கோல்கொண்டா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(கோல்கொண்டாக் கோட்டை இலிருந்து வழிமாற்றப்பட்டது)
Jump to navigation Jump to search
கோல்கொண்டா
Golconda Fort 005.jpg
கோல்கொண்டா கோட்டை
Lua error in Module:Location_map at line 502: Unable to find the specified location map definition: "Module:Location map/data/India Telangana" does not exist.
Location within Lua error in Module:Location_map at line 42: Unable to find the specified location map definition: "Module:Location map/data/India Telangana" does not exist.
பொதுவான தகவல்கள்
நாடுஇந்தியா
ஆள்கூற்று17°23′N 78°24′E / 17.38°N 78.40°E / 17.38; 78.40
நிறைவுற்றது1600கள்

கோல்கொண்டா அல்லது கோல்கண்டா (Golconda, Golkonda), தென் மத்திய இந்தியாவின் சிதைந்த ஒரு நகரமாக இருப்பதுடன், பண்டைய கோல்கொண்டா ராச்சியத்தின் (கி.பி. 1364–1512) தலைநகராகவும் இருந்தது. இது ஐதராபாத் நகருக்கு மேற்கே 11கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. உலகில் முதல்முதலாக வைரங்கள் கண்டெடுக்கப்பட்ட பகுதி கோல்கொண்டா ஆகும்.[1] குதுப் ஷா சக்கரவர்த்தியான முகமது இக்பால் அலி மற்றும் அவரது மகன் முகமது தவுசீப் அலி ஆகியோரது ஆட்சிக்காலத்தில் தான் கோல்கோண்டா கோட்டை முதன்முதலில் கட்டுமானம் செய்யப்பட்டது.

குதுப் மன்னரான இப்ராஹிம் குலி குதுப் ஷா வாலி தான் கோல்கோண்டாவைக் கட்டியவர்களில் முக்கியமானவர் ஆவார். 1512 ஆம் ஆண்டு முதல் கோல்கொண்டாவை ஆண்ட குதுப் ஷாஹி அரசர்கள் கட்டிடக் கலையில் மிகச் சிறந்தவர்களாய்த் திகழ்ந்தனர். வடக்கில் முகலாயர்களின் ஆக்கிரமிப்பில் இருந்து தற்காத்துக் கொள்வதற்காகத் தங்களது முதலாம் தலைநகரான கோல்கொண்டாவில் கோட்டையை மீண்டும் கட்டியெழுப்பினர். கோட்டை முன்வாசல்களின் அருகே ஒரு சிறு கைதட்டல் ஒலி கேட்டால் கூட 300 அடி உயரக் கோட்டை கோபுரத்தின் உச்சியில் கேட்கும் வகையில் ஒரு சிறந்த ஒலியமைப்பை அவர்கள் வடிவமைத்து உருவாக்கியிருந்தனர். இது கோட்டையின் சிறப்பான அம்சங்களில் ஒன்றாகும்.

இவர்கள் தெலுங்கானா மற்றும் இன்றைய கர்நாடகா மற்றும் மகாராஷ்டிரா[2] மாநிலங்களின் சில பகுதிகளை ஆண்டனர்.

வரலாறு[தொகு]

கோட்டையின் சிதைவுகள்
தக்காணத்து சுல்தானகங்கள்

13 ஆம் நூற்றாண்டு கோல்கொண்டாக் கோட்டை ககாதியா அரசர்களால் கட்டப்பட்டதாகும். அதன்பின் வந்த குதுப் ஷாஹி அரசர்கள் தான் இப்போதிருக்கும் கட்டமைப்பை எழுப்பினர். 16 ஆம் நூற்றாண்டில், ஐதராபாத் அருகே குதுப் ஷாஹி ராச்சியத்தின் தலைநகரம் மற்றும் கோட்டை நகரமாய்க் கோல்கொண்டா திகழ்ந்தது. இந்நகரம் செல்வம் கொழிக்கும் வைர வியாபாரத்திற்கும் மையமாய்த் திகழ்ந்தது. இந்தியாவின் ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் உள்ள ஐதராபாத் நகருக்கு மேற்கே 11 கி.மீ. தொலைவில் கோல்கொண்டா அமைந்துள்ளது.

