மௌரியப் பேரரசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
மௌரியப் பேரரசு
Mauryan Empire Map.gif
அசோக மன்னர் காலத்தில் மௌரியப் பேரரசு
அரச சின்னம்:
அசோகரின் சிங்கத் தூபி
அமைத்தவர் சந்திரகுப்த மௌரியர்
முன்னிருந்த அரசு(கள்) மகதப் பேரரசின் நந்தர் அரசமரபு
குடியரசு ஆட்சி
மொழிகள் பாளி
பிராகிருதம்
சமஸ்கிருதம்

கிரேக்கம் (மொழி)

சமயங்கள் பௌத்தம்
இந்து
சமணம்
தலைநகர் பாடலிபுத்திரம்

(இப்பொழுது பாட்னா)

அரசுத் தலைவர் சாம்ராட் (பேரரசன்)
முதல் பேரரசன் சந்திரகுப்த மௌரியன்
கடைசிப் பேரரசன் பிரகத்திர மௌரியன்
அரசு மன்னராட்சி
பிரிவுகள் 4 மாகாணங்கள்:
பாடலிபுத்திரம்
உஜ்ஜைன்
சுவர்ணகிரி
தக்சசீலா
ஓரளவு சுதந்திரமான பழங்குடிகள்
நிர்வாகம் பெரிய அமைச்சர்கள் அவையும், ஒரு பேரமைச்சனின் கீழான ஒரு முக்கிய அமைச்சர்களின் அவையும்.
பல்வேறு அலுவலர்களைக் கொண்ட ஒரு விரிவான நிர்வாக அமைப்பு.
மாகாண நிர்வாகம் வைஸ்ராய்களால் நடத்தப்பட்டது. மாகாணங்களுக்கும் தனியான அமைச்சரவைகள் இருந்தன.
மாகாணங்கள் மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டு கீழ்நிலை அலுவலர்களால் நடத்தப்பட்டன. ஊர்த் தலைவர்கள், ஊர்களை நிர்வாகம் செய்தனர். அவர்களை அரச அலுவலர்கள் மேற்பார்வை செய்தனர்.
பரப்பளவு 5 மில்லியன் கிமீ² [1] (தெற்காசியா மற்றும் மத்திய ஆசியாவின் பகுதிகள்)
மக்கள் தொகை 50 மில்லியன் [2] (உலக மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பங்கு [3])
நாணயம் வெள்ளி Ingots (Panas)
காலப்பகுதி கிமு 322185
கலைப்பு புஷ்யமித்திர சுங்கன் தலைமையில் இராணுவ புரட்சி மூலம்
பின்னரிருந்த அரசு சுங்கப் பேரரசு


மௌரியப் பேரரசு (கிமு 322 – கிமு 185), இந்தியாவில் மௌரிய அரச வம்சத்தினர் ஆண்ட பேரரசு ஆகும். பழங்கால இந்தியாவில் பரப்பளவில் விரிவானதும், அரசியல், படைத்துறை தொடர்பில் மிகவும் வலுவானதுமாக இப்பேரரசு விளங்கியது. இந்தியத் துணைக் கண்டத்தின் கிழக்குப் பகுதியில், கங்கைச் சமவெளியில், இன்றைய பீகார், வங்காளம் ஆகிய மாநிலங்களின் பகுதிகளை உள்ளடக்கியிருந்த மகத நாட்டை அடிப்படையாகக் கொண்டே இப் பேரரசு உருவானது. இதன் தலைநகரம் பாடலிபுத்திரம் ஆகும். இது இன்றைய பட்னாவுக்கு அருகில் இருந்தது. இப்பேரரசு கிமு 322 ஆம் ஆண்டில் சந்திரகுப்த மௌரியனால் உருவாக்கப்பட்டது.

