உள்ளடக்கத்துக்குச் செல்

மீன் பிடித்தல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(மீன்பிடித்தல் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
மீன்பிடித்தல்

மீன் பிடித்தல் என்பது மீனவர்களாலும் சில நேரம் பொழுதுபோக்கிற்காகவும் செய்யப்படும் தொழில் அல்லது பொழுதுபோக்கு ஆகும். மீன்களை அவை வாழும் இயற்கை வளங்களான ஆறு, கடல், பெருங்கடல் பகுதிகளிலிருந்து பிடித்து மனிதப்பயன்பாட்டிற்குப் பயன்படுத்துவதே மீன் பிடிப்பு ஆகும்.[1] இத்தொழில் மூலம் மூன்று கோடியே எழுபது லட்சம் பேர் நேரடி வேலைவாய்ப்பையும் ஐம்பது கோடி பேர் மறைமுக வேலைவாய்ப்புகளையும் பெறுகின்றனர்.[2]

வரலாறு

[தொகு]

பண்டைய வரலாறுகளிலும், இன்றைய காலத்திலும் மீன் பிடிப்பு எல்லா இடங்களிலும் பரவியுள்ளது. ஆயினும் 18ம் நூற்றாண்டிலிருந்துதான் மீன் வகைகளின் அடிப்படையில் மீன் பிடித்தல் போன்றவற்றில் கவனம் செலுத்தப்பட்டது.[3]. இதன் பிறகே மீன்பிடிப்புப் பகுதியில் உள்ள மீன் வகைகள், மீன்களின் எண்ணிக்கை போன்றவை அறியப்பட்டு, மீன்களைத் தரம் பிரித்தலில் உள்ள சிக்கல்கள் நீக்கப்பட்டன.[4].

மீன் பிடி கருவிகள்

[தொகு]
ஈட்டி மூலம் மீன் பிடித்தல்

சிறிய வகை மீன்களைப் பிடிக்க தூண்டிலும், பெரிய வகை மீன்களைப் பிடிக்க வலையும் உபயோகப்படுத்தப்படும். அதுமட்டுமின்றி மீன் பிடிக்க, ஆதி காலத்து மனிதர்கள் ஈட்டியையும் பயன்படுத்தியதாகத் தெரிகிறது. இராமேசுவரம் பகுதியில் ஓலை வலை மீன்பிடி என்ற வகையில் பெண்கள் மீன்களைப் பிடிக்கிறார்கள். [5]

வலைகள்

[தொகு]

மீன் பிடி வலை' என்பது மீன் பிடிக்கப்பயன்படும் வலை ஆகும். மீன் வலை உறுதியான கயிறுகளால் முடிச்சிடப்பட்டு பின்னப்பட்டிருக்கும். தற்காலத்தில் நைலான் போன்ற ஒருவகை நெகிழியினால் செய்யப்பட்ட வலைகள் மீன்களைப் பிடிக்கப் பயன்படுத்தப்படுகிறது.

கரப்புகள்

[தொகு]
கரப்பு

மீன்களைச் சிக்க வைக்கும் கூடரம் போன்றா அமைப்புகள் கரப்புகளாகும். இவை கட்டு கரப்பு, வாளிக் கரப்பு என பல வகைப்படும்.

வலை வகைகள்

[தொகு]

மீன் பிடி வலைகள் மிதமான மீன்பிடி வலைகள், தீவிர மீன்பிடி வலைகளென இரு வகைப்படும்.

மிதமான மீன் பிடி வலைகள்

[தொகு]
வலை மூலம் மீன் பிடித்தல்-கேரளா
வலை மூலம் மீன் பிடித்தல்- ஒடிசா
  • செவுள் அல்லது பொருத்தப்பட்ட வலைகள்
  • மா பாச்சு வலை
  • சிக்கவைக்கும் வலை

தீவிர மீன்பிடிப்பு வலைகள்

[தொகு]
  • கோல் இழு வலை
  • அடிமட்ட பலகை இழு வலை
  • மிதவை இழுவலை
  • சூழ் வலை
  • சுருக்குவலை
  • ஓடு கயிறு வலை
  • குத்தீட்டி

தூண்டில் வகைகள்

[தொகு]
மரபுவழி தூண்டில் மூலம் மீன்பிடித்தல், மட்டக்களப்பு
புதுவகை இயந்திரத் தூண்டில், இங்கிலாந்து கெனட் எவொன் கால்வாயில்

ஆயிரங்கால தூண்டில்

[தொகு]

இது ஒரு எரிபொருள் ஆற்றல்மிக்க மீன் பிடிப்பு வலையாகும். இந்த வலையில் மிதவை மற்றும் அடிமட்டத்தில் உள்ள சுறா, சுவாட் போன்ற மீன்களைப் பிடிக்கலாம், இதில் மென் வலை மற்றும் கொக்கிகளை இடைவெளி விட்டுப் பொருத்திவிட வேண்டும். இதில் மீன்கள் இனக் கவர்ச்சிக்கு ஏற்றவாறு மாட்டிக் கொள்ளும்.

