முகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
முகம்
Face
தோலை அகற்றிய முகத்தின் கீழ்பகுதி குறுக்குவெட்டு அம்சம், முகத்தின் தசைகளைக் காட்டுகிறது.
விளக்கங்கள்
அடையாளங்காட்டிகள்
இலத்தீன்பேசீசு, பேசியா
MeSHD005145
TA98A01.1.00.006
TA2112
FMA24728
உடற்கூற்றியல்

முகம் (Face) என்பது ஒரு விலங்கின் உடலில் அமைந்துள்ள தலைப் பகுதியின் முன்புறமாகும். கண்கள், மூக்கு மற்றும் வாய் ஆகியவை இங்கு இடம்பெற்றுள்ளன. விலங்குகள் முகத்தின் வழியே பல உணர்ச்சிகளை வெளிப்படுத்துகின்றன.[1][2] மனிதனை அடையாளம் காண்பதற்கு முகம் மிகவும் முக்கியமானதாகும். முகத்தில் வடுக்கள் அல்லது வளர்ச்சி குறைபாடுகள் போன்ற பாதிப்புகள் இருந்தால் அது உள்ளத்தை மோசமாக பாதிக்கிறது.[1]

அமைப்பு[தொகு]

மனித தலையின் முன்புறம் முகம் என்று அழைக்கப்படுகிறது. பல தனித்துவமான பகுதிகள் முகத்தில் உள்ளடங்கியுள்ளன.[3] இதன் முக்கிய அம்சங்கள்:

 • நெற்றி: மனிதர்களில் தலை முடிக்குக் கீழும் புருவத்துக்கு மேலும் உள்ள பகுதி நெற்றியாகும். பக்கவாட்டில் இருபுறமும் தட்டையான பகுதிகள் மற்றும் காதுகள், கீழ்ப்புறத்தில் புருவங்கள் நெற்றிக்கு எல்லைகளாக உள்ளன. விலங்குகளில் கண்களுக்கு மேலே உள்ள பகுதியை நெற்றி எனலாம்.
 • கண்கள்: உணர்திறன் நரம்பு மண்டலத்தின் ஒரு பகுதியாக விளங்கும் கண்கள் முகத்தில் நெற்றியின் சுற்றுப்பாதையில் அமைந்துள்ளன. இவை புலப்படும் ஒளிக்கு ஏற்ப வினைபுரிகின்றன. மனிதர்கள் உலகத்தைப் பார்த்தல், சமநிலையில் வைத்திருத்தல் உள்ளிட்ட பல்வேறு நோக்கங்களுக்காக காட்சித் தகவலைப் பயன்படுத்த உதவுகின்றன. கண் புருவம், கண் இமைகள் போன்றவற்றால் பாதுகாக்கப்படுகின்றன.
 • மூக்கு: தனித்துவமான மனித மூக்கு வடிவம் முகத்தின் மிகவும் நீண்டு செல்லும் ஒரு பகுதியாகும். நாசித்துளைகள் மற்றும் மூக்கிடைச்சுவர் போன்ற் முக்கிய பகுதிகள் மூக்கில் உள்ளன. சுவாச மண்டலத்தின் முதல் உறுப்பாக மூக்கு கருதப்படுகிறது. மோப்பம் அல்லது நுகரும் திறனுக்கு உரிய முக்கிய உறுப்பாகவும் மூக்கு செயல்படுகிறது. மூக்கு எலும்புகள் மற்றும் மூக்கின் குருத்தெலும்புகளால் மூக்கின் வடிவம் தீர்மானிக்கப்படுகிறது. மூக்கிடைச் சுவர் நாசி குழியை இரண்டாகப் பிரித்து மூக்கு துவாரங்களை உருவாக்குகிறது. சராசரியாக ஆணின் மூக்கு பெண்ணின் மூக்கை விட பெரியதாகும்.
 • கன்னங்கள்: கண்களுக்கு கீழே, மூக்கு மற்றும் இடது, வலது காதுகளுக்கு இடையில் முகத்தின் பகுதியை உருவாக்குகின்றன. மேல் தாடை மற்றும் தாடை ஆகியவற்றை உள்ளடக்கி உச்ச நிலையாக முகவாய்க் கட்டையாக தோற்றமளிக்கிறது. கன்னங்களின் உட்புறத்தில் பற்கள் மற்றும் ஈறுகளுக்கு இடையே உள்ள பகுதி வாயறை என அழைக்கப்படுகிறது. வாயறை வாயின் ஒரு பகுதியை உருவாக்குகிறது.
 • வாய்: உணவுப் பாதையின் முதல் பகுதியாக வாய் முகத்தில் அமைந்துள்ளது. வாய் உணவைப் பெற்று உமிழ்நீரை உற்பத்தி செய்கிறது.[4] வாயறை, வாய்வழிக் குழி என வாய் இரண்டு பகுதிகளைக் கொண்டுள்ளது. செரிமான அமைப்பின் தொடக்கம் என்பதோடு கூடுதலாக, தகவல்தொடர்பில் குறிப்பிடத்தக்க பங்கு வகிக்கிறது. குரலின் முதன்மை அம்சங்கள் தொண்டையில் உற்பத்தியாகும்போது, பேச்சில் உள்ள ஒலிகளின் வரம்பை உருவாக்க வாயின் கூருகளான நாக்கு, உதடுகள் மற்றும் தாடை ஆகியவை தேவைப்படுகின்றன.

