உள்ளடக்கத்துக்குச் செல்

பூச்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பூச்சி
புதைப்படிவ காலம்:டெவோனியக் காலம் - அண்மையவை
ஐரோப்பிய தேனீ (en:European honey bee)
வரிசை - ஹைமனொப்தரா (en:Hymenoptera)
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
துணைத்தொகுதி:
வகுப்பு:
பூச்சிகள்

பூச்சி (insect) கணுக்காலிகள் (ஆர்த்திரப்போடா) தொகுதியுள் அடங்கும், முதுகெலும்பிலிகளின் ஒரு வகுப்பைச் சேர்ந்த முதன்மையான உயிரினமாகும். இவற்றின் முதிர்நிலைகள் கைட்டின் எனப்படும் வேதிப்பொருளால் ஆன புறவன்கூட்டைக் கொண்டிருப்பதுடன், தலை, மார்பு, வயிறு என்ற மூன்று பாகங்களாகப் பிரிக்கப்பட்ட உடலையும், மூன்று இணைக் கால்களையும், கூட்டுக் கண்களையும், ஓரிணை உணர்கொம்புகளையும் (antennae) கொண்டவை. இவை தமது வாழ்க்கை சுழற்சியில் வெவ்வேறு வளர்நிலைகளைக் கொண்டிருப்பதுடன் உருமாற்றத்திற்கு உட்படுவனவாக இருக்கின்றன. பூச்சிகளைப் பற்றிய அறிவியல் அடிப்படையிலான ஆய்வுத்துறை பூச்சியியல் எனப்படும்.

உலகில் உள்ள விலங்குகளில் பூச்சிகளே மிக அதிக எண்ணிக்கையில் சிற்றினங்களையும், மிக அதிக எண்ணிக்கையில் தனியன்களையும் கொண்ட விலங்குகளாக இருக்கின்றன.[1] உலகில் மிகவும் வேறுபட்ட குழுக்களைக் கொண்ட விலங்குகளில் பூச்சிகளும் இருப்பதுடன், ஒரு மில்லியனுக்கும் கூடுதலான விவரங்கள் அறியப்பட்ட பூச்சி சிற்றினங்கள் இருக்கின்றன.[2] இந்த சிற்றினங்களின் எண்ணிக்கை, உலகில் உள்ள அறியப்பட்ட விலங்குகளில் அரைவாசிக்கும் மேலானவையாக இருக்கின்றன.[3][4] மொத்தமாக இருக்கும் பூச்சி இனங்கள் 6-10 மில்லியன்கள் இருக்கலாம் எனவும்[3][5][6], இதற்கும் மேலாக 80-100 மில்லியன்கள் வரை இருக்கலாம் எனவும்[1] வெவ்வேறு தகவல்கள் கூறுகின்றன. இவை பூமியில் இருக்கும் வேறுபட்ட விலங்குகளில் 90 சதவிகிதமாக இருக்கலாம்[7] எனவும் கணக்கிடப்பட்டுள்ளது.

பூச்சிகள் உலகின் எல்லா வகையான சூழல்களிலும் வாழ்வதுடன், புதிய சூழலுக்கு இலகுவில் இசைவாக்கம் அடைய வல்லனவாகவும் இருக்கின்றன.[1] குளிரான காலநிலை, வெப்பமான காலநிலை என இரண்டிலும் பூச்சிகள் வாழ்கின்றன. குளிரான பகுதிகளில் வாழும் பூச்சிகள் குளிரைத் தாங்கி, தமது தொழிற்பாடுகளைத் தொடர்பனவாகவோ, அல்லது வேறு சூடான இடங்களுக்கு இடம்பெயர்ந்து செல்பனவாகவோ, அல்லது தமது செயற்பாடுகள் அனைத்தையும் குறைத்துவிட்டு, உறங்குநிலை போன்ற மிகவும் மந்தமான நிலையில் (Torpor) இருக்கின்றனவாகவோ உள்ளன.[8] வேறுசில பூச்சிகள் சாதகமற்ற சூழ்நிலைகளைத் தாங்குவதற்காக அசைவற்ற நிலைகளான முட்டைகளாகவோ, கூட்டுப்புழுக்களாகவோ இருக்கும் நிலையை நீடித்து, சாதகமான சூழல் வரும்வரை விருத்தியைப் பின்போடுகின்றன (Diapause).[9] கணுக்காலிகளில் இன்னொரு பிரிவான ஓடுடைய கணுக்காலிகள் (Crustaceans) ஆட்சி செலுத்தும் பெருங்கடல்கள் சில வகை பூச்சி இனங்களையே கொண்டுள்ளது.

பெயர் வரலாறு

[தொகு]

பூச்சி, ஆங்கிலத்தில் Insect என்ற சொல் இலத்தீன் மொழியில் உள்ள சொல்லான insectum என்பதிலிருந்து தோற்றம் பெற்றுள்ளது. இன்செக்டம் என்பதன் பொருள் வெட்டப்பட்ட அல்லது பிரிக்கப்பட்ட உடல் என்பதாகும். இலக்கிய ரீதியில் வெட்டப்பட்ட (cut into) என்பதே ஆகும்.[10] உண்மையிலேயே பூச்சிகளின் உடல் மூன்று பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. மூத்த பிளினியே இலத்தீனில் insectum எனும் சொல்லை அறிமுகப்படுத்தினார். இச்சொல் கிரேக்கச் சொல்லான ἔντομος (éntomos) என்பதிலிருந்து இலத்தீனுக்குள் உள்வாங்கப்பட்டது. இக்கிரேக்கச் சொல்லை அரிஸ்ட்டாட்டில் பயன்படுத்தியுள்ளார். இதன் பொருள் வெட்டப்பட்ட (notched) உடல் என்பதே ஆகும். ஆங்கிலத்தில் insect எனும் சொல் இலக்கிய மூலாதாரமாக 1601-ல் பிலேமோன் ஹாலந்து என்பவருடைய நூலிலிருந்து மூத்த பிளினியினியால் ஆங்கிலத்திற்கு மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.[10]

மனிதருக்குப் பூச்சிகளால் விளையும் நன்மைகளும் தீமைகளும்

[தொகு]

தீங்குயிர்கள்

[தொகு]

மனிதர்களால் பல பூச்சிகள் தீங்குயிர்களாக (பீடைகளாக) அடையாளப்படுத்தப்பட்டுள்ளன. இவை வேளாண்மை மூலம் பயிர்நிலங்களில் விளைவிக்கப்படும் பயிர்களுக்கு, வீட்டுத் தோட்டத்தில் வளர்க்கப்படும் பயிர்கள், பூஞ்செடிகள் போன்றவற்றிற்கு, பயிர்விளைச்சலில் பெறப்பட்டு பாதுகாத்து வைக்கப்படும் தானியங்கள், காய்கறிகள், ஏனைய உணவு வகைகளுக்கு, கால்நடைகளுக்கு அல்லது நேரடியாகவே மனிதருக்குக் கேடு விளைப்பனவாக உள்ளன.[11] எனவே இவற்றை அழிக்க அல்லது கட்டுப்படுத்த பூச்சிக்கொல்லிகள், அல்லது வேறு தொழில்நுட்பங்கள், மேலாண்மை முறைகள் பயன்படுத்தப்படுகின்றன.[11] பூச்சிகொல்லிப் பயன்பாடு மனிதருக்கும், சூழலுக்கும் தீங்கு தருவதாக இருக்கின்றது. இதனால் ஒருங்கிணைந்த தீங்குயிர் மேலாண்மையானது பரிந்துரைக்கப்படுகிறது. இது பல இயல்பான அறிவுசார் மேலாண்மை நடைமுறைகளை ஒன்றிணைத்து சூழலுக்கு அதிகம் தீங்குதராத முறையில் தீங்குயிர்களினால் விளையும் கேடுகளைத் தடுக்க உதவுகின்றது.[12]

சில பூச்சிகள் மனிதர்களால் பயிர் செய்யப்படும் பயிர்களில் அல்லது அவற்றிலிருந்து பெறப்படும் விளைபொருளில் சாற்றை உறிஞ்சுவதால் அல்லது இலைகள், பழங்களை உண்ணுவதனால் தீங்கு விளைவிக்கின்றன. வெட்டுக்கிளி, நீள்மூஞ்சி வண்டு போன்றன வேளாண்மையில் தீங்கு விளைவிப்பனவாக இருக்கின்றன. அந்துப்பூச்சிகள் சேமித்து வைக்கப்படும் தானியங்களை நாசம் செய்கின்றன.