கழி தூண்டில்

[தொகு]

கழிதூண்டில் மூலம் மேற்பரப்பில் உள்ள ஒரே இன மீன்களைப் பிடிக்கலாம். சூரை மீன்களைப் பிடிக்க இந்தத் தூண்டில் மிகவும் ஏற்றதாகும். இந்தத் தூண்டிலில் இரையைப் பயன்படுத்திப் படகுக்குக் பக்கததில் உள்ள மீன்களைக் கவர்ந்து பிடிக்கலாம். தூண்டிலில் கொக்கி பொருத்தப்பட்டிருக்கும். இதை இயக்க இயந்திரம் அல்லது விசை பயன்படுத்தப்படுகிறது.

இரை மீன்கள்

[தொகு]
பாரம்பரிய மீன் பொறியுடன் வியட்நாம் மீனவர்கள்

தூண்டில் மீன்பிடிப்பில் உயிருடன் பொறி வைத்தல் முறையில் மீன்கள் பிடிக்கப்படுகின்றன. மீன்பிடிப்பு முறையில் இது ஒரு முக்கியமான காரணியாக உள்ளது. இம்முறையில் 21 இனங்களைச் சேர்ந்த மீன்கள் மற்ற மீன்களைப் பிடிக்க மீன்பொறியாகப் பயன்படுத்தப்படுகின்றன. இவற்றுள் 12 இன மீன்களை மட்டும் இரைமீனாக உயிருடன் மீன் பொறியில் பொருத்துவர். நீரடித்திட்டு மற்றும் உப்பு நீர்த்தேக்கங்களில் மீன்களைப் பிடிக்கக் கப்பலில் குறிப்பிட்ட இடத்தில் மீன் பொறிகளை வைத்திருப்பார்கள் மீன்களைப் பிடிக்கும்போது மட்டும் எடுத்துப் பயன்படுத்துவர். ஸ்பார்டெல்லாயிட்ஸ் டெலிகேட்டுலஸ், ஸ்.ஜபோனிகஸ், அப்போகான் சங்கின்சஸ், அ.சவர்ன்சிஸ் மற்றும் க்ரோமிஸ் டெமாடென்சிஸ் ஆகியவை சில மீன்பொறி இனங்களாகும்.

போலி இரை மீன்பிடிப்பு

[தொகு]

கணவாய் மீன்களைப் பிடிக்கப் போலி இரை மிகவும் உதவுகிறது. போலி இரை என்பது ஒரு வகையான ஈர்க்கும் இரை. இதைத் தூண்டிலுடன் இணைத்து இயந்திரம் மற்றும் கை மூலமாக மீன்களைப் பிடிக்கலாம். மீன்கள் இரையை இழுக்கும்போது மாட்டிக்கொள்ளும். இரவில் ஒளி ஈர்ப்பு மூலம் மீன்பிடித்தலுக்குப் போலி இரை மீன்பிடிப்பைப் பயன்படுத்துவார்கள்.

மீன்பிடிப்பு கலன்கள்

[தொகு]

பெரிய அளவில் மீன்பிடிக்க மீன்பிடிப்புக் கலன்கள் பயன்படுகின்றன. கடல் மற்றும் நன்னீர் மீன்பிடிப்பிற்கு, பெரிய வகையான மீன் பிடிப்பிற்கு ஏற்றால்போலப் படகுகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. இந்தியாவில் இரண்டு வகையான மீன்பிடிப்பு கலன்கள் உள்ளன. அவை:

  1. இயந்திரம் இல்லாமல் இயங்கக்கூடிய படகுகள்.
  2. இயந்திரப் படகுகள்

இயந்திரம் இல்லாமல் இயங்கக்கூடிய படகுகள்

[தொகு]

கட்டுமரம், கடல் தோண்டி, தோணி, மரப்பலகை தோணி, மிதவை தோணி, மசுலா படகு, கட்டமைப்பு படகு ஆகியவை இயந்திரம் இல்லாமல் இயங்கக்கூடிய படகுகள் ஆகும்.

இயந்திர படகுகள்

[தொகு]

மீன் பிடிக்கச் சிறு அல்லது நடுத்தர, சுமார் 10 மீட்டர் முதல் 15 மீட்டர் நீளமுள்ள படகுகளில் இயந்திரம் பொருத்தப்பட்டு அவைகளின் மூலம் தொலைவான இடஙகளுக்குச் சென்று மீன்பிடிக்கின்றனர். தூண்டில் படகு, பொறிப்படகு, செவுள்வலைப்படகு, விசைப்படகு ஆகியவை இயந்திர மீன்பிடிப்புப் படகுகளாகும்.

மீன்பிடி பொறி

[தொகு]

ஒரு குறிப்பிட்ட இடத்தில் வலைகளை வீசி விடுவார்கள். மாட்டிய மீன்கள் வலையிலிருந்து தப்பிச் செல்லாமல் இருக்க நங்கூரத்தை உபயோகிப்பார்கள். ஒரு சில வேளையில் பெரிய வலைகளைப் பயன்படுத்தி மீன்களைப் பொறிக்குள் சிக்க வைப்பார்கள். கெரிங், சூரை போன்ற மீன்களை இந்தப் பொறிமூலம் பிடிக்கலாம். வலைக்கு ஏற்றவாறு பொறி தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். தேவையில்லாத அல்லது குறைந்த எடை கொண்ட மீன்களைத் திரும்பக் கடலிலேயே விட்டுவிடுவார்கள். இந்தப் பொறியில் கடல் பறவை மற்றும் பாலூட்டிகளும் கூடச் சில வேளைகளில் மாட்டிக்கொள்ளும்.[6]

