மரபியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
DNA, the molecular basis for inheritance. Each strand of DNA is a chain of nucleotides, matching each other in the center to form what look like rungs on a twisted ladder.

மரபியல் (Genetics) அல்லது பிறப்புரிமையியல் என்பது மரபணுக்கள், பாரம்பரியம் மற்றும் உயிரினங்களுக்கு இடையேயான வேறுபாடுகள் குறித்த அறிவியல் துறையாகும்.[1] நெடுங்காலமாகவே தாவரங்கள் மற்றும் விலங்குகளின் மரபுப் பண்புகள் பற்றிய விழிப்புணர்வு மனிதர்களுக்கு இருந்தது. அந்த அறிவே விவசாயத்தில், தாவரங்களிலும், கால்நடைகளிலும் தேர்வு இனப்பெருக்கம் (selective breeding) மூலம் அவற்றை முன்னேற்ற உதவியது. இருப்பினும், 19 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் கிரிகோர் ஜோஹன் மெண்டல் (Gregor Johann Mendel) என்பவரின் மரபியல் சம்பந்தமான ஈடுபாட்டின் பின்னரே, நவீன மரபியலானது வளர்ச்சியுற்று, முழுமையான ஆராய்ச்சிக்குட்படுத்தப்பட்டது.[2] கிரீகர் மெண்டலுக்கு மரபியலின் அடிப்படை நுட்பங்கள் புரிந்திருக்காவிடினும், உயிரினங்களின் பாரம்பரிய இயல்புகளுக்குக் காரணம், ஏதோ சில பரம்பரையூடாக கடத்தப்படக் கூடிய அலகுகளே என்பதை அறிந்திருந்தார். அவையே பின்னர் மரபணு அல்லது பரம்பரை அலகு என அறியப்பட்டது. தற்காலத்தில், மரபணுக்கள் பற்றி ஆராய்வதற்கான முக்கிய கருவிகளையும், கோட்பாடுகளையும் மரபியல் ஆராய்ச்சி வழங்குகிறது.
சந்ததிகளூடாக கடத்தப்படக்கூடிய பாரம்பரிய இயல்புகள் யாவும் டி.என்.ஏ யில் இருக்கும் மரபணுக்களில் நியூகிளியோடைட்டுக்கள் (Nucleotide) ஒழுங்குபடுத்தப்படும் வரிசை முறையில் தங்கியிருக்கும். டி.என்.ஏ யானது ஒன்றுக்கொன்று எதிர்நிரப்பு இயல்புடைய இரு இழைகளால் ஆனது (டி.என்.ஏ யின் படத்தைப் பார்க்க). இந்த இழைகள் ஒவ்வொன்றும் தனித்தனியே ஒரு புதிய துணை இழையை தோற்றுவிக்கும் தன்மையைக் கொண்டிருப்பதனால், நகல் எடுக்கும் செயல்முறை மூலம், அவை சந்ததியூடாக இயல்புகளை பரம்பரை பரம்பரையாக தொடர்ந்து கடத்த உதவும்.உடலுறவின்போது ஆணில் இருந்து வெளிப்படும் விந்துவில் காணப்படும் பல்லாயிரம் கோடி விந்தணுக்களிலும் இந்த டி.என்.ஏ என்று சொல்லப்படும் மரபணுக்கள் காணப்படுகின்றன. இந்த விந்தணுவானது நீந்திச் சென்று சூல் பையை அடையும் போது அங்கே இருக்கும் பெண்ணின் முட்டையைத் துளைத்து கருக்கட்டுகிறது. இது என்னமோ வாசிக்க இவ்வளவு தானா என்று தோன்றும் ஆனால் இங்கே நடக்கும் பாரிய மாற்றங்கள் பல இன்னும் விஞ்ஞானிகளால் கண்டுபிடிக்கப்படவே இல்லை. பல்லாயிரம் கோடி விந்தணுக்கள் நீந்திச் சென்றாலும் ஆயிரக்கணக்கான விந்தணுக்கள் பாதியிலேயே இறந்து விடுகின்றன. சில நூற்றுக்கணக்கான விந்தணுக்கள் மட்டுமே நீந்தி சூல் பை அல்லது கருவை அடைகிறது.

அவ்வாறு கரு முட்டைக்கு பக்கத்தில் செல்லும் எல்லா விந்தணுக்களும் முட்டைடை ஊடறுத்து உள்ளே செல்ல முயற்சிக்கும் ஆனால் ஏதோ ஒரு பக்கத்தில் அதுவும் ஒரு வகை ஈர்ப்புக்கொண்ட ஒருரே ஒரு விந்தணுவைத் தான் கரு முட்டை ஊடறுத்துச் செல்ல அனுமதிக்கிறது. கரு முட்டையின் சுவர் பகுதி அதனை அனுமதித்தால் மாத்திரமே கருக்கட்டல் நடக்கும். தன்னைச் சுற்றி ஏராளமான விந்தணுக்கள் நான் நீ என்று போட்டி போட்டுக்கொண்டு இருக்கும்போது, எந்த ஒரு விந்தணுவை அனுமதிப்பது என்று முட்டைக்கரு எவ்வாறு முடிவெடுக்கிறது என்பது இன்னும் புரியாத புதிராகவே உள்ளது. அவ்வாறு ஒரு விந்தணுவை அது ஏற்றுக்கொண்டால் மறு வினாடியே ஒருவகை திரவம் சுரக்க ஆரம்பிக்கும்.