வேறுசில ஒட்டுண்ணி வாழ்வை மேற்கொண்டு பல இடர்களைத் தோற்றுவிக்கும் (எ.கா. பேன், மூட்டைப் பூச்சி). வேறுசில நோய்களை உருவாக்கும் நோய்க்காரணிகளைக் கடத்தும் நோய்க்காவியாகத் தொழிற்படும் (எ.கா. கொசு, இருசிறகிப் பூச்சிகள்). கறையான் போன்ற சில பூச்சிகள், கட்டட அமைப்புக்களை சேதப்படுத்துகின்றன. புத்தகப் பூச்சி (en:Bookworm (insect) போன்ற சில வகை வண்டுகள் புத்தகங்களைச் சேதப்படுத்துகின்றன.

நன்மை பயக்கும் பூச்சிகள்

[தொகு]


உயிரினங்கள்
பட்டியல்கள்
உயிரினங்களை வகைப்படுத்தல்
விலங்குகள் பட்டியல்
பூச்சிகள் பட்டியல்
மீன் வகைகள் பட்டியல்
பறவைகள் பட்டியல்
ஊர்வன பட்டியல்
பாலூட்டிகள் பட்டியல்
முதுகெலும்பற்றவை பட்டியல்

தொகு

சில பூச்சிகள் மனிதருக்கு மட்டுமன்றி உயிரியல் சூழலுக்கும் நன்மை பயப்பனவாக உள்ளன.

மகர்ந்தச் சேர்க்கையும் பரவலும்

[தொகு]

அனேகமான பூக்கும் தாவரங்களின் இனப்பெருக்கத்திற்குத் தேவையான மகரந்தச் சேர்க்கைக்குப் பல பூச்சிகள் உதவுகின்றன. தேனீ, குளவி, எறும்பு, பட்டுப்பூச்சி போன்றன மகரந்தச் சேர்க்கைமூலம் தாவரங்களின் இனப்பெருக்கத்திற்கும், பயிர்களின் விளைச்சலுக்கும் உதவுகின்றன. அதேவேளை பூச்சிகளுக்குத் தேவையான உணவு தாவரங்களிலிருந்து கிடைக்கின்றது. அத்துடன் விதைகளின் பரவலுக்கும் பூச்சிகள் உதவுவதனால், உயிரியல் பல்வகைமையையும் கூட்ட உதவுகின்றன.

பயன்தரும் பொருட்களின் உற்பத்தி

[தொகு]

பட்டுப்புழு மூலம் பட்டுநூல் பெறப்படுகின்றது. தேனீயானது தேனையும், மெழுகையும் உருவாக்குகின்றது. இவ்விரு பயன்பாட்டையும் முன்னிட்டு மனிதரால் இந்தப் பூச்சிகள் பல்லாண்டு காலமாக வளர்க்கப்பட்டு வருகின்றன.

கொன்றுண்ணி

[தொகு]

சில பூச்சிகள் தமது கொன்றுண்ணல் செயற்பாட்டினால் (எ.கா. சீமாட்டிப் பூச்சி (en:Ladybug), பின்னல் சிறகி (en:Lacewings), கும்பிடு பூச்சி (en:Praying mantids)), அல்லது தமது ஒட்டுண்ணி வாழ்வு முறையினால் (எ.கா. குளவி, இருசிறகிப் பூச்சிகள்), மனிதருக்குக் கெடுதல் விளைவிக்கும் தீங்குயிர்களைக் கொன்று அழிப்பதன் மூலம் மனிதருக்கு உதவுகின்றன.[13] ஒட்டுண்ணியாக இருக்கும் பூச்சிகள் பொதுவாகத் தமது விருந்து வழங்கிகளின் மேலேயோ, உள்ளேயோ முட்டைகளை இடும். முட்டைகள் பொரித்து வெளிவரும் குடம்பிகள் அவற்றை உண்பதனால் அழித்துவிடும்.[13] பூச்சிகளில் ஒட்டுண்ணியாக வாழும் பூச்சிகளைப் பூச்சியுண்ணும் பூச்சிகள் (Entomophagous insects) எனலாம். சில பூச்சிகளை அழிக்கும் வேறு பூச்சிகள் பூச்சியுண்ணிகள் எனப்படும். இவை மனிதருக்குக் கேடு விளைவிக்கும் பூச்சிகளை அழிக்கும்போது, மனிதருக்கு நன்மை பயக்கின்றன. எடுத்துக்காட்டாகச் சீமாட்டிப் பூச்சிகள் அசுவுணிகளை அழிக்கின்றன. இவ்வாறான பூச்சியுண்ணிகள் இல்லையெனில் பூச்சிகளின் எண்ணிக்கை கட்டற்று அதிகரிக்குமென ஆய்வுகள் கூறுகின்றன.[14]:328–348:400[15][16]

மனிதரின் உணவாக

[தொகு]

சில பூச்சிகளின் குடம்பிகள் அல்லது முதிர்நிலைகள், சில இடங்களில் மனித உணவாகவும் பயன்படுகின்றது.[17] இதனைப் பூச்சியுண்ணல் என்பர். சில இடங்களில் தமது சாதாரண உணவாகவே பூச்சிகளைப் பயன்படுத்துகின்றனர். பூச்சிகளிலிருக்கும் புரத ஊட்டச்சத்துக் காரணமாக இவற்றை மனிதருக்கான புரத உணவாகக் கொள்ளலாம் என்ற கருத்தும் உள்ளது.[14]:10–13 ஆனாலும் பல இடங்களில் இது ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை.[18] இருப்பினும் எதிர்காலத்தில் உலக மக்களின் உணவுத்தேவை அதிகரிக்கையில், பூச்சிகளின் எண்ணிக்கையும் மிக அதிகளவில் இருக்கையில் பூச்சியுண்ணல் மிகச் சாதாரணமானதாக மாறக்கூடும் என்று நம்பப்ப்படுகின்றது.[19].

மருந்து

[தொகு]

சில பூச்சிகளிலிருந்து கிடைக்கும் வேதிப்பொருட்கள் மனிதருக்குத் தேவையான மருந்துப் பொருட்களாகப் பயன்படுத்தப்படுகின்றன.[20]

வேறு பயன்கள்

[தொகு]

சில பூச்சிகளை மீன்பிடித்தலின்போது, மீனுக்கான இரையாகப் பயன்படுத்துவர்.[21]

கலாச்சாரத்தில் பூச்சிகள்

[தொகு]

ஸ்கிரப்வண்டுகள் (Scarab beetles) பண்டைய எகிப்து மற்றும் கிரேக்கம் மற்றும் உலகின் பழைய அசாதாரண கலாச்சாரம் போன்றவற்றில் கலாச்சாரக் குறியீடாக மதிக்கப்பட்டன.

அசைவு

[தொகு]
தமிழகக் கம்பளிப் பூச்சி

பூச்சிகள் நடத்தல், பறத்தல், நீந்துதல் என்று பலவைகைப்பட்ட அசைவுகளைக் கொண்டிருக்கின்றன. சில பூச்சிகள் (எ. கா. நீர்ப்பூச்சி (Water strider)) நீரின்மேல் நடந்து செல்லக் கூடியவையாக இருக்கின்றன.[22][23] பல பூச்சிகள் தமது வாழ்க்கை வட்டத்தின் ஒரு பகுதியை நீரினுள் கழிப்பனவாக இருக்கின்றன. நீரினுள் வாழ்வதற்கான செவுள்களும் (பூக்களும்) விருத்தியடைந்திருப்பதுண்டு. முதுகெலும்பிலிகளில் பூச்சிகள் மட்டுமே பறக்கும் தன்மை கொண்டனவாக இருப்பதே அவற்றின் வெற்றிகரமான விருத்திக்கு முக்கிய காரணமாகும்.[14]:186

பூச்சிகளில் வெவ்வேறு இனங்கள், வெவ்வேறு அசைவை அல்லது இடப்பெயர்ச்சியைக் கொண்டிருக்கும். ஒரு குறிப்பிட்ட பூச்சியிலேயே, வாழ்க்கை வட்டத்தின் வெவ்வேறு விருத்தி நிலைகள் வேறுபட்ட அசைவைக் காட்டி நிற்கும். எடுத்துக்காட்டாகப் பட்டாம்பூச்சியில் முட்டைகளும், கூட்டுப்புழுவும் அசைவற்ற நிலையில் இருப்பனவாகவும், குடம்பி நிலையான மயிர்க்கொட்டியானது சுற்றிழுப்பசைவு போன்ற அசைவினை ஒத்த ஒரு தனித்துவமான அசைவைக் கொண்டதாகவும்[24], முதிர்நிலையானது பறத்தல் அசைவைக் கொண்டதாகவும் இருக்கின்றன.