முகம் மனித உடலின் மிகவும் உணர்திறன் வாய்ந்த ஒரு பகுதியாகும். தொடுதல், வெப்பநிலை, வாசனை, சுவை, செவிப்புலன், இயக்கம், பசி அல்லது காட்சி தூண்டுதல்கள் போன்ற பல மனித உணர்வுகளால் மூளை தூண்டப்படும்போது முகத்தின் வெளிப்பாடு மாறக்கூடும்.[5]

வடிவ மாறுபாடு[தொகு]

மூக்கின் வடிவத்தை வரையறுப்பதில் மூக்கு குருத்தெலும்புகள் முக்கியமானவை..
முகபாவனைகளில் ஈடுபடும் போது முகத்தின் தசைகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன.
உடற்கூறியலில் முகத்தின் எலும்புக்கூடு

முகம் ஒரு நபரை சிறப்பாக வேறுபடுத்தும் அம்சமாகும். பியூசிபார்ம் எனப்படும் நீண்டு ஒவ்வொரு முனையிலும் குறுகிய மனித மூளையின் சிறப்புப் பகுதிகள் முக அங்கீகாரத்தை செயல்படுத்துகின்றன. இவை சேதமடையும் போது, நெருங்கிய குடும்ப உறுப்பினர்களின் முகங்களைக் கூட அடையாளம் காண இயலாது. கண்கள், அல்லது அவற்றின் பாகங்கள் போன்ற குறிப்பிட்ட உறுப்புகளின் வடிவமானது, தனிநபர்களை தனித்துவமாக அடையாளம் காணப் பயன்படும் உயிரளவையியல் முறைகளில் பயன்படுத்தப்படுகிறது.

முகத்தின் வடிவம் மண்டை ஓட்டின் எலும்பு-கட்டமைப்பால் பாதிக்கப்படுகிறது. ஒவ்வொரு முகமும் உள்ளுறுப்பு மண்டலத்தின் முக எலும்புக்கூடு மற்றும் முகுளக்கபால எலும்புகளில் இருக்கும் உடற்கூறியல் மாறுபாட்டின் மூலம் தனித்தன்மை வாய்ந்ததாக உள்ளது. முக்கியமாக மேல்தாடை எலும்புகள், கீழ்தாடை எலும்புகள், மூக்கு எலும்பு மற்றும் கன்னத்தின் வளைவெலும்பு போன்ற எலும்புகள் முகத்தை வடிவமைப்பதில் ஈடுபட்டுள்ள எலும்புகளாகும். கொழுப்பு, முடி மற்றும் தோல் போன்ற பல்வேறு மென்மையான திசுக்களும் இச்செயல்பாட்டில் முக்கியமானவையாகும். இவற்றின் நிறம் மாறுபடலாம்.[1]

இருவரின் முகங்கள் பெரும்பாலும் ஒரே தோற்றம் கொண்டிருப்பதில்லை. ஆதலால்தான் அடையாள அட்டைகளில் முகத்தின் புகைப்படங்களே பயன்படுத்தப்படுகின்றன. 'முகு' என்ற சொல் 'விருப்பம்' என்ற பொருளைத் தருவது ஆகும். ஒருவர் மனதில் தோன்றுகின்ற விருப்பமோ வெறுப்போ உடனே அது முகத்தில் வெளிப்படுகிறது. அதனால், உள்ளத்தின் நிலையைக் காட்டும் உறுப்பு என்றும் முகம் குறிக்கப்படுகிறது. எனவே, முக வேறுபாடு முக்கியமான உணர்ச்சி வெளிப்பாடு ஆகும்.

