உள்ளடக்கத்துக்குச் செல்

பௌத்தம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தியன் தான் புத்தர் சிலை. போ லின் துறவிகள் மடம், லந்தாவு தீவு, ஹொங்கொங்

பௌத்தம் அல்லது பௌத்த சமயம் (Buddhism, பாளி/சமசுகிருதம்: बौद्ध धर्म புத்த தர்மம்) என்பது கௌதம புத்தரின் போதனைகளின் அடிப்படையிலான ஒரு சமயமும், தத்துவமுமாகும். பௌத்த மரபின் படி, புத்தர் பொ.ஊ.மு. 4-ஆம், பொ.ஊ.மு. 6-ஆம் நூற்றாண்டுகளுக்கிடையே இந்தியத் துணைக்கண்டத்தின் கிழக்குப் பகுதியில் வாழ்ந்தவர் ஆவார்.[1] பௌத்த சமயம் இந்து மதத்துடன் நெருக்கமாக தொடர்புடையது மற்றும் தர்ம மதங்களின் கீழ் தொகுக்கப்பட்டுள்ளது.

பௌத்த சமயத்தில் முக்கியமான இரண்டு பிரிவுகள் பொதுவாக அங்கீகரிக்கப்பட்டுள்ளன: தேரவாத பௌத்தம் ("முதியோர் பள்ளி"), மற்றும் மகாயான பௌத்தம் ("பெரும் வாகனம்"). தேரவாதம் இலங்கை, மற்றும் தென்கிழக்காசியாவில் (கம்போடியா, லாவோஸ், தாய்லாந்து, பர்மா போன்ற நாடுகளில் பின்பற்றப்படுகின்றது. மகாயானம் சீனா, கொரியா, சப்பான், வியட்நாம், சிங்கப்பூர், தாய்வான் போன்ற கிழக்காசிய நாடுகளில் பின்பற்றப்படுகிறது. இந்த இரண்டை விட திபெத்து, மற்றும் மங்கோலியாவில் பின்பற்றப்படும் வச்சிரயான பௌத்தம் மூன்றாவது வகையாகக் குறிக்கப்படுகிறது.

பௌத்த சமயம் முக்கியமாக ஆசியாவிலேயே பின்பற்றப்பட்டாலும், உலகெங்கும் இந்த இரண்டு பிரிவுகளும் உலகெங்கும் காணப்படுகிறது. உலகெங்கும் தற்போது 350 மில்லியன் முதல் 1.6 பில்லியன் பௌத்தர்கள் இருப்பதாகக் கணிக்கப்பட்டுள்ளது. (350–550 மில்லியன் என்பது பரவலாக ஏற்றுக் கொள்ளப்பட்ட எண்ணிக்கை). அத்துடன் உலகில் மிக வேகமாகப் பரவி வரும் சமயங்களில் பௌத்தமும் ஒன்றாகும்.[2][3][4][5]

உலகின் தோற்றம் பற்றி பௌத்தம்[தொகு]

உலகின் தோற்றம் பற்றிப் பல சமயங்களில் உறுதியுடன் தகவல்கள் தரப்பட்டுள்ளன. பொதுவாக, பிற சமயங்கள் உலகைத் தோற்றுவித்த ஒன்றைப் பற்றிக் குறிப்பிட்டுச் சொல்கின்றன. பௌத்தம் இக்கேள்வியைத் தேவையற்ற ஒன்றாகக் கருதி, விடையை நோக்கிக் கற்பனைக் கதைகளைத் தர மறுக்கின்றது. உலகம் இருக்கின்றது, அதுவே பெளத்தத்தின் முடிவு. தேவையேற்படின், இவ்வுலகம் முந்தி இருந்த உலகத்தில் இருந்து கர்ம விதிகளுக்கமைய வந்தது எனக் கொள்ளலாம். எப்படி ஒரு மரம் விதையில் இருந்து வந்ததோ, எப்படி விதை மரத்தில் இருந்து வந்ததோ அப்படியே.[6]

சார்பிற்தோற்றக் கொள்கை[தொகு]

கடவுள் அல்லது ஒரு ஒருமிய சக்தி உலகைத் தோற்றுவிக்கவில்லை என்பது பெளத்தத்தில், புத்தர் போதனைகளில் முக்கிய ஒரு கொள்கை. இக்கொள்கையைத் தமிழில் சார்பிற்றோற்றக் கொள்கை என்றும் சமஸ்கிருதத்தில் பிரதித்தியசமுப்பாதம் என்றும் ஆங்கிலத்தில் Dependent Origination என்றும் கூறுவர்.