இதன் காரணமாக கரு முட்டையின் சுவர் தடிக்க ஆரம்பிக்கும். இதனால் வேறு விந்தணுக்கள் துளைத்துச் செல்லமுடியாத நிலை தோன்றுகிறது. இந்தச் சுவர் தடிப்படைவது சிறிது தாமதமானால் மற்றுமொரு விந்தணு உட்செல்ல நேரிடும். அப்போது ரெட்டைக் குழந்தை உருவாக அது ஏதுவாகிறது. ஆனால் இவ்வாறு அங்கே சுரக்கப்படும் திரவம் தாமதமாகுவது அல்லது ஒரு விந்தணு உட்சென்ற பின்னர் கருவின் சுவர் தடிப்பது தாமதமாகுவதும் கூட மரபியல் பண்பு என்கிறார்கள். ஒரு குடும்பத்தில் இரட்டையர்கள் இருந்தால் அவர்களின் பிள்ளைகளுக்கும் ரெட்டைக் குழந்தை பிறக்க 90% வாய்ப்பு இருக்கிறது. இது கூட அவர்களின் தாய் தந்தையரிடம் இருந்து வந்தது தான் என்று கூறுகிறார்கள். அதில் உண்மையும் உள்ளது !
ஒரு உயிரினத்தின் தோற்றம் இயல்புகளைத் தீர்மானிப்பதில் மரபியல் மிக முக்கிய பங்கு வகித்த போதிலும், அந்த உயிரினத்தில் சூழல் ஏற்படுத்தும் தாக்கத்தைக் கொண்டே அந்த உயிரினத்தின் இறுதியான தோற்றம், இயல்புகள் தீர்மானிக்கப்படுகின்றன.

அடிப்படை உயிர்ப்பண்புகளின் மரபியல்[3][தொகு]

உயிர்களின் இயல்பு’ என்பதைத் தெளிவாக, உயிரியல் சார்ந்து விவாதிக்கத் தகுந்த வகையில் புறவயமானதாக வரையறை செய்ய வேண்டுமென்றால், ‘ஒரு உயிரினத்தில் வெளிப்படுத்தப்படும் உயிரியல் பண்புகளில் மிக அடிப்படையானவை,’ என்று சொல்லலாம். குறிப்பாக அதன் நடத்தை (Behaviour) சார்ந்த பண்புகளில் மிக ஆதாரமானவை என்று கூறலாம்.

உடலில் சர்க்கரை சிதைவுமாற்றம் செய்யபட்டு ஆற்றலாக சேமிக்கப்படுவது முதல் சந்ததியை தோற்றுவிப்பதன் வழியாகத் தன் இனத்தைத் தக்கவைத்துக் கொள்ள விரும்பும் உந்துதல் வரை ஒரு உயிரியுடன் தொடர்புள்ள அனைத்தும் அதன் உயிரியல் பண்புகள் தான். அனைத்து உயிரியல் பண்புகளும் அதற்குக் காரணமான மரபணுவில்தான் குறிக்கப்பட்டு, தலைமுறைகளாக தொடர்ந்து கடத்தப்படுகிறது. உயிரியல் பண்புகள் நேரடியாக ஒற்றை மரபணுவால் குறிக்கப்படலாம் அல்லது மரபணுத் தொடரில் ஆங்காங்கே தனித்தனியாக விரவியிருக்கும் ஒன்றுக்கும் மேற்பட்ட மரபணுக்களின் தொகுப்பினால் குறிக்கப்படலாம். (உதாரணமாக ஒருவரின் உயரத்தை நிர்ணயம் செய்வது எந்த ஒரு தனியான மரபணுவும் இல்லை, மாறாக, பல்வேறு மரபணுக்களின் கூட்டு வெளிப்பாட்டால் நிர்ணயம் செய்யப்படுகிறது.)

ஒருசெல் நுண்ணுயிர்களில் மரபணுவில் குறிக்கப்பட்டுள்ள பண்பு நேரடியாக வெளிப்படுகிறது. ஆனால் உயர் உயிரினங்களில் (விலங்குகளில்) இது கொஞ்சம் சிக்கலானது. குறிப்பாக நடத்தை சார்ந்த அடிப்படையான பல பண்புகள் இரண்டு அடுக்குகளிலாக வெளிப்படுத்தப்படுகின்றன. முதலில், ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட மரபணுக்களில் ஒரு உயிரியல் பண்பு குறிக்கப்படுகிறது, அடுத்ததாக இந்த மரபணுக் குறியீடு, ஒரு உயிரியல் பண்பாக உருப்பெறும் களமான மூளையில், ஒவ்வொரு பண்புக்கும் உள்ள சிறப்புப் பகுதிகளில் வெளிப்படுவதன் மூலம் முழுமை அடைகிறது. மனிதன் போன்று, நரம்பணு வலைப்பின்னல்களும் முளையின் அளவும் பெருவளர்ச்சி பெற்ற உயிரினத்தில் இந்த இரண்டாம் கட்ட வெளிப்பாடு இன்னும் முக்கியத்துவம் பெறுகிறது. உதாரணமாக, பேச்சு/மொழி என்னும் திறனுடன் தொடர்புடைய மரபணுக்கள் வெளிப்படும் களம் மனிதனின் மூளையில் உள்ள பேச்சுக்கான சிறப்புப் பகுதிகள்.

