உள்ளடக்கத்துக்குச் செல்

பூஞ்சை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(பங்கசு இலிருந்து வழிமாற்றப்பட்டது)
பூஞ்சை
புதைப்படிவ காலம்:Early டெவோனியக் காலம்–Recent (but see text)
A collage of five fungi (clockwise from top left): a mushroom with a flat, red top with white-spots, and a white stem growing on the ground; a red cup-shaped fungus growing on wood; a stack of green and white moldy bread slices on a plate; a microscopic, spherical grey-colored semitransparent cell, with a smaller spherical cell beside it; a microscopic view of an elongated cellular structure shaped like a microphone, attached to the larger end is a number of smaller roughly circular elements that collectively form a mass around it
இடது மேலிலிருந்து கடிகாரப் புறத்தில்:
அமேனிடா மஸ்காரினா, ஒரு பெசிடியோமைசீட்டு;
சர்கோஸ்கைஃபா காக்கினே, ஒரு அஸ்கோமைசீட்டு;
பூஞ்சைகளால் சூழப்பட்ட ரொட்டித்துண்டுகள்;
கைட்ரீடியோமைகோட்டா துறையைச் சேர்ந்த ஒரு பூஞ்சை;
ஒரு அஸ்பெர்ஜில்லஸ் கொனிடிஓஃபோர்.
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
மெய்க்கருவுயிரி (யூக்கார்யோட்டு)
தரப்படுத்தப்படாத:
ஓபிஸ்தொகோன்டா
திணை:
பூஞ்சை

(L., 1753) R.T. Moore, 1980 [1]
துணைப்பேரரசு/பிரிவு(ஃபைலம்)/துணைப்பிரிவு[2]
பிளாஸ்டோகிளாடியோமைகோடா
கைட்ரீடியோமைகோடா
குளோமெரோமைகோடா
மைக்ரோஸ்போரிடியா
நியோகாலிமாஸ்டிகோமைகோடினா

டிகார்யா (inc. டியூட்டிரோமைகோடா)

அஸ்கோமைகோடா
பெசிசோமைகோடினா
சாக்கரோமைகோடினா
டாஃப்ரினோமைகோடினா
பெஸிடியோமைகோடா
அகாரிகோமைகோடினா
புக்சினியோமைகோடினா
உஸ்டிலாகினோமைகோடினா

துணைப்பிரிவு இன்கர்டே செடிஸ்

எண்டோமாப்தோரோமைகோடினா
கிக்செல்லோமைகோடினா
மியூகோரோமைகோடினா
ஜூபேகோமைகோடினா

மிகப் பெரிய மெய்க்கருவுயிரி உயிரினக் குழுக்களில் பூஞ்சைகளும் (Fungii) (இலங்கை வழக்கு:, பூஞ்சணம், பூசணம், பங்கசு) ஒன்று. தற்போதைய பாகுபாட்டியலின் அடிப்படையில், பூஞ்சைகள் ஒரு தனி இராச்சியமாக வகைப்படுத்தப்படுகின்றன. வளமற்ற மண்ணும், தாவர, விலங்கு கழிவுகளும் இவற்றின் தாக்கத்தால் மாற்றமடைந்து, நிலத்துடன் சேர்வதால் நிலவளம் அதிகரிக்கிறது. தொடக்கத்தில் தாவர இராச்சியத்தைச் சேர்ந்ததாகக் கருதப்பட்ட பூஞ்சைகள், பின்னர் தாவரங்கள், விலங்குகள் போலத் தனிப்பெரும் உயிர் இராச்சியமாக வகைப்படுத்தப்பட்டன. பூமியில் எல்லா வகை சுற்றுச்சூழல்களிலும் பூஞ்சைகள் காணப்படுகின்றன. இவை இருண்ட, ஈரப்பசை நிரம்பிய இடங்களிலும் கனிம ஊட்டப்பொருட்கள் நிறைந்த வளர்தளங்களிலும் வளர்கின்றன. பல முக்கியமான ஒட்டுண்ணி வாழ்வை மேற்கொள்ளும் உயிரினங்கள், மற்றும் சிதை மாற்றம் செய்யும் உயிரினங்கள் பூஞ்சை இராச்சியத்தில் உள்ளன. பூஞ்சைகள் பச்சையம் அற்ற மெய்க்கருவுயிரி (யூக்காரியோட்டிக்) உயிரினங்கள். இவை தாவரங்களைப் போலச் சுவருடைய உயிரணுக்களை உடையனவாகக் காணப்பட்டாலும், இவற்றில் பச்சையம் இல்லை. இப்பூஞ்சைகளினால் ஏற்படும் வேதிவினை மாற்றங்கள், சுற்றுப்புறத்தில் மிகப்பெரிய மாற்றங்களை ஏற்படுத்துகிறது. பூஞ்சைகளைப் பற்றிய அறிவியல் பிரிவு பூஞ்சையியல் (mycology) எனப்படுகிறது.

