பௌத்த அண்டவியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பௌத்த அண்டவியல் (buddhist cosmology) என்பது பௌத்த சித்தாந்தத்தின் படி அண்டத்தை குறித்தும் அதன் தோற்றத்தை குறித்தும் கூறும் இயல் ஆகும். பௌத்த அண்டவியல் கருத்துகள் பௌத்த சமய சூத்திரங்களிலும் இவற்றில் உரைகளிலும் விரிவாக காணப்படுகின்றன.

அறிமுகம்[தொகு]

பௌத்த அண்டவியல் குறித்த விவரங்கள் அபிதர்மம் குறித்த அனைத்து தேரவாதம் மற்றும் மகாயான பிரிவு நூல்களிலும் உரைகளிலும் காணப்படுகின்றன. எனவே பௌத்த அண்டவியல் குறித்த கருத்துகள் அனைத்தும் மேற்கூறிய நூல்களில் கூறப்பட்டுள்ள கருத்துகளின் ஆய்வினால் பெறப்பட்டு ஒழுங்குப்படுத்தப்பட்டவை. ஏனெனில் எந்த ஒரு சூத்திரத்திலும் அண்டத்தை குறித்த முழுமையான கருத்துகள் இல்லை, அனைத்து கருத்துகளும் வேவ்வேறு சூத்திரங்களில் சிதறி உள்ளன. சில பௌத்த சூத்திரங்களில் புத்தர் பிற உலகங்களை குறித்தும் அங்குள்ள உயிர்களின் நிலைமைகளை குறித்தும் விரித்துரைக்கின்றார். வேறு சில சூத்திரங்கள் அண்டத்தின் பிறப்பு மற்றும் அழிவை குறித்து கூறுகின்றன. இவை அனைத்தும் சேர்க்கப்பட்டு விபஜ்யவாத பிரிவில் விவரிக்கப்பட்டுள்ளது போன்ற ஒன்றிணைந்த இயலாக உருமாற்றம் அடைந்தது பௌத்த வரலாற்றின் மிக முற்காலத்தில் நிகழ்ந்திருக்க வேண்டும். விபஜ்யவாத பிரிவு அண்டவியல் கருத்துகளுக்கும் சர்வாஸ்திவாத பிரிவு அண்டவியல் கருத்துகளுக்கும் பெயரளவிலே வேறுபாடுகள் காணப்படுகின்றன.

பௌத்த அண்டவியல் விவரங்களை, அண்டத்தைக் குறித்த வானியல் மற்றும் அறிவியல்/இயற்பியல் அடிப்படையிலான விளக்கங்களாக, வருணனையாக எடுத்துக்கொள்ள கூடாது. ஏனெனில் இந்த வருணனை மனிதர்களின் பார்வையில் அண்டத்தை விவரிப்பது அல்ல. ஒரு புத்தரின் பார்வையிலோ அல்லது ஒரு அருகனின் ஞானக்கண்களின் (திவ்யாக்ஷுஸ் - திவ்ய கண்கள்) பார்வையிலோ தான் அண்டத்தை பௌத்த நூல்கள் விரித்துரைக்கின்றன. பௌத்தத்தின் உயிர்களின் பத்து நிலைகள் என்பது பௌத்த அண்டவியலை நேரடிப் பொருளைக் கொள்ளலாமல் அவற்றின் மனோதத்துவரீதியான (உளவிய நோக்கில்) புரிதலால் உருவானது.

பௌத்த அண்டவியலை இருவிதமாக பிரிக்கலாம்:

 • உலக அண்டவியல் - அண்டத்தில் வெவ்வேறு உலகங்களின் அமைப்புகளை விரித்துரைக்கின்றது
 • கால அண்டவியல் - அண்டத்தின் தோற்றம் மற்றும் அழிவை குறித்து விரித்துரைக்கின்றது

உலக அண்டவியல்[தொகு]

உலக அண்டவியலை இருவிதமாக பிரிக்கலாம்:

 • சக்ரவாடம் (चक्रवाड) - இது வெவ்வேறு உலகங்களை அவற்றின் நிலை வைத்து மேலிருந்து-கீழாக விவரிக்கிறது.
 • சஹஸ்ரம் (सहस्र) - இது சக்ரவாடத்தில் கூறப்பட்டுள்ள உலகங்களை ஆயிரக்கணக்காக குழுப்படுத்தி அவற்றை விவரிக்கிறது. அதாவது பல அண்டங்கள் ஒருங்கிணைந்து ஒரு லோகதாதுவை (பேரண்டம்) உருவாக்குகின்றன.

சக்ரவாட அண்டவியல்[தொகு]

சக்ரவாட அண்டவியல், அண்டத்தை பல்வேறு உலகங்களாக பிரிக்கின்றது. இவ்வுலகங்கள் அனைத்தும் ஒன்றின் மீது ஒன்றாக அடுக்கப்படுள்ளன. ஒவ்வோர் உலகமும் ஒவ்வொரு மன நிலையை குறிப்பது. ஓர் உலகம் என்பது அவ்வுலகில் உள்ள உயிர்களால் தான் ஆனது. அந்த உயிர்களில் கர்மங்களினால் நிலை நிறுத்தப்படுவது. ஓர் உலகில் உள்ள அனைத்து உயிர்களும் அழியும் நிலையில் அவ்வுலகமும் மறைந்து விடுகிறது. இதே விதமாக ஓர் உலகில் முதல் உயிர் பிறக்கும் போது அவ்வுலகம் உருவாகிறது. உலகங்கள் அண்டத்தில் உள்ள புற இடத்தை விட அவ்வுலகில் வசிப்பவர்களின் (அக) மன நிலையைப் பொருத்தே வேறுபடுத்தப்படுகிறது. மனிதர்களும் விலங்குகளும் ஒரே இடத்தில் இருந்தாலும் இருசாராரின் உலகங்களும் இரு வேறு உலகங்களாக விரித்துரைக்கப்படுகின்றன. ஆரூப்யதாதுவுக்கு அண்டத்தில் இடமே இல்லை, இருப்பினும் அதுவும் ஓர் உலக அமைப்பாக கருதப்படுவது குறிப்பிடத்தக்கது.

சக்ரவாடத்தின்படி, இந்த அண்டம் 31 பிரிவாகவும், இப்பிரிவுகள் மூன்று தாதுக்களாக அந்தந்த உலகத்தின் மன நிலையைப் பொருத்து குழுப்படுத்தப்பட்டுள்ளது. இதை திரிதாது (மூன்று தாது) என அழைப்பர். அந்த திரிதாதுக்கள் பின் வருமாறு ஆரூப்யதாது (आरूप्यधातु), ரூபதாது (रूपधातु) மற்றும் காமதாது (कामधातु) ஆகும்.

பவசக்கரத்தில் கூறப்படும் ஆறு நிலைகளில் (தேவ, அசுர, மனுஷ்ய, பஷு, பிரேத, நரக) ரூபதாது அரூபதாது உலகத்தவர்களும் தேவர்களாகவே இங்கு கருதப்படுகின்றனர். எனினும் ரூபதாதுவின் உள்ளவர்களின் மனநிலையும் காமதாதுவினரின் மனநிலையும் வெவ்வேறு தாதுக்கள் என்ற நிலையில் மிகுந்த வேறுபாடுடையது. எனவே சரியாக கூறவேண்டுமெனில் காமதாதுவின் மேலுலகத்தை சேர்ந்தவர்களையே தேவர்கள் என அழைக்கவேண்டும்.

காமதாதுவில் உள்ள தேவர்களே மனித உலகத்துடன் (இந்திரன், குபேரன் முதலியோர்) நெருக்கமுடையவர்கள். மற்ற இரண்டு தாதுக்களில் பிரம்மாக்கள் மட்டும் பூமிக்கு எப்போதாவது வருவதுண்டு. ஆனால் தர்மபாலர்கள் மற்றும் லோகபாலர்கள் என்ற முறையில் இங்கு நடக்கு அனைத்து நிகழ்வுகளிலும் காமதாது தேவர்கள் முக்கிய பங்கு வகிக்கின்றனர்.

பிரம்மா என்பது உயர்நிலை உலகில் வசிக்கும் தேவர்களுக்கான அடைமொழிப்பெயராகும். பரந்த பார்வையில், ஆரூப்யதாது மற்றும் ரூபதாதுவில் வசிப்பவர்கள் அனைவரையும் பிரம்மா என அழைக்கலாம். ஓரளவுக்கு வரையறுக்கப்பட்ட நிலையில், ரூபதாதுவில் உள்ள கீழ்நிலையுள்ள 9 உலகில் இருப்பவர்களையும், முற்றிலும் வரையறுக்கப்பட்ட நிலையில் ரூபதாதுவின் கீழ் மூன்று உலகங்களை உள்ளவர்களை பிரம்மா என அழைக்கலாம். பல தேவர்கள் பிரம்மா என்ற அடைமொழியை பயன்படுத்துகின்றனர். (எ-டு) பிரம்மா சஹம்பதி, பிரம்மா சனத்குமாரன், பக பிரம்மா முதலியவை. எனினும் இவர்கள் எவ்வுல்கத்தை சேர்ந்தவர்கள் என தெளிவாக தெரியவில்லை. எனினும் இவர்கள் ரூபதாதுவில் சுத்தாவாச உலகங்களுக்கு கீழ் உள்ள உலகங்களில் இருப்பவர்களாக இருக்கக்கூடும்.