மூலக்கூறு மரபியல் துறையில் நவீன தொழில்நுட்பங்கள் மூலம் புதிய கண்டுபிடிப்புகளின் பெரும்பாய்ச்சல் நிகழ ஆரம்பித்த காலத்திலிருந்து அடிப்படையான பல உயிரியல் பண்புகளுக்கு மரபியல் விளக்கங்களும் ஆராய்ச்சி பூர்வமான ஆதாரங்களும் அளிக்கப்பட்டு வருகின்றன. அதற்கு முன்பு வரை விலங்குகளின் இயல்பு எனக் கருதப்படும் மிக அடிப்படையான உயிரியல் பண்புகள் தத்துவம், சமூகவியல், நடத்தையியல், உளவியல் மற்றும் நரம்பியல் சார்ந்து மட்டுமே விளக்கப்பட்டு வந்தன. உயிரினங்களின் நடத்தை சார்ந்த மிக அடிப்படையான பண்புகள் மரபணுக்களில் ஏற்கனவே குறிக்கப்பட்டிருந்தாலும், அவற்றில் சில சமூக வாழ்க்கையின் மூலம் அவற்றுக்குக் ‘கற்றுத்தர’ப்படுகின்றன, வேறு சில எந்தப் புறத்தூண்டுதலோ, உதவியோ இன்றி வெளிப்படுகின்றன. காட்டில் ஒரு இளம் சிறுத்தைக் குட்டிக்கு வேட்டையாடுதல் தாயிடமிருந்து கற்றுக் கொள்ளும் பண்பாக இருக்கிறது, ஆனால் நீச்சல் அதற்குக் கற்றுத் தரப்படுவதல்ல. வாழ்வில் முதல் முறை அது நீரில் இறங்கும் போதே நீந்தத் தொடங்கிவிடுகிறது. வீட்டில் வளர்ப்புப் பிராணிகளாக பழக்கப்படுத்தப்பட்ட விலங்குகளில் இத்தைகைய பண்புகளை கவனித்தால் அது இன்னும் ஆச்சரியத்தைத் தூண்டும். தாயிடமிருந்து கண்திறக்கும் முன்பே பிரிக்கப்பட்டு தன் இனத்தின் சமூகத்திலிருந்து தனிமைப்படுத்தபட்டு முற்றிலும் அன்னியமான சூழலில் வளர்க்கப்படும் நாய்களும் கூட அவற்றின் இயல்புகளை மறந்துவிடுவதில்லை. நீச்சலோ, முகர்ந்து அறிதலோ அவற்றில் எந்த ‘கற்றுத்தரலும்’ இன்றியே வெளிப்படுகிறது. சட்டென்று இப்பண்புகளை நாம் ‘அவை நாயின் இயற்கை’ என்று சொல்லிவிடுவோம். அவ்வாறு சொல்லும் போது நமக்குத் தெரியாமலே நாம் குறிப்பிடுவது இத்தகைய அடிப்படை உயிர்ப்பண்புகள் தலைமுறைகளுக்குக் கடத்தப்படும் விதமாக உயிரிகளில் உள்ளார்ந்து பொதிந்து வைக்கப்பட்டுள்ளது என்னும் மரபியல் நோக்கையே ! “மீன் குஞ்சுக்கு நீந்தக் கற்றுத் தரவா வேண்டும்?” என ஆழமான பொருள் பொதிந்த ஒரு புரிதலை எளிய பழமொழியாக பண்பாட்டில் சேகரித்து வைத்திருக்கிறோம்.

