அமிதாப புத்தர்
அமிதாப புத்தர் (சமஸ்கிருதம்: अमिताभः, Amitābhaḥ; திபெத்திய மொழி: ஓ-பா-மெ) மஹாயான பௌத்தர்களால் வணங்கப்படும் ஒரு பிரபஞ்ச புத்தர் ஆவார். இவர் வஜ்ரயான பௌத்தத்தின் ஐந்து தியானி புத்தர்களுள் ஒருவர் ஆவார். இவரது வழிபாட்டை பிரதானமாக கொண்ட பௌத்தப் பிரிவு சுகவதி பௌத்தம்(ஆங்கிலம்: Pure Land) என அழைக்கப்படுகிறது.[1]
சொற்பிறப்பியல்
[தொகு]அமித என்றால் அளவில்லாத என்று பொருள், ஆப என்றால் பிரகாசம் என்று பொருள். இந்த புத்தர் அளவில்லாத பிராகசத்தை உடையவர் ஆதலால், இவர் அமிதாபர் என அழைக்கப்பட்டார். இவரது அளவில்லாத ஆயுளையும் கொண்டவர் என்பதால் இவர் அமிதாயுஸ் (ஆயுஸ் - ஆயுள்) என்றும் அழைக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
நம்பிக்கைகள்
[தொகு]சுகவதிவியூக சூத்திரம், அமிதாபர் முன்னொரு காலத்தில் இன்னொரு உலகத்தில் 'தர்மகாரர்' என்ற புத்த பிக்ஷுவாக இருந்தாதக கூறுகிறது. பிறகு, தான் புத்தநிலையை அடைய வேண்டி 48 உறுதிமொழிகளை பூண்டார். அந்த உறுதிமொழிகளின் விளைவாக, புத்ததன்மை அடைந்ததும் தனக்குறிய ஒரு புத்த உலகத்தை(புத்தக்ஷேத்திரத்தை(बुद्धक्षेत्र)) அவர் நிர்மாணித்துக்கொண்டார். அவருடைய முற்பிறவியில் நற்பலன்களால் அந்த உலகத்தில் அனைத்து விதமான நற்குணங்களும் முழுமையாக இருக்கின்றது
அமிதாபருடைய 18வது உறுதிமொழியின் படி, அமிதபாரின் பெயரை உச்சரிக்கும் அனைவரும் அவருடைய உலகத்தில் மறுபிறவி எய்துவர் என உறுதி கூறப்பட்டுள்ளது. மேலும் 19வது உறுதிமொழியில், இறக்கும் தருவாயில் உள்ள ஒருவர் குறைந்தது 10 முறையேனும் அமிதாபர் பெயரை அழைத்தால், அனைத்து புத்தர்களும், போதிசத்துவர்கள் அந்த மனிதர் முன்பு தோன்றுவர் எனவும் உறுதி அளிக்கிறார். இந்த எளிமையே, சுகவதி பௌத்தத்தை மஹாயான பௌத்தத்தின் ஒரு பெரும்பிரிவாக மாற்றியது.
