இயேசுவின் பிறப்பு
நற்செய்திகளின்படி |
இயேசுவின் வாழ்வு |
---|
விவிலியம் வலைவாசல் |
இயேசுவின் பிறப்பு என்பது இயேசுவின் பிறப்பு குறித்த லூக்கா நற்செய்தி, மத்தேயு நற்செய்தி மற்றும் சில திருமுறையினை சேரா நூல்களில் விவரிப்பினைக்குறிக்கும். லூக்கா மற்றும் மத்தேயு நற்செய்திகள் யூதேயா நாட்டின் பெத்லகேம் ஊரில் இயேசு ஒரு கன்னியிடம் பிறந்தார் என குறிக்கின்றது.
லூக்கா நற்செய்தியின்படி அகுஸ்து சீசரின் கட்டளைப்படி மக்கள் தொகையைக் கணக்கில் தன் குடும்பத்தை பதிவு செய்ய தாவீதின் வழிமரபினரான யோசேப்பும், அவருக்கு மண ஒப்பந்தமான மரியாவும் நாசரேத்து ஊரிலிருந்து யூதேயாவிலுள்ள பெத்லகேம் என்ற தாவீதின் ஊருக்குச் சென்றனர். அங்கு இருந்தபொழுது மரியாவுக்குப் பேறுகாலம் வந்தது. அவர் தம் தலைமகனைப் பெற்றெடுத்து, பிள்ளையைத் துணிகளில் பொதிந்து தீவனத் தொட்டியில் கிடத்தினார்.[1] இதன்பின் அப்பகுதியில் உள்ள வயல்வெளியில் தங்கள் கிடையைக் காவல் காத்துக்கொண்டிருந்த இடையர்களுக்கு வானதூதர் தோன்றி அவர்களிடம், 'இன்று ஆண்டவராகிய மெசியா என்னும் மீட்பர் உங்களுக்காகத் தாவீதின் ஊரில் பிறந்திருக்கிறார்.' எனக்கூறி இயேசுவின் பிறப்பை அவர்களுக்கு அறிவித்தனர். அவர்கள் சென்று மரியாவையும் யோசேப்பையும் தீவனத் தொட்டியில் கிடத்தியிருந்த குழந்தையையும் கண்டு வணங்கினர்.
மத்தேயு நற்செய்தி விண்மீன் ஒன்றின் வழிகாட்டுதலால் கிழக்கிலிருந்து ஞானிகள் சிலர் வந்து இயேசுவை வணங்கினர் என்று குறிக்கின்றது. இதன்பின் ஏரோது குழந்தையை கொல்லத் தேடுவான் என கணவில் யோசேப்பு எச்சரிக்கப்பட்டதால், அவர்கள் மூவரும் எகிப்துக்குத் தப்பி ஓடிச் சென்றனர். ஏரோது காலமானதும், எகிப்திலிருந்து திரும்பி வந்து நாசரேத்து எனப்படும் ஊருக்குச் சென்று அங்குக் குடியிருந்தார்.
இந்த நிகழ்வு பல கிறித்தவ பிரிவுகளில் மிகவும் சிறப்பாக கொண்டாடப்படுகின்றது. கத்தோலிக்க திருச்சபை உட்பட்ட சில சபைகளில் கிறித்துமசு அன்று திருவிழிப்பு ஆராதனையோடு இவ்விழா சிறப்பிக்கப்படுகின்றது. குறிப்பாக கிழக்கு மரபுவழி திருச்சபையின் இவ்விழாவுக்கு முன் 40 நாட்கள் நோன்பிருப்பது (Nativity Fast) வழக்கில் உள்ளது. கத்தோலிக்க திருச்சபை, ஆங்கிலிக்க ஒன்றியம் முதலிய பல பிரிவுகளில் இவ்விழாவுக்கு முன் வரும் நான்கு ஞாயிருகளை திருவருகைக் காலம் என வைத்து இவ்விழாவுக்கு ஆயத்தம் செய்கின்றனர்.
கிறித்தவ இறையியலில் வாக்கு மனிதரான நிகழ்வாக இது கருதப்படுகின்றது. ஆதாம் மற்றும் ஏவாளின் வீழ்ச்சியால் விளைந்த பாவத்தைப்போக்க கடவுளின் திருவுளப்படி அவரின் ஒரே மகன் இயேசு மனிதனாகப்பிறந்ததாக நம்பப்படுகின்றது. 4ம் நூற்றாண்டு முதல் கிறித்தவக் கலையில் இன்நிகழ்வு முக்கிய பங்கு வகிக்கின்றது. 13ம் நூற்றாண்டு முதல் கிறித்துமசு குடில் அமைத்து இவ்விழாவை கிறித்தவர்கள் கொண்டாடுகின்றனர்.