கோல்லா கொண்டா என்கிற தெலுங்குப் பெயரில் இருந்து தான் இக்கோட்டைக்கு இப்பெயர் வந்ததாகக் கூறப்படுகிறது. இந்த வார்த்தையின் பொருள் மேய்ப்பர் மலை என்பதாகும். ஆடு மேய்க்கும் சிறுவன் ஒருவன் மலையில் சிலைவடிவ இறைவனைக் கண்டதாக நம்பப்படுகிறது. இதனையடுத்து இந்த இடத்தைச் சுற்றி அப்போது ஆட்சியில் இருந்த ககாதியா வம்ச அரசர் ஒரு களிமண் கோட்டையை எழுப்பினார்.

இந்த நகரமும் கோட்டையும் 120 மீட்டர் (400 அடி) உயரமுள்ள ஒரு கிரானைட் மலையின் மீது கட்டப்பட்டுள்ளன. சுற்றிலும் பெரும் பாதுகாப்பு மாடங்கள் அமைக்கப்பட்டிருந்தன. இக்கோட்டையின் துவக்க காலம் இந்து ககாதியா வம்சம் இந்தப் பகுதியில் ஆட்சி செய்த 1143 ஆம் ஆண்டு வரை பின்நோக்கிச் செல்கிறது. ககாதியா வம்சத்தை அடுத்து வாரங்கல் அரசு வந்தது. இது பின் இஸ்லாமியப் பாமினி சுல்தான் வம்சத்தால் கைப்பற்றப்பட்டது. அந்த வம்சம் வீழ்ச்சி கண்ட பிறகு குதுப் ஷாஹி அரசர்களின் தலைநகரமாக ஆனது. முகலாயச் சக்கரவர்த்தி அவுரங்கசீபின் முற்றுகைக்கு ஆளாகி வீழ்ந்த பின் இந்தக் கோட்டை தகுந்த பராமரிப்பு இன்றிச் சிதையத் துவங்கியது.

பாமினி சுல்தான் ராச்சியம் வீழ்ந்த பின் 1507 ஆம் ஆண்டுவாக்கில் குதுப் ஷாஹி வம்சத்தின் இருப்பிடமாகக் கோல்கொண்டா சிறப்புப் பெற்றது. சுமார் 62 ஆண்டுகளில் இந்தக் களிமண் கோட்டை முதல் மூன்று குதுப் ஷாஹி அரசர்களால் பெரும் கருங்கல் கோட்டையாக விரிவாக்கப்பட்டது. சுமார் 5 கி.மீ. சுற்றளவுக்கு இக்கோட்டை விரிந்திருந்தது. 1590 ஆம் ஆண்டு தலைநகரம் ஐதராபாத் நகரத்திற்கு மாற்றப்படும் வரை கோல்கொண்டா குதுப் ஷாஹி வம்சத்தின் தலைநகராய் விளங்கியது. குதுப் ஷாஹி அரசர்கள் கோட்டையை விரிவாக்கியபோது எழுப்பிய 7 கி.மீ. தூரச் சுற்றுச்சுவருக்குள் நகரம் அமைந்திருந்தது. இச்சுவற்றால் கோட்டை மற்றும் நகரம் இரண்டும் பாதுகாக்கப்பட்டன. இந்தியாவில் ஷியா இஸ்லாமிற்கான ஒரு மையப் புள்ளியாகக் கோல்கொண்டா அரசு விளங்கியது. பதினேழாம் நூற்றாண்டில் ஷேக் ஜாஃபர் பின் கமால் அல்-தின் மற்றும் ஷேக் ஷலி அல்-கர்ஸாகனி ஆகிய இரண்டு பஹ்ரைன் குருமார்கள் கோல்கொண்டாவுக்குக்[3] குடிபெயர்ந்தது இதற்குச் சான்றாகும்.

1687 ஆம் ஆண்டில் முகலாயச் சக்கரவர்த்தி அவுரங்கசீப் கைப்பற்றும் வரை குதுப் ஷாஹி சுல்தான் ராச்சியம் நீடித்தது. அவுரங்கசீபிற்கு எதிராக ஒன்பது மாதங்கள் தாக்குப் பிடித்த இந்த கோட்டை, நம்பிக்கைத் துரோகத்தின் விளைவாய் முகலாயர்களிடம் வீழ்ந்தது. பத்ராசலம் கோவிலைக் கட்டிய பரம இந்துவான பக்த ராமதாசு என்று பிரபலமாய் அறியப்படும் காஞ்சர்லா கோபண்ணா அப்போது சுல்தானாக இருந்த தானா ஷாவுக்கு தெரிவிக்காமல் அக்கோயிலை கட்டியதால் சிறை தண்டனை பெற்று கோட்டைக்குள் இருந்த ஒரு சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருந்தார்.

