உள்ளடக்கத்துக்குச் செல்

மங்கள வார்த்தை செபம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பொம்ப்பெயோ பட்டொனி வரைந்த மடோனா, 1742.

மங்கள வார்த்தை செபம், அன்னை மரியாவின் உதவியைப் பெற கத்தோலிக்க கிறிஸ்தர்களால் பயன்படுத்தப்படும் செபம் ஆகும். இந்த செபம் முதன்மையாக செபமாலையிலும், மேலும் பல்வேறு பக்தி முயற்சிகளிலும் பயன்படுத்தப்படுகிறது.

வழக்கு வடிவங்கள்

[தொகு]

திருவிவிலியம் - பழைய மொழிபெயர்ப்பின்படி
வழக்கில் உள்ள நடைமுறை வடிவம்:
அருள் நிறைந்த மரியே வாழ்க!
கர்த்தர் உம்முடனே.
பெண்களுக்குள் ஆசீர்வதிக்கப்பட்டவள் நீரே.
உம்முடைய திருவயிற்றின் கனியாகிய
இயேசுவும் ஆசீர்வதிக்கப்பட்டவரே.
அர்ச்சியசிஷ்ட மரியாயே,
சர்வேசுவரனுடைய மாதாவே,
பாவிகளாய் இருக்கிற எங்களுக்காக
இப்பொழுதும் எங்கள் மரண நேரத்திலும்
வேண்டிக்கொள்ளும். - ஆமென்.

திருவிவிலியம் - பொது மொழிபெயர்ப்பின்படி
தற்போது மாற்றப்பட்டுள்ள புதிய வடிவம்:
அருள் நிறைந்த மரியே வாழ்க!
ஆண்டவர் உம்முடனே.
பெண்களுள் ஆசி பெற்றவர் நீரே.
உம்முடைய திருவயிற்றின் கனியாகிய
இயேசுவும் ஆசி பெற்றவரே.
தூய மரியே,
இறைவனின் தாயே,
பாவிகளாய் இருக்கிற எங்களுக்காக
இப்பொழுதும் எங்கள் இறப்பின் வேளையிலும்
வேண்டிக்கொள்ளும். - ஆமென்.

செபத்தின் அமைப்பு

[தொகு]

மங்கள வார்த்தை செபத்தின் முதல் பகுதியான வாழ்த்து பகுதி, லூக்கா நற்செய்தியில் இருந்தும், இரண்டாவது பகுதியான வேண்டுதல் பகுதி கிறிஸ்தவ மரபில் இருந்தும் எடுக்கப்பட்டுள்ளன.

வாழ்த்து பகுதி

[தொகு]
மேலும் தகவல்களுக்கு: இயேசு பிறப்பின் முன்னறிவிப்பு

தந்தையாம் கடவுள் தனது மகன் தாவீது குலத்தில் தோன்றிய கன்னி மரியாவின் வயிற்றில் கருவாகி, மனிதராக வேண்டுமென்று விரும்பினார். எனவே, அதற்கு சம்மதம் கேட்டு கபிரியேல் வானதூதரைத் தூது அனுப்பினார். வானதூதர் மரியாவிடம், "அருள்மிகப் பெற்றவரே வாழ்க! ஆண்டவர் உம்மோடு இருக்கிறார்" என்ற தந்தை இறைவனின் வாழ்த்துச் செய்தியோடு, கடவுளின் திட்டத்தை அவருக்கு அறிவித்தார்.[1] அதுவே, மங்கள வார்த்தை செபத்தின் முதல் வாக்கியமாக அமைந்துள்ளது.

தூய ஆவியாரின் வல்லமையால் இயேசு கிறிஸ்து மனிதராக பிறப்பது, கடவுளின் திட்டமாக இருந்தது. முதிர்ந்த வயதில் கருவுற்றிருந்த எலிசபெத்துக்கு உதவிசெய்ய மரியா சென்றார். அப்போது எலிசபெத் தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்டராய் மரியாவை நோக்கி, "பெண்களுக்குள் நீர் ஆசி பெற்றவர்; உம் வயிற்றில் வளரும் குழந்தையும் ஆசி பெற்றதே!" என்று உரைத்தார்.[2] அதுவே, மங்கள வார்த்தை செபத்தின் இரண்டாம் வாக்கியமாக அமைந்துள்ளது.

