உள்ளடக்கத்துக்குச் செல்

பிந்துசாரர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பிந்துசாரர்
அமித்ரகதா
பிந்துசாரர்
பிந்துசாரர் காலத்தைச் சேர்ந்த வெள்ளி நாணயங்கள் (கி.மு. 297 - 273)
இரண்டாம் மௌரியப் பேரரசர்
ஆட்சிக்காலம்கி.மு. 297 - 273
முடிசூட்டுதல்கி.மு. 297
முன்னையவர்சந்திரகுப்த மௌரியர்
பின்னையவர்அசோகர்
பிறப்புகி.மு. 320
இறப்புகி.மு. 273
துணைவர்பல மனைவிகள் (மகாவம்சத்தின் படி சுபத்திராங்கி உட்பட 16) சுசிமாவின் தாய்
குழந்தைகளின்
பெயர்கள்
சுசிமா, அசோகர், விதாசோகன்
அரசமரபுமௌரியர்
தந்தைசந்திரகுப்த மௌரியர்
தாய்துர்தாரா (சமண இலக்கியத்தின் படி)

பிந்துசாரர் (Bindusara) மௌரியப் பேரரசின் இரண்டாவது மன்னர் ஆவார். கி.மு. 297 முதல் கி.மு. 273 வரையிலான காலத்தில் இவர் ஆட்சி செய்ததாகக் கூறப்படுகிறது. இவர் சந்திரகுப்த மௌரியரின் மகனும், அசோகரின் தந்தையுமாவார்.[1] இவர் தனது ஆட்சிக்காலத்தில் மௌரியப் பேரரசை மேலும் விரிவுபடுத்திய போதிலும் இவருடைய வாழ்க்கையைப் பற்றிய ஆவணங்கள் குறைவாகவே உள்ளன. இவரைப் பற்றிய தகவல்களில் பெரும்பாலானவை இவரது மரணத்திற்குப் பின் பல நூறு ஆண்டுகளாக எழுதப்பட்ட பழம்பெரும் புராணக்கதைகளில் இருந்து பெறப்பட்டவையாகும்.

பிந்துசாரர் தனது தந்தை உருவாக்கிய பேரரசை ஒருங்கிணைத்து பின்னர் தனது நிர்வாகத்தை தென்னிந்தியாவில் பெற்ற பிராந்திய வெற்றிகளால் மேலும் விரிவுபடுத்தினார் என்று 16 ஆம் நூற்றாண்டில் திபெத்திய பௌத்த நூலாசிரியர் தாரானாதர் கூறியுள்ளார்.ஆனால் சில வரலாற்றாசிரியர்கள் இந்த கூற்றின் வரலாற்று நம்பகத்தன்மையை சந்தேகிக்கின்றனர்.

பின்னணி[தொகு]

பண்டைய மற்றும் இடைக்கால ஆதார மூலங்கள் பிந்துசாரரின் வாழ்க்கை விவரங்களை தெளிவாக விவரிக்கவில்லை. சந்திரகுப்தரை மையமாகக் கொண்ட சமண சமயத்தினரின் புராணக்கதைகளும், அசோகரை மையமாகக் கொண்ட பௌத்த சமயத்தினரின் புராணக்கதைகளும் பிந்துசாரர் பற்றிய சில தகவல்களை அளிக்கின்றன. ஏமச்சந்திரரின் பரிச்சிச்ட்ட பர்வன் போன்ற சமண மதத்தினரின் புராணக் கதைகள் பிந்துசாரர் இறந்த ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின்னர் எழுதப்பட்ட கதைகளாகும்.[2] அசோகரின் ஆரம்பகால வாழ்க்கையைப் பற்றிக்கூறும் பல பௌத்த புராணங்களும் அசோகரின் மரணத்திற்கு பல நூறு ஆண்டுகளுக்கு பின்னர் வாழ்ந்த பௌத்த எழுத்தாளர்களால் எழுதப்பட்டவையாகும். பிந்துசாரரின் ஆட்சியைப் பற்றி அறிய பல இந்த புராணங்களைப் பயன்படுத்த முடியும் என்றாலும், அசோகருக்கும் புத்தமதத்திற்கும் இடையிலான நெருங்கிய தொடர்பின் காரணமாக அவை நம்பத்தகுந்ததாக இல்லை.[2] எனவே வரலாற்றாசிரியர்கள் இந்த கூற்றுகளின் வரலாற்று நம்பகத்தன்மையை சந்தேகிக்கின்றனர்.[3]

