தலாய் லாமா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தலாய் லாமா
1st Dalai Lama.jpg
கெண்டுன் ட்ரப் (முதல் தலாய் லாமா)
ஆட்சி1391–1474
திபெத்தியம்ཏཱ་ལའི་བླ་མ་
வைலி ஒலிப்பெயர்ப்புtaa la'i bla ma
உச்சரிப்புதலாய் லாமா
மரபுதலாய் லாமா / தக்லா

தலாய் லாமா (Dalai Lama) என்பது கெலுக் (கெலுக்பா) அல்லது மஞ்சள் தொப்பி என்ற திபெத்திய புத்த மதப்பிரிவின் தலைமை லாமாவின் பதவியைக் குறிக்கும் பெயராகும். இது தலாய் (கடல்) என்ற மங்கோலிய சொல்லும், லாமா (திபெத்தியம்: བླ་མ, bla-ma, ஆசான், குரு) என்ற திபெத்திய சொல்லும் இணைந்த கூட்டாகும்[1]. திபெத்திய மொழியில் "லாமா" என்னும் சொல் "குரு" என்னும் வடமொழிச் சொல்லுக்கு இணையானது என்று இன்றைய தலாய் லாமா விளக்கம் தருகிறார்.

மத நம்பிக்கையின் படி தலாய் லாமா என்பவர் அவலோகிதரின் அவதார வரிசையில் வருபவர் எனக் கருதப்படுகிறார். கெலுக் அல்லது மஞ்சள் தொப்பி பிரிவின் தலைவர் பதவியின் பெயர் கேண்டன் டிரிபா ஆகும். பலரும் தலாய் லாமா இப்பிரிவின் தலைவர் என கருதுவதுண்டு. தலைவர் பதவியில் ஒருவர் 7 ஆண்டுகள் மட்டுமே இருக்கமுடியும் இத்தலைவரை நியமிப்பதில் தலாய் லாமாவிற்கு பெரும்பங்கு உண்டு. தலாய் லாமாக்கள் ஆன்மீகத் தலைவர்கள் ஆவர். ஒரு தலாய் லாமா இறந்ததும், திபெத்தில் அதே நிமிடம் பிறந்த குழந்தை அடுத்த தலாய் லாமாவாகத் தேர்ந்தெடுக்கப்படுவது வழக்கம். அதாவது, இறந்த தலாய் லாமா மறு பிறப்பு எடுப்பதாக திபெத்தியர்கள் நம்பிக்கை கொண்டிருந்தார்கள்.

5-வது தலாய் லாமா திபெத் மீது அரசியல் அதிகாரத்தை செலுத்தினார். அதிலிருந்து தலாய் லாமாக்கள் ஆன்மீகம் மட்டுமல்லாமல் அரசியலிலும் செல்வாக்கு செலுத்தத் தொடங்கினார்கள். 17ம் நூற்றாண்டிலிருந்து 1959 வரை தலாய் லாமாக்கள் பலமுறை திபெத்திய அரசாங்கத்தை வழிநடத்தியுள்ளார்கள். 14-வது தலாய் லாமா மார்ச் 14, 2011 வரை மத்திய திபெத்திய நிருவாகத்தின் (நாட்டுக்கு வெளியே அமைந்த திபெத் அரசு) தலைவராக இருந்தார். மார்ச் 14, 2011ல் அப்பொறுப்பில் இருந்து விடைபெற்றுக்கொண்டார். வருங்காலத்தில் தலாய் லாமா என்ற அமைப்பு நீக்கப்படலாம் என்றும் அடுத்த தலாய் லாமா திபெத்துக்கு வெளியே தேர்த்தெடுக்கப்படுவார், அவர் பெண்ணாகக் கூட இருக்கலாம் என்றும் அவர் கருத்துத் தெரிவித்துள்ளார் [2]. இதை சீன அரசு உடனடியாக மறுத்து அடுத்த தலாய் லாமா சீன அரசாலேயே தேர்ந்தெடுக்கப்படுவார் என அறிவித்துள்ளது.[3][4]

வரலாறு[தொகு]

