உள்ளடக்கத்துக்குச் செல்

மகாபோதிக் கோயில், புத்தகயை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(மகாபோதி கோயில், புத்த காயா இலிருந்து வழிமாற்றப்பட்டது)
யுனெசுக்கோ உலகப் பாரம்பரியக் களம்
மகாபோதி கோயில்
உலக பாரம்பரிய பட்டியலில் உள்ள பெயர்
Mahabodhi Temple
வகைபண்பாடு
ஒப்பளவுi, ii, iii, iv, vi
உசாத்துணை1056
UNESCO regionஆசியா-பசிபிக்
பொறிப்பு வரலாறு
பொறிப்பு2002 (26ஆவது தொடர்)

மகாபோதி கோயில், புத்த கயா, கௌதம புத்தர் ஞானம் பெற்ற இடத்தில் அமைந்துள்ள ஒரு பௌத்த கோயில் ஆகும். புத்த காயா, இந்தியாவிலுள்ள பீகார் மாநிலத்தின் கயா மாவட்டத்தில், மாநிலத் தலைநகரமான பாட்னாவிலிருந்து 96 கிமீ (60 மைல்) தொலைவில் அமைந்துள்ளது. கோயிலுக்கு அருகே அதன் மேற்குப் புறத்தில், புனித போதி மரம் உள்ளது. பாளி நூல்கள் இவ்விடத்தை போதி மண்டா என்றும், அங்குள்ள விகாரையை போதிமண்டா விகாரை என்றும் குறிப்பிடுகின்றன. இது உலகெங்கிலும் உள்ள புத்த சமயத்தவர்களுக்கான புனித யாத்திரைக்கான இடமாகவும் விளங்குகிறது. 2002 ஆம் ஆண்டில் இது யுனெஸ்கோ உலக பாரம்பரியக் களம் எனவும் அறிவிக்கப்பட்டது.

போதிமரம்

மகாபோதி கோயில் குறித்த பௌத்த கதைகள்

[தொகு]

பௌத்த நூல்களின் படி புத்த காயாவிலுள்ள போதி மரமே எல்லாப் புத்தர்களும் ஞானம் பெற்ற இடமாகும். புத்த ஜாதகக் கதைகளின்படி, புவியின் தொப்புள் இது, அத்துடன் இவ்விடத்தைத் தவிர வேறு எந்த இடமும் புத்தரின் ஞானம் பெறும் பழுவைத் தாங்க முடியாது. போதி மரத்தைச் சுற்றி ஒரு குறிப்பிட்ட தூரத்துக்குப் புல், பூண்டுகள் கூட முளைப்பதில்லை.

கல்ப முடிவில் பூமி அழியும்போது போதிமண்டாவே இறுதியாக அழியும் அதேபோல் மீண்டும் உலகம் உருவாகும்போதும் இவ்விடமே முதலில் தோன்றும் என்று பௌத்த நூல்கள் கூறுகின்றன.

வரலாறு

[தொகு]

புத்த சமய எழுச்சி

[தொகு]

மரபுவழிக் கதைகளின்படி, கி.மு 530 ஆம் ஆண்டளவில், ஒரு துறவியாக அலைந்து திரிந்த கௌதம புத்தர், இந்தியாவிலுள்ள காயா என்னும் நகருக்கு அண்மையில் உள்ள பல்கு ஆற்றங்கரைக்கு வந்தார். அங்கே அவர் அரச மரம் ஒன்றின் கீழ் தியானம் செய்வதற்காக அமர்ந்தார். புத்த சமய நூல்களின்படி மூன்று பகல்களும், மூன்று இரவுகளும் கழிந்த பின்னர் சித்தார்த்தர் (கௌதம புத்தர்) ஞானம் பெற்று பல பிரச்சினைகள் தொடர்பில் அவர் தேடிய விடைகளை உணர்ந்து கொண்டார். இவ்வாறு சித்தார்த்தர் ஞானம் பெற்ற இடத்தைக் குறிப்பதற்காகவே மகாபோதி கோயில் அமைக்கப்பட்டது.

