க்கையைப் பற்றி 20 மொழிகளில் வெளிவந்துள்ளன.[7] கத்தேரியின் வாழ்க்கையில், ஐரோப்பிய குடியேற்றத்தினர் அமெரிக்கா சென்று, அங்குள்ள முதற்குடி மக்களிடையே கிறித்தவத்தை அறிவித்தபோது ஏற்பட்ட சவால்களும் கைம்மாறும் காணக்கிடக்கின்றன என்று K. I. கோப்பட்ரேயர் (K. I. Koppedrayer) என்னும் வரலாற்றாசிரியர் கூறியுள்ளார்.[8]

கத்தேரி தேக்கக்விதா பற்றிய புதினங்களும் வெளியாகியுள்ளன. அவற்றுள் சில:

 • லியோன் கோஹன் என்பவர் எழுதிய "அழகிய இழப்பாளர்கள்" (Beautiful Losers). ஆண்டு: 1966.
 • வில்லியம் ஃபோல்மான் எழுதிய "தந்தையரும் காக்கை இன மக்களும்" (Fathers and Crows). ஆண்டு: 1992. இப்புதினம் ஃபோல்மான் எழுதத் திட்டமிட்டுள்ள "ஏழு கனவுகள்" என்னும் ஏழு நூல்களைக் கொண்ட தொகுப்பின் இரண்டாம் நூல் ஆகும். இது ஐரோப்பியர் அமெரிக்க முதற்குடியினரைச் சந்தித்த வரலாற்றைக் கதையாகக் கூறுகிறது.[26]

மேல் ஆய்வுக்கு[தொகு]

 • Bechard, Henri. "Tekakwitha". Dictionary of Canadian Biography (Toronto: University of Toronto Press, 1966), vol. 1.
 • Sargent, Daniel. Catherine Tekakwitha. New York and Toronto: Longmans, Green and Co., 1936.
 • Shoemaker, Nancy. "Kateri Tekakwitha's Tortuous Path to Sainthood," in Nancy Shoemaker, ed. Negotiators of Change: Historical Perspectives on Native American Women (New York: Routledge, 1995), p. 49–71.
 • Steckley, John. Beyond their Years: Five Native Women's Stories, Canadian Scholars Press 1999 பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1551301501

வெளி இணைப்புகள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Kateri Tekakwitha
என்பதில் ஊடகங்கள் உள்ளன.


ஆதாரங்கள்[தொகு]

