மனித எலும்புக்கூடு
மனிதர்கள் 270க்கும் கூடுதலான எலும்புகளுடன் பிறக்கிறார்கள்;[1][2][3] சில நீளவாக்கில் இணைந்து தூக்கவெலும்புக்கூடு பிணைந்த அச்செலும்புக்கூடு உருவாகின்றன.[4] ஓர் முதிய மனித உடலில் 206 எலும்புகள் உள்ளன.
அச்சு எலும்புக்கூடு
[தொகு]முள்ளந்தண்டு நிரல் (26), விலாக்கூடு (12 சோடி விலா எலும்புகளும் மார்பெலும்பும்), மற்றும் மண்டையோடு (22 எலும்புகளும் 7 இணைந்த எலும்புகளும்) ஆகியவை கொண்டு அச்சு எலும்புக்கூடு (80 எலும்புகள்) அமைகிறது. மனிதர்கள் நேராக இருக்கச்செலும்புக்கூடு வழி செய்கிறது. முள்ளந்தண்டில் உள்ள எலும்புகள் பல மூட்டிணைப்புத் தசைநார்களால் வலுப்படுத்தப்பட்டுள்ளன. முதுகெலும்பு நிமிர்த்தித் தசைகளும் சமநிலை பேசவும் நேராக நிற்கவும் துணை புரிகின்றன.
தூக்கவெலும்புக் கூடு
[தொகு]தூக்கவெலும்புக்கூடு மார்பு வளையம் (4 எலும்புகள்), புயம்/முன்புயம் (6 எலும்புகள்), கைகள் (54 எலும்புகள்),இடுப்பெலும்பு (2 எலும்புகள்), தொடையும் காலும் (8 எலும்புகள்), கால்கள் மற்றும் கணுக்கால்கள் (52 எலும்புகள்) இவற்றைக் கொண்ட 126 என்புத்தொகுதியாகும். அச்செலும்புக் கூட்டைப் போல தூக்கவெலும்புக் கூட்டு எலும்புகள் ஒன்றாக பிணைக்கப்படவில்லை; இது அச்செலும்புக்கூடு நகர்வதற்கும் (கீழ் அங்கங்கள்) சூழ்ந்துள்ள பொருட்களை கையாளவும் (மேல் அங்கங்கள்) துணை செய்கின்றது.[5] இந்த என்புத் தொகுதி மனிதரின் நடமாட்டத்திற்கு வழி செய்வதுடன் பொருட்களை கையாளவும் செரித்தல், கழுவகற்றல் மற்றும் இனப்பெருக்கத்திற்கான உறுப்புக்களைக் காக்கவும் துணை நிற்கிறது.
என்புத் தொகுதியின் செயல்பாடுகள்
[தொகு]எலும்புக்கூடு கீழ்காணும் ஆறு முதன்மை செயற்பாடுகளை ஆற்றுகின்றது.
ஆதரவு
[தொகு]எலும்புக்கூடு உடலுக்கு ஆதரவளிக்கும் சட்டகத்தை அளிக்கிறது; உடலுக்கு ஓர் வடிவத்தையும் தருகிறது. இடுப்புக்கூடு, தொடர்புடைய தசைநார்கள் மற்றும் தசைகளுடன், இடுப்பு வளைய கட்டமைப்பிற்கு உதவுகிறது. விலாக்கூடு, விலாக்கசியிழையம், விலா எலும்புத்தசைகள் இன்றி நுரையீரல் அமையவே இயலாது.
