புத்தளம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
புத்தளம்
Puttalam
நாடு இலங்கை
மாகாணம்வடமேற்கு
மக்கள்தொகை
 • மொத்தம்45,401
நேர வலயம்இலங்கை சீர் நேரம் (ஒசநே+05:30)
தொலைபேசி குறியீடு94-32
ஐ.எஸ்.ஓ 3166 குறியீடுNW

புத்தளம் (ஆங்கிலம்: Puttalam, சிங்களம்: පුත්තලම) இலங்கையின் மேற்குக் கடற்கரையை அண்டியுள்ள ஒரு நகரம் ஆகும். இது வடமேல் மாகாணத்தில் நகர சபை ஆட்சிக்கு உட்பட்டு அமைந்துள்ளது. இது அதே பெயரையுடைய புத்தளம் மாவட்டத்தின் தலைநகரமும் ஆகும்.

கொழும்பில் இருந்து வடக்கு நோக்கி 130 வது கி.மீ (81 மைல்) தூரத்தில் கடல் நீரேரியைத் தொட்டவாறு காட்சி தரும் நகரம் புத்தளம். கல்பிட்டி நகரையும் புத்தளம் நகரையும் இணைத்து 28 கி.மீ (17 மைல்) நீண்டு கிடக்கும் கடல்நீர் ஏரி புத்தளம் நகரை அண்மித்ததாகத்தான் தனது இறுதி எல்லையைப் பூர்த்தி செய்கிறது. புத்தளம் நகரிற்கும், கல்பிட்டிக்கும் இன்னும் பல கிராமங்களுக்கும் உயிரோட்டமான அழகைத் தருவதில் இக்கடல் நீர் ஏரிக்கு முக்கிய பங்குண்டு. உள் நாட்டிற்குள் அமைந்த மிகப் பெரிய நீர்ப் போக்குவரத்துப் பாதைகளில் ஒன்றாக இதைக் குறிப்பிட முடியும். ஆங்கிலேயர் காலத்தின் பிற்பகுதியில் கொழும்பிலிருந்து கல்பிட்டி வரை தரைப்பாதை திறக்கப்பட்டதன் பின்னர்தான் இந்நீர்ப் போக்குவரத்து படிப்படியாக நிறுத்தப்பட்டது. புத்தளம் நகரின் பெயர் தான் மாவட்டத்தின் பெயருமாகும். புத்தளம் என்பது நகரையும் குறிக்கிறது மாவட்டத்தையும் குறிக்கிறது. சிலாபம், குருநாகல் நகரங்கள் பெற்றுக்கொள்ளாத பல முக்கியத்துவம் நவீன வரலாற்றில் புத்தளம் பெறக்கூடியதாக இருந்தது ஒரு குறிப்பிடத்தக்க விடயம்[1].

இன்று புத்தளம், கல்பிட்டி இரண்டும் முசுலிம்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட கடலோர நகரங்களாகவும், வர்த்தக நகரங்களாகவுமே தலைநிமிர்ந்து நிற்கின்றன. சிறிய, பெரிய அளவில் பலநூறு கிராமங்கள் ஒன்றிணைந்து கைத்தொழில், கல்வி, வர்த்தகம், மீன்பிடி, உப்பு உற்பத்தி, இறால் பண்ணை என்று பல்வேறு தொழில்களில் ஈடுபட்டு இந்த மாவட்டத்தின் வளர்ச்சியில் பங்கேற்றுவருகின்றன.

வரலாறு[தொகு]

14ம் நூற்றாண்டில் இங்கு கால் பதித்த இப்னு பதூதா இந்நகரை "பத்தாளா” என்று குறிப்பிட்டுள்ளார்.[2] ‘புத்தளம்’ என்றோ அதற்கு கிட்டிய மற்றொரு பெயரிலோ இது அழைக்கப்பட்டதற்கும், அது ஒரு சுறுசுறுப்பான கடல் வணிக நகராக இருந்ததற்கும் முசுலிம் ‘சுல்தான்’ ஒருவர் அதை ஆட்சி செய்து கொண்டிருந்தான் என்பதற்கும் இபுனு பதூதாவின் ‘இரேகிலா’ எனும் பிரயாணக்குறிப்பில் கூறப்பட்டுள்ளன.[3]

