மட்டக்களப்பு
மட்டக்களப்பு Batticaloa | |
---|---|
நகரம் | |
அடைபெயர்(கள்): மட்டுநகர் | |
நாடு | இலங்கை |
மாகாணம் | கிழக்கு மாகாணம் |
மாவட்டம் | மட்டக்களப்பு |
பிரதேச செயலாளர் பிரிவு | மண்முனை வடக்கு |
அரசு | |
• வகை | மட்டக்களப்பு மாநகர சபை |
• நகர முதல்வர் | தியாகராஜா சரவணபவன்[1][2] |
ஏற்றம் | 14 m (45 ft) |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 92,332 |
இனம் | மட்டக்களப்பான்/மட்டக்களப்பார் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இலங்கை நேர வலயம்) |
அஞ்சல் குறியீடு | 30000 |
இடக் குறியீடு | 065 |
மட்டக்களப்பு (ஆங்கில மொழி: Batticaloa, சிங்களம்: මඩකලපුව) இலங்கையின் கிழக்குக் கரையோரம் அமைந்துள்ள முக்கிய நகரங்களுள் ஒன்று. இது நாட்டின் ஒன்பது மாகாணங்களுள் ஒன்றான கிழக்கு மாகாணத்திலுள்ள மிகப் பெரிய நகரமும், மட்டக்களப்பு நிர்வாக மாவட்டத்தின் தலைநகரமும் ஆகும். தமிழ் மக்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட மட்டக்களப்பு மாவட்டத்தில் பெருமளவில் முஸ்லிம் மக்களும் வாழ்கின்றனர். மட்டக்களப்பானது "மீன் பாடும் தேன் நாடு" என அழைக்கப்படுகின்றது. இதன் எல்லைகளாகத் திருகோணமலை, பொலன்னறுவை, அம்பாறை ஆகிய மாவட்டங்கள் அமைகின்றன. கொழும்பிலிருந்து இது 301 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.[3]
சொல்லிலக்கணம்
[தொகு]மட்டக்களப்பு எனும் சொல் எப்படி தோற்றம் பெற்றது என்பதில் வெவ்வேறான கருத்துக்கள் காணப்படுகின்றன.[4] பலதடவைகள் மட்டக்களப்பு பிரதேசம் சிங்கள அரசின் ஆட்சிக்குட்பட்டு இருந்ததால் சிங்களச் சொற்களின் தாக்கம் மட்டக்களப்பில் கலந்திருக்கலாம் என கருதப்படுகிறது. சிங்களத்தில் சேறு என்பதைக் குறிக்கும் "மட்ட" என்ற பதமும், வாவியால் அப்பிரதேசம் சூழப்பட்டதால் நீர் தேங்கியிருக்கும் இடத்தினைக் குறிக்கும் "களப்பு" என்ற பதமும் சேர்ந்து மட்டக்களப்பு எனும் சொல் உருவாகியது என்ற கருத்தும் உள்ளது.[5]
மட்டக்களப்பு மான்மியம் கூறுவதன்படி, இலங்கைமீது படையெடுத்த வட இந்திய முற்குகர், கிழக்குப் பக்கம் தமது ஓடத்தைச் செலுத்தி, மட்டக்களப்பு வாவியின் எல்லை வரை சென்று, அதற்கு அப்பாற் செல்ல வழியில்லாததால் இது மட்டும் மட்டடா மட்டக்களப்படா (இந்தக்களப்பு இதுவரையும்தான்) எனக் கூறி மட்டக்களப்பு எனும் பெயரை இட்டனர்.[6] "மட்டமான" களப்பு என்பதனால் "மட்டக்களப்பு" எனவும் கூறப்படுகிறது. மட்டமான என்றால் சமதரையான என்றும் அர்த்தம் கொள்ளலாம். மட்டக்களப்பைக் குறிக்கும் ஆங்கிலச் சொல்லான 'Batticaloa' (பற்றிக்கலோ) போர்த்துக்கீச சொல்லிலிருந்து உருவாகியது.
மீன் பாடும் தேன் நாடு - பெயர்க் காரணம்
[தொகு]பாடுமீனின் ஒலி |
---|
கல்லடிப் பாலத்திலிருந்து (லேடி மன்னிங் பாலம்) சப்தமற்ற இரவு நேர முழுமதி தினங்களில் அவதானிக்கும் போது ஓர் இன்னிசை கேட்பதாகக் கூறப்படுகிறது. இது ஊரிகளினுள் நீர் புகுந்தெழுவதால் ஏற்படும் இசையென நம்பப்படுகின்றது. இதனை இலக்கியங்களில் 'நீரரமகளீர் இசைக்கும் இசை' என வர்ணிக்கப்படுகிறது. ஆயினும் மீன்கள்தான் இசையெழுப்பின என்ற கருத்தும் பிரதேசவாசிகளிடம் காணப்படுகிறது. இதன் காரணமாக மட்டக்களப்பு 'மீன் பாடும் தேன் நாடு' எனப் பன்னெடுங் காலமாக அழைக்கப்படுகின்றது.
கத்தோலிக்க குருவான அருட்தந்தை லாங் (Fr. Lang) என்பவர் 'இவ் மீனிசையை' ஒலிப்பதிவு செய்து இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் ஊடாக 1960களில் ஒலிபரப்பினார் என்று சொல்லப்படுகிறது.[7][8][9]
மீனிசை பற்றிப் பல கருத்துக்கள் இருந்தபோதிலும் மட்டக்களப்பானது மீன் பாடும் தேன் நாடு என்றே நோக்கப்படுகிறது. பல மட்டக்களப்புசார் அரச திணைக்களங்கள், பாடசாலைகள், கழகங்கள், நிறுவனங்கள் போன்றவற்றின் இலச்சினைகள் மீன் அல்லது கடற்கன்னி உருவம் கொண்டதாகக் காணப்படுவது மட்டக்களப்பிற்கும் 'மீன் பாட்டிற்கும்' உள்ள தொடர்பைக் காட்டுகிறது.