பறத்தல்

[தொகு]

பறக்கக்கூடிய முள்ளந்தண்டிலிக் கூட்டம் பூச்சிகளே ஆகும்.[25][26] சில கணவாய் இனங்களும் நீரின் பரப்பிலிருந்து 10 மீட்டர் மேலெழுந்து தாண்டக் கூடியன (தம்மை வேட்டையாடும் இனங்களிடமிருந்து தப்ப).[27]

சமூக வாழ்வும், தொடர்புகொள்ளலும்

[தொகு]
கறையான் புற்று

பொதுவாகப் பூச்சிகள் தனி வாழ்வு கொண்டனவாக இருப்பினும் சில பூச்சியினங்கள் சமூக வாழ்வைக் கொண்டிருக்கின்றன. தேனீ, எறும்பு, கறையான், குளவி போன்றவை ஒரு சமூக வாழ்வை மேற்கொள்வதுடன், பெரிய மிகவும் ஒழுங்குபடுத்தப்பட்ட குழுக்களாக வாழும் தன்மை கொண்டன[28][29]. சில பூச்சிகள் (எ.கா. காதுப்பூச்சி (en:Earwigs)) தாய்ப் பராமரிப்பை வழங்குவனவாக, அதாவது முட்டை, மற்றும் இளம் பருவநிலைகளைப் பாதுகாப்பனவாக இருக்கின்றன[30]. தேனீ, குளவி போன்றவற்றில் முதிர்நிலையானது, சந்ததிகளுடன் நேரடித் தொடர்பாடலைக் கொண்டிராவிடினும், சந்ததிக்குத் தேவையான உணவைச் சேமித்து வைத்து, அதிலேயே முட்டையை இடுவதனால், முட்டையிலிருந்து பொரித்து வெளிவரும் உயிருக்கு உணவு கிடைப்பதை உறுதி செய்வதன் மூலம் தாய்ப்பராமரிப்பு வழங்கப்படுகின்றது[31].

பூச்சிகள் பல்வேறு வழிகளில் தமக்கிடையே தொடர்பாடலைச் செய்வனவாகவும் இருக்கின்றன. தொட்டுணர்வு, வேதிப்பொருட்கள், சத்தங்கள், பார்த்துணர்தல் போன்ற வெவ்வேறு முறைகளில் பூச்சிகளிடையே தொடர்பாடல் நிகழ்கின்றது[32]. அந்துப்பூச்சிகளில், ஆண்கள் இன ஈர்ப்புச் சுரப்புகள் மூலம் பெண்களை வெகுதொலைவிலிருந்தே அறிந்து கொள்கின்றன. சில பூச்சிகள் சத்தங்களை ஏற்படுத்துவதன் மூலமும் (எ.கா. வெட்டுக்கிளி), வேறுசில ஒளியைச் செலுத்துவதன் மூலமும் (எ. கா. சில வகை வண்டு இனங்கள்) தொடர்பாடலை மேற்கொள்கின்றன. எறும்புகள், கறையான்கள் தமது உணர்விழைகளினால் தட்டித் தொட்டுணர்வினால் தொடர்பு கொள்கின்றன. தேனீக்கள் தமது நடனம் போன்ற அசைவுகளில் காட்டும் வேறுபாடுகளைக் கொண்டு தேனிருக்கும் தூரம், திசை என்பவற்றை தமது ஏனைய குழு உறுப்பினர்களுக்கு அறியத் தருகின்றன[14]:309–311. சில அதிர்வுகளை ஏற்படுத்துவதன் மூலமும் பூச்சிகள் தமக்குள் தொடர்பை ஏற்படுத்திக் கொள்கின்றன. வண்ணத்துப் பூச்சிகள் போன்ற சில பூச்சிகளில், சிறகுகளின் நிறம் போன்றனவும் தமது இனத்தைக் கண்டறிதல் போன்ற தொடர்பாடலுக்கு உதவுகின்றன.

குழுவாக வாழும் பூச்சிகளில் மிக நீண்ட தூரம் சென்ற பின்னரும், தமது குறிப்பிட்ட வாழிடத்தின் திசையறிந்து, மீண்டும் அதே இடத்திற்கு வரும் தன்மை காணப்படுகின்றது. இதனை வீடு திரும்புதல் எனலாம். மொனார்க் பட்டாம்பூச்சி எனப்படும் பட்டாம்பூச்சிகள், சில காலங்களில் வேறுபட்ட புவியியல் பிரதேசங்களுக்கு இடம்பெயர்ந்து, பின்னர், தமக்கேற்ற காலநிலை வந்ததும், மீண்டும் தமது பழைய இடத்திற்கே வரும் வல்லமை கொண்டனவாக இருக்கின்றன[14]:14.

இனப்பெருக்கமும் முளையவிருத்தியும்

[தொகு]
எறும்பில் பல்லுருத்தோற்றம்.
இடது: 7 உம் 'வேலையாள்', வலது: 2 உம் இராணி எறும்புகள்.
ஒரு வகை அந்துப்பூச்சியின் வேறுபட்ட தோற்றம் கொண்ட ஆண் (மேலே), பெண் (கீழே) பூச்சிகள்
மேற்கு அரைக்கோளத்தில் இருக்கும் Heliconius பட்டாம்பூச்சியில் பல்லுருத்தோற்றம்[33]

சில பூச்சிகள் பறத்தலின்போது கலவி கொள்வனவாக இருக்கின்றன. தேனீயின் கலவிப் பறப்பு ஒரு சிறந்த உதாரணமாகும்[34]. அனேகமான பூச்சிகள் முட்டை பொரித்தல் மூலம் வெளிவரும். தாயின் இழையங்களைக் கொண்ட ஒரு உறையினால் மூடப்பட்ட முட்டையினுள்ளே கருக்கட்டலும், விருத்தியும் நிகழும். ஏனைய கணுக்காலிகளின் முட்டைகளை விடவும் பூச்சிகளின் முட்டைகள் வறட்சியைத் தாங்கும் தன்மை கூடியனவாக இருக்கும். முட்டையினுள் இருக்கும் முளையத்தை மூடி இருக்கும் ஒரு மேலதிக மென்சவ்வான செரோசா கைட்டினாலான ஒரு புறத்தோலைச் சுரப்பதனால் நீரழப்பு தடுக்கப்படுவதே இதற்குக் காரணமாகும்[35]. ஆனாலும் சில பூச்சிகளில் இந்தப் புறத்தோல் இல்லாமையால், அவை ஈரலிப்பான இடங்களில் முட்டையிடும்.

பூச்சிகளில் ஒரு வருடத்தில் ஒரு சந்ததியையோ, அல்லது இரு சந்ததிகளையோ அல்லது பல சந்ததிகளையோ உருவாக்குகின்ற வெவ்வேறு இனங்கள் காணப்படுகின்றன[36]. பூச்சிகளில் இனப்பெருக்கமும் விருத்தியும், மிகவும் பன்முகப்படுத்தப்பட்டதாக இருக்கின்றது.

தாயுள்ளான முட்டை விருத்தி (Oviporous)

[தொகு]

கரப்பான் பூச்சி, வேறுசில செடிப்பேன்கள் முளையவிருத்தி முற்றாக நிகழ்ந்து, அவை பொரித்து வெளிவரத் தயாராகும் நிலைவரை தாயின் உடலின் உள்ளேயே வைத்திருக்கப்படும். இதனைத் தாயுள்ளான முட்டை விருத்தி (en:Ovoviviparity) எனலாம்[37]. இப்படியான பூச்சிகளில் முட்டை வெளியேறிய உடனேயே பொரித்து குடம்பி வெளிவரும் என்பதனால் சில பூச்சியியலாளர்கள் இதனை Ovolarviporous என்பார்கள்.

பிள்ளையீனும் தன்மை (Viviparous)

[தொகு]

கரப்பான் பேரினத்தைச் சேர்ந்த வேறுசில பூச்சிகள் முட்டையிடாமல், முழுமையான விருத்தி தாயின் வயிற்றிலேயே நிகழ்ந்தபின்னர், நேரடியாகப் புதிய உயிரினத்தை வெளியேற்றும்[14]:129, 131, 134–135. இது பிள்ளையீனும் தன்மை (Viviparous) ஆகும்.

பல்முளையம்

[தொகு]

வேறுசில பூச்சிகள் பல்முளையம் (Polyembryony) உருவாக்கும் தன்மையைக் கொண்டவையாக இருக்கும்[14]:136–137. அதாவது கருக்கட்டப்பட்ட முட்டையானது பலதடவை பிரிவடைந்து, சிலசமயம் ஆயிரக் கணக்கில் பூச்சிகளை உருவாக்கும் தன்மை கொண்டிருக்கும்[14].

