மரியாவின் காட்சிகள்
மரியாவின் காட்சிகள் என்பவை உலக வரலாற்றில் புனித கன்னி மரியா பல தருணங்களில், வெவ்வேறு இடங்களில் தோன்றி செய்தி வழங்கிய நிகழ்வுகள் ஆகும். உலகெங்கும் மரியாவின் நூற்றுக்கணக்கான காட்சிகள் நிகழ்ந்துள்ளன. அவற்றில் முக்கியமான ஏழு காட்சிகள் மட்டும் இங்கு தரப்படுகின்றன.
எருசலேம் காட்சி
[தொகு]இறைமகன் இயேசுவின் அன்னை மரியா இறக்கும் தருணத்தில் இருந்தபோது, பல்வேறு இடங்களுக்கு உயிர்த்த இயேசுவின் நற்செய்தியை அறிவிக்க சென்றிருந்த திருத்தூதர்கள் இறை ஏவுதலால் எருசலேம் நோக்கி விரைந்தனர். வெகுதூரம் சென்றிருந்த தோமாவைத் தவிர மற்ற திருத்தூதர்கள் அனைவருக்கும் ஆசி வழங்கிய நிலையில் அன்னை மரியா மரணம் அடைந்தார். இறந்து அடக்கம் செய்யப்பட்டதும், கடவுள் மரியாவின் ஆன்மாவோடு அவரது உடலையும் விண்ணகத்தில் ஏற்றுக்கொண்டார். மரியாவின் மரண வேளையில் அவரது ஆசீரைப் பெற முடியாத திருத்தூதர் தோமா, மரியன்னையைக் காண வேண்டும் என்று ஆவலோடு விண்ணகத்தை நோக்கி செபம் செய்துகொண்டு இருந்தார். கி.பி. 46 ஆகஸ்ட் 22ந்தேதி, விண்ணேற்பு அடைந்த அன்னை மரியா தோமாவுக்குத் தோன்றி தான் விண்ணக மாட்சியில் இருப்பதை உறுதி செய்ததுடன் தனது இடைக்கச்சையையும் அவரிடம் வழங்கினார்.
ரோம் காட்சி
[தொகு]இத்தாலி நாட்டின் ரோம் நகரில் வாழ்ந்த செல்வந்தரான ஜான் என்பவருக்கும், திருத்தந்தை லிபேரியஸ் (352-366) அவர்களுக்கும் அன்னை மரியா கி.பி. 352 ஆகஸ்ட் 4 அன்று காட்சி அளித்தார். மறுநாள் எஸ்குலின் குன்றின் மேல் தான் பனி சூழச் செய்யும் இடத்தில் தனக்காக ஓர் ஆலயம் எழுப்பப்பட வேண்டும் என்று மரியன்னை அவர்களுக்கு உரைத்தார். ஆகஸ்ட் 5ந்தேதி எஸ்குலின் குன்றுக்கு அவர்கள் சென்று பார்த்தபோது அங்கே ஒரு குறிப்பிட்ட இடத்தில் மட்டும் பனிமயமாக காட்சி அளித்தது. அன்னை மரியாவால் அடையாளம் காட்டப்பட்ட அந்த இடத்தில், செல்வந்தர் ஜானின் உதவியோடு திருத்தந்தை லிபேரியஸ் தூய மரியன்னை பேராலயத்தைக் கட்டி எழுப்பினார். பிற்காலத்தில் திருத்தந்தை 3ம் சிக்ஸ்டஸ் (432-440) அவ்வாலயத்தைப் புதுப்பித்தார்.
வால்ஷின்காம் காட்சி
[தொகு]இங்கிலாந்து நாட்டின் வால்ஷின்காம் நகரில் வாழ்ந்த ரிசல்ட்டின் தே பவர் செஸ் என்ற பெண்மணிக்கு கி.பி. 1061 செப்டம்பர் 24ந்தேதி அன்னை மரியா காட்சி அளித்தார். அப்போது அன்னை அவரிடம், "நாசரேத் இல்லம் போன்று, இங்கு எனக்கு ஓர் இல்லம் எழுப்பப்பட வேண்டும்" என்று கேட்டுக் கொண்டார். அன்னை மரியாவின் வேண்டு கோளை ஏற்று அப்பெண்மணி அன்னைக்கு அந்த இடத்தில் நாசரேத் இல்லத்தை போன்று ஓர் ஆலயத்தைக் கட்டி எழுப்பினார்.
குவாதலூப்பே காட்சி
[தொகு]மெக்சிக்கோ நாட்டின் குவாதலூப்பே நகரில் வாழ்ந்த புனித யுவான் தியெகோ, யுவான் பெர்னார்டினோ ஆகியோருக்கு கி.பி. 1531 டிசம்பர் 9ந்தேதி முதல் 12ந்தேதி வரை அன்னை மரியா காட்சி அளித்தார். அப்போது மரியன்னை, "வாழ்வளிக்கும் உண்மை கடவுளின் கன்னித் தாய் நான். என்னைத் தேடி வரும் அனைவருக்கும் அன்னைக்குரிய அன்பையும், தாய்க்குரிய கனிவையும் தருவேன். எனக்கு இங்கு ஓர் ஆலயம் எழுப்பப்பட வேண்டும்" என்று மொழிந்தார். அன்னை தனது காட்சிக்கு ஆதாரமாக யுவான் டியகோவின் தில்மாவில் தன் அழகிய உருவத்தையும் பதியச் செய்தார். பின்பு அன்னை காட்சி அளித்த இடத்தில் ஓர் அழகிய ஆலயம் கட்டி எழுப்பப்பட்டு இன்றளவும் புகழ்பெற்று விளங்குகிறது.