 1. Pierre Cholence, S.J., "Catharinae Tekakwitha, Virginis" (1696), Acta Apostolica Sedis, January 30, 1961
 2. Pierre Cholenec, S.J. (1696). The Life of Catherine Tekakwitha, First Iroquois Virgin. Archived from the original on 2011-07-25. பார்க்கப்பட்ட நாள் 2012-02-18.
 3. Claude Chauchetiere, S.J. (1695). "The Life of the Good Catherine Tekakwitha, said now Saint Catherine Tekakwitha". Archived from the original on 2011-07-25. பார்க்கப்பட்ட நாள் 2012-02-18.
 4. 4.00 4.01 4.02 4.03 4.04 4.05 4.06 4.07 4.08 4.09 4.10 4.11 4.12 4.13 4.14 4.15 4.16 4.17 4.18 4.19 4.20 4.21 4.22 4.23 4.24 Greer, Allan (2005). Mohawk Saint: Catherine Tekakwitha and the Jesuits. Oxford University Press. pp. 3–205.
 5. Juliette Lavergne, La Vie gracieuse de Catherine Tekakwitha, Editions A.C.F., Montreal, 1934, pp. 13-43
 6. 6.0 6.1 Lodi, Enzo (1992). Saints of the Roman Calendar (Eng. Trans.). New York: Alba House. pp. 419 pp. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8189-0652-9.
 7. 7.0 7.1 Darren Bonaparte (Mohawk), "A Lily Among Thorns: The Mohawk Repatriation of Káteri Tekahkwí:tha", presented at 30th Conference on New York State History, 5 June 2009, Plattsburgh, New York, accessed 25 July 2012
 8. 8.0 8.1 8.2 8.3 8.4 8.5 Koppedrayer, K. I.. "The Making of the First Iroquois Virgin: Early Jesuit Biographies of the Blessed Kateri Tekakwitha". Ethnohistory (Duke University Press): 277–306. 
 9. Je Me Souviens: Histoire du Québec et du Canada. Ottawa: Éditions du Renouveau Pédagogique Inc. 1995. p. 32. {{cite book}}: Unknown parameter |coauthors= ignored (help)
 10. Béchard, Henri. "Cholenec, Pierre". Dictionary of Canadian Biography Online. பார்க்கப்பட்ட நாள் 2012-02-26.
 11. Jaenen, C. J. "Chauchetière, Claude". Dictionary of Canadian Biography Online. பார்க்கப்பட்ட நாள் 2012-02-26.
 12. 12.0 12.1 Leslie Choquette, Review: Allan Greer, Mohawk Saint பரணிடப்பட்டது 2009-02-10 at the வந்தவழி இயந்திரம், H-France Review, Vol. 5 (October 2005), No. 109; accessed 25 July 2012
 13. Bill Donahue, "The Secret World of Saints: Inside the Catholic Church and the Mysterious Process of Anointing the Holy Dead;" Byliner Original, (single), December 21, 2011;ASIN: B006P2X86U
 14. 14.0 14.1 Bunson, Margaret and Stephen, "Blessed Kateri Tekakwitha, Lily of this Mohawks," Bureau of Catholic Indian Missions brochure, p. 1
 15. Acta Apostolicae Sedis LIII (1961), p. 82.
 16. "Pope OKs 7 New Saints, Including Hawaii's Marianne". Salon. December 19, 2011. பார்க்கப்பட்ட நாள் 2012-02-18.[தொடர்பிழந்த இணைப்பு]
 17. புனிதர் பட்டமளிப்பு நிகழ்ச்சி
 18. 18.0 18.1 Discepolo, John (December 20, 2011). "Vatican calls Whatcom boy's survival a miracle". Seattle Post-Intelligencer. பார்க்கப்பட்ட நாள் 2012-02-18.
 19. Ignatin, Heather (April 19, 2007). "Retablo draws crowds at Mission Basilica". Orange County Register இம் மூலத்தில் இருந்து 2012-09-10 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20120910135941/http://www.ocregister.com/ocregister/homepage/abox/article_1662425.php. பார்த்த நாள்: 2008-08-20. 
 20. Mission San Juan Capistrano: Grand Retablo en Route to San Juan Capistrano, Installation expected March 19 பரணிடப்பட்டது 2008-10-30 at the வந்தவழி இயந்திரம், February 9, 2007
 21. "Mohawk Woman Enshrined at Shrine" (Orso, Joe), La Crosse Tribune, 31 July 2008:[1]
 22. "Blessed Kateri Tekakwitha, Lily of the Mohawks: Bronze, Height 55". Celstumo.com. Archived from the original on 2012-02-24. பார்க்கப்பட்ட நாள் 2012-02-18.
 23. Reports, Staff. "Lewiston: Statue Dedication at Fatima". Niagara Gazette. பார்க்கப்பட்ட நாள் 2011-11-20.
 24. "Blessed Kateri Tekakwitha a Canonized Saint (La Grange)" பரணிடப்பட்டது 2012-01-17 at the வந்தவழி இயந்திரம், Poughkeepsie Journal (New York), 27 December 2011
 25. "PROMULGAZIONE DI DECRETI DELLA CONGREGAZIONE DELLE CAUSE DEI SANTI". catholica.va. December 19, 2011. Archived from the original on 2012-06-02. பார்க்கப்பட்ட நாள் 2012-02-18.
 26. காக்கை மக்கள் இனம்
"https://ta.wikipedia.org/w/index.php?title=கத்தேரி_தேக்கக்விதா&oldid=3893952" இலிருந்து மீள்விக்கப்பட்டது