மட்டக்களப்பு வரலாறு
[தொகு]ஆரம்ப வரலாறு
[தொகு]இற்றைக்கு 2500 வருடங்களுக்கு முன்னர் மட்டக்களப்பில் மக்கள் இங்கு வாழ்ந்தார்கள் என்பதற்கு பல்வேறு புராண மற்றும் தொல்லியல் சான்றுகள் உள்ளன. இந்துக்களின் மிகவும் புராதனமான நூலாகிய இரமாயணமும்கூட, இங்கு அமைந்துள்ள மாமாங்கேஸ்வரர் ஆலயமும் அதன் தீர்த்தக்கேணியும் அனுமனால் உருவாக்கப்பட்டது எனக்கூறுகிறது. தொலெமியின் (கி.பி 90 – 168) வரைபடம் மட்டக்களப்பு உள்ளிட்ட கிழக்குக் கரையோரப் பகுதியை நாகதீபம் எனக்குறிப்பிடுவதாகக் கருத்து நிலவுகின்றது. எனவே இங்கு நாகர் வாழ்ந்தனரெனக் கருத இடமுள்ளது[10] கி.மு. 540 இல் விஜயன் பாண்டிநாட்டிலிருந்து கொண்டுவந்த தமிழர்களைக் கதிரவெளி எனுமிடத்தில் குடியேற்றினான் எனச் சிங்கள நூல்கள் கூறுகின்றன. அப்பகுதியில் வேடர் வாழ்ந்தனர் எனவும் அச்சரித்திர நூல்கள் கூறுகின்றன. அக்காலப் பகுதியில் சிங்கள அரசர்களின் ஆட்சியின் கீழ் மட்டக்களப்பு இருந்தது. கி.பி. 1 தொடக்கம் 13ம் நூற்றாண்டுக் காலப்பகுதிகளில் இடம்பெற்ற தென்னிந்தியப் படையெடுப்பினால் இப்பகுதியில் குடியேற்றம் நடந்தது[11]. சோழ அரசன் குளக்கோட்டன் காலப்பகுதியில் (கி.பி 425) வன்னியர் எனும் ஏழு சிற்றரச பிரதிநிதிகள் இப்பகுதியை ஆண்டனர். இதன் பின்னர் கண்டி சிங்கள அரசர்களின் கீழ் தமிழ் பிரதிநிதிகளினால் ஆளப்பட்டது.
மேலைத்தேயர் ஆட்சி
[தொகு]கண்டி அரசனின் ஆட்சிக்கு உட்பட்டிருந்த மட்டக்களப்பு 1622 இல் போர்த்துக்கேயர் வசமானது. ஆயினும் கிறித்தவ பாதிரிமார்களின் தொடர்பு 1530 காலப்பகுதியில் ஏற்பட்டது. போர்த்துக்கேயரின் அத்துமீறல் காரணமாகப் பல போடிமார் கலகத்தில் ஈடுபட்டு பின்னர் கைது செய்யப்பட்டனர். போர்த்துக்கேயர் ஆட்சியில் "தோம்பு" எனப்படும் வரி அறவிடும் முறை இப்பகுதியில் அறிமுகப்படுத்தப்பட்டது. மட்டக்களப்பில் போர்த்துக்கேயர் ஆட்சி ஏற்படுத்திய சிறு காலத்தில் ஒல்லாந்தர் தாக்குதல் நடத்தி, 1637 இல் மட்டக்களப்பினை தங்கள் ஆட்சியின் கீழ் கொண்டு வந்தனர். ஒல்லாந்தருக்கு எதிராகவும் போடிமார் கலகம் ஏற்படுத்தினர். 1700 காலப்பகுதியில் இப்பகுதியில் சீரான ஆட்சியைக் கண்டி அரசன் மற்றும் சில போடிமார்களின் ஒத்துழைப்போடு ஓல்லாந்தர் ஏற்படுத்தினர். இவர்களின் ஆட்சியைத் தொடர்ந்து 1802 இல் ஆங்கிலேயர் ஆட்சி ஏற்பட்டது. ஆங்கிலேயர்களுக்கு எதிராகவும் கண்டி ஆட்சியாளர்களுக்குச் சார்பாகவும் மட்டக்களப்புப் போடிமார் செயற்பட்டனர். ஆயினும் பின்னர் சிலர் கிறித்தவ சமயத்திற்கு மதம் மாறினர். ஆங்கிலேயர் ஆட்சியில் இப்பகுதி பல முன்னேங்களைக் கண்டது. கல்வி முறை, உட்கட்டுமானம் எனப் பல துறைகளில் முன்னேற்றம் ஏற்பட்டது.[12]
சுதந்திரத்தின் பின்
[தொகு]இலங்கை சுதந்திரம் அடைந்தபோது மட்டக்களப்புப் பிரதேசம் (தற்போதைய மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டப் பகுதிகள்) 6998 சதுர கிலோமீட்டர் பரப்பளவும் 202,987 சனத்தொகையையும் கொண்டிருந்தது. 1960 இன் பின்னர் மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து அம்பாறை மாவட்டம் பிரிக்கப்பட்டது. ஈழப் போர் ஆரம்பித்தபோது, அதன் தாக்கம் இங்கும் பரவியது. இந்திய அமைதி காக்கும் படையினர் பிரசன்னம், அவர்களுடனான போர் என்பன இப்பகுதியில் மேலும் தாக்கத்தை ஏற்படுத்தியது. 2007 வரை பெரும் பகுதி விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்தது.