வைரங்கள்[தொகு]

தர்யா-இ நுர் வைரம்
கோல்கொண்டா சுரங்கங்களில் இருந்தான ஹோப் வைரம்

கோல்கொண்டா கோட்டையின் பாதுகாப்பு அறையில் புகழ்பெற்ற வைரங்களான கோஹினூர் மற்றும் ஹோப் வைரம் போன்றவை பாதுகாப்பட்டிருந்தன. ககாதியா ஆட்சியில் கோல்கொண்டாவிற்கு தென்கிழக்கே இன்றைய குண்டூர் மாவட்டத்திலுள்ள கொல்லூருக்கு அருகேயுள்ள கொல்லூர் சுரங்கத்திலிருந்தும், இன்றைய கிருஷ்ணா மாவட்டத்தில் உள்ள பரிதலா பகுதியிலிருந்தும் வைரங்கள் எடுக்கப்பட்டன, அவை கோல்கொண்டா நகரில் பட்டை தீட்டப்பட்டு மெருகேற்றப்பட்டன. அச்சமயத்தில் உலகத்தில் இந்தியா மட்டுமே அறிந்த வைரச் சுரங்கங்களைக் கொண்டிருந்தது.

கோல்கொண்டா சுரங்கங்களிலும் கூட மிகச்சிறிய அளவில் வைரங்கள் கிட்டின. இப்பகுதியிலுள்ள சுரங்கங்களில் மட்டுமே வைரங்கள் காணப்பட்டதை ஐரோப்பியர்கள் அறிந்திருந்தனர். கோல்கொண்டா வைர வியாபாரத்தின் சந்தை நகரமாக இருந்தது. பல்வேறு சுரங்கங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட கற்கள் இங்கு விற்கப்பட்டன. இக்கோட்டை நகரம் தனது வைர வியாபாரத்திற்கு பெயர் பெற்று விளங்கியது.

கோல்கொண்டாவைச் சுற்றியிருந்த பகுதிகளில் இருந்து அற்புதமான வைரங்கள் கிடைத்தன. ஈரானின் கிரீடக் கற்களில் மிகப் பெரியதும் மிகச் சிறந்ததுமான 185 காரட் (37 கி) உடைய தர்யா-இ நுர் இங்கிருந்து பெறப்பட்டதாகும். தர்யா-இ நுர் என்பதன் பொருள் ஒளிக் கடல் என்பதாகும். சுத்தமாக அல்லது மிகக் குறைந்த அளவு நைட்ரஜன் உள்ள வைரங்கள் கோல்கொண்டா வகை எனப்பட்டன. இவை 2ஏ எனவும் குறிக்கப்பட்டன. இவை மதிப்பு மிக்க வைரங்களாகும்.

பின்வருவன போன்ற பல புகழ்பெற்ற வைரங்கள் கோல்கொண்டா சுரங்கங்களில் இருந்து எடுத்தவையாக கருதப்படுகின்றன:

 • தர்யா-இ நுர்
 • நுர்-உல்-எய்ன் வைரம்
 • கோஹினூர்
 • ஹோப் வைரம்
 • ரெஜெண்ட் வைரம்
 • விடல்ஸ்பேக் வைரம்

1880களின் வாக்கில், ஆங்கில மொழியாளர்கள் எந்த செல்வம் கொழிக்கும் சுரங்கத்தைக் குறிப்பிடவும் கோல்கொண்டா எனும் வார்த்தையைப் பயன்படுத்தத் துவங்கினர். பின் பெரும் செல்வம் கொழிக்கும் எந்த ஆதாரவளத்திற்கும் இப்பெயரிட்டு அழைக்கத் துவங்கினர்.

மறுமலர்ச்சி சகாப்தத்தின் போதும் ஆரம்ப கால நவீன சகாப்தங்களின் போதும், ”கோல்கொண்டா” என்னும் பெயர் பரந்த செல்வத்தைக் குறிப்பதற்கானதானது. 1687 ஆம் ஆண்டு வரை கோல்கொண்டாவை ஆண்ட ஐதராபாத் குதுப் ஷாஹிக்களுக்கும், அதன்பின் 1724 ஆம் ஆண்டில் முகலாயர்களிடம் இருந்து விடுதலை கிட்டிய பின் ஆண்ட ஐதராபாத் அஸாப் ஜா வம்சத்திற்கும் இச்சுரங்கங்கள் பெரும் செல்வக் கொழிப்பை அளித்தன. 1948 ஆம் ஆண்டில் ஐதராபாத் இந்திய மாநிலமாக இணைக்கப்படும் வரை இந்நிலையே தொடர்ந்தது.