அமிதாப புத்தரை குறித்த நம்பிக்கைகளும் அவருடைய உறுதிமொழிகளும் கீழ்க்கண்ட சூத்திரங்களில் காணப்படுகின்றன
- சுகவதிவியூக சூத்திரம்[2](சுகவதிவியூக சூத்திரம்(விஸ்தார மாத்ருகா)- விரிவான சுகவதிவியூக சூத்திரம்)
- அமிதாப சூத்திரம் (சுகவதிவியூக சூத்திரம்(சங்க்ஷிப்த மாத்ருகா) - சுருக்கமான சுகவதியூக சூத்திரம்)
- அமிதாயுர்தியான சூத்திரம்
அமிதாப புத்தர் தன்னுடைய முயற்சிகளாலும் அவருடைய முன்பிறவி நற்பலன்களாலும் 'சுகவதி' என்ற புத்த உலகத்தை (புத்தக்ஷேத்திரம்) நிர்மாணம் செய்துகொண்டார். சுகவதி (सुखवति) என்றால் 'சுகம் உடைய' என்று பொருள். சுகவதி மேற்கு திசையில் உள்ளது. அமிதாபருடைய உறுதிமொழிகளின் ஆற்றலின் காரணமாக, அவருடைய பெயரை ஜெபிக்கின்ற அனைவருக்கும் சுகவதியில் மறுபிறப்பு நிகழ்வதாக நம்பப்படுகிறது. இங்கு பிறக்கும் அனைவருக்கும், அமிதாபரே தர்மத்தை உபதேசம் செய்கின்றார். அந்த உபதேசத்தினால், அனைவரும் புத்தத்தன்மையையும் போதிசத்துவத்தையும் பெறுகின்றனர். பிறகு, பலவேறு உலகங்களில், புத்தர்களாகவும், போதிசத்துவர்களாகவும் அவதரித்து இன்னும் பல உயிர்களுக்கு உதவி செய்கின்றனர்.
வஜ்ரயான பௌத்தத்தில் அமிதாப புத்தர்
[தொகு]அமிதாபர் திபெத்திய பௌத்தத்தில் வணங்கப்படுகிறார். அவர் ஐந்து தியானி புத்தர்களுள் ஒருவராக கருதப்படுகிறார். வஜ்ரயான யோக தந்திரத்தில் அமிதாபர் மேற்கு திசையுடனும் சம்க்ஞா (संज्ञा) என்ற ஸ்கந்தத்துடன் தொடர்பு படுத்தப்படுகிறார். சம்க்ஞா என்ற வடமொழிச்சொல்லுக்கு 'புலனுணர்வு' (நம்முடைய புலன்களால் அறியப்படும் உணர்வு) என்று பொருள் கொள்ளலாம். இவருடைய உலகம் சுகவதி என அழைக்கப்படுகிறது. திபெத்திய பௌத்தத்தில் வஜ்ரபாணியும் அவலோகிதரரும் இவருடன் சேர்ந்து சித்தரிக்கப்படுகின்றனர். அமிதாபருடைய உலகமான சுகவதியில் மறுபிறப்பு பெற திபெத்திய பௌத்தத்தில் பல பிரார்த்தனைகள் உள்ளன.
இவர் திபெத்தில் ஆயுளை நீட்டிப்பிதற்காக அமிதாயுஸ் ஆக வணங்கப்படுகிறார்.
ஷிங்கோன் பௌத்தத்தில் வணங்கப்படும் 13 புத்தர்களில் இவரும் ஒருவர். இவர் கர்பகோசதாதுவில் உள்ள புத்தர்களில் ஒருவராக ஷிங்கோன் பௌத்தத்தினரால் கருதப்படுகிறார்.
மந்திரங்கள்
[தொகு]வஜ்ரயான பௌத்ததில் அமிதாபரின் மந்திரங்கள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை. திபத்திய பௌத்தத்தில் கீழ்க்கண்ட மந்திரம் வழங்கப்படுகிறது
ஓம் அமிதாப ஹ்ரீ: ॐ अमिताभ ह्री:
ஷிங்கோன் பௌத்தத்தில் இன்னொரு மந்திரம் பயன்படுத்தப்படுகிறது.
ஓம் அம்ருத-தேஜ ஹர ஹூம் ॐ अमृत-तेज हर हूँ
இத்துடன், பல பௌத்தப்பிரிவுகள் இவரது பெயரை ஜெபிக்கும் போது நமோ அமிதாப புத்தா(ॐ नमो अमितभ बुद्ध) என்ற சொல்லை ஜெபிக்கின்றனர். இந்த ஜெபத்தை சீனத்தில் 'நியான்ஃபோ' எனவும் ஜப்பானில் 'நெம்புட்ஸு' எனவும் குறிப்பிடுவர். இந்த ஜெபம் சுகவதி பௌத்தத்தின் மிகப்பெரும் முக்கியத்துவம் வாய்ந்தது.