தொடர்ந்து வந்த ஏழு வாரங்களில், கௌதம புத்தர் ஏழு வெவ்வேறு இடங்களில் தியானம் செய்தும், தனது அநுபவங்களைப் பற்றி எண்ணியும் கழித்தார். இந்த ஏழு வாரங்கள் தொடர்பாகக் குறிக்கப்பட்டுள்ள ஏழு இடங்கள் தற்போதைய மகாபோதி கோயிலில் உள்ளன:

  • முதல் வாரம் போதி மரத்தின் கீழ்.
  • இரண்டாம் வாரம் கௌதமர் ஓரிடத்தில் நின்று கண் இமைக்காமல் போதி மரத்தையே பார்த்துக்கொண்டிருந்தார். இந்த இடம் அனிமேஷ்லோச்ச தூபியினால் (கண் இமையா தூபி) குறிக்கப்படுகிறது. இது கோயில் தொகுதியின் வடகிழக்குப் பகுதியில் அமைந்துள்ளது. அவ்விடத்தில் போதி மரத்தையே பார்த்தபடி நிற்கும் புத்தர் சிலை ஒன்றும் உள்ளது.

தோற்றம்

[தொகு]

புத்தர் ஞானம் பெற்ற 250 ஆண்டுகளுக்குப் பின்னர், கி.மு 250 ஆம் ஆண்டளவில், பேரரசர் அசோகன் புத்த காயாவுக்குச் சென்றார். அங்கே ஒரு துறவிமடத்தையும், கோயில் ஒன்றையும் நிறுவ எண்ணினார். கோயில் கட்டும் முயற்சியின் ஒரு பகுதியாக, புத்தர் ஞானம் பெற்ற இடத்தைக் குறிக்க வைரஇருக்கை (Vajrasana) ஒன்று ஏற்படுத்தப்பட்டது. அசோகரே மகாபோதி கோயிலைக் கட்டியவராகக் கருதப்படுகிறார். தற்போதைய கோயில் கி.பி 5 ஆம் நூற்றாண்டுக்கும், 6 ஆம் நூற்றாண்டுக்கும் இடையில் அமைக்கப்பட்டது. குப்தர் காலத்தின் பிற்பகுதியைச் சேர்ந்த இக் கோயில், முழுமையாகச்செங்கல்லால் கட்டப்பட்டு, இன்றும் நிலைத்திருக்கும் மிகப் பழமையான இந்தியக் கோயில்களில் இதுவும் ஒன்றாகும்.

புத்த சமயத்தின் வீழ்ச்சி

[தொகு]
1780 களில் மகாபோதி கோயிலின் தோற்றம்

ஹூணர்கள், முகம்மது பின் துக்ளக் நடத்தியது போன்ற முந்திய இஸ்லாமிய ஆக்கிரமிப்புகள் ஆகியவற்றைத் தொடர்ந்து புத்த சமயத்தை ஆதரித்து வந்த அரச மரபுகளின் வீழ்ச்சியடைந்ததைத் தொடர்ந்து சமயமும் இறங்குமுக நிலையை எய்தியது. எனினும் பாலப் பேரரசின் கீழ் இந்தியாவின் வடகிழக்குப் பகுதிகளில் புத்த சமய மறுமலர்ச்சி ஏற்பட்டது. இப் பேரரசின் கீழ், கி.பி 8 ஆம், 12 ஆம் நூற்றாண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் மஹாயான பௌத்தம் சிறப்புற்று விளங்கியது.

எனினும், பௌத்த சமய பாலப் பேரரசு இந்துக்களின் சேன மரபினரால் தோற்கடிப்பட்டதைத் தொடர்ந்து, புத்த சமயத்தின் நிலை மீண்டும் இறங்கு முகமாகி, இந்தியாவில் ஏறத்தாள அழிந்து விட்டது. 12 ஆம் நூற்றாண்டில், புத்த கயா முஸ்லிம் படைகளினால் ஆக்கிரமிக்கப்பட்டது. இக் காலத்தில் மகாபோதி கோயில் பழுதடைந்து, கைவிடப்பட்டது. 16 ஆம் நூற்றாண்டில் புத்த காயாவுக்கு அருகில், சைவ சமயத்தைச் சேர்ந்த சங்கராச்சாரியார் மடம் நிறுவப்பட்டது. தொடர்ந்து வந்த நூற்றாண்டுகளில் இப் பகுதிகளின் முதன்மையான நில உரிமையாளராக ஆன இம் மடத்தின் தலைவர் மகாபோதி கோயில் நிலத்துக்கும் உரிமை கோரினார்.