மீன்களைக் கவர உதவும் சாதனங்கள்

[தொகு]

மீன் இனங்களில் பல, மற்ற உயிர் இனங்களுடன் இணைந்து வாழ்கின்றன. அல்லது மிதக்கும் பொருள்களைச் சார்ந்து வாழ்கின்றன. இதனால் மீன்களும் மேலே மிதக்கும் தன்மை கொண்டுள்ளன. அப்பொழுது சில சாதனங்களைச் பயன்படுத்தி மேலே உள்ள மீன்களைப் பிடிக்கலாம். மீனவர்கள் இந்தச் சாதனங்ளைப் படகுடன் இணைத்து மீன்களைக் கவர்ந்து பிடிக்கின்றனர். (எ.க) ஓடுகயறு, மீன்பிடிப் பொறி, தூண்டில் போன்றவை.

மீன்பிடித்தல் வகைகள்

[தொகு]
  1. ஆழ்கடல் மீன் பிடித்தல்
  2. உள்நாட்டு நீர் நிலைகளில் மீன் பிடித்தல்

ஆழ்கடல் மீன்பிடிப்பு

[தொகு]
மீன்பிடிக்கும் இயந்திரப்படகு- வடகடல்

கடல் மற்றும் பேராழிகளில் மீன்பிடித்தலை ஆழ்கடல் மீன்பிடித்தல் என்கிறோம். இவ்வகை மீன்பிடித்தலுக்குப் பெரிய இயந்திரப் படகுகள் பயன்படுத்தப்படுகின்றன. சுறா, கெளுத்தி, கெண்டை, வெள்ளி போன்ற மீன்கள் இவ்வகை மீன்பிடிப்பில் பிடிக்கப்படுகின்றன. இந்தியாவில் கடல் மீன்பிடித்தல் ஒரு முக்கியமான அங்கம் வகிக்கிறது. பெரிய கடற்கரை வழி (8118 கி.மீ.) மற்றும் பொருளாதாரத் தனி உரிமைப் பகுதி (2.025 ச.கி.மீ.) ஆகியன முக்கிய மீன்வளம் அமைந்துள்ள இடங்களாகும். இந்தியாவில் கடல் மீன்பிடிப்பு வளம்மூலம் இரண்டுகோடி மக்களுக்கு வேலை வாய்ப்பு கிடைத்துள்ளது. கடல்மீன் பிடிப்பினால் பயன்படுத்தும் கப்பல் மற்றும் படகுகளின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது, அதாவது 2,80,491 கப்பல்கள் தற்போது பயன்படுத்தப்படுகின்றன. இதில் பழைமையான கப்பல்கள் 1,81,284 ஆகும். இயந்திர படகுகள் 44,578 மற்றும் விசைப்படகுகள் 53,684 ஆகும். மொத்த கடல் மீன் பிடிப்பு உற்பத்தியில் பழைய, இயந்திரம் மற்றும் விசைப் படகுகளின் பங்கு முறையே 9 விழுக்காடு முதல் 26 விழுக்காடு மற்றும் 65 விழுக்காடு ஆகும்.

கடல் பகுதிகளில் 100 மீ ஆழம்வரைத் தீவிர மீன்பிடிப்பு பகுதி ஆகும். ஆழ்கடல் பகுதிகளில் மீன்பிடித்தலின்போது குறிப்பிட்ட மீன்பிடிப்பு அளவைத் தாண்டுவதனால் மீன் அளவும் குறைகிறது. கடற்கரையோரப் பகுதிகளில் மீன்வளம் குறைந்து விட்டதால். ஆழ்கடல் மீன்பிடிப்பிற்குத் தற்போது வாய்ப்புகள் அதிகரித்து வருகின்றது. புதிதாக ஆழ்கடலில் மீன் பிடிக்க நீளடுக்குத் தூண்டில், சுருக்கு வலை மற்றும் கணவாய்ப் போலி இரை ஆகியவை உபயோகிக்கப்படுகின்றன.

உள்நாட்டு மீன்பிடிப்பு

[தொகு]
தூண்டில் மூலம் மீன் பிடித்தல்

உள்நாட்டு நீர்வளங்கள் ஆறு, கால்வாய், நதி, வெள்ளச்சமவெளி, நன்செய், கடற்கரைக்காயல் மற்றும் நீர்தேக்கங்களாகும். கடல் நீர்தேக்கங்கள் பிடிப்பு மீன் வளத்திற்கு மட்டும் பயன்படுகிறது. ஆனால் உள்நாட்டு நீர் தேக்கங்கள் வளர்ப்பு மற்றும் பிடிப்பு மீன் வளத்திற்குப் பயன்படுகிறது. இந்தியா உள்நாட்டு பிடிப்பு மீன் வளத்திற்கு முக்கியத்துவம் வாய்ந்த நாடாகும். உள்நாட்டில் உள்ள குளம், குட்டை, ஆறுகள், முகத்துவாரங்கள், சதுப்பு நிலங்கள் ஆகிய இடங்களில் மீன்பிடித்தலை உள்நாட்டு மீன்பிடித்தல் என்கிறோம். விலாங்கு, மிர்கல், கட்லா, ரோக் போன்ற மீன்கள் இவ்வகை மீன் பிடித்தலில் கிடைக்கின்றன.[7] கட்டுமரம், சிறிய படகுகள், டீசல் படகுகள், மிதவைகள், வலைகள் ஆகியவை இவ்வகையில் பயன்படுத்தப்படுகின்றன. இங்கு மொத்தம் 30% மீன் உற்பத்தியாகிறது. நிறைய உள்நாட்டு மீன் தேக்கத்தினால் பொருளாதார அளவில் மீன்வளம் உயர்ந்துள்ளது.