சமீபத்திய மரபியல் ஆய்வு[4] ஒன்று இத்தகைய அடிப்படை உயிர்ப்பண்புகளுக்கான மரபியல் ஆதாரத்தை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளது. எலிகள் பூமிக்கு அடியில் வலை தோண்டி வசிப்பது அவற்றின் அடிப்படையான உயிர்ப்பண்பு. தங்கள் இயற்கையான வாழ்விடத்தை விட்டு பல தலைமுறைகளாக ஆராய்ச்சிக்கூடங்களிலேயே இனப்பெருக்கம் செய்யப்பட்டு, பிளாஸ்டிக் கூண்டுகளில் வளர்க்கப்பட்ட வெவ்வேறு இன எலிகள், பெரிய மண்தொட்டிகளில் விடப்பட்டபோது சட்டென்று மண்ணைத் தோண்டி வலைகளை அமைக்க ஆரம்பித்தன. இதன் மூலம் வலையைத் தோண்டுதல் என்னும் அடிப்படைப்பண்பு சமூக வாழ்கையால் மட்டும் உண்டாவதல்ல, மரபணுக்களிலேயே குறிக்கப்பட்டுள்ளது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. வலையைத் தோண்டும் உந்துதல் மட்டுமல்ல, தோண்டப்போகும் வலையின் கட்டுமானத் திட்டமும் கூட மரபணுவிலேயே பொதிந்து வைக்கப்பட்டுள்ளது என்கிறது இந்த ஆய்வு. இந்த ஆராய்ச்சிக்காக, மரபணு ரீதியாக நெருங்கிய இரண்டு எலி இனங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டன. இதில் ஓல்ட்ஃபீல்ட் எலிகள் எனப்படும் எலி இனம் நீண்ட சுரங்கப்பாதைகளும், உள் நுழைவதற்கும் ஒரு வாசலும், ஆபத்து நேரங்களில் தப்பித்துப் போவதற்கு இன்னொரு சுருக்குவழியும் வைத்து வலைகளை தோண்டக்கூடியது. ஆய்வில் பயன்படுத்தப்பட்ட இன்னொரு எலி இனம் நீளம் குறைவான சுரங்கப்பாதையும், தப்பிச் செல்லும் வாசல் இல்லாமலும் உள்ள வலைகளைத் தோண்டக்கூடியது. இயற்கையான அதன் வாழ்க்கைச் சூழலிலும், ஆய்வகத்திலும் எத்தனை தலைமுறைகள் தாண்டினாலும் இனம் சார்ந்த இந்த வலைகளின் கட்டுமானத் திட்டம் மாறவே இல்லை.

அடிப்படையில் இரண்டு எலி இனங்களும் மரபணு ரீதியாக நெருங்கியவை ஆதலால் இவற்றைக் கலந்து இனப்பெருக்கம் செய்ய வைத்து கலப்பின எலிகளை உருவாக்கினர். வலையின் சுரங்கப்பாதை நீளம், தப்பிச்செல்லும் வாசல் ஆகியவற்றை, முதல் தலைமுறை கலப்பின எலிகள் தோண்டும் வலைகளிலும், கலப்பின எலிகளை மீண்டும் நீளம் குறைவான சுரங்கப்பாதை உள்ள வலைகளைத் தோண்டும் எலி இனத்துடன் இனப்பெருக்கம் செய்ய வைத்து உருவான எலிகளின் வலைகளிலும் அளந்தனர். அத்துடன் இந்த எலிகளில் இருந்து மரபணு பிரித்தெடுக்கப்பட்டு தொடர்ந்து மேற்கொண்ட மூலக்கூறு மரபணு ஆய்வில் எலி இனங்களின் மரபணுத் தொடரில் மூன்று பகுதிகள் வலையின் சுரங்கப்பாதை நீளத்தைக் குறிக்கின்றன என்பதையும், ஒரு பகுதி தப்பிச்செல்லும் வாசல் அமைப்பதைக் குறிப்பதையும் கண்டுபிடித்தனர்.