பூஞ்சைகள் பொதுவாகக் கண்ணுக்குப் புலப்படாமல் இருக்கும். எனினும் காளான்களாக இவை விருத்தியடையும் போது கண்ணுக்குத் தென்படுகின்றன. ஏனைய நுண்ணியிர்கள் போலவே இவற்றிலும் மனிதர்களுக்குப் பயனுடையவை, பயனற்றவை, தீமையானவை என உள்ளன. கன்டிடயாசிஸ் போன்ற நோய்களுக்கு இவை காரணமாகின்றன; உணவைப் பழுதடையச் செய்கின்றன. எனினும் பெனிசிலின் போன்ற முக்கியமான நுண்ணியிர்க்கொல்லிகளை உற்பத்தி செய்யப் பயன்படுகின்றன. பூஞ்சைகள் பல தாவரங்களுடனும், வேறு உற்பத்தியாக்கிகளுடனும் ஒன்றியவாழிகளாக வாழ்கின்றன. இலைக்கன் (அல்கா-பூஞ்சை அல்லது சயனோபக்டீரியா-பூஞ்சை கூட்டணி) இதற்கு மிக முக்கியமான உதாரணமாகும். மரங்களின் வேர்களில் கனியுப்பு அகத்துறிஞ்சலுக்கு இவை ஒன்றியவாழிகளாகச் செயற்பட்டு உதவுகின்றன.

பூஞ்சைகளின் பண்புகள்[தொகு]

பூஞ்சண இழை
1- கலச்சுவர் 2- பிரிசுவர் 3- இழைமணி 4- புன்வெற்றிடம் 5- எர்கோஸ்டரோல் பளிங்கு 6- இரைபோசோம் 7- கலக் கரு 8- அகக்கலவுச் சிறுவிழை 9- இலிப்பிட்டு உடல் 10- கல மென்சவ்வு 11- ஸ்பிட்ஸென்கூர்ப்பர் (Spitzenkörper) 12- கொல்கி உபகரணம்

பூஞ்சைகள் உயிரியல் வகைப்பாட்டில் தனி இராச்சியமாகக் கருதப்படுகின்றன. முற்காலத்தில் தாவரங்களுடன் வகைப்படுத்தப்பட்டிருந்தாலும் தற்போது பூஞ்சைகளின் தனித்துவமான இயல்புகள் கண்டறியப்பட்டுள்ளதால் இவை தனி இராச்சியமான Fungiiக்குள் வகைப்படுத்தப்பட்டுள்ளன.

 • பூஞ்சைகள் பிற போசணிகளாகும். இவற்றால் சுயமாக உணவை உற்பத்தி செய்ய முடியாது.
 • பூஞ்சைகள் மெய்க்கருவுயிரிகளாகும். இவற்றின் கலங்களில் உண்மையான, மென்சவ்வால் சூழப்பட்ட கரு/கருக்கள் உள்ளன.
 • இவற்றின் கலங்களில் தாவரக் கலத்தைப் போல புன்வெற்றிடம் உள்ளது.
 • கைட்டின் மற்றும் குளுக்கான்களாலான கலச்சுவரைக் கொண்டது. (தாவரக் கலச்சுவர் அனேகமாக செல்லுலோசால் ஆனது)
 • L-லைசின் அமினோ அமிலத்தைத் தொகுக்கும் ஆற்றலுடையன.
 • ஹைப்பே (பூஞ்சண இழை) எனப்படும் நீண்ட இழை போன்ற பல கருக்களைக் கொண்ட கலங்களாலானவை
 • பூஞ்சைகள் பச்சையவுருமணிகளைக் கொண்டிருப்பதில்லை.