நந்ந வம்சத்தின் இறுதி மன்னனான தன நந்தனுக்கும், பிராமணனாகிய கௌடில்யருக்குமிடையே இடையே ஏற்பட்ட முரண்பாட்டின் விளைவினால் நந்த வம்சத்தவர்களின் ஆட்சி முடிவிற்கு வந்தது. கௌடில்யர், சந்திரகுப்தனை துணையாகக் கொண்டு பாடலிபுரத்தில் ஏற்படுத்திய புரட்சியே மௌரியரது அரசாட்சிக்கு வித்திட்டது. சந்திரகுப்த மௌரியருக்குப் பின் தொடர்ந்து பல மௌரிய மன்னர்கள் ஆட்சி புரிந்தனர்.


புகழ் பெற்ற மௌரியப் பேரரசர்கள்[தொகு]

சந்திரகுப்த மௌரியர் - ஆட்சிக் காலம் கிமு 325 - 301[தொகு]

சந்திரகுப்த மௌரியர், சாணக்கியர் உதவியுடன், நந்த வம்சத்தின் மகதப் பேரரசர் தன நந்தனை வென்று, கிமு 322ல் மௌரியப் பேரரசை நிறுவினார். இவர் தற்கால தமிழ்நாடு மற்றும் கேரளம் தவிர்த்த இந்தியத் துணைக்கண்டத்தின் வடக்கு, தெற்கு, கிழக்கு மற்றும் மேற்கு இந்தியாவின் பெரும் பகுதிகளைத் தனது ஆட்சியின் கீழ் கொண்டு வந்தார்.[4][5] சந்திர குப்த மௌரியர் கி.மு 317ல் செலூக்கஸ் நிக்கோத்தரின் கிரேக்க செலூக்கியப் பேரரசு மீது படையெடுத்தார். இந்தப் போருக்குப் பிறகு ஏற்பட்ட உடன்படிக்கையின் பேரில் செலுக்கியப் பேரரசின் கிழக்குப் பகுதிகளிலான ஆஃப்கானிஸ்தான், பலுசிஸ்தான் மற்றும் பஞ்சாப் மௌரியப் பேரரசில் இணைக்கப்பட்டது.

மேலும் செலுக்கஸ் நிக்கோத்தரின் மகள் ஹெலெனாவை சந்திரகுப்தர் மணம் முடித்தார். இவரது அரசவையில் கிரேக்க செலுக்கியப் பேரரசர் செலூக்கஸ் நிக்காத்தரின் தூதுவராக மெகஸ்தெனஸ் இருந்தார். சந்திரகுப்தரின் ஆட்சி முறைமை குறித்து சாணக்கியரின் அர்த்தசாத்திரம் மற்றும் மெகஸ்தனிஸ் எழுதிய "இண்டிகா" மூலம் அறியப்படுகிறது. கி.மு 301 வரை அரசாண்ட சந்திரகுப்தர் தன் வாழ்வின் இறுதிக்காலத்தில் சமண மதத்தைத் தழுவி துறவியாக வாழ்ந்து, கி.மு 298ல் தற்கால கர்நாடகா மாநிலத்தில் இருக்கும் சரவணபெலகுளாவில், பத்திரபாகு முனிவருடன் வாழ்ந்து முக்தியடைந்தார்.

சந்திர குப்தர் நினைவாக கட்டப்பட்ட பழைமையான கோவில் சந்திராபாஸ்டி.


பிந்துசாரர் - ஆட்சிக் காலம் கி.மு 297 - 273[தொகு]

பிந்துசாரர் மௌரியப் பேரரசின் இரண்டாவது மன்னர் ஆவார். இவர் சந்திரகுப்த மௌரியரின் மகனும், பேரரசர் அசோகரின் தந்தையுமாவார் [6].பிந்துசாரர் என்ற பெயரை தீபவம்சம், மகாவம்சம் உள்ளிட்ட பௌத்த சமய நூல்கள் பிந்துசாரோ என குறிப்பிடுகிறது. பரிசிசுத்த பர்வன் போன்ற சமண சமய நூல்களும், இந்து சமய புராணங்களும் விந்துசாரர் என அழைக்கிறது. இவரது தாய் கிரேக்க செலூக்கியப் பேரரசர் செலூக்கஸ் நிக்கோத்தரின் மகளான ஹெலெனா ஆவார்.

