வில்லியம் கோட்டை, இந்தியா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வில்லியம் கோட்டை
Fort William
ফোর্ট উইলিয়াম
கொல்கத்தா, இந்தியா
உள்ளிருந்து வில்லியம் கோட்டையின் காட்சி, c. 1828
வில்லியம் கோட்டை Fort William ফোর্ট উইলিয়াম is located in கொல்கத்தா
வில்லியம் கோட்டை Fort William ফোর্ট উইলিয়াম
வில்லியம் கோட்டை
Fort William
ফোর্ট উইলিয়াম
வகை கோட்டை , தரைப்படைத் தலைமையக காவற் கோட்டமும் ஆயுதக்கிடங்கும்.
இடத் தகவல்
கட்டுப்படுத்துவது பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனம், சிராச் உத் தவ்லா, இந்தியத் தரைப்படை
இட வரலாறு
கட்டிய காலம் 1781
பயன்பாட்டுக்
காலம்
1781 - இன்றுவரை
சண்டைகள்/போர்கள் பிளாசி சண்டை
காவற்படைத் தகவல்
காவற்படை கிழக்கு ஆணைப்பரப்பு

வில்லியம் கோட்டை (Fort William) கங்கை ஆற்றின் முதன்மை கிளையாறான ஊக்லி ஆற்றின் கிழக்குக் கரையில், கல்கத்தாவில் (தற்போதைய கொல்கத்தா) கட்டப்பட்டுள்ள ஓர் கோட்டை ஆகும். இது பிரித்தானிய இந்தியாவின் வங்காள மாகாணத்தில் துவக்க காலங்களில் கட்டப்பட்டது.

இக்கோட்டைக்கு இங்கிலாந்து, அயர்லாந்தின் மூன்றாம் மற்றும் இசுக்காட்லாந்தின் இரண்டாம் வில்லியத்தின் பெயர் வைக்கப்பட்டுள்ளது.[1] கோட்டைக்கு முன்னால் உள்ள திடல் இக்கோட்டையின் அங்கமாக இருந்தது; இது கொல்கத்தாவில் உள்ள மிகப்பெரிய நகரியப் பூங்காவாக விளங்குகிறது.

வரலாறு[தொகு]

வில்லியம் கோட்டை பழையது, புதியது என இரண்டுள்ளது; பழையது 1696இல் பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனத்தால் ஜான் கோல்டுசுபரோவின் கண்காணிப்பில் கட்டப்பட்டது. சர் சார்லசு ஐர் ஊக்லி ஆற்றின் கரையில் தென்கிழக்கு கொத்தளத்தையும் சுவர்களையும் கட்டினார். 1700இல் மூன்றாம் வில்லியம் அரசரின் பெயரில் அழைக்கப்பட்டது. அவரை அடுத்து வந்த ஜான் பேர்டு 1701இல் வடகிழக்குக் கொத்தளத்தைக் கட்டினார். 1702இல் கோட்டையின் நடுவே அரசு மாளிகை (பேக்டரி) கட்டது தொடங்கினார். இந்த கட்டமைப்பு 1706இல் முடிவடைந்தது. இந்தத் துவக்கக் கால கட்டிடத்தில் இரண்டு மாடிகள் இருந்தன. உள்காப்பு அறை கொல்கத்தாவின் கருந்துளை ஆயிற்று. சூன் 20, 1756இல் கோட்டையை கைப்பற்றிய வங்காள நவாப் சிராச் உத் தவ்லா பிரித்தானிய போர்க் கைதிகளை இந்த அறையில்தான் அடைத்து வைத்தார். அடைக்கப்பட்ட 146 பேரில் 123 பேர் மூச்சடைத்து இறந்ததாக கூறப்படுகின்றது.[2] கோட்டையைக் கைப்பற்றிய கோட்டைக்கு அலிநகர் எனப் பெயரிட்டார். இதனால் பிரித்தானியர்கள் புதுக் கோட்டையை கட்ட முற்பட்டனர்.