புவியியல்
[தொகு]புவியியல்
[தொகு]மட்டக்களப்பு மாவட்டம் வாவியால் இரு பிரிவாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அவற்றில் ஒருபகுதி எழுவான்கரை (சூரியன் எழும் பகுதி அ-து கிழக்குப்பகுதி) என்றும் மறு பகுதி படுவான்கரை (சூரியன் மறையும் பகுதி அ-து மேற்குப்பகுதி) என்றும் அழைக்கப்படுகின்றது. காடுகள், விவசாய நிலம், வாவி, முகத்துவாரம்,கடல், அணைகள், களப்பு, இயற்கைத் துறைமுகம், குளம் போன்ற புவியியல் அம்சங்களைக் கொண்டுள்ளது. படுவான்கரைப் பிரதேசம் வளமிக்க விவசாய நிலத்தினைக் கொண்ட பகுதியாகும். மட்டக்களப்பு பிரதான நகரினைச் சூழ்ந்து வாவி காணப்படுவது இயற்கை வனப்பான விடயமாகும்.
காலநிலை
[தொகு]இலங்கையின் கிழக்கு கடற்கரையில் இந்து சமுத்திரத்தினை கடல் எல்லையாகக் கொண்டமைந்த கிழக்கு மாகாணத்தின் மத்தியில் அமைந்துள்ள பரந்த நிலப்பரப்பாகும். இது சராசரியாகக் கடல் மட்டத்திலிருந்து 5 மீட்டர் உயரமுடையாகும். மட்டக்களப்பு நகரின் தனித்துவமான சிறப்பியல்பு யாதெனில் இது மூன்று கடல்நீரேரிகளைக் கொண்டுள்ளதே. அவையாவன மட்டக்களப்பு வாவி, வாழைச்சேனை வாவி, பனிச்சங்கேணி வாவி (அல்லது வாகரை வாவி). இதில் மட்டக்களப்பு வாவியே மிக நீண்டது. இது 56 km நீளமும், 168 சதுர கிலோமீற்றர் பரப்பும் கொண்டது. வடக்கில் ஏறாவூர் வரையும் தெற்கில் கல்முனை வரையும் நீண்டுள்ளது[13]. இது சிறு நிலப்பரப்புக்களையும் தீவுகளையும் கொண்டமைந்த அழகிய கடல்நீரேரி ஆகும்.
கடநீரேரிக்கு குறுக்காகச் சிறு நிலப்பரப்புகளையும் தீவுகளையும் இணைக்கும் வண்ணம் பாலங்கள் அமைக்கப்பட்டிருப்பது நகருக்கு மேலும் அழகு சேர்க்கிறது. மட்டக்களப்பு நகரின் நகராட்சி மையமான புளியந்தீவு இவற்றுள் மிகப்பெரிய தீவாகும். கோட்டைமுனை நிலப்பரப்பை கல்லடி என்ற இடத்துடன் இணைக்கும் கல்லடிப்பாலமானது சிறப்பு வாய்ந்ததொன்றாகும்.
மட்டக்களப்பானது இயற்கை எழில் நிறைந்த கடற்கரைகளைக் கொண்டுள்ளது. பாசிக்குடா மற்றும் கல்குடா கடற்கரைகள் மிகவும் பிரபல்யமானவை. பாசிக்குடா கடற்கரையின் ஒரு பகுதி, அலைகள் குறைவான, மட்டமான நீரினை உடையதும் முருகைக்கற்கள் நிறைந்ததும் நீந்துபவர்களுக்கு மிகவும் இதமானதுமாகும். கல்லடியிலுள்ள கடற்கரையும் மிகக்கூடியளவான மக்களைக் கவரும் அழகிய அமைப்புடையதாகும்.
மட்டக்களப்பின் காலநிலையானது பொதுவாக வெப்பம் கூடியதாக இருப்பினும் வேறுபட்ட பருவகாலங்களில் வெவ்வேறு மாற்றங்களைக் கொண்டதாகக் காணப்படுகிறது. மார்ச் முதல் மே வரையான காலப்பகுதி சராசரியாக 32 பாகை “செல்சியஸ்“ அளவுடைய வெப்பநிலை கொண்டதாகவும்,நவம்பர் முதல் பெப்ரவரி வரையான காலப்பகுதி கூடுதல் மழைவீழ்ச்சி கொண்டதாகவும் காணப்படுகிறது. இக்காலப்பகுதியில் சராசரியாக 15 பாகை “செல்சியஸ்“ வெப்பநிலையும் 1400 மில்லிமீட்டர் அளவுடைய மழைவீழ்ச்சியும் காணப்படுகிறது.[14]
தட்பவெப்ப நிலைத் தகவல், மட்டக்களப்பு (1961–1990) | |||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
மாதம் | சன | பிப் | மார் | ஏப் | மே | சூன் | சூலை | ஆக | செப் | அக் | நவ | திச | ஆண்டு |
உயர் சராசரி °C (°F) | 27.8 (82) |
28.6 (83.5) |
30.0 (86) |
31.6 (88.9) |
33.0 (91.4) |
34.0 (93.2) |
33.4 (92.1) |
33.1 (91.6) |
32.2 (90) |
30.9 (87.6) |
29.3 (84.7) |
28.1 (82.6) |
31.0 (87.8) |
தாழ் சராசரி °C (°F) | 23.2 (73.8) |
23.6 (74.5) |
24.3 (75.7) |
25.3 (77.5) |
25.7 (78.3) |
25.6 (78.1) |
25.3 (77.5) |
25.1 (77.2) |
24.8 (76.6) |
24.3 (75.7) |
23.8 (74.8) |
23.5 (74.3) |
24.5 (76.1) |
பொழிவு mm (inches) | 210.3 (8.28) |
128.4 (5.055) |
89.0 (3.504) |
55.0 (2.165) |
39.3 (1.547) |
23.9 (0.941) |
41.4 (1.63) |
48.5 (1.909) |
67.0 (2.638) |
180.0 (7.087) |
349.6 (13.764) |
418.5 (16.476) |
1,650.9 (64.996) |
% ஈரப்பதம் | 79 | 78 | 78 | 78 | 75 | 68 | 69 | 69 | 74 | 82 | 83 | 83 | 76 |
சராசரி பொழிவு நாட்கள் | 11 | 7 | 6 | 5 | 3 | 2 | 3 | 4 | 5 | 11 | 16 | 17 | 90 |
சூரியஒளி நேரம் | 201.5 | 228.8 | 266.6 | 270.0 | 251.1 | 264.0 | 251.1 | 263.5 | 246.0 | 232.5 | 198.0 | 170.5 | 2,843.6 |
Source #1: World Meteorological Organisation[15] | |||||||||||||
Source #2: Deutscher Wetterdienst (humidity and sun)[16] |
தற்கால மட்டக்களப்பு நகரும் சூழவுள்ள இடங்களும்
[தொகு]நான்கு முக்கிய பகுதிகள் மட்டக்களப்பு நகரின் முக்கிய செயற்பாடுகளில் அங்கம் பெறுகின்றன.