ஆரூப்யதாது[தொகு]

ஆரூப்யதாது அல்லது அரூப (அருவ) உலகம் என்பது உருவமற்ற உலகங்களை குறிப்பது. அண்டத்தில் அவற்றுக்குத் தனி வடிவமோ இடமோ ஏதும் இல்லை. இந்த உலகங்கள் முழுக்க முழுக்க மன நிலையை சார்ந்து எழும் உலகங்களாகும். ஆரூப்யதாதுவில் உள்ள உலகங்களில் இருப்பவர்களுக்கு உருவம் ஏதும் இல்லை. உருவமற்ற நிலையிலேயே இவர்கள் உள்ளனர். இந்த அரூப்யதாது என்பது முற்காலத்தில் அரூபதியானங்களை வசப்படுத்தியவர்கள், தங்களுடைய நற்கர்ம பலன்களுக்காக இந்த உலகங்களில் பிறக்கின்றனர். எனினும் போதிசத்துவர்கள் ஆரூப்யதியானங்களை வசப்படுத்தினாலும் இவர்கள் ஆரூப்யதாதுவில் மறுபிறப்பு எய்துவதில்லை.

நான்கு அரூபதியானங்களுக்கு முறையே நான்கு விதமான ஆயதனங்கள் உள்ளன.

 • நைவசஞ்ஞானா சஞ்ஞாயதனம்(नैवसंज्ञानासंज्ञायतन) - இங்குள்ளவர்கள் புலனுணர்வுள்ள நிலை அல்லது புலனுணர்வற்ற நிலை என்ற இரு நிலைகளையும் தாண்டி புலனுணர்வைக் கடந்து ஒரு நிலையில் உள்ளார்கள். எனினும் முழுமையாக இந்நிலையை அவர்கள் எய்தவில்லை. கௌதம புத்தரின் இரண்டாம் குருவான உத்ரக ராமபுத்திரர் இவ்வுலகத்தை எய்தி, போதிக்கு நிகரான நிலையென இதனைக் கருதினார்.
 • ஆகிஞ்சன்யாயதனம் (आकिंचन्यायतन) - இது உடைமையற்ற உலகம் என அழைக்கப்படுகிறது. இந்த உலகில் உள்ள உருவமற்றவர்கள், ஏதும் இல்லை என்பதை தியானித்துக்கொண்டு வாழ்கின்றனர். இந்த உணர்வு கூட மிகமெல்லிய புலனுணர்வாகக் கருதப்படுகிறது. இந்த உலகத்தில் கௌதம புத்தரின் ஆசிரியர்களில் ஒருவரான ஆராட காலாமன் மறு பிறப்பு எய்தினார். அவர் இந்த நிலையை போதி நிலைக்கு நிகரான நிலையாக கருதினார்
 • விஞ்ஞானானந்தியாயதனம்(विज्ञानानन्त्यायतन) - இது முடிவற்ற அறிவாற்றலின் உலகம் ஆகும். இங்குள்ளவர்கள் தங்களுடைய அறிவாற்றலை (பிரக்ஞை) எல்லையற்ற பரப்பு உள்ளதாக கருதி தியானம் செய்வர்.
 • ஆகாசானந்தியாயதனம் (आकाशानन्त्यायतन) - இது முடிவற்ற ஆகாய உலகம் என்று பொருள் படுகிறது. இந்த உலகத்தவர்கள் ஆகாயத்தை எல்லையற்ற பரப்பாக கருதி அதை நோக்கி தியானம் செய்வர். [அந்தியம் = முடிவு, அனந்தியம் = அன்+அந்தியம் = முடிவற்ற. ஆகாச அனந்தியாதனம்].

ரூபதாது[தொகு]

ரூபதாது அல்லது ரூப உலகம் என்பதற்கு உருவ உலகம் என்று பொருள். பெயரின் படியே ரூபதாதுவின் உலகங்களுக்கும் அவ்வுலகங்களில் வாழ்பவர்களுக்கு ஒரு குறிப்பிட்ட இடமும் உருவமும் உண்டு. எனினும் இவ்வுலகத்தவர்களின் உருவம் மிகவும் நுணுக்கமான பொருட்களால் ஆனது. அதனால் சாதரணமாக காமதாது உலகத்தவர்களின் பார்வையில் ரூபதாதுவினர் தெரிவது இல்லை. ஜானவாசப சூத்திரத்தின் படி, ரூபதாதுவின் பிரம்ம உலகத்தில் இருந்து ஒருவர் காமதாதுவில் உள்ள திராயஸ்திரிம்ச உலகத்து தேவர்களை சந்திக்க வேண்டுமெனில் மிகவும் அடர்த்தியான உருவத்தை தரித்து தான் செல்ல வேண்டும். ஏனெனில் அப்போதே பிரம்ம உலகத்தவர்கள் திராயஸ்திரிம்ச உலகத்து தேவர்களின் கண்களில் தென்படுவர்.

காமதாது உலகத்தவர்களைப்போல் இவ்வுலகத்து தேவர்களுக்கு இன்பமோ துன்பமோ இல்லை. மேலும் இவர்கள் புலன்களை திருப்திபடுத்தக்கூடிய ஆசைகளும் அற்றவர்கள். ரூபதாதுவில் உள்ளவர்களுக்குள் பால் பேதம் (பால் வேற்றுமை) கிடையாது.

ஆரூப்யதாது உலகத்தவர்கள் போலவே, ரூபதாதுவில் உள்ளவர்களின் மனம் தியானங்களை அடிப்படையாக கொண்டவையே. ஆரூப்யதாது உயர்நிலை அரூபதியானங்களை வசப்படுத்தியவர்க்கெனில் ரூபதாது கீழ்நிலை ரூபதியானங்களை வசப்படுத்தியவர்களுக்கு. ரூபதாது உலகங்களை நான்கு ரூபதியானங்களை அடிப்படையாக கொண்டு நான்கு விதமாக பிரிக்கலாம். மேலும் சுத்தாவாச (शुद्धावास) உலகங்களும் இந்த வகைப்படுத்தலுக்குள் அடங்காது. எனவே ஒவ்வொரு ரூபதியான வகைப்படுத்துலுக்குள் மூன்று பிரிவுகளும், சுத்தாவாசத்துக்கு ஐந்து பிரிவுகள் என, ரூபதாதுவை மொத்தமாக 17 பிரிவுகளாக பிரிக்கலாம். (தேரவாதத்தின்படி 16 பிரிவுகள்)

ரூபதாது உலகங்கள் ஒன்றின் மீது ஒன்று செங்குத்தாக அடுக்கப்பட்டுள்ளன. இந்த உலகங்களின் அளவுகள் கீழிருந்து மேலாக முந்தைய உலகத்தை விட இரட்டிப்பு பரப்பளவை உடையவை. எனவே ரூபதாதுவின் மேலுலகங்களில் உள்ளவர்க்ள் கீழுலகங்களில் உள்ளவர்களை விட உருவத்தில் பெரிதாக இருப்பர். மேலுலகங்கள் கீழுள்ள உலகங்களை விட அகலமானவை. இந்த உலகங்கள் யோஜனை என்ற அலகை பயன்படுத்தி அளக்கப்படுகின்றன. ஒரு யோஜனை என்பதன் அளவு சரியாக தெரியவில்லை, எனினும் ஒரு சராசரி மனிதனின் உயரத்தில் 4000 மடங்கு ஒரு யோஜனையாக கொள்ளப்படுகிறது. ஆகவே யோஜனை என்பது தோராயமாக 4.34 மைல்கள் (அ) 7.32 கி.மீ இருக்கலாம்.

சுத்தாவாச உலகங்கள்[தொகு]

சுத்தாவாசம் என்பது தூய வாசம் என்று பொருள். சுத்தாவாசம் ரூபதாதுவின் மற்ற உலகங்களில் இருந்து வேறுபட்டது. ஏனெனில் ரூபதாதுவின் மற்ற உலகங்களை போல் அல்லாமல் சுத்தாவாச உலகத்தில் தியான பலன்களின் மூலமாகவோ நற்கர்மங்களின் மூலமாகவோ அடைய இயலாது. அருக நிலையை அடைய வேண்டிய அருக பாதையை தேர்ந்தடுத்தவர்களும் (அனாகாமின்) சுத்தாவாச உலககில் இருந்து கீழுலகங்களில் பிறக்காது நேரடியாகவே போதியை அடைந்து விடுவபவர்கள் மட்டுமே சுத்தாவாச உலகில் பிறக்கின்றனர். சுத்தாவாச தேவர்கள் அனைவரும் பௌத்தத்தின் பாதுகாவலர்கள் ஆவர். ஞானம் பெற்றவுடன் கௌதம புத்தரிடம் மற்றவர்களுக்கு உபதேசம் செய்ய வேண்டும் என்று அறிவுரை கூறிய பிரம்மா சஹம்பதி முற்காலத்து புத்தரை பின்பற்றிய அனாகாமின் ஆவார். [1] சுத்தாவாச தேவர்கள் கீழுலகங்களில் பிறக்க மாட்டார்கள் என்பதால் போதிசத்துவர்கள் இவ்வுலகில் பிறப்பது கிடையாது. ஏனெனில் போதிசத்துவர்கள் உயிர்கள் உய்ய வேண்டி கீழுலகில் பிறக்க வேண்டி இருக்கிறது.