உலகில் சுமார் 500 மில்லியன் ஹெக்டர் உள்நாட்டு நீர் நிலைகள் உள்ளன. இதிலிருந்து வருடத்திற்கு மொத்த மீன் உற்பத்தியில் 40-70% உள்நாட்டு மீன்பிடிப்பாகும். நீர்வாழ் உயிர்களுக்கும் மீன் உற்பத்திக்கும் இடையே உள்ள தொடர்பு மீன்வள உற்பத்தியில் பெரும் பங்கு வகிப்பதாகும். வெப்பநிலை, கலங்கியநிலை, நீர் அமில-காரத் தன்மை, நீரில் கரையும் ஆக்ஸிஜன், தனித்துள்ள கரியமில வாயு, நீரின் மொத்த அமிலத்தன்மை, மண் வெப்பநிலை, மண் அமில காரத்தன்மை, மன் அங்ககக் கரி. மண் பாஸ்வரம், உப்பின் காரச் சத்து மற்றும் கடலில் பெரிய தாவரத் திறன் இவை அனைத்தும் அடங்கியது தான் நன்னீரியல் மற்றும் ஆற்று நீர் மீன்பிடிப்பு பகுதியின் வழியலகுகளாகும்.


ஆறுகளில் மீன் பிடிப்பு

[தொகு]

இந்திய ஆற்று மீன்வளங்கள் இரு வகைப்படும் அவை

  1. இமாலய ஆற்று வளம் (கங்கை, சிந்து, மற்றும் பிரம்மபுத்திரா)
  2. தீபகற்ப இந்திய ஆறுகள் (கிழக்கு மற்றும் மேற்கு கடற்கரை ஆறுகள்)

ஆறுகளின் மீன் உற்பத்தியைப் பாதிக்கும் காரணிகள்

[தொகு]
  • மீன்பிடிக்கத் தகுந்த காலநிலை
  • நிலை இல்லாமல் பிடிக்கும் மீன் அளவுகள்
  • ஆற்று நீரை அதிகம் பயன்படுத்துதல்
  • நீரின் ஊட்டச்சத்து மற்றும் மாசுத்தன்மை
  • குறைந்த உள் கட்டமைப்புகள் மற்றும் சேவைகள்
  • சமுக பொருளாதாரம் மற்றும் சமுக கலாச்சாரத்தைப் பொருத்தது.

இவை ஆறுகளில் மீன் உற்பத்தியப் பாதிக்கும் காரணிகளாகும்.

மீன் உணவு

[தொகு]
உலர்த்தப்பட்ட கருவாடு
நெத்திலிக்கருவாடு
ஆயிரை

மீன்களில் பொதுவாக 60 - 80 விழுக்காடு ஈரப்பதமும், 15 - 24 விழுக்காடு புரதச்சத்தும், 3 - 5 விழுக்காடு கொழுப்புச்சத்தும், 0.4 - 2.0 விழுக்காடு தாது உப்புக்களும் உள்ளன. தாது உப்புக்களைப் பொறுத்த வரையில் சோடியம், பொட்டாஷியம், கால்சியம், மக்னீசியம், இரும்பு, அயோடின், குளோரின் கந்தகம், பாஸ்பரஸ், மாங்கனீஸ், தாமிரம், துத்தநாகம், கோபால்ட், ஆர்செனிக் மற்றும் ஃபுளோரின் போன்ற சத்துக்கள் அடங்கி உள்ளன.[8]

தாவர உணவுகளிலிருந்து கிடைக்கும் புரதம் குறைபாடு கொண்ட முட்டை மற்றும் பிற மாமிசங்களை விட மீன்கள் தரமான மாமிசப் புரதங்களை நமக்கு அளிக்கின்றன. மேலும் மீன் இறைச்சியின் கொழுப்புகளில் கொலஸ்டிரால் எனப்படும் உடலுக்குக் கேடு விளைவிக்கும் கொழுப்பு இல்லை. இதன் விலையும் ஆடு, கோழி போன்ற பிற இறைச்சியுடன் ஒப்பிடும்போது மலிவாகவே உள்ளது. இதுவும் மீன் பிடித்தல் நடைபெற ஓர் காரணமாகிறது. மேலும் மீன்கள் கடல்சார் உணவு உற்பத்தி மற்றும் ஏற்றுமதியில் முக்கிய பங்கு வகிக்கின்றன.[8]

கடல் சார்ந்த பொருட்கள்

[தொகு]

மீன் பிடித்தலின்போது மீன் மட்டுமின்றி, பிற கடல் உயிரினங்களையும் பிடிக்கும் பழக்கம் உள்ளது. இதில் உணவுக்காக மட்டுமின்றி அலங்காரம் மற்றும் அணிகலன்களுக்கான முத்து, சிப்பி போன்றவைகளும் மீனவர்களால் கரைக்கு கொண்டு வந்து விற்பனை செய்யப்படுகிறது. கடல் சார்ந்த பகுதிகளில் கருவாடு, நண்டு போன்ற உணவு வகைகளும் கிடைக்கும்.