இலங்கையில் குடியேற்றம் ஆரம்பமாவதற்கு முதல்வராக இருந்த விசயன் மற்றும் அவனுடைய சகாக்கள் இந்தியாவிலிருந்து இலங்கைக்கு வந்திறங்கியது புத்தளம் மாவட்டத்தில் அமைந்துள்ள தம்ப பன்னி பிரதேசத்திலேயேயாகும். மேலும் விசயன் அரசனாவதற்கு உதவிபுரிந்ததாக கூறப்படும் குவேனி என்பவளின் இருப்பிடமும் இப்பிரதேசத்திலேயே இருந்துள்ளது. பிற்காலத்தில் விசய அரசர் இந்தியாவிலிருந்து வரவழைக்கப்பட்ட 'புத்தகச்சான' எனும் இளவரசியை திருமணம் செய்ததால் அங்கிருந்து சென்ற குவேணி தோணிகல எனும் பிரதேசத்தில் வாழ்ந்ததாக கதைகளில் கூறப்படுகின்றது. இப் பிரதேசத்திலேயே இலங்கையின் மிக நீண்ட கல் வெட்டும் காணப்படுகின்றது. இது புத்தளம் மாவட்டத்தில் ஆனமடுவ பிரதேசத்தில் அமைந்துள்ளது.[4]

12ம் நூற்றாண்டின் பின்னர் மத்திய மலை நாட்டிலும் குருநாகல் இராச்சியத்திலும் ஏற்பட்ட பல மாற்றங்களுக்கும் குருநாகல் உட்பட மத்திய மலை நாட்டிற்குத் தேவையான கடல் வழிப்பாதை, துறைமுகம், பொருட்களைக் களஞ்சியப்படுத்தல், சிங்கள அரசர்களுக்கும் மக்களுக்கும் தேவையான ஆயுதங்கள், ஆடம்பரப் பொருட்கள், உணவுப்பதார்த்தங்கள், உள்ளூர் உற்பத்திகளை சந்தைப்படுத்தல், வெளி நாடுகளுக்கு அனுப்புதல், வெளிநாடுகளுடன் தொடர்புகளை வைத்துக் கொள்ளுதல் ஆகிய பல தேவைகளை புத்தளமும் கல்பிட்டியும் தான் நிறைவேற்றின. புத்தளம் உள்துறைமுகமாகச் செயற்பட்டது. கல்பிட்டி கிட்டத்தட்ட சர்வதேசத் துறைமுகமாக இருந்தது. இவற்றிற்கு சுமார் 20 அல்லது 30 மைல் தொலைவில் இரண்டாயிரம் ஆண்டு பழைமை வாய்ந்த குதிரை மலைத் துறைமுகம் அமைந்துள்ளது.

இந்த இரு நகரங்களினதும் துறைமுக வர்த்தக நடவடிக்கைகளும், கடல் வாணிபத்திற்கான வசதியும், புவியியல் ரீதியான அமைவிடமும், கேந்திர முக்கியத்துவமும் வரலாற்றில் எப்போதுமே உரோமர், பாரசீகர், பினீசியர், சபாயியர், அரேபியர் போன்றோரையும் பின்னர் போர்த்துக்கேயரையும், இடச்சுக்காரர்களையும், ஆங்கிலேயர்களையும் கவரத்தூண்டிய விடயங்களாக இருந்தன.

காலநிலை[தொகு]

சனவரி முதல் மார்ச்சு வரையும் சூன் முதல் செப்டம்பர் வரையிலான ஒரு குறுகிய உலர் பருவத்தில் மற்றும் இரண்டாவது உலர் பருவத்தில் வெப்பமான நிலவியல் காலநிலை உள்ளது. மழைக்காலத்துக்கு அக்டோபர் முதல் திசம்பர் வரை முக்கியமாக உள்ளது. வெப்பநிலை இடையே உள்ள சிறிய வேறுபாடுகள் ஆண்டு முழுவதும் நிலைத்து நிற்கிறது.