சுத்தாவாச தேவர்கள் புத்தரின் போதனையினால் இந்த உலகத்தின் பிறப்பெய்துவதால், பூலோகத்தில் புத்தர்கள் தோன்றாதிருக்கும் காலகட்டத்தில் சுத்தாவாச உலகங்கள் வெறுமையாகவே இருக்கும். மற்ற உலகங்களை போல் சுத்தாவாச உலகங்கள் பிரளயத்தால் அழியாதவை. சுத்தாவாச தேவர்கள் புத்தரின் பிறப்பை முன் கூட்டியே அறிந்து பூமியில் பிராமணர்களாக உருவம் தரித்து மனிதர்களிடம் புத்தரை எவ்வாறு கண்டுகொள்வது என விவரிப்பர். மேலும் ஒரு போதிசத்துவரின் வாழக்கையின் இறுதியில் புத்த நிலையை எய்த காரணமாக இருக்கும் நான்கு சம்பங்களை காண வைப்பர்.

ஐந்து சுத்தாவாச உலகங்களை பின்வருமாறு:

 • அகனிஷ்டம்(अकनिष्ठ) - இதற்கு இளையவர் இல்லாத என்று பொருள். எனவே இந்த உலகத்து தேவர்கள் அனைவரும் சரி சமமானவர்கள், அவர்களுக்குள் எவ்விதத்திலும் ஏற்றத்தாழ்வுகள் கிடையாது. ரூபதாதுவின் மிக உயரிய உலகம் இதுவே. எனவே தான் அண்டத்தின் உச்ச நிலையாக இதை குறிப்பிடுவர் (ஆரூப்யதாது உலகங்களுக்கு அண்டத்தில் உருவம் இல்லை என்பதை நினைவில் கொள்க). இவ்வுலகத்தவர்களின் ஆயுள் 16,000 கல்பங்கள். தற்போதைய இந்திரன், தன்னுடைய பதவிக்காலம் முடிந்தவுடன் இவ்வுலகத்திலேயே மறுபிறப்பெய்துவார். இந்த உலகம் பூமியில் இருந்து 167,772,160 யோஜனைகள் உயரத்தில் உள்ளது.
 • சுதர்சனம் - சுதர்சனம் என்றால் தெளிவான பார்வை என்று பொருள். இவ்வுலகத்தவர்கள் அக்னிஷ்ட உலகத்தவர்களுடன் மிகுந்த ஒற்றுமை உடையவர்கள். மேலும் இரு உலகத்தினரும் நெருங்கிய தொடர்பு உடையவர்கள்
 • சுதிருசம்(सुदृश) - அழகான தேவர்களின் உலகமான இதில், ஐந்து விதமான அனாகாமின்கள் பிறக்கும் உலகம். இவ்வுலகம் பூமியில் இருந்து 41,943,040 யோஜனைகள் உயரத்தில் உள்ளது.
 • அதபம்(अतप) - பிரச்சினை இல்லாத தேவர்களின் உலகம் என இது அழைக்கப்படுகிறது. இவ்வுலகத்து தேவர்களின் தோழமையை கீழுலகத்து தேவர்கள் விரும்புவர். இந்து உலகம் பூமியிலிருந்து 41,943,040 யோஜனைகள் உயரத்தில் உள்ளது.
 • அவிருஹம்(अवृह) - இது கீழே விழாத தேவர்களின் உலகமாக கருதப்படுகிறது. இந்த உலகம் மறுபிறப்பெய்தும் அனாகாமின்கள் பெரும்பாண்மையாக தோன்றும் உலகமாக இது உள்ளது. பெரும்பான்மையான அனாகாமின்கள் இவ்வுலகிலே நேரடியாக அருக நிலையை எய்தி விடுகின்றனர். வேறு சிலர் ஒவ்வொறு பிறப்பாக மேலுலகத்தில் பிறந்து இறுதியாக அகனிஷ்டத்தில் பிறக்கின்றனர். இவ்வாறு பிறப்பெய்துவர்களை பாலி மொழியில் உத்தம்சோதஸ்(उद्धंसोतस्) என அழைப்பர். இந்த உலகம் பூமியில் இருந்து 10,485,760 யோஜனைகள் உயரத்தில் உள்ளது.
பிருஹத்பல உலகங்கள்[தொகு]

பிருஹத்பல (बृहत्फल) உலகங்கள் நான்காம் தியானமான உபேக்‌ஷத்துடன் தொடர்புடையது. பிருஹத்பல உலகங்கள் மகாகல்பத்தின் இறுதியில் காற்றினால் அழிக்கப்படும் உலகங்களின் உச்ச எல்லையை குறிக்கின்றன. அதாவது இவ்வுலகம் காற்றினால் அழிக்கப்படமாட்டாது.

 • அசஞ்ஞ்சாசத்துவம்(असंज्ञसत्त्व) (விபஜ்யவாத பிரிவு மட்டும்) - அசஞ்ஞாநம் என்ற சொல்லுக்கு புலனுணர்வற்ற என்று பொருள். புலனுணர்வை அகற்ற வேண்டி உயர்ந்த தியான நிலையை எய்திய தேவர்கள் இங்கு பிறக்கின்றனர். எனினும் சில காலத்துக்கு பிறகு புலனுணர்வு (சங்க்ஞை) மீண்டும் தோன்ற இவர்கள் கீழுலகத்தில் கீழ்நிலையில் பிறக்கின்றனர்.
 • வேஹப்பலம்(वेहप्फल) - சிறந்த பலன்களை உடைய தேவர்கள் இங்கு வசிக்கின்றனர். இங்குள்ளவர்களின் ஆயுள் 500 மகாகல்பங்கள். சில அனாகாமின்கள் இங்கு மறுபிறப்பெய்துகின்றனர். இந்து உலகம் பூமியில் இருந்து 5,242,880 யோஜனைகள் உயரத்தில் உள்ளது.
 • புண்யபிரவாசம்(சர்வாஸ்திவாத பிரிவு மட்டும்) - இந்த உலகத்தின் பெயரின்படி தங்களுடைய புண்யங்களின் காரணமாக இந்த உலகில் பிறக்கின்றனர் (பிரவாசிக்கின்றனர்). இந்த உலகம் பூமியிலிருந்து 2,621,440 யோஜனைகள் உயரத்தில் உள்ளது.
 • அனப்ரகம்(अनभ्रक)(சர்வாஸ்திவாத பிரிவு மட்டும்) - இது மேகமில்லாத தேவர்களின் உலகம் என அழைக்கப்படுகிறது. இது உலகம் புவியிலிருந்து 1,310,720 யோஜனைகள் உயரத்தில் உள்ளது.
சுபகிருத்ஸ்ன உலகங்கள்[தொகு]

சுபகிருத்ஸ்ன (शुभकृत्स्न) உலகத்தவர்களின் மனநிலை மூன்றாம் தியானமான முதிதத்துடன் தொடர்புடையது. எனவே இந்த உலகத்து தேவர்கள் சுகத்துடன் தொடர்புடையவர்கள். சுபகிருத்ஸ்ன உலகங்கள் மகாகலப்த்தின் முடிவில் நீரால் அழிக்கப்படும் உலகங்களின் உச்ச எல்லையை குறிக்கிறது. எனவே இவ்வுலகங்கள் நீரினால் அழிக்கப்படாது, அதாவது வெள்ளம் இவ்வுலகங்களை அழிக்கும் அளவுக்கு மேலே எழும்பாது.


 • சுபகிருத்ஸ்னம் - மொத்த அழகின் தேவர்களின் உலகம் ஆகும். விபஜ்ய்வாத பிரிவினரின்படி இவ்வுலகத்தவர்களின் ஆயுள் 64 மகாகல்ப்பங்கள் (சில நூல்கள் 4 மகாகல்பங்கள் என கூறுகின்றன). 64 மகாகல்பம் என்பது காற்றினால் அழிவு ஏற்படும் சம்பவத்துக்கான இடைப்பட்ட காலம் ஆகும். சுபகிருத்ஸ்ன உலகமும் காற்றினால் அழிக்கப்படும். இந்த உலகம் புவியில் இருந்து 655,360 யோஜனைகள் உயரத்தில் உள்லது.
 • அப்ரமாணசுபம்(अप्रमाणशुभ) - இந்த உலகம் எல்லையில்லா அழகுடைய தேவர்களின் உலகமாகும். இவர்களுடைய ஆயுள் 32 மகாகல்பங்கள் (விபஜ்யவாத பிரிவின் படி). இவர்களுக்கு நம்பிக்கை, நேர்மை, கல்வி, அறிவு, ஈகை ஆகிய குணங்கள் உள்ளன. இந்த உலகம் பூமியில் இருந்து 327,680 யோஜனைகள் உயரத்தில் உள்ளது.
 • பரீத்தசுபம்(परीत्तशुभ) - குறிப்பிட்ட அழகுடைய தேவர்களின் உலகம் ஆகும். இவ்வுலகத்தவர்களின் ஆயுள் 16 மகாகல்பங்கள். பூமியில் இருந்து இவ்வுலகம் 163,840 யோஜனைகள் உயரத்தில் உள்ளது.
ஆபாஸ்வர உலகங்கள்[தொகு]

ஆபாஸ்வர(आभास्वर) உலகத்தவர்களின் மனநிலை இரண்டாம் தியான நிலையான பிரீத்தியுடன் தொடர்புடையது. இவ்வுலகத்தவர்கள் மூன்றாம் தியான நிலையான சுகத்தின் மனநிலையையும் கொண்டுள்ளனர். ஆபாஸ்வர தேவர்கள் தங்களுடைய மகிழ்ச்சியை கட்டுப்படுத்த இயலாது அஹோ சுகம் என மிகுந்த ஒலியெழுப்புவார்கள் என கூறப்படுகின்றது. இவர்களுடைய உடலில் இருந்து மின்னல் போன்ற ஒளி வெளிவருகிறது. இந்த உலகத்தவர்களிடன் ஒரே விதமாக இருக்கும் என கூறப்படுகிறது. எனினும் அந்தந்த உடலின் உணர்ச்சிகள் வேறுபடுகின்றன.