சமசுகிருத மொழியில் எழுதப்பட்ட பௌத்த தொன்மவியல் கதைகளைக் கொண்ட திவ்வியவதனம், பாளி மொழியில் எழுதப்பட்ட தீபவம்சம், மகாவம்சம், வம்சதபக்சினி, சமந்தபாசடிக்கம் மற்றும் 16 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த தாரனாதரின் குறிப்புகள் உள்ளிட்டவை பிந்துசாரர் தொடர்பான பௌத்த ஆதார மூலங்களாகும்.[3][4] 12 ஆம் நூற்றாண்டில் ஏமச்சந்திரர் எழுதிய பரிச்சிச்ட்ட பர்வன் என்ற நூலும், 19 ஆம் நூற்றாண்டில் தேவசந்திரர் எழுதிய ராசவளி கதா என்ற நூலும் பிந்துசாரர் பற்றிய தகவல்களைக் கொடுக்கும் சமண சமய ஆதார மூலங்களாகும்.[5][6] பிந்துசாரர் மௌவுரிய ஆட்சியாளர்களின் மரபுவழியில் வந்தவர் என்று இந்து மத புராணங்கள் குறிப்பிடுகின்றன.[7]

ஆரம்பகால வாழ்க்கை[தொகு]

மௌரியப் பேரரசின் நிறுவனர் சந்திரகுப்தருக்கு மகனாக பிந்துசாரர் பிறந்தார். பல்வேறு புராணங்கள் மற்றும் மகாவம்சம் உள்ளிட்ட நூல்கள் மூலம் இது உறுதிப் படுத்தப்பட்டுள்ளது.[3] மன்னர் சுசுநாகனின் மகனே பிந்துசாரர் என தீபவம்சம் கூறுகிறது.[3] பிந்துசாரர் நந்த குலத்தைச் சேர்ந்தவர் என்றும், பிம்பிசாரரின் பத்தாவது தலைமுறை வம்சாவளி என்றும் அசோகவதனம் கூறுகிறது. தீபவம்சத்தைப் போல சந்திரகுப்தரின் பெயரை பெயர் இதில் கூறப்படவில்லை. அசோகவதனத்தின் பின்கால பதிப்புகளும் இதேகருத்தை சில வேறுபாடுகளுடன் குறிப்பிடுகின்றன.[3]

சந்திரகுப்தர் செலூக்கியப் பேரரசுடன் ஒரு திருமண உறவு கொண்டிருந்தார், இதிலிருந்து பிந்துசாரரின் தாய் கிரேக்கம் அல்லது மாசிடோனியாவைச் சேர்ந்தவராக இருக்கலாம் என்ற ஊகத்திற்கு வழிவகுத்தது. இருப்பினும் இதற்கான வலுவான ஆதாரங்கள் இல்லை.[8] 12 ஆம் நூற்றாண்டில் சமண எழுத்தாளர் ஏமச்சந்திரரின் பரிச்சிச்ட்ட பர்வன் நூலில் பிந்துசாரரின் தாயார் பெயர் தூர்தரா என்று குறிப்பிடப்படுகின்றது.[6]

பெயர்கள்[தொகு]

"பிந்துசாரா" என்ற பெயர் விஷ்ணு புராணம் ("விந்துசார") போன்ற இந்து நூல்கள், "பரிச்சிச்ட்ட பர்வன்" போன்ற சமண நூல்கள் மற்றும் தீபவம்சம், மகாவம்சம் ("பிந்துசாரோ") போன்ற பௌத்த நூல்களால் சான்றளிக்கப்படுகிறது.[9][10] பிற புராணங்கள் சந்திரகுப்தனின் வாரிசின் பெயர்களாக வெவ்வேறு பெயர்களைக் குறிப்பிடுகின்றன. எடுத்துக்காட்டாக, பாகவத புராணம் வரிசரா அல்லது வரிகாரர் என்று குறிப்பிடுகின்றது. வாயு புராணம் பத்ரசாரா அல்லது நந்தசாரா என்று குறிப்பிடுகின்றது.[7]

