சிறுநீரகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
சிறுநீரகம்
Gray1120-kidneys.png
மனிதச் சிறுநீரகத்தின் முதுகுப்புறப் பார்வை. முள்ளந்தண்டு காட்டப்படவில்லை.
இலத்தீன் ren
கிரேயின்

subject #253 1215

தமனி சிறுநீரகத் தமனி
சிரை சிறுநீரகச் சிரை
நரம்பு சிறுநீரகப் பின்னல்
ம.பா.தலைப்பு சிறுநீரகம்
Dorlands/Elsevier k_03/12470097

சிறுநீரகம் என்பது யூரியா போன்ற கழிவுப் பொருட்களைக் குருதியில் இருந்து பிரித்து, நீருடன் சேர்த்துச் சிறுநீராக வெளியேற்ற உதவும் ஒரு உடல் உறுப்பு ஆகும். இது விலங்குகளின் உடலில் நிகழும் பல முக்கியமான தொழிற்பாடுகளை ஒழுங்காக்குவதில் பங்களிக்கின்றது. சிறுநீரகம், அது தொடர்பான நோய்கள் ஆகியவை பற்றி ஆய்வு செய்யும் மருத்துவத் துறை சிறுநீரகவியல் எனப்படும்.

மனிதர்களில், சிறுநீரகம், வயிற்றின் பின்புறத்தில் காணப்படுகின்றது. இவை முள்ளந்தண்டின் இரு பக்கங்களிலும், பக்கத்துக்கு ஒன்றாகக் காணப்படுகின்றன. வலது சிறுநீரகம், கல்லீரலுக்குச் சற்றுக் கீழேயும், இடது சிறுநீரகம் பிரிமென்றகட்டிற்குக் கீழே மண்ணீரலுக்கு அருகிலும் அமைந்துள்ளன. ஒவ்வொரு சிறுநீரகத்தின் மேலும் ஒரு அண்ணீரகச் சுரப்பி (அட்ரீனல் சுரப்பி) அமைந்துள்ளது. கல்லீரலின் அமைவினால் வயிற்றுக்குழி சமச்சீரற்றதாக இருப்பதால், அதனுள் உள்ள வலது சிறுநீரகம் இடது சிறுநீரகத்திலும் சற்றுத் தாழ்வாக அமைந்துள்ளது.

சிறுநீரகமானது குருதியிலிருந்து மேலதிக நீர் மற்றும் கழிவுப்பொருட்களை வடிகட்டி எடுத்து உடலிலிருந்து அகற்றவும், உடலிலுள்ள அமில - கார சமநிலையைப் பேணவும், குருதி அழுத்தத்தைக் கட்டுப்படுத்தவும் உதவுகின்றது. அத்துடன் உடலுக்குத் தேவையான சில இயக்குநீர்களைச் சுரப்பதிலும் பங்களிக்கின்றது[1]

சிறுநீரகத்தின் உடற்கூற்றியல்[தொகு]

இருப்பிடம்[தொகு]

மனிதரில் இரு சிறுநீரகங்கள் வயிற்றுக்குழியில் உடலின் பின்பக்கத்தில், முண்ணாணின் இரு புறமும் ஒவ்வொன்றாக அமைந்திருக்கும்[2]. உடலின் உள்ளுறுப்புக்களில் வயிற்றுக்குழில் இருக்கும் பெரிய அமைப்பைக்கொண்ட கல்லீரலின் இருப்பிடம் காரணமாக உடலில் தோன்றும் சமச்சீரற்ற தன்மையினால், வலதுபுறமாக அமைந்திருக்கும் சிறுநீரகம் இடதுபுறம் அமைந்திருக்கும் சிறுநீரகத்தைவிட, சிறிது கீழேயும், இடதுபுறமுள்ள சிறுநீரகம், வலது சிறுநீரகத்தைவிடச் சிறிது நடுப்புறமாகவும் அமைந்திருக்கும்[3][4]. இடது சிறுநீரகமானது முள்ளந்தண்டு நிரலில் உள்ள T12 இலிருந்து L3 வரையிலான எலும்புகள் அமைந்திருக்கும் மட்டத்திலும், வலது சிறுநீரகம் அதைவிடச் சற்று கீழேயும் அமைந்திருக்கும்,[5]