மீன் பிடித்தல் தொடர்பான தொழில்கள்

[தொகு]

மீன் பிடித்தல், மீன்களைச் சந்தைப்படுத்துதல், பிடிபடும் மீன்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்தல், அளவுக்கதிகமாகச் சிறிய மீனினங்கள் பிடிபடும் காலகட்டத்தில் அவற்றைப் பதனிட்டு பாதுகாத்து வைத்தல் ஆகியன மீன்பிடிப்புத் தொடர்பான பிற தொழில்களாகும். சில நாடுகளில் அந்தந்த நாடுகளின் கடற்றொழில் நீர்வள துறை இப்பணிகளை மேற்கொள்கிறது.

மீனினங்கள்

[தொகு]

மீன்கள் பெரும்பாலும் குழுவாகவும் தனித்தும் இருந்தாலும், அவை அனைத்தும் முதுகெலும்புள்ள உயிரின வகையைச் சார்ந்தவை . இவை அளவு, உருவம், அமைப்பு, உயிரியல் பண்புகள் மற்றும் வாழ்விடங்கள் ஆகியவற்றில் மாறுபட்டுக் காணப்படுகின்றன. நெல்சன் என்ற ஆய்வாளர் 1981-ல், உலகில் 21,723 மீன் இனங்கள், இதில் 4,044 பேரினங்கள், 445 குடும்பங்கள் மற்றும் 50 வகை மீன்களென வகைப்படுத்தினார். டே என்ற அறிஞர் 1989-ல் பிரித்தானிய இந்தியாவில் மட்டும் 1418 இனங்களும்,இதன் கீழ் 342 பேரினங்களும் இருந்ததாகக் குறிப்பிட்டுள்ளார். 1991-ல்தல்வார் என்பவரின் மதிப்பீட்டின்படி 969 பேரினங்களும், 254 குடும்பங்களும் மற்றும் 40 வகைகளும் உள்ளன. உலகில் காணப்படும் மீன் வகைகளில் 80 சதவீதம் இந்தியாவில் காணப்படுகிறது. அவற்றில் இனங்கள் 11.72%, பேரினங்கள் 23.96% மற்றும் 51% குடும்பங்கள் தமிழ் நாட்டில் காணப்படுகின்றன.

தெற்கு ஆசியா, ஆப்பிரிக்கா, தென் மற்றும் மத்திய அமெரிக்கா போன்ற வெப்ப மண்டலப் பகுதியில் காணப்படும் மீன்களின் பேரினங்கள் வேறுபடுகின்றன. ஆனால், சில குடும்பங்கள், இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட கண்டங்களிலும் காணப்படுகின்றன. தென் ஆசியாவில் கெண்டை மீன்கள் (சைப்ரின்டயே) மற்றம் கெளுத்தி மீன்கள் (சில்ராய்டயே), இவை இரண்டும் மேம்பட்ட மீன் வகைகளாகும் [9]).

மக்கள்

[தொகு]

மீன் பிடித்தல் என்னும் இத்தொழிலைச் செய்பவர், மீனவர் ஆவார்.இவர்கள் பரதவர்கள் எனவும் அழைக்கப்படுகின்றனர். பண்டைத் தமிழ் நூல்கள் கடலும் கடல் சார்ந்த நிலப்பரப்பும் உடையநெய்தல் நில மக்களின் ஒரு தொழிலாக மீன் பிடித்தல் குறிப்பிடப்படுகிறது.

தமிழக மீனவர்கள் அடிக்கடி இலங்கை இராணுவப் படையினரால் தாக்கப்படும் சம்பவங்களும் நடைபெற்று வருகிறது[10]. பெரும்பாலும் மீன் பிடித்தல் ஏரி, ஆறு, கடல் அல்லது குளம் போன்ற பகுதிகளில் நடைபெறும், சில சமயங்களில் கிணற்றிலும் நடைபெறும்.

இந்திய மீன்பிடிப்பு

[தொகு]

இந்தியாவில் மீன் பிடிப்பு மூலமாக 68 விழுக்காடு மீன் கிடைக்கிறது. இம்முறையில் மீன்வளத்தைப் பெருக்குவதற்கு நாம் எந்தவொரு நடவடிக்கையும் எடுப்பதில்லை. இயற்கையில் தாமாகவே கிடைக்கும் மீன்கள் பிடிக்கப்படுகின்றன. ஏரி, நீர்தேக்கம், ஓடை, ஆறு, மற்றும் கடல் ஆகிய இடங்கள் மீன் பிடிக்கப் பயன்படும் இடங்களாகும்.

இந்தியாவின் நீர்வளம் மீன்பிடித்தல் தொழிலுக்கு ஏற்றதாகும். உலக அளவில் இந்தியா மீன் உற்பத்தியில் மூன்றாவது இடமும் மற்றும் உள்நாட்டு மீன் உற்பத்தியில் இரண்டாவது இடமும் வகிக்கிறது. இந்த மீன்வளத்துறையின் மூலம் சுமார் 11 கோடி மக்கள் பகுதிநேர அல்லது முழுநேர வேலைவாய்ப்பைப் பெறுகின்றனர். மேலும் பல்லாயிரக்கணக்கான மக்களின் துணைத்தொழிலாக மீன் வளர்ப்பு மற்றும் மீன்பிடித்தல் விளங்குகிறது. கடல் வளம் மூலமும் உள்நாட்டு நீர் வளம் மூலமும் கிடைத்த மீன் உற்பத்தி 3.9 கோடி டன் மற்றும் 4.5 கோடி டன் ஆகும்.

