ஆக்ரா கோட்டை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
யுனெசுக்கோ உலகப் பாரம்பரியக் களம்
ஆக்ரா கோட்டை
Name as inscribed on the World Heritage List
அமர்சிங் வாயில்,
கோட்டையின் இருவாயில்களுள் ஒன்று
வகை பண்பாடு
ஒப்பளவு iii
உசாத்துணை 251
UNESCO region உலக பாரம்பரியக் களங்களின் பட்டியல்
- ஆசியாவும் ஆஸ்திரலேசியாவும்
Inscription history
பொறிப்பு 1983 (7ஆவது தொடர்)

ஆக்ரா கோட்டை இது இந்தியாவின் ஆக்ராவில் உள்ள முகலாயர் காலத்துக் கோட்டை ஆகும். இது இந்தியாவில் உள்ள கோட்டைகளில் மிகுந்த முக்கியத்துவம் பெற்ற ஒரு கோட்டையாகும். பெரும் முகலாயப் பேரரசர்களான பாபர், உமாயூன், அக்பர், ஜகாங்கீர், ஷாஜகான், ஔரங்கசீப் போன்றவர்கள் இக்கோட்டையில் வாழ்ந்துள்ளார்கள். இங்குதான் மிகப்பெரிய நிதிக் கருவூலமும், நாணயத் தயாரிப்பிடமும் உள்ளது. இக் கோட்டை, "லா கிலா", "ஆக்ராவின் செங்கோட்டை" போன்ற பெயர்களாலும் அழைக்கப்படுகின்றது. இது உலகப் புகழ் பெற்ற நினைவுச் சின்னமான தாஜ்மகாலுக்கு வட கிழக்கில் 2.5 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. வெளிநாட்டுத் தூதர்கள், பயணிகள், உயர் அலுவலர்கள் போன்று இந்திய வரலாற்றை உருவாக்கிய பலரும் இந்தக் கோட்டையில் காலடி பதித்துள்ளனர்.

வரலாறு[தொகு]

தொடக்கத்தில், ஒரு செங்கற் கோட்டையாக இருந்த இது சிக்கார்வார் ராசபுத்திரர்களுக்கு உரியதாக இருந்தது. கி பி 1080ல், காசுணவைதியப் படைகள் இதனைக் கைப்பற்றியது தொடர்பிலேயே இதனைப் பற்றிய முதலாவது குறிப்புக்கள் கிடைக்கின்றன. சிக்கந்தர் லோடி (கிபி 1487 - 1517) என்னும் டெல்லி சுல்தானே முதன் முதலாக ஆக்ராவுக்குத் தனது இருப்பிடத்தை மாற்றி இந்தக் கோட்டையில் வாழ்ந்தார். இவர் இங்கிருந்தே நாட்டை ஆண்டதனால் ஆக்ரா நாட்டின் இரண்டாவது தலைநகரம் என்னும் சிறப்பைப் பெற்றது. 1517 ஆம் ஆண்டில் சிக்கந்தர் லோடி இந்தக் கோட்டையிலேயே இறந்தார். பின்னர் இவரது மகனான இப்ராகிம் லோடி 1526 ஆம் ஆண்டில் நடந்த முதலாம் பானிபட் போரில் இறக்கும் வரை ஒன்பது ஆண்டுகள் இங்கு வாழ்ந்தார். இவரது காலத்தில் பல அரண்மனைகளும், கிணறுகளும், மசூதிகளும் இக் கோட்டையுள் கட்டப்பட்டன.

பின்னர் இக் கோட்டையையும், பெருமளவு செல்வத்தையும் முகலாயர் கைப்பற்றினர். இவற்றுள் பின்னர் கோஹினூர் என்று பெயர் பெற்ற விலைமதிப்பற்ற வைரமும் அடங்கும். முகலாயப் பேரரசர் பாபர் இங்கே, இப்ராகிமின் அரண்மனையில் தங்கியிருந்தார். 1530 ஆம் ஆண்டில் உமாயூன் இந்தக் கோட்டையிலேயே முடிசூட்டப்பட்டார். உமாயூன் 1530 ஆம் ஆண்டில் ஆப்கானிய சேர் சா வினால் தோற்கடிக்கப்பட்ட பின்னர் சேர் சா இதை ஆறு ஆண்டுகள் வைத்திருந்தார். 1556 ஆம் ஆண்டு மீண்டும் முகலாயர் இதனைக் கைப்பற்றினர்.

அக்ராவின் அமைவிட முக்கியத்துவத்தை உணர்ந்த அக்பர் இதனைத் தனது தலைநகரமாக்கினார். அப்போது செங்கற்களாலான இக் கோட்டை சிதைந்த நிலையில் இருக்கவே அக்பர், அதனைச் சிவப்பு மணற்கற்களைக் கொண்டு புதுப்பித்துக் கட்டினார். உட்பகுதி செங்கற்களாலும், வெளி மேற்பரப்புக்கள் சிவப்புச் மணற்கற்களாலும் ஆன இக் கோட்டையைக் கட்டுவதில் 1,444,000 ஆட்கள் ஈடுபட்டு 1573 ஆம் ஆண்டில் கட்டி முடித்ததாகச் சொல்லப்படுகிறது.