காலப்போக்கில் முகம் மாறுபடுகிறது. பிறந்த குழந்தைகள், குழந்தைகளின் முகங்கள் மாறுவது பொதுவான அம்சமாகும். வாய் சார்ந்த கொழுப்பு திண்டுகள் காலப்போக்கில் மறைந்து விடுவதை இதற்கு உதாரணமாகக் கொள்ளலாம். பாலூட்டும் போது குழந்தைகளின் கன்னங்களை நிலைநிறுத்துவது இதன் பங்காகும். வாய் சார்ந்த கொழுப்பு திண்டுகள் பெரும்பாலும் அளவில் குறைந்துவிடும். அதே வேளையில், எலும்புகளின் முக்கியத்துவம் வயதுக்கு ஏற்ப வளரும் மற்றும் வளரும்போது மேலும் அதிகரிக்கும். [1]

முகத்தின் வடிவம் - முகச் சமச்சீர் போன்ற அம்சங்கள் அழகை நிர்ணயம் செய்வதில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. ஒரே மாதிரியான இரட்டையர்களின் முகங்கள் காட்டும் அதிக ஒற்றுமை, ஒரு நபரின் முகத்தில் தோன்றும் மாறுபாடுகளுக்கு மரபணுக்கள் ஒரு முக்கிய காரணியாக இருக்கின்றன என்பதைக் கூறுகிறது. பெரும்பாலான முக மாறுபாடுகள் மரபணு ரீதியாக தீர்மானிக்கப்படுகிறது என்ற முடிவுக்கு செல்லவும் இது உதவுகிறது.[6]

முகத்தின் வடிவம் மற்றும் முக அம்சங்களை நிர்ணயிக்கும் மரபணுக்கள் மற்றும் மரபணு பகுதிகளை ஆய்வுகள் அடையாளம் கண்டுள்ளன. 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற ஓர் ஆய்வில், குளிர்ந்த காலநிலையை கொழுப்பு விநியோகம் மூலம் ஈடுகட்டிக் கொள்ள உதடு தடிமனுடன் தொடர்புடைய மரபணுவின் பதிப்பு தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கலாம் என்று அந்த ஆய்வு கூறுகிறது. பண்டைய நடு கற்கால மனிதர்களிலிருந்து நவீன மனிதர்களான பூர்வீக அமெரிக்கர்களின் முக மாறுபாடு இந்த ஆய்வுக்கு ஆதாரமாக இருந்தது.[7][8][9] உயிரியல் தரவுத்தளங்கள் முகத்தின் தோற்ற வகைமைகள் மற்றும் மரபணுக்களுக்கு இடையே உள்ள தொடர்புகளை ஒருங்கிணைக்கவும் கண்டறியவும் பயன்படுத்தப்படுகின்றன. [10][11]

மனித முகவளர்ச்சி, ஏக்கல்
ஒரு மனிதனின் முகம்
ஒரு பெண்ணின் முகம்
இருபால் கலந்த திருநங்கைகளின் முகம்

செயல்பாடு[தொகு]

உணர்ச்சி வெளிப்பாடு[தொகு]

