உள்ளடக்கத்துக்குச் செல்

மகிந்தன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மகிந்தன்
அருகதர் மகிந்தனின் சிலை
சுய தரவுகள்
பிறப்பு
மகேந்திரன்

கி மு 3-ஆம் நூற்றாண்டு
இறப்பு
இறப்பிற்கான காரணம்வயது மூப்பால்
நினைவிடம்இலங்கை
சமயம்பௌத்தம்
தேசியம் இந்தியன்
பெற்றோர்(s)அசோகர் (தந்தை)
தேவி (தாய்)
உட்குழுதேரவாத பௌத்தம்
Educationபௌத்த சாத்திரங்கள்
அறியப்படுதல் தேரவாத பௌத்தத்தை இலங்கையில் நிறுவுதல்

மகிந்தன் அல்லது மகிந்தர் (Mahinda, சமக்கிருதம்: महेन्द्र; மகேந்திரா, பிறப்பு: கிமு 3ம் நூற்றாண்டு), இந்தியாவின் மகத நாட்டைச் சேர்ந்த புத்த மதகுரு ஆவார். இவர் மவுரியப் பேரரசர் அசோகருக்கும் அவரது முதல் மனைவி தேவிக்கும் பிறந்த இரட்டையர்களில் மூத்தவர். மற்றையவர் சங்கமித்தை. மகிந்த தேரரே இலங்கைக்கு பௌத்த மதத்தை முதன் முதலில் அறிமுகப்படுத்தினார்.

பேரரசர் அசோகர் இவருக்கு மகேந்திரா (உலகத்தை வென்றவன் என்ற பொருளில்) பெயர் வைத்தார். ஆனால் மகேந்திரன் தனது அன்னையின் வழிநடத்தலில் பௌத்த மதகுருவானார்.

Bed of Mahinda in Mihintale

வரலாற்று ஆவணங்கள்

[தொகு]

இலங்கையின் பண்டைய வரலாற்றைக் கூறும் தீபவம்சம், மகாவம்சம் ஆகிய இரண்டிலும் மகிந்த தேரர் இலங்கைக்குப் பயணம் மேற்கொண்டதையும், தேவநம்பிய தீசன் என்ற மன்னனை பௌத்தத்துக்கு மதம் மாற்றியமை குறித்தும் எழுதப்பட்டுள்ளன.[1] இவை இரண்டுமே மகிந்தரின் வாழ்வு மற்றும் ஆவணங்களின் முதன்மை ஆதாரங்களாகும். கல்வெட்டுகள் மற்றும் இலக்கிய ஆதாரங்கள் இலங்கையில் கிமு 3 ஆம் நூற்றாண்டில் மகிந்தரின் காலத்தில் இலங்கையில் பௌத்த சமயம் பரவியதைக் காட்டுகின்றன.[1]

அசோகரின் புதல்வரான மகிந்தர் இலங்கைக்கு வந்ததாகவும், அசோகரின் புதல்வி சங்கமித்தை பௌத்த துறவியாகி இலங்கைக்கு போதி மரத்தைக் கொண்டு வந்ததாகவும் மகாவம்சம் கூறுகிறது. ஆனாலும், அசோகர் இதனைக் குறிப்பிடவில்லை, அத்துடன் சிங்களக் கலையில் ஆரம்பகால ஓவியங்கள் அல்லது சிற்பங்களில் இவர்களைப் பற்றிய குறிப்பு எதுவும் இல்லை.

மகிந்தர் இலங்கை அரசரை மதம் மாற்றிய வரலாற்றுக் குறிப்புகள் கேள்விக்குள்ளாக்கப்பட்டிருக்கின்றன. புத்தரைப் பற்றி பல ஆய்வுகளை எழுதியவரும், பாளி மொழியில் இருந்து பல நூல்களை மொழிபெயர்த்தவருமான செருமனியைச் சேர்ந்த இந்தியவியலாளர் பேராசிரியர் எர்மன் ஓல்டென்பர்க் மகிந்தரின் கதையை ஒரு "தூய கண்டுபிடிப்பு" எனக் கூறியுள்ளார். அசோகரும் இந்தியாவின் ஆரம்ப வரலாறும் என்ற நூலை எழுதிய வி. ஏ. சிமித் என்பவர் இதனை அபத்தம் எனக் கூறியுள்ளார். தனது மகன் மகிந்தவை பௌத்த மதப்பரப்புனராக கோவிலுக்கு அர்ப்பணிப்பது பற்றியும், இலங்கை அரசரை மதம் மாற்றுவதில் மகிந்தரின் பங்கு பற்றியும் அசோகரின் கல்வெட்டுகளில் கூறப்படவில்லை என இவர்கள் வாதிடுகின்றனர்.[2]

வரலாறு

[தொகு]

