உள்ளடக்கத்துக்குச் செல்

ராச்கிர் மலை

ஆள்கூறுகள்: 25°01′N 85°28′E / 25.017°N 85.467°E / 25.017; 85.467
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜராசந்தின் இருப்பிடத்திலிருந்து ராச்கிர் மலையின் தோற்றம்

ராச்கிர் மலை (Rajgir hills) இந்தியாவின் பீகார் மாநிலத்திலுள்ள நாலந்தா மாவட்டம், ராச்கிர் நகரத்திற்கு அருகில் அமைந்துள்ளது. இம்மலை ராச்காரா மலைகள் என்ற பெயராலும் அழைக்கப்படுகிறது. ரத்னகிரி, விபலாச்சல், வைபகிரி, சோங்கிரி மற்றும் உதயகிரி முதலான ஐந்து மலைகளால் ராச்கீர் மலை சூழப்பட்டுள்ளது. இம்மலை பௌத்தம், இந்து மற்றும் சமண சமயத்தினரின் முக்கியமான புனிதத் தலமாகும்.[1]. சுமார் 65 கி.மீ நீளமுள்ள இரண்டு இணையான முகடுகள் ராச்கிர் மலையில் உள்ளன. மலையின் மிக உயர்ந்த பகுதி 388 மீட்டர் உயரம் கொண்டதாகும். ஆனால் பெரும்பாலும் மலை சராசரியாக 300 மீட்டர் உயரம் கொண்டதாகவே உள்ளது. இவ்விரண்டு முகடுகளுக்கும் இடையில் வரலாற்று சிறப்புமிக்க இடங்கள் பல அமையப்பெற்றுள்ளன. மகாபாரதம், கௌதம புத்தர், மகாவீரர்,மௌரியர் மற்றும் குப்தர்கள் காலத்து வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் இவற்றில் உள்ளடங்கும். பௌத்தம் மற்றும் சமண மதங்களைத் தோற்றுவித்த கௌதம புத்தர் மற்றும் மகாவீரர் ஆகியோருடன் இம்மலை தொடர்புடையதாக உள்ளது. எனவே இது இந்துக்கள் மற்றும் சமண சமயங்களின் புனிதத்தலமாக கருதப்படுகிறது. ராச்கிர் மலைகளைச் சுற்றி பல சுற்றுலா இடங்கள் அமையப்பெற்றுள்ளன.[2].


கழுகு மலை

இப்பகுதி இரண்டு இணையான மலை முகடுகளால் பாதுகாக்கப்படுவதால் கி.மு 5 ஆம் நூற்றாண்டில் அசாதசத்ரு ராச்கிர் நகரத்தை கிழக்கு இந்திய மகதப் பேரரசின் தலைநகராக மாற்றி அதற்கு ராசுகிரீகா எனப் பெயரிட்டார். மன்னரான தனது தந்தை பிம்பிசார்ரை சிறையில் அடைத்து அசாதசத்ரு அரியணையை அபகரித்துக் கொண்டவர். புத்தரால் புத்தமதத்திற்கு மாற்றப்பட்ட பிந்துசாரர் தனது சிறைச்சாலையை இந்த சிறிய குன்றின் அருகே கட்ட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். ஏனென்றால் புத்தர் காலையிலும் மாலையிலும் இம்மலையின் வழியே கடந்து செல்வதை தான் காணவேண்டும் என்று அவர் ஆசைப்பட்டார்.

ராச்கிர் மலையில் சாந்தி சிதூபா (அமைதி பகோடா)

நவீன காலத்தில் புத்தர் சன்னதியைப் பார்வையிட வருகைதரும் பார்வையாளர்கள் மலையின் உச்சியை அடைவதற்கு கயிற்று வழியைப் பின்பற்றுகிறார்கள். புத்தர் தனது தாமரை சூத்திரத்தைப் பிரசங்கம் செய்த்தாக நம்பப்படும் இடத்திற்கு அருகில் அமைதி பகோடா என்ற புத்தர் சன்னதி அமைந்துள்ளது. வம்சாவழியாக பார்வையாளர்கள் கழுகு சிகரத்தை (கிரித்ரா-குட்டா) பார்வையிட்டு வருகிறார்கள். புத்தர் பிரசங்கத்திற்குப் பிறகு இவ்விடத்தில் ஓய்வெடுத்ததாகக் நம்பப்படுகிறது.[3].

ராஜ்கிர் மலையில் புனித புத்தமத கொடி

அமைதி பகோடாவிலிருந்து சுமார் நான்கு கிலோமீட்டர் தொலைவில் பிரம்ம குண்டம் அமைந்துள்ளது.[4]. இந்தியா முழுவதும் ஒரே பெயரில் உள்ள பல்வேறு புனித தலங்களில் இதுவும் ஒன்றாகும். ஏழு வெவ்வேறு நீரூற்றுகளில் இருந்து வந்து ஒன்றாகும் சப்தரிசி அல்லது ஏழு முனிவர்கள் எனப்படும் சூடான நீருற்று உள்ளது. பிரம்மா குண்டம் குணப்படுத்தும் சக்தியுடன் தொடர்புடையதாக கருதப்படுகிறது. இந்த வெப்ப நீரூற்றுகளில் உள்ள கந்தகம் இதற்குக் காரணமாக இருக்கலாம் என கருதப்படுகிறது. மேலும் தோல் நோய்களை சரிசெய்யும் பிரபலமான சூர்யா குண்டம் போன்ற சூடான நீரூற்றும் இங்கு காணப்படுகிறது.

இங்கு மகதநாட்டின் மன்னராக இருந்த ஜராசந்தன் இருப்பிடமும் உள்ளது. இங்கு சமணம் மற்றும் பௌத்தர்களின் நவுலுகா மந்திர், லால் மந்திர், வீராயதன் போன்ற கோயில்கள் பலவும் இங்கு அமைந்துள்ளன.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Rajgir Hills". Encyclopædia Britannica. பார்க்கப்பட்ட நாள் 2014-09-10.
  2. "Rajgir Tourist Places to Visit, Rajgir Best Tourist Spots and Sightseeing" (in en-US). Travel News India. 2016-08-22. http://travelnewsindia.com/best-tourist-places-visit-rajgir/. 
  3. "Rajgir". Bihar State Tourism IDevelopment Corporation. Archived from the original on 2014-09-01. பார்க்கப்பட்ட நாள் 2014-09-10.
  4. "Google Maps". Google Maps. பார்க்கப்பட்ட நாள் 2016-11-16.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ராச்கிர்_மலை&oldid=3707170" இலிருந்து மீள்விக்கப்பட்டது