உணர்வுகளை உணர்வுபூர்வமாக அறிந்தோ அல்லது அறியாமலோ வெளிப்படுத்த முகங்கள் அவசியம். ஒரு முகச்சுருக்கம் பொதுவாக மறுப்பைக் குறிக்கிறது; புன்னகை என்பது பொதுவாக ஒருவர் மகிழ்ச்சியாக இருப்பதைக் குறிக்கிறது. மற்றொருவரின் முகத்தில் உள்ள உணர்ச்சிகளைப் படிக்க முயல்வது திறன் மேம்பாட்டுக்கான ஓர் அடிப்படையாகும். இதன் மூலம் ஒரு நபரின் எதிர்வினைகளை விளக்கும் திறன் மற்றும் அடுத்தடுத்த நடத்தைகளின் நிகழ்தகவைக் கணிக்கும் திறன் போன்றவை வளர்கிறது. ஒரு ஆய்வு பலவகை உணர்ச்சி அடையாளங் காணல் சோதனையை பயன்படுத்தி உணர்ச்சியை எப்படி அளவிடுவது என்பதை தீர்மானிக்க முயற்சித்தது.[12] இந்த ஆராய்ச்சியானது முகத்தில் உள்ள உணர்ச்சிகளைப் படிக்க தினமும் பலர் செய்வதை அளவிடும் கருவியைப் பயன்படுத்துவதை நோக்கமாகக் கொண்டதாகும்.

முகத்தின் தசைகள் உணர்ச்சிகளின் வெளிப்பாட்டில் முக்கிய பங்கு வகிக்கின்றன. வெவ்வேறு நபர்களிடையே இவை வேறுபடுகின்றன. வெளிப்பாடு மற்றும் முக அம்சங்களில் கூடுதல் பன்முகத்தன்மையையும் உருவாக்குகின்றன. [13]

வாய்த் தசை இழைமக் கற்றைகள் மற்றும் கன்னத்தின் வளைவெலும்பு தசைகளில் தோன்றும் மாறுபாடுகள்.

ஒரு புன்னகை உண்மையானதா அல்லது போலியானதா என்பதை தீர்மானிப்பதில் மக்கள் ஒப்பீட்டளவில் சிறந்தவர்களாகத் திகழ்கின்றனர். உண்மையான மற்றும் போலியான புன்னகையை கண்டறிவதற்காக நடைபெற்ற ஓர் ஆய்வில் இளைஞர்களை விட முதியவர்கள் சரியாக வேருபடுத்தி கண்டுபிடிக்கின்றனர் என்ற முடிவு எட்டப்பட்டது.[14] அனுபவம் மற்றும் வயதைக் கொண்டு, பல்வேறு வயதினரிடையே உண்மையான உணர்ச்சிகளை உணருவதில் நாம் மிகவும் துல்லியமாக இருக்கிறோம் என்று இம்முடிவு அறிவுறுத்துகிறது.

உணர்தல் மற்றும் அங்கீகரித்தல்[தொகு]

பியூசிபார்ம் முகப் பகுதி போன்ற மூளையின் முகத்தை உணரும் வழிமுறைகள் செவ்வாய் கிரகத்தில் முகக் கற்பனை வடிவமான இந்த புகழ்பெற்ற பாறை உருவாக்கம்

முகம் என்பது வெறும் முக அம்சங்களின் தொகுப்பு அல்ல, மாறாக அதன் வடிவத்தின் அடிப்படையில் அது அர்த்தமுள்ள ஒன்று என்று உளவியலாளர்கள் கருதுகின்றனர். ஒரு படத்தை அதன் தனிப்பட்ட பகுதிகளால் அல்ல, முழுவதுமாக பார்க்க வேண்டும் என்ற உளவியல் கோட்பாட்டுடன் இது ஒத்துப்போகிறது. ஒரு சமூக இனமாக இருப்பதால் இயற்கையான விளைவாகத் தோன்றும் பரிணாம வளர்ச்சியின் தொடர்ச்சியாக மக்கள் முகங்களுக்கு அதிகம் எதிர்வினையாற்றுவதை ஏற்றுக்கொண்டனர் என்று கேரி எல் ஆலன் தெரிவிக்கிறார். முகங்களை அடையாளம் கண்டுகொள்வதன் நோக்கமானது "பெற்றோர்-குழந்தைகளின் ஈர்ப்பில்" உள்ளது என்றும் ஆலன் கூறுகிறார். பெற்றோர்களும் குழந்தைகளும் ஒருவரையொருவர் அடையாளம் கண்டுணர குறைவான முயற்சியே போதுமானதாக உள்ளது. இச்செயல்பாடு விரைவாகவும் நிகழ்கிறது. இத்தகைய அங்கீகாரம் தோல்வியடைந்தால் பெற்றோர் தங்கள் சந்ததியை கைவிடும் நிலையும் தோன்றலாம். எனவே முகங்களுக்கு எதிர்வினையாற்றும்போது இத்தகைய வாய்ப்பு குறைகிறது.[15] பரிணாமக் கோட்பாடுகளை உளவியலுடன் இணைக்கும் உளவியல் கண்ணோட்டத்தை ஆலனின் ஆய்வுகள் எடுத்துக் கொள்கின்றன.