- புளியந்தீவு: மட்டக்களப்பு வாவியில் ஓர் தீவாக இது அமைந்து, ஏனைய பகுதிகளுடன் பாலங்கள் ஊடாக இணைப்பினை ஏற்படுத்துகின்றது. இங்கு அரச திணைக்களங்கள், அலுவலகங்கள், பாடசாலைகள், வங்கிகள், சமய வழிபாட்டு நிலையங்கள், பொது வைத்தியசாலை, மட்டக்களப்புக் கோட்டை, மட்டக்களப்பு பொது நூலகம், விளையாட்டரங்கு, கடைகள் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களின் அலுவலகங்கள் என்பன காணப்படுகின்றன.
- கோட்டைமுனை: கல்முனை (அம்பாறை) - திருகோணமலை சாலையில் காணப்படும் இப்பகுதியில் பாடசாலைகள், வங்கிகள், மட்டக்களப்பு புகையிரத நிலையம், டெலிகொம் பிராந்திய அலுவலகம், வைத்தியசாலைகள், அரச அலுவலகங்கள், கடைகள் ஆகியன காணப்படுகின்றன. இங்குள்ள இரு பாலங்கள் முறையே கோட்டமுனைப் பாலம் (பெரிய பாலம்), புதுப் பாலம் என்பன தீவுப் பகுதியான புளியந்தீவை நிலப்புகுதியுடன் இணைக்கின்றன.
- கல்லடி: பல அரச கட்டடங்கள், தனியார் நிறுவனங்கள், பாடசாலைகள், வைத்தியசாலைகள் என்பன காணப்படும் இப்பகுதிலுள்ள கல்லடிப் பாலம் போக்குவரத்திற்கு முக்கிய பங்கு வகிக்கின்றது.
- புதூர்: புளியந்தீவை மேற்குத் தரைப்பகுதியுடன் பாலம்மூலம் இணைக்கும் இப்பகுதியில், இலங்கை வான்படைக்குச் சொந்தமான மட்டுப்படுத்தப்பட்ட மக்கள் போக்குவரத்திற்கு பயன்படும் விமானத்தளம் ஒன்று உள்ளது.
மக்கள் தொகையியல்
[தொகு]மட்டக்களப்பானது இலங்கையின் தலைநகர் கொழும்பிலிருந்து 314 கி.மி. தொலைவில் அமைந்துள்ளது. இம்மாவட்டத்தில் பெரும்பான்மையாகத் தமிழரும், மற்றும் முஸ்லிம்கள், சிங்களவர், பறங்கியர் ஆகிய இனத்தவர்களும் வசிக்கின்றனர். மத ரீதியாகவும் பல மதத்தவரும் இங்கு வசிக்கின்றனர். உள்நாட்டுப் போரும், இடம்பெயர்வும் அடிக்கடி இடம்பெறும் இம்மாவட்டத்தின் குடித்தொகை புள்ளிவிபரங்களை மிகத் திருத்தமானதாகக் கருத முடியாது. 2012 புள்ளி விபரவியலின்படி மட்டக்களப்பு மாவட்ட மக்கள் தொகையியல் இன அடிப்படையில் பின்வருமாறு காணப்படுகிறது.[17]
இல | இனம் | சனத்தொகை | மொத்த % |
---|---|---|---|
1 | இலங்கைத் தமிழர் | 381,285 | 72.6 |
2 | இலங்கைச் சோனகர் | 133,844 | 25.5 |
3 | சிங்களவர் | 6,127 | 1.2 |
4 | பறங்கியர் | 2,794 | 0.5 |
5 | இலங்கையின் இந்தியத் தமிழர் | 1,015 | 0.2 |
6 | மற்றவர்கள் | 77 | 0.0 |
7 | மொத்தம் | 525,142 | 100 |
மட்டக்களப்பு மாநகர சபை அமைந்துள்ள மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் பிரிவில் 2008 ஆம் ஆண்டு தரவின்படி ஆண்கள் விகிதம் 48 வீதமாகவும், பெண்கள் விகிதம் 52 வீதமாகவும் காணப்படுகின்றது. மட்டக்களப்பு மாவட்ட மொத்த மக்கள் தொகை வளர்ச்சி 2.49% ஆகக் காணப்பட மட்டக்களப்பு மாநகர சபையினுள் மக்கள் தொகை வளர்ச்சி 1.005% ஆகக் காணப்படுகின்றது. மட்டக்களப்பு மாநகர சபையில் 2008 ஆம் ஆண்டில் 89,758 ஆகக் காணப்பட்ட மக்கள் தொகை 2020 ஆம் ஆண்டில் 101,202 ஆக வளருமென எதிர்வு கூறப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மாநகர சபைப் பகுதியில் மக்கள் செறிவு ஒரு சதுர கிலோ மீட்டருக்கு 2466 பேராக 2008ஆம் ஆண்டில் காணப்பட்டது. இதில் மக்கள் அடர்த்தி அதிகம் உள்ள இடங்களாகக் கூளாவடி, இருதயபுரம் மத்தி, மாமாங்கம், கூளாவடி கிழக்கு என்பன காணப்பட்டன. மக்கள் அடர்த்தி குறைவான இடங்களாகத் திராய்மடு, திருப்பொருந்துறை, சத்துருக்கொண்டான், பாலமீன்மடு மற்றும் நாவலடி கிராம சேவையாளர் பிரிவுகள் காணப்பட்டன.