மகாபாசியம் இவரை அமித்ரகதா (சமசுகிருதம்:Amitrakhāda; பொருள்: "எதிரிகளைக் கொல்பவர்") என்று பெயரிடுகிறது.[2] கிரேக்க எழுத்தாளர்கள் இவரை அல்லிட்ரோகேட்சு (Ἀλλιτροχάδης) மற்றும் அமிட்ரோசேட்சு (Ἀμιτροχάτης) என்று அழைக்கின்றனர்; இந்த பெயர்கள் அநேகமாக முன் கூறிய சமசுகிருத தலைப்பிலிருந்து பெறப்பட்டவையாகும்.[11][12][11] கூடுதலாக, பிந்துசாரருக்கு தேவானம்ப்ரியா ("தேவர்களின் பிரியமானவர்") என்ற பட்டம் வழங்கப்பட்டது, இது அவரது வாரிசான அசோகருக்கும் பயன்படுத்தப்பட்டது.[11] சமணப் படைப்பான ராசாவளி-கதா இவருடைய இயற்பெயர் சிம்மசேனா என்று கூறுகிறது.[5]

பௌத்த மற்றும் சமண நூல்கள் பிந்துசாரருக்கு எப்படி பெயர் வந்தது என்பது பற்றிய ஒரு புராணக்கதையைக் குறிப்பிடுகின்றன. சந்திரகுப்தனின் மந்திரி சாணக்கியர் விஷ முயற்சிகளுக்கு எதிராக சந்திரகுப்தருக்கு நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்க பேரரசரின் உணவில் சிறிய அளவு விஷத்தை கலந்து கொடுப்பதை வழக்கமாக கொண்டிருந்தார் என்று கூறுகின்றன. ஒரு நாள், சந்திரகுப்தர் இதை பற்றி அறியாமல், தனது கர்ப்பிணி மனைவியுடன் தனது உணவைப் பகிர்ந்து கொண்டார். பௌத்த இதிகாசங்களின்படி (மகாவம்சம்), பேரரசிக்கு பிரசவம் ஆவதற்கு இன்னும் ஏழு நாட்கள் இருந்தது. மகாராணி விஷம் கலந்த உணவை உண்டதை அறிந்த சாணக்கியர், அவள் இறக்கப் போகிறாள் என்பதை உணர்ந்து, கருவில் இருக்கும் குழந்தையைக் காப்பாற்ற முடிவு செய்தார். சாணக்கியர் கருவை வெளியே எடுக்க வாளால் மகாராணியின் வயிற்றைத் திறந்தார். அடுத்த ஏழு நாட்கள், ஒவ்வொரு நாளும் புதிதாகக் கொல்லப்பட்ட ஒரு ஆட்டின் வயிற்றில் இந்த கருவை வைத்தார். ஏழு நாட்களுக்குப் பிறகு, சந்திரகுப்தனின் மகன் பிறந்தான் எனவும் குழந்தையின் உடலில் ஆட்டின் இரத்தத் துளிகள் (பிந்து) காணப்பட்டதால், இவருக்கு பிந்துசாரா என்று பெயரிடப்பட்டது என்றும் கூறுகின்றன.[13] சமண உரைகள் பேரரசியை துர்தரா என்று அழைக்கின்றன. மேலும் சாணக்யர் அவள் சரிந்த தருணத்திலேயே, குழந்தையை காப்பாற்ற மகாராணியின் வயிற்றை வெட்டி குழந்தையை வெளியே எடுத்தார் என்று கூறுகின்றன. இந்த நேரத்தில், ஒரு துளி (பிந்து) விஷம் ஏற்கனவே குழந்தையை அடைந்து அதன் தலையைத் தொட்டது. எனவே, சாணக்கியர் குழந்தைக்கு பிந்துசாரா என்று பெயரிட்டார்.[6]

தனிப்பட்ட வாழ்க்கை[தொகு]