பேரரசர் அசோகர் - ஆட்சிக் காலம் கி.மு 273 - 232[தொகு]

இந்தியத் துணைகண்டத்தில் அசோகரின் தூண்கள் & அசோகரின் கல்வெட்டுக் குறிப்புகள் அமைந்த இடங்கள்
அசோகர் நிறுவிய சிங்கத்தூண்கள்

அசோகர், பிந்துசாரருக்கும் அவரது மனைவி சுமத்திராங்கி என்பவருக்கும் பிறந்தவர். அசோகர் தம் இளம் வயதில், மௌரியப் பேரரசிற்குட்பட்ட அவந்தி நாட்டின் ஆளுநராக இருந்தார். இவரது குழந்தைகள் மகேந்திரனும், சங்கமித்தையும் ஆவர்.

கிமு 273ல் ஆட்சிப் பொறுப்பேற்ற அசோகர், கலிங்கப் போரின் முடிவில் புத்த சமயத்தைத் தழுவி, பௌத்த சமயத்தை இந்தியத் துணைக்கண்டம் முழுவதும் பரப்பினார்.[7][8] இவர் முதன்முதலாக விலங்குகளுக்கு மருத்துவமனை கட்டியவர். சாலை ஓரம் மரங்களை வைத்தவர். மன்னர்களும், அரசு அதிகாரிகளும் மக்களிடம் சரியான முறையில் நடந்து கொள்ள வேண்டும் என்பதற்காக நாடெங்கும் தூபிகளில் சட்ட திட்டங்களைச் செதுக்கி வைத்துள்ளார். இதன் முலம் வெளிப்படையாக நல்ல முறையில் ஆட்சி செய்துள்ளார். அசோகர் தட்சசீலத்தில் நடைபெற்ற கலகத்தை ஒடுக்கினார்.

அசோகர் கி.பி 263 இல் முற்றிலுமாக உபகுப்தர் தலைமையில் பௌத்த சமயத்திற்கு மாறினார். புத்த மதத்தைப் பரப்புவதற்காகவே தர்ம மகாமாத்திரர்கள் எனும் அதிகாரிகளை நியமித்தார். இலங்கைக்கு அவரின் மகள் சங்கமித்திரை மற்றும் மகன் மகேந்திரனை புத்தர் ஞானம் பெற்ற அரச மரத்தின் ஒரு கிளையுடன் புத்த மதத்தைப் பரப்ப அனுப்பி வைத்தார். பாடலிபுத்திரத்தில் கி.மு.240 இல் மொகாலிபுத்த தீசர் தலைமையில் மூன்றாம் பௌத்த சங்கத்தை கூட்டினார்.[9] மாநாட்டை நடத்தினார். இம்மாநாட்டில் திரிபீடகங்கள் இறுதி வடிவம் பெற்றன. புத்தரால் போதிக்கப்பட்டு அசோகரால் பரப்பப்பட்டது ஹீனயானம் ஆகும். அசோகர் கி.மு.241 இல் புத்தர் பிறந்த இடமான கபிலவஸ்துவிற்கும் அதன் அருகில் உள்ள லும்பினி வனத்திற்கும் பயணம் மேற்கொண்டார். புத்த சமயத்தின் புனித இடங்களாக கருதப்படும் சாரநாத், சிராவஸ்தி, வைசாலி, ஜேடவனம், குசிநகர் ஆகிய இடங்களுக்கும் பயணம் மேற்கொண்டார்.

முப்பத்தி ஆறு ஆண்டுகள் ஆட்சி புரிந்த அசோகர், கி.மு. 232 இல் மறைந்தார். அசோகரின் மறைவுக்குப்பிறகு மௌரியப் பேரரசு இரணடாக பிளவுற்றது. மேற்குப்பகுதியை அசோகரின் மகன் குணாளன் ஆட்சி புரிந்தார். கிழக்குப் பகுதியை அசோகரின் பேரன்களில் ஒருவரான தசரத மௌரியர் ஆட்சி புரிந்தார். அசோகர் மறைந்த ஐம்பது வருடங்களிலேய மௌரியப் பேரரசு வீழ்ந்தது.

