எலும்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
தொடை எலும்பின் வரைபடம்

எலும்பு அல்லது என்பு என்பது முள்ளந்தண்டுள்ள விலங்குகளின் உட்கூட்டில் காணப்படும் விறைப்பான உறுப்புக்கள் ஆகும். எலும்புகள், உடலுறுப்புக்களுக்குப் பாதுகாப்பாக அமைவதுடன், உடலைத் தாங்குவதற்கும் அது இடத்துக்கிடம் நகர்வதற்கும் பயன்படுகின்றன. அத்துடன், செங்குருதியணுக்கள், வெண்குருதியணுக்கள் என்பவற்றை உருவாக்குவதும், கனிமங்களைச் சேமித்து வைப்பதும் எலும்புகளே ஆகும். எலும்புகள் பல்வேறு வடிவங்களிலும் காணப்படுவதுடன், சிக்கலான உள் மற்றும் வெளிக் கட்டமைப்புக்களையும் கொண்டவையாக உள்ளன. இது, எலும்புகள், நிறை குறைந்தவையாகவும், உறுதியானவையாகவும், கடினத்தன்மை கொண்டவையாகவும் இருப்பதற்கு உதவுவதுடன், அவற்றின் பல்வேறு செயற்பாடுகளை நிறைவு செய்வதற்கும் உறுதுணையாக அமைந்துள்ளது.

எலும்பை உருவாக்கும் திசுக்களில் ஒரு வகை, கனிமமாகிய எலும்புத் திசுக்கள் ஆகும். இவை தேன்கூட்டு அமைப்பை ஒத்த, முப்பரிமாண உள்ளமைப்பைக் கொண்டு எலும்புகளுக்கு விறைப்புத் தன்மையைக் கொடுக்கின்றன. எலும்புகளில் காணப்படும் பிற வகைத் திசுக்களில் எலும்பு மச்சை, என்புறை, நரம்பு, குருதியணுக்கள், குருத்தெலும்பு என்பவையும் அடங்கும்.

நமது உடலில் தோலையும் தசையையும் நீக்கிவிட்டால் மிஞ்சுவது எலும்புக்கூடுமட்டுமே. எலும்புக்கூட்டிற்கு எலும்புச்சட்டம் என்று பெயர்.

உடலுக்கு ஆதாரமாகவும் தசை நரம்புகளுக்கு பற்றுக்கோடாகவும் இருப்பது எலும்புக்கூடுதான். மூளை, கண், இதயம், நுரையீரல் போன்ற மென்மையான உறுப்புகளுக்கு பாதுகாப்பாக இருப்பதும் இந்த எலும்புச்சட்டம்தான். எலும்பில் 50% நீரும், 33% உப்புக்களும், 17% மற்ற பொருட்களும் உள்ளன. எலும்பில் கால்சியம் பாஸ்பேட் போன்ற அமிலத்தில் கரையக்கூடிய தாதுப்பொருள் மற்றும் தீயில் எரிந்துபோகும் கரிமப்பொருளும் உள்ளன. நமது உடல் நலத்திற்கு வேண்டிய கால்சியம் எனும் இரசாயனப்பொருட்கள் எலும்புகளில்தான் சேமித்து வைக்கப்படுகிறது.

எலும்புகள் ஒன்றுடன் ஒன்று பொருந்தி இருந்தால்தான் சீரான முறையில் அவைகள் செயல்பட முடியும். அவ்வாறு பொருந்தும் இடங்களுக்கு மூட்டுகள் என்று பெயர். மூட்டுகள் இரண்டு தன்மைகள் உடையனவாக இருக்கின்றன. முதலாவது அசையும் மூட்டு. இரண்டாவது அசையா மூட்டு. இடுப்பிலும் மண்டையிலும் காணப்படும் எலும்புகள் அசையாத மூட்டுகள். அசையும் மூட்டுகளில் நான்கு வகைகள் உள்ளன. பந்துக்கிண்ண மூட்டு, கீல் மூட்டு, வழுக்கு மூட்டு, செக்கு மூட்டு என்று அவைகளுக்குப்பெயர்.

