உள்ளடக்கத்துக்குச் செல்

பௌத்த மாநாடுகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
முதல் புத்த மாநாடு


பௌத்த மாநாடுகள், கௌதம புத்தர் மறைவிற்குப் பின் பௌத்தக் கொள்கைகள், மடாலயங்களின் நிர்வாகப் பிரச்சனைகள் மற்றும் பௌத்த சூத்திரங்களை நிர்ணயம் செய்வது குறித்து பிக்குகள் குறிப்பிட்ட கால இடைவெளிகளில் ஒன்று ஆலோசித்து முடிவெப்பர். இதுவரை 6 பௌத்த மாநாடுகள் நடந்துள்ளது. அவைகள்:

முதல் பௌத்த மாநாடு கிமு 400

[தொகு]

முதல் பௌத்த மாநாடு, கௌதம புத்தர் கிமு 483ல் பரிநிர்வாணம் அடைந்த பிறகு, புத்தரின் தலைமைச் சீடரான மகாகாசியபர் தலைமையில் கிமு 543ல் மகதப் பேரரசர் அஜாதசத்ருவின் ஆதரவில், இந்தியாவின் பிகார் மாநிலத்தில் உள்ள ராஜகிரகத்தில் நடைபெற்றது. [1]

முதல் பௌத்த சங்க மாநாட்டில் புத்தரின் முதன்மைச் சீடர்கள் உட்பட ஏறத்தாழ 500 அருகதர்கள் கலந்து கொண்டனர்.[2] முதல் பௌத்த சங்கக் கூட்டத்தில் கௌதம புத்தரின் பல்வேறுபட்ட போதனைகளை சுத்தபிடகம் [3], அபிதம்மபிடகம்[4], மற்றும் விநயபிடகம்[5] என மூன்று தலைப்புகளில் புத்தரின் முதன்மைச் சீடர்களான ஆனந்தர், மகாகாசியபர் மற்று உபாலி ஆகியோர் தொகுத்தனர். இம்மூன்று தொகுப்புகளைச் சேர்த்து திரிபிடகம் என்று அழைப்பர். இதுவே பௌத்தர்களின் மூலமான புனித நூல் ஆகும் [6].

இரண்டாம் பௌத்த மாநாடு

[தொகு]

கௌதம புத்தர் பரிநிர்வாணம் அடைந்த பின்னர் கிமு 383ல், இந்தியாவின் பிகார் மாநிலத்தின், பண்டைய வைசாலி நகரத்தில் நடைபெற்றது.

முதிய மற்றும் இளைய பிக்குகளிடையே ஏற்பட்ட கருத்துப் பிணக்குகளை தீர்த்து வைக்க இரண்டாம் பௌத்த மாநாடு கிமு 384-இல் கூட்டப்பட்டது. இரண்டாம் பௌத்த சங்கக் கூட்டத்தில், திரிபிடகத்தின் ஒன்றான வினயபிடகத்தில் காலத்திற்கு ஏற்ப மாற்றம் செய்ய, சீர்திருத்த கருத்துக்கள் கொண்டிருந்த முதியவர்களான ஸ்தவவீரா நிக்காய[7] பௌத்த சங்க பிக்குகள் வலியுறுத்தினர். ஆனால் சமய அடிப்படைவாதக் கருத்துக் கொண்ட பெரும்பான்மையான இளையவர்களான மகாசங்கிகா [8] குழுவினர் இதனை ஏற்கவில்லை. எனவே முதிய ஸ்தவவீரா நிக்காய பௌத்த சங்கத்தினர் தனியாக பிரிந்து சென்றனர். [9] [10][11] தேரவாத பௌத்தர்களின் கூற்றுப்படி, இரண்டாம் பௌத்த சங்கத்தில், பின்வரும் 10 கருத்துகளில் பிணக்குகள் தோன்றியதாக கூறுகிறது. அவைகள்

  1. பிக்குகள் தம்மிடத்தில் உப்பைச் சேமித்து வைத்துக் கொள்தல்.
  2. நண்பகலுக்குப் பின்னர் உணவு உண்பது குறித்து.
  3. ஒரு முறை ஒரு கிராமத்தில் பிச்சை உணவு வாங்கி உண்ட பின்னர், மீண்டும் உணவிற்காக பிச்சை எடுக்கச் செல்லுதல் குறித்து.
  4. ஒரே இடத்தில் குழுமியுள்ள பிக்குகளுடன் இணைந்து உபவாச சடங்கினை மேற்கொள்தல். [12]
  5. சங்கத்தின் கூட்டம் முழுமையடையாத நிலையில் அதிகாரபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்தல்.
  6. ஒரு பௌத்த சங்க குருவால் பயிற்றுவிக்கப்பட்ட ஒரு பயிற்சியை பிக்குகள் தொடர்வது குறித்து.
  7. மதிய உணவிற்குப் பின்னர் புளித்த பால், தயிர் அல்லது மோர் அருந்துவது குறித்து.
  8. ஒரு பானம் புளிப்பதற்கு முன்பு அருந்துவது குறித்து. (எடுத்துக்காட்டு: பதநீர் புளித்து கள்ளாக மாறிய பிறகு அதை அருந்துவது குறித்து)
  9. சரியான அளவில் இல்லாத கம்பளி போர்வைகளை பயன்படுத்துவது குறித்து.
  10. தங்கம் மற்றும் வெள்ளியால் செய்த பொருட்களை பயன்படுத்துவது குறித்து.

