இறைவனின் தாய்
இறைவனின் தாய் (Theotokos, Θεοτόκος, தியோட்டோக்கசு) என்பது இயேசுவின் தாயான கன்னி மரியாவின் சிறப்பு பெயர்களுள் ஒன்றாகும். இதன் மூலச்சொல்லான தியோடோக்கோஸ் என்பதற்கு கடவுளைச் சுமந்தவர் என்பது பொருள். மகனாகிய கடவுளுக்கு இவ்வுலகில் பிறப்பு அளித்தவர் என்பதால், மரியா 'கடவுளின் தாய்' அல்லது 'இறைவனின் தாய்' என்று அழைக்கப்படுகிறார். கத்தோலிக்க திருச்சபை, கிழக்கு மரபுவழி திருச்சபை, ஆங்கிலிக்க ஒன்றியம் ஆகியவற்றில் இந்த கோட்பாடு ஏற்றுக்கொள்ளப்படுகிறது.
பழைய ஏற்பாட்டில்
[தொகு]விவிலியத்தின் பழைய ஏற்பாட்டில், மனிதகுல மீட்பரான இறைவனின் தாயைப் பற்றி 2 இடங்களில் முன்னறிவிப்புகள் இடம்பெறுகின்றன.
கடவுளின் கட்டளையை மீறி பாவம் செய்த முதல் பெற்றோரிடம் மீட்பரைப் பற்றி வாக்களிக்கும் இறைவன், மீட்பரின் தாயைப் பற்றி முதல்முறைப் பேசுகிறார். ஆண்டவராகிய கடவுள் அலகையிடம், "உனக்கும் பெண்ணுக்கும், உன் வித்துக்கும் அவள் வித்துக்கும் பகையை உண்டாக்குவேன். அவள் வித்து உன் தலையைக் காயப்படுத்தும். நீ அதன் குதிங்காலைக் காயப்படுத்துவாய்"[1] என்று கூறுகிறார். இதில் 'வித்து' என்பது இயேசு கிறித்துவையும், 'பெண்' என்பது அவரது தாய் மரியாவையும் குறிக்கிறது. இவ்வாறு வரலாற்றின் தொடக்கத்திலேயே, இறைவனின் மீட்புத் திட்டத்தில் மரியாவும் இடம் பெற்றிருந்தார்.
இரண்டாவதாக, இறைவாக்கினர் எசாயா கடவுளின் தாயைப் பற்றி முன்னறிவிக்கிறார். "ஆண்டவர்தாமே உங்களுக்கு ஓர் அடையாளத்தை அருள்வார். இதோ, கருவுற்றிருக்கும் அந்த இளம் பெண் ஓர் ஆண்மகவைப் பெற்றெடுப்பார்; அக்குழந்தைக்கு அவர் இம்மானுவேல் என்று பெயரிடுவார்."[2] "ஏனெனில், ஓர் ஆண்மகவு நமக்குத் தரப்பட்டுள்ளார்: ஆட்சிப்பொறுப்பு அவர் தோள்மேல் இருக்கும்: அவர் திருப்பெயரோ வியத்தகு ஆலோசகர், வலிமைமிகு இறைவன், என்றுமுள தந்தை, அமைதியின் அரசர் என்று அழைக்கப்படும்"[3] என்று எசாயா கூறுகிறார். இம்மானுவேல் என்றால் கடவுள் நம்முடன் இருக்கிறார் என்பது பொருள்.[4]
புதிய ஏற்பாட்டில்
[தொகு]மரியா, கடவுளின் தாய் என்பதை புதிய ஏற்பாடு தெளிவாக எடுத்துரைக்கிறது. இயேசுவின் பிறப்பை பற்றி எடுத்துரைக்கும் மத்தேயு, லூக்கா ஆகிய இரு நற்செய்திகளுமே, மரியாவை இறைவனின் தாயாக சுட்டிக்காட்டுகின்றன.
மரியா இறைமகனை கருவில் தாங்கிப் பெற்றெடுத்தார் என்பதை நற்செய்தியாளர் லூக்கா பின்வருமாறு எடுத்துரைக்கிறார்: வானதூதர் மரியாவுக்குத் தோன்றி, "அருள்மிகப் பெற்றவரே வாழ்க! இதோ, கருவுற்று ஒரு மகனைப் பெறுவீர்; அவருக்கு இயேசு என்னும் பெயரிடுவீர். அவர் பெரியவராயிருப்பார்; உன்னத கடவுளின் மகன் எனப்படுவார். அவர் யாக்கோபின் குடும்பத்தின் மீது என்றென்றும் ஆட்சி செலுத்துவார். அவருடைய ஆட்சிக்கு முடிவே இராது" என்றார்.[5] இந்த வார்த்தைகள் மரியா மகனாகிய கடவுளின் தாய் என்பதை தெளிவுபடுத்துகின்றன.