ஆபாஸ்வர உலகங்கள், நெருப்பினால் அழிக்கப்படும் உலகங்களில் உச்ச எல்லை குறிக்கிறது. கீழுலகங்களை சுட்டெரிக்கும் நெருப்பு ஆபாஸ்வர உலகங்களை சுட்டெரிக்கும் அளவுக்கு மேலே எழும்புவதில்லை. கீழுலகங்கள் முற்றிலும் அழிக்கப்பட்ட பிறகு, ஆபாஸ்வர உலகத்தவர்களே அவ்வுலகங்களில் மறுபிறப்பெய்துபவர்களால் முதன் முதலில் நிரம்புகிறது.

 • ஆபாஸ்வரம் - இந்த சொல்லுக்கு பிரகாசமான, மிளிரும் என பொருள். ஆகவே இந்த உலகத்தில் உள்ளவர்களும் பிரகாசத்தை பெற்றுள்ளனர். ஆபாஸ்வரத்தின் தேவர்களின் ஆயுள் 8 மகாகல்பங்கள் (வேறு சிலர் இரண்டு மகாகல்பங்கள் என கூறுவர்). 8 மகாகல்பம் என்பது நீரினால் ஏற்படும் அழிவுகளுக்கு இடைப்பட்ட காலம். இந்த உலகம் பூமியிலிருந்து 81,920 யோஜனைகள் உயரத்தில் உள்ளது.
 • அப்ரமாணாபம்(अप्रमाणाभ) - இது எல்லையில்லா ஒளி பொருந்திய தேவர்களின் உலகம். இவர்களுடைய ஆயுள் 4 மகாகல்பங்கள். இவ்வுலகம் பூமியில் இருந்து 81,920 யோஜனைகள் உயரத்தில் உள்ளது.
 • பரீத்தாபம்(परीत्ताभ) - இது குறிப்பிட்ட ஒளி உடைய தேவர்களின் உலகமாகும். இவ்வுலகத்தவர்களின் ஆயுள் 2 மகாகல்பங்கள். இந்த உலகம் பூமியில் இருந்து 40,960 யோஜனைகள் உயரத்தில் உள்ளது.


பிரம்ம உலகங்கள்[தொகு]

பிரம்ம உலகத்தவர்களின் மன நிலை முதல் தியானமான மைத்ரீயுடன் தொடர்புடையது. இது விதர்கத்தை சார்ந்தது. மேலும் அவர்களுடைய மனம் விசாரத்துடனும் அதேவேளை மகிழ்ச்சி மற்றும் சுகத்துடனும் தொடர்புடையது. பிரம்ம உலகங்கள் மற்ற கீழ் நிலை உலகங்களை போலவே, மகாகல்பத்தின் முடிவில் நெருப்பினால் அழிக்கப்படுகிறது.

 • மகாபிரம்ம உலகம் - இது மகாபிரம்மாவின் உலகம். இவரையே பலரும் உலகத்தை படைத்தவராக நம்புகின்றனர். மகாபிரம்மா தனக்குத்தானே பிரம்மா, மகாபிரம்மா, அனைத்தையும் வெல்பவன், வெல்லப்படமுடியாதவன், அனைத்தும் தெரிந்தவன், அனைத்தும் முடிந்தவன், உருவாக்குனன் மற்றும் படைப்பின் அதிபதி, ஆள்பவன், இதுவரை இருந்த மற்றும் இருக்கபோகின்ற அனைத்துக்கும் தந்தை என பல்வேறு பட்டங்கள் கொண்டிருப்பவர். பிரம்மஜால சூத்திரத்தின்படி, ஒரு ஆபாஸ்வர உலகத்தவர் தன்னுடைய கர்ம பலன்கள் தீர்ந்தவுடன் தனது முற்பிறவியை மறந்து இங்கு பிறக்கின்றார். படைப்பின் கடவுளாக தன்னையே கருதிக்கொள்பவரும் பிறரால் கருதப்படும் மகாபிரம்மாவுக்குக்கூட தனது உலகத்துக்கு மேலே உள்ள உலகங்களை குறித்த எவ்வித அறிவும் இல்லை. மகாபிரம்மாவின் ஆயுள் விபஜ்ய்வாத பிரிவின்படி ஒரு கல்பம், சர்வாஸ்திவாத பிரிவின்படி ஒன்றரை கல்பம் என பலவாறாக கூறப்படுகிறது. எனினும் அவரது ஆயுள் முக்கால் மகாகல்பத்துக்கு அதிகமாக இருக்காது. மேலும் மகாபிரம்மா ஒன்றரை யோஜனைகள் உயரம் உள்ளவர். இந்த உலகம் பூமியில் இருந்து 10,240 யோஜனைகள் உயரம் உள்ளது
 • பிரம்மபுரோகித உலகம் - இது பிரம்மாவின் மந்திரிகளின் உலகம் ஆகும். பிரம்மாவின் மந்திரிகளும் ஆபாஸ்வர உலகத்தில் இருந்து இங்கு மறுபிறப்பு எய்தியவர்களே. எனினும் இவர்கள் மகாபிரம்மா பிறந்து சில தனிமையில் இருந்த பிறகு பிறப்பர். பிரம்மா தனிமை வாடும்போது தனக்கு துணை வேண்டும் என்று எண்ணுகையில் இவர்களது பிறப்பு நிகழும். எனவே பிரம்மா தான் நினைத்ததனால் இவர்கள் தோன்றினார் என கருதிவிடுவார், இவர்களுக்கு தங்களுக்கு முன்பு இவர் இருப்பதால் இவரே தங்களை படைத்தவராகக் கருதுவர். இவர்களின் உயரம் 1 யோஜனை. இவர்களுடைய ஆயுள் அரை கலபத்தில் (விபஜ்யவாதம்) அல்லது ஒரு கல்பம் (சர்வாஸ்திவாதம்) என பல்வேறாக கூறப்படுகிறது. இவர்கள் கீழுலகங்களில் மறு பிறப்பு எய்தினால், தங்களுடைய இந்த முற்பிறவியின் நினைவினால், பிரம்மாவே படைப்பின் கடவுள் என்ற கொள்கையைப் பரப்புவர். இந்த உலகம் புவியில் இருந்து 5,120 யோஜனைகள் உயரத்தில் உள்ளன.
 • பிரம்மபாரிஷட்ய(ब्रह्मपारिषड्य) உலகம் - இது பிரம்ம சபையை சேர்ந்த தேவர்களுக்கான உலகம் ஆகும். இவர்களை பிரம்மகாயிகன்(ब्रह्मकायिक) எனவும் அழைப்பர். எனினும் இந்த சொல் பிரம்ம உலகங்களில் வாழும் அனைவருக்கும் பொருந்தும். இவர்கள் அரை யோஜனை உயரம் உடையவர்கள். இவர்கள் ஆயுள், விபஜ்யவாதத்தின்படி 13 கல்பம், சர்வாஸ்திவாதத்தின்படி அரை கல்பம். இந்த உலகம் பூமியில் இருந்து 2,560 யோஜனைகள் உயரத்தில் உள்ளது.

காமதாது[தொகு]

இந்த உலகம் பாலி மொழியில் காம உலகம் என அழைக்கப்படுகிறது. காமதாதுவின் உலகங்களில் உள்ளவர்கள் வெவ்வேறு விதமான சுகத்தை அடையக்கூடியவர்களாக உள்ளனர். அருகன்களையும் புத்தர்களையும் தவிர காமதாதுவினர் அனைவரும் மாரனின் ஆளுமைக்கு உட்பட்டவர்கள். இவர்கள் அனைவரும் உணர்ச்சிகளுக்கு கட்டுப்பட்டவர்கள் எனவே அதன் மூலமாக துன்பத்தையும் அனுபவிக்கின்றனர்.

சொர்க்கங்கள்[தொகு]

கீழ்க்கண்ட நான்கு உலகங்களும் 80,000 சதுர யோஜனைகள் பரப்பளவு உள்ளன. இவை சுமேரு மலையின் மீது மிதந்த வண்ணம் உள்ளன.