தசரத மௌரியர் - ஆட்சிக் காலம் கிமு 232–224[தொகு]

அசோகருக்குப் பின் வந்த மௌரியப் பேரரசின் நான்காவது பேரரசர் ஆவார்.[10] இவர் அசோகரின் பேரன் ஆவார்.[11]

அசோகரின் மறைவிற்குப் பின்னர் மௌரியப் பேரரசை, தசரதன் மற்றும் குணாளன் பிரித்துக் கொண்டனர்.[12] பேரரசர் தசரதன், பாடலிபுத்திரத்தை தலைநகராகக் கொண்டு வடக்கு மற்றும் கிழக்கு மௌரியப் பேரரசையும், குணாளன், உஜ்ஜைன் நகரத்தை தலைமையிடமாகக் கொண்டு மேற்கு மற்றும் தெற்கு மௌரியப் பேரரசை ஆண்டனர்.[13]

இவரது ஆட்சிக் காலத்தில் மௌரியப் பேரரசின் தென் பகுதிகளை, சாதவாகனர்கள் கைப்பற்றினர். கிழக்குப் பகுதிகளை, கலிங்கத்தின் மகாமேகவாகன் வம்சத்தினர் கைப்பற்றி ஆண்டனர்.

பௌத்த சமயத்தை பின்பற்றிய தசரத மௌரியர், தற்கால பிகார் மாநிலத்தின் ஜகானாபாத் மாவட்டத்தில், முக்தம்பூர் மலைப்பகுதியில் அமைந்துள்ள பராபர் குகைகளை ஆசிவக முனிவர்களுக்காக அர்பணித்தார்.[14]

மௌரியப் பேரரசின் வீழ்ச்சி[தொகு]

மௌரியப் பேரரசின் வாரிசுரிமைச் சண்டைகளாலும்; உள்நாட்டு மன்னர்களின் படையெடுப்புகளாலும், பேரரசர் அசோகர் மறைந்த 50 ஆண்டுகளில், இறுதி மௌரியப் பேரரசர் பிரகத்திர மௌரியன் (ஆட்சிக் காலம்:கி மு 185 - 180) காலத்தில் மௌரியப் பேராரசு வீழ்ச்சியுற்றது.[15] கிமு 185ல் பிரகத்திர மௌரியன் காலத்தில் மௌரியப் பேரரசு, மகத நாட்டு அளவில் சுருங்கியது. சுங்க வம்சத்து புஷ்யமித்திர சுங்கன் எனும் படைத்தலைவரால், கிமு 180ல் பிரகத்திர மௌரியன் கொல்லப்பட்டார்.[16]

இந்தோ கிரேக்க நாடு நிறுவப்படுதல் (கிமு180 )[தொகு]

மௌரியப் பேரரசின் வீழ்ச்சிக்குப் பின் இந்தியாவின் வடமேற்கில் உள்ள கைபர் கணவாய் பாதுகாப்பின்றி இருந்ததால், நடு ஆசியாவின் கிரேக்க பாக்திரியா நாட்டவர்கள், கிமு 180ல் கைபர் கணவாய் வழியாக மௌரியப் பேரரசின் வடமேற்குப் பகுதிகளை கைப்பற்றி, சகலா போன்ற புதிய நகரங்களை நிறுவினர். மன்னர் மெனாண்டர் பௌத்த சமயத்தை ஆதரித்து பின்பற்றினார். இந்தோ கிரேக்க நாட்டினர், மௌரியப் பேரரசின் தற்கால ஆப்கானித்தான், பாகிஸ்தான், பஞ்சாப், இராஜஸ்தான் பகுதிகளைக் கைப்பற்றினர்.

