கிணறு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மனிதவலுவைப் பயன்படுத்தி நீர் எடுக்கும் முறையைக் கொண்ட சென்னையில் உள்ள ஒரு கிணறு.

கிணறு என்பது, நிலத்தின் கீழ் நீர்ப்படுகைகளில் சேமிக்கப்பட்டிருக்கும் நிலத்தடி நீரை எடுப்பதற்கு வசதியாக நிலத்தில் தோண்டப்படும் ஒரு குழி ஆகும். அகழ்தல், தண்டு செலுத்தல், துளையிடல் போன்ற பல முறைகளைக் கையாண்டு கிணறுகள் வெட்டப்படுகின்றன. நிலத்தடி நீரின் மட்டத்தைப் பொறுத்து கிணற்றின் ஆழம் வேறுபடும். கிணறுகள் பொதுவாக வட்டமான குறுக்கு வெட்டுமுகம் கொண்டவையாக இருக்கும். சதுரம், நீள்சதுரம் ஆகிய வடிவங்களிலான வெட்டுமுகம் கொண்ட கிணறுகளும் உள்ளன. இவ்வெட்டு முகங்களின் விட்டம் அல்லது நீள அகலங்களின் அளவுகளும் வெட்டும் முறை, பயன்பாடு என்பவற்றைப் பொறுத்து வேறுபட்டுக் காணப்படும்.

கிணறுகளில் நீர்மட்டம் பெரும்பாலும் கைக்கு எட்டாத ஆழத்தில் இருப்பதனால், நீரை வெளியே எடுப்பதற்குப் பல முறைகள் பயன்படுகின்றன. ஏதாவது கொள்கலன்களைக் கயிற்றில் கட்டிக் கிணற்றுக்குள் இறக்கி மனிதவலுவைப் பயன்படுத்தி நீரை வெளியே எடுப்பது பண்டைக்காலம் தொட்டு இன்றுவரையும் பயன்பாட்டில் இருக்கும் ஒரு முறை. இம்முறையில் மனித முயற்சியை இலகுவாக்குவதற்காக கப்பி, துலா போன்ற பல்வேறு பொறிமுறைகளும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. கிணறுகளில் இருந்து நீரை வெளியே எடுப்பதற்கு, பொதுவாக பயிர்களுக்கு நீர் பாய்ச்சுதல் போன்ற தேவைகளுக்காக விலங்குகளின் வலுவையும் பயன்படுத்துவது உண்டு. இதற்காகப் பல்வேறு வகையான பொறிகளும் உலகின் பல பாகங்களிலும் உருவாக்கப்பட்டன. தற்காலத்தில் மின்சாரத்தில் இயங்கும் நீரேற்றிகள் பரவலாகப் பயன்படுகின்றன.

கிணற்றின் வகைகள்[தொகு]

ஆப்கானிசுத்தானின் ஃபர்யாப் மாகாணத்தில் உள்ள ஒரு கிணறு

அகழ் கிணறு[தொகு]

அண்மைக் காலம் வரை செயற்கையாக வெட்டப்படும் கிணறுகள் அனைத்துமே அகழ் கிணறுகளாகவே இருந்தன. இத்தகைய கிணறுகள் மனிதர்கள் மண்வெட்டி, கடப்பாரை போன்ற கருவிகளுடன் உள்ளே இறங்கி அகழ்வதற்கு ஏற்ற வகையில் போதிய விட்டம் கொண்டவையாக இருந்தன. இக் கிணறுகளில், மண் இடிந்து உள்ளே விழுந்துவிடாமல் இருப்பதற்காக உள் மேற்பரப்பை அண்டி வெட்டப்பட்ட கற்களை அடுக்கிக் கட்டுவது உண்டு. தற்காலத்தில், வலிதாக்கிய காங்கிறீற்றினால் செய்யப்படும் வளையங்கள் இதற்குப் பயன்படுகின்றன. கிணற்றின் விட்டத்தின் அளவுக்குச் சமமாக செய்யப்படும் இந்த வளையங்கள் கிணறு வெட்டப்படும்போதே பகுதி பகுதியாகக் கீழே இறக்கப்படும். இது கிணறு வெட்டுபவர்களுக்குப் பாதுகாப்பாகவும் அமைகின்றது.

அகழ் கிணறுகள் மலிவானவையும், குறைவான தொழில்நுட்ப உள்ளீடும் கொண்டவை. இதனால் இன்றும் நாட்டுப் புறங்களில் பெருமளவு சமூகப் பங்களிப்புடன் கிணறு வெட்டுவதற்கு ஏற்ற முறையாக இது உள்ளது. இவை தவிர அகழ் கிணறுகளில் வேறு பல சாதகமான அம்சங்களும் உண்டு. எடுத்துக்காட்டாக, இவை மின்சார நீரேற்றிகளையோ, மனிதவலுவையோ பயன்படுத்துவதற்கு ஏற்றவை. இதனால் மின் வழங்கல் தடைப்படும்போது அல்லது நீரேற்றிகள் பழுதடையும் போது கூட மனித வலுவைக் கொண்டு நீர் எடுக்க முடியும். அத்துடன் கிணற்றில் நீர் மட்டம் குறைந்து விட்டால், அதனை ஆழப்படுத்துவது இலகு.

ஆழ்துளைக் கிணறுகளின் வகைகள்

எனினும், பாறைகளைக் கொண்ட நிலங்களில் அகழ் கிணறுகள் வெட்டுவது கடினமானது. அத்தோடு, சொரியலான மண்ணுள்ள இடங்களில் அகழ் கிணறுகள் வெட்டுவது ஆபத்தானது. கரைகள் இடிந்து விழுவதற்கான சாத்தியங்கள் அதிகம். கிணறுகளை இம்முறையில் வெட்டும்போது மனிதர் உள்ளே வேலை செய்வதற்கு வசதியாகத் தொடர்ச்சியாக நீரை இறைத்துக்கொண்டிருக்க வேண்டும். ஆழம் கூடிய கிணறுகளில் இது மிகவும் கடினமானது. இதனால், இத்தகைய கிணறுகள் தற்காலத்தில், நிலத்தடி நீர் குறைவான ஆழத்தில் இருக்கக்கூடிய இடங்களிலேயே பயன்படுகின்றன.

அடித்துத் துளைக்கும் கிணறு[தொகு]

இக்கிணறுகள் இறுக்கமில்லாத மண்ணுள்ள இடங்களுக்கு ஏற்றவை. இம்முறையில், கூரான முனை பொருத்தப்பட்டதும், பக்கங்களில் துளைகளைக் கொண்டதுமான ஒரு குழாய் தேவையான ஆழத்துக்கு அடித்து இறக்கப்படும். நிலைக்குத்தாகப் பொருத்தப்படும் இக் குழாயின் மேல் முனையில் பாரமான சுமை ஒன்றை விழ விடுவதன் மூலம் இக் குழாய் நிலத்துள் படிப்படியாகச் செலுத்தப்படுகிறது. நீர் மட்டத்துக்குக் கீழ் போதிய அளவு துளைத்த பின்னர் துளை சுத்தம் செய்யப்பட்டு நீரேற்றி பொருத்தப்படும். ஆழம் குறைவான கிணறுகளில் கையால் இயக்கக்கூடிய நீரேற்றிகளைப் பயன்படுத்தலாம். ஆழம் கூடிய கிணறுகளாயின் மின்சார நீரேற்றிகளே விரும்பப்படுகின்றன.

"https://ta.wikipedia.org/w/index.php?title=கிணறு&oldid=2743159" இருந்து மீள்விக்கப்பட்டது