சிறுவாணி அணை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சிறுவாணி அணை கேரளா மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில், பாலக்காட்டில் இருந்து 46 கி.மீ தொலைவிலும், தமிழ்நாட்டின் கோயமுத்தூர் நகரிலிருந்து மேற்கே 35கிமீ தொலைவில் வெள்ளியங்கிரி மலை மற்றும் அதன் தொடர்ச்சியான சிறுவாணி மலையின் மேற்குச் சரிவில் சிறுவாணி ஆற்றில் அமைந்துள்ளது. சிறுவாணி ஆறானது மேற்குத் தொடர்ச்சி மலையின் சிறுவாணி மலையின் மேற்குச் சரிவில் உருவாகி வடக்கு நோக்கி பாய்ந்து பவானி ஆற்றில் கலக்கிறது.ஆங்கிலேய ஆட்சியின் போது 1890களில் கோவை நகரின் குடிநீர் தேவைக்காக சிறுவாணியின் குறுக்கே அணை கட்டி நீர் கொண்டு வர திட்டமிடப்பட்டது. 1920ல் பாம்பாறு, பட்டியாறு, முத்திக்குளம் அருவியின் நீர் ஆகியவை ஒன்று சேர்ந்து சிறுவாணி ஆறு உருவாகும் பகுதியில் ஒரு சிறிய அணை கட்டப்பட்டு நீர் தேக்கப்பட்டு, மலையைக் குடைந்து 1.6 கி.மீ நீளத்துக்கு குகை அமைத்து மலையைத் தாண்டி கிழக்காக நீர் கொண்டு வரப்பட்டது. 1970களில் கோவை நகரின் அதிகரித்த நீர்த்தேவையை நிறைவேற்ற, தமிழ்நாடு அரசு கேரளத்துடன் ஒப்பந்தம் செய்து பழைய அணைக்கு கீழ்ப்பகுதியில் பெரியதாக தற்போதுள்ள சிறுவாணி அணை கட்டப்பட்டது. [1] பழைய அணை தற்போதைய நீர்த்தேக்கப் பகுதிக்குள் அமைந்துள்ளது. முல்லைப் பெரியாறு அணைத் திட்டம், பரம்பிக்குளம் ஆழியாறு திட்டம் போலவே, இத்திட்டம் மூலம் கேரளத்தின் மேற்குத்தொடர்ச்சி மலையின் மேற்குச் சரிவில் பெய்யும் அதிக மழையின் மூலம் கிடைக்கும் நீர் அணை மூலம் தேக்கப்பட்டு, குறைந்த மழை பொழியும் கிழக்குச் சரிவுப் பகுதியில் அமைந்துள்ள தமிழ்நாட்டுக்கு கொண்டு வரப்படுகிறது. இந்த அணையைச் சுற்றியும் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாகவும் குடியிருப்புகள் இன்றியும் உள்ளதால் நீர் மிகவும் தூய்மையாக உள்ளது. ஆண்டு முழுவதும் நீரோட்டம் உள்ள முத்திக்குளம் அருவியிலிருந்தே அதிக நீர் கிடைக்கிறது. இந்த அணையும் அருவியும் மிகவும் எழில் வாய்ந்த பகுதியில் அமைந்துள்ளது. பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் உள்ளதால் அணைக்கு பொதுமக்கள் செல்வதற்கு வனத்துறை அனுமதி பெற வேண்டும்.

வெள்ளியங்கிரி மலையின் முகட்டிலிருந்து நோக்கினால் சிறுவாணி மலைக்கு மேற்கே கல்லடிக்கூடம் மலையிலிருந்து வடக்கு நோக்கி விழும் அழகிய முத்திக்குளம் அருவியை காணலாம். வெள்ளியங்கிரி மலையிலிருந்து பார்க்கும்போது முத்திக்குளம் அருவியில் ஆண்டு முழுவதும் நீர் வருவது தெரிந்ததால் தான் அங்கிருந்து நீர் கொண்டு வர சிறுவாணி அணை திட்டம் உருவாக்கப்பட்டது.

சிறுவாணி அணை Siruvani_Dam(2)_(3169484785)

சிறுவாணி அணை குடிநீர் திட்ட வரைபடம். Siruvani_Dam_water_supply_Project_Plan

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சிறுவாணி_அணை&oldid=3629763" இலிருந்து மீள்விக்கப்பட்டது