உடற்கூற்றியல்[தொகு]

Monochrome micrograph showing Penicillium hyphae as long, transparent, tube-like structures a few micrometres across. Conidiophores branch out laterally from the hyphae, terminating in bundles of phialides on which spherical condidiophores are arranged like beads on a string. Septa are faintly visible as dark lines crossing the hyphae.
Penicillium பூஞ்சணம் நுணுக்குக் காட்டியில்
1. பூஞ்சண இழை 2. conidiophore 3. phialide 4. தூளியம் 5. பிரிசுவர்

அனேகமான பூஞ்சைகள் பூஞ்சண இழைகளாக (hyphae) வளர்கின்றன. பூஞ்சண இழைகள் 2–10 µm விட்டமும் சில சென்டிமீட்டர்கள் நீளமுடையனவாகவும் வளர்கின்றன. பல பூஞ்சண இழைகள் ஒன்று சேர்ந்து பூஞ்சண வலையை (mycelium) ஆக்குகின்றன. பூஞ்சைகள் பூஞ்சண இழையை நீட்சியடையச் செய்வதன் மூலம் வளர்ச்சியடைகின்றன. வளர்ச்சி இழையுருப்பிரிவு மூலம் நிகழ்கின்றது. கருப்பிரிவு நிகழ்ந்து புதிய கருக்கள் உருவாக்கப்பட்டாலும், அக்கருக்களுக்கிடையிலான பிரிசுவர் (septum) முழுமையாக அவற்றைப் பிரிக்காததால் பூஞ்சைகள் அடிப்படையில் பொதுமைக் குழியக் கட்டமைப்பைக் காட்டுகின்றன. அதாவது (இனப்பெருக்கக் கட்டமைப்புக்களைத் தவிர) ஒரு பூஞ்சணத்தில் உடல் முழுவதும் ஒரே தொடர்ச்சியான குழியவுருவால் நிரப்பப்பட்டுள்ளது. இதனால் இனப்பெருக்கக் கட்டமைப்புக்களைத் தவிர வேறு வகையான இழைய வியத்தம் பூஞ்சைகளில் தென்படுவதில்லை. புதிய பூஞ்சண இழைகள் பழைய பூஞ்சண இழைகள் கிளை விடுவதன் மூலம் உருவாகின்றன. அனேகமான பூஞ்சைகள் பல்கல (உணமையில் பல்கரு) அங்கத்தவர்களென்றாலும், மதுவம் என்னும் கூட்டப் பூஞ்சைகள் தனிக்கல பூஞ்சணங்களாக உள்ளன. சில பூஞ்சணங்கள் தமது அகத்துறிஞ்சல் முறைப் போசணையை நிறைவேற்றுவதற்காக பருகிகள் (haustoria) என்னும் கட்டமைப்புக்களைக் கொண்டுள்ளன. இவற்றின் பூஞ்சண இழையினுள் பல சிறு புன்வெற்றிடங்கள் உள்ளன. இப்புன்வெற்றிடங்கள் தாவர புன்வெற்றிடம் புரியும் தொழிலையே புரிகின்றன. இதனைத் தவிர சாதாரண மெய்க்கருவுயிரி (யூக்கரியோட்டா) கலத்திலுள்ள அனைத்துப் புன்னங்கங்களும் பூஞ்சண இழைகளில் உள்ளன. இவை பொதுவாக காற்றுவாழிகள் (மதுவம் போன்றவற்றைத் தவிர்த்து) என்பதால் இவற்றில் இழைமணிகள் பல காணப்படும். பேசிடியோமைக்கோட்டா அங்கத்தவர்களின் இனப்பெருக்கக் கட்டமைப்புக்கள் நன்றாக வளர்ச்சியடைந்து வெற்றுக் கண்களுக்குப் புலப்படும் காளான் பூஞ்சணத்தை ஆக்குகின்றன. சில கைற்றிட் பூஞ்சைகளைத் தவிர ஏனைய பூஞ்சண இனங்களில் சவுக்குமுளை காணப்படுவதில்லை.