அசோகவதனம் பிந்துசாரரின் மூன்று மகன்களின் பெயரைக் குறிப்பிடுகிறது: சுசிமா, அசோகர் மற்றும் விடாசோகார். அசோகர் மற்றும் விடாசோகரின் தாய் சுபத்ராங்கி என்றும், அவர் சம்பாபுரியை சேர்ந்த ஒரு பிராமணர் மகள் என்றும் கூறுகின்றது. சுபத்ராங்கி பிறந்தபோது, ​​பிங்கல்வத்சர் என்ற சோதிடர் அவருடைய மகன்களில் ஒருவர் பேரரசராகவும், மற்றவர் மதவாதியாகவும் இருப்பார் என்று கணித்தார். எனவே அவள் வளர்ந்ததும், அவளது தந்தை அவளை பாடலிபுத்திரத்தில் உள்ள பிந்துசாரரின் அரண்மனைக்கு அழைத்துச் சென்றார். பிந்துசாரரின் மனைவிகள், அவளுடைய அழகைக் கண்டு பொறாமைப்பட்டு, அவளை ஒரு சிகை அலங்கார வல்லுனராக பயிற்றுவித்தனர். ஒருமுறை பேரரசர் சுபத்ராங்கியின் சிகையலங்காரத் திறமையால் மகிழ்ச்சியடைந்தபோது, ​​இவர் தான் ராணியாக வேண்டும் என்ற விருப்பத்தை வெளிப்படுத்தினார். பிந்துசாரர் இவரது பிராமண வம்சாவளியைப் பற்றி அறிந்த பிறகு இவரை திருமணம் செய்து கொண்டு, தலைமைப் பேரரசி ஆக்கினார். இந்த தம்பதியருக்கு இரண்டு மகன்கள் இருந்தனர்: அசோகர் மற்றும் விடாசோகார். அசோகர் தந்தையை போலாவே பின்னாளில் அரியணை ஏறினார். விடாசோகார் கணிப்புப் படியே துறவறம் பூண்டார்.[14] திவ்யவதனாவில் மற்றொரு புராணக்கதை அசோகரின் தாயாரின் பெயர் சனபதகல்யாணி என்று கூறுகிறது.[2] வம்சத்தப்பகாசினி அசோகரின் தாயின் பெயர் தம்மா என்றும் பிந்துசாரருக்கு 16 மனைவிகள் மற்றும் 101 பிள்ளைகள் இருந்ததாகவும் கூறுகிறது. இவர்களில் மூத்தவர் சுசுமன், இளையவர் திசயன் எனவும், அசோகர் மற்றும் திசயன் ஒரே தாய்க்கு பிறந்தவர்கள் எனவும் கூறுகிறது.[3]

ஆட்சி[தொகு]

கி.மு. 600 மற்றும் 180க்கு இடையில் மௌரியப் பேரரசின் பிராந்திய பரிணாமம் (கி.மு. 273 க்கு முன்னர் பிந்துசாராவின் கீழ் சாத்தியமான விரிவாக்கம் உட்பட)

16 ஆம் நூற்றாண்டின் திபெத்திய பௌத்த ஆசிரியர் தாராநாதர், பிந்துசாரர் 16 நகரங்களின் பிரபுக்கள் மற்றும் அரசர்களை அழித்து, மேற்கு மற்றும் கிழக்குக் கடல்களுக்கு (அரபிக்கடல் மற்றும் வங்காள விரிகுடா) இடையே உள்ள அனைத்துப் பகுதிகளிலும் அதிபதியானார் எனக் கூறுகின்றார். சில வரலாற்றாசிரியர்களின் கூற்றுப்படி, இது பிந்துசாரரால் தக்காண பீடபூமி கைப்பற்றப்பட்டதைக் குறிக்கிறது.[2]

ஆனால் மற்றவர்கள் மௌரியப் பேரரசு ஏற்கனவே சந்திரகுப்தரின் ஆட்சியின் போது மேற்குக் கடலில் இருந்து கிழக்குக் கடல் வரை வரை நீண்டிருந்தது என்றும், இது அங்கு எழுந்த கிளர்ச்சிகளை அடக்குவதை மட்டுமே குறிக்கிறது என்று நம்புகிறார்கள். மேலும், தென்னிந்தியாவில் காணப்படும் அசோகரின் கல்வெட்டுகளில் பிந்துசாரரின் தக்காண (தென்னிந்தியா) வெற்றி பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை. இதன் அடிப்படையில், பிந்துசாரர் மௌரியப் பேரரசை விரிவுபடுத்தவில்லை, ஆனால் சந்திரகுப்தனிடமிருந்து இவர் பெற்ற பிரதேசங்களைத் தக்க வைத்துக் கொண்டார் என்று கூறுகின்றனர்.[15][16] பிந்துசாரா தக்காணப் பகுதியை உள்ளடக்கிய ஒரு பேரரசை மரபுரிமையாகப் பெற்றார் என்றும், அந்தப் பேரரசுடன் எந்தப் பெரிய பிராந்தியச் சேர்க்கையும் செய்யவில்லை என்றும் சில வரலாற்றாசியர்கள் நம்புகின்றனர். எவ்வாறாயினும், பிந்துசாரர் சேரர், சோழர் மற்றும் சத்யபுத்திரர் ஆகியோரின் ஆட்சியின் கீழிருந்த சில பகுதிகளை பெயரளவிலான மௌரியர்களின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்தார், இருப்பினும் அவரால் அவர்களது படைகளை வெல்ல முடியவில்லை என்று நம்புகிறார். இந்த கோட்பாடு பண்டைய தமிழ் இலக்கியம் கூறும் வம்பா மோரியார் (மௌரியர்) பற்றிய செய்திகளை அடிப்படையாகக் கொண்டது.[5]