அசையும் மூட்டுகள் இயங்கும்போது அதிர்ச்சியோ தேய்வோ ஏற்படாமல் இருப்பதற்காக, எலும்புகளின் முனைகள் குருத்தெலும்புகளால்மூடப்பட்டு, அதன் உட்புறத்தில் ஒரு மெல்லிய திசுப்படலம் இருக்குமாறும் அதில் ஒரு வழுவழுப்பான திரவம் சுரக்குமாறும் அமைக்கப்பட்டுள்ளது. மூட்டுகள் அசையும்போது எலும்புகள் நழுவக்கூடும். அவ்வாறு நழுவாமல் இருக்க மூட்டுகள் உறுதியான தசைநார்களால் கட்டப்பட்டுள்ளன. பிறக்கும் போது மனிதனில் 270க்கும் மேற்பட்ட எலும்புகள் இருக்கும்[1]. எனினும் முழு வளர்ச்சியடைந்த நிறையுடலி மனிதனில் இவ்வெலும்புகளில் சில வளரும் போது ஒன்றிணைக்கப்படுவதால் 206 எலும்புகளே காணப்படும்.

என்பின் கட்டமைப்பு[தொகு]

எலும்பின் கட்டமைப்பு
தொடையென்பின் மேலென்பு முளைத் தட்டு. வெளியே மேற்பட்டையாக நெருக்கமான என்பிழையமும், உள்ளே கடற்பங்சு என்பிழையமும் உள்ளது
என்பின் நுணுக்குக்காட்டிப் படம்

என்பை ஆக்குவதில் இரு வகையான என்பிழையங்கள் பங்கெடுக்கின்றன. நெருக்கமான என்பிழையம் என்பின் வெளிப்புறமாகவும், கடற்பஞ்சு என்பிழையம் மேலென்பு முளையின் உட்புறமும் அமைந்து காணப்படும். என்பின் நடுத்துண்டம் வெறுமையானதாக அல்லது என்பு மச்சையைக் கொண்டதாக இருக்கலாம். செவ்வென்பு மச்சையிலேயே குருதிக் கலங்கள் உற்பத்தியாக்கப்படுகின்றன. என்பு ஒரு உயிருள்ள தொடுப்பிழைய வகையைச் சார்ந்த ஒரு அங்கமாகும். இவ்விழையங்களைத் தவிர கசியிழையம், குருதிக் கலன்களும் என்பின் கட்டமைப்பை ஆக்குவதில் பங்கெடுக்கின்றன. எலும்பின் வடிவம் அதன் உறுதித்தன்மைக்கும் மீள்தன்மைக்கும் காரணமாக அமைகின்றது. எலும்பு மையப்பகுதியின் என்பு மச்சை போன்ற மென்மையான பாகம் இல்லாமல் முழுமையாக செங்கல் போல நெருக்கமான என்பிழையத்தால் ஆக்கப்பட்டிருந்தால் அதிக அழுத்தம் பிரயோகிக்கப்பட்டால் எலும்பு இலகுவில் உடைந்து விடும். நடுவில் மென்மையாக இருப்பதால் அதிக அழுத்தத்துக்கு சிறிது வளைந்து கொடுக்கக்கூடியதாக உள்ளது. எனினும் எலும்பு கசியிழையம் போன்று அதிகளவு மீள்தன்மையானதல்ல. மிக அதிகமான அழுத்தம் கொடுக்கப்பட்டால் எலும்பு உடைந்து விடும்.

நெருக்கமான என்பிழையம்[தொகு]

நெருக்கமான என்பொன்றின் ஆவேசின் தொகுதிகள்

நெருக்கமான என்பிழையத்தில் கல்சியம் பொஸ்பேற்றுத் தாயம் அடர்த்தியாக இருக்கும். இது எலும்பின் திண்வின் 80%ஐ உள்ளடக்கிய பகுதியாகும். என்பின் தாங்கும் தொழிலைப் புரியும் பிரதான பாகம் இதுவாகும். என்புக்கு இப்பாகம் வன்மையையும் உறுதியையும் வழங்குகின்றது. இதில் கல்சியம் பொசுபேற்றுக்கிடையே என்பரும்பர்க் கலங்களும் குருதிக் கலன்களும், கொலாஜின் நார்களும் உள்ளன. தொடர்ச்சியாக அதிக அழுத்தத்துக்கு உட்படும் போது (உதாரணமாக தொடர்ச்சியாக உடற்பயிற்சி செய்யும் போது) இவ்விழையம் தடிப்படைந்து என்பின் பலத்தை அதிகரிக்கும். இதனாலேயே விண்வெளிக்குச் செல்லுவோர் தொடர்ச்சியாக உடற்பயிற்சி செய்யும் படி அறிவுறுத்தப்படுகின்றனர். விண்வெளியில் புவியீர்ப்பு விசை மிகவும் குறைவென்பதால் என்புகளிலுள்ள அழுத்தம் குறைவடையும். இதனால் என்பிலுள்ள என்புடைக்கும் கலங்கள் தொழிற்பட்டு என்பை நலிவடையச் செய்யும் (என்பின் தேவை விண்வெளியில் இல்லாமையால்). எனவே உடற்பயிற்சி செய்யாமல் விண்வெளியில் தங்கிய பின் பூமிக்குத் திரும்புவோரின் என்புகள் உடைய அதிக வாய்ப்புள்ளது. எனவே தினமும் உடற்பயிற்சி செய்து நெருக்கமான என்பிழையத்தின் தடிப்பைப் பேண இவர்கள் அறிவுறுத்தப்படுகின்றனர்.

