பாறை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ஒருவகைக் கருங்கற்பாறை

பாறை (rock or stone) என்பது கனிமங்கள் அல்லது கனிமப்போலிகளின் சேர்க்கையினால் இயற்கையாக உருவாவது ஆகும்.[1] பாறைகள், அவற்றில் அடங்கியுள்ள கனிமங்கள், வேதியியல் சேர்க்கை, பரப்புத் தோற்றம் (texture), அவை உருவாகும் முறை என்பவற்றின் அடிப்படையில் வகைப்படுத்தப்படுகின்றன.[2] பாறைகள் பொதுவாக மூன்று பெரும் பிரிவுகளாகப் பிரிக்கப்படுகின்றன. அவை, தீப்பாறைகள், படிவுப் பாறைகள், மற்றும் உருமாறிய பாறைகள் என்பனவாகும்.[3]

தீப்பாறைகள் உருகிய கற்குழம்பிலிருந்து உருவாகின்றன. இவை, பாதாளப் பாறை, எரிமலைப்பாறை என இரண்டு பிரிவுகளாக அமைகின்றன. பூமியின் மையப் பகுதியிலிருந்து உருகிய கற்குழம்பு மேல் நோக்கித் தள்ளப்பட்டு, பூமியின் மேலோட்டுப் பகுதியிலுள்ள இடைவெளிகளில் தங்கி அங்கேயே மெதுவாகக் குளிர்ந்து படிவமாகும் போது பாதாளப் பாறைகள் உருவாகின்றன. எரிமலைப் பாறைகள், புவி மேற்பரப்பை அடையும் எரிமலைக் குழம்புகளில் இருந்து அல்லது ஆங்காங்கே நிகழும் வெளித்தள்ளல்களில் இருந்து உருவாகின்றன.[4]

பாறைத் துகள்கள், கரிமப்பொருள் துணிக்கைகள், வேதிப்பொருள் வீழ்படிவுகள் (chemical precipitates) என்பவை படிப்படியாக ஓரிடத்தில் சேர்ந்து, பின்னர் அழுத்தப்படுவதன் மூலம் ஒன்று சேர்ந்து உருவாவதே படிவுப் பாறைகள் எனப்படுகின்றன. இவை, சிறப்பாக, காபனேற்றுகள் அதிகமுள்ள படிவுப் பாறைகள், புவி மேற்பரப்பிலோ அல்லது அதற்கு அருகாமையிலோ உருவாகக்கூடும்.[5]

தீப்பாறைகள், படிவுப் பாறைகள் அல்லது ஏற்கனவே உருவான உருமாறிய பாறைகள், அவை உருவானபோது இருந்ததிலும் வேறான வெப்பநிலை, அழுத்தச் சூழ்நிலைகள் என்பவற்றில் உருவாவனவே உருமாறிய பாறைகள் எனப்படுகின்றன. இதற்கு வேண்டிய வெப்பநிலையும், அழுத்தமும் புவி மேற்பரப்பில் காணப்படுவதிலும் அதிகமாக இருக்கவேண்டும். இது பாறைகளில் உள்ள கனிமங்கள் வேறு கனிம வகைகளாக அல்லது வேறு வடிவிலமைந்த அதே கனிமமாக உருமாறுவதற்கு (எகா: மீள்படிகமாதல் (recrystallisation) ஏற்ற அளவில் அமைய வேண்டும்.[6]

ஒரு பாறை வகை இன்னொரு பாறை வகையாகத் தொடர்ச்சியான முறையில் மாறிக்கொண்டிருக்கும் தோற்றப்பாட்டை, நிலவியலாளர்கள், பாறை வட்டம் எனும் நிலவியல் மாதிரி மூலமாக விளக்குகிறார்கள்.

கற்கோளம் (lithosphere) உள்ளிட்ட புவியோடு (Earth's crust) பாறைகளினால் உருவானதே.

பாறைகள் பற்றிய ஆய்வு பாறையியல் (Petrology) எனப்படுகின்றது.

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

சான்றாதாரங்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பாறை&oldid=2143479" இருந்து மீள்விக்கப்பட்டது