வேளாங்கண்ணி காட்சி
[தொகு]கி.பி. 16ஆம் நூற்றாண்டில், தமிழ்நாட்டின் வேளாங்கண்ணி என்ற சிற்றூரில் அன்னை மரியா காட்சி அளித்தார். பால் கொண்டு சென்ற இடைய சிறுவன் ஒருவனுக்கு தோன்றிய அன்னை, பால் பொங்கி வழியும் அற்புதத்தை நிகழ்த்தினார். மோர் விற்ற கால் ஊனமுற்ற சிறுவனுக்கு தோன்றிய மரியன்னை, அவனது கால்களுக்கு குணம் அளித்து ஆரோக்கிய அன்னையாகத் தன்னை வெளிப்படுத்தினார். அவ்வூரில் வாழ்ந்த கிறிஸ்தவ பெரியவர் ஒருவருக்கு தோன்றிய அன்னை மரியா, தனக்கு ஓர் ஆலயம் எழுப்புமாறு கேட்டுக் கொண்டார். அன்னைக்கு ஒரு சிறிய ஆலயம் முதலில் கட்டப்பட்டது. சிறிது காலத்துக்கு பின் மரியன்னையின் உதவியால் கடல் புயலில் இருந்து தப்பி வேளாங்கண்ணியை அடைந்த போர்ச்சுகீசியர்கள் அந்த ஆலயத்தை பெரிய அளவில் கட்டி எழுப்பினர்.
லூர்து காட்சி
[தொகு]பிரான்சு நாட்டின் லூர்து நகரில் மசபியேல் என்ற குகையில் கி.பி. 1858 பிப்ரவரி 11ந்தேதி முதல் ஜூலை 16ந்தேதி வரை அன்னை மரியா பதினெட்டு முறை காட்சி அளித்தார். பெர்னதெத் சூபிரூஸ் என்ற இளம்பெண் அன்னையின் காட்சியைக் காணும் பேறுபெற்றார். மரியன்னை பெர்னதெத்திடம், "நானே அமல உற்பவம். எனக்காக இங்கு ஓர் ஆலயம் எழுப்பப்பட வேண்டும். பாவிகளின் மனமாற்றத்திற்காக மக்கள் செபமும் தவமும் செய்ய வேண்டும்" என்று கூறினார். அன்னை, நாளுக்கு ஒரு மறையுண்மை என்ற வகையில் செபமாலையின் மகிழ்ச்சி, துயரம், மகிமை மறையுண்மைகள் அனைத்தையும் 15 காட்சிகளில் பெர்னதெத்தை செபிக்கச் செய்தார். அன்னை மரியாவின் காட்சிக்கு அடையாளமாக அற்புத நீரூற்று ஒன்றும் தோன்றியது.
பாத்திமா காட்சி
[தொகு]போர்ச்சுக்கல் நாட்டின் பாத்திமா நகரில் புதர் ஒன்றின்மீது கி.பி. 1917 மே 13ந்தேதி முதல் அக்டோபர் 13ந்தேதி வரை அன்னை மரியா ஆறு முறை காட்சி அளித்தார். லூசியா டி சான்ட்டோஸ், ஜெசிந்தா மார்ட்டோ, பிரான்சிஸ்கோ மார்ட்டோ என்ற ஆடு மேய்க்கும் மூன்று சிறாருக்கு அன்னையின் காட்சியை பார்க்கும் பேறு கிடைத்தது. அன்னை அவர்களிடம், "நான் செபமாலை அன்னை. மக்கள் தங்கள் வாழ்வை திருத்தியமைக்க வேண்டும்; தங்கள் பாவங்களுக்காக கடவுளிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். எல்லோரும் செபமாலை செபிக்க வேண்டும். பாவிகளின் மனமாற்றத்திற்காக செபமும் தவமும் மேற்கொள்ளப்பட வேண்டும். உலகம் எனது மாசற்ற இதயத்துக்கு அர்ப்பணிக்கப்பட வேண்டும்" என்று கூறினார். நரகத்தின் காட்சியை சிறுவர்களுக்கு காண்பித்த மரியன்னை, நரக வேதனைக்கு உட்படாதவாறு செபிக்கவும் கற்றுக்கொடுத்தார். இரண்டாம் உலகப் போர், ரஷ்யாவின் மனந்திரும்பல், திருச்சபைக்கு வரும் துன்பம் ஆகியவற்றை அன்னை முன்னறிவித்தார். அக்டோபர் 13ந்தேதி அன்னை மரியாவின் கடைசி காட்சியின்போது சூரியன் அங்குமிங்கும் தள்ளாடிய அதிசயத்தை பாத்திமாவில் கூடியிருந்த சுமார் எழுபதாயிரம் பேர் பார்த்தனர்.