உயிரியல் கண்ணோட்டம்[தொகு]

மூளையின் சில பகுதிகள் முகங்களை வாசித்து சிறப்பாக வினையாற்றுகின்றன என்று ஆராய்ச்சி சுட்டிக்காட்டுகிறது. பியூசிபார்ம் எனப்படும் நீள் வடிவ முகப்பகுதிக்குள் உள்ள மூளை மடிப்புகள் முகங்களை கண்டவுடன் செயல்படுத்தப்படுகின்றன. கூச்ச சுபாவமுள்ள மற்றும் இயல்பான சமூக மக்களுக்கு இடையில் செயல்படுத்துவதிலும் வித்தியாசங்கள் காணப்படுகிறது. "அந்நியர்களின் முகங்களைப் பார்க்கும்போது, இயல்பானவர்களை காட்டிலும் கூச்ச சுபாவமுள்ளவர்கள் மூளை மடிப்புகளில் கணிசமாக குறைவான செயல்பாட்டை வெளிப்படுத்தினர்" என்று ஒரு ஆய்வு உறுதிப்படுத்தியது.[16] கவர்ச்சிகரமானதாகக் கருதப்படும் முகத்திற்கு குறிப்பிட்ட பகுதிகள் அதிகம் பதிலளிக்கின்றன என்று மற்றொரு ஆய்வில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. பரவலாக விரிந்துள்ள நரம்பியல் வலையமைப்புடன் சம்பந்தப்பட்ட புலனுணர்வு, முடிவெடுத்தல் போன்றவற்றை "முக அழகு நினைவுக்குக் கொண்டுவருகிறது.

சமூகமும் பண்பாடும்[தொகு]

அழகுக்கான அறுவை சிகிச்சை[தொகு]

முக அம்சங்களின் தோற்றத்தை மாற்றிக் கொள்வதற்காக ஒப்பனை அறுவை சிகிச்சை பயன்படுத்தப்படுகிறது.[17] முகத்தில் காயம் மற்றும் தோல் நோய்கள் போன்ற நிகழ்வுகளிலும் தாடைகள் மற்றும் முகம் தொடர்பான அறுவை சிகிச்சை பயன்படுத்தப்படுகிறது. கடுமையாக முகம் சிதைக்கப்பட்ட நபர்களும் சமீபத்தில் முழு முகம் மாற்று அறுவை சிகிச்சை மற்றும் தோல் மற்றும் தசை திசுக்களின் பகுதி மாற்று அறுவை சிகிச்சைகளை போன்ற சிகிச்சைகளைப் பெற்றுள்ளனர்.[18]

கேலிச்சித்திரம்[தொகு]

கேலிச்சித்திரம் என்பது ஓவியம், பென்சில் கோடு அல்லது பிற கலை ஓவியங்கள் மூலம் அதன் பொருளின் அம்சங்களை எளிமைப்படுத்தப்பட்ட அல்லது மிகைப்படுத்தப்பட்ட முறையில் காட்டும் ஒரு படம் ஆகும். உச்சரிக்கப்படும் பகுதியுடன் இணைந்து ஒரு முகத்தை எளிதாக அடையாளம் காண கேலிச்சித்திரம் பெரும்பாலும் முக அம்சங்களை பெரிதுபடுத்துகிறது. -உதாரணமாக, ஒசாமா பின்லேடனின் கேலிச்சித்திரம் அவரது முகத்தின் முடி மற்றும் மூக்கில் கவனம் செலுத்துகிறது. ஜார்ஜ் டபிள்யூ. புஷ்ஷின் கேலிச்சித்திரம் அவரது காதுகளை யானையின் அளவுக்கு பெரிதாக்குகிறது. இயே லெனோவின் கேலிச்சித்திரம் அவரது தலை மற்றும் கன்னத்தை பிரதிபலிக்கிறது. மற்றும் மிக் ஜாகரின் கேலிச்சித்திரம் அவரது உதடுகளை பெரிதாக்கி காட்டுகிறது. மறக்கமுடியாத அம்சங்களை மிகைப்படுத்துவது கேலிச்சித்திர வடிவில் வழங்கும்போது மற்றவர்களை அடையாளம் காண மக்களுக்கு உதவுகிறது.[19]