இயக்கம்
[தொகு]எலும்புகளுக்கிடையேயான மூட்டுகள் நகர்வையும் அசைவையும் இயலுமாறு செய்கின்றன. சில மிகக் கூடுதலான இயக்கத்திற்கும் சில குறைந்தளவிலான இயக்கத்திற்கும் வழி செய்கின்றன. காட்டாக, கழுத்திலுள்ள சுழற்சித்தான மூட்டை விட தோளிலுள்ள பந்துக்குழி மூட்டு கூடுதலான இயக்கத்தை ஏதுவாக்குகிறது. எலும்புக்கூட்டின் பல்வேறு இடங்களில் பிணைக்கப்பட்டுள்ள எலும்புத்தசைகள் இந்த இயக்கத்திற்கு காரணமாகின்றன. எலும்புகள், மூட்டுகள், தசைநார்கள் என்ற மூன்றும் நரம்பியல் தொகுதியால் ஒருங்கிணைக்கப்பட்டு முதன்மை இயக்கச்செயலிகளாக விளங்குகின்றன.
பாதுகாப்பு
[தொகு]எலும்புக்கூடு உடலின் பல இன்றியமையா உள்ளுறுப்புக்களுக்கு பாதுகாப்பாக உள்ளது:
- மனித மண்டையோடு மனித மூளை, விழிகள், செவிகள் (நடுப்புற,உட்புறப் பகுதிகள்) ஆகியவற்றிற்கு பாதுகாப்பாக உள்ளது.
- முள்ளந்தண்டு நிரல் முள்ளந்தண்டு வடத்தைக் காக்கிறது.
- விலாக்கூடு, முதுகுத்தண்டு, மற்றும் மனித மார்பெலும்பு ஆகியன நுரையீரல்கள், இதயம் மற்றும் முதன்மை குருதிக் குழல்களை காக்கின்றன.
- காறை எலும்பு மற்றும் தோள்பட்டை எலும்புகள் தோள்பகுதிக்குப் பாதுகாப்புத் தருகின்றன.
- புடைதாங்கி மற்றும் முதுகுத்தண்டு சமிப்பாட்டுத்தொகுதி, சிறுநீர்/இனப்பெருக்கத்தொகுதி அவயங்களையும் இடுப்பையும் காக்கின்றன.
- முழங்காற்சில்லும் முழங்கை எலும்பும் முறையே முழங்காலுக்கும் முழங்கைக்கும் பாதுகாப்பு வழங்குகின்றன.
- மணிக்கட்டு எலும்புகளும் கணுக்கால் எலும்புகளும் முறையே மணிக்கட்டையும் கணுக்காலையும் காக்கின்றன.
குருதிக் கலம் தயாரித்தல்
[தொகு]எலும்புக்கூட்டில்தான் குருதியாக்கம் நடைபெறுகிறது. எலும்பு மச்சைகளில் குருதிக் கலங்கள் உருவாகின்றன.
சேமிப்பகம்
[தொகு]எலும்புக்கூட்டுச் சட்டகம் கால்சியத்தை சேமிக்கக்கூடியதாகையால் சுண்ணக வளர்சிதை மாற்றத்தில் பங்கேற்கிறது. எலும்பு மச்சையில் இரும்பு சேமிக்கக்கூடியதாகையால் இரும்பு வளர்சிதை மாற்றத்தில் பங்கேற்கிறது. இருப்பினும், எலும்புகள் முழுமையாக கால்சியத்தினால் ஆனவை அன்று; கொன்ட்ராய்ட்டின் சல்பேட்டும் ஹைட்ரோக்சிலபாடைட்டும் சேர்ந்த கலவையாகும்.