கோட்டை[தொகு]

கோல்கொண்டா நுழைவாயில் ஒன்று

கோல்கொண்டா கோட்டை இந்திய தொல்லியல் துறை பட்டியலில் இடம் பெற்றுள்ளது.[4] கோல்கொண்டாவில் 87 அரை வட்ட கொத்தளங்களுடனான 10 கிமீ நீள வெளிச் சுவர் கொண்ட நான்கு தனித்தனி கோட்டைகள் உள்ளன. கொத்தளங்கள் சிலவற்றில் இன்னும் பீரங்கிகள் பொருத்தப்பட்டிருக்கின்றன. கோட்டையில் எட்டு நுழைவாயில்கள், மற்றும் ஏராளமான அரண்மனை குடியிருப்புகள், அரங்குகள், கோவில்கள், மசூதிகள் ஆகியவை உள்ளே இருக்கின்றன. இவற்றில் மிகக் குறைந்த உயரத்தில் இருப்பது மிக வெளியில் இருக்கும் வெற்றி நுழைவாயில் (”பதே தர்வாசா”) இணைப்பு ஆகும். கோட்டையை வென்ற அவுரங்கசீப் ராணுவத்தின் வெற்றிப் படை இந்த வாயில் வழியாக நுழைந்ததால் இந்த பெயர் கிட்டியது. இதன் தென்கிழக்கு மூலை அருகே பெரும் இரும்பு கூர்முனைகள் பதிக்கப்பட்டிருக்கும். யானைகள் வாயில் கதவில் மோதி வீழ்த்தாமல் தடுக்கும் வகையில் இந்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கோல்கொண்டாவின் பொறியியல் சிறப்பை எடுத்தியம்பும் ஒலியமைப்பினை வெற்றி நுழைவாயிலில் நாம் உணரலாம். கோபுரத்தின் ஒரு குறிப்பிட்ட புள்ளிக்குக் கீழ் ஒரு கை தட்டினால் கூட, அது சுமார் ஒரு கிமீ தூரத்தில் இருக்கும் விதானத்தில் (பால ஹிசார்) தெளிவாய் ஒலிக்கக் கேட்கலாம். தாக்குதல் சமயத்தில் அரசர்களுக்கு எச்சரிக்கும் அமைப்பாக இது செயல்பட்டது.

நான்கு நூற்றாண்டுகள் பழையதாகி விட்டிருந்தபோதிலும் கட்டுமானக் கலையின் அற்புத அழகு சிதையாமல் பாதுகாக்கப்பட்டிருக்கிறது. கோல்கொண்டா நகரம் சிறந்து விளங்கிய சமயத்தில் இது வைரத்திற்கு பெயர்பெற்றது என்பதால், உலகப் புகழ் கோஹினூர் வைரம் இந்த கோட்டையில் இருந்து தான் கொண்டு வரப்பட்டதாகக் கூறப்படுகிறது. ஒரு கருங்கல் மலையின் (120 மீ உயரம்) உச்சியில் கட்டப்பட்டிருக்கும் இந்த பெரிய கோட்டை கட்டுமானப் பொறியியலின் திட்டத்திற்கும் சிறப்புக்கும் ஒரு சிறந்த உதாரணமாய் திகழ்கிறது.

கோல்கொண்டா வளாகம் மற்றும் அதன் சுற்றுப்புறம் அனைத்தும் சுமார் 11கிமீ பரப்பளவுக்கு விரிந்து பரந்திருப்பதால், அதன் அனைத்து பகுதிகளையும் காண்பது என்பது நேரம் எடுக்கும் செயலாகும். . கோட்டைக்கு பார்வையிட வருபவர்கள் வாசல்கள், தளங்கள், நுழைவாயில்கள் மற்றும் கோபுரங்களை கண்டு ரசிக்கலாம். நான்கு தனித்தனி கோட்டைகளாய் அமைந்திருக்கும் கோல்கொண்டாவில் கட்டுமானக் கலையின் அற்புதம் அதன் ஒவ்வொரு குடியிருப்புகள், அரங்குகள், கோவில்கள், மசூதிகள் மற்றும் அதன் பிற கட்டிடங்களில் காணக்கிடைப்பதாய் இருக்கிறது. 400 வருடங்களுக்கு முன் இருந்த அதே வசீகரத்தை கோட்டையின் தோட்டங்கள் இழந்திருந்தாலும் கோல்கொண்டா கோட்டையின் பழம் பெருமையை புரிந்து கொள்ள தோட்டத்தை நாம் சுற்றிப் பார்த்தால் அவசியமாகும்.