நெருக்கமான என்பிழையத்தினுள் குருதிக்கலன், நீணநீர்க்கலன், நரம்பு ஆகியவற்றின் போக்குவரத்திற்காக அதனுள் ஆவேசின் கால்வாய், வோக்மனின் கால்வாய் ஆகிய கட்டமைப்புகள் உள்ளன. இக்கால்வாய்களூடாகவே எலும்புக்கும் உடலின் மற்றைய பாகங்களுக்குமான தொடர்பு பேணப்படுகின்றது. ஆவேசின் கால்வாயைச் சூழ வட்ட வடிவங்களின் என்பு மென்றட்டுக்களில் என்புக் குழியங்கள் அடுக்கப்பட்டிருக்கும். என்புக்குழியங்கள் உள்ள கலனிடைக் குழிகள், சிறுகுழாய்கள் மூலம் ஒன்றிடனொன்றாகவும் ஆவேசின் கால்வாயுடனும் இணைக்கப்பட்டுள்ளன. ஒரு ஆவேசின் கால்வாயைச் சூழவுள்ள வட்ட வடிவமான மென்றட்டுத் தொகுதிகளைக் கூட்டாகச் சேர்த்து ஆவேசின் தொகுதி என அழைப்பர். இதனை ஒளி நுணுக்குக் காட்டியின் உதவியுடன் அவதானிக்கலாம். பல ஆவேசின் தொகுதிகள் இணைந்தே ஒரு நெருக்கமான என்பிழையத்தை ஆக்குகின்றன.

கடற்பஞ்சு என்பிழையம்[தொகு]

கடற்பஞ்சு என்பிழையம் நெருக்கமற்ற ஆக்கக்கூறில் நெருக்கமான என்பிழையத்தை ஒத்த என்பிழையமாகும். இவ்விழையத்தில் அதிக துளைகள் உள்ளன. இவ்விழையம் மேலென்பு முளையின் உட்பகுதியில் உள்ளது. இதன் அதிகமான துளைகளை குருதிக் கலன்களும் செவ்வென்பு மச்சையும் நிரப்பி உள்ளன. என்பின் நடுத்துண்டத்தின் மையத்தில் இவ்விழையத்துக்குப் பதிலாக என்பு மச்சையே காணப்படும். கடற்பஞ்சு என்பைச் சூழ அதிகளவில் குருதிக் கலன்கள் காணப்பட்டாலும், கடற்பஞ்சென்பை ஆக்கும் சிறிய புன்சலாகைகளினுள் குருதிக்கலன்கள் ஊடுருவுவதில்லை.

என்பின் கூறுகள்[தொகு]

கலக் கூறுகள்[தொகு]

என்பிழையக் கலங்கள்

என்பிழையங்களை ஆக்கும் பிரதான கல வகைகள்:

 • முன்னோடிக் கலம் (Osteogenic cell)
 • என்பரும்பற்கலம் (Osteoblast)
 • என்புக்குழியம் (Osteocyte)
 • என்புடைக்கும் கலம் (Osteoclast)