 • பரிநிர்மித-வசவர்தின்(वरिनिर्मित-वशवर्तिन्) - இந்த உலகம் படைப்பின்மீது அதிகாரம் உடைய தேவர்களின் உலகம் ஆகும். இந்த உலகத்து தேவர்கள் தங்களுடைய தனிப்பட்ட ஆசைகளை நிறைவேற்ற வேண்டி எதுவும் செய்வதில்லை. மாறாக இந்த தேவர்களின் உதவியை நாடும் மற்ற தேவர்கள் அவர்களுடைய ஆசையை பூர்த்தி செய்கின்றனர். இந்த உலகத்தை ஆள்பவர் வசவர்தின். வசவர்தினுக்கு இவ்வுலகத்து பிற தேவர்களை விட நீண்ட ஆயுள், மிகுந்த அழகு, அளவுகடந்த ஆற்றல், மிக்க மகிழ்ச்சி முதலியை உள்ளன. மேலும் இந்த உலகத்தில் தான் காமதாது வாசிகளை ஆசையின் பிடியில் வைத்திருக்க பல செயல்கள் புரியும் மாரன் இவ்வுலகவாசியே. இந்த உலகத்தவர்கள் 4500 அடி உயரம் உடையவர்கள். இவர்களின் ஆயுள் 9,216,000,000 ஆண்டுகள் (சர்வாஸ்திவாத பிரிவு). இவ்வுலகம் புவியில் இருந்து 1,280 யோஜனைகள் உயரத்தில் உள்ளது.
 • நிர்மாணரதி(निर्माणरति) - இந்த உலகம் தங்களது படைப்பின் மூலம் மகழ்ச்சி அடையும் தேவர்களின் உலகமாகும். இவ்வுலகத்து தேவர்கள் தங்களை பிடித்தமான எந்த உருவையும் தரித்துக்கொள்ள இயலும். இந்த உலகத்தின் அதிபதி சுனிர்மிதன்(सुनिर्मित) ஆவார். இவருடைய மனைவி கௌதம புத்தரின் பெண் உபாசிகைகளின் (உபாசகர்கள் - இல்லறத்தை கைவிடாது பௌத்த தர்மத்தை பின்பற்றுபவர்கள்) தலைவி விசாகையின் மறுபிறவி ஆவார். இந்த உலகத்து வாசிகளின் உயரம் 3,750 அடிகள். இவர்கள் 2,304,000,000 ஆண்டுகள் (சர்வாஸ்திவாதம்) உயிர் வாழ்கின்றனர். இது பூமியிலிருந்து 640 யோஜனைகள் உயரத்தில் உள்ளது.
 • துஷிதம் - துஷித உலகம் என்பது மகிழ்ச்சியான தேவர்களின் உலகமாக அறியப்படுகிறது. இந்த உலகிலேயே பூமியில் புத்தர்கள் பிறக்கும் முன்னர் போதிசத்துவர்களாக இவ்வுலகில் வாழ்கின்றனர். கௌதம புத்தராக அறியப்படும் சாக்கியமுனி புத்தரும் இவ்வுலகிலேயே பூமியில் அவதரிப்பதற்கு முன்னர் சுவேதகேது (श्वेतकेतु) என்ற போதிசத்துவராக இருந்தார். தற்போது இங்கு வசிக்கு நாததேவ போதிசத்துவர் வருங்காலத்தின் அஜிதன் என பெயருடன் அவதரித்து மைத்திரேய புத்தராக ஆவார். இவ்வுலகத்தின் அதி முக்கியமானவாசிகள் போதிசத்துவர்களெனினும் இந்த உலகத்து அதிபதி சந்துஷிதன்(सन्तुषित). இவ்வுலகத்தவர்கள் 3,000 அடிகள் உயரமும் 576,000,000 ஆண்டுகள் (சர்வாஸ்திவாதம்) ஆயுளும் கொண்டவர்கள். இவ்வுலகம் பூமிக்கு 320 யோஜனைகள் உயரத்தில் அமைந்துள்ளது.
 • யாமம் - இந்த உலகம் சண்டையற்ற உலகம் என அழைக்கப்படுகிறது. ஏனெனில் இவ்வுலகமே வானியல் ரீதியாக பூமிக்கு நேரடித்தொடர்பில்லாத கடைசி கீழ் நிலை உலகமாகும். மற்ற கீழ்நிலை உலகங்கள் அனைத்தும் சுமேரு மலையின் மூலம் பூமிக்கு நேரடி தொடர்புடையவை. இங்குள்ளவர்கள் எவ்வித பிரச்சினையும் இன்று மகிழ்ச்சியாக வாழ்கின்றனர். இந்த உலகத்தை ஆள்பவர் சுயாமன். இவரின் மனைவி புத்தரின் காலத்தின் சங்க துறவிகளுக்கு மிகவும் ஈகை குணத்துடன் உதவிய சிரிமாவின் மறுபிறவி. இவ்வுலகத்துவாசிகள் 2,250 அடி உயரமும், 144,000,000 ஆண்டு கால (சர்வாஸ்திவாதம்) ஆயுளும் பெற்றுள்ளனர். இந்த உலகம் பூமியிலிருந்து 160 யோஜனைகள் உயரத்தில் உள்ளது.
சுமேருவின் உலகங்கள்[தொகு]

பூமியின் நடுப்பகுதியில் மிக உயர்ந்த சிகரத்தை கொண்ட மிகப்பெரிய மலையான சுமேரு மலை விளங்குகிறது. இந்த சுமேரு மலையை சுற்றியே சூரியனும் சந்திரனும் சுழல்கின்றன. இந்த சுமேரு மலையின் அடித்தளத்தில் மகாசமுத்திரம் இருக்கின்றது. மேலும் இதை சுற்றி பல சிறிய அளவு மலைகளும் சமுத்திரங்களும் விளங்குகின்றனர். சுமேருவை சுற்றி உள்ள மூன்று உலகங்கள் உள்ளன: சுமேருவின் உச்சியில் திராயஸ்திரிம்சம், சுமேருவின் சரிவுகளில் சாதுர்மகாராஜிகாயிகம், சுமேருவின் அடித்தளத்தில் அசுர உலகம்.