வளர்ச்சியும் உடற்றொழிலியலும்[தொகு]

அழுகிப்போகும் ஒரு குழிப்பேரிப் பழத்தின் மீது பூஞ்சை பூக்கின்றது. இங்குள்ள புகைப்படச் சட்டகங்கள் தொடர்ந்து ஆறு நாட்கள் 12 மணிநேர இடைவெளிகளோடு எடுக்கப்பட்டவை.

பூஞ்சணங்களின் உடற்கட்டமைப்பு அவற்றின் போசணை முறைக்கமைய இசைவாக்கமடைந்துள்ளது. இவை இழையுருவான கட்டமைப்பைக் கொண்டுள்ளதால் இவற்றின் மேற்பரப்பு கனவளவு விகிதம் மிகவும் உயர்வாகும்; இதனால் பூஞ்சைகள் மிக அதிகமான அகத்துறிஞ்சல் வினைத்திறனைக் கொண்டுள்ளன. அனேகமானவை அழுகல்வளரிகளாகவும், பிரிகையாக்கிகளாகவும், சில ஒட்டுண்ணிகளாகவும், சில ஒன்றிய வாழிகளாகவும் உள்ளன. அனைத்துப் பூஞ்சணங்களும் அவற்றின் உணவின் மீதே வளர்வனவாக உள்ளன. தாம் வளரும் வளர்ச்சியூடகம்/ உணவு மீது நீர்ப்பகுப்பு நொதியங்களைச் சுரக்கின்றன. இந்நொதியங்கள் அவ்வுணவு மீது தொழிற்பட்டு அவ்வுணவு நீர்ப்பகுப்படைந்து குளுக்கோசு, அமினோ அமிலம் போன்ற எளிய உறிஞ்சப்படக்கூடிய வடிவத்துக்கு மாறுவதை ஊக்குவிக்கும். இவ்வெளிய சேதனப் பதார்த்தங்களை உள்ளெடுத்து பூஞ்சணம் வளர்ச்சியடைகின்றது. பூஞ்சணங்களின் நொதியங்கள் பல்சக்கரைட்டுக்கள், புரதம், இலிப்பிட்டு என அனைத்து வகை உயிரியல் மூலக்கூறுகளிலும் செயற்படக் கூடியது. பாக்டீரியாக்களைத் தாக்கியழிக்கப் பயன்படும் நுண்ணுயிர்க் கொல்லிகளால் இவற்றை அழிக்க முடியாது. பூஞ்சணங்கள் உயர் வளர்ச்சி வீதமுடையவை. இதனாலேயே இரவோடிரவாக ஒரே நாளில் காளான் வளர்ந்திருப்பதை அவதானிக்கலாம். பூஞ்சணங்கள் தாம் உள்ளெடுக்கும் உணவின் ஒரு பாகத்தைத் தம் வளர்ச்சி, இனப்பெருக்கத்துக்குப் பயன்படுத்தி மீதியை கிளைக்கோஜன் மற்றும் எண்ணெய்ச் சிறுதுளிகளாகச் சேமிக்கின்றன.

இனப்பெருக்கம்[தொகு]

பூஞ்சணங்கள் இலிங்க முறை மற்றும் இலிங்கமில் முறையில் இனம்பெருகுகின்றன. அனேகமானவை இரு முறைகளையும் மேற்கொண்டாலும் சில இனங்கள் இலிங்க முறை இனப்பெருக்கத்தை மேற்கொள்வதில்லை.

