கிருட்டிணகிரிக் கோட்டை
கிருட்டிணகிரிக் கோட்டை | |
---|---|
பகுதி: தமிழ்நாடு | |
கிருட்டிணகிரி, தமிழ்நாடு, இந்தியா | |
கிருட்டிணகிரிக் கோட்டை | |
வகை | கோட்டைகள் |
இடத் தகவல் | |
கட்டுப்படுத்துவது | தமிழ்நாடு அரசு |
நிலைமை | நல்ல நிலையில் உள்ளது |
கிருட்டிணகிரிக் கோட்டை என்பது இந்தியாவின் தமிழ்நாட்டின், கிருட்டிணகிரியில் உள்ள ஒரு மலைக் கோட்டை ஆகும். இது இம்மாவட்டத்தில் உள்ள வலுவான கோட்டைகளுள் ஒன்று. இது ஒரு மலைக் கோட்டை. சுவர்களும், கொத்தளங்களும் பெருமளவுக்கு நல்ல நிலையில் உள்ள இக்கோட்டை தற்போது ஒரு பாதுகாக்கப்பட்ட நினைவுச்சின்னம் ஆகும்.[1] இக்கோட்டை தற்போது இந்தியத் தொல்லியல் துறையின் மேலாண்மையின் கீழ் உள்ளது. நகரத்தின் பழைய பேட்டையிலிருந்து மலை உச்சிக்கு செல்ல படிக்கட்டுகள் உள்ளன.
வரலாறு[தொகு]
இக்கோட்டையுள்ள மலையானது சையத் பாஷா மலை என்று அழைக்கப்படுகிறது. இந்த மலையில் சையத் பாஷா என்ற இசுலாமியரின் தர்கா உள்ளது. இதனால் இது இப்பெயரால் அழைக்கப்படுகிறது. இக்கோட்டை விசயநகரப் பேரரசின் காலத்தில் கட்டப்பட்டது. அக்காலத்தில் "பாராமகால்" என அழைக்கப்பட்ட இப்பகுதியையும் கோட்டையையும் ஜெகதேவிராயர் என்பவர் போர்களில் அவர் காட்டிய வீரத்துக்காக விசயநகரப் பேரரசிடம் இருந்து பரிசாகப் பெற்றுக்கொண்டார். இவர் ஜெகதேவி என்னும் இடத்தைத் தலைநகரமாகக் கொண்டு இப்பகுதியை ஆண்டுவந்தார்.
17-ஆம் நூற்றாண்டில் பீசப்பூர் சுல்தானகத்தின் கீழிருந்த பாராமகாலும் கோட்டையும் சாசிக்கு (Shaji) வழங்கப்பட்டது. சாசி பெங்களூரைத் தலைநகரமாகக் கொண்டு இப்பகுதியை ஆண்டார். இவர் இறந்த பின்னர் இளைய மகன் வியாங்கோசி அரசனானார். 1670-இல் இக்கோட்டையைச் சத்திரபதி சிவாசி கைப்பற்றிக்கொண்டார்.
18-ஆம் நூற்றாண்டில் மைசூர் அரசர் சிக்க தேவராய உடையாரின் கட்டளைப்படி ஐதர் அலி இக்கோட்டையையும் பாராமகாலையும் கைப்பற்றினார். பின்னர் மைசூர் அரசரிடம் இருந்து பிரிந்த ஐதர் அலி சிறீரங்கப்பட்டினத்தைத் தலைநகரமாக்கி ஆண்டபோது இக்கோட்டையையும் தன்வசமே வைத்துக்கொண்டார். முதலாம் ஆங்கில மைசூர்ப் போரின்போது இடம்பெற்ற நீண்ட முற்றுகையைத் தொடர்ந்து இக்கோட்டை பிரித்தானியரிடம் சரணடைந்தது. 1791-ஆம் ஆண்டில், மூன்றாவது ஆங்கில மைசூர்ப் போரின்போது, திப்பு சுல்தானின் வசம் இருந்த இக்கோட்டையை தளபதி மக்சுவெல்லின் தலைமையிலான பிரித்தானியப் படைகள் தாக்கின. ஆனாலும் பிரித்தானியப் படைகள் கடும் இழப்புகளுடன் பின்வாங்கவேண்டிய நிலை ஏற்பட்டது. 1792-இல் சிறீரங்கப்பட்டின ஒப்பந்தப்படி இக்கோட்டை பிரித்தானியரிடம் கையளிக்கப்பட்டது.