 • திராயஸ்திரிம்சம் - இது 33 தேவர்களின் உலகம் ஆகும். இந்த உலகம் சுமேருவின் சிகரத்தில் அமைந்துள்ளது. பல்வேறு பூங்காக்களும் தேவர்களுக்கான மாளிகைகளையும் இவ்வுல்கம் கொண்டுள்ளது. இவ்வுலகத்தை ஆள்வது இந்திரன். இவரை சக்ரன் எனவும் அழைப்பர். 33 மூன்று தேவர்களைத்தவிர பிற தேவர்களும் அப்சரஸ்களும் இவ்வுலகத்தின் வாழ்கின்றனர். இவ்வுலகத்தவர்கள் சர்வாஸ்திவாதத்தின்படி 1500 அடி உயரமும் 36,000 ஆயுளும், விபஜ்யவாதத்தின் படி முக்கால் யோஜனை உயரமும் 30,000,000 ஆண்டு கால ஆயுளும் கொண்டுள்ளனர். திராயஸ்திரிம்சம் பூமியில் இருந்து 1,280 யோஜனைகள் உயரத்தில் உள்ளது.
 • சாதுமகாராஜிககாயிககாயிகம்(चातुर्महाराहिककायिक) - இது சதுர்மகாராஜாக்களின் உலகம் ஆகும். இவ்வுலகம் சுமேரு மலையின் சரிவுப்பகுதிகளில் அமைந்துள்ளது, எனினும் இவ்வுலகத்தின் சில வாசிகள் சுமேருவை சுற்றியுள்ள வளிமண்டலத்திலும் வாழ்கின்றனர். இவ்வுலகத்தின் நால்பெரும் அரசர்கள் விரூடாகன், திருதிராஷ்டிரன், விரூபாக்‌ஷன் மற்று குபேரன். சூரியனையும் சந்திரனையும் வழிப்படுத்தும் தேவர்களும், இந்நான்கரசர்களின் பிரஜைகளான, கும்பாண்டர்கள்,கந்தர்வர்கள்,நாகர்கள், மற்றும் யக்‌ஷர்கள் ஆகியோரும் இவ்வுலகத்தவர்களே. இவ்வுலகத்தவர்களின் உயரம் 750 அடிகள். சர்வாஸ்திவாதத்தின் படி இவர்களது ஆயுள் 9,000,000 வருடங்கள், விபஜ்யவாதத்தின்படி 90,000 ஆண்டுகள். இவ்வுலகம் கடல்மட்டத்தில் இருந்து 40 யோஜனைகள் உயரத்தில் உள்ளது.
 • அசுர உலகம் - அசுரர்கள் சுமேரு மலையின் அடித்தளத்தில் வசிக்கின்றனர். முற்காலத்தின் அசுரரர்கள் இந்திரனுடன் திராயஸ்திரிம உலகத்திலேயே வசித்து வந்தனர், எனினும் அவர்களின் தவறான நடத்தையால் இந்திரனால் விரட்டியடிக்கப்பட்டு தற்போது இங்கு வசிக்கின்றனர். என்வே திராய்ஸ்திரிம்சத்தை மீட்பதற்காக தேவர்களுடன் அவ்வப்போது சண்டையிட்டாலும், சதுர்மகாராஜாக்களின் பாதுகாப்பினால் அதை அடைய இயலாமல் உள்ளனர். இவர்களுடைய தலைவர்களாக வேமசித்திரின் மற்று ராகு உள்ளனர்.
பூமியின் உலகங்கள்[தொகு]
 • மானுட உலகம்– இது மனிதர்கள் வாழும் உலகமாகும். மனிதர்கள் பூமியின் மேற்பரப்பில் வாழ்கின்றனர். சுமேருவை சுற்றி உள்ள மலை குழுமங்களை மகாசமுத்திரம் சூழ்ந்துள்ளது. இந்த மகாசமுத்திரமும் சக்ரவாடம் என்ற மலைச்சுவரினால் சூழப்பட்டுள்ளது. இந்த சக்ரவாடமே இந்த உலகத்தின் கிடைக்கோட்டு எல்லை. இந்த மகாசமுத்திரத்தில் நான்கு மகா கண்டங்கள் உள்ளன, எனினும் மகாசமுத்திரத்தோடு ஒப்பிடும்போது அவை வெறும் தீவுகளே. மகாசமுத்திரத்தின் மிகப்பெரிய பரப்பினால், சாதாரண கப்பல்களை கொண்டு அவற்றை அடைய இயலாது இருக்கிறது. எனினும் பழங்காலத்தில் இவ்வுலகத்தை சக்ரவர்த்திகள் ஆண்ட போது சக்ரரத்தினம் என்பதை வைத்துக்கொண்டு சக்ரவர்த்தியும் அவரது பிரஜைகளும் பிற மகாகண்டங்களுக்கு ஆகாய மார்க்கமாக சென்றனர். அந்த நான்கு மகா கண்டங்கள் பின்வருமாறு:
  • ஜம்புத்தீவு(जंबुद्वीप) - இது மகாசமுத்திரத்தின் தென்பகுதியில் அமைந்துள்ளது. இந்த கண்டம் மொக்கையான திரிகோணத்தை போன்ற வடிவுடையது ஆகும். இதன் சுற்றளவு விபஜ்யவாதத்தின்படி 10,000 யோஜனைகள், சர்வாஸ்திவாதத்தின் படி 6,000 யோஜனைகள். இந்த தீவு, இதன் மையப்பகுதியில் அமைந்து உள்ள பெரிய 100 யோஜனைகள் உயரம் கொண்ட ஜம்பு (நாவல்) மரத்தினால் இந்தப்பெயரை பெற்றது. அனைத்து மகாகண்டங்களிலும் இவ்வாறான பெரிய மரங்கள் மையப்பகுதியில் இருக்கும். அனைத்து புத்தர்களும் ஜம்புத்தீவிலேயே தோன்றுவர். இங்குள்ளவர்கள் ஐந்து முதல் ஆறடி உயரம் இருப்பர். இங்குள்ளவர்களின் ஆயுள் காலத்தை பொருத்து 80,000 வருடங்களிலிருந்து 10 வருடங்கள் வரை வேறுபடும்.
  • பூர்வவிதேஹம்(पूर्वविदेह) - இது கிழக்கில் உள்ளது. இந்த கண்டம் அரைவட்ட வடிவில், அதன் தட்டையான பகுதி சுமேருவை நோக்கும் விதமாக மேற்கு நோக்கி அமைந்துள்ளது. இந்த அளவு விபஜ்யவாதத்தின்படி 7,000 யோஜனைகள், சர்வாஸ்திவாதத்தின் படி இதன் சுற்றளவு 6,350 யோஜனைகள் அதில் தட்டையான பகுதி 2,000 யோஜனைகள் நீளம் உடையது. இதன் மரம் கருவேலம். இங்குள்ளவர்கள் 12 அடி உயரமும் 250 ஆண்டு ஆயுளும் கொண்டவர்கள்
  • அபரகோதானீயம்(अपरगोदानीय) - வட்டமான இந்த கண்டம் மேற்கில் உள்ளது. இதன் சுற்றளவு சர்வாஸ்திவாதத்தின்படி 7,500 யோஜனைகள். இந்த மகாகண்டத்தின் மரம் கதம்ப மரம். இங்குள்ளவர்கள் வீடுகளில் வசிக்காது நிலத்தில் உறங்குவர். இக்கண்டத்தினர் 24 அடி உயரமும் 500 வருட ஆயுட்காலமும் உடையவர்கள்
  • 'உத்தரகுரு(उत्तरकुरु) - பெயருக்கேற்றார் போல் இது வ்ட (உத்தர) திசையில் அமைந்துள்ளது. இதன் வடிவம் சதுரம். இந்த கண்டத்தின் சுற்றளவு ஒரு பக்கத்துக்கு 2,000 யோஜனைகளென மொத்தம் 8,000 யோஜனைகள். இங்குள்ளவர்கள் பெரும் செல்வம் படைத்தவ்ர்கள், தங்களுடைய வாழ்க்கைக்காக உழைக்க தேவையில்லை. ஏனெனில் உணவு தானாக விளைகிறது, மேலும் தனி நபர் சொத்து என எதுவும் கிடையாது. இவர்களுடைய நகரங்கள் காற்றில் அமைக்கப்பட்டிருக்கும். இவர்கள் 48 அடி உயரமும் 1000 ஆண்டுகால ஆயுட்காலமும் கொண்டவர்கள். இவர்கள் அனைவரும் குபேரனின் பாதுகாப்பில் உள்ளனர்.
 • திர்யக்யோனி உலகம்– இந்த விலங்குகளின் உலகம் ஆகும். சிறு பூச்சி முதல் பெரும் யானை வரை அனைத்து உயிர்களும் இவ்வுலகத்தை சேர்ந்தவர்கள்.
 • பிரேத உலகம் - இது பிரேதங்களின் உலகமாகும். பிரேதங்கள் பூமியில் வசித்தாலும் அவர்களுடைய மன நிலையினால் இவ்வுலகத்தை வேறு விதமாக காண்கின்றனர். எனவே இவர்களுடைய உலகம் தனி உலகமாக கருதப்படுகிறது. இவர்கள் பாலைவனங்களிலும் பாழ் நிலங்களிலும் வசிக்கின்றனர்.
நரகங்கள்[தொகு]

நரகம் என்பது தீய கர்மங்களின் விளைவாக அக்கர்மங்களுக்கு தண்டனை பெறும் விதமாக மிகுந்த துன்பம் உடைய உலகங்களை குறிக்கும். நரகங்களில் தங்களுடைய தீயகர்மங்களினால் பிறக்கின்றனர். அவர்களுடைய கர்மங்கள் தீரும் வரை ஒரு குறிப்பிட்ட காலத்துக்கு நரகங்களில் வசிப்பர். தீயகர்மங்கள் தீர்ந்தவுடன் இன்னும் பலன் தராத நற்கர்மங்களுக்காக மேலுலங்களில் மீண்டும் பிறப்பர். இங்குள்ள உயிர்களின் மனநிலை மிகுந்த பயத்தையும் பொறுக்க இயலாத மனவேதனையையும் குறிக்கும்.

நரகங்கள் ஜம்புத்தீவின் அடியில் இருப்பதாக நம்பப்படுகிறது. நரகங்களின் தரப்படும் வெவ்வேறு தண்டனைகளின்படி, நரகங்களை எட்டு கடுங்குளிரின் நரகங்களாகவும், எட்டு கடும்வெப்ப நரகங்கள் எனவும் பிரிக்கலாம்.

கடுங்குளிர் நரகங்கள்[தொகு]
 • அற்புதம்(अर्बुद) – கொப்புள நரகம்
 • நிரற்புதம்(निरर्बुद) – வெடிக்கும் கொப்புள நரகம்
 • அடாடம்(अटाट) – நடுக்கத்தின் நரகம்
 • ஹஹவம்புலம்பலின் நரகம்
 • ஹுஹுவம்பற்கள் கடகடக்கும் நரகம்
 • உத்பலம்(उत्पल) – நீல தாமரை நரகம்
 • பத்மம்தாமரை நரகம்
 • மகாபத்மம்மகா தாமரை நரகம்

ஒவ்வொரு நரகத்தின் உள்ளவர்களின் ஆயுள் முந்தைய நரகத்தின் ஆயுளை விட இருபது மடங்கு அதிகம்

கடும்வெப்ப நரகங்கள்[தொகு]
 • சஞ்சீவம்உயிர்ப்பிக்கும் நரகம். நரகத்தின் ஆயுள் 162*1010 வருடங்கள்
 • காலசூத்திரம்கருப்பு நூல் நரகம். நரகத்தின் ஆயுள் 1296*1010 வருடங்கள்
 • சங்கடம்நசுக்கும் நரகம். நரகத்தின் ஆயுள் 10,368*1010 வருடங்கள்
 • ரௌரௌவம்கூச்சலின் நரகம். நரகத்தின் ஆயுள் 82,944*1010 வருடங்கள்
 • மகாரௌரௌரவம்மிக்க கூச்சலின் நரகம். நரகத்தின் ஆயுள் 663,552*1010 வருடங்கள்
 • தபனம்(तपन) – வெம்மையின் நரகம். நரகத்தின் ஆயுள் 5,308,416*1010 வருடங்கள்
 • பிரதாபனம்(प्रतापन) – கடும் வெம்மையின் நரகம். நரகத்தின் ஆயுள் 42,467,328*1010 வருடங்கள்
 • அவீசி(अवीचि) – தடங்களில்லா நரகம். நரகத்தின் ஆயுள் 339,738,624*1010 வருடங்கள்

பூமியின் அடித்தளம்[தொகு]

பூமியின் மீதுள்ள அனைத்தும், சுமேருவும் பிறவும் கடல்மட்டத்தில் இருந்து 80,000 யோஜனைகள் ஆழம் வரை கீழே ஊடுறுவுகின்றன. இந்த ஆழத்துக்கு பிறகு தங்க மண் என்ற ஒரு சிறந்த வகை மண், சுமேருவின் ஒட்டுமொத்த எடையையும் தாங்கும் வல்லமை கொண்டதாக உள்ளது. இந்த மண் 32,000 அடி ஆழம் கொண்ட படுகையாக கடல்மட்டத்தில் இருந்து 400,000 யோஜனைகள் ஆழம் வரை ஊடுறுவுகிறது. இந்த தங்க மண் படுகை 80,000 யோஜனைகள் கொண்ட நீர் படுகையின் மீது அமைந்துள்ள நிலையில் கடல் மட்டத்தில் இருந்து 8,400,000 யோஜனைகள் ஆழத்தில் உள்லது. இந்த நீர் படுகை, 16,000,000 யோகனைகள் ஆழம் உடைய காற்று படுகைமீது உள்ளது. இந்த காற்று படுகை 1000 உலகங்களை தாங்குகிறது.