இந்திய நாட்டின் கடற்கரை மற்றும் ஆற்றுப்படுகையில் வாழும் ஏறக்குறைய 1.5 கோடி மக்களின் வலுவான வருமானம் மற்றும் வேலைவாய்ப்பு வழங்கும் துறையாக மீன்வளத் துறை விளங்குகிறது. இது மக்களுக்கு மீன்வளர்ப்பை ஊக்குவித்தல், மீன்விதை வங்கி அமைத்தல், கூடுகளில் மீன் முட்டைகளை வளர்த்தல், அலங்கார மீன் வகைகளை வளர்த்தல் ஆகிய பல திட்டங்களைத் தீட்டியுள்ளது. இத்துறை மலிவான மற்றும் தரமான மீன் புரதம் வழங்கும் துறையாகவும், வருடத்திற்கு ஏறக்குறைய 10 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேலாக அந்நியச் செலாவணி ஈட்டும் துறையாகவும் விளங்குகிறது. மீன்வளத்துறை இந்திய நாட்டின் வலுவான பொருளாதார வளர்ச்சிக்கும் வழிகோலுகிறது.

சராசரியாக இந்தியாவில் உள்ள 291 சிறிய நீர்த்தேக்கங்களில் 49.90 யீல்டும் 110 நடுநிலை நீர்த்தேக்கங்களில் 12.30 யீல்டும் 21 பெரிய நீர்த்தேக்கங்களில்11.43 யீல்டும் 422 குளங்களில் 20.13 யீல்டும் மீன்பிடிப்பு மூலம் மீன்கள் கிடைக்கின்றன.[11]

இந்தியா முழுவதும் நன்னீர் வளத்தினால் நிறைந்துள்ளது. ஆறு, கழிமுகம், மற்றும் ஏரிகளில் நன்னீர் உள்ளது. இந்தியாவில் மீன்வளம் ஐந்து வகையாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அவை சிந்து (கிளை ஆறுகள்), கங்கை, பிரம்மபுத்திரா கிழக்கு மற்றும் மேற்கு கடற்கரை ஆற்று மீன்வளங்களாகும். இந்த ஆறுகளிலிருந்தும் இதன் துணையாறுகள், கால்வாய்கள் ஆகியவற்றில் 930 மீன் இனங்கள் 326 பேரினங்கள் உள்ளன.

கங்கை பகுதியின் மீன்வளம்

[தொகு]

கங்கைஆற்றுப் பகுதியில் 89.5% மீன்குஞ்சுகள் உற்பத்தியாகின்றன. இங்குள்ள மீன்கள் கெண்டை மீன் வகைகள், கெளுத்தி, விரால் மீன், மடவை, விலாங்கு மீன் மற்றும் இறால் போன்ற பலவகைகள் ஆகும். ஆற்றில் மண் அரிப்பு, தண்ணீர் அளவு குறைதல், தண்ணீர் பின் வாங்குதல், விட்டு விட்டு மீன் பிடித்தல் இவை அனைத்தும் இந்தப் பகுதியில் அதிகம் காணப்படுவதால் மீன் உற்பத்தி குறைகிறது. இந்தப் பகுதிகளில் கொண்டை வலை, வீச்சு வலை, மற்றும் துரிவலை. இவ்வகையான வலைகளை மக்கள் மீன்பிடிக்கப் பயன்படுத்துகின்றனர்.

கோதாவரி ஆற்று மீன்வளம்

[தொகு]

கோதாவரி ஆற்றில் கொண்டை, கெளுத்தி, இறால் ஆகிய மீன்கள் கிடைக்கின்றன. இந்தியாவில் அதிகமான இறால்கள் இங்குதான் கிடைக்கின்றன. இப்பகுதியில் செவுள் வலை, சூழ்வலை, மற்றும் காப்பு வலைகள் பயன்படுத்தி மீன் பிடித்தல் நடைபெறுகிறது.

காவேரி ஆற்று மீன் வளம்

[தொகு]

காவேரி ஆற்றில் 80 வகை மீன் இனங்கள், 23 குடும்பத்தைச் சேர்ந்த மீன் வகைகள் உள்ளன. இங்கு கிடைக்கும் மீன்கள் மற்ற ஆறுகளிலிருந்து வேறுபட்டுக் காணப்படுபவையாகும். கெண்டை, கெளுத்தி, ரோகு, நெத்திலி, நெய்மீன் இன்னும் பல மீன்கள் காவேரி ஆற்றில் கிடைக்கும் மீன் இனங்களாகும்.