மட்டக்களப்பு மாநகர சபையினுள் 30-49 வயதுக்குட்பட்டோர் 23 வீதமாகக் காணப்பட்டு, அதிக எண்ணிக்கையுடைய வயதுக்குழுவினராகக் காணப்பட்டனர்.[18]
பொருளாதார நடவடிக்கைகள்
[தொகு]மட்டக்களப்பு மாவட்டத்தின் முக்கிய பொருளாதார நடவடிக்கையாக விவசாயம் காணப்படுகின்றது. தெங்கு உற்பத்திக்குரிய சிறப்பான வளங்களை இம்மாவட்டம் கொண்டிருந்த போதும் 1978 ம் ஆண்டின் கொடும் சூறாவளியின் பின்னர் தெங்குப் பயிர்ச்செய்கை வினைத்திறனாக மேற்கொள்ளப்படாததால் அவை சார்ந்த தொழில்துறை நலிவடைந்துள்ளது. 2003 ஆம் ஆண்டில் 1664 ஏக்கர் தென்னை உற்பத்தி இலக்கு வைக்கப்பட்டது. இதே ஆண்டில் பனை உற்பத்திப் பொருட்கள்மூலம் ரூபாய் 1,266,000.00 வருமானமாகப் பெறப்பட்டது. சிறுபோக, பெரும்போக பயிர்ச்செய்கை விவசாயத்தில் முக்கிய இடம்பெறுகின்றது. கொச்சி மற்றும் சின்ன வெங்காய பயிர்ச்செய்கையும் முக்கிய விளைச்சல் பயிர்களாகும்.
கால்நடை மற்றும் கோழி வளர்ப்பு இங்கு பொருளாதாரத்தில் முக்கிய இடம்பெறுகின்றன. கடல் மற்றும் பிற நீர்வளங்கள் இங்கு உள்ளதால் மீன்பிடி முக்கிய தொழிலாகவுள்ளது. இறால், நண்டு என்பன முக்கிய வருவாய் ஈட்டித் தருவனவாகவுள்ளன. மட்டக்களப்பு நகர் மற்றும் அதனைக் கிட்டிய இடங்களில் கைத்தொழில் முக்கிய இடத்தைப் பெறுகின்றன.
அரச மற்றும் தனியார் வங்கிகள் நகரத்தில் காணப்பட்டு, பொருளாதாரத்தில் முக்கிய பங்களிப்புச் செய்கின்றன. மட்டக்களப்பு நகரில் 5479 பேர் அரச சேவையிலும், 572 பேர் அரச சார சேவையிலும், 1202 தனியார் சேவையிலும் உள்ளனர். உல்லாசப் பயணிகளின் கவனம் இங்கு இருப்பதால் 25 விடுதிகள் காணப்படுகின்றன.[18]
உட்கட்டமைப்பு
[தொகு]அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்யக்கூடிய உட்கட்டமைப்பு காணப்படுகின்றது. இங்கு மின் இணைப்பு வசதி, புதிதாக ஆரம்பிக்கப்பட்ட குழாய் நீர் வசதி, மின் விளக்கு கம்பங்கள், பாலங்கள், நெடுஞ்சாலை போன்ற பல உட்கட்டமைப்புக்கள் காணப்படுகின்றன.
போக்குவரத்து
[தொகு]இலங்கை போக்குவரத்துச் சபையின் பேருந்து சேவை இலங்கையின் ஏனைய முக்கிய நகரங்களுக்கான இணைப்பை வழங்குகின்றன. தனியார் பேருந்து சேவையும் மாவட்டத்திற்கு உள்ளேயும் வெளியேயும் சேவையினை வழங்குகின்றன. மட்டக்களப்பிலிருந்து தலைநகரை நகரை அடைய கிட்டத்தட்ட 8 மணித்தியாலங்கள் தேவைப்படுகின்றது.
- சாலைகள்
- ஏ-4 நெடுஞ்சாலை மட்டக்களப்பையும் கொழும்பையும் அவிசாவளை, இரத்தினபுரி, புத்தளை, மொனராகலை, சியம்பலண்டுவ, பொத்துவில், திருக்கோவில், ஒலுவில், காரைதீவு, கல்முனை ஊடாக இணைக்கிறது.
- ஏ-5 நெடுஞ்சாலை மட்டக்களப்பை செங்கலடி ஊடாகப் பேராதனையுடன் இணைக்கிறது.
- ஏ-15 நெடுஞ்சாலை மட்டக்களப்பை திருகோணமலையுடன் இணைக்கிறது.
- பேருந்து
இலங்கையின் வடக்கு கிழக்கு உட்பட்ட முக்கிய நகரங்களுக்கு அரச, தனியார் சேவைகள் நடைபெறுகின்றன. இதில் முக்கிய நெடுஞ்சாலைகளாக ஏ-4, ஏ-5, ஏ-9, ஏ-15 ஆகியன விளங்குகின்றன.