குப்ளாய் கான், 1912

மத்திய ஆசியாவில் உள்ள மேட்டுச் சமவெளியில் அமைந்த ஒரு நிலம் திபெத் ஆகும். திபெத்தின் பல பகுதிகளை ஏழாம் நூற்றாண்டில் 'சாங்ட்சன் கேம்போ' (Songtsän Gampo) எனும் அரசர் ஒருங்கிணைத்தார், இவரே புத்த மதத்தை திபெத்திற்கு முதலில் அறிமுகப்படுத்தியவர் என கருதப்படுகிறது. 1600 இன் தொடக்க காலத்தில் இருந்து 'தலாய் லாமா' என்று பொதுவாக அழைக்கப்படும் ஆன்மீக தலைவர்கள், திபெத்திய மைய நிருவாகத்தின் தலைமையை பெயரளவில் ஏற்றிருந்தார்கள். இவர்கள், அவலோகிதர் என்ற போதிசத்துவரின் வெளிப்பாடுகளாக நம்பப்படுகிறார்கள்.

17 ம் நூற்றாண்டில் திபெத் பிளவுபட்டிருந்தது, மேலும் மஞ்சூரியாவிருந்து பின்வாங்கிய சக்கர் பகுதியை ஆண்ட லிக்டென் கான் (Ligten khan) என்ற மங்கோலிய தலைவர் கெலுக் புத்த மதபிரிவை அழித்துவிடுவதாக கூறி திபெத் மேல் படையெடுத்து வந்தார். அதை முறியடிக்கவும் திபெத்தை ஒன்றிணைக்கவும் 5-ம் தலாய் லாமா மங்கோலிய இனத் தலைவர் குஷ்ரி கானை கேட்டுக்கொண்டார். அதையேற்று குஷ்ரி கான், லிக்டென் கான் மற்றும் கெலாங் பிரிவின் எதிரிகளை அழித்து திபெத்தை ஒன்றிணைத்தார். இவர் கெலுக் பிரிவின் பாதுகாவலர் என்ற பட்டத்தை பெற்று 5-ம் தலாய் லாமா ஆன்மீகத்திலும் அரசியலிலும் செல்வாக்கு செலுத்த உதவிபுரிந்தார்.

17 ம் நூற்றாண்டிலிருந்து 1959 வரை, தலாய் லாமாவும் அவரது பிரதிநிதிகளும் வழிவழியாக தலைநகரான லாசாவை இருப்பிடமாக கொண்டு திபெத்தின் பெரும்பகுதியின் அரசியல் அதிகாரம் பெற்றவராக, மதம் மற்றும் நிருவாகப் பணி செய்துவந்தார்கள்.

திபெத்தில் புத்தமதம்[தொகு]

கிறித்தவ காலகட்டத்திற்கு முன்பே திபெத் அரச வமிசத்தினரின் தனி ஆட்சிக்குட்பட்ட நாடாகவே இருந்து வந்தது. இந்தியாவின் மூன்றில் ஒரு பங்கு பரப்பளவைக் கொண்ட திபெத்தியப் மேட்டு நிலப்பகுதியில் கி.பி. ஏழாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் "லோதான்" புத்த மதம் பரவியது. அதற்கு முன்பாக பான்(இலை) எனும் இயற்கை வழிபாடே திபெத்தில் பெரும்பான்மையாகப் பின்பற்றப்பட்டு வந்தது.[5]

கிபி பதினான்காம் நூற்றாண்டில் 'இட்ஜோங்கபா' என்ற திபெத்திய புத்த குரு தோன்றினார். அப்பொழுது வழக்கிலிருந்த வெவ்வேறு புத்தமத பிரிவுகளின் சூத்திரங்களையும் யோக முறைகளையும் ஒருங்கிணைத்து ஒரு தனிப்பெரும் புத்தமதப் பிரிவை இட்ஜோங்க்பா தோற்றுவித்தார். இப்பிரிவினர் 'கெலுக்' அல்லது 'கெலுக்பா' என்று அழைக்கப்பட்டனர். இவர்கள் தமது மதச் சின்னமாக மஞ்சள் தொப்பி அணிய பணிக்கப்பட்ட காரணத்தால் 'மஞ்சள் சமயத்துறவிகள்' என அழைக்கப்படலாயினர். வெகுவிரைவில் ஏராளமான பிற புத்த லாமாக்களும் பொதுமக்களும் இந்தப் புதிய புத்தமதப் பிரிவிற்கு ஆதரவு அளிக்கத் துவங்கினர்.