சஹஸ்ர அண்டவியல்[தொகு]

சக்ரவாட அண்டவியல் பலவேறு உலகங்கள் செங்குத்தாக எவ்வாறு அடுக்கப்பட்டுள்ள அமைவுகளை குறித்து கூறிகிறது. சஹஸ்ர அண்டவியல் இவ்வுலங்கள் கிடைமட்டமாக எவ்வாறு குழுப்படுத்தப்படுகின்றன என்பதை விவரிக்கிறது. காமதாதுவின் நான்கு சொர்க்கங்களும் சுமேருவின் சிகரத்தின் பரப்பளவை கொண்டன. மூன்று பிரம்ம உலகங்களும் சக்ரவாடம் வரை விரியக்கூடிய அளவுக்கு அகலம் உடையவை. மகாபிரம்ம உலகத்தில் இருந்து நீர் படுகை வரை ஒரு உலக குழுமம் ஆகும். இந்த குழுமம் ஒரு மகாகல்பத்தின் முடிவில், நெருப்பினால் அழிக்கப்படும் உலகங்களை குறிக்கின்றன.

மகாபிரம்ம உலகங்களுக்கு மேலே ஆபாஸ்வர உலகங்கள் உள்ளன். இவரை கீழ்நிலை உலங்களை விட அதிகமான அகலம் கொண்டவர். மேலும் ஆபாஸ்வர உலங்கள், 1000 உலக குழுமங்களை தன்னுள் கொண்டுள்ளது. இந்த ஒவ்வொரு உலக குழுமம் தனக்கென பிரத்யேகமான சுமேரு, சக்ரவாட மலை, சூரியன், சந்திரன் மற்றும் நான்கு மகாகண்டங்கள் ஆகியவையை கொண்டுள்ளன. இதை 1000 உலக குழுமம் சஹஸ்ர சூடிக லோகதாது(सहस्र चूडिक लोकधातु) என அழைக்கப்படுகிறது. இந்த சஹஸ்ர சூடிக லோகதாது நீரினால் 8 மகாகலபங்களின் முடிவில் அழிவுறும்.

ஆபாஸ்வர உலகங்களுக்கு மேலுள்ள சுபகிருத்ஸ்ன உலகங்கள் தன்னுள் 1000 சஹஸ்ர லோகதாதுவை கொண்டுள்ளது. இதை திவிசஹஸ்ர மத்யம லோகதாது(द्विसहस्र मध्यम लोकधातु) என அழைக்கின்றனர். இந்த குழுமம் 64 மகாகல்பங்களின் முடிவில் காற்றினால் அழிக்கப்படும் உலகங்களை கொண்டுள்ளது.

இதேபோல்,சுபகிருத்ஸ்ன உலகங்களுக்கு மேலுள்ள சுத்தாவாச மற்றும் பிரஹத்பல உலங்கள் தன்னுள் 1000 திவிசஹஸ்ர லோகதாதுவை கொண்டுள்ளனர். இதை மகா குழுமம் திரிசஹஸ்ர மஹாசஹஸ்ர லோகதாது(त्रिसहस्र महासहस्र लोकधातु) என அழைக்கப்படுகிறது.

கால அண்டவியல்[தொகு]

பௌத்த கால அண்டவியல் அண்டத்தின் தோற்றம், நீடிப்பு, அழிவு ஆகியவற்றை விளக்குகிறது. மற்ற இந்திய அண்டவியல்கலை பொலவே பௌத்த அண்டவியலும் காலத்தை காலச்சக்கரமாக கருதுகிறது. அதாவது காலம் என்பது சுழற்சி பண்பை கொண்டதாக கருதப்படுகிறது. அண்டங்கள் உருவாவதும் அழிவதும் ஒரு சுழற்சியாக என்றும் நடைபெற்றுக்கொண்டிருப்பவை. இந்த கால சுழற்சிக்கு ஒரு ஆரம்பவோ முடிவோ இல்லை. எப்படி பகல் - இரவு மாறி மாறி வருகிறது அவ்வாறே அண்டங்களின் பிறப்பும் அழிவும் நடைபெறுகின்றன.

பௌத்த அண்டவியலில் காலத்தின் அடிப்படை அலகு மகாகல்பம்.

இந்த மகாகலபம் நான்கு கல்பங்களாக பிரிக்கப்பட்டுள்ளன. அவையாவன:

 • விவர்தகல்பம்(विवर्तकल्प) - அண்டம் உருவாகும் காலம்
 • விவர்தஸ்தாயிகல்பம்(विवर्तस्थायिकल्प) - அண்டம் ஒரு சீரான நிலைமையை எய்தும் காலம்
 • சம்வர்தகல்பம்(संवर्तकल्प) - அண்டம் அழியும் காலம்
 • சம்வர்தஸ்தாயிகல்பம்(संवर्तस्थायिकल्प) - அண்டம் அழிந்து அனைத்தும் சூன்யம் சூழப்படும் காலம்

இந்த ஒவ்வோரு கல்பமும் சமமான கால அளவுடைய இருபது அந்தரகல்பமாக பிரிக்கப்படுகின்றது. சம்வர்தஸ்தாயிகல்பத்துக்கு இந்த பிரிவு பெயரளவில் மட்டுமே. ஏனெனில் இந்த கல்பம் முழுவதும் அனைத்து சூன்யமயமாக இருப்பதால் இப்பிரிவினால் குறிப்பிடத்தக்க வேறுபாட்டையும் கூற இயலாது. எனினும் மற்ற மூன்று கல்பங்களுக்கு இந்த பிரிவினை அந்தந்த கல்பத்துக்குண்டான உட்சுழற்சியை குறிக்கிறது.

விவர்தகல்பம்[தொகு]

விவர்தகல்பம் மூலமுதல் காற்று வீசுவதுடன் தொடங்குகிறது. இந்த மூலமுதல் காற்று சென்ற மகாகல்பத்தில் அழிக்கப்பட்ட அண்ட அமைப்புகளை மீண்டும் உருவாக்கிறது. பலவேறு உலகங்களின் அழிவுமுறைகள் வேறுபடுவதால், இந்த அண்ட அமைப்பின் மீட்பும் வேறுபடலாம். எனினும் பொதுவான கீழ்க்கண்ட முறையை பின் பற்றுகிறது. மேலுலகங்களில் இருந்து தொடங்கி கீழுலகங்கள் உயிர்களால் நிரப்பப்படுகிறது. உதாரணமாக பிரம்ம உலகத்தில் ஆபாஸ்வர தேவர் மறுபிறப்பின் தொடங்கி தொடர்ந்து நரகம் வரை உயிர்கள் நிரப்பபடும் வரை இது அணட மறு மீட்பு நடைபெறும். விவர்தகலப்த்திலே முதல் மனிதர்கள் தோன்றுவர். எனினும் தற்கால மனிதர்களை போலல்லாது ஒரு கீழ்நிலை தேவர்களை போன்று அவர்கள் தோற்றம் இருக்கும். அவர்கள் உடல் பிரகாசிக்கும், அவர்களால் எந்த்வித உபகரணங்களின் உதவியுடன் காற்றில் நடமாட இயலும், நீண்ட ஆயுளை கொண்டிருப்பர் மேலும் உயிர் வாழ்வதற்கு எவ்வித புற உணவுதேவையும் இருக்காது.

காலம் செல்ல செல்ல அவர்களுக்கு புற உணவுகளௌ உண்ண ஆசை தோன்று, அதை உண்ட பிறகு அவர்களின் உடல் பருமன் கொஞ்சம் கொஞ்சமாக அதிகாகும். பிறகு தங்களுடைய பிரகாசத்தை இழந்து அவர்கள் முழுமையாக தற்கால மனிதர்களை போன்ற உடலமைப்பை, உடலளவில் வேறுபாடுகளும் நிகழும். அவர்களின் ஆயுள் குறைந்து விடும். அதன் பின்னர் அவர்களுக்கு பால் வேறுபாடு தோன்றிய பிறகு அவர்களுக்குள் பாலியல் ஈடுபாடுகள் ஏற்படும். பிறகு ஆசை, பொறாமை, திருட்டு போன்ற தீய குணங்கள் தோன்றி தங்களுக்கு வகுப்பு பேதங்களை ஏற்படுத்தி மகாசம்மதன்(महासम्मत) என்ற அரசனை தங்களை ஆள தேர்ந்தெடுப்பர். அதில் சிலர் சில காலங்களுக்கு முன்பே தோன்றிய மிருகங்களை வேட்டையாடி புலாலுணவை உண்ண ஆரம்பித்திருப்பர். இது அக்கஞ்ஞ சூத்திரம் என்ற நூலில் விவரமாக கூறப்பட்டுள்ளது.