வலைதோண்டுதல் என்னும் அடிப்படை உயிர்ப்பண்புக்கான மரபியல் பின்புலம் மிகநீண்ட மரபணுத் தொடரில் இருந்து நான்கு குறுகிய மரபணுப் பகுதிகளில் பொதிந்துள்ளது என்பதை வெற்றிகரமாகக் கண்டுபிடித்துவிட்டதால், இனி இதில் நேரடியாகப் பங்குபெறும் மரபணுக்களைத் தேட வேண்டிய பரப்பு குறுகி விட்டது. விஞ்ஞானிகளின் அடுத்த ஆராய்ச்சி இலக்கு இந்த நான்கு பகுதிகளிலும் குறிப்பிட்ட எந்த மரபணு வலைதோண்டும் பண்பைக் குறிக்கிறது என்பதைக் கண்டுபிடிப்பது தான். எலி வலை தோண்டுதல், பறவை கூடு கட்டுதல் போன்ற பெரிய உயிரினங்கள் மிகச்சிறிய குழுவாக அல்லது தனியாக ஈடுபடும் அடிப்படை உயிரியல் செயல்பாடுகளின் மரபியல் பின்புலம் தரும் வியப்பு ஒருபுறம் இருக்க, மற்றொருபுறம் எறும்புகள், தேனீ, கரையான் போன்ற சிற்றுயிர்கள் பல்லாயிரக்கணக்கில் ஒன்றுசேர்ந்து ஈடுபடும் செயல்களில் (புற்றுக் கட்டுதல், தேனடை கட்டுதல், உணவு தேடுதல், எதிரிகளைத் தாக்குதல், சமூகமாக வாழ்தல் இன்னபிற…) மரபணுக்களின் பங்கு என்னவாக இருக்கமுடியும்? என்னும் கேள்வி இன்னும் மிகப்பெரிய வியப்பையும் எதிர்பார்ப்பையும் உண்டாக்குகிறது. உதாரணத்திற்கு, சிலவகை எறும்புகளின் புற்றின் பிரம்மாண்டமான அளவும், ஏராளமான அறைகளும், பாதைகளும் கொண்ட மிகச்சிக்கலான கட்டுமானத் திட்டமும் ஒவ்வொரு தனி எறும்பின் திறனுக்கும், ஆயுளுக்கும் அப்பாற்பட்டவை. சில வாரங்களே உயிர்வாழும் எறும்புகள் (ராணி எறும்புகள் விதிவிலக்கு, அவை 20 – 30 வருடங்கள் வரை வாழும்) தலைமுறை தலைமுறையாகப் பிறந்து புற்றைக் கட்டி வளர்த்துக்கொண்டே இருக்கின்றன. ஒவ்வொரு எறும்பின் மரபணுவிலும் இந்த பிரம்மாண்ட கட்டுமானத்திற்கானத் திட்டம் இருக்க முடியுமா? பொதுவாக, எறும்புகளின் கூட்டுமனத்தில் அந்தப் புற்றின் கட்டுமானத்திற்கான திட்டம் இருக்கக்கூடும், அந்த எறும்புகளின் கூட்டுமனம் என்பது பிரபஞ்ச மனத்தின் ஒரு பகுதியாக இருக்கக்கூடும் என்ற தத்துவார்த்தமான விளக்கமே இதுவரை கொடுக்கப்பட்டுள்ள பதில்களுள் சிறந்தது என்பது என் எண்ணம். புகழ்பெற்ற பகுப்பாய்வு உளவியல் வல்லுனரான கார்ல் யுங் முன்வைத்த, மனிதர்களுள் தனிமனித நனவிலியைத் தாண்டி மிக ஆழத்தில் ஒட்டுமொத்த இனத்தின் ‘கூட்டு நனவிலி’ (Collective Unconscious) இருக்கிறது என்ற கருதுகோள் உளவியலில் புதிய வாசல்களைத் திறந்தது. இந்த கூட்டு நனவிலி மனித இனத்தில் அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு கைமாறுகிறது. விளைவாக, கூட்டு நனவிலியில் இருக்கும் ‘தொல்படிமங்கள்’ (Archetypes) மனிதரில் நனவுமனச் செயல்பாட்டில் வெளிப்படுகிறது என்றார் யுங். இந்தக் கருதுகோளை, மேலே சொன்ன கூட்டுமனம் என்ற தத்துவார்த்தமான விளக்கத்துடன் – தலைமுறைகள் தாண்டி ஒரு மிகப்பெரிய கூட்டுச்செயல்பாட்டில் ஈடுபடும் எல்லா உயிரினங்களுக்கும் போட்டுப்பார்க்கலாம்.

உளவியலில் கூறப்படும் கூட்டு நனவிலி போல, அறிவியலில் (சமூக உயிரியலில்) ‘கூட்டு அறிவாற்றல்’ (Collective Intelligence) என்றொரு கருதுகோள் உண்டு. ஒரு உயிரினத்தில், தனித்த ஒவ்வொரு அங்கங்களின் அறிவாற்றல் ஒட்டுமொத்தமாக்க் கூடிச் செயல்படுவதே ‘கூட்டு அறிவாற்றல்’.

[5] அடிப்படையில் மனிதன் உட்பட அனைத்துப் பெரிய பலசெல் உயிரினங்களும் தனித்தனி செல்கள் ஒட்டுமொத்தமாகக் கூடி ஒற்றை அமைப்பாகச் செயல்படும் விதமாக பரிணமித்தவை தான். ஒரு மனிதனின் ஒவ்வொரு நரம்பணுவும் தனித்தனியாக இருந்தால் அவை, ஒன்றிலிருந்து இன்னொரு நரம்பணுவுக்கு சமிக்ஞையைக் கடத்தும் செயல்பாட்டில் மட்டும் தான் ஈடுபட முடியும். ஆனால் அவை ஒட்டுமொத்தமாக இணைந்து ஒரே மூளையின் அங்கமாகச் சேர்ந்து செயல்படும்போது ஆர்யபட்டராகவோ ஆதிசங்கரராகவோ மாறமுடியும். நுண்ணுயிர்கள் முதல் எறும்புகள், கரையான்கள், இன்னும் பல்வேறு பூச்சிகள், சிற்றுயிர்கள், பறவைகள், காட்டெருமை போன்ற பெரிய விலங்குகள் உட்பட பல உயிரினங்களில் இந்தக் கூட்டு அறிவாற்றல் செயல்படுகிறது. வானில் பறக்கும் பறவைக்கூட்டம் சட்டென்று ஒரே நேரத்தில் ஒரு திசை நோக்கி வளைந்து திரும்புதலும், கடலடியில் சிறுமீன்கள் பல்லாயிரக்கணக்கில் கூட்டம் கூட்டமாக நீர்ச்சுழல் போல சுழல்வதும், ஒரே திசையில் நீந்துவதும், ஒரே நேரத்தில் நீந்தும் போக்கை மாற்றி அலையெனப் புரண்டு திரும்புவதும், பெரும்படையாக லட்சக்கணக்கான எறும்புகள் உணவு தேடிப் புலம்பெயர்வதும் எல்லாம் ‘கூட்டு அறிவாற்றல்’ கொண்டும் விளக்கப்படுகின்றது. ஒற்றை பேருருவமும் மனமுமாக ஒரு உயிரினத்தின் ஒவ்வொரு தனி அங்கமும் ஒட்டுமொத்தமாகச் சேர்ந்து கூட்டு இச்சையினால் (Collective Will) செயல்படும் இவற்றை ‘அதிஉயிரிகள்’ (Superorganisms) என அழைக்கின்றனர். இந்தக் கூட்டு அறிவாற்றலில் மரபணுக்கள் பங்கு இருக்க முடியுமா என்பது குறித்து எதிர்கால ஆய்வுகள் இருக்கக்கூடும்.