தலாய் லாமா பெயர் தோற்றம்[தொகு]

1578ல் மங்கோலி அரசர் அல்டான் கான் தலாய் லாமா என்ற பட்டத்தை சோனம் கியட்சோவுக்கு (3வது தலாய் லாமா) வழங்கினார். இந்தப்பட்டம் இவருக்கு முன் இருந்த இருவருக்கும் 1578ல் இருந்து குறிக்கப்பட்டது. 14 வது தலாய் லாமா இந்த பட்டத்தை அல்டான் கான் வழங்கவேண்டும் என்று நினைக்கவில்லை இது சோனம் கியட்சோ என்பதன் மங்கோலிய மொழிபெயர்ப்பாகும் என்கிறார்.

2வது தலாய் லாமாவிலிருந்து அனைத்து தலாய் லாமாக்களும் கியட்சோ என்ற பெயரை தாங்கி வருகிறார்கள் இதன் பொருள் பெருங்கடல் என்பதாகும். முதல் பெயர் மட்டுமே மாறி வரும். தலாய் என்பதற்கு திபெத்திய மொழியில் எந்த பொருளும் இல்லை, இது பட்டத்திற்கான பெயராக நிலைத்து விட்டது என்று 14வது தலாய் லாமா கூறுகிறார்.[6]

சோனம் கியட்சோவுக்கு தலாய் லாமா என்ற பட்டம் முதலில் கிடைத்தாலும் இவர் தலாய் லாமா பரம்பரையில் 3வது ஆவார். இவருக்கு முன் இருந்த இருவருக்கும் மரணத்திற்கு பின் அப்பட்டம் அளிக்கப்பட்டது.

முதல் தலாய் லாமா[தொகு]

குஷி/குஷ்ரி கான் (1582–1655)

பத்மா டோர்ஜே என்ற இயற்பெயருடைய முதல் தலாய் லாமா 7 வயது வரை மேய்ப்பானாக வளர்ந்தார். 1405ல் நார்தங் புத்த மடத்தில் சேர்ந்து அம்மடத்தின் தலைமை புத்த ஆசானிடம் முன்னிலையில் தன் முதல் உறுதிமொழியை செய்தார். 20 வயதாகும் போது புத்த மத கோட்பாடுகளை நன்கு கற்றுணர்ந்ததால் அவருக்கு "கெடுங் ட்ருப்" (கெண்டுன் ட்ரப்) என்ற பெயர் சூட்டப்பட்டு முழு புத்த துறவி ஆனார்[7]. அவ்வயதில் சிறந்த ஆசானான இட்ஜோங்க்பாவிடம் மாணவனாக சேர்ந்தார் ,[8]. இவர் இட்ஜோங்க்பாவின் அண்ணன் மகன் என்றும் சிலர் சொல்லுகிறார்கள் [9]. இவருக்கு அரசியல் அதிகாரம் எதுவும் கிடையாது. அதை சிவப்பு தொப்பி புத்த மத பிரிவு, மங்கோலிய கான்களிடம் இருந்தது.

இவர் தாசிகும்போ (Tashilhunpo) என்ற மடத்தை நிறுவினார். இறக்கும் வரை இதுவே இவரின் வசிப்பிடமாகவும் இருந்தது. இது தற்போது பஞ்சென் லாமாக்களின் இருப்பிடமாக உள்ளது.

பஞ்சென் லாமா[தொகு]

தலாய் லாமா அரசனுக்கு இணையாக எல்லா வலிமையும் வாய்ந்தவர் என்றபோது தனது மத சடங்குகளில் இடையூறு வரக்கூடாது என்பதற்காக ஐந்தாம் தலாய் லாமா பஞ்சென் லாமா என்ற இணைத்தலைவரை நியமித்து அரசை வழிநடத்தும் பொறுப்பை அவருக்கு தந்தார். திபெத்திய மத வழக்கப்படி, தலாய் லாமாவாக இருப்பவர்கள், பஞ்சன் லாமா மறைந்ததும் அடுத்த பஞ்சன் லாமாவை சிறு வயதிலேயே தேர்ந்தெடுத்து அவருக்கு 'பஞ்சன் லாமா' என்று பட்டம் சூட்டி விடுவார்கள். தலாய் லாமாவின் மறைவுக்குப் பின்னர் இந்த பஞ்சன் லாமாதான் அடுத்த தலாய் லாமாவை தேர்ந்தெடுப்பதில் பெரும் பங்குவகிப்பார்.

