புரதம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
மயோகுளோபினின் முப்பரிமாண அமைப்பின் வரைபடம். நிறமூட்டப்பட்டுள்ளவை ஆல்ஃபா திருகுசுழல்களாகும்.

புரதம் (Protein) என்பது அதிக மூலக்கூறு எடையுள்ள, அமினோ அமிலங்கள் எனப்படும் எளிய மூலக்கூறுகளால் இணைக்கப்பட்ட சிக்கலான கரிமச் சேர்மமாகும். அனைத்து உயிரணுக்கள் மற்றும் தீ நுண்மங்களின் கட்டமைப்பு மற்றும் செயல்பாட்டுக்குப் புரதம் இன்றியமையாததாகும். பல புரதங்கள் வளர்சிதைமாற்றங்களில் உதவும் நொதிகளாகவோ நொதிகளின் துணையலகுகளாகவோ விளங்குகின்றன. வேறு சில புரதங்கள் கட்டமைப்பு மற்றும் இயக்க ரீதியான பணிகளைச் செய்கின்றன. எடுத்துக்காட்டாக, உயிரணுகளின் வடிவத்திற்குக் காரணமான கலசட்டகத்தை (Cytoskeleton) உருவாக்குவது புரதங்கள் ஆகும். அக்ரின் (actin), மயோசின் (myosin) எனப்படும் தசைகளில் காணப்படும் புரதங்கள் தசை அசைவில் பங்கு கொள்கின்றன. நோய் எதிர்ப்பாற்றல் முறைமையில் பங்கெடுக்கும் பிறபொருளெதிரிகள், ஈந்தணைவிகளின் சேமிப்பு மற்றும் உயிரணுக்களுக்கிடையிலான சமிக்ஞைகளைக் கடத்தல் போன்றவை புரதங்களின் இதர பணிகளாகும்.

இரு வகை அமிலங்கள்[தொகு]

புரத மூலக்கூறுகள் கார்பன், ஹைட்ரஜன், ஆக்ஸிஜன், நைட்ரஜன் ஆகியவற்றைக் கொண்டுள்ளன. இவற்றில் கந்தகமும் உண்டு. உயிரிகளில் உயிரணு மென்சவ்வு, உரோமங்கள், நகங்கள், மற்றும் தசைகளைத் தோற்றுவிப்பதில் இவற்றிற்கு முக்கிய பங்குண்டு. பல புரதங்கள் நொதிகளாகச் செயல்புரிகின்றன. அவற்றிற்குச் செயல்புரதங்கள் என்று பெயர். புரத மூலக்கூறுகள், அமினோ அமிலங்களால் ஆனவை. கிளைசின், அலனின், செரின், வாலின், லியூசின், புரோலின் ஆகியவற்றைப் போன்று 20 வகையான அமினோ அமிலங்கள் உள்ளன. இவை அவசியமான, அவசியமற்ற அமினோ அமிலங்கள் என இருவகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன.

அமில உற்பத்தி[தொகு]

சில அமினோ அமிலங்கள் உயிரனங்களால் உற்பத்தி செய்யவியலாத அமினோ அமிலங்களாகும். அவை உணவு மூலமாக மட்டுமே உள்ளெடுக்கப்பட வேண்டியிருப்பதால், அவை ‘அத்தியாவசிய அமினோ அமிலங்கள்' (essential amino acids) என அழைக்கப்படுகின்றன. ஆர்ஜினின், வாலின், ஹிஸ்டிடின், ஐசோலியூசின், லியூசின், லைசின், மெத்தியோனின், பினைல்அலனின், திரியோனின், டிரிப்டோபான் போன்றவை அவசியமான அமினோ அமிலங்களாகும். உட்கொள்ளப்படும் புரதங்களில் இவை காணப்படும்போது, உணவு செரிமானத்தின் போது புரதங்கள் உடைக்கப்பட்டு, இவ்வகை அமினோ அமிலங்கள் உயிரினங்களால் பெற்றுக் கொள்ளப்படுகின்றன. அவசியமற்ற அமினோ அமிலங்கள் உணவில் கலந்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. ஏனெனில் இவற்றை நமது உடல் தயாரித்துக் கொள்ளும்.