விவர்தஸ்தாயிகல்பம்[தொகு]

முதல் அர்ந்தர்கலபம்[தொகு]

முதல் உயிர் நரகத்தில் பிறந்தவுடன் விவர்தஸ்தாயியக கல்பம் ஆரம்பிக்கிறது. ஆக அனைத்து உலங்களும் உயிர்க்ளால் நிரம்பி விடுகிறது. இந்த மகாகலபத்தின் முதன் அந்தர்கல்பத்தில், மனிதர்களின் ஆயுள் கண்க்கற்ற நிலையிலிருந்து நூற்றுக்கும் குறைவான ஆண்டுகளை கொண்டதாக ஆகிறது. அந்தர்கல்பத்தில் ஆரம்ப காலத்தில் மக்கள் மகிழ்ச்சியுடனே இருக்கின்றனர். அவர்கள் ஒரே ஒரு சக்ரவர்தியின் ஆட்சியின் கீழ் வாழ்கின்றனர். மஹாசுதஸ்ஸன சூத்திரம் இவ்வாறான, 336,000 ஆண்டுகள் மஹாசுதர்சன சக்ரவர்தியை குறித்து விளம்புகிறது. சக்கவத்தி சிஹனாத சூத்திரம் திருடனேமியில் இருந்து ஐந்து வம்ச சகரவர்த்திகளை பற்றி கூறுகிறது. இவர்கள் 80,000 வருட ஆயுட்காலம் கொண்ட்வர்களாக இருந்தனர். பிறகு வந்த ஏழாவது சக்ரவர்த்தி மரபை பின்பற்றாது தன்னுடைய முடியை தன் மகனுக்கு அளித்து, துறவு நிலையை எய்த மறுத்தார். இவருடைய தவறான ஆட்சியினால், வறுமை அதிகரித்தாது, அதனால் திருட்டு தோன்றியது. திருட்டை தடுக்க மரண தண்டனை கொண்டு வரப்பட்டது. இதன் விளைவாக வாழ்க்கையின் மீது கொண்ட வெறுப்பணர்ர்சியினால் கொலைகளும் பிற பாதகமான செயல்கள் அவ்வப்போது நடைபெற துவங்கின

அடுத்த தலைமுறை சென்ற தலைமுறையின் பாதி ஆயுளை மட்டுமே கொண்டிருந்தது. இவ்வாறாக மனிதர்களின் ஆயுள் வெகு சீக்கிரமாக 80,000 ஆண்டுகளில் இருந்து 100 ஆண்டுகள் என குறைந்தது. ஒவ்வொரு தலைமுறையுடன் பொறாமை, வெறுப்பு, தவறான கண்ணோட்டம் என அனைத்து விதமான தீய செயல்கள் அதிகரித்தன. மஹாபதான சூத்திரத்தில் இந்த அர்ந்தர்கல்பத்தில் தான் மூன்று புத்தர்கள் வாழந்ததாக கூறுகிறது. கிரகுச்சண்ட புத்தர் 30,000 வருடங்களும், கனகமுனி 30,000 வருடங்களும், காசியப புத்தர் 20,000 வருடங்களும் வாழ்ந்தனர்.

தற்காலம் முதல அந்தரகலப்த்தின் இறுதிக்காலமாகும். இந்த காலகட்டத்தில் ஆயுள் 100 ஆண்டுகளுக்கு குறைவாக ஆனது. கௌதமரான சாக்கியமுனி புத்தர் இவ்வுலகில் 80 ஆண்டுகாலமே வாழ்ந்தார்.

இந்த அந்தரகல்பத்தின் இறுதிகாலம் மோசமாக இருக்கும் கூறப்படுகிறது. மனிதர்களின் ஆயுள் தொடர்ந்து குறைந்து கொண்டுவரும். அவர்களின் தீய செய்லகலே அவர்களின் அழிவுக்கு வழிகோலும். மனிதர்கள் பத்து வருடங்களுக்கு அதிக்மாக வாழமாட்டனர்.உணவுகள் சுவையில்லாமல் போகும். நற்செயலகளுக்கு நன்றி தெரிவிக்கப்படாது. ஆசைமிக்கவர்களும் வெறுப்பை கொண்டவர்களும் மக்களை ஆளுவர். மனிதர்களின் மத்தியின், குடும்பத்துக்குள்ளேயே கூட வெறுப்பு தோன்றும். இந்த வெறுப்பு சக மனிதர்களை வேட்டையாடி திண்ணும் அளவுக்கு வளர்ந்து நிற்கும்.

இந்த காரணங்களினால் ஒரு பெரும்போர் தோன்றும். இந்த போரின் மோதல் போக்குடைவர்களும் விரோதத்தை உடைவர்களும் தங்களுக்குள் சண்டையிட்டு மடிவர். ஓரளவுக்கு அமைதியான போக்கை நாடுபவர்கள் காடுகளிலும் பிற ரகசிய இடங்களிலும் ஒளிந்து கொள்வர். இந்த போர் முதல் அந்தர்கல்பத்தின் முடிவை குறிக்கிறது.

இரண்டாம் அந்தர்கலபம்[தொகு]

பெரும்போருக்கு பிறகு போரில் இருந்து பிழைத்தவர்கள் தங்களுடைய மறைவிடத்தில் இருந்து வெளி வந்து தங்களுடைய தீய பண்புகளுக்காக வருந்துவர். அவர்கள் நன்மை புரிய ஆரம்பித்தவுடன், அவர்களது ஆயுள் அதிகமாகும். அதோடு சேர்ந்து உடல்நிலையும் மனிதகுலத்தின் நன்மையும் பிறகும். பல காலங்களுக்கு பிறகு பத்து வருடமாக இருந்து மனிதர்களின் ஆயுள், 80,000 ஆண்டுகளாக உயரும். அந்த நேரத்தில் சங்கன்(शङ्ख) என்ற சக்ரவர்த்தி தோன்றுவார். இவருடைய ஆட்சிக்காலத்தில் தான் துஷித உலகத்தில் இருந்து நாததேவ போதிசத்துவர் கீழிறங்கி அஜீதம் என்ற பெயருடன் பிறவியெடுத்து பிறகு போதி நிலை எய்து மைத்திரேய புத்தராக ஆவார்.

மைத்திரேயரின் காலத்துக்கு பிறகு மீண்டும் நிலைமை மோசமடையும், மெதுவாக ஆயுட்காலம் 80,000 வருடங்களில் இருந்து 10 வருடங்களாக மீண்டும் குறையும். பின் வரும் அந்தர்கல்பமும் ஒரு பெரும்போர், பிறகு மீண்டும் உய்ர்வு நிலை என தொடர்ந்து நிகழும். இது தொடர, 19வது அந்தர்கல்பத்துக்கு பிறகு ஆயுட்காலம் 80,000 வரை நீளும் பிறகு அது குறையாது. அத்துடன் விவர்தஸ்தாயிகலபம் ஒரு முடிவுக்கு வந்துவிடும்

சம்வர்தகல்பம்[தொகு]

நரகங்களில் உயிர்கள் பிறப்பது நிற்பதுடன் சம்வர்த கல்பம் தொடங்குகிறது. பிறகு இந்த நிகழ்வு மேல் நோக்கி நடக்கும். அதாவது, முதலில் பிரேதங்களின் பிறப்பு நடக்காது, பிறகு விலங்குகள், பிறகு மனிதர்கள் என தேவ உலகங்கள் வரை இது தொடரும்

பிரம்ம உலகம் வரை அனைத்தும் உயிர்களற்ற நிலை எய்தும் போது, ஒரு பெருந்தீ தோன்றி அனைத்து அண்டத்தையும் விழுங்கும். இந்த தீ ஆபாஸ்வ்ர உலகங்களுக்கு கீழுள்ள அனைத்து உலகங்களையும் அழித்து விடும். அனைத்தும் அழிந்தவுடன் சம்வர்தஸ்தாயி கலபம் துவங்குகிறது.

சம்வர்தஸ்தாயிகல்பம்[தொகு]

சம்வர்தஸ்தாயிகலப்த்தை குறித்த கூற ஏதும் இல்லை. ஏனெனில் ஆபாஸ்வர உலகங்களுக்கு கீழே ஏதும் நடப்பதில்லை. மூலமுதல் காற்று வீச ஆரம்பித்து அது முடிவடையும் வரை சம்வர்தஸ்தாயி கல்பம் தொடரும்.

பிற அழிவுகள்[தொகு]

ஒவ்வொரு சம்வர்தகல்பத்தின் முடிவிலும் நெருப்பால் அழிவு நிகவும். எட்டு மகாகல்பத்தின் முடிவில், அதாவது நெருப்பினால் ஏழு அழிவுகள் நிகழ்ந்த பின்னர், நீரினால் அழிவு நிகழும். நீர் பிரம்ம உலகங்களை மட்டும் அழிக்காது, ஆபாஸ்வ்ர உலகங்களையும் சேர்த்து அழித்து விடும்.

56 நெருப்பு அழிவுகளுக்கு பிறகு, 7 நீர் அழிவுகளுக்கு பிறகும், அதாவது 64ஆவது மகாகல்பத்தில் காற்றினால் அழிவு ஏற்படும். இதுவே மிகப்பெரிய அழிவாகும் இதனால் சுபகிருத்ஸ்ன உலகங்கள் வரை உள்ள அனைத்து உலகங்களும் அழிக்கப்படும்.

இதற்கு மேலுள்ள உலகங்களில் அழிவு நடை பெறுவது இல்லை.

இவற்றையும் பார்க்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

 1. Susan Elbaum Jootla “Teacher of the Devas”: The Wheel Publication No. 414/416 (Kandy: Buddhist Publication Society, 1997) article link at Access to Insight
"https://ta.wikipedia.org/w/index.php?title=பௌத்த_அண்டவியல்&oldid=3530799" இலிருந்து மீள்விக்கப்பட்டது