- தொடருந்து
மட்டக்களப்பு புகையிரத நிலையம் ஊடாகத் திருகோணமலை, கொழும்பு ஆகிய இடங்களுக்கு நேரடி தொடருந்து சேவைகள் உள்ளன. பின்வரும் அட்டவணையில் உள்ளவாறு மட்டக்களப்பு - கொழும்பு சேவைகள் உள்ளன:[18]
புறப்படும் இடம் | சென்றடையும் இடம் | புறப்படும் நேரம் | சென்றடையும் நேரம் |
---|---|---|---|
மட்டக்களப்பு | கொழும்பு | 6.00 மு.ப | - |
மட்டக்களப்பு | கொழும்பு | 11.00 மு.ப | - |
மட்டக்களப்பு | கொழும்பு | 5.00 பி.ப | - |
மட்டக்களப்பு | கொழும்பு | 8.10 பி.ப (கடுகதி) | - |
- வான் வழி
இரத்மலானை விமான நிலையத்திலிருந்து மட்டக்களப்பு வாவி இறங்குமிடத்திற்கும், மட்டக்களப்பு விமான நிலையத்திற்கு பயணிகள் விமான சேவை உள்ளது. கெலிருவர்ஸ் மற்றும் சினமன் எயார் விமான போக்குவரத்து தற்போது இடம்பெறுகின்றது.[19][20]
வைத்தியசாலை
[தொகு]மக்களின் சுகாதாரத் தேவைகளைப் பூர்த்தி செய்ய அரச மற்றும் தனியார் வைத்தியசாலைகள் காணப்படுகின்றன. அவற்றின் பிரதான பங்கை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை வகிக்கின்றது. 2008இல் 64,843 உள்ளக நோயாளர்களும் 145,495 வெளி நோயாளர்களும் மருத்துவ சேவையினைப் பெற்றனர். கிழக்கு மாகாணத்திலுள்ள ஒரேயொரு போதனா வைத்தியசாலையான இதில் 900 கட்டில்கள் (2010ம் ஆண்டு) காணப்பட்டன.[21]
கல்வி நிறுவனங்கள்
[தொகு]பரந்துபட்ட கிழக்கு மாகாணத்தின் முதன்மைப் பல்கலைக்கழகமான கிழக்குப் பல்கலைக்கழகம், இலங்கை இம் மாவட்டத்தின் வந்தாறுமூலை எனும் ஊரில் அமைந்துள்ளது. இது மட்டக்களப்பு நகரிலிருந்து வடக்காக 17 கி.மீ தொலைவில் மட்டக்களப்பு-திருகோணமலை ஏ-15 நெடுஞ்சாலையில் உள்ளது. மட்டக்களப்பு கல்வி வலயங்கள் மண்முனை வடக்கு, மண்முனைப் பற்று, மண்முனை மேற்கு, ஏறாவூர்ப் பற்றென நான்காகப் பிரிக்கப்பட்டுள்ளன. மட்டக்களப்பு மாவட்டத்தில் காணப்படும் 233 பாடசாலைகளில்[22] இந்நான்கு கல்வி வலயங்களில் 106 பாடசாலைகள் காணப்படுகின்றன.[23] மட்டக்களப்பு நகருக்குட்பட்ட மண்முனை வடக்கு கல்வி வலய 41 பாடசாலைகளில் ஏழு "1AB" தரத் தேசியப் பாடசாலைகள் காணப்படுகின்றன. அவ் தேசியப் பாடசாலைகள் கிறித்தவ நற்செய்தி அறிவிப்பாளர்களினால் நூற்றைம்பது ஆண்டுகளுக்கு முன் நிறுவப்பட்ட புனித மிக்கேல் கல்லூரி தேசியப் பாடசாலை, மெதடிஸ்த மத்திய கல்லூரி, சிசிலியா பெண்கள் பாடசாலை, வின்சன்ட் பெண்கள் பாடசாலை போன்றனவும், சுவாமி விபுலானந்தரால் ஆரம்பிக்கப்பட்ட மட்டக்களப்பு சிவானந்த வித்தியாலயம் மற்றும் மட்டக்களப்பு விவேகானந்தா பெண்கள் மகா வித்தியாலயம், மட்டக்களப்பு இந்துக் கல்லூரி என்பனவாகும்.[24] 2008ம் ஆண்டு புள்ளிவிபரத்தின்படி, இவ்வேழு தேசிய பாடசாலைகளிலும் 11,895 மாணவர்கள் கல்வி கற்றனர்.[18] இதுதவிர சில முஸ்லிம் வித்தியாலங்கள் மட்டக்களப்பு மாவட்டத்தின் கல்விச் செயற்பாட்டில் முக்கிய இடம் வகிக்கின்றன.
மஞ்சந்தொடுவாய் தொழில்நுட்பக்கல்லூரி, தாழங்குடா கல்வியியற் கல்லூரி, சுவாமி விபுலானந்த இசை நடனக் கல்லூரி (தற்போதைய சுவாமி விபுலானந்தா அழகியல் கற்கைகள் நிறுவனம்), ஆசிரியர் பயிற்சிக் கலாசாலை, இலங்கை திறந்த பல்கலைக் கழகத்தின் மட்டக்களப்பு பிராந்திய நிலையம் போன்றவும் முக்கிய கல்வி நிறுவனங்களாகும். இவற்றைத் தவிர தனியார் நிறுவனங்களின் கல்விச் செயற்பாடுகளில் தகவல் தொழில் நுட்பம், ஆங்கில மொழி மூலமாகக் கல்வியூட்டல், ஆங்கிலக் கல்வி போன்றன குறிப்பிடத்தக்கன. இந்திய பல்கழைக் கழகங்களில் தொலைக்கல்வி பாடநெறிகளும் இடம் பெறுகின்றன.