வேண்டுதல் பகுதி

[தொகு]

மூவொரு இறைவனுக்கு மிகவும் பிரியமானவராகிய மரியாவைத் தொடக்க காலம் முதலே கத்தோலிக்க திருச்சபை போற்றி பெருமைப்படுத்தி வந்திருக்கிறது. பல்வேறு ஆபத்தான சூழல்களிலும் அவரது உதவியை வேண்டி, இறைவனின் ஆசீரைப் பெற்று மகிழ்ந்திருக்கிறது. அவ்வாறே கடவுளுக்கு உகந்தவர்களாக வாழவும் இறக்கவும், மரியன்னையின் உதவியைப் பெறவே திருச்சபை, "புனித மரியே, இறைவனின் தாயே, பாவிகளாய் இருக்கிற எங்களுக்காக, இப்பொழுதும் எங்கள் மரண நேரத்திலும் வேண்டிக்கொள்ளும்" என்று மன்றாடுகிறது.

வரலாறு

[தொகு]

கி.பி. 513ல் அந்தியோக் நகர் பெருந்தந்தை செவரஸ், மங்கள வார்த்தை செப வாழ்த்து பகுதியின் முதல் வாக்கியமாக அமைந்துள்ள வானதூதரின் வார்த்தைகளான, "அருள் மிகப் பெற்ற மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே" என்பதை சில கிறிஸ்தவ சடங்குகளில் பயன்படுத்தி இருக்கிறார்.

திருத்தந்தை புனித முதலாம் கிரகோரி (கி.பி.590-604) காலத்தில், அந்த வானதூதருடைய வார்த்தைகளின் பயன்பாடு கிறிஸ்தவர்களிடையே அதிகரித்தது.

பிரான்சு அரசர் புனித ஒன்பதாம் லூயிஸ் (கி.பி.1261-1264) காலத்தில், மங்கள வார்த்தை செப வாழ்த்து பகுதியின் இரண்டாம் வாக்கியமாக அமைந்துள்ள எலிசபெத்தின் வார்த்தைகளான, "பெண்களுக்குள் ஆசி பெற்றவர் நீரே. உம்முடைய திருவயிற்றின் கனியும் (வயிற்றில் வளரும் குழந்தையும்) ஆசி பெற்றதே" என்பதும் இணைக்கப்பட்டு, வாழ்த்து பகுதி முழுவதும் வழக்கத்தில் இருந்தது.

திருத்தந்தை நான்காம் அர்பன் (1261-1264), இச்செபத்தில் இடம் பெற்றிருந்த "திருவயிற்றின் கனியும்" என்ற வார்த்தைகளை, "திருவயிற்றின் கனியாகிய இயேசுவும்" என்று மாற்றி அமைத்தார். திருத்தந்தை 22ம் ஜான் (கி.பி.1316-1334) அந்த மாற்றத்தை மீண்டும் உறுதி செய்தார்.

1569ஆம் ஆண்டு திருத்தந்தை புனித ஐந்தாம் பயஸ், மங்கள வார்த்தை செபத்தின் வேண்டுதல் பகுதியான, "புனித மரியே, இறைவனின் தாயே, பாவிகளாய் இருக்கிற எங்களுக்காக இப்பொழுதும் எங்கள் மரண நேரத்திலும் வேண்டிக்கொள்ளும். - ஆமென்" என்பதை இணைத்தார்.

ஆதாரங்கள்

[தொகு]
  1. லூக்கா 1:26-38
  2. லூக்கா 1:39-45
"https://ta.wikipedia.org/w/index.php?title=மங்கள_வார்த்தை_செபம்&oldid=3175312" இலிருந்து மீள்விக்கப்பட்டது