இறப்பு மற்றும் பின்னர்[தொகு]

பிந்துசாரர் கி.மு. 270 களில் இறந்ததாக வரலாற்றுச் சான்றுகள் கூறுகின்றன. உபிந்தர் சிங்கின் கூற்றுப்படி, பிந்துசாரா கி.மு. 273 இல் இறந்தார்.[2] டேனிலோ கி.மு. 274 இல் இறந்ததாக நம்புகிறார்.[5] சைலேந்திர நாத் சென் பிந்துசாரர் கி.மு. 273-272 இல் இறந்தார் என்று கூறுகிறார். மேலும் இவரது மரணத்தைத் தொடர்ந்து நான்கு வருட வாரிசு போராட்டம் நடந்தது, அதன் பிறகு தான் அசோகர் கி.மு. 269-268 இல் பேரரசரானார் எனக்கோருகிறார்.[15]

மகாவம்சத்தின் படி பிந்துசாரர் 28 ஆண்டுகள் ஆட்சி செய்தார். புராணங்களின்படி, இவர் 25 ஆண்டுகள் ஆட்சி செய்தார்..[17] சில பௌத்த நூல்கள் இவர் எழுபது ஆண்டுகளுக்கும் மேல் ஆட்சி செய்ததாக கூறினாலும், இவை நம்பும்படியாக இல்லை என வரலாற்றாசிரியர்கள் கூறுகின்றனர்.[18]

பிந்துசாரருக்குப் பிறகு அவருடைய மகன் அசோகர் பதவியேற்றார் என்பதை அனைத்து ஆதாரங்களும் ஒப்புக்கொள்கின்றன, இருப்பினும் அவை இந்த சூழ்நிலைகளின் மாறுபட்ட விளக்கங்களை வழங்குகின்றன. மகாவம்சத்தின் படி, அசோகர் உச்சயினியின் ஆளுநராக நியமிக்கப்பட்டார். தந்தை நோய்வாய்பட்டிருப்பதை பற்றி கேள்விப்பட்ட உடன் அவர் தலைநகரான பாடலிபுத்திரத்திற்கு விரைந்தார். பின்னர் அவர் தனது உண்டான் பிறந்த சகோதரர் திசயனை மட்டும் விட்டுவிட்டு மற்ற 99 சகோதரர்களைக் கொன்று, புதிய பேரரசராக முடிசூட்டிக்கொண்டார்.[3]

அசோகவதனம் பிந்துசாரரின் மூத்த மகன் சுசிமா ஒருமுறை விளையாட்டாக தனது கையுறையை பிரதம மந்திரி கல்லாடகர் மீது வீசினார். இதனால் கோபமடைந்த கல்லாடகர் சுசீமா பேரரசராக இருக்க தகுதியற்றவர் என்று நினைத்தார். எனவே, இவர் அரசவையிலுள்ள மற்ற மந்திரிகளை தன பக்கம் சேர்த்து கொண்டு, பிந்துசாரரின் மரணத்திற்குப் பிறகு அசோகரை பேரரசராக நியமிக்க பரிந்துரைத்தார். சிறிது காலம் கழித்து, பிந்துசாரர் நோய்வாய்ப்பட்டு இருக்கும் போது சுசுமாவை அரசராக்க முடிவு செய்தார். சுசிமாவை பேரரசராகவும், அசோகரை தக்கசீலத்தின் ஆளுநராகவும் நியமிக்குமாறு தனது அமைச்சர்களை கேட்டுக் கொண்டார். இருப்பினும், இந்த நேரத்தில், அமைச்சர்களால் சுசிமா தக்கசீலத்திற்கு அனுப்பப்பட்டார். பேரரசர் மரணப் படுக்கையில் இருந்தபோது, ​​அசோகரை தற்காலிக பேரரசராக நியமிக்கவும், சுசிமா திரும்பிய பிறகு அவரை மீண்டும் பேரரசராக நியமிக்கவும் அமைச்சர்கள் பரிந்துரைத்தனர். இருப்பினும், இந்த ஆலோசனையைக் கேட்டதும் பிந்துசாரர் கோபமடைந்தார். அந்த நேரத்தில் பிந்துசாரர் இறந்த செய்தியை கேட்ட சுசிமா பாடலிபுத்திரம் நோக்கி விரைந்தார். இருப்பினும், அசோகரின் நலம் விரும்பி ராதாகுப்தர் என்பவரால் ஓர் எரியும் நெருப்பு குழிக்குள் ஏமாற்றி தலைப்பட்டு சுசிமா கொல்லப்பட்டார்.[14][2]