அமிலங்கள் அடுக்கு முறை[தொகு]

பல அமினோ அமிலங்கள் பெப்டைடு இணைப்புகளால் இணைவதால் ஓர் புரதம் அல்லது பல்புரதக்கூறு (பாலிபெப்டைடு) உருவாகும். இவ்வகை நீண்ட சங்கிலித் தொடர் அமைப்பிற்குப் புரதத்தின் முதல்நிலை அமைப்பு (primary structure) என்று பெயர். பல புரதங்கள், சிக்கலான அமைப்பில் இரண்டு அல்லது மூன்றாம் நிலைப் புரதங்களாக அமைந்திருக்கும். நான்காம் நிலையிலும் புரதங்கள் உண்டு. இந்நிலை பல வேதிய இணைப்புகளால் ஏற்படும். ஓர் குறிப்பிட்ட தொழிலுக்கான புரதம் அதற்குரிய முறையில் சிக்கலான அமைப்புக் கொண்டிருக்கும். ஓர் புரதத்தில் அமினோ அமிலங்களின் அடுக்கு முறையும் மூலக்கூற்றின் அமைப்பும் மரபுப்பண்பு அடிப்படையிலானது. எனவே தான் மரபுத்தொகை (ஜீனோம்கள்) எனப்படும் மரபணு அமைப்புத் தன்மைகள் இன்று முக்கியத்துவம் பெற்றுள்ளன.

உடல் வளர்ச்சியில் புரதம்[தொகு]

புரதச்சத்து உடல் வளர்ச்சிக்கு மிகவும் முக்கியமானதாகும். இறைச்சி வகைகள், மீன், முட்டை, பால் மற்றும் தானிய வகைகளில் புரதச்சத்து நிறைய இருக்கிறது. இப்புரதச்சத்து உடலில் புதிய திசுக்களைக் கட்டமைப்பதற்கும், அழிந்த திசுக்களுக்கு ஈடாக புதிய திசுக்களை உருவாக்கவும் பயன்படுகிறது. உயிரினங்களில் காணப்படும் நொதிகள் (enzymes), வளரூக்கிகள் (hormones), ‘ஈமோகுளோபின்’ எனும் இரத்தப் புரதம் போன்ற உடற் தொழிற்பாடுகளுக்கு அவசியமான கரிமச் சேர்மங்கள் யாவும் புரதங்களாலானவையாகும். நகம், முடி வளர்வதற்கும் புரதச்சத்து மிகவும் தேவை.

புரதம் அடங்கியிருப்பதை சோதித்தல்[தொகு]

பரிசோதிக்கப்பட வேண்டிய உணவுப்பொருள் தூளாக்கப்பட்டு அல்லது நன்கு நசிக்கப்பட்டு பரிசோதனைக் குழாயில் சிறிதளவு நீரிட்டு தொங்கல் கரைசலை தயாரிக்க வேண்டும். இப்பரிசோதனைக் குழாயில் சிறிதளவு பையூரேட்டுக் கரைசலை (சோடியம் ஐதரொக்சைட்டு + செப்புசல்பேற்று) இட்டுக் கலக்கவும்.

கரைசல் ஊதா நிறமாக மாறுமாயின் புரதமெனக் கண்டறியலாம்.

கொடுக்கப்பட்டுள்ள மாதிரியில் புரதம் உள்ளதா எனக் கண்டறிதல்[தொகு]

நோக்கம்: கொடுக்கப்பட்ட மாதிரியில் புரதம் உள்ளதா எனக் கண்டறிதல்

1. பையூரட் சோதனை

தேவையானப் பொருட்கள்: மாதிரி திரவம், சோதனைக் குழாய்கள், 40% சோடியம் ஹைட்ராக்சைடு, 1% காப்பர் சல்பேட் கரைசல்

செய்முறை: ஒரு சோதனைக் குழாயில் 3 மிலி மாதிரியினை எடுத்துகொண்டு அதனுடன் 1 மிலி 40% சோடியம் ஹைட்ராக்சைடு சேர்த்து நன்கு குலுக்க வேண்டும். காரத்தன்மையாக்கப்பட்ட இப்புரத கலவையுடன் 2 சொட்டு 1% காப்பர் சல்பேட் சேர்க்கப்பட்டது.

கண்டறிந்தவை: ஊத அல்லது இளம் சிவப்பு வண்ணம் தோன்றியது (அதிக அளவு 1% காப்பர் சல்பேட் சேர்க்கப்பட்டால் இவ்வண்ணம் மறைந்து விடும்)

முடிவு: மாதிரியில் புரதம் உள்ளது கண்டறியப்பட்டது.

