உள்ளடக்கத்துக்குச் செல்

ஊட்டக்கூறு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உயிரியல், தொழில்நுட்ப ஊட்டக்கூறுகள்

ஊட்டக்கூறு (Nutrient) என்பது உயிரினங்கள் உயிர் வாழ்வதற்கும், அவற்றின் வளர்ச்சிக்கும் தேவையான ஒரு வகை வேதிப்பொருள் ஆகும். உயிரினங்கள் தமக்குத் தேவையான ஆற்றலைப் பெற்றுக் கொள்வதற்காக நிகழ்த்தும் வளர்சிதைமாற்ற செயல்முறையில் பயன்படுத்த, தமது சூழலில் இருந்து பெற்றுக் கொள்ளும் வேதிப்பொருட்கள் எனக் கொள்ளலாம்[1]. இவ்வகையான ஊட்டக்கூறுகளின் தொகுப்பு போசாக்கு என அழைக்கப்படும். பல நேரங்களில் ஊட்டக்கூறு (Nutrient), போசாக்கு (Nutrition) இரண்டுமே ஊட்டச்சத்து என்ற சொல்லினால் பொது வழக்கில் அழைக்கப்படுகின்றது.

உயிரினங்களில் இழையங்கள் கட்டமைக்கப்படவும், அவற்றை தேவைக்கேற்ப புதுப்பித்துக் கொள்ளவும், உயிரினங்களில் நிகழும் அனைத்து உடற் தொழிற்பாடுகளுக்கும் தேவையான ஆற்றலைப் பெறுவதற்கும் வெவ்வேறு வகையான ஊட்டக்கூறுகள் அவசியமாகின்றது. வேறுபட்ட உயிரினங்கள் தமக்குத் தேவையான ஊட்டக்கூறுகளை வெவ்வேறு வழிமுறைகளில் பெற்றுக் கொள்கின்றன. தாவரங்கள் பொதுவாக தமது வேர்களினூடாக, மண்ணில் அல்லது நீரில் இருந்து தமது ஊட்டக்கூறுகளைப் பெற்றுக் கொள்கின்றன. விலங்குகள் உட்கொள்ளல் செயல் மூலம் தமது ஊட்டக்கூறுகளைப் பெற்றுக் கொள்கின்றன.

ஊட்டக்கூறின் பிரிவுகள்[தொகு]

ஊட்டச்சத்தில் இருக்கும் ஊட்டக்கூறுகளில் ஆறு முக்கியமான பிரிவுகள் உள்ளன: காபோவைதரேட்டுக்கள், புரதங்கள், கொழுப்புக்கள், தாதுக்கள், உயிர்ச்சத்துக்கள், மற்றும் நீர். இவற்றுடன் உயிர் வளியேற்ற எதிர்ப்பொருள் (Antioxidants), மற்றும் தாவர வேதிப்பொருட்களும் (Phytochemicals) ஊட்டக்கூறின் பகுதிகளாகக் கொள்ளப்படுகின்றன.

காபோவைதரேட்டுக்கள் அல்லது ஒற்றைச்சர்க்கரை, இரட்டைச்சர்க்கரை போன்ற அதன் எளிய மூலக்கூறுகள், புரதங்கள் அல்லது அவற்றின் எளிய மூலக்கூறுகளான அமினோ அமிலங்கள், கொழுப்புக்கள் அல்லது அவற்றின் எளிய மூலக்கூறுகளான கொழுப்பமிலங்கள், உயிர்ச்சத்துக்கள் என்பன கரிம ஊட்டக்கூறுகளாகவும், ஏனைய தாதுக்களும், நீரும் கனிம ஊட்டக்கூறுகளாகவும் இருக்கின்றன[2].

மேற்கோள்கள்[தொகு]

  1. Whitney, Elanor and Sharon Rolfes. 2005. Understanding Nutrition, 10th edition, p 6. Thomson-Wadsworth.
  2. FRANCES SIZER; ELLIE WHITNEY (12 November 2007). NUTRITION: CONCEPTS AND CONTROVERSIES. Cengage Learning. pp. 26–. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-495-39065-7. பார்க்கப்பட்ட நாள் 12 October 2010.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஊட்டக்கூறு&oldid=2224038" இலிருந்து மீள்விக்கப்பட்டது