உள்ளடக்கத்துக்குச் செல்

பாலக்காட்டுக் கோட்டை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வடக்குப் பக்க மதிலுக்கு வெளியில் இருந்தான தோற்றம்.

பாலக்காட்டுக் கோட்டை இந்தியாவின் கேரள மாநிலத்திலுள்ள பாலக்காடு நகர மத்தியில் அமைந்துள்ளது. கருங்கல்லால் ஆன இக் கோட்டை 1766 ஆம் ஆண்டில் ஹைதர் அலியால் கட்டப்பட்டது. கேரளாவிலுள்ள கோட்டைகளில் நல்ல நிலையிலுள்ள கோட்டைகளில் ஒன்றாக இது விளங்குகிறது.

வரலாறு

[தொகு]

பாலக்காட்டுக் கோட்டை மிகப் பழைய காலத்திலேயே இருந்ததாகக் கருதப்பட்டாலும், இதன் பழைய வரலாறு பற்றி எதுவும் தெரியவரவில்லை. பாலக்காடு அச்சன் எனும் இப் பகுதியின் உள்ளூர் ஆட்சியாளர் தொடக்கத்தில் கோழிக்கோட்டு அரசின் சிற்றரசராக இருந்தார். எனினும் 18 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்துக்கு முன்னரே இவர் சுதந்திரமாக இயங்கத் தொடங்கினார். 1757 இல் இப்பகுதிமீது கோழிக்கோட்டு அரசு ஆக்கிரமிப்பு நடத்த இருந்த நிலையில், இவர் உதவி கேட்டு ஹைதர் அலிக்குத் தூது அனுப்பினார். பாலக்காடைத் தன் வசம் எடுத்துக் கொள்வதற்காக இச் சந்தர்ப்பத்தை ஹைதர் அலி பயன்படுத்திக்கொண்டான். அப்போதிருந்து 1790 வரை இப் பகுதி மைசூர் சுல்தான்களிடம் அல்லது பிரித்தானியரிடம் இருந்து வந்தது. 1768 இல் முதன்முதலாக பிரித்தானியர் இதனை ஹைதர் அலியிடம் இருந்து கைப்பற்றினர். எனினும் சில மாதங்களில் ஹைதர் அதனை மீண்டும் கைப்பற்றிக் கொண்டான் ஆயினும், கர்னல் ஃபுல்லார்ட்டன் அதனை 1783 இல் மீண்டும் தம்வசப்படுத்தினான். அடுத்த ஆண்டிலேயே இக் கோட்டை கைவிடப்படவே அதனை கோழிக்கோட்டுப் படைகள் கைப்பற்றிக் கொண்டன. 1790 ஆம் ஆண்டில் பிரித்தானியப் படைகள் அதனை இறுதியாகக் கைப்பற்றின. இக் கோட்டை திருத்தம் செய்யப்பட்டு ஸ்ரீரங்கப்பட்டினத்துக்கு எதிரான படை நடவடிக்கைகளுக்கான ஒரு தளமாகப் பயன்படுத்தப்பட்டது. 19 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதி வரை இக் கோட்டையில் படைகள் நிலைகொண்டிருந்தன. 1900களின் முற்பகுதியில் இக் கோட்டை தாலுகா அலுவலமாக மாற்றப்பட்டது. இக் கோட்டை ஹைதர் அலியின் மகனான திப்பு சுல்தானின் பெயரைத் தழுவி திப்பு கோட்டை என்றும் அழைக்கப்படுவது உண்டு.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பாலக்காட்டுக்_கோட்டை&oldid=3040151" இலிருந்து மீள்விக்கப்பட்டது