மெண்டலின் அரும்பணி[தொகு]

உயிர் வாழும் உயிரிகள் அனைத்திலும், மரபுப் பண்பு தொடர்வதற்குக் காரணமாக இருக்கும், "மரபுப் பண்புக் கூறுகள்" என அழைக்கப்படும் அடிப்படை அலகுகள் இருந்தன என்று மெண்டல் அறிந்து கொண்டார். இதன் மூலமாக, மரபுவழிப் பண்பியல்புகள் பெற்றோரிடமிருந்து அவர்களின் சந்ததியினருக்க வழிவழியாக வந்தன. மெண்டல் ஆராய்ச்சி செய்த தாவரங்களில், விதையின் நிறம் அல்லது இலையின் வடிவமைப்பு போன்ற தனிப் பண்பியல்புகள் ஒவ்வொன்றும், ஒரிணை மரபுப் பண்புக் கூறுகளின் மூலமாகத் தீர்மானிக்கப்பட்டது. ஒரு தனித் தாவரம், ஒவ்வொரு இணையின் ஒரு மரபுப் பண்புக் கூற்றினைப் பெற்றோர் ஒவ்வொருவரிடமிருந்தும் பெற்றது. ஒரு குறிப்பிட்ட பண்புத் திறத்திற்காக மரபு வழியாகப் பெற்ற இரண்டு மரபுப் பண்புக் கூறுகளும் வெவ்வேறாக இருக்குமானால், (எடுத்துக்காட்டாக, பச்சை விதைகளுக்காக ஒரு மரபுப் பண்புக் கூறும், மஞ்சள் விதைகளுக்காக இன்னொரு மரபுப் பண்புக் கூறும் பெறப்படுமேயானால்) அப்போது, பொதுவாக, மேம்பட்டு நிற்கும் மரபுப் பண்புக் கூறின், (இந்தத் தேர்வில், மஞ்சள் விதைகளுக்குரியது) செயல் விளைவு மட்டுமே அந்தத் தனி தாவரத்தில் வெளிப்படையாகப் புலப்படும். ஆயினும், முனைப்புக் குன்றியிருக்கும் மரபுப் பண்புக் கூறு அழிந்து விடுவதில்லை. அந்தத் தாவரத்தின் சந்ததிகளுக்கு அந்தப் பண்புக் கூறு சென்றடையக் கூடும். இனப்பெருக்க உயிரணு அல்லது பாலணு மனிதர்களிடமுள்ள நேரிணையான விந்து அல்லது கரு உயிரணுக்கள் ஒவ்வொன்றும், ஒவ்வொரு இணையின் ஒரு மரபுப் பண்புக் கூறினை மட்டுமே கொண்டிருந்தது என்பதை மெண்டல் கண்டறிந்தார். ஒரு தனிப் பாலணுவில் ஒவ்வொரு இணையின் எந்த மரபுப் பண்புக் கூறும், காணப்படுவதும், அது ஒரு தனி சந்தததிக்குச் சென்றடைவதும் முற்றிலும் தற்செயல் நிகழ்வே என்றும் மெண்டல் கூறினார்.