கன்னிப்பிறப்பு

[தொகு]

கருக்கட்டல் நிகழாமலே, கலவியற்ற இனப்பெருக்க முறையில் முளையம் உருவாகி விருத்தியடைதல் கன்னிப்பிறப்பு (Parthenogenesis) எனப்படுகின்றது. பூச்சிகளில் நிகழும் கன்னிப்பிறப்பானது, பல்வேறுபட்ட பொறிமுறைகளினூடாக நிகழ்கின்றது[38]. இவ்வாறான தோன்றல்கள் ஒரு இனத்தில் ஆண், பெண் இரண்டுமாகவோ, அல்லது பெண் மட்டுமாகவோ, அல்லது ஆண் மட்டுமாகவோ இருக்கலாம்.

செடிப்பேன்களில் கலவியற்ற இனப்பெருக்கமான இவ்வகை கன்னிப்பிறப்பும், கலவிமுறை இனப்பெருக்கமும் மாற்றி மாற்றி ஒன்று அல்லது பல சந்ததிகளுக்குச் சுழற்சி முறையில் நடைபெறும்[39][40]. கோடை காலத்தில் பொதுவாகச் செடிப்பேன்கள் கன்னிப்பிறப்பினால் உருவாகும் பெண்களாக இருக்கும். பின்னர் இலையுதிர் காலத்தில் கலவிமுரை இனப்பெருக்கத்திற்காக ஆண்கள் உருவாக்கப்படும்.

தேனீ, குளவி, எறும்பு போன்றவற்றில் கன்னிப்பிறப்பினால் உருவாகும் தனியன்கள் ஆண்களாக இருக்கின்றன. ஆனாலும் கருக்கட்டல் மூலம் பெறப்படும் பெண் தனியன்களே மிக அதிகளவில் காணப்படும். இங்கே ஆண்கள் ஒருமடிய நிலையையும், பெண்கள் இருமடிய நிலையையும் கொண்டிருக்கின்றன[37].

இருபாலுயிரித் தன்மை

[தொகு]

பூச்சிகளில் ஆண், பெண் ஆகிய இனப்பெருக்க உறுப்புக்களையும் கொண்ட இருபாலுயிரிகள் (Hermaphroditism) அரிதாகவே இருப்பினும், ஒரு சில இனங்களில் இந்த இயல்பு காணப்படுகின்றது. செதிற்பூச்சியும் (Scale insect) அதற்கு நெருக்கமான ஒரு சில இனங்களும் மட்டுமே இவ்வகையான இருபாலுயிரி இயல்பைக் கொண்டிருக்கின்றன[41].

பல்லுருத்தோற்றம் (Polymorphism)

[தொகு]

வழமையிலிருந்து வேறுபட்ட இனப்பெருக்க, விருத்திநிலைகள் பூச்சிகளில் காணப்படுகின்றன.

மடியநிலை (Haplodiploidy)

[தொகு]

எறும்பு, தேனீ, கறையான், குளவி போன்ற இனங்களில் பல்லுருத்தோற்றம் சாதியமைப்பிற்கேற்ப காணப்படுகின்றது. அதாவது, ஒரு குறிப்பிட்ட குழுவிலிருக்கும், வெவ்வேறு தொழிலைச் செய்யும் அதன் உறுப்பினர்களிடையே தோற்றத்தில் வேறுபாடு காணப்படுகின்றது. உயிரணுக்களில் இருக்கும் நிறப்புரிகளின் தொகுதி எண்ணிக்கையில் இருக்கும் வேறுபாடே இதற்குக் காரணமாக உள்ளது. கருக்கட்டல் நடைபெறாத ஒருமடிய கருமுட்டை உயிரணுக்களிலிருந்து ஆண் பூச்சிகளும், கருக்கட்டலுக்குட்பட்ட இருமடிய உயிரணுக்களிலிருந்து பெண் பூச்சிகளும் உருவாகும். பெண் பூச்சிகள் குடம்பிகளாக உள்ள நிலையில், அவற்றிற்கு வழங்கப்படும் உணவின் தரம், அளவிற்கேற்ப அவை இராணியாகவும், வேலையாள்/போராளிகள் பூச்சியாகவும் மாற்றமடையும்.[42]

பாலின ஈருருத்தோற்றம் (Sexual dimorphism)

[தொகு]

சில பூச்சிகளில் ஆண், பெண் பூச்சிகள் தோற்றத்தில் குறிப்பிடத் தக்க வேறுபாட்டைக் கொண்டிருக்கும். ஆண்களிலும், பெண்களிலும்இருக்கும் இந்தத் தோற்ற வேறுபாட்டுக்கு, அவை வளரும் வீதத்தில் இருக்கும் வேறுபாட்டால், விருத்திக்கான காலத்தில் இருக்கும் வேறுபாடே காரணமென ஆய்வொன்று குறிப்பிடுகின்றது[43].

போலித்தன்மை (Mimicry)

[தொகு]

ஓர் இனத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள், வேறொரு இனத்தின் தோற்றத்தையொத்த அமைப்புடன் விருத்தியடைதல். ஓர் இனத்தைச் சேர்ந்த உறுப்பினர்களில் சில வேறொரு இனத்தை ஒத்திருப்பதுபோல் தோற்றவமைப்பைக் கொண்டிருப்பதனால், தனது சொந்த இனத்திலிருந்து வேறுபட்ட தோற்றவமைப்பைக் காட்டி நிற்கும். தோற்றவமைப்பானது உருவம், நடத்தை, எழுப்பும் சத்தம், மணம், வாழும் இடம், அல்லது வெவ்வேறு காலத்துக்கு ஏற்ற வடிவம் போன்ற ஏதாவது ஒன்றில் வேறுபாட்டைக் கொண்டிருக்கலாம்[44]. எடுத்துக்காட்டாகப் பட்டாம்பூச்சிகளின் உருவம் பல்வேறு வேறுபாட்டைக் காட்டுதல்.

விருத்தியில் காலமாற்ற விளைவு (Heterochrony)

[தொகு]

பூச்சிகளில் விருத்தியில் ஏற்படும் வெவ்வேறு நிகழ்வுகளில் காலமாற்றம் ஏற்படுவதனால், ஒத்த மரபணுத்தொகையைக் கொண்டிருந்தாலும் கூட, முன்னர் இருந்ததைவிடவும் வேறுபட்ட பருமன், உருவம் கொண்ட முதிர்நிலைகள் புதிதாகத் தோன்றும். இங்கு தோன்றும் முதிர்நிலைகள் தமது மூதாதையரிலிருந்து வேறுபட்டவையாகக் காணப்படும். இது இருவகையில் நிகழலாம்[45].

 • இளமையொத்த தோற்றம் (Neoteny): சில பூச்சிகள் தமது இளம் வளர்நிலைகளின் தோற்றவமைப்பை, தமது முதிர்நிலையிலும் தக்க வைத்துக்கொண்டிருக்கும். இங்கு விருத்தியானது மந்தமானதாக இருப்பதனால் (Paedomorphosis), அல்லது பாலியல் விருத்தி விரைவாக இருப்பதனால் (Progenesis), முதிர்நிலையை அடைந்தும் அவை தமது இளம் வளர்நிலைகளை ஒத்த தோற்றத்தையே கொண்டிருக்கும்.
 • முதுமை அதிகரித்த தோற்றம் (Peramorphosis): இது இளமையொத்த தோற்றத்திற்கு எதிராக இருக்கும் ஒரு நிலையாகும். இங்கே தமது முதிர்நிலைகளில், முன்னர் இருந்த முதிர்நிலைகளைக் காட்டிலும் அதிகரித்த விருத்தியைக் காட்டி நிற்கும். பருமனில் அதிகரித்ததாகவோ, அல்லது புதிய உறுப்புக்களைக் கொண்டதாகவோ புதிய முதிர்நிலைகள் இருக்கலாம்.

