சமிபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
சமிபாட்டுத் தொகுதி
"இரையகக் குடற்பாதை" redirects here. For மனிதர்களில் நடைபெறும் சமிபாட்டை விரிவாக அறிய, see மனித இரையகக் குடற்பாதை.

செரித்தல் (Digestion) என்பது பெரிய அளவில் உள்ள கரையாத உணவு மூலக்கூறுகளை தண்ணீரில் கரையக்கூடிய சிறிய மூலக்கூறுகளாக சிதைக்கும் வளர்சிதைமாற்ற வினையாகும். இவ்வாறு சிதைக்கப்பட்ட சிறிய மூலக்கூறுகள் உறிஞ்சப்பட்டு, நீர்மநிலை குருதி நீர்மத்தினுள் சேர்த்துக்கொள்ளப்படுகிறது. இச்செயல்முறையை சமிபாடு என்றும் செரிமானம் என்றும் வேறு பெயரால் அழைக்கிறார்கள். சில உயிரினங்களில் இச்சிறிய மூலக்கூறுகள் சிறுகுடலால் உறிஞ்சப்பட்டு இரத்தத்தோடு சேர்த்துக்கொள்ளப்படுகிறது.

செரிமானம் என்பது சிதைமாற்றத்தின் ஒரு வடிவமாகும், பெரும்பாலும் உணவு எவ்வாறு உடைந்தது என்பதை அடிப்படையாகக் கொண்டு இதை இரண்டு செயல்முறைகளாக பிரிக்கிறார்கள். இயக்கமுறை செரிமானம் மற்றும் வேதியியல் செரிமானம் என்பன இவ்விரண்டு முறைகளாகும். இயக்கமுறை செரிமானம் என்பது, உடல் இயக்கத்தால் பெரிய உணவு மூலக்கூறுகள் சிறிய துண்டுகளாக சிதைக்கப்படுவதாகும். செரிமான நொதிகளால் பெரிய உணவு மூலக்கூறுகள் சிறிய மூலக்கூறுகளாகச் சிதைக்கப்படுவதை வேதியியல் செரிமானம் என்பர்.

சொல் இலக்கணம்[தொகு]

செரித்தலின் அடிப்படையான வினையை விளக்குமாறு தமிழில் அதற்கு அறுத்தல் என்னும் சிறப்பான சொல் உண்டு. உணவைப் பிரிப்பதற்கு அறுத்தல் என்று பெயர்.

திருவள்ளுவர்,

மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது


அற்றது போற்றி உணின்.

(குறள் 942)

என்று கூறியதில் உள்ள “அற்றது போற்றி உணின்” என்னும் தொடரில் உள்ள அற்றது எனும் சொல் உண்ட உணவை முழுவதுமாகச் செரித்தல் என்பதைக் குறிக்கும்.

விசேட உறுப்புகள் மற்றும் நடத்தைகள்[தொகு]

தங்களது உணவைச் சமிபாடடையச் செய்வதற்கு உதவுவதற்காக விலங்குகள் அலகுகள், நாக்கு, பற்கள் போன்ற பரிணாமமடைந்த உறுப்புக்களைக் கொண்டுள்ளன.

அலகுகள்[தொகு]

பறவைகள் தமது சூழலியல் முடுக்குக்கு இசைவான எலும்புகளால் உருவான அலகுகளைக் கொண்டுள்ளன. இவற்றின் மூலம் பழங்கள், விதைகள், பூச்சிகள் என்பவற்றைப் பறவைகள் இலகுவில் உட்கொள்கின்றன.

நாக்கு[தொகு]

நாக்கு, வாயின் அடியில் எலும்போடு இணைக்கப்பட்ட எலும்புத்தசை என்னும் வகையைச் சேர்ந்த இளஞ்சிவப்பு நிறத் தசை ஆகும். இது வாயில் இடும் உணவை பற்கள் மெல்லுவதற்குத் ஏற்றாற்போல் நகர்த்தியும், புரட்டியும், திருப்பியும், மென்ற உணவை விழுங்கி உணவுக் குழாய்க்குள்ளே தள்ளியும் உதவுகின்றது.

பல்[தொகு]

பல் பெரும்பாலான முதுகெலும்பி வகையான விலங்குகளின் தாடையில் காணப்படுகின்றது. இது உணவைக் கிழித்து, விறாண்டி, சப்பி உண்பதற்கு உதவியாக உள்ளது. பற்கள் வெள்ளை அல்லது வெளிர் மஞ்சள் நிறத்தில் ஆனவையாகும். பற்கள் எலும்புகளால் ஆனவை அல்ல மாறாக அடர்த்தி மற்றும் கடினத்தன்மை உள்ள எனாமல், டென்ரின் மற்றும் செமென்டம் போன்ற இழையங்களால் ஆனவை. மனிதப் பற்கள் இரத்தம் மற்றும் நரம்பு என்பவற்றுடன் இணைக்கப்பட்டுள்ளது.