வலது சிறுநீரகமானது பிரிமென்றகட்டிற்கு நேரடியாகக் கீழாகவும், கல்லீரலுக்குப் பின்புறமாகவும் அமைந்திருக்கும், இடது சிறுநீரகம் பிரிமென்றட்டிற்குக் கீழாகவும், மண்ணீரலுக்குப் பின்புறமாகவும் அமைந்துள்ளது. ஒவ்வொரு சிறுநீரகத்தின் மேலேயும் ஒட்டியபடி அண்ணீரகச் சுரப்பி காணப்படும். சிறுநீரகத்தின் மேற்புறமானது பகுதியாக 11ஆம், 12 ஆம் விலா எலும்புகளால் பாதுகாக்கப்பட்டிருக்கும். முழு சிறுநீரகங்களும், அண்ணீரகச் சுரப்பிகளும் இரு கொழுப்புப் படைகளால் சூழப்பட்டிருக்கும். வளர்ந்த மனிதனில் இருக்கும் ஒவ்வொரு சிறுநீரகமும், ஆணில் 125 - 170 கிராமாகவும், பெண்ணில் 115 - 155 கிராமாகவும் இருக்கும்[6]. இடது சிறுநீரகமானது வலது சிறுநீரகத்தைவிட சிறிது பெரியதாக இருக்கும்[7].

அமைப்பு[தொகு]

சிறுநீரகம் ஒன்றின் உள்ளமைப்புக்களைக் காட்டும் வரைபடத்தோற்றம்

சிறுநீரகம் கிட்டத்தட்ட 11-14cm நீளமானதும், 6cm அகலமானதும், 4cm தடிப்பானதுமாகும். சிறுநீரகம் இரு பகுதிகளாலானதாகும். சிறுநீரகத்தின் மேற்புறத்தில் சிறுநீரக மேற்பட்டையும்(renal cortex) , உள்ளே சிறுநீரக மையவிழையமும் (renal medulla) உள்ளது. சிறுநீரகத்தின் தொழிற்பாட்டு அலகுகளான சிறுநீரகத்தியின் சில பாகங்கள் மேற்பட்டையிலும், ஹென்லியின் தடம், சேர்க்கும் கான் போன்ற பகுதிகள் சிறுநீரக மையவிழையத்திலும் காணப்படும்.

குருதி வழங்கல்[தொகு]

நுணுக்குக்காட்டியினூடாக சிறுநீரக மையவிழையத்தின் தோற்றம்
நுணுக்குக்காட்டியினூடாக சிறுநீரக மேற்பட்டையின் தோற்றம்

சிறுநீரகத்துக்கு சிறுநீரக தமனிகள்/ சிறுநீரக நாடிகள் மூலம் இரத்தம் வழங்கப்படும். வலது சிறுநீரகத்துக்கு வலது சிறுநீரக நாடியும், இடது சிறுநீரகத்துக்கு இடது சிறுநீரக நாடியும் அதிக ஒட்சிசன் செறிவுள்ள குருதியை வழங்கும். சிறுநீரகங்கள் அளவில் சிறியனவென்றாலும் அதிக தொழிற்பாடும் வேலைப்பழுவும் உடையவை. எனவே இதயத்தால் விநியோகிக்கப்படும் குருதியில் 20% சிறுநீரகத்துக்கு விநியோகிக்கப்படுகின்றது. ஒவ்வொரு நாடியும் சிறு சிறு கிளைகளாகப் பிரிந்து சிறிநீரகத்துக்கூடாக அதிக குருதியை விநியோகம் செய்யும். இச்சிறு நாடிகள் ஒவ்வொரு சிறுநீரகத்தியிலும் ஒவ்வொரு கலன்கோளத்தை உருவாக்கும். இக்கலன்கோளத்துக்கூடாகவே கலன்கோள வடிதிரவம் போமனின் உறையூடாக சிறுநீரகத்தியை அடைகின்றது.

சிறுநீரகத்தியில் இருந்து நீரையும், கனியுப்புக்களையும், ஊட்டச்சத்துக்களை மீளுறிஞ்சுவதற்காகவும், காபனீரொக்சைட்டைக் கடத்தவும், நாடி மீண்டும் பிரிந்து மயிர்த்துளைக் குழாய்களை உருவாக்கின்றன. இம்மயிர்த்துளைக் குழாய்களால் அகத்துறிஞ்சப்பட்டவற்றோடு குருதி சிறுநீரக நாளங்களில் / சிரைகளில் கலந்து மீண்டும் இதயத்தை அடைகின்றது.

சிறுநீரகத்தின் தொழில்கள்[தொகு]

குருதியின் அமில-கார நிலையைப் பேணுவதன் மூலம், அயன்களின் செறிவைப் பேணுவதன் மூலம், நீர்ச்சமநிலையைப் பேணுவதன் மூலம், குருதியமுக்கத்தைப் பேணுவதன் மூலம், கழிவகற்றலின் மூலம் முழு உடலின் ஒருசீர்த்திடநிலையைப் பேணுவதில் சிறுநீரகம் முக்கிய பங்கை வகிக்கின்றது. சிறுநீரகத்தின் சில தொழிற்பாடுகளை ஓமோன்கள் கட்டுப்படுத்துகின்றன. உதாரணமாக ADH (Anti Diuretic Hormone) சிறுநீரகத்தால் மீளுறிஞ்சப்படும் நீரின் அளவைக் கட்டுப்படுத்துகின்றது.