உருமாற்றமும், வாழ்க்கை வட்டமும்

[தொகு]

வெவ்வேறு இனப் பூச்சிகளின் வாழ்க்கை வட்டம் வேறுபட்டிருப்பினும், அனேகமானவை முட்டையிலிருந்து பொரித்து வெளிவரும். முட்டையிலிருந்து வெளிவரும் உயிரினத்தின் வளர்ச்சியானது, இழுபடும் தன்மையற்ற புறவன்கூட்டின் காரணமாகக் கட்டுப்படுத்தப்படுவதனால், வளர்ச்சியின்போது, சில தடவைகள் தோல்கழற்றலுக்கு உட்படும். பூச்சிகள் தமது புறவன்கூட்டினுள் வளர்ந்துகொண்டு போகையில், புறவன்கூட்டின் இறுக்கமான தன்மையின் காரணமாக ஒரு குறிப்பிட்ட அளவுக்குமேல் வளர முடியாமல் போகும். அப்போது சில இயக்குநீர்களின் தூண்டலால் தோல்கழற்றல் தொழிற்பாடு ஆரம்பிக்கும். இந்தத் தூண்டலால், மேற்றோலானது (Epidermis), பழைய உட்புறத்தோலில் (Endocuticle) இருந்து பிரிய ஆரம்பிக்கும். ஒவ்வொருமுறை தோல்கழற்றலின் போதும் பூச்சிகளில் உருமாற்றம் நிகழ்வதனால், பிரித்தறியக்கூடிய சில பருவநிலைகள் காணப்படும். ஒவ்வொரு தோல்கழற்றலும் ஒரு வளர்நிலை முடிவுக்கு வந்து அடுத்த வளர்நிலை உருவாவதைக் காட்டும்.

முழுமையான உருமாற்றத்திற்கு உட்படும் பூச்சி இனங்களில், ஒவ்வொரு பருவநிலையும் ஒன்றிலிருந்து ஒன்று மிகவும் வேறுபட்டிருப்பதுடன், பூச்சி தனது முதிர்நிலையை அடைவதற்கு முன்னராக, கூட்டுப்புழு என்றழைக்கப்படும் தொழிற்பாடற்ற, அசைவற்ற நிலையையும் உள்ளடக்கியிருக்கும். முழுமையற்ற உருமாற்றத்திற்குட்படும் பூச்சி இனங்களில், அவை தமது முதிர்நிலையை அடைவதற்கு முன்னர், முதிர்நிலையை ஓரளவு ஒத்த பல வளர்நிலைகள் காணப்படும். அந்நிலையில் அவை அணங்குப்பூச்சிகள் என அழைக்கப்படும்.

முழு உருமாற்றம்

[தொகு]
கைமனொப்தரா (Hymenoptera) வரிசையைச் சேர்ந்த பூச்சிகளில் முழு உருமாற்றம்.

முழு உருமாற்றம் அல்லது முழுமையான உருமாற்றத்திற்குட்படும் பூச்சிகளில் முட்டை அல்லது முளையம், குடம்பி, கூட்டுப்புழு, முதிர்நிலை எனப்படும் முக்கியமான நான்கு நிலைகள் காணப்படும். இந்த நான்கு நிலைகளும் உருவவியல் அடிப்படையில் மிகத் தெளிவான வேறுபாடுடைய நிலைகளாகும். இங்கே முட்டை பொரித்து வெளிவரும் நிலையான குடம்பியானது பொதுவாகப் புழுப் போன்ற வடிவத்தைக் கொண்டிருக்கும். அவை மயிர்களைக் கொண்ட மயிர்க்கொட்டி வடிவில், மிகவும் தடித்த புழுக்கள் வடிவில், அல்லது தட்டையான புழுக்கள் வடிவில் என்று வெவ்வேறு வடிவங்களில் காணப்படும். குடம்பிகளுக்கு அடுத்த நிலையான கூட்டுப்புழு நிலையானது அசைவுகளற்ற அல்லது மிகவும் குறைந்த அசைவைக்கொண்ட வடிவமாகும். இந்நிலையில் இவை ஒரு தடித்த உறையினால் (cocoon) மூடப்பட்டுக் காணப்படலாம். இந்தக் கூட்டுப்புழு நிலையில் இருக்கும்போதே உடல் விருத்தி நிகழ்ந்து தோல்கழற்றலின்போது முதிர்நிலை வெளிவரும். சிறகுகள், இனப்பெருக்க உறுப்புக்கள் முற்றாக விருத்தியடைந்த முதிர்நிலைகள் தோல்கழற்றலைத் தொடர்ந்து வெளிவரும்.

இவ்வகையான விருத்தியானது வெறெந்தக் கணுக்காலிகளிலும் காணப்படாத, ஒரு சிறப்பான இயல்பாகும். இவ்வகையான உருமாற்றம் பொதுவாக உள் இறக்கை அமைப்புடைய Endopterygota என்னும் துணை வகுப்பைச் சேர்ந்த பூச்சிகளில் காணப்படும்[14]. வண்டு, எறும்பு, தேனீ, குளவி, பட்டாம்பூச்சி, அந்துப்பூச்சி, இரு சிறகிப் பூச்சிகள் போன்றன இவ்வகையான உருமாற்றத்திற்குட்படும் பூச்சியினங்களாகும்[46].

குறை உருமாற்றம்

[தொகு]
வெட்டுக்கிளியின் முழுமையற்ற உருமாற்றத்தில் காணக்கூடிய இளம் பருவ நிலையான அணங்குப்பூச்சி, முதிர்ந்த நிலையான முதிர்நிலை உட்பட்ட வெவ்வேறு வளர்நிலைகள்

சில தொடர்ச்சியான தோல்கழற்றல் நிகழ்வுக்கு உட்பட்டு, படிப்படியான மாற்றங்களுடன் ஏற்படும் உருமாற்றம் குறை உருமாற்றம் அல்லது முழுமையற்ற உருமாற்றம் எனப்படும். இங்கு முட்டை, அணங்கு, முதிர்நிலை என்று மூன்று முக்கியமான நிலைகள் காணப்படும். ஆனாலும் அணங்குகள் சிலதடவைகள் தோல்கழற்றலுக்கு உட்பட்டும் வெவ்வேறு அணங்கு நிலைகளில் காணப்படும். சிறகற்ற அணங்காக முட்டையிலிருந்து வெளிவந்து, பின்னர் படிப்படியாகச் சிறகுகள், இனப்பெருக்க உறுப்புக்களைப் பெற்று முதிர்நிலையை அடையும். ஒவ்வொருமுறை தோல்கழற்றலின்போதும், முதிர்நிலையை அண்மிக்கும் இயல்புகள் அதிகரித்துச் செல்லும். தும்பி, கரப்பான், கறையான், புத்தகப்பூச்சி, வெட்டுக்கிளி, கும்பிடு பூச்சி (en:Praying mantids), காதுப் பூச்சி (en:earwigs), குச்சிப் பூச்சி (en:stick-insects), வெள்ளிப் பூச்சி (en:Siverfish) போன்றன இவ்வகையான உருமாற்றத்திற்குட்படும் பூச்சிகளுக்கு உதாரணமாகும்[46].

தும்பியில் முதிர்நிலைக்கு முன்னரான புறவன்கூட்டை உதிர்க்கும் பல தோல்கழற்றல் நிகழ்வுகள்

உடற்கூற்றியலும் உடலியக்கவியலும்

[தொகு]
பூச்சியின் உடற்கூற்றியல்
A- தலை   B- மார்பு   C- வயிறு
1. உணர்விழை
2. Ocelli (lower)
3. Ocelli (upper)
4. கூட்டுக்கண்
5. மூளை (தலை நரம்புத்திரள்)
6. முன்மார்பு
7. முதுகுப்புற குருதிக்கலன்
8. மூச்சுக்குழாய் (காற்றுத் துவாரங்களைக் கொண்ட தண்டுகள் இருக்கும்)
9. இடைமார்பு
10. கடைமார்பு
11. முன்னிறக்கைகள்
12. பின் இறக்கைகள்
13. நடுக்குடல் (இரைப்பை)
14. இதயம்
15. சூலகம்
16. பின்குடல் (சிறுகுடல், நேர்குடல்)
17. குதம்
18. சூலகக்கான்
19. நரம்பு நாண் (வயிற்று நரம்புத்திரள்)
20. மல்பீசியன் குழாய்கள்
21. கணுக்கால் மெத்தை
22. உகிர்
23. கணுக்கால்
24. கணைக்கால்
25. தொடை
26. Trochanter
27. முன்குடல் (crop, gizzard)
28. மார்பு நரம்புத்திரள்
29. coxa
30. உமிழ்நீர்ச்சுரப்பி
31. உணவுக்குழாய்க்குக் கீழான நரம்புத்திரள்
32. வாயுறுப்புக்கள்

வெளிப்புறம்

[தொகு]

பூச்சிகளின் முதிர்நிலைகள் கைற்றின் எனப்படும் கடினமான பதார்த்தத்தாலான புறவன்கூட்டினால் மூடப்பட்ட, துண்டங்களாகப் பிரிக்கப்பட்ட உடலைக் கொண்டிருக்கின்றன. உடல் துண்டங்கள், ஒன்றுடனொன்று தொடர்பு கொண்ட தலை, மார்பு, வயிறு என்ற மூன்று முக்கிய பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு ஒழுங்குபடுத்தப்பட்டிருக்கும்[47].