இக்கொள்கையை சோ.ந.கந்தசாமி பின்வருமாறு விளக்குகின்றார்:

"எப்பொருளும் தோன்றச் சார்புகள் (=நிதானங்கள்) காரணமாக உள்ளன. ஆதலின், ஒருபொருளை உண்டென்றோ இல்லையென்றோ உரைப்பது பிழை. எப்பொருளும் சார்பினால் தோன்றி மறைந்து தோன்றி மறைந்து தொடர்தலின் நிலைபேறான தன்மை இல்லை. தோன்றி மறைதல் என்பது இடையறவு படாமல் விளக்குச்சுடர் போலவும் ஓடும் நீர்போலவும் நிகழ்தலின் தோன்றுதல் மறைதல் என்ற இரண்டிற்கும் இடையே நிறுத்தம் என்பது இல்லை. ஆதலின், புத்தரின் சார்பிற்றோற்றக் கொள்கை, முதற் காரணத்தை உடன்பட்ட கடவுட் கொள்கையினைப் புறக்கணித்து, ஒன்று தோன்ற ஒன்று சார்பாக உள்ளது என்ற சார்புக் காரணத்தைக் கொண்டது."[7]

விக்கிபீடியா பஞ்சாயத்தில் கொள்கை விவாதங்கள் நடந்து வருகின்றன. கருத்துகளைப் பதிவுசெய்க

கடவுட் கோட்பாடு[தொகு]

திபெத்தியப் பாணியிலான அவலோகிதேஸ்வரரின் ஓவியம்.

பெளத்த உலகப் பார்வையில் கடவுள் இருப்பதை அனுமானிக்கவில்லை, அப்படி இருந்தாலும் அதற்கான தேவை அங்கு இல்லை. கர்ம விதிகளுக்கு அமையவே உலகம் இயங்குகின்றது, அதை மீறிய மீவியிற்கை ஒன்றிருப்பதைப் பௌத்தம் மறுக்கின்றது. அப்படி இருந்தால் எந்த ஒரு பொருளுக்குமான இருப்பை நோக்கிய பெளத்தத்தின் அடிப்படை மூன்று விதிகளான நிலையாமை (அனைத்தும் மாறிக்கொண்டே இருப்பது - Anicca), ஆன்மா இன்மை (அழியாத ஒன்றாகக் கருதப்படும் ஆன்மா என்பது கிடையாது - Anatta), துக்கம் இருக்கிறது (துயரம், துன்பம், மகிழ்வற்ற நிலை - Dukkha) மீறியே கடவுள் என்ற ஒன்று இருக்க வேண்டும், அது பெளத்தத்தின் உலகப் பார்வைக்கு ஒவ்வாது.

அனைத்தையும் உருவாக்கும், நிர்வாகிக்கும், அழிக்கும் குணங்களைக் கொண்ட ஒருமிய சக்தி போன்ற கடவுள் என்ற ஒன்று உண்டு என்பதைப் புத்தர் மறுத்தார். எனினும் பெளத்தத்தில் தேவர்கள் என்ற ஒரு வகைப் பிறவிகள் இருக்கின்றார்கள். அவர்கள் ஒரு உயர்ந்த நிலையில் அல்லது வேறு பரிணாமத்தில் கர்ம விதிகளைப் புரியக் கூடியவர்கள் அல்லது அனுபவங்களைப் பெற அல்லது அனுபவிக்கக் கூடியவர்கள், ஆனால் அவர்களும் கர்ம விதிகளுக்குக் கட்டுபட்டவர்களே.

புத்தர் கடவுள் இல்லை. அவர் ஒரு விடுதலை பெற்ற மனிதர். பெளத்தர்கள் புத்தரை வழிபடுவதில்லை, மரியாதை செலுத்துகின்றார்கள் அல்லது நினைவு கொள்கின்றார்கள்.[8][9]

ஒடிசா மாநிலத்தின் புவனேசுவரம் அருகில் அமைந்துள்ள தௌலி புத்தர் கோவில்

புத்தர் கண்ட நான்கு உண்மைகள்[தொகு]

 1. துன்பம் ("துக்கம்"): மனிதர்களால் துன்பத்தைத் தவிர்க்க முடியாது. பிறப்பு, நோய், முதுமை, இறப்பு ஆகியவை மனிதருக்குத் துன்பத்தைத் தருபவை. பசி, பகை, கொலை, வெகுளி, இழப்பு, மயக்கம் போன்றவையும் துன்பம் தருபவையே.
 2. ஆசை/பற்று: துன்பத்துக்கான காரணம் ஆசை அல்லது பற்று.
 3. துன்பம் நீக்கல்: ஆசையை விட்டுவிடுவதுவே துன்பத்தை நீக்கும் முறைமை.
 4. எட்டு நெறிகள்: எட்டு நெறிகளும் துக்கத்தைப் போக்க உதவும் வழிமுறைகள் ஆகும்.