மெண்டலின் விதிகள், அவை சற்றே மாற்றமைவு செய்யப்பட்டுள்ள போதிலும், மரபு வழிப் பண்பியல் பற்றிய தற்கால அறிவியலுக்குத் தொடக்கமாக அமைந்தன. மெண்டலுக்கு முன்பு தொழில்முறை உயிரியலறிஞர்களாகப் புகழ் பெற்றிருந்த பல விஞ்ஞானிகளுக்குகப் பிடிபடாமலிருந்த இந்த முக்கியமான விதிகளை, ஒரு பொழுதுபோக்கு விஞ்ஞானியாக மட்டுமே இருந்த மெண்டலினால் எவ்வாறு கண்டுபிடிக்க முடிந்தது. நல்ல காலமாக, இவர் தமது ஆராய்ச்சிக்காகத் தேர்ந்தெடுத்திருந்த தாவர இனத்தின் முக்கியப் பண்பியல்புகள் ஒவ்வொன்றும், மரபுப் பண்புக் கூறுகளின் ஒரு தனித் தொகுதி மூலமாகத் தீர்மானிக்கப்படக் கூடியதாக இருந்தது. ஆனால், இவர், ஆராய்ச்சி செய்த பண்பியல்புகள் ஒவ்வொன்றும், மரபுப் பண்புக் கூறுகளின் பல தொகுதிகளினால் தீர்மானிக்கப்படக் கூடியதாக இருந்திருக்குமானால், இவருடைய ஆராய்ச்சி மிகவும் கடினமானதாகவே இருந்திருக்கும். மெண்டல், மிகுந்த கவனமும், அளவற்ற பொறுமையும் வாய்ந்த ஒரு பரிசோதனையாளராக இல்லாது போயிருந்தால் அல்லது தமது ஆராய்ச்சிகளின் புள்ளி விவரப் பகுப்பாய்வினைச் செய்வது மிகவும் இன்றியமையாதது என்பதை மெண்டல் நன்கு உணர்ந்து கொள்ளாமற் போயிருந்தால், அவருடைய இந்த நற்பேறு அவருக்கு எந்த விதத்திலும் உதவியாக இருந்திருக்காது. மேற்சொன்ன அங்கொன்றும், இங்கொன்றுமான நிகழ்வு காரணமாக, ஒரு தனிச் சந்ததியின் பண்புத் திறன்களின் எந்தப் பண்புத் திறம் மரபு வழி வந்தடையும் என்பதை ஊகித்துக் கூறுவது பொதுவாகக் கடினம். ஏராளமான பரிசோதனைகள் செய்ததன் மூலமாக (மெண்டல் 21,000-க்கும் மேற்பட்ட தனித் தாவரங்களுக்கான பரிசோதனைகளின் முடிவுகளைப் பதிவு செய்து வைத்திருந்தார்). தமது முடிவுகளைப் புள்ளியியல் முறையில் பகுப்பாய்வு செய்ததன் மூலமாகவும் மெண்டல் தமது விதிகளை வகுத்தமைக்க முடிந்தது.மெண்டல் தோட்டப்பட்டாணிச் செடியில் (பைசம் சட்டைவம்) குறுக்குக் கலப்பு சோதனைகளை செய்தாா். இரு வேறுபட்ட பண்பு நிலைகளைக் கொண்ட பட்டாணி தாவரங்களை கலப்பு செய்தாா். ஒரு சோதனையில் ஒரு பண்பின் இருநிலைகளை ஆராய்ந்தாா். இதனால் தோன்றிய கலப்புயிாிகள் ஒன்றோடொன்று கலப்பு செய்யப்பட்டன. பல கலப்புயிாிகளில் கிடைக்கப்பெற்ற செய்திகளை பொதுவாகக் கொண்டு முடிவுகள் கவனமாக பகுத்தாராயப்பட்டன.சோதனைப் பொருளாக அவா் பட்டாணி தாவரத்தை தோ்ந்தெடுக்க காரணமாக இருந்ததது. இந்தத் தாவரம் கீழ்க்காணும் பண்புகளைப் பெற்றிருந்ததே ஆகும் ,இது இயற்கையாகவே தன் கலப்புடையது. எனவே துாய இன உயிாிகளை வளா்த்தல் அல்லது பெருக்கம் செய்வது எளிது.,ஓராண்டு தாவரமாக இருப்பதால் குறுகிய வாழ்க்கை சுழற்சி கொண்டது. எனவே பல தலைமுறைகளை பற்றி எளிதில் ஆராயலாம்.பட்டாணி தாவரத்தை அயல் மகரந்தசோ்க்கை செய்வது எளிது ,ஆழமாக வரையறுக்கப்பட்ட மாறுபட்ட பண்புகள் உள்ளன ,இரு பால் மலா்கள் காணப்படுகின்றன ,ஆகவே, மெண்டலின் சோதனைக்கு பட்டாணித்தாவரம் ஒரு உகந்த தாவரமாக திகழ்ந்தது

மரபுவழி விதிகள் மனித அறிவுக் கருவூலத்திற்கு ஒரு முக்கியமான சேர்மானம் என்பதில் ஐயமில்லை. மரபுவழிப் பண்பியல் பற்றிய நமது அறிவு, இதுகாறும் பயன்பட்டதைவிட மிக அதிக அளவில் எதிர்காலத்தில் பயன்படக்கூடும். ஆயினும், இப்பட்டியலில் மெண்டலுக்குரிய இடத்தை நிருணயிப்பதில் மற்றொரு அம்சத்தையும் கவனத்தில் கொள்ள வேண்டும். மெண்டலின் கண்டுபிடிப்புகள் அவருடைய வாழ்நாளின்போது அடியோடு புறக்கணிக்கப்பட்டு விட்டன. அவருடைய முடிவுகளை, பிற்காலத்திய விஞ்ஞானிகள் தனித்தனியாகவே கண்டறிந்தனர். எனவே, மெண்டலின் ஆராய்ச்சி ஒதுக்கிவிடத்தக்கது தான் என்று கருதலாம். இந்த வாதம் வலியுறுத்தப்படுமானால், கொலம்பஸ், கோப்பர்னிக்கஸ், ஜோசப் லிஸ்டர் ஆகியோருக்கு ஆதரவாக லைப் எரிக்சன், அரிஸ்டார்க்கஸ் இக்னாஸ், செம்மல்வெய்ஸ் ஆகியோர் விட்டுவிடப்பட்டது போன்றே, மெண்டலும் இப்பட்டியலிலிருந்து முற்றிலுமாக விட்டு விடப்பட வேண்டும் என்று ஒருவர் முடிவுக்கு வரக்கூடும்.

