மரபுக்குறியீடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
செய்திகாவும் ஆர்.என்.ஏ மூலக்கூறு ஒன்றின் பகுதியாக இருக்கும் முக்குறியங்களின் (Codon) தொடர். ஒவ்வொரு முக்குறியமும், ஒரு அமினோ அமிலத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் மூன்று நியூக்கிளியோட்டைடுக்களைக் கொண்டிருக்கின்றது. நியூக்கிளியோட்டைடுக்கள், அவற்றிலிருக்கும் வெவ்வேறு நைதரசன் கொண்ட தாங்கிகளின் (nitrogenous bases) முதல் எழுத்துக்களான A, U, G, C என்ற எழுத்துக்களால் அடையாளப்படுத்தப்படுகின்றன. செய்திகாவும் ஆர்.என்.ஏ யிலிருக்கும் U (யூராசில்) க்குப் பதிலாக டி.என்.ஏ யில் T (தைமின்) காணப்படும்.

மரபுக்குறியீடு (Genetic code) என்பது உயிரணுக்களில் காணப்படும் மரபியல் கூறுகளான டி.என்.ஏ யில், அல்லது ஆர்.என்.ஏ யில் காணப்படும், உயிரினங்களுக்குத் தேவையான புரதங்களைக் கட்டமைக்கும் அமினோ அமிலங்களை மொழிபெயர்ப்புச் செய்யத் தேவையான தகவல்கள் உடைய நியூக்கிளியோட்டைடுக்களின் வரிசையைக் கொண்ட தொகுப்பாகும். இதுவே உயிரினங்களில் இருக்கும், மரபியலுக்கு அடிப்படையான உயிர்வேதியியல் தகவலாகும்[1]. இந்த மரபுக்குறியீட்டில் இருக்கும் நியூக்கிளியோட்டைடு வரிசையில், ஒவ்வொரு அமினோ அமிலத்தையும் குறியீடு செய்யக்கூடிய, தொடர்ந்து வரும் மூன்று நியூக்கிளியோட்டைடுக்கள் இணைந்து ஒரு முக்குறியம் (Codon) எனப்படும். குறிப்பிட்ட ஒழுங்கில் வரிசையாக்கப்பட்டுள்ள முக்குறியங்கள் குறியாக்க வரிசை (Coding sequence) எனப்படும். இந்த குறியாக்க வரிசையில், புரதங்களை ஆக்குவதற்கான தகவல்கள் ஒழுங்குபடுத்தப்பட்டிருக்கும். ஒரு புரதத்தையோ அல்லது அதன் ஒரு பகுதியையோ உருவாக்க உதவும் குறியாக்க வரிசையைக் கொண்டுள்ள டி.என்.ஏ யின் குறிப்பிட்ட பகுதியினாலான அலகே மரபணு ஆகும்.

டி.என்.ஏ. யில் இருக்கும் இத்தகைய குறியாக்க வரிசைகள், அதே ஒழுங்கில் செய்திகாவும் ஆர்.என்.ஏ. க்களில் (Messenger RNA) பிரதியெடுக்கப்பட்டு, இரைபோசோமிற்கு எடுத்துச் செல்லப்படும். அங்கே இடம்மாற்றும் ஆர்.என்.ஏ. க்களால் (Transfer RNA) காவி வரப்படும், தொடர்புடைய அமினோ அமிலங்கள் இனங்காணப்பட்டு, குறிப்பிட்ட ஒழுங்கில் வரிசைப்படுத்தப்பட்டு, ஒன்றுடனொன்று இணைக்கப்படும். இந்த இனங்காணும் செயல்முறைக்கு இடம்மாற்றும் ஆர்.என்.ஏ க்களில் உள்ள எதிர் முக்குறியங்களே (anti codon) உதவும். இவ்வாறு இணைக்கப்படும்போது, அவை அமினோ அமில வரிசை (Amino acid sequence) எனப்படும். இவ்வாறு வெவ்வேறு ஒழுங்கில் இணைக்கப்படும் அமினோ அமில வரிசைகள் வெவ்வேறு புரதங்களை ஆக்க உதவும்.

மேற்கோள்கள்[தொகு]

  1. The Free Dictionary
"https://ta.wikipedia.org/w/index.php?title=மரபுக்குறியீடு&oldid=3739231" இலிருந்து மீள்விக்கப்பட்டது