விலங்குகளின் பற்களின் வடிவம், அளவு மற்றும் எண்ணிக்கை என்பன அவை உட்கொள்ளும் உணவில் தங்கியுள்ளன. உதாரணத்திற்கு தாவர உண்ணிகள் தாவரப் பாகங்களினை அரைத்து உண்ண அதிக எண்ணிக்கையான கடைவாய்ப் பற்களைக் கொண்டுள்ளன. அதேவேளை விலங்கு உண்ணிகள் வெட்டும் பற்களைக் கொண்டுள்ளன.

மனிதனின் உடலில் செரித்தல் செயல்முறைகள்[தொகு]

மனித சீரணமண்டலம் வாயில் தொடங்கி மலவாய் வரை நீண்டிருக்கிறது. உணவு வாய்க்குள் வந்தவுடன் மெல்லுதல் என்ற உடலியக்கச் செயலால் செரித்தல் செயல்முறை ஆரம்பமாகிறது. உணவு பற்களால் அரைக்கப்படுகிறது. நாக்கின் உதவியால் கலக்கப்படுகிறது. உமிழ்நீர்ச் சுரப்பிகள் சுரக்கும் உமிழ்நீர் இங்கு உணவுடன் சேர்க்கப்படுகிறது. கோழை உணவுக்கு வழவழப்பைக் கொடுக்கிறது. ஐதரசன் கார்பனேட்டு காரத்தன்மையைக் கட்டுபடுத்தி அமைலேசு நொதியை ஊக்குகிறது. இதனால் உணவிலுள்ள மாவுச்சத்தின் ஒரு பகுதி செரிக்கப்படுகிறது. இந்நிலையில் உணவு சிறிய சிறிய துண்டுகளாக கவளம் போல நீர்மக்குழம்பு வடிவில் காணப்படும். தொண்டைக்குழி தசைகள் வழியாக உணவுக்குழாயை அடைந்து, தொடர் அலை இயக்கம் மூலம் இரைப்பையைச் சேர்கிறது. இரைப்பையை அடையும் உணவு வளர்சிதை மாற்றம் மூலம் சீரணிக்கப்பட்டு, சத்துக்களும், கனிமங்களும், உயிர்சத்துகளும் உட்கிரகிக்கப்படுகின்றன. புரதம், கொழுப்பு, மாவுச்சத்துகள் முதலியன எளிதாக சிதைக்கப்பட்டு கிரகிக்கப்படுகின்றன. பின்னர் உணவு சிறுகுடல், பெருங்குடல் என நகர்கிறது. செரிக்கப்படாத உணவு இறுதியாக மலக்குடல் வழியாக வந்து மலவாய் மூலம் வெளியேற்றப்படுகிறது[1].

பெரும்பாலான முதுகெலும்பிகளில் நடைபெறும் செரித்தல் செயல்முறையை கீழ்கண்ட நான்கு படிநிலைகளில் கூறமுடியும்.

  1. உட்கொள்ளல்: உணவை வாயில் இடுதல்.
  2. பொறிமுறைச் செரித்தல்: உணவைக் கிழித்தல், அரைத்தல். இரசாயனச் செரித்தல்: வேறு வேதிப் பொருட்களுடன் கலந்து சிக்கலான மூலக்கூறுகளை எளிய மூலக்கூறுகளாக உடைத்தல்.
  3. உறிஞ்சல்: ஊட்டச்சத்துக்கள், சமிபாட்டுத் தொகுதியில் இருந்து சுற்றோட்டத் தொகுதி மற்றும் நிணநீர் நுண்துளைகளுக்குள் செல்லுதல்.
  4. கழிவகற்றல்: செரிக்கப்படாத கழிவுப் பொருட்கள் சமிபாட்டுத் தொகுதியிலிருந்து வெளியேறல்.