இந்தியாவில் மீன் உற்பத்தி

[தொகு]
இந்தியாவில் மீன் உற்பத்தி

உலக அளவில் இந்தியா மீன் உற்பத்தியில் இரண்டாம் இடத்தில் உள்ளது. ஆண்டிற்கு 6.9 மில்லியன் மெட்ரிக் டன் மீன் உற்பத்தியாகிறது. மீன் வளத்துறையின் கணக்குப்படி 2005 - 2006-ல் ரூ.34,755 கோடி மொத்த உள்நாட்டு உற்பத்தியாகும். இதில் தேசிய மொத்த உள்நாட்டு உற்பத்தி 1.2 விழுக்காடு மற்றும் வேளாண்மையின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 5.3 விழுக்காடு எனினும் தமிழ்நாட்டில் மட்டும் 2005-2006ல் மீன்வளத்துறையின் பங்கு நாட்டு உற்பத்தியில் 4.44 விழுக்காடென மதிப்பிடப்பட்டுள்ளது. அண்மை காலமாகக் கடல் மீன் வளர்ப்பு உற்பத்தியிலிருந்து உள்நாட்டு மீன்வள உற்பத்தி படிப்படியாக முன்னேறி வருகிறது.

இந்திய மீன்வளத்துறை சார் நிறுவனங்கள்

[தொகு]
  • மத்திய மீன் வளக்கல்வி நிலையம், மும்பை, மகாராஷ்டிரா
  • மத்திய உவர்நீர் மீன்வளர்ப்பு நிலையம், சென்னை, தமிழ்நாடு
  • மத்திய நன்னீர் மீன் வளர்ப்பு ஆராய்ச்சி நிலையம், பாரக்பூர், மேற்கு வங்காளம்
  • மத்திய நன்னீர் மீன் வளர்ப்பு நிலையம், புவனேஸ்வர், ஒரிஸா
  • மத்திய கடல்நீர் மீன் வளர்ப்பு நிலையம், கொச்சின், கேரளா
  • மத்திய மீன் வளத் தொழில் நுட்ப நிலையம், கொச்சின், கேரளா
  • தேசிய மீன் மரபணு வளக் குழு, லக்னோ, உத்திரப்பிரதேசம்
  • குளிர்நீர் மீன்வள ஆராய்ச்சி இயக்குநரகம், பிம்டால்
  • தேசிய மீன்வள மேம்பாட்டு வாரியம்
  • தமிழ்நாடு அரசு – மீன் வளத்துறை [12]

தமிழக மீன்பிடிப்பு

[தொகு]

தேசிய அளவில் தமிழ்நாடு மீன்பிடித்தல் மற்றும் வளர்ப்பில் நான்காவது மாநிலமாகத் திகழ்கிறது. மிக நீண்ட கடற்கரையும் (1076 கி. மீ), அகலமான கண்டத்திட்டும், கடல் சார்ந்த மீன்வளர்ப்பை ஊக்குவிக்கின்றன. தமிழகக் கடற்கரையை ஒட்டி 13 மாவட்டங்களில் பரவியுள்ள சுமார் 591 மீனவக் கிராமங்கள் உள்ளன. தூத்துக்குடி மாவட்டம் தமிழகத்தின் முதன்மை மீன்பிடித் துறைமுகமாகும். அதனைத் தொடர்ந்து சென்னை, சின்ன முட்டம்(கன்னியாகுமரி மாவட்டம்) ஆகியவை மீன்பிடித் துறைமுகங்களாக விளங்குகின்றன. இவை தவிர சிறிய அளவில், பழையாறை, வாலி நோக்கம், குளச்சல், நாகப்பட்டினம் ஆகியவை சிறு மீன்பிடித் துறைமுகங்களாகச் செயல்படுகின்றன.

தமிழகத்தில் மீன் உற்பத்தி

[தொகு]

கடல் சார் மீன் உற்பத்தியில் 40 விழுக்காடு நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் இராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களிலிருந்து பெறப்படுகிறது. 2007-08 ஆம் ஆண்டு மீன் கொள்முதல் 3,93,266 டன் ஆகும்.[13] தமிழ் நாட்டில் 370 ஹெக்டேர் பரப்பில் உள்நாட்டு நீர்நிலைகளும், 63,000 ஹெக்டேர் பரப்பில் நதி முகத்துவாரம், காயல்கள், சதுப்புநிலங்களும் உள்ளன. எண்ணூர் மற்றும் புலிக்காட் ஏரிகளில் இறால் மீன் செயற்கை முறையில் வளர்க்கப்படுகிறது. 2007-08 ஆண்டிற்கான மொத்த மீன் உற்பத்தி சுமார் 64,504 டன் ஆகும். தமிழகத்தில் மவட்டங்களுக்குள் 10 விழுக்காடு மீன் பிடிப்புடன் வேலூர் மாவட்டம் முதல் நிலையில் உள்ளது. கடலூர், சிவகங்கை, விருதுநகர் ஆகிய மாவட்டங்கள் 9 சதவித மீன் பிடிப்புடன் இரண்டாம் நிலையில் உள்ளன.[14]

இராமேசுவரம் மீன் பிடித்தலுக்கும் கடல்சார் தொழிலுக்கும் பெயர் பெற்றது. இந்தத் தீவில் பிடிக்கப்படும் மீன்கள் பதப்படுத்தப்பட்டு பல்வேறு இடங்களுக்கும், வெளி நாடுகளுக்கும் அனுப்பபடுகின்றன. எனவே இத்தீவு கடல் சார் உணவு உற்பத்தி மற்றும் ஏற்றுமதியில் முக்கிய பங்கு வகிக்கிறது.

