இக்சிதிகர்பர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இக்சிதிகர்பர் (क्षितिगर्भ:), மகாயான பௌத்தத்தில் மிகவும் புகழ்பெற்ற போதிசத்துவர் ஆவார். இவரை ஜப்பானிய மொழியில் ஜிஸோ எனவும் சீன மொழியில் டி-ஸாங்க எனவும் அழைப்பர். ஷிதி(க்‌ஷிதி) என்றால் வடமொழியில் நிலம் என்று பொருள். இச்சொல்லின் மொழிப்பெயர்ப்பே சீன-ஜப்பானிய மொழியில் இவருடைய பெயராக விளங்குகிறது

ஷிதிகர்பர்

[1][2]

ஷிதிகர்பர், அனைத்து நரகங்களும் வெற்றிடமாகும் வரை தான் புத்தநிலை அடைவதில்லை என்ற உறுதிமொழி பூண்டவர். இந்த கருணையினாலேயே, அவர் போற்றி வழிபடப்படுகின்றார். இவருடைய இந்த உறுதிமொழி பல மஹாயான பௌத்தர்களால் இன்றளவும் ஜெபிக்கப்படுகிறது.

பொதுவாக, இவர் ஒரு பௌத்த பிக்குவாக காட்டப்படுகிறார். இவர் கையில் ஒரு கோலும், சிந்தாமனி இரத்தினமும் ஏந்தியவாராய் காட்சியளிக்கிறார்.

பொதுவான கருத்துகள்[தொகு]

ஷிதிகர்பர், மகாயான பௌத்தத்தின் நான்கு முதன்மை வாய்ந்த போதிசத்துவர்களில் ஒருவர் ஆவர். சமந்தபத்திரர்,மஞ்சுஸ்ரீ, மற்றும் அவலோகிதர் மற்ற மூன்று போதிசத்துவர்கள் ஆவர்.

முற்காலத்தின் இவரை ஒரு பூரண போதிசத்துவராக சித்தரித்து வந்தனர். ஆனால் பிற்காலத்தில் இவரை ஒரு பௌத்த துறவியாகக் கையில் கோலுடன் காட்டப்படும் வழக்கம் பெரும்பான்மையானது.

பல்வேறு மகாயான சூத்திரங்களின்படி, இவர் மைத்ரேய புத்தர் அவதரிக்கும் வரை ஆறு உலகங்களிலும் தருமத்தைக் கற்பிக்கும் பொறுப்பினை தான் ஏற்பதாக உறுதிமொழி கொள்கிறார். எனவேதான், மகாயான பௌத்த ஆலயஙகளில் இவருடைய வழிபாடு முதன்மை வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

சீனம்[தொகு]

சீனத்தில் உள்ள சியூகுவா மலை ஷிதிகர்பரின் இருப்பிடமாக கருதப்படுகிறது. இந்த மலை நாற்பெரும் பௌத்த மலைகளுள் ஒன்றாக விளங்குகிறது. இப்பொழுது அந்த மலையில் 95 கோவில்கள் மக்களின் வழிபாட்டுக்கு உகந்த வண்ணம் உள்ளது.

சில இடங்களில், இவரை தாவோ மத தேவதையாகவும் வழிபடுகின்றன்ர். தாய்வானில் நிலநடுக்கத்திலிருந்து காப்பாற்றப்படுவதற்காக மக்கள் இவரை வணங்குகின்றனர். ஹாங்க்-காங்க் மற்றும் கடல் தாண்டிய சீன மக்கள், இவரது உருவப்படங்களையும், சிலைகளையும் நினைவிடங்களில் வைத்து வணங்குகின்றனர்.

ஜப்பானில்[தொகு]

ஜப்பானில் இவரை, ஜிஸோ என அழைக்கின்றனர். மிகவும் மரியாதையுடன் இவரை ஒஜிஸோ-சாமா என்றழைக்கின்றனர். சாமா என்பது ஜப்பானிய மொழியில் மரியாதைக்காக சேர்க்கப்படுவது. (தமிழில் அர்/ஆர் விகுதி போலும், இந்தி மொழியில் 'ஜி' என்னும் பின்னொட்டு போலவும்). இவர் இங்கு, குழந்தைகளின் பாதுகாவலராக வணங்கப்படுகிறார். அதுவும் முக்கியமாக, பெற்றோர்களூக்கு முன் இறக்க நேரிடும் குழந்தைகளைக் காப்பாற்றுவராக இருக்கிறார். மேலும், பிறக்கும் முன் இறந்துவிடும் கருக்கள், கருக்கலைப்பினால் இறந்து போகும் கருக்கள், ஆகியற்றின் ஆன்மாக்களில் பாதுகாவலராக இவர் திகழ்கிறார்.

இவருடைய சிலைகளின் அருகில் நிறைய கற்களையும் கூழங்கற்களையும் காணலாம். மக்கள், இவ்வாறு கற்களை இவருடைய சிலைகளின் முன் அடுக்குவதால், தங்களுடைய குழந்தை நரகத்தில் இருக்கும் நேரத்தை குறைப்பதாக எண்ணுகின்றனர். மேலும், தங்களுடைய காணாமல் போன குழந்தைகளை காப்பாற்ற வேண்டி, குழந்தைகளின் ஆடைகள், விளையாட்டுப்பொருட்களை இவருக்கு சமர்ப்பிக்கின்றனர். மேலும், குழந்தைகளின் நோய்களை தீர்க்கும் வண்ணமும் இவ்வாறு அவர்கள் செயவதுண்டு. அதானால் தான், இவரை குழந்தைகளின் பாதுகாவலாராக காண்பிப்பதற்காக, இவருடைய சிலைகள் பொதுவாக 'குழந்தையைப்' போன்று அமைப்பதுண்டு.