அந்த வகையில், 14-ம் தலாய் லாமா அடுத்த பஞ்சன் லாமாவாக ஒரு சிறுவனைத் தேர்வு செய்தார். இதையடுத்து அதற்குப் போட்டியாக கடந்த 1995ம் ஆண்டு ஒரு கியால்ஸ்டன் நோர்பு என்ற சிறுவனை பஞ்சன் லாமாவாக தேர்ந்தெடுத்தது சீன அரசு. தற்போது இவருக்கு 20 வயதாகிறது. தலாய் லாமா தேர்ந்தெடுத்த பஞ்சன் லாமா சிறுவனை அதற்குப் பிறகு யாருமே பார்க்கவில்லை.[10] இந்த நிலையில் சீன அரசு தேர்ந்தெடுத்த பஞ்சென் லாமாதான் ஒரே வாரிசாக இருக்கிறார். எனவே அடுத்த தலாய் லாமா தேர்வின்போது பெரும் சிக்கல் ஏற்படும் எனக் கருதப்படுகிறது. இந்த நிலையில் தலாய் லாமாவுக்கு மேலும் சிக்கலை ஏற்படுத்தும் வகையிலும், அவரது செல்வாக்கைக் குறைக்கும் வகையிலும் பஞ்சன் லாமா நோர்புவுக்கு சீன அரசு புதிய பதவி ஒன்றை அளித்துள்ளது.

திபெத் பகுதியில் சீனாவின் ஆக்ரமிப்பு[தொகு]

ஐந்தாம் தலாய் லாமா காலத்திலிருந்து திபெத்தில் தலாய் லாமா அரசியல் அதிகாரம் பெற்றவராக விளங்கினார். 1717ல் ஜுங்கர் (Dzungar) என்பவர்கள் திபெத்தை ஆக்ரமித்தார்கள். அப்போது மக்கள் ஆதரவு இல்லாமல் தலாய் லாமாவாக இருந்த நகுவாங் யெசுகே கயட்சோவை பதவியில் இருந்து நீக்கி சீன அரசின் ஆதரவோடு திபெத்தை ஆண்ட லாசங் கானை கொன்றார்கள். இவர்கள் லாசாவின் புனித இடங்களில் உள்ள பொருட்களை சூரையாடி கொள்ளையடித்ததால் மக்களின் ஆதரவை இழந்தனர். இதையடுத்து சிங் வம்ச மன்னன் ஆங்சி படைகளை அனுப்பினார் அது தோற்கடிக்கப்பட்டதால் பெரிய படையை அனுப்பி 1720ல் ஜுங்கர்களை தோற்கடித்தார். இவர்கள் ஏழாம் தலாய் லாமா பதவியேற்க உதவினார்கள். திபெத்தை தனது ஆட்சிக்குட்பட்ட காப்புரிமை பெற்ற நாடாக ஆங்சி அறிவித்தார். திபெத்தில் தனது தூதர்கள் இருவரை அவர் நியமித்தார். சிங் வம்சம் 1911 ல் முடியும் வரை இது தொடர்ந்தது.

திபெத் குடியரசு அறிவிப்பு[தொகு]

1910 ஆம் ஆண்டு சீன புரட்சியின் காரணமாக சீனப்பேரரசரின் அரசு கவிழ்ந்தது. திபெத்தை விட்டு சீனப் பேரரசரின் படைகள் அனைத்தும் வெளியேறின. 1912 ஆம் ஆண்டு சான் யாட் சன் தலைமையில் சீன கம்யுனிஸ்ட் பிரகடனமானது. அதே ஆண்டில் ஜூன் மாதம் தலாய் லாமா இந்தியாவிலிருந்து திபெத் தலைநகர் லாஸாவிற்குத் திரும்பினார். அவருடன் "சர் சார்லஸ் பெல்" என்ற ஆங்கிலேய தளபதியும் சிறுபடையுடன் திபெத் சென்றார். திபெத் சென்ற முதல் நாளே தலாய் லாமா திபெத்தை 'பூரண சுதந்திரம் பெற்ற குடியரசு நாடாக' அறிவித்தார். புதிய சீன குடியரசு அமைக்கும் பணியில் கவனம் செலுத்திய சான் யாட் சென் இந்த பிரகடனத்தில் கவனம் செலுத்தவில்லை.