கழிவகற்றல்[தொகு]

முதன்மை கட்டுரை: சிறுநீரகத்தி

சிறுநீரகத்தின் முக்கியமான தொழில் நீரில் கரையக்கூடிய கழிவுப் பொருட்களை குருதியிலிருந்து வடித்தெடுத்தலாகும்[8]. வடித்தெடுக்கப்படும் கரைசலில் இருந்து, மீண்டும் நீர், மற்றும் உடலுக்குத் தேவையான பொருட்கள் மீள உறிஞ்சப்படுவதன் மூலம், கழிவுகள் நிரம்பிய சிறுநீரை செறிவாக்கி, பின்னர் அதனை சிறுநீர்க்குழாய் மூலம் சிறுநீர்ப்பைக்குக் கடத்தி அங்கிருந்து உடலின் வெளியே அனுப்ப உதவும். இந்த வடித்தல், மீள உறிஞ்சல் தொழிலை சிறுநீரகத்திலுள்ள சிறுநீரகத்தி எனப்படும் அமைப்பு செய்கின்றது. இந்த சிறுநீரகத்திகளே சிறுநீரகத்தின் தொழிலைச் செய்யும் அடிப்படை அலகாகும்.

உடலில் அனுசெபத்தின் போது வெளியேற்றப்படும் தேவையற்ற அல்லது தீங்கை விளைவிக்கும் பதார்த்தங்களே கழிவுகளாகும். அந்த வகையில் புரத அவசேபத்தின் போது வெளியேறும் யூரியாவும், நியூக்லிக் அமில அனுசேபத்தின் போது வெளியேறும் கழிவான யூரிக் அமிலமும் மனித உடலில் பிரதான கழிவுகளாகும். இவற்றை சிறுநீரகம் கரைசல் வடிவில் கழிவகற்றுகின்றது.

அவசியமான ஊட்டச்சத்துக்களை கலன்கோள வடிதிரவத்திலிருந்து மீளுறிஞ்சல்[தொகு]

கழிவுகளோடு அவசியமான ஊட்டச்சத்துக்களான குளுக்கோசு, அமினோ அமிலங்கள், நீர், கனியுப்பு அயன்கள் போன்றவையும் கலன்கோளத்திலிருந்து வடிகட்டப்படும். இது கலன்கோள வடிதிரவம் எனப்படும். இவ்வூட்டச்சத்துக்கள் வீணாவதைத் தவிர்க்க இவை மீண்டும் குருதியினுள் அகத்துறிஞ்சப்படும். மீதமாகும் யூரியா, யூரிக்கமிலம், மேலதிக நீர் அடங்கிய சிறுநீர் சிறுநீரகத்திலிருந்து வெளியேற்றப்படும்.

மீளுறிஞ்சப்படும் இடம் மீளுறிஞ்சப்படும் ஊட்டச்சத்து குறிப்புகள்
அண்மை மடிந்த சிறுகுழாய் குளுக்கோசு (100%), அமினோவமிலங்கள் (100%), இருகார்பனேற்று அயன் (90%), Na+ (65%), Cl, பொசுப்பேற்று அயன், H2O (65%)
 • PTH ஓமோன் பொஸ்பேற் அயன் வெளியேறலைக் கட்டுப்படுத்தும்
 • AT II ஓமோன் Na+, H2O மற்றும் HCO3 அகியவற்றின் மீளுறிஞ்சலைத் தூண்டும்.
மெல்லிய இறங்கும் ஹென்லேயின் வளைவு H2O
 • சிறுநீரகத்தின் செறிவு அதிகரிக்கும்.
ஹென்லேயின் வளைவுவின் தடித்த ஏறும் புயம் Na+ (10–20%), K+, Cl; Mg2+, Ca2+
 • இங்கு நீர் மீளுறிஞ்சப்படாது. எனவே சிறுநீரின் செறிவு குறையும்.
சேய்மை மடிந்த சிறுகுழாய் Na+, Cl
 • PTH ஓமோன் Ca2+ மீளுறிஞ்சப்படுவதைத் தூண்டும்.
சேர்க்குங்கான் Na+(3–5%), H2O
 • H+, K+ ஆகியவற்றிற்கு மாற்றீடாக Na+ மீளுறிஞ்சப்படும். இச்செயற்பாடு அல்டோஸ்டெரோன் ஓமோனால் கட்டுப்படுத்தப்படுகின்றது.
 • ADH ஓமோன் இங்கு நீர் மீளுறிஞ்சப்படுவதைத் தூண்டும்.