என்பரும்பற்கலங்கள் என்பிழையத் தாயத்தைச் சுரக்கும் கலங்களாகும். இவை எலும்பை ஆக்கும் கூறுகளான கொலாஜினையும், கல்சியம் பொசுபேற்றையும் சுரந்து என்பாக்கத்தைத் தொடக்கி வைக்கும் கலங்களாகும். என்பு வளர்ச்சியடைய இவை என்புத் தாயத்துக்குள் அம்பிட்டு விருத்தியடைந்து என்புக்குழியத்தை ஆக்கும். என்புக்குழியங்கள் அதிக முதலுரு வெளிநீட்டங்களைக் கொண்ட கலங்களாக உள்ளன. இவ்வெளிநீட்டங்கள் ஏனைய என்புக்குழியத்தோடும், என்பரும்பற்கலங்களோடும் இவற்றைத் தொடர்புபடுத்துகின்றன. என்புக்குழியங்கள் என்பின் தடிப்பை தக்க வைக்க, குருதியில் கல்சியம் செறிவைப் பேண உதவுவதுடன் எலும்பில் அழுத்தம் அதிகரிக்கும் போது நரம்புக் கணத்தாக்கங்களை உருவாக்கி நரம்புத் தொகுதிக்கு அறிவிக்கின்றது. முன்னோடிக் கலங்கள் என்பின் புற என்புச்சுற்றியில் உள்ளன. இவையே என்பரும்பற்கலங்களாகத் திரிபடையும் மூலக்கலங்களாகும். என்புடைக்கும் கலங்கள் மேற்கூறிய கலங்களைப் போலல்லாது வேறுபட்ட உற்பத்தியுடையவை. இவை குருதியிலிருந்து என்புக்குள் இடம்மாறிய ஒற்றைக்குழியக் கலங்களாகும். இவை என்பிழையத் தாயத்தைக் கரைத்து என்புடைக்கும் தொழிலைப் புரிகின்றன. இவை என்பின் வளர்ச்சியிலும் மீளொழுங்காக்கலிலும் உதவுகின்றன. உள்ளிருந்து இவை எலும்பைக் கரைத்து மச்சைக் குழியை ஆக்க வெளியிலிருந்து என்பருபற்கலங்கள் அதிக வேகத்தில் என்புத் தாயத்தைச் சுரப்பதால் என்பின் வளர்ச்சியும் ஒழுங்கமைப்பும் நடைபெறுகின்றது. இக்கலங்கள் இல்லாவிடில் நடுவில் மென்மையான மச்சை இல்லாமல் உடையக்கூடிய கட்டமைப்பாக என்பு மாறி விடும். எனவே என்பின் தோற்றத்துக்கும், வளர்ச்சிக்கும், பேணலுக்கும் இந்த நால்வகைக் கலங்களும் அவசியமாகும்.

கலமற்ற தாயக் கூறுகள்[தொகு]

 • அசேதன கூறுகள்: எலும்பின் பிரதான அசேதனக் கூறாக ஐதரொக்சிஅபடைட்டு- Ca10(PO4)6(OH)2 உள்ளது[2][3]. இதனைத் தவிர கல்சியம், மக்னீசியன், சோடியம் ஆகியவற்றின் காபனேற்றுக்களும், புளோரைடுக்களும் உள்ளன. இவை எலும்புக்கு உறுதியை வழங்குகின்றன.
 • சேதனக் கூறுகள்: என்பின் பிரதான சேதனக் கூறு கொலாஜன் நார்களாகும். இந்நார்கள் என்பின் ஒழுங்கமைப்பையும் உறுதிப்பாட்டையும் பேண உதவுகின்றன.

எலும்பின் தொழில்கள்[தொகு]

 • உடலசைவில் உதவுதல்- வன்கூட்டுத் தசைகள் உடலை அசைப்பதற்காக எலுபுகளுடன் இணைக்கப்பட்டுள்ளன. எனவே இச்சையுடன் கூடிய அசைவில் எலும்பு முக்கிய பங்கு வகிக்கின்றது.
 • ஆதாரம் வழங்கல்- உடலுக்குத் திட்டமான வடிவத்தை வழங்குவதிலும், உடலையும் உடலங்கங்களையும் தாங்குவதிலும் எலும்புகள் முக்கிய பங்கு வகிக்கின்றன.
 • சேமிப்பு- Ca2+ மற்றும் PO43- அயன்களின் சேமிப்பு மற்றும் விடுவிப்பதில் என்பு உதவுகின்றது. குருதியில் கல்சியம் செறிவு குறைந்தால் என்புடைக்கும் கலங்கள் செயற்பட்டு என்பைக் கரைத்து வரும் கல்சியத்தை குருதியில் சேர்க்கும். செறிவு அதிகமானால் கல்சியம் என்பில் சேமிக்கப்படும்.
 • குருதிக் கலங்களின் உற்பத்தி- என்பின் மத்தியிலுள்ள செவ்வென்பு மச்சையிலேயே குருதிக் கலங்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன.

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

 1. Steele, D. Gentry; Claud A. Bramblett (1988). The Anatomy and Biology of the Human Skeleton. Texas A&M University Press. பக். 4. ISBN 0-89096-300-2. 
 2. பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; Legros, R. 1987 என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
 3. Bertazzo, S. & Bertran, C. A. (2006). "Morphological and dimensional characteristics of bone mineral crystals". Bioceramics 309–311 (Pt. 1, 2): 3–10. doi:10.4028/www.scientific.net/KEM.309-311.3. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=எலும்பு&oldid=2509768" இருந்து மீள்விக்கப்பட்டது