சந்திரகுப்த மௌரியர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சந்திரகுப்த மௌரியர் (சந்திரகுப்த மௌரியன்)
மௌரியப் பேரரசு
Chandragupt maurya Birla mandir 6 dec 2009 (31) (cropped).JPG
சாம்ராட் சக்கரவர்த்தி சந்திர குப்த மெளரியர் (லக்ஷ்மி நாராயண கோவில்)
ஆட்சிகிமு 322-கிமு 298
பின்வந்தவர்பிந்துசாரர்
அரசிதுர்தாரா
மனைவிகள்
வாரிசு(கள்)பிந்துசாரர்
மரபுமௌரியர்
தந்தைமகாபத்ம நந்தன்
தாய்முரா

சந்திர குப்தர் (சந்திரகுப்தன்) எனச் சுருக்கமாக அழைக்கப்படும் சந்திரகுப்த மௌரியர் மௌரியப் பேரரசை நிறுவிய அரசனாவார். இவர் இந்தியத் துணைக் கண்டத்தின் பெரும் பகுதியைத் தனது ஆட்சியின் கீழ்க் கொண்டுவருவதில் வெற்றிபெற்றார். இதனால் சந்திர குப்தர் இந்தியாவை ஒன்றாக்கிய முதலாவது மன்னன் எனப்படுவதோடு, இந்தியாவின் முதலாவது உண்மையான பேரரசன் எனவும் புகழப்படுகின்றார். கிரேக்கம், இலத்தீன் ஆகிய மொழிகளிலுள்ள படைப்புக்களில் சந்திரகுப்தன், சாண்ட்ரோகுப்தோஸ் (Sandrokuptos) சாண்ட்ரோகாட்டோஸ் (Sandrokottos), ஆண்ட்ரோகாட்டஸ் (Androcottus) போன்ற பல பெயர்களால் குறிப்பிடப்படுகின்றார்.[1][2]

இவரது அரசவையில் கிரேக்க செலுசிட் பேரரசின் செலூக்கஸ் நிக்காத்தரின் தூதுவராக மெகஸ்தெனஸ் இருந்தார்.

எழுச்சி[தொகு]

நந்தனனின் அரசவையில் நேர்ந்த மிகப்பெரிய அவமானத்தில் இருந்த அந்தணரான சாணக்கியர் (கௌடில்யர்) நந்த வம்சத்தை வேரறுக்கும் வன்மத்துடன் அவையை விட்டு வெளியேறினார். பாடலிபுத்திரத்திலிருந்து (இன்றைய பாட்னா) தட்சசீலத்துக்குத் திரும்பிக் கொண்டிருந்த போது, காட்டுப்பகுதியில் வேட்டையாடிப் பிழைக்கும் பதின் வயது இளைஞனைச் சந்தித்தார். அவனிடம் தேர்ந்த தளபதிக்குரியத் திறமைகளைக் கண்ட அவர் அவனையே தனது நோக்கத்துக்குப் பயன்படுத்திக் கொள்ளத் தீர்மானித்தார்.அந்த இளைஞன் மௌரியப் பேரரசை நிறுவி இப்போதைய இந்தியாவை விடப் பெரிய நிலப்பரப்பை ஆண்ட சந்திரகுப்த மௌரியர். 2300 வருடங்களுக்கு முந்தைய வரலாறு இது. தெளிவான ஆதாரங்கள் இல்லாமையால் சந்திரகுப்தரின் ஆரம்ப கால வாழ்க்கையில் பல்வேறு குழப்பங்கள் நிலவுகின்றன. நந்த வம்ச (மஹாபத்மானந்தனுக்கும்) சூத்திரப் பெண்மணிக்கும்(முரா) பிறந்தவர் என்பார்கள் .மஹாபத்மனந்தனுக்கு மறுபெயர் சர்வஷ்க்த்ரக அதுவ சமஸ்கிருதம் சர்வசித்தியாக மாறியது.சமஸ்கிருத புத்தகம் முத்ரா ரக்ஷம் சர்வசித்தியாக .மஹாபத்ம நந்தன் தான் சித்தரிக்குறது