அமில-கார ஒருசீர்த்திட நிலை[தொகு]

மனித உடலில் நுரையீரலும், சிறுநீரகமும் குருதியின் pHஐ 7.4 என்ற நிலையில் பேண உதவுகின்றன. நுரையீரல் காபனீரொக்சைட்டை வெளியேற்றுவதாலும், சிறுநீரகம் H+ அயன்களை வெளியேற்றி இருகாபனேற்று அயனை மீளுறிஞ்சுவதாலும் பங்களிக்கின்றன.

ஓமோன் உற்பத்தி[தொகு]

சிறுநீரகம் சிலவகை ஓமோன்களை உற்பத்தி செய்யும் ஆற்றலுடையது. சிறுநீரகம் ரெனின் எனும் நொதியத்தையும் சிவப்பணுவாக்கி (Erythropoietin) எனும் ஓமோனையும் உற்பத்தி செய்கின்றது. குருதியில் ஒக்சிசனின் செறிவு குறைவடைந்தால், சிறுநீரகம் இவ்வோமோனை உற்பத்தி செய்து குருதியில் வெளியேற்றும். இவ்வோமோன் எலும்பு மச்சைக் கலங்களை அதிக செங்குருதிக் கலங்களை ஆக்கத் தூண்டும். சிறுநீரகத்தில் கால்சிடிரையால் (Calcitriol) எனும் ஓமோனும் உற்பத்தியாகின்றது. இதனை சிறுநீரகத்தியிலுள்ள அண்மை மடிந்த சிறுகுழாய்க் கலங்கள் தொகுக்கின்றன. இவ்வோமோன் குடலில் கல்சியம் உறிஞ்சப்படுவதை அதிகரிப்பதுடன், கலன்கோள வடிதிரவத்திலிருந்து உறிஞ்சப்படும் பொஸ்பேட்டு அயன்களின் அளவையும் அதிகரிக்கின்றது.

சிறுநீரக நோய்கள்[தொகு]

கணக்கீடுகள்[தொகு]

சிறுநீரகத்தின் செயற்பாட்டுத் திறனைக் கண்டறிவதில் சில கணக்கீடுகள் முக்கிய பங்கு வகிக்கின்றன.

வடித்தல் பின்னம் (Filtration Fraction)[தொகு]

குருதியின் முதலுருவிலிருந்து வடிக்கப்படும் கலன்கோள வடிதிரவத்தின் அளைவை இப்பின்னம் காட்டுகின்றது.

FF=GFR/RPF

 • FF - வடித்தல் பின்னம்
 • GFR - கலன்கோள வடித்தல் வீதம் (glomerular filtration rate)
 • RPF - சிறுநீரக முதலுருப் பாய்ச்சல் (renal plasma flow)

சாதாரண மனிதனில் FF 20% ஆகக் காணப்படும்.

வெளியேற்றல் வீதம் (Renal Clearance)[தொகு]

ஒரு குறித்த பதார்த்தம் குறித்த நேர இடைவெளியில் சிறுநீரகமூடாக குருதியின் முதலுருவிலிருந்து முழுமையாக வெளியேற்றப்படும் வீதத்தை இவ்வளவீடு குறிக்கும்.

Cx=(Ux)V/Px

 • Cx -X எனும் பதார்த்தம் வெளியேற்றப்படும் வீதம் (பொதுவாக mL/min இனால் அளக்கப்படும்).
 • Ux -X எனும் பதார்த்தத்தின் சிறுநீர்ச் செறிவு.
 • Px -X எனும் பதார்த்தத்தின் குருதி முதலுருச் செறிவு
 • V - சிறுநீர் வெளியேற்றப்படும் வீதம்.

மேற்கோள்கள்[தொகு]

 1. "சிறுநீரகத்தின் தொழில்கள்". Baxter Renal.
 2. "HowStuffWorks How Your Kidney Works".
 3. "Kidneys Location Stock Illustration".
 4. [1][தொடர்பிழந்த இணைப்பு]
 5. Bålens ytanatomy (Superficial anatomy of the trunk). Anca Dragomir, Mats Hjortberg and Godfried M. Romans. Section for human anatomy at the Department of medical biology, Uppsala university, Sweden.
 6. Walter F., PhD. Boron (2004). Medical Physiology: A Cellular And Molecular Approach. Elsevier/Saunders. ISBN 1-4160-2328-3. 
 7. Glodny B, Unterholzner V, Taferner B, et al. (2009). "Normal kidney size and its influencing factors - a 64-slice MDCT study of 1.040 asymptomatic patients". BMC Urology 9: 19. doi:10.1186/1471-2490-9-19. பப்மெட் 20030823. PMC 2813848. http://www.biomedcentral.com/1471-2490/9/19. 
 8. "சிறுநீர் உற்பத்தி". NSBRI (NATIONAL SPACE BIOMEDICAL RESEARCH INSTITUTE).

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சிறுநீரகம்&oldid=2243166" இருந்து மீள்விக்கப்பட்டது