அக்பரின் பேரனான பேரரசன் சாஜகானின் காலத்திலேயே இக்கோட்டை இன்று காணப்படும் நிலையை எய்தியது. சாஜகான் இங்கே கட்டிய கட்டிடங்கள் பெரும்பாலும் வெள்ளைச் சலவைக்கற்களினால் ஆனவை. இக் கோட்டைக்குள் முன்னர் இருந்த கட்டிடங்கள் சிலவற்றை இடித்துப் புதிய கட்டிடங்களையும் சாஜகான் கட்டினார். சாஜகானின் இறுதிக்காலத்தில் அவரது மகன் ஔரங்கசீப்பினால் அவர் இக் கோட்டையிலேயே சிறை வைக்கப்பட்டிருந்தார்.

அமைப்பு[தொகு]

முசாமன் கட்டிடத்தின் உட்பகுதி. வீட்டுக் காவலில் வைக்கப்பட்டிருந்த சாஜகான் தனது இறுதி ஏழு ஆண்டுகளை இங்கேயே கழித்தார்.

இக் கோட்டை அரைவட்ட வட்டத் தள வடிவம் கொண்டது. இந்த அரை வட்டத்தின் நாண் ஆற்றுக்கு இணையாக இருக்குமாறு கட்டிடம் அமைந்துள்ளது. இக் கோட்டை மதில் 70 அடிகள் உயரமானது. வட்டவடிவமான பெரிய காவலரண்கள் சீரான இடைவெளிகளில் அமைந்துள்ளன. நான்கு பக்கங்களிலும் நான்கு நுழைவாயில்கள் உள்ளன. "கிசுரி" வாயில் எனப்படும் வாயில் ஆற்றை நோக்கியுள்ளது. நான்கு வாயில்களுள், "டில்லி வாயில்", "லாகூர் வாயில்" என அழைக்கப்படும் இரண்டு வாயில்கள் குறிப்பிடத்தக்கவை. லாகூர் வாயிலை, அமர்சிங் ராத்தோரின் பெயரைத் தழுவி "அமர்சிங் வாயில்" எனவும் அழைப்பதுண்டு. இது முன்னர் "அக்பர் வாயில்" என அழைக்கப்பட்டது பிரித்தானியர் இப் பெயரை "அமர் சிங்" வாயில் என மாற்றினர்.

மேற்குப் பக்கத்தில், நகரத்தை நோக்கியுள்ள டில்லி வாயிலே மிகப் பெரிய வாயில் ஆகும். இது 1568 ஆம் ஆண்டில் அக்பரின் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்டது. பாதுகாப்பை வலுப்படுத்துவதற்கும், அக்பரின் முறைப்படியான வாயிலாகப் பயன்படுத்துவதற்காகவுமே இது கட்டப்பட்டது. இது வெள்ளைச் சலவைக்கல்லால் கட்டப்பட்டு உட்பதிப்பு வேலைகள் செய்யப்பட்டது. இது அக்கால முகலாயர்களின் அதிகாரம், செல்வ வளம் ஆகியவற்றைக் காட்டுவதாகும். வெளியிலிருந்து கோட்டையைச் சுற்றியுள்ள அகழிகளைத் தாண்டிக் கோட்டைக்குள் வருவதற்கு மரத்தாலான பாலங்கள் பயன்பட்டன. டெல்லி வாயிலுக்கு உட்புறமாக அமைந்த இன்னொரு வாயில் "யானை வாயில்" என அழைக்கப்படுகின்றது. இந்த வாயிலின் இரு மருங்கும் அவற்றை நடத்தும் வீரர்களோடு கூடிய இரண்டு முழு அளவு யானைச் சிலைகள் உள்ளன.

அழகிய வேலைப்பாடுகளோடு கூடிய தூண்.

ஆக்ராக் கோட்டையின் ஒரு பகுதியை இன்றும் இந்தியப் படையினர் பயன்படுத்தி வருவதால், டெல்லி வாயில் வழியாகச் சுற்றுலாப் பயணிகள் கோட்டைக்குள் செல்ல முடியாது. இதற்கு லாகூர் வாயிலே பயன்படுத்தப்பட்டு வருகின்றது. இவ்வாயில், அன்று இந்தியாவின் ஒரு பகுதியாகவும், இன்று பாகிசுத்தானிலும் அமைந்துள்ள லாகூர் நகரத்தை நோக்கியுள்ளதால் லாகூர் வாயில் என்னும் பெயர் இடப்பட்டது.