புறவன்கூடு

[தொகு]

புறவன் கூடானது வெளிப்புறமாகக் கைற்றினற்ற, மெழுகு போன்ற, நீரை உட்புகவிடாத தன்மை கொண்ட மெல்லிய ஒரு மேற்புறத்தோலையும் (epicuticle), உட்புறமாகக் கைற்றினால் ஆன மிகவும் தடிப்பான புறத்தோலையும் (procuticle) கொண்டிருக்கும். இந்தப் புறத்தோலானது வெளிப்புறமாக, மிகவும் திண்மையான கடினமாக்கப்பட்ட வெளிப்புறத்தோலையும் (exocuticle), உட்புறமாக, ஓரளவு நெகிழும் தன்மை கொண்ட, உறுதியான உட்புறத்தோலையும் (endocuticle) கொண்டிருக்கும்[14]:22–24. குடம்பி நிலை போன்ற மென்மையான உடல் கொண்ட நிலைகளில் இந்த புறவன்கூடு பெரிதும் ஒடுக்கப்பட்டிருக்கும்.

தலை

[தொகு]

தலைப் பகுதியானது ஒரு சோடி உணர்விழைகளையும், ஒரு சோடி கூட்டுக்கண்களையும், சிலசமயம் 1-3 தனிக்கண்களையும், பல்வேறு விதமாகத் திரிபடைந்திருக்கும் வாயுறுப்பு எனப்படும் துணையுறுப்புக்களையும் கொண்டிருக்கும். தலைப்பகுதியே உணர்வுகளுக்கான முக்கிய பகுதியாகக் காணப்படுகின்றது. இது மிகவும் தடித்த தலையுறையினால் மூடப்பட்டிருக்கும்.

மார்பு

[தொகு]

மார்புப் பகுதியானது முன்மார்பு, இடைமார்பு, கடைமார்பு என்று வரையறுக்கப்பட்ட மூன்று துண்டங்களைக் கொண்டிருக்கும். ஒவ்வொரு துண்டத்திலும், ஒரு சோடிக் கால்கள் வீதம், ஆறு துண்டங்களாக்கப்பட்ட கால்கள் இருக்கும். அத்துடன் மார்புப் பகுதியிலேயே இறக்கைகள் அமைந்திருக்கும். எல்லாப் பூச்சி இனங்களும் இறக்கைகளைக் கொண்டிருப்பதில்லை. சிலவற்றில் இரு சிறகுகளும், வேறு சிலவற்றில் இரு சோடிச் சிறகுகளும் காணப்படும். மார்புப் பகுதியின் ஒவ்வொரு துண்டமும் நான்கு மேற்பரப்பைக் கொண்டிருக்கும். அவை முதுகுப்பகுதி, வயிற்றுப்பகுதி, இரு பக்கமும் காணப்படும் பக்கவாட்டுப்பகுதிகள் ஆகும்[14].

வயிறு

[தொகு]

வயிற்றுப் பகுதியானது பொதுவாக 11 துண்டங்களைக் கொண்டிருக்கும். ஆனாலும் வெவ்வேறு பூச்சியினங்களில், இதன் அளவு குறைவாகவோ, அல்லது இணைந்த துண்டங்களாகவோ காணப்படும். அத்துடன் வயிற்றுப் பகுதியின் உள்ளேயே, சமிபாடு, சுவாசம், கழிவகற்றல், இனப்பெருக்கம் போன்ற செயற்பாடுகளுக்கான உள்ளுறுப்புக்கள் காணப்படும்[14]:22–48. வயிற்றுப் பகுதியின் வெளிப்புறமானது தலை, மார்புத் துண்டங்களை விடவும் கடினத்தன்மை குறைந்ததாகக் காணப்படும்.

இவையே பூச்சிகளுக்கான பொதுமைப்பாடான வெளித்தோற்ற அமைப்பாக இருந்தபோதிலும், இதில் பல வேறுபாடுகள் காணப்படும்.

உட்புறம்

[தொகு]

நரம்புத் தொகுதி

[தொகு]

பூச்சிகளின் நரம்புத் தொகுதியானது மூளை, வயிற்றுப்புற நரம்பு அல்லது நாண் எனப்படும் இரு பாகங்களைக் கொண்டிருக்கின்றது. தலைப்பகுதியானது 6 துண்டங்கள் ஒன்றாக இணைந்த பகுதியாகும். இதில் ஒவ்வொரு துண்டத்திற்குமான ஒரு சோடி நரம்புக்கலத்திரள் அல்லது, ஒன்றாக இணைந்த நரம்புக் கலங்கள் மூளைக்கு வெளிப்புறமாகக் காணப்படும். இவற்றில் முதல் மூன்று சோடி நரம்புக்கலத்திரளும் மூளையுடன் இணைந்த நிலையிலும், அடுத்த மூன்று சோடியும் இணைந்தபடி உணவுக்குழாய்க்குக் கீழாகவும் காணப்படும்.[14]:57.

மார்புத் துண்டங்களும் பக்கத்திற்கு ஒன்றாகச் சோடி நரம்புக்கலத்திரள்களைக் கொண்டிருக்கும். வயிற்றுத் துண்டங்களிலும் இதே போன்ற ஒழுங்குபடுத்தல் காணப்படினும், முதல் 8 துண்டங்களிலேயே இவ்வாறு இருக்கும். இணைதலினால் இந்த எண்ணிக்கை சிலவற்றில் மேலும் குறைவாக இருக்கும்[48].

ஒரு சில பூச்சிகளில் வலி போன்றவொரு உணர்வு அறியப்படுவதாகச் சில ஆய்வுகள் கூறுகின்றன[49][50]. ஆனாலும் இது தொடர்பில் முழுமையான கருத்திணக்கம் ஏற்படவில்லை[51].

சமிபாட்டுத் தொகுதி

[தொகு]
வெவ்வேறு பூச்சிகளில் வெவ்வேறு வடிவில் விருத்தியடைந்த வாயுறுப்புக்கள்
A. வெட்டுக்கிளியில் இருக்கும் ஆரம்ப வாயுறுப்பு, B. நக்கும் தன்மை கொண்ட தேனீயின் வாயுறுப்பு, C. குழாய்வழி தன்மை கொண்ட பட்டாம்பூச்சியின் வாயுறுப்பு, D. உறிஞ்சி எடுக்கும் தன்மை கொண்ட பெண் நுளம்பின் வாயுறுப்பு
a. உணர்கொம்பு; c. கூட்டுக்கண்; lb. கீழுதடு; lr. மேலுதடு; md. கீழ்த்தாடை; mx. மேல்தாடை; hp. கீழ்த்தொண்டை

பூச்சிகள் உண்ணும் உணவிலிருந்து, ஊட்டச்சத்துக்கள் பிரித்தெடுக்கப்படுவதில் இந்தச் சமிபாட்டுத் தொகுதி உதவுகின்றது[52]. உணவானது கூட்டுச்சர்க்கரை, புரதம், கொழுப்பு, கருவமிலம் போன்ற பருமூலக்கூறுகள் வடிவில் உள்ளெடுக்கப்படும். இந்த உணவானது சமிபாட்டுத் தொகுதியின் செயற்பாட்டினால், வளர்ச்சி, இனப்பெருக்கம், ஏனைய உடல் இயக்கங்களுக்குத் தேவையான ஆற்றலை வழங்குவதற்காக, சிதைமாற்றம் (catabolism) மூலம் எளிய மூலக்கூறுகளாக மாற்றப்படும்.

சமிபாட்டுத் தொகுதியானது, உடலின் நீளப்பாட்டிற்குச் செல்லும் மூடிய நீண்ட குழாய் அமைப்பையுடையது. வாயிலிருந்து, குதம் வரைக்கும் ஒரு வழிப் பாதையில் உணவையும், அதிலிருந்து பெறப்படும் பொருட்கள் மற்றும் கழிவுகளையும் எடுத்துச் செல்லும். இந்த அமைப்பானது முன்குடல் (foregut), நடுக்குடல் (midgut), பின்குடல் (hindgut) என்னும் முக்கிய மூன்று பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு பிரிவும் வேறுபட்ட தொழில்களைப் புரிவதாக அமைந்திருக்கும். இவற்றுடன் வாயுறுப்புக்களும் (mouthparts), ஒரு சோடி உமிழ்நீர்ச் சுரப்பிகளும், உமிழ்நீர்த் தேக்கங்களும் இணைந்து செயற்படும். இவை முன்குடலை அண்மித்த அமைப்புக்களாக மார்புப் பகுதியில் காணப்படும்[14]:70–77.