இலிங்கமில் முறை இனப்பெருக்கம்:

பதிய வித்திகள் (conidia) மூலம் பிரதானமாக இலிங்கமில் இனப்பெருக்கம் நிகழ்கிறது. இதனைத் தவிர துண்டுபடல் இழையுருவான பூஞ்சணங்களில் நிகழும். அதாவது புற விசைகலால் பூஞ்சண வலை சேதமுறும் போது, ஒவ்வொரு துண்டமும் புதிய பூஞ்சணமாக வளர்ச்சியடையும் ஆற்றலுடையது. மதுவம் போன்ற தனிக்கல பூஞ்சணங்களில் அரும்புதல் (budding) மூலம் இலிங்கமில் இனப்பெருக்கம் நிகழும். தனியே இலிங்கமில் இனப்பெருக்கத்தை மாத்திரம் காட்டும் பூஞ்சணங்கள் டியூட்டெரோமைக்கோட்டா (Deuteromycota) எனும் பூஞ்சணக் கூட்டமாக வகைப்படுத்தப்படுகின்றன.

இலிங்க முறை இனப்பெருக்கம்:

அனேகமான பூஞ்சணங்கள் ஒடுக்கற்பிரிவுடன் கூடிய இலிங்க முறை இனப்பெருக்கத்தை மேற்கொள்கின்றன. பூஞ்சணங்களின் வாழ்க்கை வட்டத்தில் பொதுவாக ஒரு மடிய (n), இருகருக்கூட்ட அவத்தை(n+n), இருமடிய நிலைகள்(2n) உள்ளன. வெவ்வேறு பூஞ்சைக் கூட்டங்களில் வெவ்வேறு நிலை ஆதிக்கம் செலுத்துவதாக உள்ளது. கைற்றிட் பூஞ்சணத்தில் இருகருக்கூட்ட அவத்தை காணப்படுவதில்லை. காளான் இருகருக்கூட்ட அவத்தை உடைய இனப்பெருக்கக் கட்டமைப்பாக உள்ளது. இவை நுகவித்தி (Zygospore), கோணி வித்தி (ascospore), சிற்றடி வித்தி (basidospore), இயங்கு வித்தி (zoospore) என பல்வேறு இலிங்க முறை இனப்பெருக்கக் கட்டமைப்புக்களைக் காட்டுகின்றன. உதாரணமாக ஒரு காளானின் குடையின் அடிப்பாகத்தில் நுணுக்குக்காட்டியினூடாக பல சிற்றடிகளையும், சிற்றடி வித்திகளையும் அவதானிக்கலாம். (இரு கருக்கூட்ட அவத்தை என்பது கருக்கட்டலின் போது உடனடியாக கருக்கட்டலில் ஈடுபடும் புணரிக் கருக்கள் (ஒருமடியம்-n) ஒன்றிணையாமல் ஒரு கலத்தினுள்ளேயே இரண்டும் சேர்ந்திருக்கும் (n+n) நிலை) இலிங்க முறை இனப்பெருக்கத்தின் போது முதலில் நேர் மற்றும் எதிர் குல பூஞ்சண இழைகளின் இணைதல் (conjugation) நிகழும். இவற்றின் இணைதலைத் தொடர்ந்து உடனடியாகக் கருக்கட்டல் நிகழ்வதில்லை. முதலில் குழிவுருப் புணர்ச்சி இடம்பெற்று இரு கருக்கூட்ட அவத்தை ஆரம்பமாகும். அதன் முடிவிலேயே கருப்புணர்ச்சி இடம்பெறும்.

பூஞ்சைகளின் வகைபாடு[தொகு]

யூனிகோன்டா  

அமீபோசோவா

  ஆபிஸ்தகோன்டா  
   
   

அனிமேலியா

கொயேனோசோவா

நியூக்ளியரீட்ஸ்

ரோசெல்லிடா

  பூஞ்சை  

மைக்ரோஸ்போரிடியா

கைட்ரீடியோமைகோடா

நியோகாலிமாஸ்டிகோமைகோடா

பிளாஸ்டோகிளாடியோமைகோடா

ஜூபேகோமைகோடினா

கிக்செல்லோமைகோடினா

என்டோமாப்தோரோமைகோடினா

மியூகோரோமைகோடினா

குளோமெரோமைகோடா

  டிக்கார்யா  

அஸ்கோமைகோடா

பெஸிடியோமைகோடா

பூஞ்சணங்களின் பிரதான கூட்டங்கள்[தொகு]

பூஞ்சணங்கள் அவை ஆக்கும் இலிங்க இனப்பெருக்கக் கட்டமைப்புக்க்களின் அடிப்படையிலேயே வகைப்படுத்தப்படுகின்றன. பின்வருவன பிரதான பூஞ்சண கணங்களாகும்:

