உள்ளடக்கத்துக்குச் செல்

படியெடுப்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
படியெடுப்பை விளக்கும் விளக்க வரைபடம்
முதன் முதலாக படியெடுப்பு மூலம் ஒரு உயிரணுவிலிருந்து பெறப்பட்ட முலையூட்டி. டோலி எனப்படும் செம்மறியாடு

உயிரியலில் படியெடுப்பு (Cloning) என்பது மரபியல் ரீதியில் ஒன்றையொன்று ஒத்த உயிரணு மூலக்கூறுகள், உயிரணுக்கள், உயிரணுக் குழுக்கள் (இழையங்கள்), உயிரினங்கள் போன்றவை ஒரு தனி மூதாதையிலிருந்து உருவாக்கப்படும் செயல்முறையாகும்[1]. இயற்கையில் பாக்டீரியாக்களிலும், சில பூச்சிகள், தாவரங்களில், கலவியற்ற இனப்பெருக்கம் நிகழும்போதும் இவ்வகையான இனப்பெருக்கமே நிகழ்கின்றது. உயிரித் தொழில்நுட்பத்தில் படியெடுப்பு என்பது மூன்று வெவ்வேறு நிலைகளில் செய்யப்படலாம்.

  • உயிரணுக்களின் மூலக்கூறுகளில் ஒன்றான டி.என்.ஏ. படியெடுப்பு என்பது மூலக்கூற்று படியெடுப்பு (Molecular cloning) எனப்படும்.[2]
  • உயிரணுக்களின் படியெடுப்பு என்பது உயிரணுப் படியெடுப்பு (cell cloning) எனப்படும் (எ.கா. குருத்தணுப் படியெடுப்பு[3]). தனிக் கலங்களாகவன்றி உயிரணுக் கூட்டங்களாக, அதாவது இழையங்களாகவும் படியெடுப்பு நிகழும் (எ.கா. சில இழைய வளர்ப்பு முறைகள்[4][5]
  • படியெடுப்பின் மூலம் ஒரு உயிரினத்தின் புதிய தனியன்களை உருவாக்குதல்.

கலவிமுறை இனப்பெருக்கத்தில் ஆணின் விந்தும் பெண்ணின் முட்டையும் கலவியின் போது இணைவதால் உருவாகும் தனிக்கலமே பின்னர் பிரிவடைந்து செல்வதனால் பெருக்கமடைந்து முழு உயிராக பிரசவமாகிறது. இது விலங்குகளின் பொதுவான இயற்கை கருத்தரிப்பு ஆகும். இவ்வாறான கருத்தரிப்பின் போது தாயினதும் தந்தையினதும் இணைந்த குணங்களும் தோற்றங்களும் மரபு வழியாக குழந்தைக்கு கடத்தப்படுகிறது.

படியெடுப்பு இனப்பெருக்கம் எனும் போது கலப்பின் மூலமாக உருவாகும் உயிர்க்கலம் போலல்லாமல் நேரடியாக முதலாமவரின் உயிர்க்கலமொன்றை அவரின் உடலின் ஏதேனுமோர் பகுதியிலிருந்து பிரித்தெடுத்து அடுத்ததோர் பெண்ணின் கருவறையினுள் கருக்கட்டச் செய்வதாகும். இதனால் கருவைச் சுமக்கும் பெண்ணின் பரம்பரை அம்சங்களில் எதுவும் வாரிசுக்கு கடத்தப்படாது.மாறாக 100 வீதமும் முதலாமவரைப் ஒத்த உயிராகவே வளரும்.[மேற்கோள் தேவை]

படியெடுப்பு இனப்பெருக்கத்தின் அடிப்படை

[தொகு]

கருப்பையில் உருவாகும் முதல் நுகக்கலமே பின்னர் ஒன்றையொன்று முற்றிலும் ஒத்த இயல்புடைய உயிர்க்கலங்களை இனப்பெருக்கம் செய்கிறது. இச்செயற்பாடு கருப்பை, பிரசவம் என தொடங்கி மரணம் வரையும் பயணிக்கிறது. உதாரணத்திற்கு கிள்ளி எடுக்கப்படும் நுண்ணிய சதையில் உள்ள ஆயிரக்கணக்கான உயிர்க்கலங்களில் ஒன்றை ஆராய்ச்சிக்குட்படுத்தும் போது அது, ஆணின் விந்தணுவும் பெண்ணின் முட்டையும் இணைந்து உருவான முதல் நுகக்கலத்தை முற்றிலும் ஒத்திருப்பதை காணலாம். இவ்வாறு ஒவ்வொரு உயிர்க்கலமும் நுகக்கலத்தின் அனைத்து இயல்புகளையும் கொண்டிருந்தாலும் அவைகள் வெவ்வேறு தொழில்களை செய்யுமாறே இசைவாக்கமடைந்துள்ளன. மாற்றமாக ஒரு தொகுதியிலுள்ள உயிர்க்கலம் அடுத்த தொகுதியிலுள்ள வேலைகளை செய்வதில்லை. (குடற்கலங்கள் நாவுக்கலங்களின் வேலைகளை செய்வதில்லை)

