மரியாவின் அமல உற்பவம் விழா
மரியாவின் அமல உற்பவ விழா என்பது, இயேசுவின் தாய் மரியா தனது தாயின் வயிற்றில் பாவமின்றி கருவானதைக் கொண்டாடும் விழா ஆகும். மரியா பிறப்புநிலைப் பாவம் இன்றி பிறந்தார் என்னும் கருத்தை மையப்படுத்தும் விழாவாக அமைந்துள்ள இது, கத்தோலிக்க திருச்சபையில் டிசம்பர் 8ந்தேதி சிறப்பிக்கப்படுகிறது.
அமல உற்பவம்
[தொகு]பொதுவான கிறிஸ்தவ நம்பிக்கையின்படி, ஆதாமினால் தோன்றிய பாவம் மரபுவழியாகத் தொடர்ந்து உலகில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தையோடும் இணைந்து பிறக்கிறது. இது சென்மப் பாவம் அல்லது பிறப்புநிலைப் பாவம் என்று அழைக்கப்படுகிறது. இப்பாவம் மனிதரை கடவுளின் அருள் நிலையில் இருந்து பிரித்து, உலகின் தீய நாட்டங்களுக்கு அடிமை ஆக்குகிறது.
தந்தையாம் கடவுள், உலக மீட்பரின் தாயாகுமாறு மரியாவை தொடக்கம் முதலே தெரிந்துகொண்டார்.[1] எனவே, மரியாவுக்கு மிகுதியான அருளைப் பொழிந்து,[2] பாவ மாசற்ற நிலையில் தாயின் வயிற்றில் கருவாக உருவாகச் செய்தார். இதுவே, மரியாவின் அமல உற்பவம் என்று அழைக்கப்படுகிறது. மீட்பரின் தாயானதால், மீட்பின் பேறுபலன்கள் மரியாவுக்கு முன்னதாகவே வழங்கப்பட்டன.
வரலாற்றில்
[தொகு]- கி.பி. ஐந்தாம் நூற்றாண்டில், டிசம்பர் 9ந்தேதி கடவுளின் தூய அன்னை விழா சிரியாவில் கொண்டாடப்பட்டது.
- ஏழாம் நூற்றாண்டில், கீழைத் திருச்சபையின் பெரும்பாலான இடங்களில் இவ்விழா சிறப்பிக்கப்பட்டது.
- எட்டாம் நூற்றாண்டில், மேலைத் திருச்சபைக்கு பரவிய இவ்விழா டிசம்பர் 8ந்தேதி கொண்டாடப்பட்டது.
- 11ஆம் நூற்றாண்டில், "மரியா பாவமின்றி உற்பவித்தவர்" என்ற கருத்துரு தோன்றியது.
- 1476ஆம் ஆண்டு, திருத்தந்தை 4ம் சிக்ஸ்துஸ் மரியாவின் அமல உற்பவம் திருவிழாவை அனைத்து இடங்களிலும் கொண்டாடுமாறு அறிவுறுத்தினார்.
- திரெந்து பொதுச்சங்கம் (1545-1563), பிற்காலத்தில் இவ்விழா கொண்டாட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்தது.
- 1854 டிசம்பர் 8ந்தேதி, திருத்தந்தை 9ம் பயஸ் மரியாவின் அமல உற்பவத்தை விசுவாசக் கோட்பாடாக (Dogma of Faith) அறிவித்தார்.
- 1858ல் பிரான்சு நாட்டில் லூர்து அன்னையாக காட்சி அளித்த மரியன்னை, "நானே அமல உற்பவம்" என்று தன்னை அறிமுகம் செய்து கொண்டார்.
ஆதாரங்கள்
[தொகு]- ↑ தொடக்க நூல் 3:15 "உனக்கும் பெண்ணுக்கும், உன் வித்துக்கும் அவள் வித்துக்கும் பகையை உண்டாக்குவேன். அவள் வித்து உன் தலையைக் காயப்படுத்தும். நீ அதன் குதிங்காலைக் காயப்படுத்துவாய்."
- ↑ லூக்கா 1:28 "அருள்மிகப் பெற்றவரே வாழ்க! ஆண்டவர் உம்மோடு இருக்கிறார்"
வெளி இணைப்புகள்
[தொகு]- Feast of the Immaculate Conception, AmericanCatholic.org
- Conception of the Theotokos Article about the Orthodox feast from Orthodoxwiki.org