ஆங்கிலப் பிரதிநிதி[தொகு]

1914 ஆம் ஆண்டு பிரித்தானிய அரசால் சீனா, இந்தியா (பிரித்தானிய இந்தியா), திபெத் மூன்றும் சேர்ந்து திபெத்தின் எதிர்காலத்தை நிர்மாணிப்பது தீர்மானம் கொண்டு வரப்பட்டது[11] இந்த முடிவு திபெத்தின் நிலையில் பெருங்குழப்பத்தை விளைவித்தது. இதைப் பயன்படுத்திக் கொண்ட சீனா, சீன எல்லையை ஒட்டிய திபெத்தியப் பகுதியை சீனாவின் அதிகாரத்திற்குட்பட்ட பகுதியாக அறிவித்தது. அங்கு பாதுகாப்பு மற்றும் பல அதிகாரங்களை தன்னிடம் வைத்து கொண்டு வெறும் அரசாட்சிப் பொறுப்பை மட்டும் தலாய் லாமாவிற்கு வழங்கியது.

இந்தியாவின் பிரதிநிதி என்ற பெயரில் திபெத்தின் மற்ற பகுதிகளை ஆங்கிலேயர் தமது அதிகாரத்திற்கு உட்படுத்தினர். ஆங்கிலேயரின் இராணுவ வலிமைக்கு அஞ்சிய சீனா அப்போழுது ஒன்றும் சொல்லாமல் அமைதிகாத்தது. அதே நேரத்தில் திபெத்தில் ஆங்கிலேயரின் அதிகாரத்தை ஏற்கவுமில்லை. 1947-ல் இந்தியா சுதந்திரம் பெற்றது. ஆனாலும் ஆங்கில அரசின் பதிலாள் 1950 வரை திபெத்தில் தங்கி இருந்து இங்கிலாந்து இராணியின் அதிகாரத்தை அவரது பிரதிநிதியாக நிலை நாட்டி வந்தார். இந்தியாவின் சர்பாக இந்தியாவை சேர்ந்த எந்த ஒரு நபரும் திபெத்தில் நியமிக்கப்படவில்லை.

சீனாவும் தற்போதைய தலாய் லாமாவும்[தொகு]

இதனிடையே தலாய் லாமா இறந்தார். கிழக்கு திபெத் ஒன்றில் சாதரண விவசாய குடும்பத்தில் பிறந்த தொந்துபிப் லாமோ (லாமோ தொந்துப்) ஜுலை 6-1935 ல் பதினான்காம் தலாய் லாமாவாக டென்சின் கியாட்சோ என்ற பெயரில் சமயப் பெரியோர்களால் நியமிக்கபட்டார். தனது நான்காம் வயதில் பிரமாண்டமான பொட்லா அரண்மனையில் தலாய் லாமாவாக நியமிக்க பட்ட இவர், தனது பதினான்காம் வயதிலேயே அனைத்துத் துறைகளிலிலும் சிறந்து விளங்கும் திபெத்தின் தலைசிறந்த தலாய் லாமாவாக உயர்ந்தார். இவர் திபெத் மக்களின் ஆன்மீக அரசியல் தலைவர் ஆவார். இவர் உலக அரங்கில் ஒரு முக்கிய தலைவராகவும் பார்க்கப்படுகிறார்.

இந்நிலையில் சீன கம்யூனிச தலைவர் மா சே துங் தலைமையிலான கம்யூனிச ஆட்சி மலர்ந்தது. சங் கை செக் தோல்வியுற்று தனது படைகளுடன் பார்மோசா தீவில் தனது ஆட்சியைத் தொடர்ந்து வந்தார். 1950களில் சீன அரசு தலாய் லாமாவை சீன மக்கள் குடியரசின் தேசிய மக்கள் காங்கிரஸ் அமைப்பின் துணைத் தலைவராக்கியது.[12] தலாய் லாமாவை திபெத் மக்களின் மரபு வழித் தலைவராக திபெத் மக்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டாலும், திபெத்தை தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் சீனா இதை ஏற்றுக் கொள்ள வில்லை. 1958 ஆண்டு திபெத் மீது சீன அரசு மேற்கொண்ட ஆக்கிரமிப்பு நடவடிக்கையைத் தொடர்ந்து இந்தியாவின் தர்மசாலாவிற்கு புகலிடம் வந்து வாழ்ந்து வருகிறார்.[13]

திபெத்-சீனப் போர்[தொகு]