திருத்த வேலைகள்

[தொகு]

1880 களில், அன்றைய இந்தியாவின் பிரித்தானிய அரசு, சர். அலெக்சாண்டர் கன்னிங்காம் என்பவரின் வழிகாட்டலின் கீழ், மகாபோதி கோயிலில் திருத்த வேலைகளைத் தொடங்கியது. 1891 ஆம் ஆண்டில் இலங்கையின் புத்த மதத் தலைவர்களுள் ஒருவரான அனகாரிக தர்மபால இக் கோயிலின் கட்டுப்பாட்டை புத்த சமயத்தவரிடமே கையளிக்க வேண்டும் என பிரசார இயக்கம் ஒன்றைத் தொடங்கினார். இதை சங்கர மடத் தலைவர் எதிர்த்தார். இதனால் இப் பிரசாரத்துக்கு உடனடியான பலன் எதுவும் கிடைக்கவில்லை. எனினும், 1949 ஆம் ஆண்டில் இக் கோயிலின் கட்டுப்பாடு மடத் தலைவரிடமிருந்து பீகார் மாநில அரசின் கைக்கு மாறியதுடன், இக் கோயிலுக்கான ஒரு மேலாண்மைக் குழுவும் அமைக்கப்பட்டது. இது புத்த சமயத்தவரின் கோரிக்கைக்குக் கிடைத்த அரைகுறை வெற்றி எனலாம். இக் குழுவில் 9 உறுப்பினர்கள் இருந்தனர். தலைவர் உட்பட இவர்களுட் பெரும்பான்மையோர் சட்டப்படி இந்துக்களாகவே இருந்தனர். மகாபோதி கோயிலின் முதல் தலைமைப் பிக்கு, வங்காளத்தைச் சேர்ந்தவரும், மகாபோதி சங்கத்தின் முனைப்பான உறுப்பினருமான அனகாரிக முனீந்திரா என்பவராவார்.

கட்டிடக்கலைப் பாணி

[தொகு]

இக் கோயில் இந்தியச் செங்கல் கட்டிடங்களுக்கான ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகக் கொள்ளப்படுவதுடன், பிற்காலக் கட்டிடக்கலை மரபுகளில் செல்வாக்குச் செலுத்திய ஒரு கட்டிடமாகவும் கருதப்படுகிறது. யுனெஸ்கோ வெளியீட்டின் படி, குப்தர் காலத்தைச் சேர்ந்த இக் கோயில் முழுதும் செங்கற்களாலேயே கட்டப்பட்டதும், கம்பீரமானதுமான மிகவும் பழைய கட்டிடங்களில் ஒன்றாகும். மகாபோதி கோயிலின் உயர்ந்த கோபுர அமைப்பு 55 மீட்டர்கள் உயரம் கொண்டது. இது, இதே பாணியில் அமைந்த நான்கு சிறிய கோபுர அமைப்புக்களால் சூழப்பட்டுள்ளது.

மகாபோதி கோயில் அதன் நாற்புறமும் 2 மீட்டர்கள் உயரம் கொண்ட கல்லாலான தடுப்பு அமைப்புக்கள் உள்ளன. இத் தடுப்புக்கள் இரண்டு கட்டிடப் பொருள் பயன்பாடு, பாணி என்பவை தொடர்பில் இரண்டு வகைகளைச் சேர்ந்தவையாகக் காணப்படுகின்றன. மணற்கல்லாலான பழைய அமைப்பு கி.மு 150 ஆம் ஆண்டளவைச் சேர்ந்தது எனக் கருதப்படுகிறது. மினுக்கப்படாத கருங்கற்களால் கட்டப்பட்ட அடுத்த வகை, கி.பி 300 – 600 வரையான குப்தர் காலத்தைச் சேர்ந்தது. இத் தடுப்பு அமைப்புக்களில், இந்துக் கடவுளரான இரு புறமும் யானைகள் பூசை செய்யும் கஜலக்குமி, குதிரைகள் பூட்டிய தேரில் வரும் சூரியன் ஆகியோரின் சிற்பங்கள் காணப்படுகின்றன. பிந்திய அமைப்பு வகையில், தூபிகளின் உருவங்கள், கருடன், தாமரை மலர்கள் என்பவை செதுக்கப்பட்டுள்ளன.

இதனையும் காண்க

[தொகு]

வெளிப்புற இணைப்புகள்

[தொகு]