உமிழ்நீர்ச் சுரப்பிகளால் சுரக்கப்படும் உமிழ் நீரானது, உமிழ்நீர்த் தேக்கத்தில் சேமிக்கப்படும். பின்னர் உமிழ்நீர்க் கான் மூலம் வாயுறுப்புப் பகுதிக்கு எடுத்துச் செல்லப்படும். அங்கே வாயுறுப்புக்களின் அசைவினால், உணவுடன் சேர்க்கப்படும். பின்னர் வாயினுள் செலுத்தப்பட்டு, அங்கே உணவு உடைக்கப்படும்[52][53]. பின்னர் உணவுக்குழாயினூடாகச் செல்கையில் நொதியங்களின் தாக்கத்தால் உணவு சமிபாட்டுக்கு உள்ளாகி, பின்னர் எளிய மூலக் கூறுகள் உறிஞ்சி எடுக்கப்படும்.

சில பூச்சிகளில் சமிபாட்டுக்கான நொதியம் உடலின் வெளியே, உணவின் மேல் சுரக்கப்பட்டு, அங்கேயே பகுதியாகச் சமிபாடடையச் செய்யப்பட்டு பின்னர் உள்ளெடுக்கப்படும்[54]:31.

பூச்சிகளின் சுவாசம்

[தொகு]

பூச்சிகளின் சுவாசம் நுரையீரல் இன்றியே நடைபெறும். பூச்சிகளின் உடலின் உட்புறத்தில் காற்றை அல்லது வாயுவைத் தீவிரமாக அல்லது பரவலாகக் கக்கக்கூடிய உள்குழாய்களின் தொகுதியும் காற்றுப் பைகளும் (sac) காணப்படுகின்றன. பிராணவாயு பூச்சிகளின் அடிவயிற்றுப் பகுதியில் உள்ள ஸ்பிரக்கிள் (Spiracle) என்று சொல்லப்படும் பகுதியினால் உள்வாங்கப்படுகின்றது. குடம்பிகள், போலவே சில பூச்சிகளுக்குப் பூக்கள் காணப்படுகின்றன. அவற்றின் மூலம் நீரில் கலந்துள்ள ஆக்சியன் பூச்சிகள் உள்ளெடுக்கின்றன. சில பூச்சிகள் டொல்பின்கள் போல நீர்நிலைக்கு மேலே பாய்ந்து காற்றை நிரப்புகின்றன. இச்செயற்பாடு பூச்சிகளில் உள்ள விசேட கட்டமைப்புக்களால் மேற்கொள்ளப்படலாம்.[55]

பூச்சிகளின் பட்டியல்

[தொகு]

(குறிப்பு: இந்தப் பட்டியல் முழுமையானதல்ல.)