கூடு வைத்து மீன் பிடித்தல்

[தொகு]

கடலில் கூடு வைத்து மீன் பிடிக்கும் மிகப் பழைமையான முறையை இன்றளவும் இராமேசுவரம் மீனவர்கள் சிலரால் உயிர்ப்புடன் பின்பற்றப்படுகின்றது. கூடை போன்ற கூடுகள் செய்து மீன் பிடிக்கும் முறை இதுவாகும். நூறு ஆண்டுகளுக்கும் மேலாக, பாரம்பரியமாக ஒலைகுடா, சங்குமால், மாங்காடு, சம்பை, வடகாடு, அரியாங்குண்டு ஆகிய கிராமங்களில் இம்மீன்பிடி முறை தற்போதும் பின்பற்றப்படுகின்றது. இது தவிர மண்டபம், மண்டபம் கேம்ப், வேதாளை, கீழக்கரை பகுதியில் சில கிராமங்களிலும் இம்மீன்பிடி முறை பின்பற்றப்படுகின்றது. இலங்கையில் உள்ள தமிழ் மீனவர்களும் இம்முறையைப் பாரம்பரியமாகப் பின்பற்றி வருகின்றனர். ஒருகாலத்தில் முதன்மையான மீன்பிடி முறையாக இருந்த இத்தொழில் தற்போது நலிவடைந்து கொண்டே வருகின்றது.[15]

இந்தியாவில் வணிக முதன்மைத்துவம் பெற்ற மீனினங்கள்

[தொகு]

இந்தியாவில் சுமார் 40 வகையான மீனினங்கள் வணிக முதன்மைத்துவம் பெற்றவையாகும். அவை:

  1. சுறா
  2. திருக்கை
  3. நெத்திலி
  4. சாளை
  5. கவலை
  6. முள்வாளை
  7. சூரை
  8. வஞ்சிரம்
  9. மவ்வளசி
  10. கானாங்கத்தி
  11. அயிலை
  12. பாரை
  13. காரல்
  14. தும்பிலி
  15. கெளுத்தி
  16. கெளிரு
  17. விலாங்கு
  18. கோலா
  19. பறவைக்கோலா
  20. முறல்
  21. ஊசிகோல்
  22. கலாப்பத்தி
  23. கொப்பரன்
  24. சீலா
  25. ஊழி
  26. மடவை
  27. காலா
  28. மா-காலா
  29. சிலந்தன்
  30. கொடுவா
  31. செப்பிலி
  32. நூலனி
  33. கலவா
  34. ககசி
  35. வெள்ளைமீன்
  36. நவரை
  37. கொருக்கை
  38. செனரயா
  39. வாளை
  40. சாவாளை
  41. வாவல்
  42. சங்கரா
  43. கன்டல்
  44. கத்தாளை
  45. பண்ணா
  46. ஊடகம்
  47. வெளுடன்
  48. குதிப்பு
  49. சுடும்பு
  50. நாக்கு
  51. மனங்கு
  52. கடவரா
  53. களத்தி
  54. கிழங்கான்
  55. அம்பத்தான் பாரா
  56. கெண்டை

ஆகியவை.[16]

இவற்றையும் பார்க்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. மீன்வளம் மற்றும் கடல் வளக்கையேடு 2006.
  2. Fisheries and Aquaculture in our Changing Climate Policy brief of the FAO for the UNFCCC COP-15 in Copenhagen, December 2009.
  3. விம்பர்,1883- தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழக வேளாண் இணையதளம். கோயமுத்தூர்.
  4. லெடிக் 1986-தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழக வேளாண் இணையதளம். கோயமுத்தூர்.
  5. ‘ஏலே லம்பா ஏலே’ நாட்டுப்புற பாடலுடன் பாரம்பரிய ஓலை வலை மீன்பிடி முறையை பாதுகாக்கும் பெண்கள்செப்டம்பர் 5 2016 தி இந்து தமிழ்
  6. http://agritech.tnau.ac.in/ta/fisheries/fish_capture_passivegears_ta.html
  7. 9 ஆம் வகுப்பு, சமூக அறிவியல் நூல்,தமிழ் நாட்டுப் பாடநூல் கழகம்-2011. பக். 134
  8. 8.0 8.1 தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழக வேளாண் இணையதளம். கோயமுத்தூர்ர்.
  9. பெர்ரா, 1981
  10. BBC-ல் தமிழக மீனவர்கள் பிரச்சனை குறித்து ஜெ.ஜெயலலிதா மன்மோகன் சிங்கிற்கு கடிதம், 17 மார்ச், 2012
  11. http://www.fao.org/docrep/003/v5930e/V5930E01.htm#ch1
  12. http://agritech.tnau.ac.in/ta/fisheries/fish_relatedlinks_ta.html
  13. ஆணையாளர்- மீன்வளத்துறை சென்னை-6
  14. தமிழ்நாட்டுப் பாடநூல் கழகம்-9ஆம் வகுப்பு பக்.134
  15. http://gomannar.blogspot.in/2011/11/blog-post_11.html%7C மன்னார் வளைகுடா வாழ்க்கை
  16. http://agritech.tnau.ac.in/ta/fisheries/pdf/commercial%20fish_india.pdf

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=மீன்_பிடித்தல்&oldid=3425817" இலிருந்து மீள்விக்கப்பட்டது