இந்தியாவின் கட்டிடக்கலை வரலாற்றைப் பொறுத்தவரை இக் கோட்டை மிகவும் முக்கியமானது. வங்காளம், குசராத் போன்ற பகுதிகளுக்குரிய கட்டிடக்கலைப் பாணிகளில் கட்டப்பட்ட 500 கட்டிடங்கள் கோட்டைக்குள் இருந்ததாகச் சொல்லப்படுகின்றது. இவற்றுட் சில அக்பரால் தனக்கெனக் கட்டப்பட்ட வெள்ளைச் சலவைக்கல் அரண்மனைகளைக் கட்டுவதற்காக இடிக்கப்பட்டது. மேலும் பல 1803 ஆம் ஆண்டுக்கும், 1862 க்கும் இடையில், பாசறைகளை அமைப்பதற்காகப் பிரித்தானியரால் இடிக்கப்பட்டன. தற்போது முப்பது வரையான முகலாயர் கட்டிடங்களே எஞ்சியுள்ளன. இவற்றுள், டில்லி வாயில், அக்பர் வாயில், வங்காள மகால் எனப்படும் இரு அரண்மனை என்பவை அக்பர் காலக் கட்டிடங்களுக்குச் சான்றாக நிற்கின்றன.

"வங்காள மகால்" எனப்படும் அரண்மனையும் சிவப்பு மணற்கல்லால் கட்டப்பட்டதே. இது இப்போது அக்பர் மகால், செகாங்கீர் மகால் என இரண்டாகப் பிரிக்கப்பட்டுள்ளன. வரலாற்று அடிப்படையில் ஆர்வமூட்டக்கூடிய இந்து, இசுலாமிய கட்டிடக்கலைப் பாணிகளின் கலப்புக்கள் இங்கே காணப்படுகின்றன. இசுலாம் மதத்தின் அடிப்படையில் உயிரினங்களின் வடிவங்களை அழகூட்டல்களில் சேர்ப்பது தகாததாகக் கருதப்படும். ஆனால் இங்கே யானைகள், பறவைகள் போன்ற உயிரினங்களை உள்ளடக்கிய அழகூட்டல்கள் காணப்படுகின்றன.

ஆக்ராக் கோட்டைக்குள் அமைந்துள்ள கட்டிடங்களும் இடங்களும்[தொகு]

காசு மகால்.
 • அங்கூரி பாக் - வடிவவியல் வடிவங்களைக் கொண்டு அமைந்த பூங்கா.
 • திவான்-இ-ஆம் (பொது மக்களைச் சந்திக்கும் மண்டபம்) - பொதுமக்களைச் சந்திப்பதற்கும் அவர்கள் குறைகளைக் கேட்பதற்கும் இம் மண்டபம் பயன்பட்டது. ஒரு காலத்தில் மயிலணை இங்கேயே இருந்தது.
 • திவான்-இ-காசு - அரசர்களையும், பிற சிரப்பு விருந்தினர்களையும் வரவேற்பதற்காக இம்பண்டபம் பயன்பட்டது. செகாங்கீரின் கருப்பு அரியணை இங்கேயே வைக்கப்படிருந்தது.
 • பொன் மண்டபங்கள் - வங்காளக் குடிசைகளின் வடிவில் அமைக்கப்பட்ட கூரைகளைக் கொண்ட மண்டபங்கள்.
 • செகாங்கீர் மகால் - மகன் செகாங்கீருக்காக அக்பரால் அமைக்கப்பட்டது.
 • காசு மகால் - வெண் சலவைக்கல் அரண்மனை. சலவைக்கலில் வரையப்பட்ட ஓவியங்களைக் கொண்டது.
 • மச்சி பவன்
 • முசாமன் கட்டிடம் - ஒரு பெரிய எண்கோண வடிவக் கோபுரம். இதன் ஒரு உப்பரிகை தாஜ்மகாலை நோக்கியுள்ளது.
 • மினா மசூதி - சுவர்க்க மசூதி.
 • முத்து மசூதி
 • நகினா மசூதி - அரண்மனை மகளிருக்காகக் கட்டப்பட்ட மசூதி.
 • செனானா மினா சந்தை - பெண்களுக்கானது. பெண் வணிகர்கள் மட்டுமே பொருட்கள் விற்கலாம்.
 • நௌபத் கானா (முரசு இல்லம்) - அரசனின் இசைக்கலைஞர் இசைத்த இடம்]]
 • ரங் மகால் - அந்தப்புரம். அரசனின் மனைவிகளும், ஆசைநாயகிகளும் வாழ்ந்த இடம்.
 • சாகி கட்டிடம் - சாஜகானின் தனிப்பட்ட மண்டபம்.
 • சாஜகானி மகால் - கட்டிடங்களுக்கு சிவப்பு மணற்கற்களுக்குப் பதில் சலவைக்கற்களைப் பயன்படுத்துவதற்கான முதல் முயற்சி.
 • சீசு மகால் (கண்ணாடி மாளிகை) - அரச உடை அணியும் அறை.

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

வெளியிணைப்புக்கள்[தொகு]

குறிப்புகள்[தொகு]


உசாத்துணை[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆக்ரா_கோட்டை&oldid=1986999" இருந்து மீள்விக்கப்பட்டது