உருவகம்[தொகு]

உள் அமைப்பைக் கொண்ட ஒரு அமைப்பின் முன்னோக்கிய பகுதி அல்லது உலகை எதிர்கொள்ளும் ஒரு கட்டிடத்தின் முகப்பு போன்ற நீட்டிப்பு செய்யப்பட்ட பகுதியான எதுவும் பொதுவாக அதன் "முகம்" என்று கருதப்படுகிறது. உதாரணமாக, ஒரு மக்கள் தொடர்பு அல்லது பத்திரிகை அதிகாரி அவர் அல்லது அவள் பிரதிநிதித்துவப்படுத்தும் அமைப்பின் "முகம்" என்று அழைக்கப்படலாம். சமூகவியல் சூழலில், சமூகத்தில், குறிப்பாக சீன சமுதாயத்தில், நற்பெயர் அல்லது நிலைப்பாட்டை குறிக்கும் உருவகமாக "முகம்" என்பது பயன்படுத்தப்படுகிறது.[20] வெற்றி பெறக்கூடிய அல்லது இழக்கக்கூடிய வளமாகவும் முகம் பேசப்படுகிறது. தனித்துவத்துடனான தொடர்பு காரணமாக, அநாமதேய நபர் சில நேரங்களில் "முகமற்றவர்" என்று குறிப்பிடப்படுகிறார்.

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

உடல் உறுப்புக்கள்

மேற்கோள்கள்[தொகு]