கலாசாரம்
[தொகு]இங்கு பெரும்பாலும் தமிழர் பண்பாடு செல்வாக்கு செலுத்தும் ஒன்றாகக் காணப்படுகின்றது. இசை, நடனம், நாடகம், சமயமென இதன் தாக்கம் உள்ளது. தமிழர் ஆடற்கலைகளில் ஒன்றான நாட்டுக்கூத்து (வடமோடி, தென்மோடி நாட்டுக்கூத்து) இங்கு பிரபல்யம் பெற்றது. ஆயினும், குறிப்பாக முசுலிம்கள் அதிகமாகம் வாழும் பகுதிகளில் இசுலாமிய கலாச்சாரம் காணப்படுகின்றது. மட்டக்களப்பு காலணித்துவ ஆட்சியின் கீழ் இருந்ததால், இங்கு ஐரோப்பிய கலாச்சாரத்தின் தாக்கமும் காணப்படுக்கின்றது. இதில் போர்த்துக்கேய கலாச்சாரத்தின் தாக்கம் குறிப்பிடத்தக்கது. இங்கு "கத்தோலிக்க பறங்கியர் ஒன்றியம்" என்ற போர்த்துக்கேய கலாச்சாரத்தைப் பின்பற்றும் அமைப்பு காணப்படுகிறது. இலங்கையில் அதிகளவில் இலங்கை போர்த்துக்கீச கிரியோல் மொழி பேசுவோர் (போர்த்துக்கல் பரங்கியர்) இங்குள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.[25]
சமயம்
[தொகு]இந்து, இசுலாம், கிறித்தவம், பௌத்தம் ஆகிய நான்கு சமய நம்பிக்கை கொண்டவர்கள் இம்மாவட்டத்தில் காணப்படுகின்றனர். இவர்களில் இந்துக்கள் அதிகமாகக் காணப்படுகின்றனர். இச்சமயங்களைப் பிற்பற்றுவோர் இந்துக்கள், இசுலாமியர், கிறித்தவர், பெளத்தர், ஏனையோர் முறையே 64.6%, 25.5%, 8.8%, 1.1%, 0.0% என்ற அடிப்படையில் 2012ம் ஆண்டில் இலங்கை குடித்தொகை, புள்ளிவிபர திணைக்கள கணக்கெடுப்பில் காணப்பட்டனர்.[26] மட்டக்களப்பு மாநகர சபையினுள் வசிப்போர் வீதம் பின்வரும் விளக்க வரைபடத்தில் உள்ளது போன்று காணப்படுகின்றனர்.
மட்டக்களப்பு வரலாற்றுடன் சமயங்களின் முக்கியத்துவமும் அங்கு காணப்பட்டது. இதற்குச் சான்றாக மட்டக்களப்பு மாவட்டத்தில் புராதன இந்து ஆலயங்கள் பலவற்றைக் காணலாம். இராமாயணத்துடன் தொடர்படுத்தப்படும் மாமாங்கம் முதல் பல புராதன இந்து ஆலயங்கள் இங்கு காணப்படுகின்றன. இங்கு கண்ணகி வழிபாடு வேறுபகுதிகளில் இல்லாதவாறு முக்கியத்துவம் பெற்று காணப்படுகின்றது. போர்த்துக்கேயர் வருகையுடன் இங்கு உருவாகிய கிறிஸ்தவம், பல வரலாற்று கிறிஸ்தவ ஆலயங்களைக் கொண்டுள்ளது. இம்மாவட்டத்தில் பெரிய இசுலாமிய பள்ளிவாயில்கள் முசுலிம்கள் அதிகமாக வாழும் இடங்களில் காணப்படுகின்றன. நகரத்தில் இந்நான்கு சமயங்களின் முக்கிய வணக்க நிலையங்கள் காணப்படுகின்றன.
விளையாட்டு
[தொகு]துடுப்பாட்டம், காற்பந்தாட்டம் என்பன பரவலாக விளையாடப்படும் விளையாட்டாகவுள்ளது. ஆனாலும் தேசிய அளவில் மட்டக்களப்பிற்கு புகழ் தேடித் தந்த விளையாட்டாகக் கூடைப்பந்தாட்டம் அமைந்துள்ளது.[27][28] இங்கு பதிவு செய்யப்பட்ட 25 விளையாட்டுக் கழகங்கள் காணப்படுகின்றன. நகரில் "வெபர் அரங்கு" எனும் பிரதான விளையாட்டு அரங்கு காணப்படுகின்றது.
மட்டக்களப்பு வரலாற்று நூல்கள்
[தொகு]- மட்டக்களப்பு ஆய்வு, கிழக்கு மாகாண இலங்கை (ஆங்கிலத்தில்) The Monograph of Batticaloa, Eastern Province Ceylon – S O Canagaratnam (1921)
- மட்டக்களப்பு மான்மியம் - மகாவித்துவான் F X C நடராசா (1962) மட்டக்களப்பு மான்மியம்
- மட்டக்களப்புத் தமிழகம் - பண்டிதர் வி சீ கந்தையா (1964) மட்டக்களப்புத் தமிழகம் ஈழகேசரிப் பொன்னையா வெளியீடு, குரும்பசிட்டி யாழ்ப்பாணம்.
- நூறு வருட மட்டுநகர் நினைவுகள் - ஆசிரிய திலகம் எஸ். பிரான்சிஸ் (1994)
- மட்டக்களப்பு பூர்வீக சரித்திர ஏடுகள் - திரு. திருமதி கமலநாதன்
- மட்டக்களப்பு மான்மியம் (ஓர் ஆராய்ச்சி) - கு.தனபாக்கியம்
- மட்டக்களப்பு முற்குகர் வரலாறும் மரபுகளும் - ஞா.சிவசண்முகம்
- மட்டக்களப்பு வரலாறு - ஒரு அறிமுகம் - வெல்லவூர்க் கோபால்
- மலையாள நாடும் மட்டக்களப்பும் - வெல்லவூர்க் கோபால்
- மாகோன் வரலாறு - க.தங்கேஸ்வரி
- குளக்கோட்டன் தரிசனம் - க.தங்கேஸ்வரி
- கிழக்கிலங்கை பூர்வீக வரலாறு - க.தங்கேஸ்வரி
- மட்டக்களப்பு மாநிலத்தின் பண்டைய வரலாற்று அடிச் சுவடுகள் (இரு பாகங்கள்) - க.தா.செல்வராசகோபால், எஸ்.பி.கனகசபாபதி [29]
இயற்கை அழிவுகள்
[தொகு]- 1956 ஆம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளம்
- 1978 நவம்பர் மாதம் ஏற்பட்ட கிழக்கு மாகாண சூறாவளி
- 2004 டிசம்பர் 26 ஆம் திகதி ஏற்பட்ட சுனாமி – 2004 இந்தியப் பெருங்கடல் நிலநடுக்கத்தினால் மோசமாகப் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் மட்டக்களப்பும் ஒன்று. இதில் 35,000 க்கு மேற்பட்டோர் இறந்தும், கிட்டத்தட்ட 450,000 பேர் இடம்பெயர்ந்தும் இன்னலுக்குட்பட்டனர்.[18]
நாகர் கிணறு
[தொகு]இப்பகுதியில் வாழ்ந்த நாகர்களால் உருவாக்கப்பட்ட இரண்டாம் நூற்றாண்டைச்சார்ந்த கிணறு ஒன்று பிரசித்தி பெற்ற வந்தாறுமூலை நீர்முகப்பிள்ளையார் ஆலயத்தில் அமைந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இங்கு அமைந்துள்ள கல்வெட்டில் தமிழ்ப் பிராமி எழுத்தில் மணி நாகன் என்று அடையாளமிடப்பட்டுள்ளது.[30]
மட்டக்களப்பவர்
[தொகு]மட்டக்களப்பில் குறிப்பிடத்தக்க பன்முகத் தமிழறிஞர்களான ஈழத்துப் பூராடனார், ஏ. பெரியதம்பிப்பிள்ளை, வி. சீ. கந்தையா, விபுலாநந்தர், வீ. தோ. பொ. த. ஆறுமுகபிள்ளை போன்ற பலர் வாழ்ந்துள்ளனர்.