இறைவாக்கினர் எசாயாவின் இறைவாக்கு மரியாவிடம் நிறைவேறியதை நற்செய்தியாளர் மத்தேயு பின்வருமாறு எடுத்துரைக்கிறார்: யோசேப்புக்குக் கனவில் தோன்றிய ஆண்டவரின் தூதர், "மரியா கருவுற்றிருப்பது தூய ஆவியால்தான். அவர் ஒரு மகனைப் பெற்றெடுப்பார். அவருக்கு இயேசு எனப் பெயரிடுவீர். ஏனெனில் அவர் தம் மக்களை அவர்களுடைய பாவங்களிலிருந்து மீட்பார்" என்றார். "இதோ! கன்னி கருவுற்று ஓர் ஆண்மகவைப் பெற்றெடுப்பார். அக்குழந்தைக்கு இம்மானுவேல் எனப் பெயரிடுவர்" என்று இறைவாக்கினர் வாயிலாக ஆண்டவர் உரைத்தது நிறைவேறவே இவை யாவும் நிகழ்ந்தன.[6]
திருத்தூதர் பவுலும் மரியா இறையன்னையே என்பதைப் பின்வருமாறு எடுத்துரைக்கிறார்: "காலம் நிறைவேறியபோது திருச்சட்டத்திற்கு உட்பட்டிருந்த நம்மை மீட்டுத் தம் பிள்ளைகள் ஆக்குமாறு, கடவுள் தம் மகனைப் பெண்ணிடம் பிறந்தவராகவும் திருச்சட்டத்திற்கு உட்பட்டவராகவும் அனுப்பினார்."[7] இறைத் திட்டத்தின்படி இறைமகனைப் பெற்றெடுத்த மரியா, இறையன்னை என்றப் பெயரை உரிமையாக்கிக் கொண்டார். எனவேதான் தூய ஆவியால் முற்றிலும் ஆட்கொள்ளப்பட்ட எலிசபெத்து மரியாவை நோக்கி, "பெண்களுக்குள் நீர் ஆசி பெற்றவர்; உம் வயிற்றில் வளரும் குழந்தையும் ஆசி பெற்றதே! என் ஆண்டவரின் தாய் என்னிடம் வர நான் யார்?"[8] என்கிறார்.
விசுவாசக் கோட்பாடு
[தொகு]"பலமுறை, பலவகைகளில் முற்காலத்தில் இறைவாக்கினர் வழியாக நம் மூதாதையரிடம் பேசிய கடவுள், இவ்விறுதி நாள்களில் தம் மகன் வழியாக நம்மிடம் பேசியதற்கு"[9] மரியாவின் பங்கு முக்கியமானது என்பதை திருச்சபைத் தந்தையர் தொடக்கம் முதலே வலியுறுத்தி வந்தனர். "வானதூதர் அறிவித்த நற்செய்தியைக் கேட்டு இறைவனின் வார்த்தைகளுக்கு கீழ்ப்படிந்ததால், மரியா கடவுளைக் கருத்தாங்கும் வல்லமை பெற்றார்" என்று புனித இரனேயு குறிப்பிடுகிறார்.
"இயேசுவிடம் இறைத்தன்மை இல்லை; அவர் வெறும் மனிதர் மட்டுமே" என்ற நெஸ்தோரியசின் போதனைப் பற்றி ஆராய்ந்து முடிவெடுக்க, கி.பி.431ஆம் ஆண்டு எபேசு நகரில் பொதுச்சங்கம் ஒன்று நடைபெற்றது. அதில் பங்கேற்ற ஆயர்கள் நெஸ்தோரியசின் போதனை தவறானது எனக் கண்டித்ததுடன், "இயேசுவில் இறைத்தன்மையும் மனிதத்தன்மையும் முழுமையாக குடிகொண்டிருக்கின்றன. எனவே, கன்னி மரியா இறைவனின் தாயே!" என்ற விசுவாசக் கோட்பாட்டை வெளியிட்டனர்.
விழாக்கள்
[தொகு]மரியா இயேசுவின் தாய் என்பதை சிறப்பிக்கும் இயேசு பிறப்பின் முன்னறிவிப்பு, இயேசுவின் பிறப்பு, இயேசுவைக் கோவிலில் அர்ப்பணித்தல் ஆகிய விழாக்கள் பொதுவாக கத்தோலிக்க திருச்சபை, கிழக்கு மரபுவழி திருச்சபை, ஆங்கிலிக்க ஒன்றியம், லூதரனிய திருச்சபை உள்ளிட்டவற்றில் கொண்டாடப்படுகின்றன. குறிப்பாக கன்னி மரியா இறைவனின் தாய் என்ற பெருவிழாவை கத்தோலிக்க திருச்சபை புத்தாண்டு நாளில் (ஜனவரி 1) சிறப்பிக்கிறது.
கிழக்கு மரபுவழி திருச்சபையில் அக்டோபர் 1ந்தேதி கொண்டாடப்படும் எப்பொழுதும் கன்னியான இறையன்னையின் பாதுகாவல் விழா, மரியா இறைவனின் தாய் என்பதை சிறப்பாக நினைவுகூர்கிறது. மேலும் பல விழாக்களும் இறையன்னையின் பெயரில் சிறப்பிக்கப்படுகின்றன. லூதரனிய திருச்சபையில், மரியா நம் ஆண்டவரின் தாய் என்ற விழா ஆகஸ்ட் 15ந்தேதி கொண்டாடப்படுகிறது.