மேற்கோள்கள்[தொகு]

 1. "Bindusara". Britannica. பார்க்கப்பட்ட நாள் 1 December 2023.
 2. 2.0 2.1 2.2 2.3 2.4 2.5 2.6 Singh, Upinder (2008). A History of Ancient and Early Medieval India: From the Stone Age to the 12th Century. Pearson Education India. p. 331. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-317-1120-0.
 3. 3.0 3.1 3.2 3.3 3.4 3.5 3.6 Srinivasachariar, M. (1974). History of Classical Sanskrit Literature. Motilal Banarsidass. p. lxxxviii. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-8-120-80284-1.
 4. S. M. Haldhar (2001). Buddhism in India and Sri Lanka (c. 300 BC to C. 600 AD). Om publications. p. 38. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-8-186-86753-2.
 5. 5.0 5.1 5.2 5.3 Daniélou, Alain (2003). A Brief History of India. Inner Traditions. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-59477-794-3.
 6. 6.0 6.1 6.2 Phyllis Granoff, ed. (1993). "The Minister Cāṇakya, from the Pariśiṣtaparvan of Hemacandra". The Clever Adulteress and Other Stories: A Treasury of Jaina Literature. Translated by Rosalind Lefeber. Motilal Banarsidass. pp. 204–206.
 7. 7.0 7.1 Guruge, Ananda W. P. (1993). Aśoka, the Righteous: A Definitive Biography. Central Cultural Fund, Ministry of Cultural Affairs and Information. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-955-9226-00-0.
 8. Arthur Cotterell (2011). The Pimlico Dictionary Of Classical Civilizations. Random House. p. 189. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-446-46672-8.
 9. Vincent Arthur Smith (1920). Asoka, the Buddhist emperor of India. Oxford: Clarendon Press. pp. 18–19. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788120613034.
 10. Rajendralal Mitra (1878). "On the Early Life of Asoka". Proceedings of the Asiatic Society of Bengal (Asiatic Society of Bengal): 10. https://books.google.com/books?id=rlQOAAAAIAAJ&pg=PA10. 
 11. 11.0 11.1 11.2 Murthy, H. V. Sreenivasa (1963). A History of Ancient India. Bani Prakash Mandir. p. 120.
 12. Chattopadhyaya, Sudhakar (1977). Bimbisāra to Aśoka: With an Appendix on the Later Mauryas (in ஆங்கிலம்). Roy and Chowdhury. p. 98.
 13. Trautmann, Thomas R. (1971). Kauṭilya and the Arthaśāstra: a statistical investigation of the authorship and evolution of the text. Brill. p. 15.
 14. 14.0 14.1 Eugène Burnouf (1911). Legends of Indian Buddhism. New York: E. P. Dutton. pp. 20–29.
 15. 15.0 15.1 Sen, Sailendra Nath (1999). Ancient Indian History and Civilization. New Age International. p. 172. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-8-122-41198-0.
 16. K Krishna Reddy (2005). General Studies History. New Delhi: Tata McGraw-Hill. p. 42-43. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-070-60447-6.
 17. Romila Thapar (1961). Aśoka and the Decline of the Mauryas. Oxford University Press.
 18. Sudhakar Chattopadhyaya (1977). Bimbisāra to Aśoka: With an Appendix on the Later Mauryas. Roy and Chowdhury. p. 102.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிந்துசாரர்&oldid=3910076" இலிருந்து மீள்விக்கப்பட்டது