மகிந்தர் தனது தாயாருடன் விதிசா என்ற இடத்தில் வசித்து வந்தார். தந்தையின் ஆன்மிகக் குரு மொகாலிபுத்த தீசர் என்பவருடன் சேர்ந்து தனது 20வது அகவையில் மதகுருவானார். மொகாலிபுத்த தீசர் இவரை வழிநடத்தி புத்தரின் போதனைகளைக் கொண்ட திரிபிடகம் என்ற நூலைக் கற்பித்தார். இவரின் பரிந்துரையின் படி, மூன்றாம் பௌத்தப் பேரவை அமர்வை அடுத்து மகிந்தரும் அவருடன் உடன் பயின்ற இத்தியன், உத்தியன், சம்பாலா, பத்தசாலன், சாமநேர சுமணன் (சங்கமித்தையின் மகன்), பங்குகன் ஆகியோரும் பௌத்த மதத்தைப் பரப்புவதற்காக இலங்கைக்கு அனுப்பப்பட்டனர். இக்குழுவினர் வேதசாகிரி விகாரையில் இருந்து (இன்றைய சாஞ்சி) இலங்கை நோக்கிப் பயணமாயினர்.

மகாவம்சம், தீபவம்சம் ஆகியவற்றின் படி, மகிந்தரும் அவரது குழுவினரும் பூரணை நாளன்று இலங்கை வந்து சேர்ந்தனர். அந்நாளன்று இலங்கை மன்னன் தேவநம்பிய தீசன் மிகிந்தலை குன்றுகளில் வேட்டையாடுதலில் ஈடுபட்டிருந்தான். தேவநம்பிய தீசன் ஏற்கனவே அசோகப் பேரரசரை அறிந்திருந்தான் எனவும் இருவரும் பரிசுப் பொருட்களைப் பரிமாறியவர்கள் என்றும் நம்பப்படுகிறது. பௌத்த குருமார்களை மிகிந்தலையில் கண்ட மன்னன் அவர்களை வணக்கத்துடன் வரவேற்று அவர்களைப் பற்றி அறிந்து கொண்டான். மகிந்த தேவநம்பிய தீசனுக்கு பௌத்தத்தைப் போதித்து அவனை மதம் மாற்றினார். இவர்கள் பின்னர் தலைநகர் அனுராதபுரத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். மகிந்தர் மன்னரின் அரண்மனையில் பொது மக்களுக்கு இரண்டு ஆன்மிக உரைகளை நிகழ்த்தினார். மகிந்தரும் குழுவினரும் தங்கியிருந்த அரசுப் பூங்கா பிற்காலத்தில் மகாவிகாரை என அழைக்கப்பட்டது. இதுவே இலங்கையின் ஆரம்பகால பௌத்தக் கலாசாரக் கல்விக் கழகமாகவிருந்தது.

இலங்கைப்[ பெண்களும் தமது மடப்பள்ளியில் இணைய விரும்பியதை அடுத்து மகிந்தர் தனது தங்கை சங்கமித்தையை இலங்கைக்கு வரவழைத்தார். அத்துடன் புத்த காயாவில் உள்ள மூல மரத்தின் கிளை ஒன்றையும் இலங்கைக்குத் தருவித்து மகாவிகாரையில் நட்டார். இம்மரம் தற்போதும் அங்கு உள்ளதாக நம்பப்படுகிறது.

ஒரு மாதம் வரையில் தலைநகரில் தங்கியிருந்த மகிந்தர் பின்னர் மிகிந்தலைக்குச் சென்று அங்கு வசிக்கலானார். இதன் பயனாக அங்கு இரண்டாவது பௌத்த பீடம் ஒன்று உருவானது. மௌரியப் பேரரசில் இருந்து கௌதம புத்தரின் எச்சம் ஒன்றும் கொண்டுவரப்பட்டு அங்கு வைக்கப்பட்டது.

தேவநம்பிய தீசனின் இறப்புக்குப் பின்னரும் மகிந்தர் வாழ்ந்து தனது 80வது அகவையில் இலங்கையில் காலமானார். அப்போது மன்னனாகவிருந்த உத்தியன் (தேவநம்பிய தீசனின் உடன் பிறந்தவன்) அரச மரியாதைகளுடன் மகிந்தரின் இறுதி நிகழ்வுகளை நிகழ்த்தி, அவரது எச்சங்களைப் பாதுகாப்பதற்காக மிகிந்தலையில் தூபி ஒன்றையும் நிறுவினான்.

இவற்றையும் பார்க்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 Holt, John Clifford (2004), "Sri Lanka", in Buswell, Jr., Robert E. (ed.), Macmillan Encyclopedia of Buddhism, USA: Macmillan Reference USA, pp. 795–99, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-02-865910-4
  2. Smith, Vincent A. (1906). History of India, Vol 2. London: The Grollier Society. p. 169.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=மகிந்தன்&oldid=3445652" இலிருந்து மீள்விக்கப்பட்டது