ஆனால், மெண்டலுக்கும் மற்றவர்களுக்குமிடையே வேறுபாடு உண்டு. மெண்டலினுடைய பணி த்ற்காலிகமாகவே மறக்கப்பட்டது. அது மீண்டும் கண்டுபிடிக்கப்பட்டபோது, மிக விரைவாக உலகப் புகழ் பெற்றது. மேலும், டி விரிஸ், கோரன்ஸ், ஷெர்மாக் ஆகிய மூவரும் இவர் கூறிய விதிகளை மறுபடியும் கண்டுபிடித்தார்கள் என்ற போதிலும், இறுதியில் இவருடைய ஆய்வுக் கட்டுரையைப் படித்து, இவரது முடிவுகளை மேற்கோள் காட்டினார்கள். இறுதியாக, டி விரிஸ், கோரன்ஸ், ஷெர்மாக் ஆகிய மூவரும் தோன்றாமலிருந்தால், மெண்டலின் கண்டுபிடிப்பு செல்வாக்குப் பெறாமல் போயிருக்கும் எனக் கூறுவது சரியன்று. மரபுவழி பற்றி (W.O. ஃபர்க்) என்பவர் தொகுத்து, பெருமளவில் விற்பனையாகி வந்த நூல் விவரத் தொகுதி ஒன்றில், மெண்டலின் கட்டுரை ஏற்கனவே இடம் பெற்றிருந்தது. அவ்வாறு அந்த நூல் விவரத் தொகுதியில் அது சேர்க்கப்பட்டிருந்தமையால், விரைவிலோ பின்னரோ இத்துறையில் தீவிர ஆராய்ச்சி மாணவர் ஒருவர் கண்ணில் மெண்டலின் கட்டுரை நிச்சயமாகப் பட்டிருக்கும். அது மட்டுமின்றி, மேற்சொன்ன மூன்று விஞ்ஞானிகளில் ஒருவர் கூட, மரபு வழிப் பண்பியலைக் கண்டுபிடிப்பதற்காக உரிமை கொண்டாடவில்லை. மேலும், இவர் கண்டுபிடித்த அறிவியல் விதிகள் உலகெங்கும் "மெண்டல் விதிகள்" என்றே குறிப்பிடப்படுகின்றன.

மெண்டலின் கண்டுபிடிப்புகள், அவற்றின் நற்பண்பிலும், முக்கித்துவத்திலும், இரத்த ஓட்டத்தைக் கண்டு பிடித்த ஹார்வியின் கண்டுபிடிப்போடு ஒப்பு நோக்கத் தக்கனவாகும். எனவே, அதற்கிணங்க மெண்டலுக்கு இடமளிக்கப்பட்டிருக்கிறது

மேற்கோள்கள்[தொகு]

  1. Griffiths et al. (2000), Chapter 1 (Genetics and the Organism): Introduction
  2. Weiling F (1991). "Historical study: Johann Gregor Mendel 1822–1884". American Journal of Medical Genetics 40 (1): 1–25; discussion 26. doi:10.1002/ajmg.1320400103. பப்மெட் 1887835. 
  3. http://www.nature.com/nature/journal/v493/n7432/full/nature11816.html?WT.ec_id=NATURE-20130117
  4. http://news.sciencemag.org/biology/2013/01/building-better-mouse-burrow-takes-few-genes?ref=hp
  5. http://www.nature.com/nature/journal/v493/n7434/full/nature11832.html

வெளி இணைப்புகள்[தொகு]

Wikibooks
விக்கி நூல்கள் , பின்வரும் தலைப்பைக் குறித்த மேலதிகத் தகவல்களைக் கொண்டுள்ளது:

தொடர்புடைய இதழ்கள்[தொகு]

பிற[தொகு]

அருஞ்சொற்பொருள்[தொகு]

  • பாரம்பரியம் - Heredity

கூட்டு நனவிலி (Collective Unconscious) அதிஉயிரிகள் (Superorganisms)

தொடர்புடைய நூல்கள்[தொகு]

Genetics P. S. Verma and V. K. Agarwal Reprint 2003. S. Chand and Company Ltd, Ram nagar, New Delhi - 110 055.
Genetics - Strickberger M.W.
மரபியல் உட்பிரிவுகள்
செம்மரபியல் | சூழல் மரபியல் | மூலக்கூறு மரபியல் | உயிர்த்தொகை மரபியல் | Quantitative genetics
Related topics: Genomics | Reverse genetics
"https://ta.wikipedia.org/w/index.php?title=மரபியல்&oldid=1826872" இருந்து மீள்விக்கப்பட்டது