வாய்[தொகு]

வாய் என்ற உறுப்பு உதடுகளில் ஆரம்பமாகி தொண்டைவரை நீண்டுள்ளது. பற்கள், ஈறுகள், அண்ணம், கடின அண்ணம், மென் அண்ணம், நாக்கு, நாக்கிலுள்ள தசைகள், உமிழ்நீர்ச் சுரப்பிகள், தொண்டைக்குழி முதலியன வாயிலுள்ள பிற உறுப்புகளாகும்.வாயும், வாய்க்குழியும் உணவை உண்பதற்கும் பேசுவதற்கும் உதவுகின்றன. இப்பணிகளுக்கு ஏற்றாற்போல இங்குள்ள உறுப்புகள் தகவமைக்கப்பட்டுள்ளன. உணவு மற்றும் திரவப்பொருட்களை உறிஞ்ச உதடுகள் பயன்படுகின்றன. பாலூட்டிகளில், சமிபாட்டுக்கான தொடக்கநிலை வாயிலேயே நடைபெறுகின்றது. மாந்தர்கள் உணவை வாயில் இட்டவுடன் இந்த சமிபாடு ஆரம்பமாகின்றது. முதலில் உணவானது பற்களால் மெல்லப்பட்டு சிறு துணிக்கைகளாக உடைக்கப்படுகின்றது. இதில் உதவுவதற்கு நாக்கு உணவை பிரட்டிக் கொடுக்கிறது. வாயில் ஊறும் உமிழ்நீர் உணவை ஈரப்படுத்திக் கொடுப்பதுடன், உமிழ்நீரில் உள்ள அமைலேசு போன்ற நொதியானது மாப்பொருளை வேதியியல் மாற்றத்துக்கு உட்படுத்துகின்றது. பல்லால் மெல்லும்பொழுது மேலும் உமிழ்நீர் சுரக்கின்றது. ஈரப்படுத்திய உணவு சிறு கவளங்களாக தொண்டை வழியாக கீழிறங்கி உணவுக்குழாயை/களத்தை அடைகின்றது.

உணவுக்குழாய்/களம்[தொகு]

தொண்டைக் குழியின் கீழ்ப்பகுதியில் உணவுக் குழாய் ஆரம்பமாகிறது. இது கீழ்நோக்கிச் சென்று மார்புக் குழியினை தாண்டி உதரவிதானத்திற்குள் புகுந்து பின்னர் இரைப்பையாக மாறுகிறது.கழுத்துப்பகுதி, மார்புப்பகுதி, வயிற்றுப் பகுதி என மூண்று பகுதிகளாக உணவுக் குழாய் பிரிக்கப்படுகிறது. இந்த உணவுக்குழாய்/உணவுக்குழல்/களம் சுமார் 20-30 செ.மீ நீளமுள்ளது. இந்த களத்தின் தசைகள் சுருங்கியும் விரிந்தும் ஏற்படுத்தும் சுற்றிழுப்பசைவு எனப்படும் அலை போன்ற அசைவுகளால் உணவானது உணவுக்குழாயில் நகர்ந்து இரைப்பையை அடைகின்றது.

இரைப்பை[தொகு]

Colon.xar *-ta.svg

இரைப்பை தசையினால் ஆன ஒரு பை போல உள்ளது. இதன் மேல் கீழ் முனைகள் அசைவற்று பிணைக்கப்பட்டுள்ளது. பிற பகுதிகள் யாவும் நன்கு அசையக்கூடிய வகையில் தகவமைக்கப்பட்டுள்ளன. விலா எலும்புகளுக்குள் மறைந்து காணப்படும் இரைப்பை நபருக்கு நபர் அளவில் மாறுபடுகிறது.பொதுவாக இரைப்பை நான்கு பகுதிகளாகப் பிரிக்கப்படுகிறது.

இரைப்பையில் சமிபாட்டு நொதியங்கள் சில உருவாக்கப்படுகின்றன. உணவை உடைக்கும் வேலை வயிற்றிலும் தொடர்கின்றது. இங்கே வயிற்றுத் தசைகள் சுருங்கி விரிந்து உணவைக் கடைவதன் மூலம் அதனை உடைத்து நொதியத்துடன் கலக்குகின்றது. அத்துடன் அங்கே சுரக்கப்படும் அமிலத் தன்மையான நீரானது அங்கு சுரக்கப்படும் நொதியங்கள் சிக்கலான மூலக்கூறுகளை வேதியியல் செயல்முறையில் உடைத்து எளிய மூலக்கூறுகளாக மாற்றுவதற்கு உதவுகின்றன. அத்துடன் விட்டமின் B -12, அல்ககோல் போன்ற சில பொருட்கள் இந்த இரைப்பைப் பகுதியிலேயே நேரடியாக உறிஞ்சப்படுகின்றன.

