சனிவார்வாடா

ஆள்கூறுகள்: 18°31′8.67″N 73°51′19.62″E / 18.5190750°N 73.8554500°E / 18.5190750; 73.8554500
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சனிவார்வாடா
சனிவார்வாடா கோட்டையின் முதன்மை வாயில்
அமைவிடம்புனே நகரம், மகாராட்டிரா இந்தியா
கட்டப்பட்டது1732
கட்டிட முறைமராத்தியக் கட்டிடக் கலை

சனிவார்வாடா (Shaniwarwada) (Śanivāravāḍā) இந்தியாவின் மகாராட்டிரா மாநிலத்தின் புனே நகரத்தின் மையத்தில் அமைந்த வரலாற்றுச் சிறப்புமிக்க கோட்டையுடன் கூடிய அரண்மனையாகும். சனிவார்வாடா கோட்டை [1] 18ம் நூற்றாண்டில் இந்திய அரசியலின் மையமாக விளங்கியது.[2] சனிவார்வாடா 1818 வரை, மராத்தியப் பேரரசின் பிரதம அமைச்சராக இருந்த பேஷ்வாக்களின் அரண்மனையாக விளங்கியது. மூன்றாம் ஆங்கிலேயே - மராத்தியப் போரின் முடிவில், சனிவார்வாடா கோட்டையை ஆங்கிலேயர்கள் கைப்பற்றினர்.

எழு அடுக்கள் கொண்டிருந்த சனிவார்வாடா கோட்டை அரண்மனைக் கட்டிடங்கள் 27 பிப்ரவரி 1828ல் பெருமளவில் தீப்பற்றி எரிந்தது. தற்போது தரை தளம் மட்டுமே எஞ்சியுள்ளது. இக்கோட்டையை தற்போது இந்தியத் தொல்லியல் ஆய்வகம் பராமரித்து வருகிறது. இக்கோட்டை மகாராட்டிரா மாநிலத்தின் முக்கிய சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக உள்ளது. இக்கோட்டையில் நாள்தோறும் மாலை வேளைகளில் பேரரசர் சிவாஜியின் ஆட்சி முறை மற்றும் கோட்டையின் வரலாறு குறித்து ஒலி ஒளிக் காட்சி மூலம் விளக்கப்படுகிறது.

வரலாறு[தொகு]

சனிவார்வார் வாடா கோட்டை எதிரே, மராத்தியப் பேரரசின் இரண்டாம் பேஷ்வா முதலாம் பாஜிராவின் சிலை

துவக்கத்தில் ஏழு அடுக்குகள் கொண்டிருந்த சனிவார்வாடா கோட்டை அரண்மனை மராத்தியப் பேரரசின் பிரதம அமைச்சர்களான பேஷ்வாக்கள் வாழ்ந்த அரண்மனையாகும்.

இக்கோட்டையின் தரைதளம் கருங்கற்களால் கட்டப்பட்டது. எஞ்சிய ஆறு தளங்கள் செங்கற்களால் கட்டப்பட்து. மூன்றாம் ஆங்கிலேயே - மராத்தியப் போரின் போது, பீரங்கிகளால் ஆங்கிலேயர்கள் இக்கோட்டை தகர்த்த போது, தரைதளம் தவிர்த்த எஞ்சிய ஆறு தளங்கள் சிதறுண்டது. 1758ல் இக்கோட்டை அரண்மனையில் அரசகுடும்பத்தினரும், அவர்களின் நூற்றுக்கணக்கான உதவியாளர்களின் குடும்பங்களும் வாழ்ந்தது.

சனிவார்வாடா கோட்டையில் வாழ்ந்த பேஷ்வா நாராயணராவ், 1773ல் தமது சித்தப்பா பேஷ்வா இரகுநாதராவ் மற்றும் சித்தி ஆனந்திபாய் ஆகியோரின் ஆணையால் கொல்லப்பட்டார்.[3][4]

சூன் 1818ல் மூன்றாம் ஆங்கிலேயே - மராத்தியப் போரின் முடிவில் பேஷ்வா இரண்டாம் பாஜி ராவ், தன் மகுடத்தையும், சனிர்வார்வாடா கோட்டையையும் பிரித்தானிய கிழக்கிந்திய கம்பெனி படைத்தலைவர் சர் ஜான் மால்கத்திடம் இழந்தார். பின்னர் இரண்டாம் பாஜி ராவ் கான்பூர் அருகே உள்ள பித்தூரில் அரசியல் அடைக்கலம் அடைந்தார்.

27 பிப்ரவரி 1828 அன்று சனிவார்வாடா கோட்டை அரண்மனை வளாகத்தின் உட்புறத்தில் பெருமளவில் தீப்பற்றி எரிந்தது. ஏழு நாட்கள் எரிந்த தீயில், கோட்டையின் உட்புறத்தில் இருந்த ஏழு அடுக்கள் கொண்ட அரண்மனை வளாகம் முற்றிலும் எரிந்து வீழ்ந்தது. சனிவார்வாடா கோட்டையும், தரை தளம் மட்டுமே தீயில் தப்பியது.[5]

கட்டுமானம்[தொகு]

மரத்தியப் பேரரசர் சாகுஜியின் பிரதம அமைச்சர் எனும் பேஷ்வா முதலாம் பாஜிராவ், புனேவில் சனிவார்வாடா கோட்டையை நிறுவ 1 சனவரி 1730ல் அடிக்கல் நாட்டினார். மராத்தி மொழியில் சனிவார் என்பதற்கு சனிக்கிழமை என்றும், வாடா என்பதற்கு மக்கள் குடியிருப்பு பகுதி என்றும் பொருள். இக்கோட்டையும், அரண்மனைகளும் கருங்கல், செங்கல், சுண்ணாம்பு, தேக்கு மரங்களைக் கொண்டு கட்டப்பட்டது. 16,110 ரூபாய் பொருட்செலவில் 1732ல் கட்டிமுடிக்கப்பட்ட சனிவார்வாடா கோட்டை, 22 சனவரி 1732 சனிக்கிழமை அன்று திறக்கப்பட்டது.

இக்கோட்டையின் உள்வளாகத்தில் பின் வந்த பேஷ்வாக்கள் அரசவை, நீர் ஊற்றுகளுடைன் பூங்காக்கள், மற்றும் பிற அரண்மனைகள் கட்டினர். மேலும் கோட்டையின் மேல் காவல் கோபுரங்கள் எழுப்பினர். கோட்டையில் முதன்மை வாயில் தவிர்த்த ஐந்து சிறு வாயில்கள் அமைத்தனர்.

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Shaniwar Wada
என்பதின் ஊடகங்கள் உள்ளன.

வெளி இணைப்புகள்[தொகு]


வார்ப்புரு:புனே மாவட்டம்

"https://ta.wikipedia.org/w/index.php?title=சனிவார்வாடா&oldid=3718350" இருந்து மீள்விக்கப்பட்டது