தொலைபேசி இலக்கத் திட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தொலைபேசி இலக்கத் திட்டம் என்பது, புவியியல் ரீதியாக ஒரு குறிப்பிட்ட இடத்தில் உள்ள தொலைபேசி எண்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட ஓர் இலக்கத் திட்டமாகும். இந்த இலக்கத் திட்டத்தின்படி, தொலைபேசி எண்களுக்கு முன்னால் ஒரு குறியீடு கொடுக்கப்படும். தொலைபேசியின் முன் குறியீடு ஓர் இலக்கம், இரு இலக்கங்கள் அல்லது மூன்று இலக்கங்களைக் கொண்டதாக இருக்கலாம்.[1] இதனை தொலைபேசி குறியீடு அல்லது இடக் குறியீடு (Area code) என்றும் அழைப்பது உண்டு.

ஒரு குறிப்பிட்ட நிலப் பகுதியில் உள்ள தொலைபேசிகளுக்கு ஒரு குறிப்பிட்ட குறியீட்டு எண்கள் கொடுக்கப்படும். அந்தக் குறியீட்டு எண்களுக்கு முன்னால், ஒரு நாட்டின் தேசிய அணுகல் குறியீடும் இருக்கும். உலகின் பல நாடுகளில் "0" எனும் அணுகல் குறியீட்டைப் பயன்படுத்துகிறார்கள். அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளில் "1" எனும் அணுகல் குறியீட்டைப் பயன்படுத்துகிறார்கள்.[2]

வேறு நாடுகளுக்கு தொலைபேசி அழைப்புகள் விடுக்கும் போது, தொலைபேசி இடக் குறியீடுகள் மிகவும் அவசியம். அதற்கு நாடுகளின் அணுகல் குறியீடுகளைப் பயன்படுத்துகிறார்கள். ஒரு நாட்டின் அணுகல் குறியீட்டைப் பயன்படுத்தும் போது “+” எனும் குறியீட்டையும் இணைத்துக் கொள்ள வேண்டும். தொலைபேசி எண்களுக்கு இடையில் வரும் நடுக்கோடுகளுக்குப் பதிலாக வெற்று இடைவெளி இருக்க வேண்டும். (எடுத்துக்காட்டு., “+AA BBB CCC CCCC”).[3]

மேற்கோள்[தொகு]