முன் சிறுகுடல்[தொகு]

இது இரைப்பையையும், சிறுகுடலையும் இணைக்கும் வளைந்த அமைப்பாகும். இதன் வளைந்த பகுதிக்குள் கணையம் அல்லது சதையி காணப்படும். இந்த கணையத்திலிருந்து சுரக்கப்படும் கணையநீரில் பல மூலக்கூறுகளை வேதியியல் செயல்முறையில் உடைக்கக்கூடிய நொதிகள் காணப்படும். அத்துடன் பித்தப்பையினால் சுரக்கப்படும் பித்தநீரானது அங்கே தொழிற்படும் நொதியங்களுக்கு உதவுவதற்காக உணவை காரத் தனமை உள்ளதாக மாற்றும்.

முன்சிறுகுடல் நான்கு பகுதிகளாக உள்ளது, ஒவ்வொரு பகுதியும் ஒவ்வொரு திசையை நோக்கிச் செல்கின்றன. சுமார் 5 செ.மீ நீளம் கொண்ட முதல்பகுதி பின்பக்கம் நோக்கிச் செல்கிறது. இரண்டாம் பகுதி வலது சிறுநீரகத்தை நோக்கி கீழிறங்குகிறது. மூம்றாம் பகுதி கனையத்தின் கீழ்விளிம்பை தொடர்பு கொள்ளும் வகையில் வளைந்து முன்நோக்கி வருகிறது. நான்காம் பகுதியானது மகாதமனியை ஒட்டி மேலே சென்று இதன்முடிவில் சிறுகுடல் ஆரம்பமாகிறது.

சிறு குடல்[தொகு]

சிறுகுடல் என்பது, இரையகக் குடற்பாதையின் ஒரு பகுதியாகும். இரைப்பைக்கும் பெருங்குடலுக்கும் இடையில் சிறுகுடல் அமைந்துள்ளது. முன் சிறுகுடல், நடுச்சிறுகுடல், பின்சிறுகுடல் என மூன்று பகுதிகளாக இது பிரிக்கப்பட்டுள்ளது. இங்குதான் பெரும்பாலான உணவு இறுதியாக உறிஞ்சப்படுகிறது, சிறுகுடலின் உட் சுவரிலிருந்து நீட்டிக்கொண்டிருக்கும் விரலிகள் என்னும் குடல் நீட்சி அமைப்புக்கள் உணவிலிருக்கும் ஊட்டசத்துகளையும் கனிமங்களையும் உறிஞ்சி குருதிக்குள் அனுப்புகின்றன[2]. இந்த சிறுகுடல் அல்லது இரையகக் குடல் பாதையிலேயே அதிகளவில் உறிஞ்சல் நடைபெறுகின்றது.

பெருங்குடல்[தொகு]

மனிதர்களின் பெருங்குடல் அவர்களின் இடுப்புச் சரிவின் வலது புறத்தில் இடுப்புக்கு கீழே அல்லது கீழிருந்து தொடங்குகிறது, இலியம் எனப்படும் சிறுகுடலின் இறுதிப்பகுதியில் குடல்களிடை தடுக்கிதழ் வழியாக இணைகிறது. இங்கிருந்துதான் சீக்கம் எனப்படும் பெருங்குடல் பகுதி ஆரம்பமாகிறது. எனவே பெருங்குடலின் ஆரம்பப்பகுதியான சீக்கத்தை ஆரம்பப் பெருங்குடல் என்றும் அழைக்கலாம். ஆரம்பப் பெருங்குடல் பை போன்ற தோற்றத்துடன் அகலமாக விரிந்து கீழ்வயிற்றுப் பகுதியின் வலது கீழ்முனைப்பகுதியில் காணப்படுகிறது. ஆரம்பப் பெருங்குடலின் மேற்பகுதியிலிருந்து ஏறுபெருங்குடல் தொடங்குகிறது. ஏறு பெருங்குடல் முடிவடையும் இடத்தில் ஆரம்பித்து குறுக்கு வாட்டில் பாய்ந்து செல்லும் பகுதி குறுக்குப் பெருங்குடல் எனப்படுகிறது. பின்னர் இது இடுப்புக் குழியில் கீழிறங்கி மலக்குடலாக நீட்சியடைந்து இறுதியாக குதக்கால்வாயில் முடிவடைகிறது [3]. மொத்தத்தில் மனிதர்களின் பெருங்குடல் சுமார் 1.5 மீட்டர் (5 அடி) நீளமுடையது ஆகும். குடலிறக்கப்பாதையின் மொத்த நீளத்தில் இது ஐந்தில் ஒரு பங்கு ஆகும் [4].

மேலதிக நீரானது பெருங்குடல் பகுதியில் உறிஞ்சப்படும். இது ஏறு பெருங்குடல், இறங்கு பெருங்குடல், குறுக்குப் பெருங்குடல், நெளிபெருங்குடல் என நான்கு பகுதிகளை உள்ளடக்கியுள்ளது.