ஆட்சி நிர்வாகம் மற்றும் சமயம்[தொகு]

வட இந்திய வரலாற்றில் மௌரியரது ஆட்சியானது முதன்முதலில் ஒரு பெரிய நிலப்பரப்பினை உள்ளடக்கிய பேராட்சியாக விளங்கிமை குறிப்பிடத்தக்கது. அசோகரோடு மௌரிய மன்னர்கள் பௌத்த சமயம் சார்ந்தவர்களாகி விட்டதால் கௌதம புத்தர் மற்றும் மகாவீரர் போதனைகளில் முக்கியமான கருணை மற்றும் அகிம்சை பின்பற்றுவோராக விளங்கினர். இதனால் அவர்களது ஆட்சியும் அதிகம் அறநெறி சார்ந்ததாகவே அமைந்தது.

அரசன் சமுதாயத்தில் தடையில்லா அதிகாரங்களைக் கொண்டிருந்தான் அவனைத் தட்டிக் கேட்பதற்கு மக்களுக்கு உரிமையில்லை. நாட்டில் அவன் பிரத்தியேகமான உரிமைகளைப் பெற்றிருந்தான். வாரிசுகள் இல்லாத சொத்துக்களும், புதையலில் ஆறு பங்கும், நாட்டின் நிலமும் மன்னனுக்குரியவையாகும்.

மன்னனுக்கு எதிராக அமைகின்ற பல்வேறு செயற்பாடுகள் மிகக் கடுமையான தண்டனைக்குரிய குற்றங்களாக அமைந்தன.

 • அரச முத்திரைகளைச் சிதைத்தல்
 • பொய்யான ஆவணங்களைத் தயாரித்தல்
 • அரசியரை இழித்தல் அல்லது வல்லுறவாட நினைத்தல்
 • அரசனை இழிவுபடுத்தல்
 • நாட்டின் இரகசியத்தை பிற நாடுகளுக்கு கொடுத்தல்

போன்ற குற்றங்களை செய்தவர்களுக்கு மரணமே தண்டனையாக வழங்கப்பட்டிருந்தது.

மௌரியரின் ஆட்சிமுறையில் மைய ஆட்சி, மாகாண ஆட்சி என்ற இருவேறு ஆட்சி முறைகள் காணப்பட்டிருந்தன. பேரரசானது மைய மாநிலம், குஜராத் மாகாணம், வடமேற்கு மாகாணம், மேற்கு மாகாணம் எனும் நான்கு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டிருந்தது. அசோகர் கலிங்கத்தைப் போரில் கைப்பற்றியதன் பின்னர் கலிங்கம் ஐந்தாவது மாகாணமாக இணைந்தது. மாகாணங்களை ஆளுநர்கள் கண்காணித்தனர்.

அரசனின் செயற்பாட்டிற்கு உதவுகின்ற வகையில் அமைச்சர், புரோகிதர், சேனாதிபதி, இளவரசன் முதலானோரை உள்ளடக்கிய அமைச்சரவை செயல்பட்டது. பௌத்த சமய நிறுவனங்களைக் மேற்பார்வையிட மகாமாத்திரர் எனும் அதிகாரி நியமிக்கப்பட்டார்.

இலக்கியம்[தொகு]

இலக்கியத் துறையின் வளர்ச்சியிலும் மௌரியர் காலத்திற்கு முக்கியமான பங்களிப்பு உண்டு. இந்து சமயம், பௌத்தம், சமணம் என்பன சார்ந்த இலக்கியங்கள் தோற்றம் பெற்றன. இந்து மத இலக்கியங்கள் சமஸ்கிருத மொழியிலும் பௌத்த இலக்கியங்கள் பெரும்பாலும் பிராகிருத மொழியிலும், சமண இலக்கியங்கள் பெரும்பாலும் பாலி மொழியில் தோன்றியிருந்தன.

இந்துமத இலக்கியங்களின் வரிசையில் மகாபாரதம் இக்காலத்திலேயே தோற்றம் பெற்றிருக்க வேண்டும். பதினெண் புராணங்கள் சிலவும் இக்காலத்திலேயே தோன்றின என்பர்.

இந்திய வரலாற்றில் மிகப்பெரும் பொருளியல், அரசியல் கருத்துக்களைக் கூறும் நூலாகிய கௌடில்யரின் அர்த்தசாஸ்திரமும் இக்காலத்திலேயே தோற்றம் பெற்றது. அது 15 அதிகாரங்களையும் 180 உப பிரிவுகளையும் 6000 பாடல்களையும் கொண்டதாய் விளங்குகின்றது. மூன்று காண்டங்களில் வகுத்து நோக்கப்படுகின்றது.

