உயிரினம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்


உயிரினங்கள்
பட்டியல்கள்
உயிரினங்களை வகைப்படுத்தல்
விலங்குகள் பட்டியல்
பூச்சிகள் பட்டியல்
மீன் வகைகள் பட்டியல்
பறவைகள் பட்டியல்
ஊர்வன பட்டியல்
பாலூட்டிகள் பட்டியல்
முதுகெலும்பற்றவை பட்டியல்

தொகு
நண்டுகள் - உயிரினத்துக்கு ஓர் எடுத்துக்காட்டு

உயிரியியலிலும், சூழ்நிலையியல் அல்லது இயற்கை அறிவியலிலும் (Ecology), ஓர் உயிரினம் என்பது நிலம், நீர், காற்றில் காணப்படும் உயிர் வாழும் பண்புடைய அனைத்து வகை நுண்ணுயிர்கள், தாவரங்கள், பூச்சிகள், விலங்குகள் போன்றவற்றைக் குறிக்கும். வாழும் உயிர்த் தொகுதிகளனைத்தும் உயிரினங்களாகும். இதுவரை 'உயிர்' என்ற சொல்லுக்கான முறையான வரைவிலக்கணம் வழங்கப்படவில்லை. எனினும் அவற்றுக்கிடையில் காணப்படும் சில பொதுவான பண்புகளைக் கொண்டு அவற்றை உயிரற்ற பொருட்களிலிருந்து இலகுவாக வேறுபடுத்திக் கொள்ள முடியும். உயிரினங்களின் மிக அடிப்படையான பண்புகள் அனுசேபமும் இனப்பெருக்கமுமாகும். இவ்விரு அடிப்படை இயல்புகளைக் காட்டாதவை உயிரினமாகக் கருதப்படுவதில்லை. உதாரணமாக வைரஸ் என்பதை ஒரு மூலக்கூறாகவே அறிவியலாளர்கள் கருதுவர். வைரஸ்களால் சுயமாக அனுசேபத்திலோ இனப்பெருக்கத்திலோ ஈடுபட முடியாது.

உயிரினங்கள் ஒருகல உயிரினமாகவோ பல்கல உயிரினமாகவோ காணப்படலாம். பல்கல உயிரியின் ஒவ்வொரு தனிக்கலமும் மற்றைய கலங்களில் தங்கியுள்ளன. ஒவ்வொரு கலத்தாலும் தனித்துச் செயற்பட முடியாது.

உயிரினங்களை கலத்தில் கருவுள்ள மெய்க்கருவுயிரிகளாகவும் கலத்தில் கருவற்ற நிலைக்கருவிலிகளாகவும் பாகுபடுத்தலாம். ஆர்க்கியா மற்றும் பக்டீரியா ஆகிய பேரிராச்சியங்கள் நிலைக்கருவிலிகளுக்குள் அடங்குவதுடன் மெய்க்கருவுயிரி தனியான பேரிராச்சியமாக உள்ளது. மனிதன் உட்பட விலங்குகள், தாவரங்கள், புரட்டோசோவாக்கள், பங்கசுக்கள், அல்காக்கள் என்பன மெய்க்கருவுயிரிகளாகும்.

பல உயிரினங்களில் காணப்படும் பொதுப் பண்புகள்[தொகு]

நிலைக்கருவிலிகளுக்கு உதாரணமாக எஸ்சீரியா கொலி பக்றீரியா
மெய்க்கருவுயிரிக்கு உதாரணமாக ஒரு காளான்

கட்டமைப்பு[தொகு]

வேதியியல்[தொகு]

உயிரினங்கள் அனைத்தும் மிகவும் சிக்கலான இரசாயனத் தொகுதிகளாகும். இவை தப்பிப்பிழைப்பதையும் இனப்பெருக்கத்தையும் நோக்கமாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளன. புவியிலுள்ள அனைத்து உயிரினங்களும் கார்பனையும் நீரையும் மைய இரசாயனக் கட்டமைப்புப் பொருட்களாகக் கொண்டு கூர்ப்படைந்துள்ளன. கார்பன் மற்றும் நீரின் இரசாயன இயல்புகள் இதற்குக் காரணமாய் அமைந்துள்ளன. கார்பனே ஐதரசனுக்கு அடுத்த படியாக மிக அதிகளவான சேர்வைகளை உருவாக்கும் தனிமமாகும். கார்பனால் ஒற்றை, இரட்டை, மற்றும் முப்பிணைப்புகளை உருவாக்க முடியும். அத்தோடு கார்பன் குறைந்த சார்பணுத்திணிவையும் சார்பளவில் அதிகமாகக் கிடைக்கும் தனிமமாகும். எனவே தான் புவியில் கார்பனை மையமாக வைத்து உயிரினங்கள் கூர்ப்படைந்துள்ளன.

நீரின் இரசாயன இயல்புகளும் புவியில் உயிரினங்களின் கூர்ப்பில் பெரும் பங்கு வகித்துள்ளது. உயிரினங்களின் நிலவுகைக்கு உதவிய நீரின் பண்புகளான உயர் தன்வெப்பக் கொள்ளளவு, உயர் உருகல், ஆவியாதல் வெப்பம், ஒட்டற்பண்பு, மயிர்த்துளைமை, மேற்பரப்பிளுவை போன்ற பண்புகளுக்கு நீரில் காணப்படும் ஐதரசன் பிணைப்பு காரணமாகும். நீர் அயனாக்கும் சக்தியையும் கொண்டுள்ளது. எனவே தான் நீரை நேரடியாக உட்கொள்ளாத பாலைவன உயிரினங்களின் உடல்களில் கூட நீர் கணிசமான சதவீதத்தைப் பிடித்துள்ளது.