புதிய சீன அரசாங்கம் சீனாவின் எல்லைகளை விரிவுபடுத்தத் தொடங்கியபோது திபெத்திற்கு பேரிடி காத்திருந்தது. சீனா கண்காணிக்க வேண்டும் என்று ஆங்கிலேயர் பொறுப்பு ஒப்படைத்திருந்த பகுதிகளை சீனாவிற்கு உட்பட்ட பகுதி என சீனா பகிரங்கமாக அறிவித்தது. 1950 அக்டோபர் மாதம் சீனப்படைகள் திபெத்திற்குள் புகுந்தன. திபெத்தின் தலைநகர் லாஸாவிற்கு 500 கிலோ மீட்டர் தொலைவில் சீனா தனது படைகளை நிறுத்தியது. அப்போழுது 16 வயது நிரம்பிய தலாய் லாமா சீனப்படையை எதிர்க்குமாறு தனது படைகளுக்கு ஆணையிட, திபெத்தியர்களும் ஆவேசத்துடன் போரிட்டனர். ஆனால் 80 ஆயிரத்திற்கு மேற்பட்ட சீனப் படையுடன் 10,000திற்கும் குறைவான நவீன ஆயுதங்கள் இல்லாத காரணத்தால் திபெத்தியர்களால் தாக்கு பிடிக்க முடியவில்லை.

இதன் காரணமாக திபெத் அரசு சீன அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த முற்பட்டது. எனவே சீன அரசின் மேலாதிக்கம் திபேத்தின் மீது இருக்கவேண்டும் என்ற ஒப்பந்தம் சீனாவின் பயமுறுத்துதல் பேரில் கையொப்பமானது. அந்த சரத்தின் படி, சீனா திபெத்தின் மத விவகாரங்களிலோ உள்நாட்டு ஆட்சியிலோ தலையிடாது. ஆனால் திபெத்தின் உள் நாட்டு விவகாரங்களிலும் முழுமையான குறுக்கீடுகளுடனும் சீனப் படைகள் திபெத்தில் முழுமையாக இறங்கியது. இதை அடுத்து திபெத்தில் உள்நாட்டு கலவரம் ஏற்பட்டது. ஆங்காகே சீனத் துருப்புகளுக்கு எதிராக மக்கள் போராட்டத்தைத் தீவிரப்படுத்தினர். கலவரத்தை நிறுத்த ஆணையிடுமாறு சீனா தலாய் லாமாவிற்கு உத்தரவிட்டது. ஆனால் தலாய் லாமா 'இது சுதந்திர போராட்டம்' என கூறி சீனா "திபெத்தை விட்டு வெளியேறுங்கள், இல்லையென்றால் வெளியேற்றப் படுவீர்கள்" என அறகூவல் விடுத்தார். இதனால் சீனாவின் அடக்கு முறைக்கெதிரான போராட்டம் மேலும் தீவிரமடைந்தது.

இந்தியாவில் புகலிடம்[தொகு]

திபெத்தில் ஆங்காங்கே சீன துருப்புகளுக்கெதிரான கொரில்லா தாக்குதல் கடுமையாக்கபட்டது. இந்நிலையில் சீன அரசு தலாய் லாமாவை விருந்திற்கு அழைத்து அவரைச் சிறைபிடிக்க முடிவெடுத்தது. தலைநகர் லாஸாவில் முகாமிட்டிருந்த சீன இராணுவம் அரண்மனையைக் கைபற்றி லாமாவை பிடிக்கும் யோசனையுடன் 1959 ஆம் ஆண்டு மார்ச் 17 ஆம் நாள் அரண்மனைமீது கடுமையான பீரங்கி தாக்குதல் நடத்தியது.

திபெத்திய உயரதிகாரிகள் அறிவுரையின்படி தலாய் லாமாவும் அன்று இரவு சாதாரண அரண்மனை சிப்பாய் போல் வேடமிட்டு அரண்மனையில் இரகசிய வழியாக வெளியேறி இரவோடு இரவாக திபெத்தின் கிரிசு ஆற்றைக் கடந்தார். ஆற்றின் மறுகரையில் அவருக்காக காத்திருந்த சிறு படையின் உதவியோடு பல நூறு கி.மீ. நடந்து 31 நாட்கள் பயணம் செய்து 1959 ஆம் நாள் ஏப்ரல் 18 ஆம் நாள் இந்தியா வந்து சேர்ந்தார்.