2. நின்ஹைட்ரின் சோதனை

தேவையானப் பொருட்கள்: மாதிரி திரவம், சோதனைக் குழாய்கள், நின்ஹைட்ரின்

செய்முறை: ஒரு சோதனைக் குழாயில் 3 மிலி மாதிரியினை எடுத்துக் கொள்ளப்பட்டு அதனுடன் 0.5 மிலி நின்ஹைட்ரின் திரவம் சேர்க்கப்பட்டு இரண்டு நிமிடத்திற்கு கொதிக்கவைக்கப்பட்டு பின்னர் குளிர்விக்கப்பட்டது. கண்டறிந்தவை: மாதிரி கரைசலானது நீலவண்ணமாக காணப்பட்டது

முடிவு: மாதிரியில் புரதம் உள்ளது கண்டறியப்பட்டது

3. பையூரட் வளைய சோதனை

தேவையானப் பொருட்கள்: மாதிரி திரவம், சோதனைக் குழாய்கள், 20% சோடியம் ஹைட்ராக்சைடு, 1% காப்பர் சல்பேட்டு

செய்முறை: ஒரு சோதனைக் குழாயில் 3 மிலி மாதிரி எடுத்துக் கொள்ளப்பட்டு அதனுடன் 1 மிலி 40% சோடியம் ஹைட்ராக்சைடு கரைசல் சேர்க்கப்பட்டது. பின்னர் பிப்பெட்டின் உதவியுடன் 1 மிலி 1% காப்பர் சல்பேட் திரவத்தினை சோதனைக் குழாயின் உள்ள திரவத்தின் மீது இரு திரவங்களும் கலந்துவிடாதபடி மெதுவாக விடப்பட்டது. உள்ளங் கைகளுக்கிடையே சோதனைக் குழாயினை வைத்து மெதுவாக சுழற்ற வேண்டும்.

கண்டறிந்தவை: இளஞ்சிவப்பு அல்லது ஊதாவளையம் இரு திரவங்களுக்கிடையே தோன்றியது

முடிவு: மாதிரியில் புரதம் உள்ளது கண்டறியப்பட்டது

மேற்கூறிய சோதனைகள் மூலம் கொடுக்கப்பட்ட மாதிரியில் புரதம் உள்ளது கண்டறியப்பட்டது.

புரதத் தேவை[தொகு]

இந்திய மருத்துவ ஆராய்ச்சிக்கழகத்தின் (ICMR) உணவு நிபுணர் குழுவின் கருத்துப்படியும் உலக சுகாதார அமைப்பின் (WHO) நிலைப்படியும் ஒரு தனிநபருக்கு ஒரு நாளில் தேவைப்படும் புரதத்தின் அளவானது ஒவ்வொரு கிலோகிராம் உடல் எடைக்கும் ஒரு கிராம் ஆகும். உணவில் புரதம் குறைந்தால் மராசுமஸ், குவாஷியார்கர் போன்ற குறைபாட்டு நோய்கள் தோன்றும். மராஸ்மசில் குழந்தையின் உடல் எடை குறையும். கடுமையான வயிற்றுப்போக்கு ஏற்படும். உடல் தசைகள் மெலியும். எலும்பின் மீது தோல் மூடியுள்ளது போன்ற நிலை தோன்றும். குவாஷியார்கரில் தசைகள் மெலிந்து முகம், கால்களில் வீக்கம் ஏற்படும். வயிறு உப்பியிருக்கும்.57 கிலோ உடல் எடை கொண்ட 16-18 வயதுடைய ஒரு ஆணுக்கு ஒரு நாளைக்கு தேவைப்படும் புரதத்தின் அளவு 78 கிராம் ஆகும். அப்படியிருக்க 50 கிலோ எடைகொண்ட அேத வயதை சேர்ந்த பெண்ணிற்கு ஒரு நாளைக்கு 63 கிராம் புரதம் தேவைப்படுகிறது. கற்பிணி பெண்களுக்கு 65 கிராம் புரதம் தேவைப்படுகிறது. பால் கொடுக்கும் காலங்களில் (குழந்தை பிறந்த 6 மாத காலம்வரை) பெண்களுக்கு ஒரு நாளைக்கு 75 கிராம் புரதம் தேவைப்படும்.

குருதியில் உள்ள புரதம்[தொகு]

நாரீனி (fibrinogen, ஃவைபிரினோஜன்) என்னும் புரதப்பொருள் குருதியில் உள்ள குருதி நீர்மத்தில் உள்ளது. அடிபட்டதாலோ அல்லது வேறு காரணங்களிலாலோ குருதிக்குழாயில் புண் ஏற்பட்டால், குருதி (இரத்தம்) வெளியேறாமல் தடுப்பதற்குப் பயன்படும் குருதிநார்களால் (fibrin) ஆன வலைபோன்ற அமைப்பை உண்டாக்கும் பொருள். இந்த குருதிநாரால் ஆன வலையில், வெளியேறும் குருதியில் உள்ள நுண்திப்பிகள் (platelets) வந்து அடைப்புண்டு குருதி வெளியேறுவதைத் தடுக்கும் அடைப்பாக மாறுகின்றது. எனவே புண்ணிலிருந்து இரத்தம் வெளியேறுவதைத் தடுக்கப் பயன்படும் முதன்மையான பொருட்களில் இந்த நாரீனி ஒன்று.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=புரதம்&oldid=2095547" இருந்து மீள்விக்கப்பட்டது