அகஞ்சுரப்பி கட்டுப்பாடு
[தொகு]எலும்புக் கலங்கள் ஓஸ்டோகால்சின் என்ற இயக்கநீரை சுரக்கின்றன; இது இரத்தச் சர்க்கரை (குளுக்கோசு) மற்றும் கொழுப்பு படிதல் கட்டுப்பாட்டில் பங்கேற்கிறது. ஓஸ்டோகால்சின் இன்சுலின் சுரத்தலையும் இன்சுலின் உணர்திறனையும் கூட்டுவதோடு இன்சுலின் தயாரிக்கின்ற பீட்டா கலங்களின் எண்ணிக்கையையும் மேலோங்கச் செய்கிறது; கொழுப்பு சேமித்தலைக் குறைக்கிறது.[6]
பாலின ஈருருவுடைமை
[தொகு]ஆணின் எலும்புக்கூட்டிற்கும் பெண்ணின் எலும்புக்கூட்டிற்கும் பல வேற்றுமைகள் உள்ளன. மிகவும் முக்கிய வேறுபாடு இடுப்புக்குழியில் உள்ளது. குழந்தை பிறப்புச் செயல்பாடுகளின் சிறப்புத் தன்மைகளுக்காக பெண்ணின் இடுப்புக்குழி தட்டையாகவும் கூடுதல் வளைவாகவும் குழந்தையின் தலை வெளிவருமாறு பெரிதாகவும் உள்ளது. ஆணின் இடுப்புக்குழி 90 பாகைகள் அல்லது அதற்கு குறைவாக இருக்கையில் பெண்ணினுடையது 100 பாகைக்களுக்கும் கூடுதலாக உள்ளது. பெண்ணின் காக்சியம் (வால் எலும்பு கீழ்ப்புறம் நோக்கி இருக்க ஆணின் காக்சியம் வெளிப்புறம் நோக்கி உள்ளது. இதுவும் குழந்தை பிறப்பின்போது கூடுதல் இடமளிக்குமாறு ஏற்பட்டுள்ளது. ஆண்களின் அவயங்களும் விரல்களும் நீளமானதாகவும் தடித்துமிருக்க பெண்களின் விலாக்கூடு குறுகியும், பற்கள் சிறியதாகவும், தாடையெலும்புகள் குறுகிய கோணத்திலும் உள்ளன. பெண்களின் முகக்கூறுகளும் ஆண்களுடையதைவிட வேறுபாட்டுடன் உள்ளன. பெண்களின் தோள்கள் மேலும் வளைவாக உள்ளன.
கோளாறுகள்
[தொகு]பல எலும்புக்கூட்டுக் கோளாறுகள் உள்ளன. இவற்றில் முக்கியமான ஒன்றாக எலும்புப்புரை கோளாறு உள்ளது. மற்றொரு பரவலான கோளாறாக ஸ்கோலியோசிஸ் என்ற முதுகுத்தண்டு வளைவுக் கோளாறு உள்ளது. ஓர் எக்சு கதிர் ஒளிப்படத்தில் காணும்போது ஆங்கில "C" அல்லது "S" எழுத்துரு போன்று முள்ளந்தண்டு நிரல் வளைந்திருப்பதைக் காணலாம். இது பொதுவாக வளரிளமைப் பருவத்தில், பெரும்பாலும் பெண்களிடத்தில், காண்கிறது.
இதனையும் காண்க
[தொகு]மேற்சான்றுகள்
[தொகு]- ↑ Miller, Larry (2007-12-09). "We're Born With 270 Bones. As Adults We Have 206". Ground Report. Archived from the original on 2008-11-09. பார்க்கப்பட்ட நாள் 2013-06-06.
- ↑ "How many bones does the human body contain?". Ask.yahoo.com. 2001-08-08. Archived from the original on 2011-07-18. பார்க்கப்பட்ட நாள் 2010-03-04.
- ↑ Exploring our human bodies. San Diego Supercomputer Center Education
- ↑ Tözeren, Aydın (2000). Human Body Dynamics: Classical Mechanics and Human Movement. Springer. pp. 6–10. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-387-98801-7.
- ↑ Vizniak, N.A., 2008, Quick Reference Clinical Consultant Muscle Manual, Professional Health Systems Inc, Canada
- ↑ Lee, Na Kyung; et al. (10 August 2007). "Endocrine Regulation of Energy Metabolism by the Skeleton". Cell 130 (3): 456–469. doi:10.1016/j.cell.2007.05.047. பப்மெட்:17693256. பப்மெட் சென்ட்ரல்:2013746. http://download.cell.com/pdfs/0092-8674/PIIS0092867407007015.pdf. பார்த்த நாள்: 2008-03-15.