உடலின் ஏதேனுமோர் பகுதியில் சீராக இயங்கிக்கொண்டிருக்கும் உயிர்க்கலமொன்றை தூண்டலுக்குள்ளாக்கி மீண்டும் நுகக்கலமாக மாற்ற முடியும் என்பதுவே படியமுறை இனப்பெருக்கத்தின் அடிப்படை. அதாவது "X என்ற நபரின் ஏதேனும் பகுதியிலிருந்து பெறும் நுண்ணிய சதையிலிருந்து (கலத்திலிருந்து) இன்னுமொரு X என்ற நபரை உருவாக்கலாம்" என்ற கருதுகோளிலேயே ஆராய்ச்சிகளை விஞ்ஞானம் மேற்கொண்டு வந்தாலும் இன்னுமும் இந்த அடிப்படை முயற்சியில் வெற்றி கிடைக்கவில்லை.

படியமுறை இனப்பெருக்கத்தின் வெற்றியாக தற்போது அறியப்படுவது,ஒரு உயிரினத்தின் உடலிலிருந்து நுகக்கலத்தின் தொழில்களை செய்வதற்கு இசைவாக்கமடந்த உயிர்க்கலமொன்றை சிறப்பாக தேடிப்பெற்று அதன் கருவை (பரம்பரை தகவல்கள் சேமிக்கப்பட்டுள்ள இடம்.) நீக்கி சாதாரண உயிர்க்கலமொன்றின் கருவை அதனுள் செலுத்தி கருவறையினுள் வளரச்செயும் முறையே ஆகும்.(தொடரும் காலங்களில் அடிப்படை அனுமானத்தில் வெற்றி ஏற்படலாம்.)

டொலி உருவாக்கம்.

[தொகு]

பெண் செம்மறியாடொன்றின் நுகக்கலத்தை ஒத்த கலமொன்று அதன் சினை முட்டைக் கூட்டத்திலிருந்து கண்டு பிடிக்கப்பட்டது. பின்னர் அதன் கரு நீக்கப்பட்டு உடலின் வேறோர் பகுதியிலிருந்து பெறப்பட்ட உயிர்க்கலமொன்றின் கரு அதனுள் செலுத்தப்பட்டது. இவ்வாறு உருவாக்கப்பட்ட நுகக்கலம் அதே செம்மறியாட்டின் கருவறைக்குள்ளேயே வளர்க்கப்பட்டது. இதனால் ஆணின் துணை இல்லாமல் 100 வீதமும் தாயை ஒத்த உயிரின் உருவாக்கம் சாத்தியமானதை விஞ்ஞான உலகம் நிரூபித்துக்காட்டியது.

சமூக சர்ச்சைகள்

[தொகு]

படியெடு உயிரித்தொழில்நுட்பம் பல சீரிய சமூக சர்ச்சைகளை, கேள்விகளை முன்வைத்துள்ளது.

  • இயற்கையாக நடைபெறும் இனப்பெருக்க முறைகளுடன் இடையூறு செய்வது எவ்வகை பின் விளைவுகளை ஏற்படுத்தும்?
  • ஒரு பெண் தனது உயிர்க்கலத்தை கொண்டே ஆணின் தேவையின்றி தனது குழந்தையை உருவாக்கிகொள்ளலாம், அப்படியானால் ஆண்களின் தேவை என்ன?
  • ஒரு ஆணின் உயிர்க்கலத்தை ஒரு பெண்ணின் முட்டையில் படியெடுத்து, பின்னர் இன்னொரு பெண்ணின் மூலம் குழந்தை பெற செய்தால், குழந்தைக்கு எத்தனை பெற்றோர்? குழந்தை யாருக்கு சொந்தம்?

இவற்றையும் பார்க்க

[தொகு]

உசாத்துணை

[தொகு]
  1. "Clone". By Farlex. The Free Dictionary. பார்க்கப்பட்ட நாள் சூன் 8, 2014.
  2. Watson, James D. (2007). Recombinant DNA: genes and genomes: a short course. San Francisco: W.H. Freeman. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-7167-2866-4.
  3. Nadia Halim (September 11, 2002). "Extensive new study shows abnormalities in cloned animals". Whitehead Institute. Massachusetts Institute of Technology • Cambridge, MA. பார்க்கப்பட்ட நாள் சூன் 9, 2014.
  4. "Cloning, How to clone plants by tissue culture – higher". BBC Bitesize. BBC. பார்க்கப்பட்ட நாள் சூன் 9, 2014.
  5. by Michael H. Renfroe, Ph.D. "CLONING PLANTS BY TISSUE CULTURE". Archived from the original on 2014-12-14. பார்க்கப்பட்ட நாள் சூன் 9, 2014.

வெளி இணைப்புகள்

[தொகு]
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Cloning
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
மரபியல் உட்பிரிவுகள்
செம்மரபியல் | சூழல் மரபியல் | மூலக்கூறு மரபியல் | உயிர்த்தொகை மரபியல் | Quantitative genetics
Related topics: Genomics | Reverse genetics
"https://ta.wikipedia.org/w/index.php?title=படியெடுப்பு&oldid=3739213" இலிருந்து மீள்விக்கப்பட்டது