 • 1ம் காண்டம் - அரசன் அமைச்சரவை பற்றிக் கூறுவது
 • 2ம் காண்டம் - பொருளியல் அரசியல் சட்டங்கள் பற்றிக் கூறுவது
 • 3ம் காண்டம் - மைய, மாநில ஆட்சி, போர் முறைகள், அரச தந்திரங்கள் என்பன பற்றிக் கூறுவது.

இவற்றோடு அரசனுடைய ஏகாதிபத்திய ஆட்சிக்குரிய வழியைக் கூறுவதுடன், பிராமணர்களுக்கும் உயர்ந்த சமூக அந்தஸ்தினை வழங்கும் நூலாகவும் விளங்குகின்றது.

மனுநெறி பற்றிக் கூறும் மனுதரும சாத்திரம் கி.மு 2ம் நூற்றாண்டிலேயே தோற்றம் பெற்றது என்பர். இது ஆசார காண்டம், பிராயச்சித்த காண்டம், வியவகார காண்டம் எனும் 3 காண்டங்களையும் 7777 சுலோகங்களையும் கொண்டது. வர்ணாச்சிரம தர்மக் கோட்பாடு, அது சார்ந்த வாழ்க்கை முறை என்பவற்றையும் அவை சார்ந்த வாழ்க்கை முறைகளையும் வைதீக மரபின் அடிப்படையில் சட்ட ரீதியாக விளக்கும் நூலாகவே அமைகின்றது.

இவை தவிர ஜைமினியின் மீமாம்சக சூத்திரம், பாதபாதராயணரின் பிரம்ம சூத்திரம் என்பனவும், கௌதம, வசிஷ்ட், ஆபஸ்தம்ப, போதாயண தர்ம சாஸ்திரங்களும் இக் காலத்திலேயே தோற்றம் பெற்றன என்பர்.

பண்டைய இந்தியாவின் வரலாற்றை அறிவதற்குப் பெரிதும் துணை செய்யும் மெகஸ்தனிஸ் எனும் கிரேக்க நாட்டுத் தூதுவனால் எழுதப்பட்ட இண்டிகா[17] எனும் நூலும் இக்காலத்து இலக்கியங்களின் வரிசையில் குறிப்பிடத்தக்கதாகும். மெகஸ்தனிஸ் சந்திரகுப்த மௌரியனது அரசவையில் தங்கியிருந்து பாடலிபுத்திர நகரம், அரண்மனை, மௌரியரது ஆட்சித்திறம், இந்தியாவின் வனப்பு முதலியவற்றைத் தம் நூலில் தொகுத்திருந்தார். எனினும் இந்நூல் இன்று கிடைக்கப்பெறாமை துரதிஷ்டவசமானதாகும்.

பொருளாதாரம் மற்றும் நாணயங்கள்[தொகு]

முதல் தடவையாக தெற்காசியாவில், அரசியல் ஒற்றுமை மற்றும் இராணுவப் பாதுகாப்பு, வர்த்தகம், விவசாய உற்பத்தி அதிகரித்தது. நூற்றுக்கணக்கான நாடுகள், பல சிறிய படைகள், சக்திவாய்ந்த பிராந்திய தலைவர்கள், மற்றும் உள்முரண்பாடுகளோடு கூடிய முந்தைய சூழ்நிலை மாறி, மௌரியப் பேரரசு ஒரு ஒழுக்கமான மைய அதிகாரத்திற்கு வழிவகுத்தது. பிராந்திய அரசர்களின் வரி மற்றும் பயிர் சேகரிப்பு சுமைகளை விவசாயிகள் விடுவித்தனர், மாறாக தேசிய அளவிலான நிர்வகிக்கப்பட்ட மற்றும் கடுமையான-ஆனால்-நியாயமான வரி விதிப்பு முறையின்படி "அர்த்தசாஸ்திரம்" கொள்கைகளால் அறிவுறுத்தப்படுகிறார்கள். சந்திரகுப்த மௌரியர் இந்தியா முழுவதிற்குமான ஒரு நாணயங் களை வெளியிட்டார்.