வில்லியம் கோட்டையின் திட்ட வரைபடம் (மேல்-காட்சி), c. 1844

1758இல் பிளாசி சண்டைக்குப் பிறகு ராபர்ட் கிளைவ் கோட்டையை மீளமைக்கத் தொடங்கினார்; 1781இல் கட்டி முடிக்கப்பட்டது. இதற்காக இரண்டு மில்லியன் பவுண்டுகள் செலவாயின. கோட்டையைச் சுற்றிலும் தரைமட்டமாக்கப்பட்டு மைதான் உருவாயிற்று. இதுவே பின்னாளில் "கொல்கத்தாவின் நுரையீரல்களாக" ஆயிற்று. மைதானம் வடக்கு-தெற்காக 3 கிமீயும் அகலவாக்கில் 1 கிமீயும் உள்ளது. வில்லியம் கோட்டை கொல்கத்தாவில் இன்றுமுள்ள பிரித்தானிய இராஜ் காலத்துக் கட்டிடங்களில் ஒன்றாகும். இந்தக் கோட்டை 70.9 எக்டேர் பரப்பளவில் அமைந்துள்ளது.

பழைய கோட்டை புதுப்பிக்கப்பட்டு 1766 முதல் சுங்க அலுவலகங்களுக்கு பயன்படுத்தப்படுகின்றது.

இன்று இக்கோட்டை இந்தியத் தரைப்படைக்கு உரிமையானது. தரைப்படையின் கிழக்கு ஆணைப்பரப்பின் தலைமையகம் இங்கு செயல்படுகின்றது. இங்கு 10,000 படைத்துறை பணியாளர்கள் தங்கியிருக்கலாம். குடிமக்களுக்கான உள்நுழைவு மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

கொல்கத்தாவின் பிரித்தானிய குடிமக்கள் தொழுகை மையமாக பயன்படுத்தி வந்த இக்கோட்டையில் இருந்த புனித பீட்டரின் தேவாலயம் தற்போது கிழக்கத்திய ஆணைப்பரப்பு தலைமையக துருப்புகளுக்கு நூலகமாக விளங்குகின்றது.

கட்டமைப்பு[தொகு]

வில்லியம் கோட்டை செங்கல்லும் சாந்தும் கொண்டு ஒழுங்கற்ற எண்கோணமாக 5 ச.கிமீ பரப்பில் கட்டப்பட்டுள்ளது. இதன் ஐந்து முகங்கள் நிலப்புறத்தை நோக்கியும் மூன்று முகங்கள் ஊக்லி ஆற்றை நோக்கியும் கட்டப்பட்டுள்ளன. விண்மீன் வடிவ கோட்டையாக பீரங்கித் தாக்குதல்களை சமாளிக்கும் வண்ணம் கட்டப்பட்டுள்ளது. இதனைச் சுற்றி 9மீ ஆழமும் 15 மீ அகலமும் உள்ள வறண்ட அகழி உள்ளது. தேவைப்பட்டால் நீர் நிரப்பக்கூடுமென்றாலும் இந்த வடிவமைப்பு எதிரிமீது சுவர்களை எட்டவிடாது சுடுவதற்கு முதன்மையாக அமைக்கப்பட்டது. இந்தக் கோட்டைக்கு ஆறு வாயில்கள் உள்ளன: சௌரங்கி, பிளாசி, கொல்கத்தா, வாட்டர்கேட், புனித ஜார்ஜசு மற்றும் கருவூல வாயில். இதனுள் 9-குழி குழிப்பந்தாட்ட மைதானம் உள்ளது.

இதனையொத்த கோட்டைகள் கேரளத்தின் தலச்சேரி போன்ற பிற இடங்களிலும் காணலாம்.[3]

ஒளிப்படத் தொகுப்பு[தொகு]

மேற்சான்றுகள்[தொகு]

  1. Krishna Dutta (2003). Calcutta: A Cultural and Literary History. p. 71.
  2. Little JH (1916) ‘The Black Hole - The Question of Holwell's Veracity’ Bengal: Past and Present, 12. P136-171.
  3. Nandakumar Koroth, History of Forts in North Malabar
  4. Grant, James (1873). British Battles On Land and Sea. Cassell & Company, Limited. p. 69.