 1. 1.0 1.1 1.2 1.3 Moore, Keith L.; Dalley, Arthur F.; Agur, Anne M. R. (2010). Moore's clinical anatomy. United States of America: Lippincott Williams & Wilkins. பக். 843–980. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-60547-652-0. 
 2. "Year of Discovery, Faceless and Brainless Fish". 2011-12-29. Archived from the original on 2014-10-06. பார்க்கப்பட்ட நாள் December 11, 2013.
 3. Face | Define Face at Dictionary.com. Dictionary.reference.com. Retrieved on 2011-04-29.
 4. Maton, Anthea; Jean Hopkins; Charles William McLaughlin; Susan Johnson; Maryanna Quon Warner; David LaHart; Jill D. Wright (1993). Human Biology and Health. Englewood Cliffs, New Jersey, USA: Prentice Hall. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-13-981176-1. https://archive.org/details/humanbiologyheal00scho. 
 5. Anatomy of the Face and Head Underlying Facial Expression பரணிடப்பட்டது 2007-11-29 at the வந்தவழி இயந்திரம். Face-and-emotion.com. Retrieved on 2011-04-29.
 6. Crouch, Daniel J. M.; Winney, Bruce; Koppen, Willem P.; Christmas, William J.; Hutnik, Katarzyna; Day, Tammy; Meena, Devendra; Boumertit, Abdelhamid et al. (23 January 2018). "Genetics of the human face: Identification of large-effect single gene variants" (in en). Proceedings of the National Academy of Sciences 115 (4): E676–E685. doi:10.1073/pnas.1708207114. பன்னாட்டுத் தர தொடர் எண்:0027-8424. பப்மெட்:29301965. 
 7. "Genes for face shape identified" (in en). phys.org. https://phys.org/news/2021-02-genes.html. 
 8. "Genes for face shape identified | Scienmag: Latest Science and Health News". ScienceMag. https://scienmag.com/genes-for-face-shape-identified/. 
 9. Bonfante, Betty; Faux, Pierre; Navarro, Nicolas; Mendoza-Revilla, Javier; Dubied, Morgane; Montillot, Charlotte; Wentworth, Emma; Poloni, Lauriane et al. (1 February 2021). "A GWAS in Latin Americans identifies novel face shape loci, implicating VPS13B and a Denisovan introgressed region in facial variation" (in en). Science Advances 7 (6): eabc6160. doi:10.1126/sciadv.abc6160. பன்னாட்டுத் தர தொடர் எண்:2375-2548. பப்மெட்:33547071. Bibcode: 2021SciA....7.6160B. 
 10. Hassani-Pak, Keywan; Rawlings, Christopher (1 March 2017). "Knowledge Discovery in Biological Databases for Revealing Candidate Genes Linked to Complex Phenotypes" (in en). Journal of Integrative Bioinformatics 14 (1). doi:10.1515/jib-2016-0002. பன்னாட்டுத் தர தொடர் எண்:1613-4516. பப்மெட்:28609292. 
 11. "Defining a Face: What Can DNA Phenotyping Really Tell Us About An Unknown Sample?" (in en). National Institute of Justice. https://nij.ojp.gov/topics/articles/defining-face-what-can-dna-phenotyping-really-tell-us-about-unknown-sample. பார்த்த நாள்: 4 April 2021. "Based on Walsh’s phenotype analysis, King determined that one of the earliest paintings of Richard III, the 1510 “Arched Framed Portrait,” best matched the genetic information. “We were still dealing with categories [of color] because we’re not at the quantitative level yet,” Walsh said of her determination of Richard III’s hair and eye color. “[King] wanted something physical to see, and that’s what spurred me to move toward the quantitative so strongly. Because I could always say to someone, ‘blue’ or ‘blonde,’ and they would say, ‘I need to see this physically.’ So that is what I’m working on now. I want to produce that result.” Walsh has gathered DNA phenotype data from 2,000 Irish, Greek and U.S. individuals and is currently collecting data from 3,000 additional individuals from those same countries in order to create a phenotype-genotype database and prediction model. For forensic purposes, she would like to be able to start with a “blank person” and with a sample of DNA, determine the actual eye, hair and skin pigmentation.". 
 12. Multimodal Emotion Recognition Test (MERT) | Swiss Center for Affective Sciences பரணிடப்பட்டது 2011-09-03 at the வந்தவழி இயந்திரம். Affective-sciences.org. Retrieved on 2011-04-29.
 13. Braus, Hermann (1921). Anatomie des Menschen: ein Lehrbuch für Studierende und Ärzte. பக். 777. https://archive.org/details/b32846228_0001. 
 14. Murphy, N. A.; Lehrfeld, J. M.; Isaacowitz, D. M. (2010). "Recognition of posed and spontaneous dynamic smiles in young and older adults". Psychology and Aging 25 (4): 811–821. doi:10.1037/a0019888. பப்மெட்:20718538. 
 15. Allen, Gary L.; Peterson, Mary A.; Rhodes, Gillian (2006). "Review: Seeking a Common Gestalt Approach to the Perception of Faces, Objects, and Scenes". American Journal of Psychology 119 (2): 311–19. doi:10.2307/20445341. https://archive.org/details/sim_american-journal-of-psychology_summer-2006_119_2/page/311. 
 16. Beaton, E. A., Schmidt, L. A., Schulkin, J., Antony, M. M., Swinson, R. P. & Hall, G. B. (2009). "Different fusiform activity to stranger and personally familiar faces in shy and social adults". Social Neuroscience 4 (4): 308–316. doi:10.1080/17470910902801021. பப்மெட்:19322727. 
 17. Plastic and Cosmetic Surgery: MedlinePlus. Nlm.nih.gov. Retrieved on 2011-04-29.
 18. Face Transplant Surgery at Brigham and Women's Hospital
 19. information about caricatures பரணிடப்பட்டது 2007-08-26 at the வந்தவழி இயந்திரம். Edu.dudley.gov.uk. Retrieved on 2011-04-29.
 20. Ho, David Yau-fai (January 1976). "On the Concept of Face". American Journal of Sociology 81 (4): 867–84. doi:10.1086/226145. https://archive.org/details/sim_american-journal-of-sociology_1976-01_81_4/page/867. : "The concept of face is, of course, Chinese in origin".
"https://ta.wikipedia.org/w/index.php?title=முகம்&oldid=3848866" இலிருந்து மீள்விக்கப்பட்டது