| | | | | | | | | | |
| | | | | | | | | | | | | | | | |
| | | | க்ஷ | ஸ்ரீ | #

மேற்கோள்கள்

[தொகு]
 1. 1.0 1.1 1.2 "So many insects". The Manduca Project. The University of Arizona. Revised: July 27, 2001. Archived from the original on 5 பிப்ரவரி 2014. பார்க்கப்பட்ட நாள் 29 சனவரி 2014. {{cite web}}: Check date values in: |date= and |archive-date= (help)
 2. "Red List" (PDF). ICUN. பார்க்கப்பட்ட நாள் 27 சனவரி 2014.
 3. 3.0 3.1 Chapman, A. D. (2006). Numbers of living species in Australia and the World. Canberra: Australian Biological Resources Study. pp. 60pp. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-642-56850-2. Archived from the original on 2009-06-09. பார்க்கப்பட்ட நாள் 2014-01-27.
 4. Wilson, E.O. "Threats to Global Diversity". Archived from the original on 2015-02-20. பார்க்கப்பட்ட நாள் 2014-01-27.
 5. Vojtech Novotny, Yves Basset, Scott E. Miller, George D. Weiblen, Birgitta Bremer, Lukas Cizek & Pavel Drozd (2002). "Low host specificity of herbivorous insects in a tropical forest". Nature 416 (6883): 841–844. doi:10.1038/416841a. பப்மெட்:11976681. Bibcode: Natur.416..841N 2002 Natur.416..841N. 
 6. Erwin, Terry L. (1997). Biodiversity at its utmost: Tropical Forest Beetles. pp. 27–40. In: Reaka-Kudla, M. L., D. E. Wilson & E. O. Wilson (eds.). Biodiversity II. Joseph Henry Press, Washington, D.C. {{cite book}}: |author= has generic name (help)CS1 maint: multiple names: authors list (link)
 7. Erwin, Terry L. (1982). "Tropical forests: their richness in Coleoptera and other arthropod species". Coleopt. Bull. 36: 74–75. 
 8. Debbie Hadley. "Where do insects go in winter?". About.com. பார்க்கப்பட்ட நாள் 19 April 2012. {{cite web}}: External link in |publisher= (help)
 9. Lee, Richard E, Jr. (1989). "Insect Cold-Hardiness: To Freeze or Not to Freeze". BioScience 39 (5): 308–313. doi:10.2307/1311113. http://www.units.muohio.edu/cryolab/publications/documents/Lee89_BioSci.pdf. 
 10. 10.0 10.1 Harper, Douglas (November 2001). "Online Etymological Dictionary". Online Etymological Dictionary. Logobee.com. p. 1. பார்க்கப்பட்ட நாள் 1 November 2011. {{cite web}}: External link in |publisher= (help); Unknown parameter |coauthors= ignored (help)
 11. 11.0 11.1 The State of Queensland (Department of Agriculture, Fisheries and Forestry) 2010–2014. (Updated 08 March 2012). "A-Z insect pest list". Queensland Government. பார்க்கப்பட்ட நாள் 29 சனவரி 2014. {{cite web}}: Check date values in: |date= (help)CS1 maint: numeric names: authors list (link)
 12. "Integrated Pest Management (IPM) Principles". U.S. Enviornmental Protection Agency. Archived from the original on 2015-08-10. பார்க்கப்பட்ட நாள் 29 சனவரி 2014.
 13. 13.0 13.1 "Predatory and Parasitic Insects". University of Florida. UF/IFAS Center for Landscape Conservation and Ecology. Last modified: April 30, 2010. பார்க்கப்பட்ட நாள் 29 சனவரி 2014. {{cite web}}: Check date values in: |date= (help)
 14. 14.00 14.01 14.02 14.03 14.04 14.05 14.06 14.07 14.08 14.09 14.10 14.11 14.12 14.13 Gullan, P.J. (2005). The Insects: An Outline of Entomology (3 ed.). Oxford: Blackwell Publishing. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-4051-1113-5. {{cite book}}: Unknown parameter |coauthors= ignored (help)
 15. "Biocontrol Network – Beneficial Insects". Biocontrol Network. Archived from the original on 2009-02-28. பார்க்கப்பட்ட நாள் 2009-05-09.
 16. Davidson, RH and William F. Lyon (1979). Insect Pests of Farm, Garden, and Orchard. Wiley, John & Sons, Incorporated. p. 38. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-471-86314-9.
 17. For Most People, Eating Bugs Is Only Natural
 18. Michels, John (1880). John Michels (ed.). Science. Vol. 1. American Association for the Advance of Science. 229 Broadway ave., N.Y.: American Association for the Advance of Science. pp. 2090pp. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-930775-36-9.{{cite book}}: CS1 maint: location (link)
 19. Maierbrugger, Arno (14 May 2013). "UN: Insects are 'food of the future' (video)". Inside Investor. பார்க்கப்பட்ட நாள் 17 May 2013.
 20. Dossey, Aaron T. (December 2010). "Insects and their chemical weaponry: New potential for drug discovery". Natural Product Reports (Royal Society of Chemistry (RSC Publishing)) 27 (12): Pages 1737–1757. doi:10.1039/c005319h. http://pubs.rsc.org/en/Content/ArticleLanding/2010/NP/C005319H. 
 21. Sherman, Ronald A.; Pechter, Edward A. (13 December 1987). "Maggot therapy: a review of the therapeutic applications of fly larvae in human medicine, especially for treating osteomyelitis". Medical and Veterinary Entomology (Journal compilation © 2009 The Royal Entomological Society) 2 (3): Pages 225–230. doi:10.1111/j.1365-2915.1988.tb00188.x. http://onlinelibrary.wiley.com/doi/10.1111/j.1365-2915.1988.tb00188.x/abstract. 
 22. John R. Meyer (Last Updated: 5 January 2007). "External Anatomy WINGS". Department of Entomology NC State University. NC State University. பார்க்கப்பட்ட நாள் 29 சனவரி 2014. {{cite web}}: Check date values in: |date= (help)
 23. John R. Meyer. "General Entomology, Locomotion". NC State University. பார்க்கப்பட்ட நாள் 17 சூன் 2014.
 24. Tufts University (22 July 2010). "Caterpillars crawl like none other: Unique means of animal locomotion has implications for robotics, human biomechanics". Simon Michael A, Woods William A Jr, Serebrenik Yevgeniy V, Simon Sharotka M, van Griethuijsen Linnea I, Socha John J, Lee Wah-Keat, Trimmer Barry A. Visceral-locomotory Pistoning in Crawling Caterpillars (Manduca sexta). Current Biology, 2010; DOI: 10.1016/j.cub.2010.06.059. Science Daily. பார்க்கப்பட்ட நாள் 21 மே 2014.
 25. "Examples of Arthropods". Your Dictionary, The Dictionary You Can Understand. LoveToKnow, Corp. Archived from the original on 2014-04-09. பார்க்கப்பட்ட நாள் 17 சூன் 2014.
 26. "Insect". Encyclopedia.com. பார்க்கப்பட்ட நாள் 17 சூன் 2014.
 27. Jabr, Ferris (2010). "Fact or Fiction: Can a Squid Fly Out of the Water?". Scientific American. http://www.scientificamerican.com/article.cfm?id=can-squid-fly. 
 28. "Bees and Social Insects". Archived from the original on 2014-03-17. பார்க்கப்பட்ட நாள் 29 சனவரி 2014.
 29. John R. Meyer (Last Updated: 16 March 2005). "Social Insects". Department of Entomology NC State University. NC State University. பார்க்கப்பட்ட நாள் 29 சனவரி 2014. {{cite web}}: Check date values in: |date= (help)
 30. Michael Staerkle & Mathias Ko ̈ lliker (Ethology). "Maternal Food Regurgitation to Nymphs in Earwigs ( Forficula auricularia)". Zoological Institute, Evolutionary Biology, University of Basel, Basel, Switzerland: pp. 114 (2008) 844–850. 
 31. "Social Insects". North Dakota State University. Archived from the original on 2008-03-21. பார்க்கப்பட்ட நாள் 2009-10-12.
 32. John R. Meyer (Last Updated: 16 January 2006). "Insect Communication". Department of Entomology NC State University. NC State University. பார்க்கப்பட்ட நாள் 29 சனவரி 2014. {{cite web}}: Check date values in: |date= (help)
 33. Meyer, A (Oct 2006). "Repeating patterns of mimicry" (Free full text). PLoS biology 4 (10): e341. doi:10.1371/journal.pbio.0040341. பன்னாட்டுத் தர தொடர் எண்:1544-9173. பப்மெட்:17048984. பப்மெட் சென்ட்ரல்:1617347. http://biology.plosjournals.org/perlserv/?request=get-document&doi=10.1371/journal.pbio.0040341. 
 34. "Follow A Queen Bee On Her Maiden Mating Flight". Popular Science. பார்க்கப்பட்ட நாள் 30 சனவரி 2014.
 35. Jacobs CG, Rezende GL, Lamers GE, van der Zee M. (June 2013). "The extraembryonic serosa protects the insect egg against desiccation.". Proc Biol Sci. 19 (280): 1764. doi:20131082. http://www.ncbi.nlm.nih.gov/pubmed/23782888. 
 36. "Glossary of Lepidopteran and Odonate anatomy". Rare species atlas. Virginia Department of Conservation and Recreation. 2013. பார்க்கப்பட்ட நாள் 14 June 2013.
 37. 37.0 37.1 "insect physiology" McGraw-Hill Encyclopedia of Science and Technology, Ch. 9, p 233, 2007
 38. Kirkendall, L. R. & Normark, B. (2003) Parthenogenesis in Encyclopaedia of Insects (Vincent H. Resh and R. T. Carde, Eds.) Academic Press. pp. 851–856
 39. Effect of nitrogen fertilization on Aphis gossypii (Homoptera: Aphididae): variation in size, color, and reproduction, E. Nevo and M. Coll, J. Econ. Entomol. 94: 27–32, 2001.
 40. Effect of nitrogen fertilizer on the intrinsic rate of increase of the rusty plum aphid, Hysteroneura setariae (Thomas) (Homoptera: Aphididae) on rice (Oryza sativa L.) பரணிடப்பட்டது 2010-09-09 at the UK Government Web Archive, G. C. Jahn, L. P. Almazan, and J. Pacia, Environmental Entomology 34 (4): 938–943, 2005.
 41. "The evolutionary origin of hermaphrodites in insects". The Institute of Evolutionary Biology. The University of Edinburgh. பார்க்கப்பட்ட நாள் 30 சனவரி 2014.
 42. William O. H. Hughes, Benjamin P. Oldroyd, Madeleine Beekman, Francis L. W. Ratnieks (2008-05-30). "Ancestral Monogamy Shows Kin Selection Is Key to the Evolution of Eusociality". Science (American Association for the Advancement of Science) 320 (5880): 1213–1216. doi:10.1126/science.1156108. பப்மெட்:18511689. Bibcode: 2008Sci...320.1213H. http://www.sciencemag.org/content/320/5880/1213.abstract. பார்த்த நாள்: 2008-08-04. 
 43. Vojte ˇ ch Jaros ˇ ı ́ k and Alois Honek. "Sexual differences in insect development time in relation to sexual size dimorphism" (PDF). Přírodovědecká fakulta Univerzity Karlovy v Praze. Facultas Rerum Naturalium. pp. 205–211. பார்க்கப்பட்ட நாள் 30 சனவரி 2014.
 44. Wickler, W. (1968). Mimicry in plants and animals. New York: McGraw-Hill.
 45. ERIC GUILBERT*, LAURE DESUTTER-GRANDCOLAS, PHILIPPE GRANDCOLAS (January 2008). "Heterochrony in Tingidae (Insecta: Heteroptera): paedomorphosis and/or peramorphosis?". Biological Journal of the Linnean Society 93 (1): 71-80. doi:10.1111/j.1095-8312.2007.00939.x. http://onlinelibrary.wiley.com/doi/10.1111/j.1095-8312.2007.00939.x/full. 
 46. 46.0 46.1 "Bugs, Lige as a bug, Museum Victoria Australia". Archived from the original on 2013-10-23. பார்க்கப்பட்ட நாள் 2014-02-04.
 47. "O. Orkin Insect zoo". The University of Nebraska Department of Entomology. Archived from the original on 2009-06-02. பார்க்கப்பட்ட நாள் 2009-05-03.
 48. Schneiderman, Howard A. (1960). "Discontinuous respiration in insects: role of the spiracles". Biol. Bull. 119 (119): 494–528. doi:10.2307/1539265. http://www.biolbull.org/cgi/reprint/119/3/494?maxtoshow=&HITS=10&hits=10&RESULTFORMAT=&fulltext=insect+thoracic+spiracle&andorexactfulltext=and&searchid=1&FIRSTINDEX=0&sortspec=relevance&resourcetype=HWCIT. 
 49. Eisemann, WK et al. (1984). "Do insects feel pain? — A biological view". Cellular and Molecular Life Sciences 40: 1420–1423. 
 50. Tracey, J et al.; Wilson, RI; Laurent, G; Benzer, S (18 April 2003). "painless, a Drosophila gene essential for nociception". Cell 113 (2): 261–273. doi:10.1016/S0092-8674(03)00272-1. பப்மெட்:12705873. 
 51. Sømme, LS (14 January 2005). "Sentience and pain in invertebrates" (PDF). Norwegian Scientific Committee for Food Safety. Archived from the original (PDF) on 17 அக்டோபர் 2011. பார்க்கப்பட்ட நாள் 30 September 2009.
 52. 52.0 52.1 "General Entomology – Digestive and Excritory system". NC state University. பார்க்கப்பட்ட நாள் 2009-05-03.
 53. Duncan, Carl D. (1939). A Contribution to The Biology of North American Vespine Wasps (1 ed.). Stanford: Stanford University Press. pp. 24–29. {{cite book}}: Cite has empty unknown parameter: |coauthors= (help)
 54. Nation, James L. (2001). "Digestion". Insect Physiology and Biochemistry (1st ed.). CRC Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8493-1181-0.
 55. Merritt R.W; KW Cummins K.W. & Berg M.B. (2007). An introduction to the aquatic insects Of North America. Kendall Hunt Publishing Company. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-7575-4128-3.{{cite book}}: CS1 maint: multiple names: authors list (link)

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பூச்சி&oldid=3924130" இலிருந்து மீள்விக்கப்பட்டது