இவற்றையும் பார்க்க
[தொகு]- வரலாறு
- கிழக்கிலங்கைத் தமிழர்களின் வரலாறு
- மட்டக்களப்பு அருங்காட்சியகம்
- வெல்லாவெளிப் பிராமிச் சாசனங்கள்
- முக்குவர் சட்டம்
- மட்டக்களப்புத் தேசம்
- பொது
- மட்டக்களப்புப் பேச்சுத் தமிழ்
- கிழக்கிலங்கைத் தமிழர்
- மட்டக்களப்பு மாவட்ட இடப்பெயர்கள்
- மட்டக்களப்பு தேர்தல் மாவட்டம்
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Thiyaraja Saravanapavan named new Mayor of Batticaloa".
- ↑ "Mayor And Members".
- ↑ "Road Distance in Sri Lanka". www.leansigmasl.com.
- ↑ "Maddakka'lappu / Batticaloa". TamilNet. March 19, 2009. https://www.tamilnet.com/art.html?catid=98&artid=28599.
- ↑ பழந்தமிழ் இலக்கியத்தில் மட்டக்களப்புத் தமிழ். மட்டக்களப்பு: ஆரணியகம். 2005. p. 75.
- ↑ மட்டக்களப்பு மான்மியம் - நாமவியல் (பக்கம் 7)
- ↑ "Batticaloa's 'Singing Fish' still in business".
- ↑ "Batticaloa: The Land Of The Singing Fish". Archived from the original on 2012-08-03. பார்க்கப்பட்ட நாள் 2012-07-04.
- ↑ "Batticaloa Online". www.batticaloaonline.com.
- ↑ Muller; Carl (30 June 1997). "Children Of The Lion". Penguin Books India – via Google Books.
- ↑ டி சில்வா, A History of Sri Lanka, பக்.132
- ↑ மட்டக்களப்பு வரலாறு - ஒரு அறிமுகம்
- ↑ Shanmugaratnam, N. (1995) The need for and steps towards a master plan for suitable utilization of the Batticaloa lagoon, Report to NORAD
- ↑ "Batticaloa, Sri Lanka Travel Weather Averages (Weatherbase)". Weatherbase.
- ↑ "World Weather Information Service — Batticaloa". World Meteorological Organisation. பார்க்கப்பட்ட நாள் 9 May 2016.
- ↑ "Klimatafel von Batticaloa (Madakalapuwa) / Sri Lanka (Ceylon)" (PDF). Baseline climate means (1961–1990) from stations all over the world (in German). Deutscher Wetterdienst. பார்க்கப்பட்ட நாள் 9 May 2016.
{{cite web}}
: CS1 maint: unrecognized language (link) - ↑ "A2 : Population by ethnic group according to districts, 2012". Archived from the original (PDF) on 2018-03-10. பார்க்கப்பட்ட நாள் 2012-12-31.
- ↑ 18.0 18.1 18.2 18.3 18.4 18.5 "புள்ளி விபரம்" (PDF). Archived from the original (PDF) on 2013-10-21. பார்க்கப்பட்ட நாள் 2012-09-03.
- ↑ "கெலிருவர்ஸ்". Archived from the original on 2012-06-26. பார்க்கப்பட்ட நாள் 2012-09-02.
- ↑ "Sri Lanka Domestic Flights - Cinnamon Air - Air Taxi Tours Sri Lanka". Cinnamon Air.
- ↑ "Under Line Ministry Beds 2010" (PDF). Ministry of Health, Sri Lanka. Archived from the original (PDF) on 2011-09-27. பார்க்கப்பட்ட நாள் 2012-09-03.
- ↑ "Number of schools by type of school and district, 1972–2002" (PDF).
- ↑ "மட்டக்களப்பு கல்வி வலயங்கள்". Archived from the original on 2013-12-13. பார்க்கப்பட்ட நாள் 2012-09-02.
- ↑ "மண்முனை வடக்கு கல்வி வலயம்". Archived from the original on 2013-12-13. பார்க்கப்பட்ட நாள் 2012-09-02.
- ↑ "Journal of Pidgin and Creole Languages". John Benjamins. 30 June 1987 – via Google Books.
- ↑ "Census of Population and Housing 2011". www.statistics.gov.lk. Archived from the original on 2019-01-07. பார்க்கப்பட்ட நாள் 2012-10-10.
- ↑ "The Island". www.island.lk.
- ↑ "The Golden Era of Basketball in Batticaloa". Archived from the original on 2012-09-17. பார்க்கப்பட்ட நாள் 2012-09-03.
- ↑ "Batticaloamc.com". Archived from the original on 2010-01-12. பார்க்கப்பட்ட நாள் 2012-01-04.
- ↑ மட்டக்களப்பில் 2000 ஆண்டு பழமையான நாகர் கிணறு தி இந்து தமிழ், 05 செப்டம்பர் 2015