தட்பவெப்ப நிலைத் தகவல், Puttalam
மாதம் சன பிப் மார் ஏப் மே சூன் சூலை ஆக செப் அக் நவ திச ஆண்டு
பதியப்பட்ட உயர்ந்த °C (°F) 33.7
(92.7)
36.3
(97.3)
36.5
(97.7)
37.5
(99.5)
35.4
(95.7)
34.9
(94.8)
35.0
(95)
34.6
(94.3)
35.5
(95.9)
34.5
(94.1)
33.3
(91.9)
34.3
(93.7)
37.5
(99.5)
உயர் சராசரி °C (°F) 30.5
(86.9)
32.1
(89.8)
33.2
(91.8)
33.1
(91.6)
32.3
(90.1)
31.5
(88.7)
31.4
(88.5)
31.5
(88.7)
31.7
(89.1)
31.1
(88)
30.5
(86.9)
29.9
(85.8)
31.6
(88.9)
தினசரி சராசரி °C (°F) 25.8
(78.4)
26.8
(80.2)
28.1
(82.6)
28.8
(83.8)
29.0
(84.2)
28.8
(83.8)
28.5
(83.3)
28.5
(83.3)
28.5
(83.3)
27.6
(81.7)
26.7
(80.1)
26.0
(78.8)
27.8
(82)
தாழ் சராசரி °C (°F) 21.0
(69.8)
21.4
(70.5)
23.1
(73.6)
24.5
(76.1)
25.8
(78.4)
26.2
(79.2)
25.6
(78.1)
25.5
(77.9)
25.3
(77.5)
24.1
(75.4)
22.9
(73.2)
22.1
(71.8)
24.0
(75.2)
பதியப்பட்ட தாழ் °C (°F) 16.3
(61.3)
15.2
(59.4)
18.4
(65.1)
20.4
(68.7)
20.4
(68.7)
21.0
(69.8)
21.2
(70.2)
21.7
(71.1)
21.4
(70.5)
19.4
(66.9)
16.7
(62.1)
17.6
(63.7)
15.2
(59.4)
பொழிவு mm (inches) 55
(2.17)
40
(1.57)
66
(2.6)
176
(6.93)
95
(3.74)
42
(1.65)
16
(0.63)
16
(0.63)
64
(2.52)
238
(9.37)
249
(9.8)
138
(5.43)
1,195
(47.05)
ஈரப்பதம் 70 66 67 71 74 73 73 73 72 75 76 75 72
ஆதாரம்: NOAA [5]

பொருளாதாரம்[தொகு]

தெங்கு முக்கோண பிரதேசத்திற்குட்பட்ட தெதுறு ஓயா மற்றும் மா ஓயா வரையிலான பிரதேசமானது தெங்கு உற்பத்தியில் சிறந்து விளங்குவதடன் அதற்கான சிறந்த மண்வளமும் இங்கு காணப்படுகிறது.

புராதன அரசர்கள் காலத்தில் நிர்மாணிக்கப்பட்ட தப்போவ, தினிபிட்டிய, கரவிட்ட, கட்டுப்பொத, கொட்டுக்கச்சிய மற்றும் இங்கினிமிட்டிய ஆகிய நீர்பாசன முறைமையின் கீழ் இன்றும் கூட நெற் செய்கை வெற்றிகரமாக மேற்கொள்ளப்படுவதோடு நீர்பாசன முகாமைத்துவ திட்டத்தின் கீழ் புதுப்பிக்கபட்ட நீலபெம்ம மற்றும் ரதவிபெந்தி கால்வாயினைச் சார்ந்தும் நெற்ச் செய்கை செய்யப்படுகிறது.

உப்பு உற்பத்தியும் இம்மாவட்டதத்தில் சிறந்து விளங்குவதோடு இறால் வளர்ப்பும் பொருளாதார ரீதியாக இலாபமீட்டக்கூடிய தொழிலாக காணப்படுகிறது. புத்தளம் மாவட்டத்திட்குட்பட்ட சிறுகடலானது இறால் வளர்ப்பிற்கு மிகவும் பொருத்தமானதாக உள்ளதால் பெருமளவிலான அந்நிய செலாவணியை இதன் மூலம் பெற்றுக் கொள்ள முடிகிறது.