 • கைற்றிடோ மைக்கோட்டா (Chytridiomycota): இவை இயங்குவித்திகளை ஆக்கும் பூஞ்சணங்களாகும். இவ்வித்திகளில் சவுக்குமுளை உள்ளதால் இவை நீரினுள் அசையும் திறன் கொண்டவையாக உள்ளன. பொதுவாக கைற்றிட்டுக்கள் நீர்வாழ்க்கைக்குரியனவாக உள்ளன. இவற்றில் சந்ததிப் பரிவிருத்தி உள்ளதுடன், இருமடிய, ஒருமடிய இரு நிலைகளும் சம ஆதிக்கத்துடன் உள்ளன. இவற்றில் இருகருக்கூட்ட அவத்தை காணப்படுவதில்லை. இவற்றில் கிட்டத்தட்ட 1000 இனங்கள் அறியப்பட்டுள்ளன. இவை இருமடிய இயங்கு வித்தி மூலம் இலிங்கமில் முறை இனப்பெருக்கத்தையும், ஒருமடிய இயங்கு வித்தி மூலம் இலிங்க முறை இனப்பெருக்கத்தையும் மேற்கொள்கின்றன. இக்கூட்டமே அறியப்பட்ட பூஞ்சணக் கூட்டங்களுள் கூர்ப்பில் ஆதியானதாக உள்ளது.

உ-ம்: Allomyces

 • ஸைகோ மைக்கோட்டா (Zygomycota): இருமடிய நுகவித்தியை ஆக்கும் பூஞ்சைகள் இக்கூட்டத்தினுள் வகைப்படுத்தப்படுகின்றன. இவற்றின் வாழ்க்கை வட்டத்தில் ஒருமடிய, இரு கருக்கூட்ட அவத்தை (Dikaryon stage) மற்றும் இருமடிய ஆகிய மூன்று நிலைகளும் இருந்தாலும், ஒருமடிய நிலையே ஆதிக்கமான நிலையாக உள்ளது. கிட்டத்தட்ட 1050 இனங்கள் இக்கூட்டத்தினுள் உள்ளடக்கப்பட்டுள்ளன. பாணில் வளரும் பாண் பூஞ்சணம் இவ்வகையைச் சார்ந்ததாகும். இவற்றில் கருக்களிடையே பிரிசுவர் காணப்படுவதில்லை. உ-ம்: Rhizopus, Pilobus
 • குளோமெரோ மைக்கோட்டா (Glomeromycota): இலிங்க முறை இனப்பெருக்கத்தைக் காட்டுவதில்லை. இவையே தாவரங்களின் வேரில் ஒன்றியவாழிகளாக வளரும் வேர்ப்பூஞ்சணங்களாகும். கிட்டத்தட்ட 150 இனங்கள் அறியப்பட்டுள்ளன.
 • அஸ்கோ மைக்கோட்டா (Ascomycota): இலிங்க முறை இனப்பெருக்கத்தின் போது கோணி வித்திகளை உருவாக்கும் பூஞ்சணங்கள் இக்கணத்தினுள் உள்ளடக்கப்படுகின்றன. கோணி (ascus) என்னும் கட்டமைப்புக்குள் இவ்வித்திகள் உருவாக்கப்படுகின்றன. இலிங்கமில் முறை இனப்பெருக்கத்தின் போது தூளிய வித்திகளை (conidio spores) உருவாக்குகின்றன. கிட்டத்தட்ட 45000 இனங்கள் அறியப்பட்டுள்ளன.

உ-ம்:Saccharomyces, Kluyveromyces, Pichia, Candida

 • பேசிடியோ மைக்கோட்டா (Basidiomycota): இலிங்க முறை இனப்பெருக்கத்தின் போது சிற்றடி வித்திகளை உருவாக்கும் பூஞ்சணங்கள். இவை பொதுவாக காளான் என்னும் வெற்றுக்கண்ணுக்குத் தென்படக்கூடிய கட்டமைப்பை ஆக்குகின்றன. கிட்டத்தட்ட 22000 இனங்கள் அறியப்பட்டுள்ளன. இவற்றின் வாழ்க்கை வட்டத்தில் இருகருக்கூட்ட அவத்தை ஆதிக்கத்துடன் இருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.