கல்வி, அரசியல், போர்த்தந்திரங்கள் போன்ற ஒரு தேர்ந்த அரசனுக்குரிய அனைத்தையும் சாணக்கியரிடமிருந்து கற்றார் சந்திரகுப்தர். சாணக்கியரின் வழிகாட்டுதலின் பேரில், ஒரு நல்ல நாளில் சிறு படையைத் திரட்டி மகத தேசத்தின்(நந்தப் பேரரசு) எல்லைப்புறங்களைக் கைப்பற்றினார். முதல் வெற்றி. அந்த சமயம் நந்தப் பேரரசு மிகவும் வலுவிழந்திருந்தது. முதல் வெற்றி தந்திருந்த உற்சாகத்துடன் பாடலிபுத்திரத்தை நோக்கி முன்னேறினார்.

சந்திரகுப்தரின் வீரத்துக்கு முன்னால் நந்த வம்சம் நிறைய நேரம் நிலைக்கவில்லை. நந்த வம்சம் மண்டியிட்டது. தனது இருபதாம் வயதில் (கி.மு 321) மகத நாட்டின் மன்னராக முடிசூடினார் சந்திரகுப்த மௌரியர். இந்த மௌரியர் என்ற சொல்லுக்கும் இரண்டு காரணங்களைச் சொல்வார்கள். தாய் முராவின் பெயரால் மௌரியா வந்தது என்பது ஒரு கருத்து. மயில் வளர்ப்பவர்களால் சந்திரகுப்தர் வளர்க்கப்பட்டார். அதனால் மயூரா (சமஸ்கிருதத்தில் மயிலின் பெயர்.) என்ற வார்த்தையிலிருந்து வந்தது மௌரியா என்பது ஒரு கருத்து.மௌரியர் வெளியிட்ட நாணயங்களில் மயில் பொறிக்கப்பட்ட நாணயங்களும் உள்ளன.

அரசாங்கம்[தொகு]

பேரரசர் அலெக்சாந்தரின் படையெடுப்பில் வட-மேற்கு இந்தியாவில் இருந்த சில பகுதிகள் அவர் வசம் போனதும் கி.மு 323ல் மரணமடைந்தார் அலெக்சாண்டர். அவர் மரணத்துக்குப் பிறகு அவர் வென்ற பகுதிகளையெல்லாம் அவரது தளபதிகள் ஆண்டு கொண்டிருந்தார்கள். இந்தியாவின் கிரேக்கக் காலனிகளை செலுக்கஸ் நிக்கோடர் என்ற தளபதி ஆண்டு கொண்டிருந்தார். கி.மு 317ல் செலுக்கஸ் மீது படையெடுத்தார் சந்திரகுப்தர். இந்தப் போருக்குப் பிறகு ஏற்பட்ட உடன்படிக்கையின் பேரில் செலுக்கஸ் ஆண்டு கொண்டிருந்த ஆஃப்கானிஸ்தான், பலுசிஸ்தான் வரை சந்திரகுப்தர் வசம் சென்றது. தவிர செலுக்கஸ் நிக்கோத்தரின் மகள் ஹெலெனாவை மணம் முடித்தார். வட இந்தியாவில் வலிமையான அரசை நிறுவிய சந்திரகுப்தரின் பார்வை தென்னிந்தியா பக்கம் திரும்பியது. விந்திய மலைச் சாரல் தாண்டி தக்காண பீடபூமி வரை அவரது ராஜ்ஜியம் விரிவடைந்தது. இந்தியாவில் தமிழகமும், கலிங்கமும், வட கிழக்கின் மலை நாடுகளும் அவர் வசம் இல்லாதிருந்தன. பதிலாக மேற்கில் பெர்சியாவின் எல்லை வரை அவரது ராஜ்ஜியம் பரவியிருந்தது. பெர்சிய இளவரசி (Princess of Persia) ஒருத்தியையும் அவர் மணந்ததாகச் சொல்வார்கள். சந்திரகுப்தரின் இந்த மாபெரும் வெற்றிக்கு அவரது படை முக்கியக் காரணம். ஒன்றரை லட்சம் வீரர்கள், 30,000 குதிரைகள், 9000 யானைகள், 8000 தேர்கள் கொண்டது அவரது படை.