வென்னப்புவையிலிருந்து கற்பிட்டி வரையான கடல் பிரதேசத்தில் மீன்கள், அட்டைகள், சிப்பிகள், போன்ற கடல் சார் வளங்கள் நிறைந்து காணப்படுவதோடு, மீன்பிடித் தொழிலும் சிறந்து விளங்குகிறது. மேலும் இப்பிரதேசத்திலுள்ள மண்வளம் மரக்கறிச்செய்கைக்கு உகந்ததாக காணப்படுகிறது.

வனாத்தவில்லு பிரதேசத்தில் மரமுந்திரிகைச் செய்கை பெருமளவில் மேற் கொள்ளப்படுகிறது. இப்பிரதேசத்திற்கு அண்மையிலுள்ள எலுவன்குளம் பகுதியில் சீமெந்து உற்பத்திக்கான சுண்ணாம்பு மூலப் பொருட்கள் காணப்படுகின்றன.

HOLCIM[6] சீமெந்து தயாரிப்பு புத்தளம் நகரின் மிகப்பெரிய உற்பத்தி திறன் கொண்ட தொழிற்சாலைகளில் ஒன்று.

போக்குவரத்து[தொகு]

புத்தளம் மாவட்டதின் முக்கிய நகரங்களுக்கு என்று மூன்று அகன்ற நெடுஞ்சாலைகள் உள்ளன. நீர்கொழும்பு வழியாக கொழும்பு உடன் புத்தளம் இணைக்கும் A3. குருநாகல் வழியாக கண்டி உடன் புத்தளம் இணைக்கும் A10, மற்றும் அனுராதபுரம் வழியாக திருகோணமலை உடன் புத்தளம் இணைக்கும் A12.

தினசரி பேருந்து போக்குவரத்து வசதிகள் தலைநகர் கொழும்பு, குருநாகல், கண்டி, மற்றும் அனுராதபுரம் போன்ற நகரங்கழுக்கு கிடைக்கின்றன. நீர்கொழும்பு வழியாக இருந்து கொழும்பு புத்தளம் இடையே ஒரு தொடருந்து சேவையும் உள்ளது.

கல்வி[தொகு]

புத்தளத்தில் உள்ள பாடசாலைகள்:

 • சாகிரா தேசிய கல்லூரி; ஆண்களுக்கான தமிழ் மொழி மூல கற்கை முறை.
 • பாத்திமா கல்லூரி; பெண்கலுக்கான தமிழ் மொழி மூல கற்கை முறை.
 • செயின்ட் ஆண்டுரூசு கல்லூரி; இரு பாலருக்குமான சிங்கள மூல கற்கை முறை.
 • ஆனந்த தேசிய கல்லூரி; இரு பாலருக்குமான சிங்கள மூல கற்கை முறை.
 • இந்து மத்திய கல்லூரி; இரு பாலருக்குமான தமிழ் மூல கற்கை முறை.
 • தில்லையடி முசுலிம் மகா வித்தியாலயம்
 • இக்ரா சர்வதேச பள்ளி
 • வட்டக்கன்டல் முசுலிம் வித்தியாலயம்

ஒரு திறந்த பல்கலைக்கழகமும், மகிந்தோதய விஞ்ஞான கல்லூரியும் உள்ளது.

மின்சாரம் உற்பத்தி[தொகு]

சேகுவந்தீவு காற்றாலைகள்

சேகுவந்தீவு லிமிட்டெட், விடத்தமுனை வின்ட் பவர் நிறுவனமும் சேர்ந்து $ 55 மில்லியன் முதலீட்டில் புத்தளம் பகுதியில் 20 மெகாவாட்கள் மின்சாரம் உற்பத்தி செய்வற்கு 25 காற்றாலைகளைப் பராமரிக்கிறது[7].

