நிலத்தடி நீர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

நிலத்தடி நீர் என்பது புவியின் மேற்பரப்பிற்கு அடியில் மண் துகள்களுக்கு இடையே உள்ள, துளைகளிலும் பாறை உருவாக்கத்தில் இருக்கும் பாறை துண்டுகளுக்கும் இடையே காணப்படும் நீர் ஆகும். ஒரு குறிப்பிட்ட அளவு பாறைகளோ அல்லது கெட்டி படாத பாறை படுகையோ நாம் பயன்படுத்தும் வகையில் உள்ள நீரை தருமானால் அதை நிலத்தடி நீர் படுகை என்று கூறலாம். மண் துகள் துளைகள் அல்லது பாறை பிளவுகள் அல்லது பாறை இடையில் காணப்படும் வெற்றிடம் நீரால் நிரப்பப் பட்டு இருக்கும் ஆழம் நிலத்தடி நீர் மட்டம் என்று அழைக்கப்படுகிறது. நிலத்தடி நீர் புவியின் மேற்பரப்பில் இருந்து, தனது நீரை பெற்றுக் கொள்கிறது. அதை நீரூற்றுகள் அல்லது நீர் ஒழுக்கு மூலம் வெளியேற்றி பாலைவனச் சோலை அல்லது ஈர நிலத்தை உருவாக்குகிறது.

நீர் நிலவியல்[தொகு]

மேலும் நிலத்தடி நீர் விவசாயத்திற்காகவும், மாநகர தேவைக்காகவும் தொழிற்சாலைகள் உபயோகத்திற்காகவும் கிணறுகள் மற்றும் ஆள்துளை கிணறுகள் கட்டி அவற்றின் மூலம் எடுக்கப்படுகிறது. நிலத்தடி நீர் பரவல் மற்றும் அதன் இயக்கம் குறித்த படிப்பு நீர்நிலவியல் அல்லது நிலத்தடி நீர் நிலவியல் என்று அழைக்கப்படுகிறது. பொதுவாக நிலத்தடி நீர் என்பது ஆழமற்ற நிலத்தடி நீர் படுகையில் ஓடும் நீர் என்று அறியப்படுகிறது ஆனால் தொழில் நுட்ப உணர்வுடன் பார்த்தால் மண்ணின் ஈரம், நிலத்தடி உறைபனி, மிகத் தாழ்வான நீர் ஊடுருவும் படுக்கை பாறையில் உள்ள அசையாத அல்லது ஓடாத நீர், ஆழ் புவி வெப்பம் அல்லது எண்ணெய் உருவாக்கும் நீர் என்று அறியப்படுகிறது அல்லது நினைக்கப் படுகிறது. இரண்டு நிலத் தட்டுகள் உரசும் முனையில் இந்த நிலத்தடி நீரானது ஒரு உராய்வு நீக்கும் உய‌‌விடுதல் ஆக இருப்பதாக அனுமானிக்க படுகிறது. ஏறத்தாழ புவியின் அனைத்து நிலத்தடி பரப்புகளிலும் நீர் இருப்பதற்கு சாத்தியக்கூறுகள் உள்ளன சில நேரங்களில் இவைகள் வேறு பிற திரவங்களோடு கலக்கின்றன. நிலத்தடி நீர் புவியில் மட்டுமே காணப்படும் என்று கூற முடியாது. செவ்வாய் கிரகத்தில் காணப்படும் நிலப்பரப்புகள் இந்த நிலத்தடி நீர் தாக்கம் காரணமாக உருவாகி இருக்கலாம். வியாழன் கோளின் நிலவான ( இயற்கை துணைக் கோள்) யுரோப்பாவில் திரவ நிலையில் நீர் இருக்கலாம் என்பதற்கு ஆதாரம் உள்ளது.[1]

பயன்பாடு[தொகு]

புவியின் மேற்பரப்பில் காணப்படும் நீரை விட, நிலத்தடி நீர் மலிவானது மேலும் அதிக அளவில் மாசுபடாதது எனவே பொது மக்களின் உபயோகத்திற்கு அதிகம் பயன்படுத்தபடுகிறது. எடுத்து காட்டாக அமெரிக்காவில் மக்கள் உபயோகப் படுத்த நிலத்தடி நீர்தான் அதிக அளவில் ஆதாரமாக உள்ளது, கலிஃபோர்னியா மற்ற அனைத்து மாகாணங்கள் காட்டிலும் ஒரு ஆண்டில் மிக அதிக அளவில் நிலத்தடி நீரை பயன்படுத்துகிறது. அமெரிக்காவின் மேற் பரப்பில் அமைந்துள்ள அனைத்து நீர் தேக்கங்கள்பெரும் ஏரி உட்பட மற்ற ஏரிகள் அனைத்திலும் காணப்படும் நீரை காட்டிலும் நிலத்தடி நீரின் அளவு அதிகம். பல பெரும் நகரங்களின் நீர் தேவைகள் நிலத்தடி நீரில் இருந்து மட்டுமே பெறப்படுகிறது.[2]