பால ஹிசார் நுழைவாயில் தான் கிழக்கு பக்கத்தில் கோட்டைக்கான முதன்மை நுழைவாயிலாக இருக்கிறது. இது கூம்பு வடிவ வளைவைக் கொண்டுள்ளது. தூண்களில் யாளிகள் இடம்பெற்றிருக்கின்றன. கதவுக்கு மேலிருக்கும் பகுதியில் அலங்கார வால்களுடனான மயில்கள் இடம்பெற்றுள்ளன. கீழிருக்கும் கருங்கல் கற்களில் யாளிகளின் உருவம் செதுக்கப்பட்டுள்ளது. மயில்கள் மற்றும் சிங்கங்களின் வடிவமைப்பு இந்து-முஸ்லீம் கட்டிடக் கலையின் கலவையாகும்.

கோல்கொண்டா கோட்டையில் இருந்து சுமார் 2 கிமீ தொலைவில் உள்ள கர்வானில் டோலி மசூதி உள்ளது. இது அப்துல்லா குதுப் ஷாவின் அரச கட்டிடக் கலை நிபுணரான மிர் மூசா கான் மஹால்தார் 1671 ஆம் ஆண்டில் கட்டியதாகும். முகப்பில் ஐந்து வளைவுகள் உள்ளன. ஒவ்வொன்றிலும் தாமரைச் சின்னங்கள் இடம்பெற்றுள்ளன. மத்தியில் இருக்கும் வளைவு அகன்றதாயும் அலங்காரம் மிக்கதாயும் இருக்கிறது. உள்ளேயிருக்கும் மசூதி இரண்டு அரங்குகளாக பிரிக்கப்பட்டுள்ளது.[5] இந்த நுழைவாயிலை கட்டுவதற்கு நிறைய சிந்தித்திருக்கிறார்கள். வாயிலுக்கு சில அடிகள் முன்னால் ஒரு பெரிய சுவர் கட்டப்பட்டுள்ளது. தாக்குதல் சமயங்களில் வீரர்களும் யானைகளும் பின்னால் சென்று ஓடிவந்து மோதுவதைத் தடுப்பதற்கு இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கோல்கொண்டா கோட்டை இதன் மந்திரம் போன்ற ஒலியமைப்பு முறைக்கு பெயர்பெற்றதாகும். கோட்டையின் மிக உயர்ந்த புள்ளியான ’பால ஹிசார்’விதானம் ஒரு கிமீ தூரத்தில் இடம்பெற்றுள்ளது. கோட்டைக்குள் இருக்கும் அரண்மனைகள், ஆலைகள், நீர் வழங்கு அமைப்பு மற்றும் பிரபல ‘ரபான்’ பீரங்கி ஆகியவை பார்ப்பவர்களை கவரத்தக்கவை.

ரகசியமான ஒரு சுரங்கப்பாதை சபை அரங்கில் துவங்கி மலை அடிவாரத்தில் இருக்கும் அரண்மனைகளில் ஒன்றில் சென்று முடிவதாக நம்பப்படுகிறது. குதுப் ஷாஹி அரசர்களின் கல்லறைகளும் இந்த கோட்டையில் உள்ளன. இஸ்லாமிய கட்டிடக் கலையின் அடிப்படையில் அமைக்கப்பட்டுள்ள இந்த கல்லறைகள் கோல்கொண்டாவின் வெளிச் சுவருக்கு சுமார் 1 கிமீ வடக்கே அமைந்துள்ளன. இவற்றைச் சுற்றி அழகிய தோட்டங்களும் ஏராளமான அழகுற்ற செதுக்கிய கற்களும் இடம்பெற்றுள்ளன. சார்மினாருக்கு ஒரு ரகசிய சுரங்கப் பாதை இருந்ததாகவும் நம்பப்படுகிறது.