நுரைச்சோலை முன்னுற்பத்தி நிலையம் இலங்கையில் ஒரு பெரிய அனல் மின் நிலையமாக உள்ளது. கட்டுமான அமைப்பு வசதி முதலில் 2006 மே 11 இல் தொடங்கியது முதல் 300 மெகாவாட் உற்பத்தி கட்டம் முடிந்ததும், 2011 மார்ச் 22 அன்று சனாதிபதி மகிந்த இராசபட்ச தலைமையில் செயட்பாட்டை நியமித்தது. இலங்கை மின்சார சபையின் தகவல் படி, அமெரிக்க $455 மில்லியன் மதிப்பீட்டில் முதல் கட்டமாக ஆண்டுதோறும் 1.7 TWh (TeraWatt Hour) மின்சாரம் உருவாக்குகிறது; 2011இன் மதிப்பின் படி 11.5 TWh மின் உற்பத்தி இலங்கை நாட்டின் மொத்த உற்பத்தியில் பங்கு வகிக்கின்றது. எல்லா உற்பத்தியும் ஆலையில் இருந்து 115 கி.மீட்டர் (71 மைல்) தொலைவில் உள்ள வேயாங்கொடையின் சேமிப்பு தளத்துக்கு 220-கிலோவுவோற்று கம்பியின் வழியாக அனுப்பப்படுகிறது.

மதம்[தொகு]

புத்த மற்றும் கிறித்தவ மதத்தவர்கள் அதிகமானோர் நகரின் வெளியே வசிக்கும் வேளை, நகர்ப்புற பகுதிகளில் முசுலிம்கள் (95%)[8] செறிந்து வாழ்கின்றனர். இந்துக்கள் சிறுபான்மையாக உள்ளனர். அனைத்து மத வழிபாட்டு தலங்களும் நகர எல்லைக்குள் அமைக்கப்பட்டுள்ளன.

கட்டிடக் கலையழகுடன் கூடிய புத்தளம் முசுலிம்களின் பெரிய பள்ளிவாசல் நூற்றாண்டு கால வரலாற்றை உள்ளடக்கியுள்ளது.

விளையாட்டு[தொகு]

துடுப்பாட்டம் மிகப் பிரபலமான விளையாட்டாக உள்ளது. கால்ப்பந்து உள்ளூரில் பரவலாக விளையாடப்பட்டு வருகிறது, பல ஆண்டுகளுக்கு முன்பே பல்வேறு அணிகளாக உருவாக்கப்பட்டு நகர சபைக்கு சொந்தமான மைதானத்தில் தேசிய மட்டத்தில் போட்டிகள் நடைபெறும். மேலும், கைப்பந்து நகரத்தில் உள்ள புகழ்பெற்ற மற்றுமொரு மாலை நேர பொழுது போக்காக நகர சபைக்கு சொந்தமான சங்க மைதானத்தில் விளையாடப்பட்டு வருகின்றன.

மேற்கோள்கள்[தொகு]

 1. http://puttalamonline.com/puttalam-2/
 2. Dunn, Ross E. (1986). The Adventures of Ibn Battuta, a Muslim Traveller of the Fourteenth Century. University of California Press. பக். 242. http://books.google.com.au/books?id=ZF2spo9BKacC&pg=PA242&lpg=PA242&dq=battala+ibn+battuta&source=bl&ots=W88XDHbRYX&sig=LDY1xqMFuMdVq06HZjxqhlJ9zlY&hl=en&sa=X&ei=CbhmVMeGA6X5mAWU6YCYBA&ved=0CCIQ6AEwAA#v=onepage&q=battala%20ibn%20battuta&f=false. 
 3. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" இம் மூலத்தில் இருந்து 2016-09-12 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160912151033/http://myislandlanka.com/index.php?option=com_content&view=article&id=108:pitstop-in-puttalam&catid=80&Itemid=459. 
 4. "Puttalam District Secretariate". http://www.puttalam.dist.gov.lk/index.php?option=com_content&view=article&id=4&Itemid=17&lang=ta&limitstart=1. 
 5. "Puttalam Climate Normals 1961-1990". National Oceanic and Atmospheric Administration. ftp://dossier.ogp.noaa.gov/GCOS/WMO-Normals/RA-II/S3/43424.TXT. பார்த்த நாள்: டிசம்பர் 29, 2012. 
 6. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" இம் மூலத்தில் இருந்து 2014-11-01 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20141101114353/http://www.holcim.com/about-us.html. 
 7. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" இம் மூலத்தில் இருந்து 2013-10-06 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20131006125742/http://www.akbar.lk/power/wind_power.php. 
 8. http://www.statistics.gov.lk/DistrictStatHBook.asp?District=Puttalam&Year=2013
"https://ta.wikipedia.org/w/index.php?title=புத்தளம்&oldid=3590267" இருந்து மீள்விக்கப்பட்டது