இந்த பத்து விதிகளில், பிக்குகள், மக்களிடமிருந்து தங்கம் மற்றும் வெள்ளி நாணயங்களை யாசகம் (பிட்சை) பெறுவது குறித்து அதிக கருத்து வேறுபாடுகள் தோன்றியது.

இரண்டாம் பௌத்த சங்கத்தின் ஒருமித்த கருத்துக்களின் அடிப்படையில், பிக்குகளின் நடத்தைகள் குறித்தான விநயபிடக விதிமுறைகளில் எவ்வித மாற்றங்களும் செய்யவில்லை. மேலும் பத்துக் கட்டளை மீறும் பிக்குகளுக்கு எதிராக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது.

மூன்றாம் பௌத்த மாநாடு

[தொகு]
மூன்றாம் பௌத்த சங்கக் மாநாட்டில் அசோகர் மற்றும் மொகாலிபுத்த தீசர், இடம், புதிய ஜேடவனம், சிராவஸ்தி

கிமு 247ல் பாடலிபுத்திரம் அருகில், மௌரியப் பேரரசர் அசோகரின் ஆதரவில் மொகாலிபுத்த தீசர் தலைமையில் கூட்டப்பட்டதாக அறியப்படுகிறது. [13] ஆனால் அசோகர் கல்வெட்டுக்கள் எதிலும் மூன்றாம் பௌத்த சங்கம் கூட்டப்பட்டதற்கான குறிப்புகள் இல்லை.

இந்தியாவின் மைசூர், சௌராட்டிரம், மகாராட்டிரா, காஷ்மீரம் பகுதிகளிலிருந்தும் மற்றும் சிந்து, காந்தாரம், பாக்திரியா, சுவத், இமயமலை, இலங்கை, சீனா, மியான்மர், தாய்லாந்து, கிரேக்கம் போன்ற ஒன்பதிற்கும் மேற்பட்ட நாடுகளிலிருந்து பிக்குகள் மூன்றாம் பௌத்த சங்கத்தில் கலந்து கொண்டனர். [14]மூன்றாம் பௌத்த சஙகத்தில் தேரவாத பௌத்த பிக்குகள் அதிகம் கலந்துகொண்டதாக அறியப்படுகிறது. மூன்றாம் பௌத்த சங்கத்தில் சர்வாஸ்திவாத பௌத்தர்கள் [15]கலந்து கொண்டதாக குறிப்புகள் இல்லை.

இரண்டாம் பௌத்த சங்கத்திற்குப் பின்னரும் பௌத்தச் சமயச் சடங்குகளில் கருத்து வேற்றுமை காரணமாக, குறிப்பாக அமாவாசை மற்றும் பௌர்ணமி அன்று பிக்குகள் நடத்தும் உபசோதா எனும் தியானச்சடங்கு குறித்து, பிக்குகளிடையே பல்வேறு குழப்பங்கள் நிலவியதால், பௌத்த குருமார்களிடையே பல தத்துவப்பள்ளிகள் (கருத்தியல் பிரிவுகள்) தோன்றியது. இந்த உபசோதா சடங்கில் சில மாற்றங்கள் கொண்டுவருதற்கு பல பௌத்த அறிஞர்களின் ஒப்புதல் பெறுவது கடினமான இருந்தது. பிக்குகளிடையே நிலவும் இது போன்ற குழப்பங்களை தீர்த்து வைப்பதற்காக மூன்றாம் பௌத்த சங்கம் கூட்டப்பட காரணமாயிற்று. தாங்கள் பௌத்தப் பகுப்பாய்வு கோட்பாட்டினை பின்பற்றுபவர்கள் என்று அறிவிக்க தவறியவர்களான தேரவாத பௌத்த பிக்குகள் மூன்றாம் சங்கக் கூட்டத்திற்கு வெளியே இருந்தனர். அபிதம்மபிடகத்தின் ஐந்தாவது புத்தகத்தில் குறிப்பிட்ட சில விளக்கங்கள், மூன்றாம் பௌத்த சங்கத்தில் பரிசோதனை செய்யப்பட்டு சில கருத்துகள் மறுக்கப்பட்டது.