இலியமும் ஆரம்பப் பெருங்குடலும் இணையும் இடத்தில் ஆரம்பமாகி மேல் நோக்கி செல்வது ஏறு பெருங்குடலாகும். ஏறுபெருங்குடல் முடிவடையும் இடத்தில் கல்லீரல் வளைவில் ஆரம்பித்துகுறுக்கு வாட்டில் சென்று மண்ணிரல் வளைவு வரை செல்வது குறுக்குப் பெருங்குடலாகும். மண்ணிரல் வளைவில் ஆரம்பமாகி இடுப்பு விளிம்பு வரை நீண்டிருப்பது இறங்கு பெருங்குடலாகும். இதன் முடிவில் ஆரம்பமாகி மலக்குடலின் தொடக்கம் வரை நீண்டிருப்பது இடுப்புப் பெருங்குடல் எனப்படுகிறது.

குதம்[தொகு]

மலக்குடல் மலத்தால் நிரம்பியதும் மலம் வெளியேற்றும் தசைகள் இயங்குகின்றன. நரம்பிழைகளால் தூண்டப்பட்டு சுருக்குத்தசை தளர்ந்து கழிவுப் பொருட்கள் குதத்தினூடாக வெளியேற்றப்படுகின்றன. மலம் வெளியேற்றப்படுவதில் மலக்குடலின் அழுத்தம் முக்கியப்பங்கு வகிக்கிறஃது.

புரதச் செரிமானம்[தொகு]

புரதங்களின் செரிமானம் இரைப்பையில் ஆரம்பமாகிறது. இங்குள்ள பெப்சின் நொதி புரதங்களில் உள்ள பெப்டைடுகளை உடைக்கிறது. மனித இரைப்பையில் பெப்சினும் கணையத்தில் டிரிப்சின் மற்றும் சைமோடிரிப்சினும் சுரக்கின்றன. புரதம் முற்றிலுமாக உடைக்கப்பட்டு அமினோ அமிலங்களாக மாற்றப்படுகின்றன. இவற்றின் செரிமான நடவடிக்கைகள் சிறுகுடலுக்குள்ளும், சிறுகுடல் மேற்பரப்பிலும், சைட்டோபிளாசத்தின் உட்புறமும் நடைபெறுகின்றன.

கொழுப்புச் செரிமானம்[தொகு]

நாக்குச் சுரப்பிகளில் சுரக்கப்படும் லைப்பேசு நொதி இரைபையை அடைந்து அங்குள்ள 30 சதவீத டிரைகிளிசரேட்டுகளை சிதைக்கிறது. பெரும்பான்மையான கொழுப்பின் செரிமானம் சிறுகுடலிலேயே நடைபெறுகிறது[5]

மாவுச்சத்து செரிமானம்[தொகு]

உண்ணப்படும் உணவில் உள்ள மாவுச்சத்து முதலில் உமிழ்நீரில் உள்ள ஆல்பா அமைலேசால் உடைக்கப்படுகிறது. பின்னர் உணவு சிறுகுடலை அடையும்போது இதே நொதியும் கணையத்தில் சுரக்கப்படும் அமைலேசும் மேலும் சிதைக்கின்றன. சிறுகுடலின் மேற்பரப்பு உயிரணுக்களால் சுரக்கப்படும் நொதி இதை குளுகோசாக மாற்றுகிறது. இக்குளுகோசு சளிச்சவ்வு உயிரணுக்களால் உட்கிரகிக்கப்படுகிறது. உண்ணப்படும் உணவிலுள்ள எல்லா கார்போவைதரேட்டு மூலக்கூறுகளும் உணவு சிறுகுடலின் கடைசி பாகமான இலியத்தினை அடையும் முன்னரே உட்கிரகிக்கப்படுகின்றன.

மேற்கோள்கள்[தொகு]

  1. Maton, Anthea; Jean Hopkins; Charles William McLaughlin; Susan Johnson; Maryanna Quon Warner; David LaHart; Jill D. Wright (1993). Human Biology and Health. Englewood Cliffs, New Jersey, USA: Prentice Hall. ISBN 0-13-981176-1. OCLC 32308337. 
  2. human body | Britannica.com
  3. "Large intestine".
  4. Drake, R.L.; Vogl, W.; Mitchell, A.W.M. (2010). Gray's Anatomy for Students. Philadelphia: Churchill Livingstone. 
  5. Digestion of fats (triacylglycerols)

புற இணைப்புகள்[தொகு]"https://ta.wikipedia.org/w/index.php?title=சமிபாடு&oldid=2486020" இருந்து மீள்விக்கப்பட்டது