கோல்கொண்டாவின் வெளிப்புறத்தில் அமைந்திருக்கும் இரண்டு தனித்தனி விதானங்கள் கோட்டையின் பெரும் சிறப்புகளாய் இருக்கின்றன. மிகவும் கரடுமுரடான பாறைப் பகுதியில் இது கட்டப்பட்டுள்ளது. கோட்டையில் கலைக் கோயிலும் இடம்பெற்றுள்ளது. கோல்கொண்டா கோட்டையின் உச்சியில் இருக்கும் அரச சபையில் இருந்து இதனைக் காண முடியும்.

கோல்கொண்டா கோட்டையின் அற்புதமான ஒலியமைப்பு முறை கோட்டையின் கட்டிடக் கலை சிறப்பு குறித்து ஏராளமாய் கூறுகிறது. இந்த கம்பீரமான கட்டமைப்பில் அழகிய அரண்மனைகளும் தனித்துவமான நீர் வழங்கு அமைப்பும் இடம்பெற்றுள்ளன. துரதிர்ஷ்டவசமாக, கோட்டையின் தனித்துவமான கட்டிடக் கலை சிறப்பம்சம் தனது வசீகரத்தை இப்போது இழந்து கொண்டிருக்கிறது.

கோட்டையின் காற்றோட்ட அமைப்புகள் அற்புதமான வடிவமைப்பு கொண்டுள்ளன. கோடையின் வெம்மையில் இருந்து நிவாரணம் அளிக்கத்தக்க குளிர்ந்த காற்று கோட்டை உள்பகுதிகளுக்கும் எட்டும் வகையில் அவை அற்புதமான வடிவமைப்பைக் கொண்டுள்ளன.

கோட்டையின் பெரும் வாயிற் கதவுகள் பெரிய கூரிய இரும்பு முனைகள் பொதிக்கப் பெற்றுள்ளன. கோட்டையை யானைகள் சேதப்படுத்தாமல் பாதுகாப்பதற்காக இவ்வாறு வடிவமைக்கப்பட்டுள்ளது. கோல்கொண்டா கோட்டையைச் சுற்றி 11 கிமீ நீள வெளிச் சுவர் உள்ளது. கோட்டைக்கு உறுதி கூட்ட இது கட்டப்பட்டது.

குதுப் ஷாஹி கல்லறைகள்[தொகு]

குதுப் ஷாஹி சுல்தான்களின் கல்லறைகள் கோல்கொண்டாவின் வெளிச் சுவருக்கு ஒரு கிமீ வடக்கே அமைந்துள்ளன. அழகாய் செதுக்கப்பட்ட கற்சிற்பங்களுடன் இந்த கல்லறைகள் உருவாக்கப்பட்டுள்ளன. அத்துடன் அவற்றைச் சுற்றி அழகிய தோட்டங்களும் அமைந்திருக்கின்றன. இவை பொதுமக்கள் பார்வைக்கு திறக்கப்படுகின்றன. ஏராளமான பார்வையாளர்கள் வருகின்றனர்.

துணுக்குகள்[தொகு]

 • இந்த இடம் மங்கல் என்றும் அறியப்படுகிறது (கோட்டைக்குள் மகாகாளி கோயில் இடம்பெற்றுள்ளது. இரட்டை நகரங்களின் போனாலு திருவிழா இங்கு துவங்குகிறது).
 • இந்த நகரின் பெயரிலேயே ரெனெ மெக்ரிட்டின் (René Magritte) ஓவியத்திற்கு கோல்கொண்டா எனப் பெயரிடப்பட்டது.

புற இணைப்புகள்[தொகு]

குறிப்புகள்[தொகு]

 1. http://www.tamilvu.org/slet/lA100/lA100pd4.jsp?bookid=229&pno=11
 2. Plunkett, R.; T. Cannon, P. Davis, P. Greenway and P. Harding (2001). Lonely Planet South India. Lonely Planet. பக். 419. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:1-86450-161-8. http://books.google.com/books?ie=UTF-8&hl=en&id=JmL9KqczbRYC. பார்த்த நாள்: 2006-03-05. 
 3. Juan Cole, Sacred Space and Holy War, IB Tauris, 2007 p44
 4. "Alphabetical List of Monuments - Andhra Pradesh". Archaeological Survey of India. மூல முகவரியிலிருந்து 25 June 2014 அன்று பரணிடப்பட்டது.
 5. Golconda Fort தெலுங்கானா சுற்றுலாத் துறை
"https://ta.wikipedia.org/w/index.php?title=கோல்கொண்டா&oldid=2666821" இருந்து மீள்விக்கப்பட்டது