உ-ம்: Ustilago maydis, Malassezia, Cryptococcus neoformans

சூழலியல்[தொகு]

பூஞ்சைகள் புவியிலுள்ள அனைத்து வகையான சூழல்த்தொகுதிகளிலும் காணப்படுகின்றன. பக்டீரியாக்களும் பூஞ்சைகளுமே உயிரியல்த் தொகுதிகளில் முக்கியமான பிரிகையாக்கிகளாகும். எனவே இவை மீண்டும் சூழலுக்குக் கனியுப்புக்கள் சென்றடைவதை உறுதிப்படுத்துகின்றன. எனவே பூஞ்சைகள் அழிக்கப்பட்டால் புவியில் சூழலின் நிலைப்புத் தன்மை சீர்குலைந்து விடும்.

ஒன்றியவாழ்வு[தொகு]

பூஞ்சைகள் ஆர்க்கியாவைத் தவிர்ந்த மற்றைய அனைத்து இராச்சியங்களைச் சேர்ந்த உயிரினங்களுடனும் ஒன்றியவாழிகளாகச் செயற்படுவதாக அறியப்பட்டுள்ளது. இவ்வாறான நிலமையில் இரு உயிரினங்களும் பயனடையும் வகையில் அவற்றுக்கிடையில் இடைத்தொடர்புகள் காணப்படும்.

தாவரங்களுடன்[தொகு]

தாவரங்களின் வேர்களில் சில வகைப் பூஞ்சைகள் (நோய்த்தொற்று ஏற்படுத்துபவையைத் தவிர்த்து) வளர்ந்து வேர்ப் பூஞ்சணம் (மைகொரிஸா-Mycorrhiza) எனும் கட்டமைப்பை ஏற்படுத்துகின்றன. இவை பொதுவாக பெரும் மரங்களில் காணப்படும். மைகொரிஸா நீர் மற்றும் கனியுப்பு அகத்துறிஞ்சலின் வினைத்திறனை அதிகரிக்கின்றது. இதனால் மைகொரிஸா கட்டமைப்புடைய தாவரம் நன்மையடைகின்றது. பூஞ்சைகள் தாமுள்ள தாவர வேரிலிருந்து தமக்குத் தேவையான உணவைப் பெற்றுக்கொள்கின்றன. வேர் மயிர்கள் குறைவான தாவரங்களில் மைகொரிஸா மூலமே அனேகமான நீர் மற்றும் கனியுப்புத் தேவைகள் நிறைவு செய்யப்படுகின்றன. முக்கியமாக பொஸ்பேட்டு அகத்துறிஞ்சலுக்கு இக்கட்டமைப்புகள் உதவுவதாக அறியப்பட்டுள்ளது. அறியப்பட்டுள்ள தாவரங்களில் கிட்டத்தட்ட 90% ஆனவை மைகொரிஸா மூலம் பூஞ்சைகளுடன் ஒன்றிய வாழிகளாகச் செயற்படுகின்றன. இத்தொடர்புக்கான ஆதாரங்கள் கடந்த 400 மில்லியன் வருடங்களாக உள்ளன.

தாவர இழையத்துக்குள் வாழும் ஒன்றியவாழி பூஞ்சை

சில பூஞ்சைகள் தாவரங்களின் இலைகள் மற்றும் தண்டினுள் ஒன்றியவாழிகளாக வாழ்கின்றன. இப்பூஞ்சைகள் சுரக்கும் நச்சுப்பதார்த்தங்கள் தாவரவுண்ணிகளிடமிருந்து இப்பூஞ்சைகள் வாழும் தாவரத்துக்குப் பாதுகாப்பளிக்கின்றன. பூஞ்சைகள் தாவரங்களிடமிருந்து உணவு மற்றும் உறையுள்ளைப் பெறுகின்றன. இத்தொடர்பை சில வகை புற்களில் அவதானிக்கலாம்.