எட்டு நெறிமுறைகள்[தொகு]

 1. நற்காட்சி - Right View
 2. நல்லெண்ணம் - Right Thought
 3. நன்மொழி - Right Speech
 4. நற்செய்கை - Right Conduct
 5. நல்வாழ்க்கை - Right Livelihood
 6. நன்முயற்சி - Right Effort
 7. நற்கடைப்பிடி - Right Mindfulness
 8. நற்தியானம் - Right Meditation

பிறவிச் சுழற்சியின் பன்னிரு சார்பு நிலைகள்[தொகு]

பிறவிச் சுழற்சியின் பன்னிரு சார்பு நிலைகள்
தமிழ் ஆங்கிலம் சமஸ்கிருதம் பாளி விளக்கம்
அறியாமை Ignorance அவித்தை அவிஜ்ஜா
செய்கை Impressions சங்காரம் சம்ஸ்காரம்
உணர்வு Consciousness விஞ்ஞானக் கந்தம் விஞ்ஞானக் கந்தம்
அருவுரு Mind-Body Organism நாமரூபம் நாமரூபம்
ஆறு புலன்கள் Six Senses ஷட் ஆயத்தனம் ஷள் ஆயத்தனம்
ஊறு Sense contact ஸ்பர்சம் பஸ்ஸோ
நுகர்ச்சி Sense Experience வேதனா வேதனா
வேட்கை Craving திருஷ்ணா தண்ஹ
பற்று Mental Clinging உபாதானம் உபாதானம்
பவம் Will to born பகவ பகவ
பிறப்பு Rebirth ஜாதி ஜாதி
வினைப்பயன் Suffering ஜராமரணம் ஜராமரணம்

பெளத்த எண்ணக்கருக்கள்[தொகு]

தமிழில் பௌத்தம் நோக்கிய ஆக்கங்கள்[தொகு]

தற்கால உலகில் பௌத்தம்[தொகு]

பன்னாட்டு பௌத்தக் கொடி 1880களில் இலங்கையில் ஹென்ரி ஸ்டீல் ஆல்காட்டால் வடிவமைக்கப்பட்டது. தற்காலத்தில் உலக பௌத்த கூட்டுணர்வால் பௌத்த அடையாளமாக பின்பற்றப்பட்டது.

பௌத்தர்களின் எண்ணிக்கை பற்றிய மதிப்பீடுகள், பெளத்தர்கள் 230 மில்லியனுக்கும் 500 மில்லியனுக்கும் இடையில் இருப்பதாகக் காட்டுகின்றன. அதிகமாகக் குறிப்பிடப்படுவது ஏறத்தாழ 350 மில்லியன் ஆகும்.[10]

பெளத்தமும் அறிவியலும்[தொகு]

பிற சமயங்கள் போலன்று பௌத்தம் அறிவியலின் முடிவுகளை ஏற்றுக்கொள்ள தயங்குவதில்லை. ரிபற்ரன் தலாய் லாமாவின் பின்வரும் கூற்று இதை தெளிவுறுத்துகின்றது. "பொளத்ததில் மெய்ப்பொருள் புரிதலை நோக்கிய தேடல் சீரிய ஆராய்ச்சியனால் (critical investigation) மேற்கொள்ளப்படுகின்றது. அறிவியலின் முடிவானது பெளத்தத்தின் கூற்றுக்களில் ஏதாவதொன்றை பிழை என்று நிரூபிக்குமானால், அறிவியலை ஏற்று அந்தக் கூற்றை பெளத்ததில் இருந்து விலக்கிவிடவேண்டும்."[11]

ஆனால், தற்கால அறிவியலின் வழிமுறைகளுக்கு எல்லைகள் உண்டென்றும், மெய்ப்பொருளை அறிவதில் அறிவியலுக்கு உட்படாத வழிமுறைகளும் தேவை என்றும் பௌத்தம் கருதுகின்றது. அதாவது, சிலர் அனைத்தும் அறிவியலுக்கு உட்பட்டது என்கிறார்கள். இக்கருத்தைப் பௌத்தம் ஏற்கவில்லை, மேலும் இக்கருத்து அறிவியல் தன்மையற்றது என்பதையும் சுட்டுகின்றது.[12]