மாசு நீர்[தொகு]

மாசுபடுத்தப்பட்ட நிலத்தடி நீரானது தெளிவாக தெரியாது மேலும் அதை சுத்தப்படுத்துவது மாசுபட்ட ஆறு மற்றும் ஏரிகளை சுத்தப்படுத்துவது விட மிகக் கடினம். நிலத்தடி நீர் மாசு பட முக்கிய காரணம் சரியான முறையில் இல்லாமல் நிலத்தின் மீது எறியப்பட்ட கழிவு பொருட்கள் ஆகும். முக்கியமாக தொழிற்சாலை கழிவுகள், வீடுகளிலும் உபயோகபடுத்தப் படும் வேதிப் பொருட்கள், குப்பைகளை கொண்டு நிரப்பப்பட்ட நிலப்பரப்புகள், அதிக அளவில் உபயோகப் படுத்த பட்ட செயற்கை உரங்கள் மற்றும் பூச்சி கொல்லி மருந்துகள், தொழிற்சாலை உயிர் கடற்கழி, சுரங்கங்களில் இருந்து வரும் கூல கழிவுகள் மற்றும் கழிவு நீர், பாறைகளில் எண்ணெய் எடுக்க பயன்படுத்தப்படும் முறைகள், எண்ணெய் நிலங்களில் உள்ள உப்பளங்கள், கசியும் நிலத்தடி எண்ணெய் தொட்டிகள் மற்றும் குழாய்கள், சாக்கடை கசடு மற்றும் மலக்குழி அமைப்புகள் போன்றவை நிலத்தடி நீர் மாசு பட காரணம் ஆகும்.

நிலத்தடி நீர் படுகை[தொகு]

நிலத்தடி நீர் படுகை என்பது தன்னகத்தே நிலத்தடி நீரை வைத்திருக்கும் அல்லது கடத்தும் தன்மையுள்ள நுண் துணையுள்ள மூலக்கூறுகளின் அடுக்கு ஆகும். நீரானது நேரடியாக மேற்பரப்பிற்கும் நிலத்தடி நீர் படுகையின் நிறைசெறிவுற்ற மண்டலத்திற்கும் இடையில் தடையின்றி பாயும்போது அது அடைக்கப்படா நிலத்தடி நீர் படுகை ஆகும். நீரானது புவி ஈர்ப்பு விசை மூலம் கீழ் நோக்கி இழுக்கப் படுவதால் இந்த அடைக்கப்படா நிலத்தடி நீர் படுகையின் ஆழ்ந்த பகுதிகள் அதிகம் நிறைசெறிவுற்றதாகக் காணப்படும்.இந்த அடைக்கப்படா நிலத்தடி நீரின் நிறை செறிவுற்ற மேல் பரப்பு நிலத்தடி நீர் மட்டம் அல்லது நிறைவு நிலத்தடி நீரின் மேல் பரப்பு என அழைக்கப்படுகிறது. இதற்கு கீழே உள்ள நீரால் செறிவுற்ற துளைகளுள்ள பகுதி நிறைவு நீர் மண்டலம் என்று அழைக்கப்படுகிறது. குறைந்த துளைகள் கொண்ட மூலக்கூறுகள் கட்டுப்படுத்த பட்ட நீரை மட்டுமே கடந்து செல்ல அனுமதிக்கும் பகுதி நீர் கடத்தா பகுதி என்று அழைக்கப்படுகிறது. நீர் விடாப் பகுதி ஆனது மிக மிக குறைந்த துளைகளைக் கொண்ட பகுதியாகும் இதில் நிலத்தடி நீர் உள்ளே செல்வது, கிட்டத்தட்ட இயலாத காரியம் ஆகும்.

மேற்கோள்கள்[தொகு]

  1. Richard Greenburg (2005). The Ocean Moon: Search for an Alien Biosphere. Springer Praxis Books. 
  2. "What is hydrology and what do hydrologists do?". The USGS Water Science School. 23 May 2013. 21 Jan 2014 அன்று பார்க்கப்பட்டது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நிலத்தடி_நீர்&oldid=2891794" இருந்து மீள்விக்கப்பட்டது