பல்வேறு மொழிகளில் அமிதாப புத்தர்
[தொகு]அமிதாப(अमिताभ) என்ற சொல் 'அமித'(अमित) மற்றும் 'ஆபா'(आभा) என்ற இரண்டு சமஸ்கிருத சொற்களின் கூட்டுச்சொல் ஆகும். 'அமித' என்றால் முடிவற்ற என்று பொருள், 'ஆபா' என்றால் 'பிரகாசம்','ஒளி' என்று பொருள் கொள்ளலாம். எனவே 'அமிதாப' என்ற சொல்லுக்கு 'முடிவற்ற பிரகாசத்தை உடையவர்' என்று பொருள் கொள்வர்.
இவரை வடமொழியில் அமிதாயுஸ்(अमितायुस्) எனவௌம் அழைப்பர். இதற்கு 'முடிவற்ற ஆயுளை(ஆயுஸ்-ஆயுள்) உடையவர் என்று பொருள்.
சீன மொழியில் அமிதாபரை 'அமிடோஃபோ' என அழைப்பர். 'அமிடோ' என்பது 'அமிதாப' என்ற சொல்லின் சீன வடிவம். 'ஃபோ' என்றால் புத்தர் என்று பொருள். மேலும் அமிதாப மற்றும் அமிதாயுஸ் என்ற பெயர்களின் மொழிபெயர்ப்பாக இவரை 'வூலிஆங்குவாங்' எனவும் 'வூலிஆங்க்_ஷௌ' எனவும் அழைப்பர்.
வேறு மொழிகளில் அமிதாப புத்தர் என்ற சொல் கீழ்க்கண்டவாறு உச்சரிக்கப்படுகிறது.
- வியாட்னாமிய மொழி: அ-டி-டா-பட்
- கொரிய மொழி: அமிடா புல்
- ஜப்பாய மொழி: அமிடா புட்ஸு.
ஜபபானியத்தில் இவரை 'அமிடா ந்யோராய்' எனவும் அழைப்பர். இதற்கு அமிதாப ததாகதர் என்று பொருள்
சித்தரிப்பு
[தொகு]அமிதாபரையும் கௌதம புத்தரையும் வேறுபடுத்துதல் சிறிது கடினம். ஏனெனில் இருவருமே, அனைத்து புத்த கூறுகள் உடையவர்களாகவே சித்தரிக்கப்படுகின்றனர். ஆனால், இருவரும் தாங்கள் காட்டும் முத்திரைகளில் வேறுபடுகின்றனர். அமிதாபர் அமர்ந்த நிலையில் தியான முத்திரையுடன் திகழ்கிறார். சாக்கியமுனி புத்தர் பெரும்பாலும் பூமிஸ்பரிச முத்திரையை காண்பிக்கின்றார்.
அமிதாபர் பெரும்பாலும் தனியாக சித்தரிக்கப்படாமல், தன்னுடைய வலது புறத்தில் அவலோகிதேஷ்வர போதிசத்துவர், மற்றும் இடது புறத்தில் மஹாஸ்தாமப்ராப்த போதிசத்துவருடனும் சித்தரிக்கப்படுகிறார். இவ்விருவரும், சுகவதியில் அமிதாப புத்தருக்கு சேவை புரிவதாக நம்பப்படுகிறது.
திபெத்திய பௌத்தத்தில், அமிதாபருடைய நிறம் சிவப்பு. அவருடைய திசை மேற்கு. ஆகையால், இவரை அஸ்தமன சூரியனாக கருதுவது உண்டு. மேலும் இவர் இயற்கையில் பெரும் ஆற்றலாக கருதப்படுகிறார். எனவே தான் ஐந்து தியானி புத்தர்களுள் இவர் மிகவும் புகழ் பெற்று திகழ்கிறார்.
இவருடைய சின்னம் தாமரை.
மேற்கோள்கள்
[தொகு]இவற்றையும் பார்க்கவும்
[தொகு]வெளி இணைப்புகள்
[தொகு]