பெளத்தமும் தலித் மக்களும்[தொகு]

தமிழகத்தில் அயோத்திதாச பண்டிதர் அவர்களால் பறையர்கள் பூர்வகுடி பவுத்தர்கள் என்று முன்மொழியப்பட்டது.இவர் டாக்டர் அம்பேத்கருக்கு முன்னோடியாக தலித் மக்களிடையே பவுத்த எழுச்சியை ஏற்படுத்தினார் இந்து சமயச் சாதிய சமூகக் கட்டமைப்புக்குள் இருந்து விடுபடப் பௌத்தம் ஒரு மாற்று வழியாகத் தலித் மக்களின் முக்கிய தலைவர்களின் ஒருவரான அம்பேத்கரினால் பரிந்துரைக்கப்பட்டது. இப்பரிந்துரை அரசியல் சமூக காரணங்களுக்கான ஒரு மேலோட்டமான பரிந்துரை அல்ல. அம்பேத்கர் இளவயதில் இருந்தே பெளத்தத்தை ஆராய்ந்து, அதன் மீது நம்பிக்கை கொண்டு முன்மொழிந்த ஒரு பரிந்துரையே. தலித்துக்கள் மன ரீதியாகத் தம்மை விடுதலை செய்யச் சமய மாற்றம் அவசியம் என்பதை அம்பேத்கர் உணர்ந்து விளக்கினார். அவரின் வழிநடத்தலில் பலர் இந்து சமயத்தைத் துறந்து பெளத்தத்தை ஏற்றனர். இன்றும் அவ்வப்பொழுது பல தலித் சமூக மக்கள் தனியாகவோ, குழுவாகவோ பெளத்தத்தை ஏற்பது தொடர்கின்றது.[13]

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

 1. "Buddhism". (2009). In பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம். Retrieved November 26, 2009, from Encyclopædia Britannica Online Library Edition.
 2. "Buddhism May Regain Its Status as the World's Largest Religion". PROUT Globe. பார்க்கப்பட்ட நாள் 2013-06-18.
 3. Beckford, Martin. "Buddhism is fastest-growing religion in English jails over past decade". Telegraph. பார்க்கப்பட்ட நாள் 2013-06-18.
 4. "Buddhism fastest growing religion in West". Asian Tribune. 2008-04-07. Archived from the original on 2017-11-02. பார்க்கப்பட்ட நாள் 2013-06-18.
 5. "Stateline Western Australia". Abc.net.au. பார்க்கப்பட்ட நாள் 2013-06-18.
 6. Buddhism: a non-theistic religion by Helmuth vo Glasenapd
 7. (பக்கம் 269) - சோ.ந.கந்தசாமி. (2004). இந்திய தத்துவக் களஞ்சியம். சிதம்பரம்: மெய்யப்பன் பதிப்பகம்.
 8. "The Buddhist Attitude to God". www.buddhistinformation.com.
 9. "Welcome to Saigon.Com". www.saigon.com. Archived from the original on 2006-05-05. பார்க்கப்பட்ட நாள் 2006-04-07.
 10. "Major Religions Ranked by Size". www.adherents.com. Archived from the original on 2018-12-26. பார்க்கப்பட்ட நாள் 2006-04-07.
 11. Dalai Lama. (2005). The Universe in a Single Atom: The convergence of science and spirituality. New York: Morgan Road Books.
 12. Dalai Lama. (2005). The Universe in a Single Atom: The convergence of science and spirituality. New York: Morgan Road Books. பக்கம் 12.
 13. சி.என். குமாரசாமி. (2001). அம்பேத்கரும் தலித் மனித உரிமைப் போராட்டமும். சென்னை: தமிழ்ப் புத்தகாலயம்.

ஆதாரங்கள்[தொகு]

 • சோ.ந.கந்தசாமி. (2004). இந்திய தத்துவக் களஞ்சியம். சிதம்பரம்: மெய்பப்பன் பதிப்பகம்.
 • சி.என். குமாரசாமி. (2001). அம்பேத்கரும் தலித் மனித உரிமைப் போராட்டமும். சென்னை: தமிழ் புத்தகாலயம்.
 • ராஜ் கொளதமன். (2004). க. அயோத்திதாசர் ஆய்வுகள். சென்னை: காலச்சுவடு பதிப்பகம்.

தமிழரும் பெளத்தமும்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பௌத்தம்&oldid=3701546" இலிருந்து மீள்விக்கப்பட்டது