மூன்றாம் பௌத்த சங்கத்தின் காலம் குறித்த கருத்துகள்

[தொகு]

சில குறிப்புகளில் மூன்றாம் பௌத்த சங்கம், புகழ்பெற்ற பௌத்த அறிஞர் வசுமித்திரர் தலைமையில், கிபி 100ல், கனிஷ்கரின் ஆட்சியின் போது காஷ்மீர் அல்லது ஜலந்தரில் நடைபெற்றதாக உறுதியற்ற தகவல்கள் கூறுகிறது. இம்மாநாட்டில் வசுமித்திரரின் வழிகாட்டுதலின் கீழ், ஓலைச்சுவடிகளில் பௌத்த சாத்திரங்களுக்கு விளக்க உரை எழுதப்பட்டது. மேலும் பௌத்த சாத்திரங்களின் முதன்மையான கருத்துக்கள் உபாசகர்கள் அறியும் பொருட்டு பௌத்தத் தூபிகளிலும், விகாரைகளிலும், நினவுச் சின்னங்களிலும் பொறிக்கப்பட்டது.

நான்காம் பௌத்த மாநாடு

[தொகு]

கிபி முதல் நூற்றாண்டில், இலங்கையில் தேரவாத பௌத்தர்கள் கூட்டிய சங்கம் மற்றும் சர்வாஸ்திவாத பௌத்தர்கள் காஷ்மீரத்தில் கூட்டிய பௌத்த சங்கத்தினையும் குறிக்கும். இலங்கையில் முதன்முறையாக நடைபெற்ற நான்காம் பௌத்த சங்கத்தின் முடிவிகளின் படி, பௌத்த இலக்கியங்களை பனை ஓலைகளில் எழுதி ஆவணப்படுத்தப்பட்டது.

தேரவாத பௌத்தர்களின் மாநாடு, இலங்கை

[தொகு]

பன்னாட்டு தேரவாத பௌத்தர்களின் மாநாடு, கிபி 27ம் ஆண்டில் அனுராதபுர நாட்டு மன்னர் வட்டகாமினி அபயன் ஆதரவில் அபயகிரி விகாரையில் நடைபெற்றது.[16][17] இலங்கையின் மகாவம்சம் எனும் பௌத்த இலக்கியம், நான்காம் பௌத்தச் சங்கத்தின் போது, அனைத்து பௌத்த இலக்கியங்களுக்கு பாலி மொழியில் விளக்கங்கள், விரிவுரைகள் எழுதப்பட்டது.

நான்காம் பௌத்த சங்கம் முடிவுற்ற போது, பனை ஓலைகளில் எழுதப்பட்ட பௌத்த இலக்கியங்களின் பிரதிகள் பர்மா, தாய்லாந்து, கம்போடியா மற்றும் லாவோஸ் நாடுகளின் பௌத்த விகாரைகளுக்கு எடுத்துச் செல்லப்பட்டது.

குசானப் பேரரசின் காலத்தில் கிபி 100ல் 500 பிக்குகள் கலந்து கொண்ட, சர்வாஸ்திவாத பௌத்தர்களின் மாநாடு, ஜலந்தர் அல்லது காஷ்மீரத்தில், சுங்க வம்ச அரசர் வசுமித்திரன்[18] தலைமையில் நடைபெற்றதாக அறியப்படுகிறது. இப்பௌத்த மாநாட்டில் திரிபிடகத்தின் ஒன்றான அபிதம்மபிடகத்திற்கு விளக்க உரைகள் ஓலைகளில் எழுதப்பட்டது. மேலும் முந்தைய பௌத்தப் பிரிவுகளின் தத்துவக் கோட்பாடுகளின் நூல்கள் எழுதப்பட்டது. மேலும் சிலர் இப்பௌத்த மாநாடு கனிஷ்கர் ஆட்சிக் காலத்தில் நடைபெற்றதாக கூறுகின்றனர்.

தேரவாத பௌத்த மாநாடு, ஆண்டு 1871 (ஐந்தாம் பௌத்த மாநாடு)

[தொகு]

மியான்மார் நாட்டின் மண்டலை நகரத்தில் 1871ல் நடைபெற்றது. 2400 பர்மிய நாட்டுப் பிக்குகள் கலந்து கொண்ட ஐந்தாம் பௌத்த சங்கத்திற்கு, முதிய பிக்குகளான மகாதேரர் ஜெகராபிவம்சர், நரேந்தபித்தஜா மற்றும் மகாதேரர் சுமங்கலர் ஆகியோர் தலைமை வகித்தனர். இம்மாநாடு ஐந்து மாதங்கள் தொடர்ந்து நடைபெற்றது. பர்மிய அரசரின் ஆதரவில் நடைபெற்ற இம்மாநாட்டில், பர்மிய பௌத்த அறிஞர்கள் மற்றும் பிக்குகள் மட்டுமே கலந்து கொண்டதால், பர்மாவிற்கு வெளியே உள்ள தேரவாத பௌத்தர்கள், இப்பௌத்த மாநாட்டை ஏற்றுக்கொள்வதில்லை. [19]