இதனிடையில் லாமா கிளம்பிய மறுதினம் அதிகாலையிலேயே படைகள் அரண்மனையைச் சுற்றி வளைத்தன. ஆனால் லாமா தப்பிவிட்டார் என்ற செய்தி கிடைத்தது. திபெத் எங்கும் அவரை தேடும் பணி தீவிரமானது. எல்லைகள் எல்லாம் அடைக்கப்பட்டன. அவருடைய ஆதரவாளர்கள் கொல்லப்பட்டனர். இந்த கொடுமையான செய்கையால் சுமார் 87000 திபெத்தியர்கள் கொல்லப்பட்டனர். மேலும் 27000 பேர்கள் கைது செய்யபட்டு சிறையில் அடைக்கபட்டனர். இவ்வளவு நடந்தும் லாமாவைப் பற்றி எந்த ஒரு திபெத்தியரும் வாய் திறவாமல் மௌனம் காத்தனர்.

"தலாய் லாமாவை எங்களிடம் ஒப்படைக்க வேண்டும்" என்று இந்தியாவிடம் சீனா கோரியது. ஆனால் அதற்கு அப்போதைய இந்தியப் பிரதமர் ஜவஹர்லால் நேரு மறுத்துவிட்டார். இதனால்,இந்தியா மீது சீனா ஆத்திரம் அடைந்தது. 1962 செப்டம்பர் மாதத்தில் இந்தியா மீது படையெடுத்தது. லடாக் பகுதியிலும், வடகிழக்கு எல்லைப் பகுதியிலும் நடந்த போரில், இந்தியாவின் சில பகுதிகளை சீனா கைப்பற்றிக்கொண்டது. சீனாவின் போக்கை உலக நாடுகள் கண்டித்தன. அதனால், சீனப்படைகள் திரும்பப் பெறப்பட்டன. திபெத் நாடு, சீனாவுடன் இணைக்கப்பட்டு விட்டது[14] தலாய் லாமா இந்தியாவில் வசித்து வருகிறார். தற்போது தலாய் லாமா இந்தியாவின் தர்மசாலாவில் வாழ்ந்து வருகிறார். இவருக்கு 1989 ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.

பஞ்சென் லாமாவுக்கு உயர் பதவி[தொகு]

திபெத்திய புத்தமத தலைவர் தலாய் லாமாவின் செல்வாக்கை குறைப்பதற்காக தற்போதைய பஞ்சன் லாமாவுக்கு உயர் பதவி அளிக்கப்பட்டுள்ளது. 20 வயதான பெய்ன்கென் ஏர்டினி ஊய்கிவுஜபு என்ற இயற் பெயரை கொண்ட பஞ்சென் லாமா சீனா வின் மக்கள் அரசியல் ஆலோசனைக் குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டு இருக்கிறார். இந்த குழுவில் வர்த்தக பிரமுகர்கள், கல்வியாளர்கள், மதத் தலைவர்கள் என 2,200 பேர் இடம் பெற்றுள்ளனர். சமீப காலமாக பஞ்சன் லாமாவுக்கு சீன அரசியலில் அதிக பங்கு அளிக்கப்பட்டு வருகிறது.[15] இதன் மூலம் திபெத்தியர்களிடையே பிளவை ஏற்படுத்தி அதை தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ள அது நினைக்கிறது. தலாய் லாமாவுக்கு வயதாகிக் கொண்டு வருவதால் அவருக்குப் பின்னர் புதிய தலாய் லாமாவாக, நோர்புவை அறிவிக்கவும், தேர்ந்தெடுக்கவும் சீன அரசு திட்டமிட்டு செயல்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு கிழக்கு சீனாவில் நடந்த புத்தமத மாநாட்டின்போது இந்த பஞ்சன் லாமா முதல் முறையாக வெளியுலகுக்கு வந்து பேசினார்.[16]

காட்சியகம்[தொகு]

பட்டியல்[தொகு]

