பள்ளிப்புறம் கோட்டை
பள்ளிப்புறம் கோட்டை | |
---|---|
பள்ளிப்புறம், எறணாகுளம் மாவட்டம், வைப்பீன் தீவு | |
போர்த்துகீசர் கட்டிய கோட்டை, வைப்பினில் உள்ள போர்த்துக்கேயக் கோட்டை அழிபாடுகள் | |
ஆள்கூறுகள் | 10°10′12″N 76°10′52″E / 10.170087°N 76.18098°E |
வகை | தீவுக் கோட்டை |
இடத் தகவல் | |
உரிமையாளர் | கேரள அரசு |
கட்டுப்படுத்துவது | போர்த்துக்கேயப் பேரரசு (1503-1661) நெதர்லாந்து (1661-1789) திருவிதாங்கூர் (1789-1858) ஐக்கிய இராச்சியம்
இந்தியா (1947-) |
நிலைமை | அமைப்பு |
இட வரலாறு | |
கட்டிய காலம் | 1503 |
கட்டியவர் | போர்த்துகீசர் |
கட்டிடப் பொருள் |
கல் |
நிகழ்வுகள் | 1663 - டச்சுகாரர் கட்டுப்பாட்டில் |
பள்ளிப்புறம் கோட்டை அல்லது பள்ளிபுரம் கோட்டை இந்தியாவின் கேரளத்தில் வைப்பின் தீவின் வடக்கே, எறணாகுளம் மாவட்டத்தில் பள்ளிப்புறம் நகரில் உள்ளது. இந்த கோட்டையை 1503-ஆம் ஆண்டில் போர்த்துக்கீசர் கட்டினர். [1]. இக் கோட்டையே இந்தியாவில் எஞ்சியுள்ள போர்த்துக்கேயக் கோட்டைகளுள் மிகப்பழைய கோட்டை ஆகும். 1661 ஆம் ஆண்டில் இக்கோட்டையைப் போர்த்துக்கேயரிடம் இருந்து கைப்பற்றிய ஒல்லாந்தர் (நெதர்லாந்துக்காரர்கள்) இதை 1789 ஆம் ஆண்டு திருவிதாங்கூர் அரசுக்கு விற்றனர். இக்கோட்டை வைப்பீன் தீவின் வடக்கு அந்தலையில் அமைந்துள்ளது. அறுகோண வடிவம் கொண்ட இக்கோட்டை பொதுவாக "அயிக்கோட்ட" அல்லது "அலிக்கோட்ட" என்று உள்ளூர் மக்களால் அழைக்கப்படுகின்றது[2].
கோட்டையின் அமைப்பு
[தொகு]இக்கோட்டை அறுகோணத் தள வடிவம் கொண்டது. தரைத் தளம் நிலத்தில் இருந்து ஐந்து அடிகள் உயரத்தில் அமைந்துள்ளது. இதன் கீழுள்ள அறை வெடிமருந்து களஞ்சியப்படுத்துவதற்குப் பயன்பட்டது. இதன் வளைவு வடிவ வாயில்களின் கதவு நிலைகளும், மேற்பகுதியும் நுணுக்கமாக அழகூட்டப்பட்டிருந்தன. அங்கே 3'3" அளவுகளைக் கொண்ட சதுர வடிவான கிணறு ஒன்றும் காணப்படுகிறது. இக்கோட்டை பயன்பாட்டில் இருந்த காலத்தில் இங்கிருந்தே நல்ல தண்ணீர் பெறப்பட்டது.
வடக்குப் புறத்தில் உள்ள ஒரு நுழைவழி நிலவறைக்கு இட்டுச் செல்கிறது. அங்கு காணப்படும் வட்ட வடிவமான ஒரு கற்பலகை காணப்படுகிறது. மேலுள்ள இரண்டு தளங்களையும் தாங்கிய தூண் இதன்மேலேயே தாங்கப்பட்டிருந்தது. கோட்டையின் ஆறு முகங்களில் ஒவ்வொன்றும் 32 அடி நீளமும், 34 அடி உயரமும் கொண்டது. சுவர்களின் தடிப்பு ஆறு அடி. ஒவ்வொரு பக்கத்திலும் ஒன்றன்மேல் ஒன்றாக மூன்று சாளரத் துளைகள் உள்ளன. நடுத்துளை 2’ x 21⁄2’ அளவு கொண்டது. இக்கோட்டை அதன் எல்லாப் பக்கங்களையும் பாதுகாப்பதற்குப் பல பீரங்கிகளைக் கொண்டு இருந்திருக்கக்கூடும். உட்புறம் இருந்து நிலவறைக்குச் செல்வதற்கும் ஒரு வழி உள்ளது.
இக்கோட்டை, செம்புரைக்கல், சுண்ணாம்பு, மரம் ஆகியவற்றைப் பயன்படுத்திக் கட்டப்பட்டது. சுவர்களில் தடிப்பான சாந்து பூசப்பட்டுள்ளது.
மற்ற சுற்றுலாத் தலங்கள்
[தொகு]- இந்த கோட்டைக்கு அருகில் உள்ள பள்ளிப்புறம் கத்தோலிக்க தேவாலயம், கிறிஸ்தவர்களுக்கு முக்கியமான சுற்றுலாத் தளம்
- செறாயி கடற்கரை, 4 கி. மீ தொலைவில் உள்ளது.
- தோமாஸ்லீஹா - இந்தியாவில் முதலி எழுப்பப்பட்ட கிறிஸ்தவ தலம் என்று கருதுகின்றனர். இது ஒரு கி.மீ தொலைவில் உள்ளது.
- கோட்டப்புறம் 4 கி.மீ.
- கொடுங்கல்லூர் 10 கி. மீ.
சென்று சேர்வதற்கான வழி
[தொகு]நீர்வழியிலும், தரை வழியிலும் சென்று சேர்வதற்கு போக்குவரத்து வசதி உள்ளது.
- அருகில் உள்ள விமான நிலையம்: நெடும்பாசேரி பன்னாட்டு விமான நிலையம் - 20 கிலோமீட்டர் தொலைவில்
- அருகில் உள்ள ரயில் நிலையம்: ஆலுவை, அங்கமாலி
- அருகில் உள்ள பேருந்து நிலையம்: கொடுங்கல்லூர், பறவூர்
- அருகில் உள்ள கடற்கரை நகரம்: செறாயி
சான்றுகள்
[தொகு]- ↑ மனோரமா நாளேடு, கொச்சி பதிப்பு, 2012 ஆகஸ்டு 26, இரண்டாம் பாகம், பக்கம் 4
- ↑ பள்ளிபுரம் கோட்டை, கொச்சி கேரளா சுற்றுலாத்துறை இணையத்தளம். 07 பெப்ரவரி 2014 அன்று பார்க்கப்பட்டது.
வெளியிணைப்புக்கள்
[தொகு]- At the crossroads of history (ஆங்கில மொழியில்)
- Oldest European Fort in India பரணிடப்பட்டது 2013-06-26 at the வந்தவழி இயந்திரம் (ஆங்கில மொழியில்)
- இந்தியா டூரிசம்.காம் இணையதளம்
மேலும் படங்கள்
[தொகு]-
பள்ளிபுரம் கோட்டையின் ஒரு தோற்றம்
-
தொல்லியல் பகுதியினரின் தகவற் பலகை
-
கோட்டையின் உட்புறத் தோற்றம்