கழிவுத்தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கழிவுத்தொகுதி (Excretory system) எனப்படுவது உயிரினங்களின் உடலில் இருந்து தேவையற்றதாகவும், மேலதிகமானதாகவும் கருதப்படும் பொருட்களை வெளியேற்றும் ஒரு உயிரியல் தொழிற்பாட்டிற்கான உடல் உறுப்புக்களின் தொகுதியாகும். இந்தத் தொகுதி உடலில் ஒரு சீரான சமநிலையைப் பேண உதவும்.

பொதுவாக உடலில் இருந்து கழிவுகளை வெளியேற்றும் அனைத்து உடல் உறுப்புக்களும் கழிவுத்தொகுதியினுள் அடங்குமாயினும், சிறுநீர்த்தொகுதியே மிக முக்கியமான கழிவுத்தொகுதியாகக் கருதப்படுகின்றது[1]. இதனால், சிலசமயம் சிறுநீர்த் தொகுதியையே கழிவுத்தொகுதி எனவும் அழைப்பதுண்டு.[2][3]

வளர்சிதைமாற்றத்தில் உருவாகும் கழிவுப் பொருட்கள், வேறும் உடலிற்குத் தேவையற்ற, அல்லது மேலதிகமான திண்ம நீர்ம, வளிமப் பொருட்கள் அனைத்தும் உடலில் இருந்து வெளியேற்றப்படுவதற்கு இந்த கழிவுத்தொகுதி உதவுகின்றது. உடலின் அனைத்து உறுப்புக்களும் வளர்சிதைமாற்றத் தொழிற்பாட்டில் பங்குகொண்டாலும், கழிவுகளை வெளியேற்றுவதில் பங்களிக்கும் உறுப்புக்களே கழிவுத் தொகுதியில் இணைக்கப்படுகின்றன.

கழிவுத்தொகுதி உறுப்புக்கள்[தொகு]

உடலின் உள்ளே உருவாகும் கழிவுகள் உடலில் இருந்து வெளியேற்றப்படாவிட்டால், அவை உடலுக்கு நச்சுப்பொருளாக மாறி உடல்நிலையைப் பாதிக்கவோ, அல்லது மிக அதிகளவில் கழிவுகள் தேங்கினால் இறப்பை ஏற்படுத்தவோ கூடும்.

சிறுநீர்த்தொகுதி உறுப்புக்கள்[தொகு]

முக்கியமான கழிவுத்தொகுதி உறுப்புக்களாக சிறுநீர்த்தொகுதியின் உறுப்புக்களே கருதப்படுகின்றன. பெரிய மூலக்கூறுகளான புரதங்கள் வளர்சிதைமாற்றத்துக்கு உட்படும்போது யூரியா என்னும் கழிவுப்பொருளை முக்கிய பக்கவிளைவுப் பொருளாகத் தருகின்றது. யூரியா, மற்றும் உடலில் உள்ள மேலதிக நீர், வேறும் சில கழிவுப் பொருட்கள் சேர்ந்து சிறுநீராக வெளியேற சிறுநீரகமும் அதனுடனிணைந்து தொழிற்படும் ஏனைய உறுப்புக்களும் உதவுகின்றன.

சுவாசத்தொகுதி உறுப்புக்கள்[தொகு]

வெளிமூச்செறிதலின்போது, உடலில் இருந்து காபனீரொக்சைட்டு, நீராவி போன்ற பொருட்கள் வெளியேற்றப்படுவதனால், சுவாசத் தொகுதியில் உள்ள நுரையீரலும், அதனோடிணைந்த ஏனைய உறுப்புக்களும் கழிவுத்தொகுதியில் பங்கெடுக்கின்றன.

சமிபாட்டுத் தொகுதி[தொகு]

உடலில் உணவுப் பொருட்கள் சமிபாட்டுக்கு உட்படும்போது, சமிபாடடையாத கழிவுப் பொருட்கள் திண்மக் கழிவான மலமாக சமிபாட்டுத் தொகுதியின் முடிவில் உள்ள உறுப்பான குதத்தினூடாக மலம் கழித்தல் செயல்முறை மூலம் வெளியேற்றப்படும்.

தோல்[தொகு]

உடலின் வெளிப்புறமாக இருக்கும் தோலும் கழிவுத்தொகுதியின் ஒரு அங்கமாகும். தோலினூடாக வெளியேற்றப்படும் வியர்வையும் கழிவுப் பொருட்களான மேலதிக நீர், சிறிய அளவிலான யூரியா, மற்றும் சில உப்புக்களைக் கழிவாகக் கொண்டிருக்கும்[1].

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கழிவுத்தொகுதி&oldid=3576896" இருந்து மீள்விக்கப்பட்டது