அஜய்கர்

ஆள்கூறுகள்: 24°54′N 80°16′E / 24.900°N 80.267°E / 24.900; 80.267
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அஜய்கர் ( Ajaigarh ) அல்லது அஜுகர் என்பது இந்திய மாநிலமான மத்தியப் பிரதேத்தின் பன்னா மாவட்டத்திலுள்ள ஒரு பேரூராட்சியாகும்.

வரலாறு[தொகு]

அஜய்கர் மாநிலத்தின் கொடி

இதுஅஜய்கர் சமஸ்தானம் என்ற பெயரில் பிரித்தானிய இராச்சியத்தின் காலத்தில் இந்தியாவின் சுதேச மாநிலங்களில் ஒன்றாக இருந்தது. இந்த மாநிலம் 1785இல் நிறுவப்பட்டது. அதன் தலைநகரம் அஜய்கரில் இருந்தது. புந்தேல இராசபுத்திர குல மன்னன் சத்திரசாலின் வம்சாவளியைச் சேர்ந்த குன்வர் குமன் சிங் என்பவனால் இந்த மாநிலம் நிறுவப்பட்டது. [1] 1809 ஆம் ஆண்டில், அஜய்கர் மாநிலம் ஆங்கிலேயர்களால் இணைக்கப்பட்டது. பின்னர் அது மத்திய இந்திய மாநிலத்தின் புந்தேல்கண்ட் மாநிலத்தின் ஒரு பகுதியாக மாறியது.

ஆட்சியாளர்கள் 'சவாய் மகாராஜா 'என்ற பட்டத்தைத் தாங்கினர். மன்னன் அஜய்கர் மலைக் கோட்டையின் அடிவாரத்தில் உள்ள நவ்காங் நகரில் வசித்து வந்தார். இதிலிருந்து அரசு அதன் பெயரைப் பெற்றது. இந்த நகரம் பெருமளவில் மலேரியா பாதிக்கப்பட்டது. மேலும் 1868-69 மற்றும் 1896-97ஆம் ஆண்டுகளில் பஞ்சத்தாலும் கடுமையாக பாதிக்கப்பட்டது.

அஜய்கர் அரண்மனியின் பரந்த பார்வை
அஜய்கர் அரண்மனையின் நுழைவு வாயில்
அஜய்கர் அரண்மனையின் உள்ளே

அஜய்கர் கோட்டை[தொகு]

அஜய்கர் கோட்டை இப்பகுதியின் முக்கிய ஈர்ப்புகளில் ஒன்றாகும். இது பன்னா மாவட்டத்தில் விந்திய மலைத்தொடரிலுள்ள ஒரு செங்குத்தான மலையில் 1744 அடி உயரத்தில் அமைந்துள்ளது.[2] இந்த கோட்டை மணற்கற்களால் கட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது. கோட்டையின் மற்ற சிறப்பம்சங்கள் சந்தேல ஆட்சியாளரானா பர்மார்தி தேவனால் கட்டப்பட்ட இடிபாடுகள் நிறைந்த ஒரு பழைய கோயிலும், கஜுராஹோ கோயில்களைப் போன்ற மூன்று சைனக் கோவில்களும் உள்ளன. [3] இதில் விரிவாக செதுக்கப்பட்டு அலங்கரிக்கப்பட்ட சிற்பங்கள் பல உள்ளன. இதை கஜுராஹோவிலிருந்து எளிதாக அணுக முடியும். இந்த கோட்டை அழகிய விந்திய மலைகளால் சூழப்பட்டுள்ளது. இது கென் ஆற்றின் அழகிய காட்சிகளை வழங்குகிறது. இந்த மாபெரும் கோட்டை அதன் பணக்கார வரலாற்று கடந்த காலத்திற்கும் கட்டடக்கலை அழகிற்கும் பெயர் பெற்றது. இது சந்தேல வம்சத்தைப் பற்றி பேசுகிறது.

பழைய காலங்களை நினைவுபடுத்தும் வகையில், இந்த கோட்டையின் வடக்கு வாசலுக்கு அருகில் இரண்டு வாயில்கள் (முன்பு ஐந்து இருந்தன), இரண்டு கோயில்கள் , இரண்டு பாறையில் வெட்டப்பட்டக் குளங்கள் ஆகியவை உள்ளன. இந்தக் குளங்களுக்கு கங்கை என்றும் யமுனை என்றும் பெயரிடப்பட்டுள்ளது. சுற்றியுள்ள கிராமங்கள் நோய் மற்றும் பஞ்சத்தால் பாதிக்கப்பட்டபோது இந்த இரண்டு குளங்களையும் மகாராணி கல்யாணி தேவி கட்டினார். இவை வற்றாதவை என்றும் உள்ளூர்வாசிகளால் புனிதமானவை என்றும் கருதப்படுகின்றன.

புள்ளிவிவரங்கள்[தொகு]

இதன் பரப்பளவு 771 சதுர மைல் (2,000 கிமீ 2), 1901இல் இதன் மக்கள் தொகை 78,236 பேர் என்ற அளவில் இருந்தது. 2001 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, [4] அஜய்கரின் மக்கள் எண்ணிக்கை 13,979 என இருந்தது. இதில் 53% ஆண்களும் 47% பெண்களும் ஆவர். நகரின் சராசரி கல்வியறிவு விகிதம் 59% ஆகும். இது தேசிய சராசரியான 59.5% ஐ விட குறைவாக உள்ளது; 61% ஆண்களும் 39% பெண்களும் கல்வியறிவு பெற்றவர்கள். மக்கள் தொகையில் 16% 6 வயதுக்குட்பட்டவர்கள்.

புகைப்படங்கள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அஜய்கர்&oldid=3643484" இருந்து மீள்விக்கப்பட்டது