அல்கா மற்றும் சயனோபக்டீரியாவுடன்[தொகு]

லைக்கன்

பூஞ்சையானது அல்கா அல்லது சயனோபக்டீரியாவுடன் ஏற்படுத்திக் கொள்ளும் ஒன்றியவாழிக் கூட்டணியே லைக்கன் எனப்படும். லைக்கன்கள் ஏனைய உயிரினங்கள் வாழ முடியாத பாறைகளிலும் வாழும் ஆற்றலுள்ளன. இது இவ்வொன்றியவாழிக் கூட்டணியாலேயே சாத்தியமானது. பூஞ்சை அல்காக்கு/சயனோபக்டீரியாக்கு பாதுகாப்பு, நீர் மற்றும் கனியுப்புத் தக்கவைப்பை வழங்குவதுடன் அல்கா/சயனோபக்டீரியா உணவை உற்பத்தி செய்து பூஞ்சைக்குரிய பங்கை வழங்குகின்றது. லைக்கன்கள் புவியில் மண் தோன்றுவதில் முக்கிய பங்களிப்பு செய்துள்ளன. 17500 தொடக்கம் 20000 வரையான பூஞ்சையினங்கள் (20% பூஞ்சைகள்) லைக்கன்களைத் தோற்றுவிக்கின்றன.

பூஞ்சைகளின் பயன்பாடுகள்[தொகு]

பொருளாதார ரீதியிலும் மருத்துவ ரீதியிலும் இவை பல பயன்பாடுகளைக் கொண்டுள்ளன. காளான்களும், பெனிசிலியமும், மதுவமும் எமக்கு நன்றாகப் பழக்கப்பட்ட பூஞ்சைகளாகும். பெனிசிலியம் மருந்து தயாரிப்பிலும், மதுவம் மற்றும் காளான் உணவுற்பத்தியிலும் பயன்படுகின்றன.

மருந்துற்பத்தி[தொகு]

பெனிசிலின் போன்ற நுண்ணியிர்க்கொல்லிகளின் தயாரிப்பில் பூஞ்சைகள் பயன்படுத்தப்படுகின்றன. இயற்கையாக பெனிசிலியம் பூஞ்சையிலிருந்து பெறப்படும் பெனிசிலின் சிறிதளவான பக்டீரியாக்களையே எதிர்க்கும் ஆற்றல் கொண்டது. எனவே இயற்கையாகப் பெறப்படும் பெனிசிலினை மாற்றத்துக்குட்படுத்தி பலம் கூடிய பெனிசிலின் வகைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. Penicillium griseofulvum எனும் பூஞ்சை இனத்திலிருந்து கிரீசியோஃபல்வின் எனும் நுண்ணியிர்க்கொல்லி உற்பத்தி செய்யப்படுகின்றது. கொலஸ்திரோல் சுரப்பை நிரோதிக்கும் மருந்துகளை உற்பத்தி செய்யவும் பூஞ்சைகள் பயன்படுகின்றன.

உணவுத் தயாரிப்பில்[தொகு]

தனிக்கல பூஞ்சை வகையான மதுவம் பாண் தயாரிப்பிலும், மதுபானத் தயாரிப்பிலும் பயன்படுத்தப்படுகின்றது. Saccharomyces எனும் மதுவத்தின் நொதித்தல் தொழிற்பாட்டின் மூலம் மதுபானங்கள் தயாரிக்கப்படுகின்றன.

படத்தொகுப்பு[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

 1. Moore RT. (1980). "Taxonomic proposals for the classification of marine yeasts and other yeast-like fungi including the smuts". Botanica Marine 23: 361–373. 
 2. The classification system presented here is based on the 2007 phylogenetic study by Hibbett et al.

வெளி இணைப்புகள்[தொகு]

அருஞ்சொற்பொருள்[தொகு]

 • இராச்சியம் - Kingdom
 • புல்லுருவி, ஒட்டுண்ணி - Parasite
 • சிதை மாற்றம் செய்யும் உயிரினங்கள், பிரிகையாக்கிகள் - Decomposers
"https://ta.wikipedia.org/w/index.php?title=பூஞ்சை&oldid=3222182" இலிருந்து மீள்விக்கப்பட்டது