மாகாண ஆளுநர்கள் மற்றும் நிர்வாகிகள் மற்றும் ஒரு சமூக பாதுகாப்பு மற்றும் சேவை ஆகியவற்றின் வளையத்தில் வணிகர்கள், விவசாயிகள் மற்றும் வர்த்தகர்களுக்கு நியாயம் மற்றும் பாதுகாப்பு வழங்கப்பட்டது. வருவாய் வசூலிக்கப்பட்டிருந்தாலும் கூட, மவுரியர்கள் பல பொதுப் பணிகள் மற்றும் நீர்வழிகளை மேம்படுத்துவதற்காகவும், இந்தியாவில் உள்வணிகம் புதியதாகக் காணப்படும் அரசியல் ஒற்றுமை மற்றும் உள்அமைதி ஆகியவற்றால் பெரிதும் விரிவடைந்து.

மௌரிய - கிரேக்க செலூக்கியப் பேரரசு நட்பு ஒப்பந்தத்தின் கீழ், மற்றும் அசோகருடைய ஆட்சியின் போது, ஒரு சர்வதேச வர்த்தக வளையம் விரிவடைந்தது. பாக்கிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் நவீன எல்லையில் கைபர் கணவாய், ஒரு பேரரசின் பாதுகாப்பு முக்கியத்துவம் பெற்றது. மௌரியப் பேரரசு, துறைமுக வணிகத்தால் வெளி உலகத்துடன் உட்புகுந்தன. மேற்கு ஆசியாவில் கிரேக்க அரசுகள் மற்றும் ஹெலெனிய கால கிரேக்க இராச்சியங்கள் இந்தியாவின் முக்கிய வர்த்தக பங்காளியாக மாறியது. தென்கிழக்கு ஆசியாவில் மலாய் தீபகற்பம் வழியாக வர்த்தகவும் நீட்டிக்கப்பட்டது. மௌரியப் பேரரசீன் ஏற்றுமதியில் பட்டு பொருட்கள், ஜவுளி, மசாலா மற்றும் கவர்ச்சியான உணவுகள் ஆகியவை அடங்கும். வெளிநாட்டு உலகம் புதிய விஞ்ஞான அறிவு மற்றும் தொழில்நுட்பம் முழுவதும் மௌரியப் பேரரசிடம் வர்த்தகம் விரிவுபடுத்தப்பட்டது. ஆயிரக்கணக்கான சாலைகள், பாசான்க் கால்வாய்கள், நீர்வழிகள், மருத்துவமனைகள், ஓய்வு இல்லங்கள் மற்றும் பிற பொதுப் பணிகள் கட்டுமானத்திற்காக அசோகர் நிதியுதவி அளித்தார். வரிவிதிப்பு மற்றும் விளைபொருள் சேகரிப்பு தொடர்பாக பல கடுமையான நிர்வாக நடைமுறைகளை எளிதாக்குவது, பேரரசு முழுவதும் உற்பத்தித்திறன் மற்றும் பொருளாதார நடவடிக்கைகளை அதிகரிக்க உதவியது.

மௌரியப் பேரரசின் நாணயங்கள்

சமயங்கள்[தொகு]

சமணம்[தொகு]

பத்திரபாகு குகை, சரவணபெலகுளா, சந்திரகுப்த மௌரியர் முக்தி அடைந்த இடம்

முதுமையில் மௌரியப் பேரரசின் மணிமுடி துறந்த சந்திரகுப்த மௌரியர், சமண சமயத்தை தழுவி, பத்திரபாகு எனும் சமணத் துறவியுடன், தென்னிந்தியாவின் சரவணபெலகுளா எனுமிடத்தில் உள்ள குகையில் தங்கி, வடக்கிருத்தல் எனும் கடும் தவம் மற்றும் நோன்பு மூலம் முக்தி அடைந்தார். [19][20][21][22]

