சீனா கொட்டாரம்
சீனா கொட்டாரம் சீனா அரண்மனை | |
---|---|
![]() | |
பொதுவான தகவல்கள் | |
கட்டிடக்கலைப் பாணி | இந்தோ-சரசெனிக் பாணி |
நகர் | சின்னக்கடா, கொல்லம் |
நாடு | இந்தியா |
ஆள்கூற்று | 8°53′07″N 76°35′29″E / 8.885402°N 76.591475°E |
நிறைவுற்றது | 1904 |
கட்டுவித்தவர் | ஸ்ரீ முலாம் திருநாள் ராம வர்மா |
சீனா கொட்டாரம் (Cheena Kottaram) அல்லது சீனா அரண்மனை 1904 ஆம் ஆண்டில் திருவாங்கூர் மன்னராக இருந்த ஸ்ரீ முலாம் திருநாள் ராம வர்மாவுக்காக கட்டப்பட்ட ஒரு ஓய்வு இல்லமாகும். கொல்லம்-ரயில்வே இருப்புப்பாதை அமைக்கப்பட்ட காலகட்டத்தில் இந்த அரண்மனையின் கட்டுமானப் பணி நிறைவடைந்தது. இது ஏழு அறைகளைக் கொண்ட ஒற்றை மாடி சிவப்பு செங்கல் கட்டிடம் ஆகும். சீனா கொட்டாராமின் கட்டிடக்கலை இந்தோ-சரசெனிக் பாணியில் அமைந்ததாகும். இந்த பாணியானது பொதுவாக இந்திய கட்டிடக்கலை மற்றும் ஐரோப்பிய, இஸ்லாமிய மற்றும் மூரிஷ் கட்டிடக்கலைகளின் ஒன்று சேர்ந்த ஒரு கலவையாகும். சீனா கொட்டாராம் இன்னும் 'தேசிய பாரம்பரிய நினைவுச்சின்னம்' என்ற அங்கீகாரம் பெறவில்லை. [1]
பெயர்க்காரணம்[தொகு]
கொல்லத்தைச் சேர்ந்தவர்கள் இந்த ஓய்விடத்தை சீனா அரண்மனை என்று பொருள் அமையும் வகையில் சீனா கொட்டாரம் என்று அழைக்கின்றார்கள். ஏனெனில் இது பண்டைய சீன கட்டிடங்களின் கட்டடக் கலைப்பாணியைக் கொண்டு அமைந்துள்ளது.
வரலாறு[தொகு]
இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்னர், திருவிதாங்கூர் இராச்சியத்தின் வணிக தலைநகராக குயிலன் (கொல்லம்) இருந்தது. திருவிதாங்கூர் - மலபார் கடற்கரைப் பகுதியில் அதிகபட்ச வணிக மற்றும் வணிகம் சார்ந்த நிலையில் நற்பெயரைக் கொண்ட நகரமாக கொலலம் இருந்தது. கொல்லம் துறைமுகத்தின் வழியாக அதிக அளவிலான ஏற்றுமதி-இறக்குமதி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. [2] அப்போது கொல்லம் நகரத்தில் பல அரண்மனைகள் இருந்ததால் கொல்லம் நகரமானது அரண்மனை நகரம் என்று அழைக்கப்பட்டது. திருவிதாங்கூர்-மலபார் கடற்கரையில் அமைந்த ஒரே ஒரு விமான நிலையம் அப்போது கொல்லம் நகரில் இருந்தது. அந்த காலகட்டத்தில், திருவனந்தபுரத்திற்கு ரயில் இணைப்போ விமான இணைப்போ இல்லை. திருவாங்கூர் மன்னர்கள் கொல்லத்தில் பயணம் செய்வதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். அதற்காக அவர்கள் கொல்லம் ரயில் நிலையத்திற்கு அருகில் [3] சீனா கோட்டாரம் எனப்படுகின்ற இந்த அரண்மனையைக் கட்டியுள்ளனர். [4]
அமைப்பு[தொகு]
சீனா கொட்டாரத்தை வெளியில் இருந்து பார்ப்பதற்கு இரட்டை மாடிக் கட்டிடம் போல் தோன்றினாலும், இது உண்மையில் ஒற்றை மாடியினைக் கொண்டே அமைந்துள்ளது. இந்த ஓய்வு இல்லத்தில் ஏழு அறைகள் அமைந்துள்ளன. முன் புறத்திலும் கட்டிடத்தின் பின்புறத்திலும் வராண்டாக்கள் உள்ளன. தெற்குப் பக்கத்தில் இருக்கும் தாழ்வாரப்பகுதியானது மூடப்பட்டுள்ள நிலையில் உள்ளது. அங்கிருந்து கொல்லம் போக்குவரத்திற்கான பாலத்தினைக் காணமுடியும். வடக்குப் புறத்தில், இப்போது ஒரே நுழைவாயில் உள்ளது. உள்ளே செல்லவும் வெளியே வருவதற்கும் அந்த பாதை பயன்படுத்தப்படுகிறது.அங்கே உள்ள ஒரு சிறிய தளத்தில் இருந்து மகாராஜா தனது சலூன் காரில் ஏறுகின்ற அமைப்பினைக் கொண்டுள்ளது.அது பயணிகள் ரயிலுடன் பின்னர் இணைக்கப்படும். மாளிகையின் நடுவில் நேர்த்தியாக அமைந்துள்ள கோதிக் வளைவுகள் உள்ளன. அனைத்துப் புறங்களிலும் ஈய பிரேம்களில் படிந்த கண்ணாடி அமைப்புகளைக் கொண்டு உள்ளன. அழகான கண்ணாடி சுவரோவியங்கள், வெனிஸ் மாடி ஓடுகள், விண்டேஜ் கேரளா பாணியில் அமைந்த மரச் செதுக்குதல் மற்றும் கூரைகளுக்கு தனித்துவமான டிராகன் போன்ற மர அமைப்புகள் இதன் சிறப்பான அம்சங்களாகும். திருவிதாங்கூரின் சின்னமான சங்கு கிரானைட்டில் அனைத்துப் பக்கங்களிலும் சுவர்களில் காணப்படுகின்றன. [5]
அமைவிடம்[தொகு]
கொல்லம் ரயில்வே நிலையத்திற்கு மிகவும் நெருக்கமாக சீனா கொட்டாரம் அமைந்துள்ளது. ரயில்வே ஸ்டேஷனிலிருந்து 950 மீ தொலைவில் இது உள்ளது. அருகில் உள்ள விமான நிலையம் திருவனந்தபுர சர்வதேச விமான நிலையம் ஆகும். விமான நிலையம், அரண்மனையிலிருந்து சுமார் 68 கி.மீ. தொலைவில் உள்ளது.
குறிப்புகள்[தொகு]
- ↑ "Royal connection".
- ↑ "Then and Now - Cheena Kottaram". Pazhayathu.Blogspot.
- ↑ "Quilon". IRFCA.
- ↑ "Cheena Kottaram to get a makeover".
- ↑ Cheena Kottaram Architecture, History Trawell