மேலும், நரகத்தில் இருக்கும் பாவ ஆன்மாக்களை கரையேற்றுவராக இவர் உள்ளதால், இவரது சிலை சுடுகாட்டில் காணப்படுவது வழக்கம். மேலும், பயணிகளைக் காப்பாற்றுபவராக இவர் கருதப்படுவதால், ஆங்காங்கு வீதிகளில், இவரது சிலைகளைக் காணலாம்.

தோற்றம்[தொகு]

ஷிதிகர்பருடைய கதை, அவரது பெயருடைய ஷிதிகர்ப சூத்திரம் என்னும் மிகவும் புகழ்பெற்ற சூத்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது. மேலும் இந்த சூத்திரம், கௌதம புத்தர் தன்னுடைய வாழ்நாளின் இறுதி நிலையில், திராயஸ்திரிமச உலகத்தை சேர்ந்த தேவர்களுக்கு கற்பிப்பதாக உள்ளது. அவர் இவ்வுலகில் இருக்கும், தன்னுடய தாய் மாயாதேவிக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக இந்த சூத்திரத்தை விவரிக்கின்றார்.

Red-bibbed ஷிதிகர்பர்

ஷிதிகர்ப சூத்திரத்தில், புத்தர் முற்காலத்தில் ஷிதிகர்பர் ஒரு பிராமண பெண்ணாக இருந்ததாகக் கூறுகிறார். அந்தப்பெண் தன் தாய் இறந்ததினால் மிகவும் ஆழ்ந்த துக்கத்தில் இருக்கிறாள், ஏனெனில் அவள் தாய் புத்தரையும்,தர்மத்தையும், சங்கத்தையும் ஏற்றுக்கொள்ளவாதளாக அவற்றை களங்கப்படுத்துபவளாக இருந்தாள்.

எனவே தன் தாய், நரகத்தின் சித்திரவதைகளை அனுபவிக்காமல் இருக்க, தனக்கிருந்த அனைத்து செல்வங்களை விற்று, அக்காலகட்டத்தின் புத்தருக்கு தினமும் நிவேதனம் செய்து, மனமாற வழிபாடு (பிரார்த்தனை) செய்கிறாள். இவளுடைய பிரார்த்தனைகளில், தன் தாயை நரகத்தில் இருந்து காப்பாற்றுமாறு புத்தரிடம் வேண்டுகிறாள்.

கோவிலில், அவள் இவ்வாறு மன்றாடுகையில், புத்த பகவான் அசரிரீயாக ஒலிக்கிறார். தன் தாயை எங்கிருக்கிறாள் எனபது தெரியவேண்டுமெனில், இல்லத்திற்கு சென்று தன்னுடைய பெயரை ஜெபிக்குமாறு அவளுக்கு கூறுகிறார் புத்த பகவான். அவளும் அவ்வாறே செய்த நிலையில், அவளுடைய மனம் நரகத்துக்கு சென்றது. அங்குள்ள பாதுகவலரிடம் தன் தாயை குறித்து வினவுகிறாள். அந்த பாதுகாவலர், இவளுடைய பிரார்த்தனைகளால் இவள் நரகத்திலிருந்து விடுபட்டு சொர்க்கத்துக்கு சென்றதாக கூறுகிறார். பெரும் மகிழ்ச்சி அடைந்திருக்க வேண்டிய அப்பெண், நரகத்தில் இருக்கும் மற்றவர்களுடைய துன்பத்தை கண்டு மனம் பதைக்கிறாள். எனவே, இனிவரும் காலங்களில் தான் நரகத்தில் உள்ளவர்களை துன்பத்தில் இருந்து மீட்பதாக உறுதுமொழி பூணுகிறாள். அந்த உறுதுமொழியின் காரணமாக அவள், இந்த கல்ப்பத்தில் ஷிதிகர்பராக பிறக்கின்றாள்.

சித்தரிப்பு[தொகு]

ஷிதிகர்பர்

இவர் மற்ற போதிசத்துவர்களுக்கு மாறாக ஒரு துறவியைப் போன்று சித்தரிக்கப்படுகிறார். மேலும் இவருடைய இடக்கரத்தில் சிந்தாமனி இரத்தினத்தையும், வலக்கரத்தில் ஒரு கோலையும் வைத்துள்ளார். இந்தக் கோல் நடக்கும்பாதையில் உள்ள சிறு உயிரினங்கள், மற்றும் பூச்சிகளை அப்புறபடுத்து உதவுகிறது. பெரும்பாலும் தந்திர பூஜைகளில், தியானி புத்தர்களை போல் இவர் மகுடம் அணிந்து காணப்படுகிறார்.

அனைத்து போதிசத்துவர்களைப் போல இவரும் தாமரையின் மீது நின்றவராக உள்ளார். மேலும் எப்பொழுதாவது இவர் முக்கண்ணுடன் திகழ்கிறார்.

மந்திரங்கள்[தொகு]

இவருடைய மந்திரம் பின்வருமாறு

ஓம் க்ஷிதிகர்பாய: ॐ क्षितिगर्भाय:

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Kshitigarbha
  2. "Bodhisattva Kshitigarbha" இம் மூலத்தில் இருந்து 2017-12-27 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20171227170053/http://asiasociety.org/asia-art-outlook/bodhisattva-kshitigarbha-jizo-bosatsu. 

வெளி இணைப்புகள்[தொகு]



"https://ta.wikipedia.org/w/index.php?title=இக்சிதிகர்பர்&oldid=3543319" இருந்து மீள்விக்கப்பட்டது