உள்ளடக்கத்துக்குச் செல்

அஞ்செங்கோக் கோட்டை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அஞ்செங்கோக் கோட்டை இந்தியாவின் கேரள மாநிலத்தில் உள்ள வர்க்கலா நகரில் இருந்து 12 கிமீ தொலைவில் உள்ளதும் முன்னர் அஞ்சுதெங்கு என அழைக்கப்பட்டதுமான அஞ்செங்கோ என்னும் சிறு தீவில் அமைந்துள்ளது. இத்தீவு கடலுக்கும், கடற்கழிக்கும் இடையில் அமைந்துள்ளது. ஆங்கிலேயக் கிழக்கிந்தியக் கம்பனியினர் 17 ஆம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் இக்கோட்டையைக் கட்டினர். பிற கோட்டைகளைப் போல் அல்லாது இது ஒரு கோட்டையைப் போன்ற தோற்றத்தைக் கொண்டிராத சிறிய கோட்டை ஆகும்.

வரலாறு[தொகு]

1684ல் அஞ்செங்கோவில் ஆங்கிலேயக் கிழக்கிந்தியக் கம்பனியினர் ஒரு வணிக நிலையத்தைக் கட்டிக்கொள்வதற்கான அனுமதியை அட்டிங்கலின் இராணி அவர்களுக்கு வழங்கினார். 1690ல் ஒரு கோட்டையைக் கட்டுவதற்கும் இராணியிடம் அனுமதி பெற்ற அவர்கள் 1695ல் அஞ்செங்கோக் கோட்டையைக் கட்டினர். இக்குடியேற்றம் ஆங்கிலேயக் கிழக்கிந்தியக் கம்பனியின் வணிக வளர்ச்சிக்குப் பெரும் உதவியாக அமைந்தது. தமது படைத்துறைக் கருவிகளை வைத்துக்கொள்வதற்கான வசதிகளையும் அவர்கள் இங்கே அமைத்துக்கொண்டனர். காலப்போக்கில் கிழக்கிந்தியக் கம்பனியின் மும்பாய்க்கு அடுத்த முக்கிய வணிகத் தளமாக இது உருவானது.[1]

கிளர்ச்சிகள்[தொகு]

17 ஆம் நூற்றாண்டின் இறுதியிலும், 17 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் இப்பகுதியில் பிரித்தானியருக்கு எதிரான கிளர்ச்சிகள் இடம்பெற்றன. முதற் கிளர்ச்சி பெரிய தாக்கம் கொண்டதாக அமையவில்லை. பல்வேறு விலை உயர்ந்த பரிசுகளை வழங்குவதன் மூலம் இராணியைத் தமது கைக்குள் போட்டுக்கொண்ட பிரித்தானியர் அப்பகுதி மக்களின் நலன்களுக்கு எதிரான சில நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். இதனால் ஆத்திரமுற்ற உள்ளூர்ப் பிரபுக்கள், பிரித்தானியர் தமக்கூடாகவே அரசிக்குப் பரிசுகளை வழங்கலாம் என அறிவித்தனர். பிரித்தானியர் இதற்குச் செவிசாய்க்கவில்லை. 1721ல் 140 ஆங்கில வணிகர்கள் விலையுயர்ந்த பரிசுப் பொருட்களுடன் அரசியைக் காண்பதற்குச் சென்றபோது, உள்ளூர் மக்கள் தாக்குதல் நடத்தி அவர்கள் எல்லோரையும் கொன்றதுடன், அஞ்செங்கோக் கோட்டையையும் முற்றுகை இட்டனர். எனினும், தலைச்சேரியில் இருந்து வந்த பிரித்தானியப் படைகள் முற்றுகையை முறியடித்தன.[2]

தற்போதைய நிலை[தொகு]

இது தற்போது இந்தியத் தொல்லியல் ஆய்வகத்தினால் பேணப்பட்டு வருகிறது.[3] பொதுமக்களும், சுற்றுலாப் பயணிகளும் இக்கோட்டையைப் பார்ப்பதற்கு அனுமதிக்கப்படுகிறார்கள்.

குறிப்புகள்[தொகு]

  1. Anchuthengu and Anjengo Fort - keralatourism.org - 08 பெப்ரவரி 2014 அன்று பார்க்கப்பட்டது.
  2. Anchuthengu and Anjengo Fort - keralatourism.org - 08 பெப்ரவரி 2014 அன்று பார்க்கப்பட்டது.
  3. Alphabetical List of Monuments - Kerala, Archaeological Survey of India, Government of India

வெளியிணைப்புக்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அஞ்செங்கோக்_கோட்டை&oldid=3801422" இலிருந்து மீள்விக்கப்பட்டது