மௌரியப் பேரரசர் பிந்துசாரர் சமணத்தின் ஒரு பிரிவான ஆசீவகம் எனும் துறவற நெறியைப் பின்பற்றினார் [23] அசோகர் மற்றும் அவரது பேரன் சம்பிரதி பௌத்த சமயத்தை பின்பற்றினாலும், சமணத்தையும் ஆதரித்தனர். [24][25]

பௌத்தம்[தொகு]

மௌரியர்களின் மகதம் பௌத்த சமயத்தின் மையமாக விளங்கியது. முதலில் இந்து சமயத்தைப் பின்பற்றிய் அசோகர், கலிங்கப் போருக்குப் பின்னர் பௌத்ததைத் தழுவினார். மௌரியப் பேரரசு முழுவதும் பௌத்த தூபிகள் நிறுவி, பௌத்ததைப் பரப்பினார். தனது மகனையும், மகளையும் இலங்கைக்கு அனுப்பி பௌத்தம் பரவச் செய்தார். சாஞ்சி தூபி, தர்மராஜிக தூபி, மகாபோதி கோயில்களை நிறுவினார். நடு ஆசியா மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் பௌத்தம் பரப்பினார்.[26] அசோகர் ஆட்சியில் மூன்றாம் பௌத்த சங்கத்தை கூட்டிப்பட்டது.

மேற்கோள்கள்[தொகு]

 1. Peter Turchin, Jonathan M. Adams, and Thomas D. Hall. East-West Orientation of Historical Empires. பரணிடப்பட்டது 2006-11-10 at the வந்தவழி இயந்திரம் University of Connecticut, November 2004.
 2. Roger Boesche (2003). "Kautilya’s Arthashastra on War and Diplomacy in Ancient India", The Journal of Military History 67 (p. 12).
 3. Colin McEvedy and Richard Jones (1978), "Atlas of World Population History", Facts on File (p. 342-351). New York.
 4. Chandragupta
 5. Chandragupta Maurya
 6. Bindusara
 7. Ashoka the Great
 8. Ashoka
 9. Buddhist council
 10. Asoka Maurya and His Successors
 11. Asha Vishnu; Material Life of Northern India: Based on an Archaeological Study, 3rd Century B.C. to 1st Century B.C. Mittal Publications. 1993. ISBN 978-8170994107. pg 3.
 12. Buddha Prakash; Studies in Indian history and civilization. Shiva Lal Agarwala. 1962. pg 148-154.
 13. Rama Shankar Tripathi; History Of Ancient India. Motilal Banarsidass Publishers. 1942. pg 179.
 14. Romila Thapar; Aśoka and the Decline of the Maurya. Oxford University Press. 2001. ISBN 0-19-564445-X. pg 186.
 15. Aśoka and the Decline of the Mauryas by Romila Thapar, Oxford University Press, 1960 P200
 16. Army and Power in the Ancient World by Angelos Chaniotis/Pierre Ducrey(Eds.), Franz Steiner Verlag Stuttgart, P35
 17. Megasthene-Indika
 18. CNG Coins பரணிடப்பட்டது 27 ஆகத்து 2017 at the வந்தவழி இயந்திரம்
 19. Mookerji 1988, பக். 39-41.
 20. Thapar 2004, பக். 178.
 21. Kulke & Rothermund 2004, பக். 64-65.
 22. Samuel 2010, பக். 60.
 23. Basham 1951, பக். 138, 146.
 24. Cort 2010, பக். 199.
 25. Tukol, T. K., Jainism in South India, 4 மார்ச்சு 2016 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது Cite uses deprecated parameter |deadurl= (உதவி)
 26. Jerry Bentley, Old World Encounters: Cross-Cultural Contacts in Pre-Modern Times (New York: Oxford University Press), 46

வெளி இணைப்புக்கள்[தொகு]

Commons-logo-2.svg
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Mauryan Empire
என்பதின் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மௌரியப்_பேரரசு&oldid=3351585" இருந்து மீள்விக்கப்பட்டது