ஆட்சி[தொகு]

சந்திரகுப்தரை மன்னாதி மன்னர் என்று சொல்லக்காரணம் அவர் அடைந்த வெற்றிகளோ அவர் ஆண்ட நிலப்பரப்போ மட்டும் அல்ல! அவரது ஆட்சிமுறையும் கூட அவர் வரலாற்றில் அழியாத இடத்தைப் பெற ஒரு காரணம். இன்றைய ஆட்சி முறையில் இருக்கும் துறைகள் போல, ஆறு முக்கியத் துறைகள் வகுக்கப்பட்டன. வணிகம்/தொழில், உள்கட்டமைப்பு, புள்ளியியல், சுற்றுலா உள்ளிட்ட துறைகள் அவை. நீதியும் காவலும் தழைத்தோங்கியிருந்தன. சாணக்கியரின் வழிகாட்டுதலின் பேரில் முறையான நீதி மன்றங்கள் செயல்பட்டன. தண்டனைகள் கடுமையானவை. திருட்டு, வரி ஏய்ப்புக்குக் கூட மரண தண்டனை விதிக்கப்பட்டது. வர்த்தகத்தில் பல வரைமுறைகள் செய்யப்பட்டன. முறையான அளவைகள், வரிகள் கொண்டுவரப்பட்டன.

சந்திரகுப்தரின் ஆட்சியை இரண்டு புத்தகங்கள் மூலம் அறியலாம். எப்படி ஆண்டார் என்பதை சாணக்கியரின் "அர்த்தசாத்திரம்" மூலமும், அவர் ஆட்சியில் தேசம் எப்படி இருந்தது என்பதை கிரேக்கப் பயணி மெகஸ்தனிசின் "இண்டிகா" மூலமும் அறியலாம்.

சந்திர குப்தர் காலத்து ஆட்சியில் திருட்டு கிடையாது. மக்கள் உண்மையை மதித்து நடந்தனர். சந்திர குப்தர் காலத்தில் பஞ்சாயத்து ஆட்சி முறை சிறப்பாக நடைபெற்றது என்று அவரது கால ஆட்சிச் சிறப்பை இந்தியாவிற்கு வந்த மெகஸ்தனிஸ் குறித்துள்ளார்.[3]

இறுதி[தொகு]

கி.மு 298 வரை அரசாண்ட சந்திரகுப்தர் கடைசி நாட்களில் சமண மதத்தைத் தழுவினார். துறவியாக வாழ்ந்து வந்த சந்திரர் கி.மு 298ல் இன்றைய கர்நாடகா மாநிலத்தில் இருக்கும் சரவணபெலகுளாவில் பத்திரபாகு முனிவர் உட்பட பலருடன் மோன நிலையடைந்தார்.

வழித்தோன்றல்கள்[தொகு]

சந்திரகுப்த மௌரியரின் மகன் பிந்துசாரர், பேரன் அசோகர் என மூன்று தலைமுறை மௌரிய வம்சம் சிறப்பான ஆட்சியை அளித்தது. அசோகர் காலத்தில் தான் அதுவரை கைப்பற்றப்படாமல் இருந்த கலிங்க நாடு (ஒரிஸ்ஸா) வேட்டையாடப்பட்டது. அதன் பிறகு புத்த மதம், இலங்கை, சாலையோர மரம் என அசோகரது வாழ்க்கை நீளும். அசோகருக்குப் பிறகு வந்த மௌரிய அரசர்கள் வலிமையாக இல்லாததால் 50 வருடம் கழித்து (கி.மு 180) மௌரியப் பேரரசு வீழ்ந்தது.

மேற்கோள்கள்[தொகு]

  1. Chandragupta
  2. Chandragupta Maurya
  3. சுவாமி விவேகானந்தர்; விரிவான வாழ்க்கை வரலாறு; பகுதி 1; ஸ்ரீராமகிருஷ்ண மடம்; சென்னை; பக்கம் 435

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சந்திரகுப்த_மௌரியர்&oldid=3494574" இருந்து மீள்விக்கப்பட்டது