மாமூலக்கூறுகள்[தொகு]

உயிரினங்களை புரதங்கள், காபோவைதரேட்டுக்கள், இலிப்பிட்டுக்கள் மற்றும் கருவமிலங்கள் ஆகிய நான்கு பிரதான மாமூலக்கூறுகள் (பெரிய மூலக்கூறுகள்) ஆக்கின்றன. தலைமுறையுரிமைத் தகவல்களைச் சேமிப்பதற்கும (டி.என்.ஏயில்) அத்தகவல்களை ஈடுபடுத்துவற்கும் (ஆர்.என்.ஏயின் மூலம்) கருவமிலங்கள் பயன்படுகின்றன.

புரதங்கள் உயிரினத்தில் பல்வேறு செயற்பாடுகளைப் புரிகின்றன.

  1. நொதியங்களாகத் தொழிற்பட்டு உயிர்வேதியியல் தாக்கங்களை ஊக்கப்படுத்துகின்றன.
  2. கட்டமைப்பு ரீதியான பலத்தை வழங்குகின்றன.
  3. கலச்செயற்பாடுகளைக் கட்டுப்படுத்துகின்றன
  4. ஹோர்மோன்களாகச் செயற்படுகின்றன.
  5. நுண்ணுயிர்களுக்கு எதிராகத் தொழிற்பட்டு, உடலுக்குப் பாதுகாப்பு வழங்கும் பிறபொருளெதிரியாகச் செயற்படுகின்றன.

இலிப்பிட்டுகள் கலமென்சவ்வுகளை ஆக்கவும் சக்தி வழங்கவும் பயன்படுகின்றன. பொஸ்போலிப்பிட்டுகளே கலமென்சவ்வை ஆக்கும் பிரதான கூறாகும். பொஸ்போலிப்பிட்டு மென்சவ்வு சில வகை (கலத்துக்குத் தேவைப்படும்) பொருட்களை மாத்திரமே உள்ளனுப்பும் ஆற்றலுடையது. சில விலங்குகளிலும் தாவரங்களிலும் சக்தி சேமிக்கும் கூறாகவும் இலிப்பிட்டுக்கள் உள்ளன.

காபோவைதரேற்றுகளே உயிரினங்களில் சக்தி வழங்கலுக்குப் பயன்படும் பிரதான மாமூலக்கூறுகளாகும்.

பௌதிகக் கட்டமைப்பு[தொகு]

உயிரினங்களின் அடிப்படைத் தொழிற்பாட்டலகு கலமாகும். ஒருகல உயிரினங்களில் இதுவே முதன்மையானதும் இறுதியானதுமான கட்டமைப்பலகாகும். எனினும் பலகல உயிரினங்களில் கலங்கள் இழையங்களாக, அங்கங்களாக, அங்கத் தொகுதிகளாக இறுதியில் ஒரு பல்கல உயிரினமாக ஒன்று சேருகின்றன. மனிதரில் தனித்தனியான உடலியக்கங்களைக் கொண்ட, அதேசமயம் ஒன்றுடன் ஒன்று தொடர்புபட்டு இயங்கும் பல உடல் தொகுதிகள் காணப்படுகின்றன. பல்கல உயிரினத்தில் உள்ள அனைத்து கலங்களும் ஒரே மாதிரியான டி.என்.ஏ க்களைக் கொண்டிருந்தாலும், ஒவ்வொரு கலமும் தனக்கென ஒதுக்கப்பட்ட தொழிலைச் செய்கின்றது.

கலம்[தொகு]

கலக்கொள்கை 1839ஆம் ஆண்டு ஸிச்சுவான் மற்றும் ஸ்க்லெய்டன் ஆகியோரால் முன்மொழியப்பட்டது. 'எல்லா உயிரினங்களும் கலங்களால் ஆக்கப்பட்டுள்ளன', 'கலமே உயிரின் அடிப்படையலகு' என்பனவே இக்கொள்கையின் அடிப்படை வசனங்களாகும். கலத்தை விடச் சிறிய கலப் புன்னகங்கள் காணப்பட்டாலும் அவற்றால் சுயமாக இனப்பெருக்கம் செய்ய முடியாது. எனவே கலம் என்பதே உயிருள்ளவற்றின் பண்புகளைக் காட்டும் மிகச் சிறிய அலகாகும். எல்லாக் கலங்களிலும் டி.என்.ஏ மற்றும் ஆர்.என்.ஏ உள்ளன. கலம் இரட்டை பொஸ்போலிப்பிட்டு மென்சவ்வால் சூழப்பட்டிருக்கும்.

ஆயுட்காலம்[தொகு]

ஒரு உயிரினத்தின் அடிப்படை அளவுருக்களில் அதனுடைய ஆயுட்காலமும் ஒன்றாகும். சில உயிரினங்கள் குறுகிய காலம் உயிர் வாழ்வதைப் போன்று சில தாவரங்களும் பூஞ்சைகளும் ஆயிரக்கணக்கான வருடங்கள் உயிர் வாழக் கூடியனவாக உள்ளன.

பரிணாமம்[தொகு]

பால் இனம்[தொகு]

தற்போதுள்ள மெய்க்கருவுயிரிகளிடையே பாலியல் இனப்பெருக்கம் பரவலாகக் காணப்படுகின்றது. இது மெய்க்கருவுயிரிகளின் அடிப்படை இயல்புகளில் ஒன்றாகும்.

வெளி இணைப்புகள்[தொகு]

உயிரியல் விநோதம்

உயிரின அடுக்கு வரைபடம்

"https://ta.wikipedia.org/w/index.php?title=உயிரினம்&oldid=1962918" இருந்து மீள்விக்கப்பட்டது