 • கண்டுகொண்ட ஆண்டு - தலாய் லாமா மறு பிறப்பு எடுத்து வருபவர் என கருதப்படுகிறார். கண்டுகொண்ட ஆண்டு என்பது மறைந்த தலாய் லாமாவின் மறுபிறப்பு என ஒருவரை அடையாளம் கண்டுகொண்ட ஆண்டாகும்.
 • மத தலைவராக ஆன ஆண்டு - தலாய் லாமாவை அடையாளம் கண்டதும் அவரை தலாய் லாமாவாக அதிகாரபூர்வமாக அறிவிக்கமாட்டார்கள். அவர் அதிகாரபூர்வமாக மத தலைவராக ஏற்றுக்கொண்ட ஆண்டு இதுவாகும்.
எண் பெயர்(வாழ்க்கை) ஓவியம் கண்டுகொண்ட ஆண்டு மத தலைவராக ஆன ஆண்டு
1. கெண்டுன் ட்ரப்(1391-1474) 1st Dalai Lama.jpg ? ?
2. கெண்டுன் கியட்சோ(1475-1542) Second Dalai Lama.jpg ? ?
3. சோனம் கியட்சோ(1543-1588) Цыбиков Далай-лама III.png ? 1578
4. யோண்டென் கியட்சோ(1589-1617) 4DalaiLama.jpg ? 1603
5. ங்கவாங் லோப்சாங் கியட்சோ(1617-1682) NgawangLozangGyatso.jpg 1618 1622
6. (ட்)சேங்யெங் க்யட்சோ(1683-1706) 6DalaiLama.jpg 1688 1697
7. கெல்சங் க்யட்சோ(1708-1757) 7DalaiLama.jpg ? 1720
8. ஜம்பேல் க்யட்சோ(1758-1804) Jamphel Gyatso, 8th Dalai Lama - AMNH - DSC06244.JPG 1760 1762
9. லங்டொக் க்யட்சோ(1805-1815) Lungtok Gyatso.jpg 1807 1808
10. (ட்)சல்ரிம் க்யட்சோ(1816-1837) படிமம்:10thDalaiLama.jpg 1822 1822
11. கெண்ட்ருப் கியட்சோ(1838-1856) 1841 1842
12. ட்ரின்லே க்யட்சோ(1857-1875) 1858 1860
13. துப்டென் க்யட்சோ(1876-1933) 13th Dalai Lama Thubten Gyatso.jpg 1878 1879
14. டென்சின் கியாட்சோ (1935-தற்போது) Dalai Lama 1430 Luca Galuzzi 2007crop.jpg 1937 1950 (தற்போது நாடு கடந்து இந்தியாவில் வாழ்கிறார்)

உசாத்துணை[தொகு]

ராஜேஸ்ராவனா வலைவாசல் பரணிடப்பட்டது 2016-06-24 at the வந்தவழி இயந்திரம்

மேற்கோள்கள்[தொகு]

 1. Online Etymology Dictionary. Etymonline.com. Retrieved on 2011-04-10.
 2. http://www.newser.com/story/13544/next-dalai-lama-may-be-female.html
 3. "அடுத்த தலாய் லாமாவை நாங்கள் தேர்ந்தெடுப்போம் - சீனா". 2014-01-31 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2012-03-11 அன்று பார்க்கப்பட்டது.
 4. அடுத்த தலாய் லாமாவை தேர்ந்தெடுக்க தற்போதய தலாய் லாமாவிற்கு அதிகாரம் இல்லை - சீனா
 5. லாமா[தொடர்பிழந்த இணைப்பு]
 6. Laird (2006), p. 143.
 7. Thubten Samphel and Tendar (2004), p. 75.
 8. Farrer-Halls, Gill. World of the Dalai Lama. Quest Books: 1998. p. 77
 9. Thubten Samphel and Tendar (2004), p.35.
 10. http://viduthalai.periyar.org.in/20100303/news12.html
 11. "தலாய் லாமா". 2016-06-24 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2012-03-11 அன்று பார்க்கப்பட்டது.
 12. ஜனனி ரமேஷ், தலாய் லாமா : அரசியலும் ஆன்மிகமும்
 13. முத்துக் குமார்.[தொடர்பிழந்த இணைப்பு]
 14. சைட் ஃபார் ஆல் நியூஸ்,வோர்டு பிரஸ்.காம் திபெத்தை சீனா கைப்பற்றியது
 15. தினகரன் இணைய நாளிதழ் செய்தி.[தொடர்பிழந்த இணைப்பு]
 16. நிதர்சனம் வலை வாசல்[தொடர்பிழந்த இணைப்பு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தலாய்_லாமா&oldid=3557409" இருந்து மீள்விக்கப்பட்டது