தேரவாத பௌத்த மாநாடு, ஆண்டு 1954 (ஆறாம் பௌத்த மாநாடு)

[தொகு]

கௌத புத்தரின் 2500-ஆம் ஆண்டு நினைவு நாளை கொண்டாடுவதற்காக, மியான்மர் நாட்டின் ரங்கூன் நகரத்தில் மே, 1954 முதல் மே 1956 முடிய நடைபெற்றது. [20] பர்மா நாட்டின் பிரதமர் யு நூவின் ஆதரவில் நடைபெற்ற ஆறாம் பௌத்த சங்கத்திற்கு எட்டு நாடுகளிலிருந்து 500 பௌத்த அறிஞர்களும், பிக்குகளும் கலந்து கொண்டனர்.

ஆறாம் பௌத்தச் சங்கத்தில் மியான்மர், இலங்கை, இந்தியா, நேபாளம், திபெத், கம்போடியா, தாய்லாந்து, லாவோஸ் என எட்டு நாடுகளின் பௌத்த அறிஞர்கள் கலந்து கொண்டனர். ஆறாம் பௌத்த சங்கத்தில் பௌத்த தருமம், விநயபிடகம் குறித்த நெறிமுறைகள் தொகுக்கப்பட்டது. மேலும் பாலி மொழியில் அமைந்த அனைத்து பௌத்த சாத்திரங்கள் மறுபரிசீலனைச் செய்யப்பட்டு ஓதப்பட்டது. [21]

மேற்கோள்கள்

[தொகு]
  1. The First Buddhist Council
  2. The First Buddhist Council[தொடர்பிழந்த இணைப்பு]
  3. Sutta Pitaka
  4. Abhidhamma Pitaka
  5. Vinaya Pitaka
  6. "Buddhist Books and Texts: Canon and Canonization." Lewis Lancaster, Encyclopedia of Religion, 2nd edition, pg 1252
  7. Sthavira nikāya
  8. Mahasanghika
  9. Harvey, Peter (2013). An Introduction to Buddhism: Teachings, History and Practices (2nd ed.). Cambridge, UK: Cambridge University Press. pg. 88-90.
  10. Skilton, Andrew. A Concise History of Buddhism. 2004. p. 49, 64
  11. Harvey, Peter (2013). An Introduction to Buddhism: Teachings, History and Practices (2nd ed.). Cambridge, UK: Cambridge University Press. pg. 89-90.
  12. Uposatha
  13. [https://www.britannica.com/topic/Buddhist-council Buddhist council]
  14. The Third Buddhist Council
  15. Sarvastivada
  16. The Fourth Buddhist Council
  17. Norman page 10, A History of Indian Literature, Edited by Jan Gonda, Volume VII, 1983, Otto Harrassowitz, Wiesbaden
  18. Vasumitra
  19. Mendelson, Sangha and State in Burma, Cornell University Press, Ithaca, New York, 1975, pages 276f
  20. Sixth Buddhist Council
  21. The Sixth Buddhist Council: Its Purpose, Presentation, and Product

ஆதார நூற்பட்டியல்

[தொகு]
  • Cousins, L. S. (2001). On the Vibhajjavadins. Buddhist Studies Review, 18 (2), 131–182.
  • Dutt, N. (1998). Buddhist Sects in India. New Delhi: Motilal Banarsidass.
  • Frauwallner, E. (1956). The Earliest Vinaya and the Beginnings of Buddhist Literature.
  • Lamotte, E. (1976). History of Indian Buddhism. Paris: Peeters Press.
  • La Vallée Poussin, Louis de (1905). Les conciles bouddhiques, Louvain, J.B. Istas
  • La Vallée Poussin, Louis de (1976). The Buddhist Councils, Calcutt : K.P. Bagchi
  • Law, B. C. (1940, reprinted 1999). The Debates Commentary. Oxford: Pali Text Society.
  • Mukherjee, Biswadeb (1994). The Riddle of the First Buddhist Council – A Retrospection in Chung-Hwa Buddhist Journal, No.7, pp. 452–473, 1994
  • Prebish, J. N. (1977). Mahasamghika Origins. History of Religions, pp. 237–272.
  • Prebish, Charles S. (1974). "A Review of Scholarship on the Buddhist Councils"; Journal of Asian Studies 33 (2), 239–254
"https://ta.wikipedia.org/w/index.php?title=பௌத்த_மாநாடுகள்&oldid=4080719" இலிருந்து மீள்விக்கப்பட்டது